மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 3

இறையுதிர் காடு - 3
News
இறையுதிர் காடு - 3

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்

அன்று புலிப்பாணி தன் வலக்கையில் நிறைய மூலிகைகளை வைத்திருந்தான். ஒரு உரிச்சட்டியும் அவன் இடக்கரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது! அநேகமாய் அதில் சுண்ணம் சேர்த்த பதநீர்தான் இருக்க வேண்டும். யானைத்தலைப் பாறை மேல் நின்றபடி இருக்கும் அஞ்சுகனை அவனும் பார்த்தான்.

இறையுதிர் காடு - 3
இறையுதிர் காடு - 3

“புலீஈஈஈ...!” அஞ்சுகன் குரல் காற்றோடு கலந்து அவனை அழைத்தது. அது புலிப்பாணியை நிறுத்தவும், அஞ்சுகன் அந்தப் பாறையிலிருந்து தாவிக்குதித்து அவனை நோக்கி ஓடினான். அவன் செல்லும் வழியெங்கும் தழுதாழை, தோடகை, செந்நாயுருவி, சதுரக்கள்ளி, களிப்பிரண்டை என்று பொதினி நிலப்பரப்புக்கே உண்டான தாவரங்கள்!

இறையுதிர் காடு - 3
இறையுதிர் காடு - 3பழுதின்றி மழை பெய்திருந்ததால் சகல தாவரங்களிடமும் பச்சை முற்றலாய்த் தெரிந்து கொழிப்பும் காணப்பட்டது. ஓடுகையில் தாவரங்களுக்கு மிதிபாடின்றி ஓடினான் அஞ்சுகன். ஒரு சமயம் விளையாட்டாக ஒரு மரத்தின் கொப்பை உடைத்துப் பிரம்புபோல் பிடித்துக்கொண்டு விளையாடியதை பாகரும் பார்க்க நேர்ந்தது. அதன்பின் அவர் அஞ்சுகனை அழைத்து, கொப்பை ஒடித்த மரத்தை 108 முறை சுற்றி வந்து, ஊர் மந்தையில் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கோருவதுபோல் அந்த மரத்திடம் மன்னிப்பு கோரச் சொன்னார். ‘நீ மனதார மன்னிப்பு கோரினால் அந்த மரமும் மன்னித்துவிடும். அது மன்னித்துவிட்டதை எல்லோரும் உணரவும் முடியும்’ என்றார்.

இறையுதிர் காடு - 3
இறையுதிர் காடு - 3

அது சில ஆண்டு வயதே ஆன நிலவேம்பு மரம். அஞ்சுகன் மன்னிப்பு கோரி எழவும் பெரிதாய்க் காற்று வீசியது. அந்தக் காற்றில் ஒரே ஓர் இலை மட்டும் உதிர்ந்து மிகச்சரியாக கிணுக்கிணுவென இறங்கி அஞ்சுகன் தலைமேல் விழுந்தது. ‘வேம்பன் மன்னிச்சிட்டான்... அதுவும் தலையைத்தொட்டு...’ என்று போகர் சொன்னது அஞ்சுகனுக்கு மட்டுமல்ல, அவ்வளவு சீடர்களுக்குமே ஓர் ஆச்சர்யமான விஷயம் தான். அன்றுமுதல் அவர்கள் மரங்களோடு நட்பு கொண்டு பேசிப் பழகவும் தொடங்கினர். போகர் அவர்கள் எதிரில் விளையாட்டாகப் பல காரியங்கள் செய்வார். அவை தற்செயலா இல்லை அதிசயமா என்பது பார்ப்பவர் நினைப்பைப் பொறுத்தது.

