
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
‘குடிப்பது என்பது வேறு, அருந்துவது என்பது வேறு’ என்பார் எழுத்தாளர் பிரபஞ்சன். குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சிலர், குடிப்பதற்கான காரணிகளைத் தேடுவதைத் தவிர வேறெதையும் சிந்திப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு. “வீட்டுக்குப் போனாலே டென்ஷன் பாஸ்.” “ஆபீஸ்ல மேனேஜர் தொல்ல... ஏன் கேட்கிறீங்க...” “அப்படியே ஜாலியா ஒரு கட்டிங்க போட்டமா... லைப்ப என்ஜாய் பண்ணமான்னு இருக்கணும் மச்சி...” போன்ற நிறைய உரையாடல்களை நானும் அவ்வப்போது காரணிகளாகப் பயன்படுத்தியிருக்கிறேன். பிரபஞ்சன் சொல்வதுபோல அருந்துவதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை. ஏனெனில், மதுவை அருந்துபவர்கள் அதைக் கையாள்கிறார்கள். ஒருபோதும் மது அவர்களைக் கையாள்வதில்லை.

ஏதாவது ஒரு போதையில் உழன்று கொண்டிருப்பவர்கள்தாம் நாம். அது வெறும் மதுவின் போதை மட்டுமல்ல. ஆனால், மதுவின்பால் அடிமை கொண்டவர்களைத்தான் இந்தச் சமூகம் தள்ளிவைத்து வேடிக்கை பார்க்கிறது. மறுவாழ்வு மையம் எப்படி இருக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். “அவன் ஒரு குடிகாரப் பய...” என்று ஒற்றைச் சொல்லில் ஒருவரைப் புறந்தள்ளுவதன் மூலம் நாம் நல்லவர்களாக மாற முயற்சி செய்கிறோம். எல்லோருக்குமான நிராதரவின் ஏதோ ஒரு சொல்லை, குடிப்பதன்மூலம் ஆற்றுப்படுத்திக் கொள்வதாக குடிப்பவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். உட்கார்ந்து அவர்களோடு பேசிப்பார்த்தால் பத்துப்பேரில் நால்வர் குடிநோயாளிகள் என்ற பதத்திலிருந்து மது அருந்துபவராகவாவது மாறலாம்.
விடியற்காலை நான்குமணிக்கே ஓரிருவர் ஏதாவதொரு நரகல் சுமந்து கொண்டிருக்கும் முட்டுச்சந்தில் நைந்துபோன பிளாஸ்டிக் குவளையைச் சரி செய்து, நடுக்கம் கொண்ட வலது கையைத் தனது இடது கையால் பிடித்துகொண்டு கல்ப்பாக அடிப்பதை நீங்களும் பார்த்திருக்கலாம். அதிகாலை தொடங்கும் இவர்களது பயணம் இரவு வரை நீளும். குடிப்பதற்கு எங்கிருந்து காசு வருகிறதென்று கேட்காதீர்கள். உங்களைப்போலவே எனக்கும் அதுவொரு ஆச்சர்யம்தான். உடல் சமநிலையை அடையும்போதெல்லாம் இவர்களுடைய கைகள் நடுக்கம்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.

எதைச் செய்தாவது குடித்துவிட வேண்டும் என்று அலைபாய்ந்துகொண்டிருப்பதை மதுபான விடுதியின் வாசலில் கையேந்தி நிற்கும் ஒரு முன்னாள் கால்பந்து வீரனை நான் பார்த்திருக்கிறேன். அவன் வேறு யாருமல்ல என் நண்பன்தான்.
