Published:Updated:

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

புதிய தொடர் - சர்வீஸ் அனுபவம்விமல்நாத் - ஓவியங்கள் ராஜன்

வணக்கம் வாசகர்களே!

கார் வாங்குவதில் இருக்கும் மகிழ்ச்சி, பெரும்பாலும் காரை சர்வீஸுக்கு விட்டு எடுக்கும்போது இருப்பதில்லை. காரணம், சர்வீஸில் ஏற்படும் அனுபவம், காரில் ஏற்படும் பிரச்னைகள் என்று சில விஷயங்கள் உண்டு. ஆசை ஆசையாகச் சேர்த்த பணத்தில் கார் வாங்கி, டயருக்கு அடியில் எலுமிச்சைப் பழம் வைத்து நசுக்கி, காரைக் கிளப்பிய அந்த விநாடியில் இருந்து உங்கள் காருக்கும் ஷோரூமுக்கும் உண்டான தொடர்பு வேண்டுமானால் அறுந்து போகலாம். அந்த நிமிடத்தில் இருந்துதான் சர்வீஸ் சென்டருக்கும் காருக்கும் ஒரு பந்தம் உருவாகிறது. 

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

கார் வாங்கும்போதே சர்வீஸ் தொடர்பான நபர்களின் எண்களைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஓகே... அனுபவத்துக்குப் போகலாம்.

12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இது. அப்போது நான் ஃபோர்டு கார் டீலர்ஷிப்பில் சர்வீஸ் அட்வைஸராகப் இருந்தேன். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் பிரேக் டவுன் கால்கள் அனைத்துக்கும் நான்தான் பொறுப்பு.

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

ஒரு சனிக்கிழமை இரவு 12 மணி இருக்கும். பிரேக்டவுன் நம்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. ‘‘ஹலோ, சர்வீஸ் சென்டரா?’’ என்றது குரல். ரொம்பப் பதற்றமான குரல். ‘சொல்லுங்க’ என்றதும் படபடவெனப் பேச ஆரம்பித்து விட்டார்.

‘‘சார், நான் புளியங்குளம் பக்கத்துல இருந்து பேசுறேன். என் கார் திடீர்னு பிரேக்டவுன் ஆகி நின்னுடுச்சு. என்னன்னே தெரியலை. இங்க யாருமே இல்லை. மனைவி, பிள்ளைங்களோட தனியா இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் யாரையாவது அனுப்புனீங்கன்னா நல்லாருக்கும்’’ என்று பீதியோடு பேசினார்.

ஒரு சுபகாரியத்திற்காகச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, இப்படி ஒரு பிரேக்டவுன் நடந்திருக்கிறது. அவர் மனைவி, கழுத்து நிறைய நகைகள் போட்டிருப்பதாகவும், இது ஆள் அரவமற்ற இடம் என்றும் சொன்னார். கேட்கும்போது எனக்கே ‘திக்’ என்றிருந்தது. காரணம், அவர் நின்றிருந்த இடம் அப்படி. சரியாகச் சொன்னால் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வரும் புளியங்குளம் எனும் இடம். உடனடியாக ஆளை அனுப்பினால்கூட, 45 நிமிடங்கள் ஆகலாம்.

பதற்றத்துடன்தான் ஆளை அனுப்பினேன். நல்லவேளையாக - அந்த வழியே வந்த பேட்ரோல் ஜீப் ஒன்று அவர்களை விசாரித்து நாங்கள் வரும்வரை பாதுகாத்து வைத்திருந்தது. அப்புறம் ஒருவழியாக காரை டோ செய்து, சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுபோய் டெக்னிக்கல் டீமை வைத்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. அது இன்ஜின் சம்பந்தமான பிரச்னை. அதாவது, அவர் ஓட்டி வந்த வழி முழுதும் இன்ஜின் ஆயில் லீக் ஆகி, கீழே ஒழுகிக்கொண்டே வந்திருக்கிறது. அதை அவர் கவனிக்கவில்லை.

‘ஆயில் சம்ப்’ என்பது இன்ஜின் ஆயில் தேங்கி நிற்கும் இடம். இது காரின் கீழே இன்ஜினுக்கு அடியில் கீழ்நோக்கியவாறு இருக்கும். தரையை நோக்கி இது இருப்பதால், நீங்கள் ஒவ்வொரு தடவையும் ஸ்பீடு பிரேக்கரில் வேகத்தைக் குறைக்காமல் ஏற்றி இறக்கும்போது, சம்ப்தான் தரையில் உரசும். இது அடிக்கடி நிகழும் பட்சத்தில் ஆயில் சம்ப் உடைந்து, ஆயில் ஒழுக ஆரம்பித்து விடும்.  இதுதான் இவருக்கு நடந்திருக்கிறது.