பொதினி வனத்தில் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு பழம் கொழித்துப் பழுத்துமிருந்தது. மிக உயரத்தில் பழுத்திருந்த அதன் கிளையை ஏறி நெருங்குவது சிரமம். கொப்பி கொண்டுதான் பறிக்க முடியும். போகரின் சீடப்பிள்ளைகளில் சங்கன் என்று ஒருவன் இருப்பதிலேயே சிறியவன். வெள்ளாளக்குடியில் வந்த சங்கனை அவன் தந்தைதான் போகரிடம் விட்டிருந்தார். இந்தச் சங்கன் ஒருநாள் அந்த மரத்தடியில் நின்று அந்தப் பழத்தைப் பார்த்தபடியே இருந்தான். கல்லால் அடித்து விழச் செய்யலாமா என்றும் ஓர் எண்ணம் - ஆனால் போகருக்குத் தெரிந்தால் பொலியே போட்டுவிடுவார். எனவே ஏக்கமாய்ப் பார்த்துக்கொண்டு நின்றான். அப்போது மலையருவியில் நீராடிவிட்டு இரு கைகளையும் சக்கரம்போலச் சுழற்றியபடியே நடந்து வந்து கொண்டிருந்தார் போகர் - அது ஒரு பயிற்சி. சங்கனைப் பார்த்தவர் அவன் பார்த்த பழத்தையும் பார்த்தார்.

“என்ன, பழம் வேணுமா?” என்று கேட்க, தயக்கமாய் சங்கன் தலையை அசைத்திட, திரும்பவும் பழத்தைப் பார்த்தவர் “மாமா... அதான் பழுத்திட்டியே உதிர வேண்டியது தானே? இவன் வயிறுதான் உனக்கும் மோட்சம்!” என்று கூறவும் அடுத்த நொடி அந்தப் பழம் உதிர்ந்து விழுந்தது. சங்கன் பிரமிப்போடு போய் எடுத்துக்கொண்டான். பின் எல்லோருமே அந்தச் சம்பவத்தையும் அறிந்துகொண்டனர். அதனால் தாவரங்களைத் தங்களைப்போலவே கருதும் ஒரு பண்பாடே அவர்களிடம் உருவாகி விட்டது.

அது அஞ்சுகன் ஓடும்போதும் தெரிந்தது. பெரும்பாலும் பாறைக்கற்கள்  மேலேயே ஓடி புலிப்பாணியை அடைந்தான். சற்றே மூச்சிரைத்தான். பின் இளைப்பை சீர்செய்து கொண்டு பேசினான்.

“புலி... ஆசான் சொன்னமாதிரி மனவடக்கம் பண்ண முயற்சி செய்தேன். ஆனா என்னால முடியல! அருவிச்சுழலா பல எண்ணங்கள் எழும்புது. ஏதேதோ பிம்பமும் தோணுது. நீ எப்படி அடக்கி அமர்ந்தே?”

“அப்படித்தான் தொடக்கம் இருக்கும். அதனால கலைஞ்சிடக் கூடாது. மனம் காலியாகுமட்டும் எண்ணம் பெருகி வழிஞ்சிகிட்டேதான் இருக்கும்.”

“எவ்வளவு காலம் இப்படி இருக்கும்?”

“அதைச் சொல்ல முடியாது. உன் கடந்த காலத்துல நீ எப்படி வளர்ந்தேங்கிறதைப் பொறுத்தது அது...”

“சரி திரும்ப அமர்ந்து பார்க்கேன்... நீ இப்ப குடிலுக்குத்தான் போறியா?”

“ஆமாம்... ஆசான் பாஷாணம் வாங்க கருவூர் போகணும் - சடுதியில வான்னு சொன்னாரு...”

“பாஷாணமா... எதுக்கு?”

“தெரியாது. பெருசா ஏதோ நோக்கம் இருக்கு, அதுமட்டும் தெரியுது. சரி நீ திதியை விட்டுடாதே... போ-போய் உக்காரு. சொல்லிட்டாரேன்னு உக்காராதே... ஆசைப்பட்டு உக்காரு! நான் வாரேன்.”

- என்று புலிப்பாணி விலகத் தொடங்கிட, அஞ்சுகன் திரும்ப தியானம்புரிய ஆயத்தமானான். இம்முறை அவன் பாறை ஒன்றிடையே நெம்பிக்கொண்டு வளர்ந்திருந்த நுணா மரத்தின் நிழலடியில் போய் அமர்ந்தவனாகக் கண்களை மூடி, திரும்பவும் பீஜாட்சரத்தைக் கூறிட ஆரம்பித்தான்!

