மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM

கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM

கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM

கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM

ன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வந்தால் `அப்பா வீட்டுல இல்லைன்னு சொல்லிடு’ எனக் கடன்காரர்களைக் கண்டவர்களைப்போல ஓடி ஒளிபவர்கள் நம்மில் அதிகம். இந்தத் துறையே இப்படித்தான் இருக்கிறது. சின்னத் திருத்தம், இருந்திருக்கிறது. அது என்ன... எப்படி மாறியது என்பதை அறிய நமக்கு `யாஷிஷ் தாஹியா’ யார் என்பது தெரிந்திருக்க வேண்டும். 

கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM

ஒருமுறை யாஷிஷ் தாஹியாவின் அப்பா ஒரு ஆடிட்டர் உதவியுடன் வரித்தாக்கல் செய்திருந்தார். யாஷிஷ் அதைச் சரிபார்த்துக்கொண்டிருந்தார். பலமுறை அவற்றைப் பார்த்தார். அப்போதுதான் ஆடிட்டர் அதிக செலவு வைத்துவிட்டார் என்பது புரிந்தது. யாஷிஷ் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் படித்தவர். அவராலேயே பலமுறை சோதித்தபின்தான் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதையே சாமானியர்கள் செய்ய முடியுமா? இந்தக் கேள்வி யாஷிஷின் மனதில் தங்கிவிட்டது. நிதிச்சேவைகள் விஷயத்தில் இந்தியா நிறைய மாற வேண்டும் என நினைத்தார்.

இந்தியாவை மாற்ற வேண்டுமென நினைத்த யாஷிஷ் அதன்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுவிட்டார். 21-ம் நூற்றாண்டின் தொடக்கம். அப்போதுதான் இணையம் மூலமான சேவைகள் உலகம் முழுவதும் அதிகரித்தன. யாஷிஷின் நிறுவனம் பயணங்கள் தொடர்பான சேவைகளை வழங்கி வந்தது. வாடிக்கையாளர்கள் எங்கே செல்ல வேண்டுமெனச் சொன்னால், அங்கு செல்ல யார் யாரெல்லாம் சேவை வழங்குகிறார்கள், அவர்கள் கட்டணம் என்ன என்பதை இவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து அங்கேயே வாங்கலாம். இந்த ஐடியா வேறு எதற்கெல்லாம் ஒத்துப்போகும் என யோசித்தார் யாஷிஷ். அப்போதுதான் அந்த ஆடிட்டரும் இந்தியாவும் நினைவுக்கு வந்தார்கள். `இணையம் மூலம் இன்ஷூரன்ஸ்’ என ஒரு ஃப்ளாஷ் அடித்தது. உடன் வேலை செய்த சிலரிடம் இதைப் பகிர, அவர்களுக்கும் நம்பிக்கை வந்தது.

யாஷிஷ் சொன்னால் மாடியிலிருந்து கூட கீழே குதிக்கத் தயாராக இருந்தவர்கள் அவர்கள். காரணம், யாஷிஷின் நிர்வாகத் திறமையும் ஆர்வமும். யாஷிஷ் பள்ளிகளிலே டாப் ஸ்கோரர்தான். எளிதில் ஐ.ஐ.டி-யில் சேரக்கூடிய மதிப்பெண்களை எடுத்தவர். ஆனால், அவர் விருப்பங்கள் எப்போதும் வித்தியாசமானவை. ஐ.ஐ.டி-யில் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வம் அதிகம். எப்போதும் வகுப்பறையிலே முடங்காமல் நீச்சல் குளத்தில் கிடந்தார். தேசிய அளவில் பல பரிசுகளை நீந்திப் பெற்றவர் யாஷிஷ். கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாமென்றார். அதற்கு மாற்றாக அவர் தேர்வு செய்த வேலை, வீட்டிலே பள்ளி மாணவர்களுக்கு ட்யூஷன் எடுப்பது. எப்போதும் மனதுக்குப் பிடித்தவைதான் அவரின் முதல் தேர்வு. வேலையோ, வெற்றியோ... இரண்டாமிடம்தான். ஆனால், இவையெல்லாம் யாஷிஷை வேலையில் கவனம் செலுத்தத்தான் உதவின. அதனால், யாஷிஷ் எது செய்தாலும் சரியாக இருக்குமென நம்பினார்கள் அவருடன் வேலை செய்தவர்கள்.

கேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COM

இந்தியாவுக்குத் திரும்பினார் யாஷிஷ். அவர் தயார் செய்தது ஒரே ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இணையம் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றை வாங்க உதவுவது என்ற ஐடியாவைத் தெளிவாகச் சொல்லும் ஒரு பிரசன்டேஷன். அதைப் பார்த்த முதலீட்டாளர்கள் யாஷிஷுக்குத் தந்த தொகை... 20 கோடி. அதுதான் யாஷிஷ். `பாலிசி பஸார்’ இப்படித்தான் 2008-ல் உதயமானது.