உலகக் கால்பந்தாட்ட வீரன் லியோனல் மெஸ்ஸிதான் நண்பனின் ஆதர்சம். அவன் வீட்டுக்குப் போனால் விதவிதமான கோல்களை அடித்துச் சிரித்துக்கொண்டிருப்பான் மெஸ்ஸி. தன்னையும் அவன் மெஸ்ஸியென்றே கூப்பிட வேண்டுமென்று விரும்பியவன். ஆகவே, அவனை நாம் மெஸ்ஸியென்றே அழைப்போம். நாங்கள் எல்லோரும் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்க மெஸ்ஸி மட்டும்தான் கால்பந்தைத் தனது ஆட்காட்டி விரலால் சுற்றிக் கொண்டு மைதானத்துக்கு வந்தவன். திடகாத்திரமான உடலைக் கொண்டவன். முரம் போன்ற தனது காலால் ஃபுட்பால் மாதிரி இரும்பு உருளை வந்தாலும் எட்டி உதைத்து கோல் அடித்துவிடுவான். எகிறி நெத்தியால் புட்பாலை எத்தும் அழகில் பல தாவணிக் கரங்கள் இவனுக்குக் கடிதங்கள் கொடுத்திருக்கின்றன. எதையும் பொருட்படுத்தாதவன் மெஸ்ஸி. எப்படியாவது ஃபுட்பால் கிளப்பில் சேர்ந்துவிட வேண்டுமென்று துடியாய் இருந்தான்.

மெஸ்ஸியின் அப்பா தேசப்பன் மீன்பிடி வலை நெய்து கொண்டிருப்பவர். மெஸ்ஸியின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டவர். அம்மாதான் “வேல வெட்டிய பாக்காம... பந்து வெளையாடிட்டிருக்கான்... ஒரு நாள் இல்லன்னா ஒருநாள் அந்தப் பந்த அருவாமனைல வச்சு ஆஞ்சுபுட்றேன்... ஆஞ்சு” என்று ஃபுட்பாலையே மெஸ்ஸியின் அம்மா குறிவைத்திருந்தார். தேசப்பனும் மெஸ்ஸியும் நடையாய் நடந்து அசோசியேஷன் செகரட்டரியிடம் சம்மதம் வாங்கிவிட்டார்கள். அம்மாவுக்கு மெஸ்ஸி விளையாடுவதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. தேசப்பனோடு மீன்பிடித் தொழிலுக்குப் போய் வந்தாலே போதுமென்று நினைத்திருந்தாள். விளையாடுவதெல்லாம் நமது வாழ்விற்கு சரிப்பட்டு வராதென்று மெஸ்ஸியின் அம்மா நினைத்திருந்தார். எப்படியோ கிளப்பில் சேர்ந்தும்விட்டான் மெஸ்ஸி. ஆனால், கிளப்பிற்கு சாதாரண ஷூவெல்லாம் போட்டுக்கொண்டு பயிற்சிக்குப் போக முடியாது. ஜெர்சியும், ஸ்பைக்கும் வாங்குவதென்பது தேசப்பனுக்குக் கொஞ்சம் சிரமமாகத்தானிருந்தது. கடன்பட்டு மெஸ்ஸிக்கு ஜெர்சியும், ஸ்பைக் ஷூவும் வாங்கித்தந்ததும் மெஸ்ஸி தேசப்பனைத் தூக்கி சந்தோஷத்தில் அப்படியே போட்டுவிட்டான். “அவன நீதான் கெடுக்குற... இது எங்க போயி முடியப்போகுதோ” என்று அம்மா புலம்பினார். மெஸ்ஸி அம்மாவைக் கிள்ளி முத்திவிட்டு, தனது கனவை நோக்கி நடந்தான்.
எல்லாவற்றிலும் தகுதியான மெஸ்ஸியை ஏதேதோ காரணங்களால் மாநில அளவிலான போட்டியிலிருந்து பெயரை எடுத்துவிட்டார்கள். எளியவனின் கனவு என்பது கானல்நீர் போன்றது. அந்தக் கானலைக் கையிலெடுக்கவும் முடியாது, பருகவும் முடியாது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் மெஸ்ஸி ஆறுதலடையவில்லை. “மச்சி ஸ்டேட் இல்லன்னா இன்னாடா... நேஷனல் வெளயாட்லாண்டா” என்று சொன்னேன். “ஸ்டேட் வெளையாட்னாதான்... நேஷனல் போக முடியும் மச்சி...” என்று நடந்து சென்றான்.
