கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஜீப் காம்பஸ் டீசல்

பெயர்: யாஷிர் ரஹ்மான், பாலா

வாகனம்: ஜீப் காம்பஸ் Longitude Diesel

ஊர்: பெங்களூரு

இடம்:
கபினி

தூரம்: சுமார் 530 கி.மீ

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

``யாஷிர் ரொம்ப ஹேப்பி சார். ஏன்னா, புத்தாண்டு ஸ்பெஷல்ல என் ஜீப் காம்பஸ் வருதே!’’ என்று புளகாங்கிதப்பட்டார் பெங்களூருவில் MBA படிக்கும் யாஷிர் ரஹ்மான். ``மச்சி, காலையில கிளம்பும்போது நானும் இருப்பேன். என்னை மறந்துடாதீங்க’’ என்று சரியாக காலையில் ஆஜரானார் பாலகணேஷ். யாஷிரும் பாலகணேஷும் காலேஜ்மேட்ஸ். ``நமக்கு வொய்ல்டு லைஃப்தான் சார் பிடிக்கும். ஆனா, நகரத்துல வாழ்ந்துக் கிட்டிருக்கோம். எதுனா காட்டுப் பக்கம் போயிட்டு ஒரு நாள் காட்டுவாசியா வாழ்ந்துட்டு வரலாமா?’’ என்று யாஷிர் சொன்ன மறுநாள், கபினி அணைக்குப் பாதை குழம்பி, தங்குவதற்கு வசதியான இடம் கிடைக்காமல், சாப்பிட சரியான உணவு இல்லாமல், கிடைத்ததைச் சாப்பிட்டு, ஓரளவுக்குக் காட்டுவாசிகளாகவே மாறிவிட்டுத் திரும்பியது செம அனுபவம்!

* நெடுஞ்சாலையில் மணிக்கு 140 கி.மீ எல்லாம் சாதாரணமாகப் பறந்தது காம்பஸ். ஆனால், பெங்களூரு மடிவாலாவில் இருந்து வெறும் 10 கி.மீ தள்ளி இருந்த நைஸ் ரோடு வரை காம்பஸால் 10 கி.மீ ஸ்பீடுக்கு மேல் போக முடியவில்லை. என்னா டிராஃபிக்கு?

* பெங்களூரு - மைசூர் பைபாஸ் சாலையில் பறப்பவர்கள், மைசூருக்குள்ளே புகுந்து மதிய உணவை முடிப்பதுதான் பெஸ்ட். இந்த பைபாஸில் கூகுள் மேப்பே சிறந்த ரெஸ்டாரன்ட்கள் எதுவும் காட்டவில்லை. 5 கி.மீ உள்ளே புகுந்து லெமன் ட்ரீ, கான் ரெஸ்டாரன்ட் போன்ற உணவகங்களில் நான்-வெஜ்-க்கு GST-யோடு சேர்த்துப் பணம் கட்டி, கட்டு கட்டுனு கட்டலாம்.

* உங்கள் TN ரெஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட காரை மைசூர் பார்டரில் எங்கு பார்த்தாலும் சுற்றி வளைத்துவிடுவார்கள் கைடுகள். `'மைசூர்ல எனக்குத் தெரியாம ஒரு புல் பூண்டுகூட முளைக்காது’ என்கிற ரீதியில் பேசி, உங்களை மைசூர் பார்க்க வைக்காமல் விடமாட்டார்கள்.

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

* கைடுகளுக்குப் பிறகு TN, KL கொண்ட கார்களைச் சுற்றி வளைக்கும் இன்னொரு குரூப்பும் இருந்தது. டிராஃபிக் போலீஸ். `லைசென்ஸ் குடு, ஆர்.சி குடு’ என்று நிறுத்திவிட்டு, ``ஹோச காரா சாரு...’’ என்று ஜீப் காம்பஸ் பற்றி விசாரிக்க ஆரம்பித்து `பை’ சொல்லி வழியனுப்பினார்கள்.

* நேவிகேஷனில் `கபினி’ என்று டைப் செய்தால், டேம், ரிசார்ட் என்று எக்கச்சக்க விஷயங்கள் வரும். 25 கி.மீ-க்கு முன்பாக ஓரிடத்தில் ``இடதுபுறம் திரும்பினால் கபினி அணை’’ என்றார்கள். சீனப் பெருஞ்சுவர் மாதிரி நீண்டுகொண்டே போனது அணை. ஓர் ஆற்றுப்பக்கம் போட்டோஷூட் பண்ணிக் கொண்டிருந்தபோது, ``இங்குதான் யானைங்க தண்ணி குடிக்க வரும்’’ என்று த்ரில் ஏற்றினார்கள். ``போட்டிங் உண்டு. ஆனால், இது கவர்ன்மென்ட் காட்டேஜில் தங்குபவர்களுக்கு மட்டும்’’ என்றார்கள்.

