
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
`முத்து தேநீர் விடுதி’யில், காலையில் ஜம்புலிங்கத்தோடு கூடுவது வழக்கம். ஜோபியின் கனம் கொஞ்சம் கூடியிருந்தால், ரெண்டு பிஸ்கோத்துகளும் ஒரு பனாமா சிகரெட்டையும் ஜம்பு வாங்கிக்கொள்வார். தேநீரில் பிஸ்கோத்தை நனைத்து உடையாமல் எப்படிச் சாப்பிட வேண்டும் என்று ஜம்புவிடம் நாம் கற்றுக்கொள்ளலாம். பனாமாவைப் பற்றவைத்துக்கொள்ளும்போது இந்த உலகத்தைத் துச்சமாக ஒரு பார்வை பார்த்துக்கொள்வார். ஜம்புவுக்கு, மேடை நாடகத்தில் ஒரு காட்சியாவது நடித்துவிட வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அதுவும் கலையழகனின் `புரட்சி தீபம் நாடகக் குழு’வில் நடித்துவிட வேண்டும் என்பதன் காரணம் இரண்டு மட்டும்தான். ஒன்று, சாந்தகுமாரி. மற்றொன்றும் சாந்தகுமாரிதான்.

திருவிழாக் காலங்களில் கலையழகனின் நாடகம் வீதிதோறும் நடக்கும். `கலைதாகம்’ என்கிற ஒன்றின்பால் மோகம்கொண்டு ஜம்புவும் நானும் சாந்தகுமாரி தோன்றும் காட்சிகளுக்காக மேனி முழுவதும் கண்களாக மணல் கூட்டி உட்கார்ந்துகொண்டிருப்போம். கலையின் பார்வை ஜம்புமீது பட்டுவிடாதா என ஏங்கிக்கொண்டிருந்தான். அப்போதுதான் நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த மிதிவண்டி காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது. மிதிவண்டியின் முக்கோணச் சட்டகக் கம்பியில் விளம்பரப் பலகை ஒன்றில் `சினிமாவுக்குக் கதை வேண்டுமா... நாடகத்துக்குக் கதை வேண்டுமா... அணுகவும் கலையழகன். நாடக இல்லம். எண்:13, பூண்டி தங்கம்மாள் தெரு, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை-81. தொடர்பு P.P: 0445910131’ என்று இரண்டு பக்கமும் எழுதியிருக்கும். இந்த விளம்பரத்தைப் பார்த்து, கலையைக் கிண்டல் பண்ணாதவர்களே இல்லை. முன்னாலும் சரி பின்னாலும் சரி, எள்ளி நகையாடும் இவர்களின் ஏகடியத்தைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடுவார் கலை.
மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போட்டுவிட்டு, ஒரு தேநீர் சொன்னார். ஜம்புவும் நானும் வணக்கம் சொன்னோம். ``என்னய்யா ஜம்பு, வேல எப்படிப் போகுது?” கலை கேட்டதும் ``அதெலாம் நல்லாதான் போகுது அய்யா... உங்க பார்வைதான் என்மேல பட மாட்டேங்குது.”
நான் தேநீரைக் கொண்டுவந்து கொடுத்தேன்.
``யோவ், உனக்கு எதுக்குய்யா இந்தப் பொழப்பு? மேடையில நடிக்கும்போது விசிலடிப்பான், கைதட்டுவான்யா. கீழ வந்தாக்கா `பெரிய சூப்பர் ஸ்டாரு’ன்னு கிண்டல்பண்ணுவான். யோசிச்சுக்கோ...” தேநீரைக் குடித்து முடித்து `சொக்கலால்’ பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்.
``கலையய்யா நல்லா யோசிச்சேன். ஏதாவதொரு வேஷம் கொடுங்கய்யா...” ஜம்பு விடமாட்டான் என்று கலைக்குத் தெரிந்தது. சிறிது நேரம் யோசித்தார். ``சரி, நாளைக்கு அகஸ்தியர் ஹால்ல ரிகர்சல் இருக்கு. அங்க வா பார்க்கலாம்” என்று மிதிவண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றார். அவர் சென்று விட்டார். ஆனால், ஜம்புவை நீங்கள் பார்க்க வேண்டுமே... அப்போது ஒரு `பனாமா’ சிகரெட்டை வாங்கி சூப்பர் ஸ்டார் போலவே பற்றவைத்து அவன் பண்ணின சேட்டை, தாங்க முடியவில்லை.