விளையாட முடியாத விரக்தியில் குடிக்க ஆரம்பித்தவன், குடிக்கவில்லையெனில் உறக்கம் வரவில்லையெனக் குடித்தான். பிறகு, காரணங்கள் ஏதுமற்று பகல்குடியில் மாறினான். தன் வசத்திலிருந்து மதுவின் வசம் தன்னை ஒப்புக்கொடுத்தான். ஒருதடவை வாய்ப்பு மறுக்கப்பட்டால் வாழ்வே முடிந்து விட்டதாக நினைத்து ஆறுதலுக்கு மதுவைத் தேர்ந்தெடுத்த மெஸ்ஸி, இப்போது மது இல்லையென்றால் எந்த ஆறுதலும் இல்லை என்பதாக மாறிப்போனான். நெஞ்சாங்கூடு தெரிய ஆரம்பித்தது. பிள்ளை இப்படி ஆகிவிட்டானேவென்று தேசப்பன் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தார்.

குடி... அது தரும் பொய்த்தூக்கம் என மாறியவன், உணவை மறந்தான். கூடென மாறிய மெஸ்ஸி தன் கனவுகளை மதுபான விடுதியில் தேடிக்கொண்டிருந்தான். மெஸ்ஸியின் அம்மா ஒரு முடிவுக்கு வந்தார். மறுவாழ்வு மையத்தில் மெஸ்ஸியைச் சேர்த்தார்கள். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு குண்டுக்கட்டாக மெஸ்ஸியைத் தூக்கிப் போனதைப் பார்த்தேன். ஃபுட்பாலைத் தலையில் எக்கி அடித்துவிட்டு சியர்ஸ் சொல்லிச் சிரிக்கும் மெஸ்ஸியின் சித்திரம் வந்துபோனது.
மையத்தில் அம்மாவை மட்டுமே பார்க்க அனுமதித்திருந்தார்கள். எப்போதும் திட்டிக்கொண்டேயிருக்கும் மெஸ்ஸியின் அம்மா இப்போது மெஸ்ஸியைத் திட்டுவதேயில்லை. மீன்குழம்புச்சோற்றைப் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தார். “யம்மா வாயெல்லாம் ஒருமாதிரி இருக்குது... உடம்பு ஓதருதும்மா... நாளிக்கு வரும்போது ரெண்டு சிகரெட்டு யாருக்கும் தெரியாம வாங்கிகினு வாம்மா” என்றான். மீனின் முள்ளை எடுத்து சோற்றில் வைத்து ஊட்டிய அம்மா எதுவும் சொல்லாமல் வெளியேறினார்.
மறுநாள் சாப்பாட்டை வைத்தவர். ஊட்டி முடித்துவிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு முந்தியில் முடிந்து வைத்திருந்த, வியர்வையில் நைந்துபோன சிகரெட்டை எடுத்து மெஸ்ஸியிடம் கொடுத்தார். கல்யாணத்துக்குப் போய் வந்தால் இப்படித்தான் முந்தியில் மைசூர்ப்பாகை முடிந்து வைத்து மெஸ்ஸிக்குத் தின்னத்தருவார். ஏனோ, அது நினைவுக்கு வர முந்தியால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். அம்மா காவல் புரிய மெஸ்ஸி பயந்தபடியே சிகரெட்டை இழுத்து விட்டான். பிள்ளைக்கு சந்தோஷம் தரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதைச் செய்துகொடுப்பது அம்மாக்களால்தான் முடியும்போல. நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இந்த சிகரெட் பரிவர்த்தனையைக் கண்டுபிடித்துக் கண்டித்தார்கள். பிறகான நாள்களில் சிகரெட் வாங்கி வருவதை நிறுத்திக்கொண்டார்.

எதுவுமில்லாமற்போனதன் பலன் மெஸ்ஸி சாப்பிட மறுத்தான். அம்மாவின் முன்னாலேயே மெஸ்ஸியை அடித்தார்கள். வாயைப்பொத்திக்கொண்டு வெளியே நடந்த அம்மா, தேசப்பனிடம் கதறி அழுதார். “வுடு சொர்ணம்... புள்ளைக்கு ஒரு நல்லது நடக்கணும்னா, எல்லாத்தையும் பொறுத்துக்கினுதான் போவணும்...” தேசப்பன் சொர்ணத்துக்கு ஆறுதலாகப் பேசினார். “வர்ற முப்பதாம் தேதி... புள்ளைக்குப் பொறந்தநாளு... ஒரு சட்ட எடுத்துகினு வா... அவுனுக்குப் புடிச்ச மைசூர்ப்பாகு வாங்கியாந்துரு... பாத்துட்டு வந்துல்லாம்...”