இந்தியாவில் இன்ஷூரன்ஸ் துறை ஓர் அடர்ந்த காடு போன்றது. பெரும்பாலானோர் வாங்குவார்கள். ஆனால், என்ன வாங்குகிறோம், எதற்கு வாங்குகிறோம் என்ற தெளிவு இல்லாமலே அதை வாங்கிக்கொண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸையே எடுத்துக்கொள்வோம். அதில் வாகனத்துக்கு எவ்வளவு பிரீமியம், நமக்கு எவ்வளவு, Third party எனச் சொல்லப்படும் மூன்றாம் நபருக்கு எவ்வளவு, இதில் எவையெல்லாம் கட்டாயம், எவையெல்லாம் நம் விருப்பம் என்பது பற்றிய தெளிவு பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. அதனால், நமக்குத் தேவையில்லாத விஷயங்களுக்கும் சேர்த்து வாங்குவோம். இதனால் அதிக பணத்தைச் செலவு செய்ய நேரிடும். பின்னர், இது பற்றிய விபரம் வாடிக்கையாளருக்குத் தெரிய வரும்போது இன்ஷூரன்ஸ் என்பதே பிடிக்காத ஒன்றாகிவிடும். அரசு கட்டாயமாக்கிய விஷயங்கள் தவிர மற்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்காமல் விட்டுவிடுவார்கள்.

பாலிசி பஸார் போன்ற இணைய நிறுவனங்கள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தருகின்றன. வாடிக்கையாளர்களுக்குத் தெரிய வேண்டிய விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எந்தச் சேவைக்கு எவ்வளவு பிரீமியம் என்பதையும் பிரித்துச் சொல்கிறது. மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இதே சேவையை என்ன விலைக்குத் தருகின்றன என்பதையும் சொல்கிறது. இதனால், வாடிக்
கையாளர்கள் திருப்தியுடன் இன்ஷூரன்ஸ்களை வாங்குகிறார்கள். இது இந்தத் துறையின் மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அடர்ந்த காட்டுக்குள் பேரொளி ஒன்றைப் பாய்ச்சுகிறது இந்த ஜீபூம்பா. இந்த ஐடியாவை இந்தியாவுக்குள் முதலில் கொண்டு வந்தது பாலிசி பஸார்.

பாலிசி பஸார் ஆரம்பித்த முதல் ஆறு ஆண்டுகள் யாஷிஷின் சம்பளம் அவர் மகன்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டக்கூடப் போதவில்லை... அவர்கள் படிப்பது யு.கே-வில். குடும்பத்தை அங்கே விட்டுவிட்டு பாலிசி பஸாருக்காக இங்கே தனியே இருந்து வேலை செய்கிறார் யாஷிஷ். இன்று பாலிசி பஸாரில் மாதந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்கப்படுகின்றன. இதற்காக 5000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் தலைமைச் செயல் அதிகாரி யாஷிஷ் தாஹியா.

இப்போதும் காலையில் 4 மணிக்கே எழுந்திருக்கிறார் யாஷிஷ். பயிற்சியாளர் உதவியுடன் நீச்சல் பயிற்சி; அது முடிந்ததும் ஓட வேண்டியது. `டிரையத்லான்’ போட்டிக்காகத் தன்னைத் தயார் செய்கிறார். (அயர்ன் மேன் டிரையத்லான் என்பது 3.86 கி.மீ தூரம் நீச்சல், 180 கி.மீ சைக்கிளிங், 42 கி.மீ ரன்னிங் சேர்ந்ததுதான். இவ்வளவையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார் யாஷிஷ்.) இந்த ஃபிட்னெஸ்தான் அவர் வெற்றியின் சீக்ரெட். 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் மனதுக்குப் பிடித்த விஷயங்களுக்கு முன்னுரிமை. மீதி நேரத்தில் அவர் சாதித்த பாலிசி பஸாரின் இன்றைய மதிப்பு 1.5 பில்லியன் டாலர். இந்திய ரூபாயில் 10,000 கோடிக்கும் மேல்.

இந்த மதிப்பீட்டில் யாஷிஷுக்கு நம்பிக்கையில்லை. `பாலிசி பஸார் இப்போது பங்குச் சந்தையில் காலடி வைத்தால் அதன் மதிப்பு 20,000 கோடியைத் தாண்டும்’ என்கிறார். அது உண்மைதான்.

ஒருமுறை யாஷிஷிடம் `விளம்பரங்களுக்காக எவ்வளவு தொகை செலவு செய்கிறீர்கள்’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. எங்கள் வருமானத்தில் 40% என்றார். கேள்வி கேட்டவருக்கு ஆச்சர்யம்.

``நாங்கள் புதிதாக ஒரு கான்செப்ட்டை முன்வைத்துத் தொடங்கியிருக்கிறோம். இதை முதலீட்டாளர்களிடம் சொல்லிப் புரிய வைப்பது ஈஸி. ஆனால் இதை வாடிக்கையாளர்களிடமும் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் இல்லாமல் எந்தத் தொழிலும் இல்லை. அதற்குத்தான் இந்தச் செலவு. எங்களுக்குப் போட்டியாளர்களைப் பார்த்து பயமென்று அர்த்தமில்லை. இதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும். அதுதான் முக்கியம். நாங்கள் செய்வது விளம்பரங்கள் மட்டுமல்ல; விழிப்பு உணர்வு” என்றார்.

ஸ்டார்ட் அப்களின் மிக முக்கியமான சவால் இது. அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை வைத்துதான் ஸ்டார்ட்அப்கள் வளர்கின்றன. அந்த ஐடியாமீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் அச்சமின்றி அதைப் பயன்படுத்துவார்கள். அதற்கு அந்த ஐடியா பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் வர வேண்டும். அதற்கும் சேர்த்துதான் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் யோசிக்க வேண்டும்; செலவு செய்ய வேண்டும். ஒருவகையில் பார்த்தால் சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் வேலையையும் ஸ்டார்ட் அப்கள் செய்கின்றன. அதனால்தான் ஸ்டார்ட் அப்களின் வெற்றி என்பதை வெறும் வருமானத்தால் மட்டுமே கணக்கிட முடியாது.

கார்க்கி பவா