இறையுதிர் காடு - 3
இறையுதிர் காடு - 3

இன்று பழனிக்குப் போக வேண்டும் என்று கூறிய ஆசிரியரை, படபடப்போடு பாரதி பார்த்த விதமே இயல்பாக இல்லை.

“என்ன பாரதி... பழனின்ன உடனேயே உன் முகத்துல மாற்றங்கள். எனிதிங் ராங்?”

“எப்படி இதைச் சொல்றதுன்னு தெரியல சார்...”

“எதுவா இருந்தாலும் சொல்லு...”

“வீட்ல என் பாட்டி பழனிக்குப் போகணும்னு சொன்னாங்க. அங்கபோய் நான் முடி இறக்கணுமாம் - குலதெய்வப் பிரார்த்தனையாம். நான் மறுத்துட்டேன். யோகி திவ்யப்ரகாஷும் அதைத் தொட்டு, `என்ன, பாட்டி பழனி போகணும்னு சொன்னாங்களா’ன்னு ஆரம்பிச்சார். அந்த மைண்டு ரீடிங்ல என் பூர்வ பெயரான கார்த்திகாங்கிற பேரைக்கூடச் சொன்னார்! அப்படியே நீ பழனிக்குப் போவேன்னும் சொன்னார். இப்ப நீங்களும் பழனிக்குப் போகணும்னு சொல்றீங்க!

இதெல்லாமே கோ இன்சிடென்ஸ்ங்கிற தற்செயல் நிகழ்வா, இல்லை, எப்படின்னு தெரியல சார்...”

“ஓ... இந்தப் பழனி விஷயத்தை உன்கிட்ட இன்னிக்கு என்னோட சேர்ந்து மூணு பேர் பேசிட்டோமா?”

“ஆமாம் சார்... பைதபை எதுக்கு சார்?”

“டோல் கேட்ல ஆரம்பிச்சு பாலபிஷேகம் வரை தப்பு நடக்குதாம்! விபூதி, பஞ்சாமிர்தம்னு எல்லாத்துலயும் கலப்படம் வேற... ஒரு பக்தையா போய் எல்லா அனுபவங்களுக்கும் ஆளாகி அதை அப்படியே ஒரு கட்டுரையா நீ எழுதினா ஒரு அவேர்நெஸ் உருவாகும்னு நினைச்சேன்.”

“இந்தத் தப்பு, கூட்டம் சேர்ற எல்லாக் கோயில்லயும்தானே நடக்குது... ஏன் பர்ட்டிகுலரா பழனியை நீங்க தேர்வு செய்தீங்க?”

“பழனி ஒரு ஆரம்பம்.. மற்ற கோயில்கள் பற்றி அப்புறமா வரிசையா எழுத வேண்டியது தான்...”

“எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை சார். நான் போறேன் சார்.”

இறையுதிர் காடு - 3
இறையுதிர் காடு - 3“வேண்டாம்! நீ இப்போதைக்கு உன் ரெகுலர் ஒர்க்கைப் பார். நான் இந்தப் பழனியை பின்னால பாத்துக்கறேன். இது சபரிமலை சீசன்... உன்ன மாதிரி பெண்களும் போகலாம்னு கோர்ட் தீர்ப்பு சொல்லிடிச்சு. கூடாதுன்னு ஒரு கூட்டம் தடுக்குறாங்க. இரண்டு பக்கமுமே அரசியல் தூண்டுதல் இருக்கிறதா ஒரு தகவல்... முதல்ல அதை கவனிச்சு எழுதும்படி நான் நம்ப ராம்குமார்கிட்ட சொல்லிக்கறேன்...”

“ஏன் சார்... பழனி மேட்டரே இருக்கட்டுமே, என்ன இப்போ?”