மைதானத்தில் அவரவர் பிள்ளைகளிடம் அவரவர் பெற்றோர் பேசிக்கொண்டிருந்தார்கள். தேசப்பன் புதுச்சட்டையை மெஸ்ஸியிடம் கொடுத்தார். மைசூர்ப்பாகை எடுத்துக் கொடுத்தார். “டேய் பையா... அந்த கிளப்பு செகரட்டரியாண்ட பேசிட்டண்டா... மெஸ்ஸிய வரச் சொல்லுங்கோ... பாத்துக்கலாம்னாரு” மைசூர்ப்பாகை ஒரு கடி கடித்தவன் வெறுமனே தலையசைத்துக்கொண்டான். “யம்மா ஒரு பீடியாவது... வாங்கிகினு வந்துருக்கலாம்ல...” மெஸ்ஸி கேட்டதும் தேசப்பனுக்கு முகம் வாடிப்போனது. சொர்ணம் நிதானத்துடன் தனது ஒயர்க்கூடையிலிருந்து ஃபுட்பாலை எடுத்து மெஸ்ஸியின் முன்னால் வைத்தார். கூடவே ஒரு சிகரெட்டையும் வைத்தார். தேசப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. மெஸ்ஸி ஃபுட்பாலைப் பார்த்தான். அதை வருடினான். கைகள் நடுங்கியது. கனவென்பது நமது நிழல்போல... இறந்தாலும் கூடவே வந்து நம்மோடு புதைந்துபோகும் வல்லமை கொண்டது.
“பால தொட்டா கைய வெட்டிடுவேன்னு சொன்ன அம்மாதான்... பால எடுத்துக்கோன்னு வைக்கிறேன்... உனுக்குப் புடிச்ச சிகரெட்டும் இருக்குது... நீ எது வேணுமோ எடுத்துக்கோ நைனா... நீ சந்தோசமா இருக்கணும்னு உனுக்கு நா சிகரெட்டு வாங்கியாரல... புத்தி பேதலிச்சிடக் கூடாதுன்னு ஒரு மருந்தாத்தான் வாங்கியாந்தேன்... உனுக்குக் குடிதான் வேணும்... அம்மா வேணான்னு சொல்லு... நா போய்ட்றன் நைனா... ஒரு புள்ள என்ன பண்றானோ இல்லியோ... பெத்தவ முன்னாடி நோயாளியா அலையக்கூடாதுடா ராஜா... எப்டிலாம் வளத்து இந்தக் குடிக்குக் குடுக்கவாடா உன்ன வளத்தேன்” என்று சொர்ணம் கதறி அழுதார். “சொர்ணம் எல்லாரும் பாக்கறாங்க பாரு... கம்முனு இருன்னு சொல்றன்ல...” என்றார் தேசப்பன். மெஸ்ஸி ஃபுட்பாலையும் சிகரெட்டையும் பார்த்தான். எதையும் யோசிக்காமல் சிகரெட்டை எடுத்துக்கொண்டு பின்கேட் வழியாகச் சென்றான். தேசப்பனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இப்படியொரு பிள்ளை இருந்தால் என்ன... இல்லாமல் போனால் என்ன என்று தோன்றியது.
இழுத்து முடித்து வந்த மெஸ்ஸி திண்டில் கலங்கி உட்கார்ந்திருந்த அம்மாவைப் பார்த்து “நாளிக்கு வரும்போது பீடி வாங்கிகினு வா...” என்றபோது தேசப்பன் கோவமாக பேக்கைத் தூக்கிக்கொண்டு “இது அழிஞ்சு சாவப்போது... நீ வா சொர்ணம்” என்று சொர்ணத்தின் கையைப்பிடித்து நடந்தார் தேசப்பன்.