ஒத்திகைக் கூடத்தின் நுழைவாயிலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான். என்னையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டான். `போடா... போடா’ என்பதாகப் பார்வையில் சொன்னேன். ஆனாலும் நமது நடிகரின் மமதை குறையவேயில்லை. உள்ளே ஒரு பெரிய கூடத்தில் ஓரமாக ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. தபேலாவை ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார். ஆர்மோனியத்தில் ஒருவர் `கியாவ் மியாவ்’ என ஏதேதோ பாடலை இசைத்துக்கொண்டார். தோளில் துண்டு போட்டுக்கொண்டு அந்தப் பாடலுக்கு இடுப்பை வளைத்து ஒரு ஸ்டெப் போட்டார் கலை. சாக்பீஸால் ஒரு ஸ்டேஜ் வரைந்து அந்த ஸ்டேஜில் கலை போட்ட அதே ஸ்டெப்பை சாந்தகுமாரி இடுப்பை வளைத்துப் போட்டாள். முதல்முறையாக சாந்தகுமாரியை மேடை இல்லாமல் ஒப்பனை இல்லாமல் ஜம்பு பார்க்கிறான். அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், சாந்தகுமாரி என்பதால் ஜம்பு காட்டிக்கொள்ளவில்லை.
``மச்சி, கலை சாருக்கு ஒரு வணக்கத்தப் போடு மச்சி” என்று சொன்னபோதே கலை எங்களைப் பார்த்துவிட்டார்.
ஜம்பு துள்ளிக்குதித்து ஓடிப்போய், கலையின் காலில் விழுந்தான். கலை, ஜம்புவை ஆசீர்வதித்தார். ``இப்படி உக்காந்து என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாருங்க” என்றார். நாங்களும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்துகொண்டோம். தபேலா வாசித்த மனிதர் என்னை பாவம்போலப் பார்த்தார். குமாரி இடுப்பை வளைத்து ஆடியது ஜம்புவுக்கு அப்படிப் பிடித்திருந்தது. வாயை `ஆ’வென வைத்துக்கொண்டிருந்தான். நடன ஒத்திகை முடிந்ததும் குமாரி ஜமுக்காளத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். ஜம்புவுக்கு இருப்பு கொள்ளவில்லை. இருந்தாலும் சமாளித்துக்கொண்டான். ``குமாரி, நம்ம ட்ரூப்புக்கு புதுசா வந்திருக்கிற ஆளு” என்று ஜம்புவை கலை அறிமுகப்படுத்தினார். குமாரி, ஜம்புவைப் பார்த்துச் சிரித்தாள். ஜம்பு, அன்றிலிருந்துதான் சூப்பர் ஸ்டாராகவே மாறிப்போனான்.
ஏற்கெனவே குமாரியோடு ஆடிக்கொண்டிருந்த `ஸ்டேஜ் கிங்’ ஆனந்த், ஒரு சிறு பயலைப்போலத்தான் ஜம்புவைப் பார்த்தார். ``ஓ.கே ஸ்டார்ட் தி ரிகர்சல்... குமாரி, ஆனந்த் டேக் பொசிஷன்” என்றதும் இருவரும் வரைந்த மேடையில் நின்றுகொண்டார்கள்.
``ஆனந்த், சிச்சுவேஷன்படி குமாரிய நீங்க ரேப் பண்ற சீன். அவள கடத்திட்டு வந்துடுறீங்க. அவளுக்கு ஒரு காதலன் இருக்கான். இவள கெடுத்துட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க... ஓ.கே...” என்று காட்சியை விளக்க, ஜம்புவுக்கு குமாரியைக் கெடுப்பது மட்டும் ஏனோ பிடிக்கவில்லை. இருந்தாலும் காட்சியை கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் ஜம்பு.