* அணை, ஆறு, போட்டிங் என்று முடிந்து விடவில்லை கபினி. GPS இன்னும் வழி சொன்னது. அது நேராக வயநாடு போகும் பாதை என்பது, பாதி வயநாட்டுக்குப் போன பிறகுதான் தெரிந்தது. காரணம், எந்த செக்போஸ்ட்டிலும் யாரும் காரை நிறுத்தவே இல்லை. நாங்களாகவே ஒரு செக்போஸ்ட்டில் காரை நிறுத்தி விசாரித்த பிறகுதான் தெரிந்தது, நாம் வயநாடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது.

* காட்டுப்பாதையில் தன்னந் தனியாக ஜிவ்வெனச் சென்று கொண்டிருந்தது ஜீப் காம்பஸ். பாதையே போதை ஏற்றியது. செல்லும் வழியில் ஏகப்பட்ட மான்கள், மயில்கள், குரங்குகள் எல்லாம் ரெட் சிக்னல் போட்டு காரை நிறுத்தின. அநேகமாக மான்தொகை அதிகமான காடு, கபினியாகத்தான் இருக்கும்.

* கபினியில் ஏகப்பட்ட ரிசார்டுகள் உண்டு. ஆனால், இங்கே தங்குபவர்கள் கொஞ்சம் அம்பானிக்கு ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருக்க வேண்டும். காரணம், ``இங்கு உள்ள ஒவ்வொரு ரிசார்ட்டிலும் ஓர் இரவு தங்க, 12,000 முதல் 15,000 ரூபாய் வரை’’ என்று சொல்லி பீதியேற்றினார்கள். முக்கியமாக, ஒரு நபருக்கு மட்டும்தான் இந்தத் தொகை. கப்புள்ஸ் என்றால், டபுள். நாம் சென்றபோது வீக் எண்டாம். அப்படியும் ``ரூம் இல்லிது... கம்ரே நஹி ஹே’’ என்று கன்னடத்திலும் இந்தியிலும் பதில் சொல்லி வெளியேற்றினார்கள் காட்டேஜ் செக்யூரிட்டிகள்.

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

* ஐம்பது கி.மீ தாண்டினால்தான் ரூம்கள் கிடைக்கும் என்ற நிலையில், காராப்புரா என்னும் இடத்தில் மலிவான தங்கும் இடம் கிடைத்தது. வீடுதான்; அதைத்தான் `மானே தேனே’ போட்டு காட்டேஜ் ஆக்கியிருந்தார்கள். ரூம் கிடைக்காமல் அலைவது தெரிந்து தானாக மனமுவந்து ரூம் தந்தார் உரிமையாளர் ஒருவர். தலைக்கு 300 ரூபாய் வசூலித்தார்.

* இங்கே கபினி என்பது `தொம்மன்ஹெட்ட’ எனும் இடத்தில் உள்ள வனச்சரக அலுவலகம்தான் என்பதைத் தெரிந்துகொள்க. `தொம்மன்ஹெட்ட’ அலுவலகத்தில்தான் காட்டுச் சவாரிக்கான புக்கிங் நடக்கிறது. காலை 6 மணிக்கு முதல் சவாரி. ``வேன் சவாரிக்கு முன்பதிவெல்லாம் கிடையாது’’ என்றார்கள். அதனால், 5 மணிக்கே கிளம்பி முதல் ஆளாக நிற்கலாம் என்றால்... நமக்கு முன்பே மலையாளத்திலும் இந்தியிலும் கன்னடத்திலும் புலம்பியபடி நின்றிருந்தார்கள் டூரிஸ்ட்கள். அனைவரும் கன்னட அரசாங்கம் நடத்தும் `ஜங்கிள் ரிசார்ட்’ காட்டேஜின் கெஸ்ட்கள்.

* பெரிய வேனில் சவாரி. ஆளுக்கு 500 ரூபாய் கட்டணம். கேமராவுக்கும் லென்ஸுக்கும் தனிக்கட்டணம். ``இனிதான் ரியல் அட்வெஞ்சர்’’ என்றார்கள். காட்டுப் பாதையில் வேன் போனபோது, இதயத்துடிப்பு எகிறியது. வழக்கம்போல், ஆயிரம் ஆயிரமாக மான்கள் மிரண்டபடி போஸ் கொடுத்தன. `இவிய்ங்களுக்கு வேற வேலை இல்லை’ என்று அலட்சியம் செய்தபடி சில மான்கள் மார்னிங் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன. 