“நோநோ... கொல்கத்தாவுல இருந்து அந்த யோகியோட வரும்போது பழனி பத்தியும் நான் பேசினேன். இந்தியா ஒரு ஆன்மிக பூமி, யோகக்கலை ஒரு ஆன்மிகப் புதையல்னு பெருமைப்பட்டுக்கிறோமே, ஆனா ஆன்மிக பூமியில குறிப்பாக ஆன்மிக ஸ்தலங்களெல்லாம் எவ்வளவு தூரம் கெட்டுக் குட்டிச்சுவரா இருக்கு தெரியுமான்னு கேட்ட நான், அப்ப பழனியைப் பத்தியும் பேசினேன். நான் சொன்னதை வெச்சு அரித்மெடிக்கா ஒரு கணக்கு போட்டு உன்னை நான் பழனிக்குப் போகச் சொல்வேன்னு நினைச்சுக்கூடச் சொல்லியிருக்கலாம். அதனால நீ போக வேண்டாம். உன் பாட்டிக்காக நீ போவதும் போகாததும் உன் விருப்பம். இது ஒரு யூகம், அவ்ளோதான். தப்பாகூட இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் ஒரு ஜர்னலிஸ்ட்டா நீ க்யூட்டா செயல்பட்டுருக்கே. என் பாராட்டுகள்”

ஆசிரியர் ஜெயராமன் ‘அவ்வளவுதான், இனி பேச எதுவுமில்லை’ என்பதுபோல் சிரித்தார். பாரதியும் எழுந்துகொண்டாள். அறைக்கதவைத் தொட்டுத் திறக்க முனையும்போது “பாரதி, எழுத்தாளர் அரவிந்தன்கிட்ட ஒரு லவ் ஸ்டோரி கேக்கச் சொல்லியிருந்தேனே, கேட்டியா?”

“போன் பண்ணினேன், நாட் ரீச்சபுல்னு வந்தது, தொடர்ந்து முயற்சி செய்றேன் சார்.”

“நம்ப இதழ்ல அழுத்தமா ஒரு நல்ல காதல் கதை வந்து பல வருஷமாச்சு. அவரும் காதல் கதைகள் எழுதறதுல ஜித்தர், ஒரு நல்ல எதார்த்தமான இளையதலைமுறையை ஈர்க்கும்படியான அம்சங்களோட அந்தத் தொடர் அமையணும்னு ஆசைப்படறேன்.”

“நான் திரும்ப முயற்சி செய்து கதைச்சுருக்கத்தை வாங்கி உங்களுக்கு ஃபார்வர்டு பண்றேன் சார்...” - என்று பாரதி கூறிட, ஆசிரியர் ஜெயராமனும் அப்படியே அவர் கம்ப்யூட்டர் பக்கம் திரும்பிவிட, பாரதி அவளது அறை நோக்கிச் சென்றாள். காதல்கதை என்றால் அரவிந்தன்தான் என்பதுபோல் ஆசிரியர் பேசியதில் உடன்பாடில்லாதபடி ஓர் எண்ணத்தோடு போய், தன் நாற்காலியில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் சிந்தித்தபடியே இருந்தவள், அரவிந்தனுக்காக ஒரு முயற்சி செய்து பார்த்தாள். ஆச்சர்யம்போல் முதல் ரிங்கிலேயே எடுத்தவன் ‘வணக்கம் அரவிந்தன்’ என்றான் தன் பாணியில்...

“தமிழ்வாணில இருந்து பாரதி பேசறேன் அரவிந்தன் சார்...”

“ஓ பாரதி... எப்படி இருக்கீங்க?”

“நல்லாருக்கேன் சார்... நீங்க எப்படி?”

“நாளொரு கதையும் பொழுதொரு கற்பனையுமா ஓடிக்கிட்டே இருக்கு பொழப்பு... சொல்லுங்க என்ன விஷயம்?”

“ஒரு நல்ல காதல் கதையை எங்க இதழ்ல நீங்க எழுதணும்னு எங்க ஆசிரியர் ஆசைப்படறார்...”

“அப்ப நீங்க படலையா?”

“இப்படி மடக்கினா எப்படி சார்? இருந்தாலும் நீங்க கேட்டதுக்காகச் சொல்றேன். உங்கள ஒரு காதல்கதை சிறப்பாளரா மட்டுமே பாக்கறது எனக்குப் பிடிக்கலை.”