ஒரு கயிற்றுக்கட்டிலில் போர்வையை விரித்து குமாரி உட்கார்ந்திருக்கிறாள். ஸ்டேஜ் கிங், வீரப்பாவின் சிரிப்பில் குமாரியை ரொமான்ஸ் லுக் விடுகிறார். குமாரி, புலியிடம் சிக்கிக்கொண்ட மான்போல விழி மருண்டு மருண்டு பார்த்து விக்கித்துப் பதுங்குகிறாள்.

``கயல்விழியாளே... உன்னைக் கொத்தித் தின்னப்போகிறேன். முயல் போன்ற உன் கன்னங்களைப் பிய்த்துத் தின்னப்போகிறேன். வா அழகே... என் அமுதே!”
``ஐயோ வேண்டாம்... வேண்டாம். என்னைக் கெடுத்துவிடாதீர்கள்!”
``நான் உன்னைக் கெடுப்பதற்கு நீ கொடுத்துவைத்திருக்க வேண்டும். கொய்யாப்பழமே... உன்னைக் கொய்து விடுகிறேன் வா” என்று குமாரியை ஸ்டேஜ் கிங் நெருங்கிப் பிடித்துக் கெடுப்பது போன்று பாவனை செய்ய, பார்த்துக்கொண்டிருந்த இயக்குநர் கலை ``கட்’’ என்றார்.
``ஏம்பா ஸ்டேஜ் கிங்கு... கெடுக்கிற மாதிரியா உன் ஆக்ட் இருக்குது? ரெண்டு பேருக்கும் ஏதோ `ஃபர்ஸ்ட் நைட்’ சீன் மாதிரி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதுப்பா. நல்லா கேட்டுக்கோ, குமாரிய நீ கற்பழிக்கணும் புரியுதா? தட் இஸ் ரேப். ஓ.கே...” என்று சொல்லிவிட்டு ``ஆக்ஷன்`` என்றார். மறுபடியும் `கயல்விழியாளே...’ என்று ஆரம்பித்த ஸ்டேஜ் கிங், குமாரியைப் புலிபோல் வேட்டையாடினார். ஜம்புவால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாத்ரூம் போவதாக வெளியில் கிளம்பினான். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கலை எங்களிடம் வந்தார். ``மொதல்ல ரிகர்சல் தொடர்ந்து வந்து பாரு. வர்ற 10-ம் தேதி ஸ்ட்ரீட் ஷோ. `சீன் செட்டிங்’ வேலையப் பார்த்துக்கோ. கொஞ்சம் கொஞ்சமா `சிட்டா’ தர்றேன். பாடத்தப் பழகிக்கோ” என்றார்.
ஜம்பு மிகவும் சந்தோஷமாக இருந்தான். இதுவரை பார்வையாளனாகவே இருந்தவன் முதல் முறையாக பங்கேற்பாளன் ஆகப்போகிறான். புரட்சி தீபம் நாடகக் குழுவின் `ஒரு நயாபைசா’ என்ற பேனரில் சாந்தகுமாரியின் ஓவியத்தில், இயக்கம் என்ற இடத்தில் பேனாவை வைத்து சிந்தித்துக்கொண்டிருந்தார் கலையழகன். ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடினார்கள். சீன் செட்டிங் செங்கப்பன் வந்தார்.
``நீதான் டைரக்டர் சார் சொன்ன பையனா? வரிசைக்கிரமமா செட்டிங் இருக்கும். இதான் ஆர்டர். சீன்படி செட்டிங் மாத்திக்கிட்டே இருக்கணும் புரியுதா?” என்று சீன் ஆர்டர் பேப்பரைக் கொடுத்துவிட்டுப் போனார்.
சாந்தகுமாரி, மேக்கப்பில் மேடைக்கு வந்து கும்பிட்டு வணங்கிக்கொண்டாள். குமாரியை இவ்வளவு நெருக்கமாகப் பார்த்தது, எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. முதல் பெல் அடித்தார்கள். சீன் ஆர்டர்படி கோயில் என்பதால், செட்டிங்கை இழுக்கத் தேவையில்லை. இரண்டாவது வீடு வரும்போது முதல் செட்டிங்கை இழுத்துக்கொண்டால் போதும். குமாரி பவ்யமாக மேடைக்குள் பிரசன்னமானாள். ரசிகர்களின் ஆரவாரத்தின் இடையில் முருகனைப் பிரார்த்தித்தாள். ``எல்லோரும் நல்லாருக்கணும். நல்ல வழி காட்டுப்பா முருகா...” என்று கண்களை மூடி சேவித்தாள். நான் ஜம்புவுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன்.