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

* நம் ஊர் வயக்காடுகளில் திரியும் மயில்கள்தான். அதை அடர்ந்த காட்டுக்குள் பார்க்கும் போது ரம்மியமாகவும் த்ரில்லிங்காகவும் இருக்கிறது. தலை சாய்த்து, ஒருவர்மேல் ஒருவர் இடித்து, வேனுக்குள் உருண்டு புரண்டு நீள நீளமான லென்ஸில் கண்ணில் கண்டதையெல்லாம் படம் எடுத்துத் தள்ளினார்கள் புகைப்பட நிபுணர்கள். மலை அணில்கள், கழுகுகள், காட்டுக்கோழிகள், வெரைட்டியான பறவைகள், கீரிப்பிள்ளைச் சண்டை, காட்டெருமை என்று `ஜங்கிள் புக்’ படம் பார்ப்பதுபோலவே இருந்தது.

* `போன வாரம் இதே இடத்தில்தான் புலி பார்த்தேன்’ என்று சொன்னார் நம் வேன் டிரைவர். வேனில் உள்ள அனைவரும் அதே இடத்தில் அதே புலியைத் தேடினோம். புலி நடந்துபோன இடத்தைப் பார்த்தபோதே கூஸ்பம்ப் அடித்தது.

* ஒரு மணி நேரம்தான் சவாரி இருக்கும் என நினைத்தால்... காடே சலிக்கும் அளவுக்குச் சவாரி கூட்டிப்போனார்கள். ஆனால், காடு சலிக்கவே இல்லை. ஒன்றரை மணி நேரம் கழித்து, ``பாத்ரூம் போறவங்க போய்க்கோங்க’’ என்று அரைகுறை ஆங்கிலத்தில் பேசியபடி ஓர் இடத்தில் நிறுத்தினார் டிரைவர். காட்டுக்கு நடுவில் ரெஸ்ட் ரூமெல்லாம் கட்டியிருந்தார்கள். ``இப்போதான் இன்டர்வெல் வந்திருக்கா?’’ என்று காமெடி பண்ணினார் யாஷிர்.

* யானைகளுக்கும் புலிகளுக்கும் நல்ல நேரம் - ஒன்றுகூட நம் கண்ணில் தென்படவில்லை. மனம் தளராமல், ``புலியைப் பார்க்காமப் போகக் கூடாது’’ என்று மறுநாளும் சவாரிக்கு வரப்போவதாக தனது பெரிய கேமரா லென்ஸைத் தடவியபடி சொன்னார் ஒரு வொய்ல்டு லைஃப் விரும்பி. ``நான் இதோடு 10-வது தடவை வர்றேன். யானை, எருமை, செ்நாய் எல்லாம் பார்த்துட்டேன்.    புலிதான் பார்க்கலை. நான் வர்றதையும் விடலை!’’ என்றார் இன்னொரு காட்டு விரும்பி. ``ஏன் மச்சி, நாமளும் இன்னொரு தடவை வந்தா என்ன?’’ என்றார் யாஷிர்.

தமிழ் - படங்கள்: க.தனசேகரன்

நோட் பண்ணுங்க!

பினிக்கு தங்கும் ஐடியாவுடன் டூர் பிளான் போடுபவர்கள், நிச்சயம் காட்டேஜ்கள் முன்பதிவு செய்துவிட்டுப் போவதுதான் நல்லது. காரணம், இங்கு தங்கும் ரிசார்டுகள் கம்மி. ஆனால், எல்லாமே செம காஸ்ட்லி. கன்னட அரசாங்கம் நடத்தும் `ஜங்கிள் ரிசார்ட்’டில் ஒரு நபருக்கு 10,000 முதல் 12,000 வரை கட்டணம். இதில் போட்டிங், சவாரி, உணவு, கேம்ப்ஃபயர் என எல்லாமே அடங்கும். மலிவான தங்கும் இடங்களுக்கு `காராப்புரா’ எனும் இடம்விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை. (09945904840) வீடு போன்ற ரூம்களுக்கு, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். கபினிக்கு சும்மா ஒரு டூர் அடிக்கணும் என்பவர்கள், `தொம்மன்ஹெட்ட’ எனும் இடத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் வேன் சவாரி போகலாம். ஓர் ஆளுக்கு 500 ரூபாய் கட்டணம். கேமரா லென்ஸுக்குத் தனிக்கட்டணம். விலங்குகள் அதிகம் தென்படும் என்பதால், கேமரா விரும்பிகளுக்கு கேமரா, லென்ஸ் போன்றவையும் வாடகைக்குக் கிடைக்கின்றன.