“எனக்கும் பிடிக்கலை பாரதி. ஒரு எழுத்தாளன் எல்லா முயற்சிகளும் செய்யணும்கிறது என் விருப்பம். ஆனா என் சில காதல் கதைகள் பெரிய வெற்றியடைஞ்சதால என்னை அதுக்குன்னே ஒதுக்கிட்ட மாதிரிதான் உணர்றேன்.”

“இது யதார்த்தமா நடக்கிற விஷயம் தானே?”

“ஆனா எனக்குப் பிடிக்கலையே..?”

“அப்ப நான் கேட்ட காதல் கதை?”

“நான் காதல் கதைதான் எழுதணுமா... இப்போதைய நடைமுறைகளை பிரதிபலிக்கிற, கலாசார மீறலா பார்க்கப்படற கணவன் மனைவியா ஒத்திகை பார்த்துக்கிற, அது என்ன..? ஆங் லிவிங்டுகெதர் லைஃபா?”

“கிட்டத்தட்ட...”

“அப்படி ஒரு வாழ்க்கை பற்றி எழுதட்டுமா... இதுக்குள்ளேயும் காதல் இருக்கே?”

“நீங்க சொல்றதும் நல்லாதான் இருக்கு. நான் ஆசிரியர்கிட்ட பேசிட்டு உறுதி செய்யறேனே...”

“தாராளமா... தொடரோட தலைப்பு கூட தோணிடுச்சு. ‘ஒத்திகை!’ நல்லாருக்கா?”

“ஒரு சொல் தலைப்பு... பொருத்தமா அர்த்தமுள்ளதா இருக்கு... ஆசிரியர் என்ன சொல்றார்னும் கேட்டுச் சொல்றேன்.”

“நல்லது... ஆமா தனிப்பட்ட முறைல உங்ககிட்ட கேக்கறேன். இந்த ஒத்திகை வாழ்க்கை பத்தி உங்க கருத்து என்ன?”

“என் கருத்து... என் கருத்து... எனக்கென்னவோ தப்பு இல்லைன்னுதான் தோணுது.”

“அப்ப அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்க வரைல வந்தா நீங்க அதுக்குத் தயாரா?”

“அதுக்கெல்லாம் அவசியம் ஏற்படும்னு தோணல அரவிந்தன் சார்.”

“ஏற்பட்டா?”

“பார்க்கலாம்.”

“அப்ப நான் எழுதப்போற கதை உங்களுக்குப் பிடிக்காதுன்னு நினைக்கறேன்.”

“எதை வெச்சு சொல்றீங்க?”

“வாழ்க்கைங்கறது என்வரைல நாடகம் இல்ல... ஒத்திகை பார்க்க! அது ஒரு சான்ஸ்... சாய்சுக்கு இடமில்லாத சான்ஸ்... ஒரு அம்மா ஒரு அப்பா ஒரு உயிர்மாதிரிதான் ஒரு மனைவியும்னு நினைக்கறேன்.”

“இரண்டு பெண்டாட்டிகாரங்க கேட்டா சண்டைக்கு வந்துடப்போறாங்க. நீங்க தயாரா இருங்க... நான் ஆசிரியர்கிட்ட பேசிட்டு, சொல்றேன்.”

- என்று அழகாய்க் கத்தரித்தவள் ஒரு விநாடி அவனை நினைத்துச் சிரித்துக்கொண்டாள். அப்படியே எழுந்து வெளியே சென்றவள் ஆசிரியர் அறை நோக்கித்தான் நடந்தாள்.

துரியானந்தத்தின் கடைக்கு தடித்த நான்கு பொறியியல் சம்பந்தமான புத்தகங்களோடு வந்திருந்தான் அந்த இளைஞன்.

“நாலாவது வருஷ மெக்கானிக்கல் புக்... வேணுமா?”

என்று துரியானந்தம் முன் நீட்டினான். துரியானந்தம் அதை கையில் வாங்கிப் பார்க்காமலே “இது உனக்கு எப்படிக் கிடைச்சிச்சு அத்த சொல்லு முதல்ல” என்றான்.

“என் அண்ணன் புக்கு... அது படிச்சுமுடிச்சு வேலைக்கே போயிடுச்சு. வீட்ல இடத்தை அடைச்சிகிட்டு இருக்குதேன்னுதான் எடுத்துட்டு வந்தேன்...”