அவன், சீன் ஆர்டர் செட்டிங்கை கவனமாகப் பார்த்தான். அப்போது பரபரப்பாக வந்த இயக்குநர் கலை ``ஜம்பு, ஒரு தப்பு நடந்துபோச்சு. ஸ்டேஜ் கிங்கோட அம்மா இறந்துட்டாங்களாம். அவன்தான் வில்லன் வேஷம். என்ன பண்றதுன்னு தெரியல. நீ ஒண்ணு பண்ணு, இந்த நாடகத்துல நீதான் வில்லன். `கவர்ச்சி வில்லன் ஜம்பு’ன்னு இன்னிலேர்ந்து உனக்கு பேரு... ஓ.கே. போயி மேக்கப் போட்டுக்கிட்டு வந்துடு. ஆறாவது சீன் உன்னோட ரேப் சீன்தான். ரிகர்சல்ல பார்த்தல்ல. இந்தா சிட்டா... பாடத்தப் படிச்சுக்கோ” என்று அவர் பாட்டுக்குச் சொல்லிவிட்டு அடுத்த சீனுக்கான வேலைக்காகப் பறந்துவிட்டார். ஜம்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியொரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தவன். என்ன செய்வது, வாய்ப்புகள் என்பது மரணத்தைப்போல எப்போது யார் கதவைத் தட்டும் என்று யார்தான் சொல்ல முடியும்?
``மச்சி, உனக்கு லக்குதான்டா. ஃபர்ஸ்ட்டு சீனே ரேப் சீனு... யாருக்காவது கிடைக்குமா?” கலாய்த்ததுக்கு அவன் பதில் சொல்லாமல் `சிட்டா’ எனும் அவனுக்கான வசனப் பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்தான். முக மெல்லாம் வியர்த்துக்கொட்டியது.
``மச்சி, பயமா இருக்குடா. சாந்தகுமாரிய எப்பிடிடா ரேப் பண்றது?” பாவமாகக் கேட்டான்.
நான் அதிர்ந்துபோனேன். ``ஏய், விட்டாக்கா நிஜமாவே ரேப் பண்ணிடுவபோல. இது நாடகம்கி றதை மனசுல வெச்சுக்கோ...” என்று ஜம்புவுக்கு நினைவுபடுத்தினேன். மேடையில் மூன்றாவது சீன் போய்க்கொண்டி ருந்தது. திடீரென எனக்கொரு யோசனை வந்தது. ``மச்சி தைரியமா போயி... மேக்கப்பப் போடு. நான் ஒரு சமாசாரத்தோடு வர்றேன்” என்றேன். அவன் தயங்கினான். பிறகு சென்றான்.
நாடகம் அரங்கேறும் தெருவில்தான் காளியப்பன் ஒயின்ஷாப்பும் இருந்தது. ஒரு காளிமார்க்கை வாங்கினேன். ஒரு குவார்ட்டரை வாங்கினேன். போத்தலை உடைத்து ஒரு பெக்கை நான் முடித்துக்கொண்டு, மீதத்தை காளிமார்க்கில் கலந்து பக்கா மிக்ஸிங்காகக் கலக்கிகொண்டேன். மேடையில் நான்காவது சீன். பூங்காவில் வரைந்துவைத்த மரத்தினடியில் குமாரியும் அவளது காதலனும் காதலாகிக் கசிந்துகொண்டிருந்தார்கள். மேடையின் பக்கவாட்டில் ஸ்க்ரீனின் மறைவில் கையில் சிட்டாவை வைத்துக்கொண்டு `ப்ராம்ப்ட்’ பண்ணிக்கொண்டிருந்தார் இயக்குநர் கலை. நான் கலர்ஃபுல்லான சமாசாரத்தோடு மேடையின் பின்புறம் சென்றேன். கழுத்து வரையிலான மேக்கப்பில் ஜமீன்தார் உடையில் ஜம்பு கவர்ச்சி வில்லனாகவே காட்சியளித்தான். கையில் சிட்டாவை வைத்து `கயல்விழியாளே... உன்னைக் கொத்தித் தின்னப்போகிறேன்...’ என்று வசனத்தைப் பாடம் செய்துகொண்டிருந்தான்.