அதாவது, ஆயில் மொத்தமும் சாலையில் கொட்டி, ஆயிலே இல்லாமல் ஓட்டியதால் இன்ஜின் சீஸ் ஆகி, வழியிலேயே நின்று விட்டது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஒளிர்ந்த இன்ஜின் ஆயில் வார்னிங் லைட் மற்றும் ஓவர் டெம்பரேச்சர் வார்னிங் சிம்பலையும் இவர் கவனிக்காதது தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்.

இதற்கு இன்ஜின் ஓவர்ஹால் செய்ய ரூ.80,000 பில் எஸ்டிமேஷன் போட்டார்கள். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்து, அதிகபட்சத் தொகையைத் தவிர்த்துவிட்டாலும், தேவையில்லாத மனஉளைச்சலும் நேர விரயமும் இங்கே நடந்துள்ளது.

- சர்வீஸ் சுவாரஸ்யம் தொடரும்


தொகுப்பு: தமிழ்

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

விமல்நாத் பற்றி...

ல் கார் சர்வீஸில் நிறைந்த அனுபவம் பெற்றவர் விமல்நாத். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கார் சர்வீஸ் அனுபவம் கொண்ட இவர்  டொயோட்டா, ஃபோர்டு, ஃபியட், ஹோண்டா, டாடா, பென்ஸ் என்று எல்லா சர்வீஸ் சென்டர்களிலும் பணிபுரிந்தவர். தற்போது திருநெல்வேலியில் உள்ள ஒரு மிகப் பெரிய கார் ஷோரூமை நிர்வகிக்கும் இவரிடம் விதவிதமான சர்வீஸ் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

‘சார், என் கார்ல மைலேஜே வரலை...

திடீர்னு ஒரு காட்டுக்கு நடுவுல கார் நின்னுடுச்சு... 

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

கார் பானெட்ல எலித் தொல்லை தாங்கலை, என்ன பண்றது’ என்று வெரைட்டியாக வரும் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளித்து, பிரச்னைகளைக் களைபவர். ஒரு பெரிய பட்டாளத்தின் உதவியுடன் நாள் ஒன்றுக்கு 80 கார்களை சர்வீஸ் செய்யும் விமல்நாத், தனக்கு நேர்ந்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை இந்தப் புதிய பகுதியில் பகிர்ந்துகொள்கிறார்.

படங்கள்: எல். ராஜேந்திரன்

நில்... கவனி... சர்வீஸ்! - ஸ்பீடு பிரேக்கரால் வந்த பிரேக் டவுன்!

என்ன செய்ய வேண்டும்?

* எப்போதுமே கார் ஓட்டும்போது, டேஷ்போர்டில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கவனிக்க வேண்டும். எந்த வார்னிங் லைட்டும் ஒளிராத பட்சத்தில்தான் காரைக் கிளப்பவே வேண்டும். அதேபோல் கார் ஓட்டும்போதும், அடிக்கடி இதில் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள்.

* நீண்ட தூரப் பயணம் போகும் போது, அடிக்கடி வார்னிங் லைட்டுகளை செக் செய்ய வேண்டும். முக்கியமாக, இன்ஜின் ஆயில் அளவு, எரிபொருள் அளவு இவற்றில் கவனம் அவசியம். இன்ஜின் டெம்பரேச்சர் மீட்டர் சிவப்புக்குப் போகும் பட்சத்தில், காரை நிறுத்துவதுதான் நல்லது.

* ஸ்பீடு பிரேக்கர்களில் போகும்போது, வேகத்தை குறைத்து மிகவும் மெதுவாகத்தான் ஏறி இறங்க வேண்டும். இரண்டாவது கியரில் சரியான கிளட்ச் ப்ளேவில் காரை ஏற்றி இறக்குங்கள். சர்ரென வந்த வேகத்தில் ஏறுவது தவறு. சில கார்களில் ஆயில் சம்ப்புக்கு இரும்பில் 'சேஃப்டி கார்டு' இருப்பதால், பெரிய பிரச்னை வராது. இருந்தாலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக உள்ள கார்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* காரில் ஓவர்லோடு கூடாது. இதனால் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் கணிசமாகக் குறையும். இது நிச்சயம் ஆபத்துதான். ஹேட்ச்பேக், செடான் போன்ற கார்களை தேங்கி நிற்கும் தண்ணீரில் ஓட்டும்போது... கவனம் தேவை. காரணம் - தண்ணிரில் மறைந்திருக்கும் கூர்மையான கல் அல்லது பள்ளம் ஆகியவற்றால் கார் பாதிப்படையக்கூடும்.

* கூடியவரை இரவு நேரங்களில் குடும்பத்துடன் பயணிப்பதைத் தவிர்த்து விடலாமே!