- அவன் அப்படிச் சொல்லவும் புத்தகத்தை வாங்கிப் புரட்டவும், முதல் பக்கத்தில் மேலே M.ஜேம்ஸ் என்கிற பெயர் கண்ணில் பட்டது. அப்படியே நிமிர்ந்து அந்த இளைஞனைப் பார்க்கவும், அவன் நெற்றியில் சன்னமாய் திருநீறு.

“எங்கையோ, ஆட்டயப்போட்டுட்டு அண்ணன் புக்குங்கிறியா... திருட்டு புக்கெல்லாம் வாங்க மாட்டேன். எடுத்துகிட்டு போ...”

என்று துரியானந்தம் கூறவும், ஒரு பழைய புக் ஷெல்ப்பைக் கட்டி எடுத்து வந்த நிலையில் சைக்கிளில் இருந்து இறங்கினான் துரியானந்தம் மச்சான் குமரேசன்.

நல்ல புக் ஷெல்ஃப் - கதவோடு நன்றாக இருந்தது!

“எவ்ளோடா வாங்குனான் இதுக்கு?”

“அவனுக்கு குவாட்டருக்குக் காசில்ல... கழட்டிக் கொடுத்துட்டான் நைனா...”

“இனிமே இந்த மாதிரில்லாம் வாங்கிட்டு வராதடா. பழச விக்கலாம் - திருட்டு சாமான் மட்டும் கூடவே கூடாது.”

- துரியானந்தம் சொல்வது குமரேசன் காதில் விழவே இல்லை.

“அப்பால நைனா... பல்லாவரம் ஜமீன் பங்களாவைத் தட்டி பிரிக்கப் போறாங்களாம். உத்தரம், கதவு, ஜன்னல், உருளைத் தூணுன்னு பத்து டன்னு தேருமாம் மர ஐட்டம். கோதண்டம் மரக்காணம் பாய், கொருக்குப்பேட்ட  ராஜா பாதர்னு எல்லாரும் ஏலம் கேக்கப் போறாங்க. நானும் நம்ப பேரைக் கொடுத்துட்டேன்” - என்றான்.

“பத்து டன்னா... லட்சத்துலல்லடா கேப்பானுங்க. அவ்ளோ துட்டுக்கு நாம எங்கடா போக?”

“உடு நைனா... எதாச்சும் வழி கிடைக்கும். நீ கவலப்படாதே. எவ்ளோ நாளைக்கு இப்படி சில்ற வியாபாரமே பண்ணிகிட்டு... நான் பாத்துக்கறேன்” என்ற குமரேசன் பேசிக்கொண்டே பாரதி தனக்கென்று சொல்லியிருந்த அந்தக் கத்தியை எடுத்து “ஆமா இன்னுமா இது போவல... சாமி கைல இருந்த கத்தி அப்படியே பறக்கும்னு சொல்லில்ல என் தலைல கட்டுனான் அந்தப் பூசாரி” என்றவன், எல்லோரையும் போல உருவிப் பார்க்க முயல, இம்முறையும் அது அவன் மணிக்கட்டைப் பதம் பார்த்ததில் விறுவிறுவென ரத்தப்பாம்பு நெளியத் தொடங்கிவிட்டது!

இறையுதிர் காடு - 3
இறையுதிர் காடு - 3

பாரதி அறைக்குள் நுழையவும் ரிப்போர்ட்டர் ஒருவரின் செய்திக்குறிப்பு ஒரு ஃபோல்டரில் டேபிள் மேல் காத்திருந்தது. அதற்கும் பக்கத்தில் ஆடை கட்டி உறைந்துபோயிருந்த ஒரு கோப்பை டீ நான் டேபிளுக்கு வந்து நேரமாகி விட்டது என்பதுபோல் காணப்பட்டது. அதற்கும் பக்கத்தில் அரதப்பழசான ஒரு புத்தகம்! பாதாம் பேப்பரில் அட்டை போட்டு அந்த அட்டை மேல் பழனி ரகசியங்கள் என்கிற எழுத்துகள்! அப்போது அட்டெண்டர் சுருளி உள்ளே வர அவனிடம், “சுருளி... நான் இல்லாதப்ப என் ரூமுக்கு யாராவது வந்தாங்களா?”