``மச்சி, இத அடி. பயம்லாம் இதப்பார்த்து பயந்து ஓடும்” - சமாசார காளிமார்க்கை அவனிடம் நீட்டினேன்.
``மச்சி... இது தப்புடா. ஃபர்ஸ்ட் டைம் நடிக்கப்போறோம்” என்று தயங்கினான். நான் என்னென்னவோ சொல்லி அவன் கலைதாகத்துக்கு, தண்ணீருக்குப் பதிலாக சமாசாரத்தை ஊற்றினேன். இருவரும் போதையானோம். அப்போதெல்லாம் பஞ்சு உடம்பு என்பதால், சிறு தூறலுக்கே புயலாக மாறிவிடுவோம். ஜம்புவுக்கு உள்ளே போன அரக்கனால் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது.
ஐந்தாவது சீன் போய்க்கொண்டிருந்தது. அடுத்து ஜம்பு கவர்ச்சி வில்லனாகக் களமாடப்போகிறான். அதுவும் நமது நண்பன் என்பதில் பெருமிதத்தோடு மேடையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேடை மங்கலாகத் தெரிந்தது. ஆறாவது சீன். அது ஒரு காட்டு பங்களா செட்டிங். புள்ளிமானாகத் தூக்கி வரப்பட்டிருக்கிறாள் குமாரி. மைனராக மேடைக்குள் நுழைந்த கவர்ச்சி வில்லன் ஜம்பு, ஜபர்தஸ்தாக ஜனங்களைப் பார்த்துக்கொண்டான். பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்த கலை ``கயல்விழியாளே...” என்று எடுத்துக்கொடுத்தார். ஜம்புவின் நடை போதையில் சற்றே சாய்ந்தாட, பாதி மயக்கத்திலிருந்து குமாரியைப் பார்த்தான். ஜம்புவின் கண்கள் காமத்தின் சுனை பொங்கி அந்த நீர் வழிந்தோடி அவளை நனைத்தது. அவள் பயந்து இவனைப் பார்க்கிறாள்.
``டேய் ஜம்பு, `கயல்விழியாளே...’ ” என்று கலை திரும்பவும் எடுத்துக்கொடுக்க, ``காயல்விழியாளே... உன்னைக் கோத்தித் தின்னப்போகிறேன்” என்று உளறிக்கொட்டினான். ஆனால், நான் மட்டும் கைகளைத் தட்டிக்கொண்டிருந்தேன். இயக்குநர் என்னை முறைத்ததைக் கண்டுகொள்ளவில்லை.
``ஜம்பு... டயலாக் பேசினது போதும், ரேப் பண்ணு. தட் இஸ் ரேப்” என்று கலை எடுத்துக்கொடுக்க, ஜம்பு, குமாரியை வாரி அணைத்து, உண்மையிலேயே இதழைக் கவ்வ முற்பட்டதை, குமாரி மட்டுமல்ல மேடையின் கீழ் இருக்கும் ஆடியன்ஸ் வரை உணர்ந்துகொண்டார்கள். விட்டால் ஊரறிய சாந்திமுகூர்த்தமே நடத்தி முடித்துவிடுவான் என்று பயந்த குமாரி, முட்டியால் நங்கென்று ஜம்புவைத் தாக்கினாள். `ஐயோ...’வென அவன் சரிய, புலியிடமிருந்து தப்பித்த புள்ளிமானாகத் துள்ளிக் குதித்தோடினாள். திரை மூடப்பட்டது.
மூடப்பட்ட திரையில் குமாரி, கலையிடம் ``யார் சார் இவன்? பொறுக்கி... கண்ட எடத்துல தொடுறான். நாடகத்துல நடிக்க வந்துட்டா, என்ன வேணா பண்ணலாம்னு நினைச்சுட்டானா... ரோட்ல போறவனையெல்லாம் ஆர்ட்டிஸ்ட்டா போட்டா இப்படித்தான். எம் பொழப்பு நடிக்கிறது... நான் ஒண்ணும் அந்த மாதிரி ஆளு கெடையாது சார்” பொறிந்துதள்ளினாள் குமாரி.