என்னென்ன பார்க்கலாம்?

(கபினியில் இருந்து)

* நாகர்ஹொலே புலிகள் சரணாலயம் (58 கி.மீ)

அடர்ந்த காட்டுப் பகுதி. சவாரியில் யானை, சிறுத்தை, காட்டெருமை நிச்சயம் பார்க்கலாம். நாகப்பாம்புகளும் இங்கு உண்டு.

* கபினி ஆறு (6 கி.மீ)

55 ஏக்கருக்குப் பரந்து விரிந்திருக்கும் ஆறு. அரசு காட்டேஜ்களில் தங்கினால் மட்டும் போட்டிங் பண்ணலாம்.

* பிரம்மகிரி வனவிலங்குப் பூங்கா (85 கி.மீ)

1,608 மீட்டர் உயர சிகரத்தில் அமைந்திருக்கிறது. வனவிலங்குகள் தவிர மலைப்பாம்புகள், நாகப்பாம்புகள், மலபார் பறவைகள் போன்றவை உலவும் இடம்.

* பானசுரா சாகர் அணை (93.5 கி.மீ)

இந்தியாவின் பெரிய அணைகளில் ஒன்று. ஸ்பீடு போட்டிங் இந்த அணையில் சீஸனுக்கு ஏற்ப உண்டு.

* வயநாடு (42 கி.மீ)

காட்டுப்பாதையில் பயணிக்க விரும்புவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும். யானைகள் அடிக்கடி குறுக்கிடும் பகுதி.

* சாய் சரணாலயம் (95 கி.மீ)

`தெரலு’ எனும் இடத்தில் உள்ள காட்டுப் பகுதி. முழுக்க முழுக்க மரத்தில் வீடு கட்டித் தங்கி, இதை ஒரு வெளிநாட்டுத் தம்பதியர் பாதுகாக்கிறார்கள் என்பது ஸ்பெஷல். கோனிக்கொப்பல் எனும் இடத்தில்தான் தங்க இடம் உண்டு.

* ஆரலம் வனவிலங்குச் சரணாலயம் (115 கி.மீ)

கேரள மாநிலம் கன்னூரில் இருக்கும் சரணாலயம். இது அட்வெஞ்சர் பிரியர்களுக்கு ஏற்ற இடம்.

* கோட்டியூர் ரிசர்வ் ஃபாரஸ்ட் (95 கி.மீ)

இதுவும் கன்னூர் மாவட்டத்தில் உள்ள காடு, பந்திப்பூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால், காட்டு விலங்குகளின் தரிசனம் நிச்சயம்.

ஜீப் காம்பஸ் எப்படி?

25
லட்சம் ரூபாய்க்குள் ரஃப் அண்ட் டைப் விரும்பிகளுக்கு ஜீப் காம்பஸ் சரியான ஆப்ஷன். 2 வீல் - 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கள் உண்டு. நாம் போனது 2 வீல் டிரைவ். `என்னா கார்டா இது... என்று மக்கள் வியப்பாகப் பார்த்த சம்பவங்கள் நடந்தன. ஃபியட்டின் 2.0 மல்டிஜெட் டீசல் இன்ஜின், சும்மா அசத்துகிறது. டர்போ லேக்கூட அவ்வளவாகத் தெரியவில்லை. 173 bhp பவரில், 170 கி.மீ வரை அசால்டாகப் பறக்கிறது காம்பஸ். ``க்ரெட்டாதான் வாங்கலாம்னு பார்த்தேன். ஜீப் அமெரிக்க பிராண்டாச்சே... சாதாரணமாவா இருக்கும்... அதான் அப்பாகிட்ட அடம்பிடிச்சு வாங்கிட்டேன்’’ என்று சொல்லும் யாஷிருக்கு, காம்பஸில் பிடிக்காத விஷயம் - ரிவர்ஸ் கேமரா, GPS இல்லாததுதான். ஆம், சான்ட்ரோ, க்விட் போன்ற குட்டி கார்களிலேயே 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இருக்க, காம்பஸில் சின்ன டச் ஸ்க்ரீன். அதிலும் `Longitude’ மாடலில் ரிவர்ஸ் கேமரா, புரொஜெக்டர் ஹெட்லைட், சன்ரூஃப் போன்ற முக்கியமான வசதிகள் இல்லை என்பது பிரீமியம் எஸ்யூவிகளுக்கு அழகில்லைதானே!

பெங்களூரு to கபினி - மான் தொகை கபினியில் அதிகம்

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!