“நான்தான் மேடம் டீயை வெச்சுட்டு அப்படியே இந்தப் புத்தகத்தையும் வெச்சேன்.”

“இந்தப் புத்தகத்தை யார் கொடுத்தது?”

“எடிட்டோரியல்ல சிவா சார்தான் கொடுத்து டேபிள்ல வெக்கச் சொன்னார்.”

- சொல்லும்போதே அந்த சிவா கதவைத் திறந்துகொண்டு எதிரில் வந்தார். சுருளி ஒதுங்கிக்கொண்டான்.

“பாரதி, அந்தப் புத்தகத்தைப் பார்த்தீங்களா?”

“பார்த்தேன்... ஆமா, எதுக்கு அதை என் டேபிளுக்கு அனுப்பினீங்க?”

“எடிட்டர் உங்களைப் பழனிக்கு அனுப்பப்போறதா சொல்லிக்கிட்டிருந்தார்... நான் யதார்த்தமா நம்ப துரியானந்தம் பழைய புத்தகக் கடைக்குப் போனப்ப இந்தப் புத்தகமும் கண்ணுல பட்டது. உங்களுக்கு யூஸ் ஆகுமேன்னுதான் வாங்கிட்டு வந்தேன். 1906-ல பப்ளிஷ் பண்ணுன புத்தகம், ஒரு அணாதான் விலை! இப்ப இருநூறு ரூவா வாங்கிட்டான் துரியானந்தம்.”

“ஓ... நான் என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன்.”

“இதுல பயப்பட என்ன இருக்கு பாரதி?”

“சாரி... நான் தப்பா சொல்லிட்டேன். பைதபை நான் பழனி போகல.”

“ஏன் பாரதி, வேற யாராவது போறாங்களா?”

“ஆமா. பழனிக்கு இல்ல... சபரிமலைக்கு - இப்ப அதானே ஹாட் டாபிக்..?”

“அதுவும் சரிதான். ஆமா, நீங்க சபரிமலைக்கு பெண்கள் போலாம்கிற பக்கமா, இல்லை, கூடாதுங்கிற பக்கமா?”

“சாரி சிவா... இதையெல்லாம் இப்ப பேசற மூட்ல நான் இல்லை. பைதபை இந்தப் புத்தகத்தை நீங்களே எடுத்துக்கிட்டுப் போயிடுங்க.”

- அவள் அதைக் கையில் எடுத்து நீட்டினாள்.

“இருக்கட்டும் பாரதி. இன்னிக்கு இல்லை நாளைக்கு உங்களுக்குப் பயன்படும். செம இன்ட்ரஸ்ட்டா இருக்கு - படிச்சுப் பாருங்க தெரியும்.”

“அப்படி என்ன பழனில ரகசியங்கள் இருக்கு?”

- அவள் புத்தகத்தை எடுத்து விரித்தபடியே கேட்டாள்.

“என்ன அப்படிக் கேட்டுட்டீங்க... நிறைய சித்தர்கள் நடமாடியிருக்காங்க பாரதி. குறிப்பாக போகர்னு ஒரு சித்தர் பழனி மலை மேல சமாதில அடங்கிட்டாராம். ஆனா இப்பவும் அவசியப்படறப்ப சமாதிய விட்டு வெளிய வருவாராம்..!”

“என்ன மிஸ்ட்ரி நாவலா?”

“நாவல் இல்ல... பழனிமலைப் புராணம்...”

“அப்படின்னாலே புருடாதானே?”

“அப்படி அவசரப்பட்டுச் சொல்லிட முடியாது. நவபாஷாணம், ரசவாதம், நாடி ஜோசியம், சித்த வைத்யம், வாஸ்து சாஸ்திரம், பரகாயப்பிரவேசம்னு ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் நிறைய இருக்கு பாரதி...”

“இதுல எதையுமே என்னால நம்ப முடியாது. அவ்வளவும் வினோதமான கற்பனைகள்.”