திரைக்கு வெளியே ரசிகர்களின் கூக்குரல் அதிகமாக இருந்தது. ``குமாரி, அவன் குடிச்சிருக்கான்னு நினைக்கிறேன். ப்ளடி, இப்படிப் பண்ணுவான்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. அவனுக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன். ப்ளீஸ், ஷோவ கம்ப்ளீட் பண்ணலைன்னா... ரொம்பத் தப்பாப்போயிடும்” என்று எங்கள் பக்கம் திரும்பினார். ஜம்பு அதே மூடில்தான் இருந்தான். நண்பன் நடித்து அசத்தியதாக நான் இயக்குநரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
``டேய் ஜம்பு... மேடைங்கிறது கோயில் மாதிரிடா. இது கலை. நீ கூத்தாதான் பார்த்திருக்க. ப்ளீஸ்... இந்த ஒரு சீன் நடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடு. இதோட நடிக்கணும்னு என்ன வந்து பார்த்துடாத” என்று கையெடுத்துக் கும்பிட்டார். அப்போதுகூட நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதாகத்தான் இருந்தோம்.
பெல் அடித்தார்கள். மறுபடியும் அதே செட்டில் சீன்படி ஜம்பு, குமாரியைக் கெடுக்க முயலும்போது காதலன் வந்து ஜம்புவை அடித்துத் துவைத்துக் காப்பாற்றுவான். அதே கட்டிலில் அரை மயக்கத்தில் குமாரி படுத்துக்கொண்டிருந்தாள். ஜம்பு மேடையில் பிரசன்னமானான். இப்போது ரசிகர்களின் மத்தியில் கைத்தட்டல்களும் விசில்களும் பறந்தன. முதல்முறை ஜம்புவுக்காகக் கைத்தட்டல்கள். உடம்பில் என்னவோ புது ரத்தம் பாய்ச்சுவது போன்று உணர்ந்தான் ஜம்பு. போதையின் சாறுகள் அவனிடமிருந்து வடிந்துகொண்டிருந்தன. இதுகாறும் அவனது வாழ்வில் இப்படியொரு கிளர்ச்சியை ஜம்பு அனுபவித்ததில்லை. `கைத்தட்டல்கள் என்பது அங்கீகாரம். அது கிடைக்காத எத்தனை கலைஞர்கள் என்னவெல்லாம் ஆகிப்போனார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்படியானதோர் அங்கீகாரம் தொடர்ந்து நமக்குக் கேட்கவேண்டும்’ என ஜம்புவின் மனம் வேண்டிக்கொண்டது.
தான் ஒரு நடிகன் என்பதை உணர்ந்து கொண்டான். குமாரியைப் பார்த்தான். அவளும் சகநடிகையாகவே அவனுக்குத் தெரிந்தாள். தனது முதல் வசனத்தைப் பேசத் தொடங்கினான். ``கயல்விழியாளே... உன்னைக் கொத்தித் தின்னப்போகிறேன். காமத்துக்கிளியே கோபத்தில் கொக்கரிக்காதே. சாமத்தில் அகப்பட்டாய். ஆபத்துக்குப் பாவமில்லையடி... மாங்கனியே... மதுரமே... மாமன் சொல் கேளடி... பூங்கனியே புதினமே... புறப்பட்டேன் நானடி...” என்று அடுக்கு வசனத்தைத் தெளிந்த நீரோடைபோல அவன் பேசப் பேச, ரசிகர்களின் கைத்தட்டல்களால் நிரம்பி வழிந்தான் கவர்ச்சி வில்லன் ஜம்பு என்கிற ஜம்புலிங்கம். ஏற்ற இறக்கத்தோடு பேசிய வசனத்தில் லயித்துப்போன குமாரி, `வேண்டாம்... வேண்டாம்... என்னை விட்டுவிடுங்கள்’ என்று, ஏனோ சொல்ல மறந்தாள்.
- மனிதர்கள் வருவார்கள்...