சில நாள்கள் மையத்திற்கு சொர்ணம் மெஸ்ஸியைப் பார்க்கப் போகவில்லை. சொர்ணத்தால் முடியவில்லை. பெத்தவயிறு எதையும் கேட்காது. மையத்துக்குள் சொர்ணம் நுழைந்தபோது எதிரே மெஸ்ஸி ஆள்காட்டி விரலால் ஃபுட்பாலைச் சுழற்றிக்கொண்டு வந்தான். சொர்ணத்தின் மனம் சில்லிட்டது. தன் பிள்ளையை மீட்டெடுத்ததாக ஆசுவாசம் கொண்டார். மெஸ்ஸியின் தேவை சொர்ணத்துக்குத் தெரியும். சொர்ணத்தைப் போன்றே எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைகளின் தேவைகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
“யம்மா... ஏன் ஒரு வாரமா ஆளயே காணோம்.”
“உடம்பு முடியலடா நைனா... நல்லா சாப்டியா.” “யம்மா, இங்கயே நாலஞ்சு பிளேயர்ஸ் இருக்காங்கம்மா... அவுனுகளையும் கிளப்புல சேத்து உடனும்மா... நல்ல வெளையாட்றானுங்க தெரியுமா” மெஸ்ஸி பேசிக்கொண்டிருப்பதை சொர்ணம் கேட்டுக்கொண்டிருந்தார். தன் பிள்ளை தன்னைப் புரிந்துகொண்டான் என்பதைத் தவிர வேறென்ன வேண்டும் சொர்ணத்துக்கு. “நைனா உங்க வெளையாட்டுக்கு விலைகூடுன ஷூ பேன்ட்டு சட்டலாம்... எங்க நைனா கெடைக்கும்?” என்று கேட்டார். “சௌக்கார்பேட்டைல கெடைக்கும்மா... வெளிய வந்தவுட்ன வாங்கில்லாம்...” கையிலிருந்த ஃபுட்பாலை தூரமாய்ப் போய்க்கொண்டி ருந்தவனிடம் வீசினான். அவன் லாகவமாய்ப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.
மதுபான விடுதியில் குடிநோயாளியாக பார்த்த மெஸ்ஸியை மதுவைவிட போதை தரும் அன்பெனும் மருந்தைக்கொண்டு மீட்டு, திரும்பவும் விளையாட வைத்திருக்கிறார். கிரவுண்டில் ஜெர்சி உடையோடு கையில் ஃபுட்பாலை ஆள்காட்டி விரலால் சுழற்றிக் கொண்டு வந்த மெஸ்ஸியைப் பார்த்தேன். பழைய உடல்வாகு இல்லையென்றாலும் அவனது முகம் லியோனல் மெஸ்ஸியைப் போன்றே கம்பீரம் கொண்டிருந்தது. “மச்சி, இந்தத் தடவ... என் வெளையாட்ட யாரும் தடுக்க முடியாது... வெளையாடிட்டே இருக்கறவந்தான் மெஸ்ஸி ஆவ முடியும்... வெளையாடவே கூடாதுன்னு சொன்ன என் அம்மாவே பால குடுத்துடுச்சு... வேல்டு கப்புல நா ஆடறது அம்மா பாக்கும் மச்சி...” மெஸ்ஸி ஃபுட்பாலைத் தலையில் எக்கி அடித்தான்.
தொலைத்த இடத்தில் தேடிக் கண்டடைவான் மெஸ்ஸி. சொர்ணம் என்கிற ஜீவனின் பொறுமை கொண்ட அன்பே மெஸ்ஸியை விளையாட வைத்திருக்கிறது. குடியெனும் நோயிலிருந்து வெளியேற அன்பெனும் ஒற்றைச்சொல் போதுமானதாக இருக்கிறது. ஆனால், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். “அவன் குடிகாரப் பய பாஸ்” என்று யாரையும் ஒதுக்காமல் உட்கார்ந்து பேசுங்கள். தொடர்ந்து பேசுங்கள். உரையாடல்கள் இல்லாமற்போகிறபோதுதான், என்ன செய்வதெனத் தெரியாமல் மதுவின் வசம் ஒப்புக்கொடுக்கிறான் ஒருவன். அதுவொரு நோய்மைதான் என்பதைப் புரியவைத்து வெளியே கொண்டுவந்துவிட்டால், மெஸ்ஸியைப் போன்ற நிறைய கலைஞர்களைக் காப்பாற்றிவிடலாம் என்றே தோன்றுகிறது.
- மனிதர்கள் வருவார்கள்...