“உள்ளபடியே இதையெல்லாம் மறுக்கிறது சுலபம். ஒத்துக்கிறதுக்குத்தான் அறிவு வேணும். இதுல வாஸ்து சாஸ்த்ரத்துல எனக்கொரு அனுபவம். வடக்குப் பக்கமும் கிழக்குப் பக்கமும் வெளிய இடம் இருந்து அந்த வடகிழக்குல வாசல் வெச்சுக் கட்டப்பட்ட வீடுகள்ள வசிக்கற யாருக்கும் கடன்ங்கறதே இல்லை பாரதி. அடுத்து அந்த வீட்டுல வசிக்கறவங்களுக்கு உறுதியா பிள்ளைகள் இருந்து அவங்க நல்ல எதிர்காலம் உள்ளவங்களாகவும் இருக்காங்க. தனிப்பட்ட முறைல இதுவரை 56 வீடுகளை இந்த மாதிரி அடையாளப்படுத்தி நான் டெஸ்ட் பண்ணிட்டேன்.”

“ஏன் சிவா... எதுக்கு இந்த ஆராய்ச்சி..?”

- பாரதி கேட்ட விதமே இதெல்லாம் வெட்டிவேலை என்பதுபோல் இருந்தது.

“நான் ஒரு வீடு வாங்க ஆசைப்பட்டேன் பாரதி. அதுக்காக பல வீடுகளைப் பார்க்கிறேன். ஒண்ணு படிஞ்சா ஒண்ணு படிய மாட்டேங்குது. அப்ப யதார்த்தமா உணர்ந்த விஷயம் இது. வாஸ்து சாஸ்திரமும் ‘வடகிழக்குத் திறப்புமனை வாழ்க்கைக்குப் பெரும் துணை’ ன்னு ஒரு பொன்மொழி போலவே இதைப் பத்திச் சொல்லியிருக்கு!”

- சிவா சொன்ன விதத்தில் எந்த வலியுறுத்தலும் இல்லை. ஓர் உணர்தலை போகிற போக்கில் சொல்வதுபோல்தான் இருந்தது. சற்றே கழித்து ஒரு சிரிப்பு சிரித்தவள் “புத்தகம் என்கிட்டயே இருக்கட்டும்...” என்று அழகான முக பாவத்தோடு சொல்லிவிட்டு நாற்காலியிலும் அமர்ந்தாள். இடையில் சுருளி ஆறிப்போன டீயை எடுத்துச் சென்றுவிட்டு சூடான டீயைக் கொண்டு வந்து வைத்திருந்தான்!

டீயைக் குடித்தபடியே அந்தப் புத்தகத்தை விரித்தாள். பழுப்பேறிப்போய் பக்க விளிம்புகள் உடைந்து, ஒருவகை பழைய வாசனை குப்பென்று மூக்கில் ஏறியது. அவள் விரித்தது கை போன போக்கில் ஒரு பக்கத்தை... அதில் கண்கள் ஒரு பாராவில் ஊன்றின!

‘பூகோளமிதில் பொதினி எனும் இப்பழனி நிலம் கனிமங்கள் இல்லாதது. நிலையற்ற ஆறுகளான சண்முக நதி, நல்லதங்கி நதி, நங்காஞ்சி மற்றும் கொடகநாறு பாயும் பூமியாம் இதில் குன்றுகள் அதிகம். இதில் வைகாவூர்ப் பெருவழியில் சண்முக நதிக்கரையில் எலுமிச்சை செரிந்த தலத்தையே போகர் தன் ஆசிரமத்துக்கு உரித்தான இடமாகத் தேர்வு செய்தார். எலுமிச்சை ஒரு அமிலப்பழம். எலுமிச்சை தழைக்கும் நிலத்தில் அமில குணமும் மிகுந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. உலோகத்தை மாசற்ற பசுவாக்கும் (தங்கம்) செயலுக்கு இப்பகுதியே உகந்தது என்பது போகர் முடிவு!’

- பாரதி வாசித்தபடியே இருக்கையில் கைப்பேசியில் அமட்டல். காதைக்கொடுக்கவும் அவள் முகம் மாறியது!

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்