மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019
பிரீமியம் ஸ்டோரி
News
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், கிருஷ்ணபட்சம், தசமி திதியில் சமநோக்குக்கொண்ட சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னம், அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு 12 மணிக்கு 1.1.2019-ம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

மேஷம் - 60 %

உங்களின் ராசியைச் சந்திரனும் சுக்கிரனும் பார்க்கும் வேளையில் இந்தாண்டு பிறப்பதால் முகம் மலர்ச்சியாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். கணவரின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். புது முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்தாலும் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். நிலுவையிலிருந்த தொகை கைக்கு வரும்.

2019-ம் ஆண்டு வருமானத்தையும் சமூக அந்தஸ்தையும் தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

ரிஷபம் - 58 %

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சமையலறை மற்றும் படுக்கையறையை நவீனமாக்குவீர்கள். கணவர் உங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவார். மாமியார், நாத்தனார் மதிப்பார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறையைக் கட்டுவீர்கள்.  உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள். கணவரிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகள் ஒருதலைபட்சமாகச் செயல்படலாம்; கவனமாக இருப்பது நல்லது.

2019-ம் ஆண்டு உங்கள் செல்வாக்கை உணர்த்தும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

மிதுனம் - 55 %

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் உங்கள் கை ஓங்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். கணவரின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அவரை மாற்றுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள்.

2019-ம் ஆண்டு அடக்கம் ஆயிரம் பொன் என்பதை உணர்த்தும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

கடகம் - 90 %

சுக்கிரனும் சந்திரனும் சாதகமான நட்சத்திரத்தில் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கோபம் குறையும். செலவுகள் அடுத்தடுத்து வரும். கணவர் ஆதரவாகப் பேசுவார். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். கணவரின் ஆரோக்கியம் சீராகும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஷேர்-மார்க்கெட் மூலம் பணம் வரும். சுற்றியிருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும். எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

2019-ம் ஆண்டு சற்று அலைக்கழித்து வளர்ச்சியைத் தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

சிம்மம் - 76 %

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். மனத்தில் உற்சாகம் பிறக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். திடீர் யோகமும் திருப்பமும் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கெளரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம்.

உத்தியோகத்தில் முற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் முன்னேறுவீர்கள். பிற்பகுதியில் மறைமுக அவமானம், தொந்தரவுகள் வந்து நீங்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

2019-ம் ஆண்டு மகிழ்ச்சியையும் பணவரவையும் தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

கன்னி - 64%

உங்கள் ராசிநாதன் புதன் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தடைபட்டிருந்த வேலைகள் முடியும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் தேடி வருவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தோற்றப் பொலிவு கூடும். சில வேலைகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. மாமியாரை அனுசரித்துப் போங்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி தாமதமாகி முடியும்.  பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

உத்தியோகத்தில்
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உயர் பதவியில் அமர்வீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் அமையும்.

2019-ம் ஆண்டு புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

துலாம் 77 %

செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். மனதில் ஒருவித தெளிவு, நிம்மதி பிறக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். லாபம் உயரும்.

உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால், கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

2019-ம் ஆண்டு அதிகாரத்தையும் செல்வத்தையும் அள்ளித்தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

விருச்சிகம் - 52%

உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். உறவினர்கள், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உங்களுக்கு 12-வது ராசியில் இந்த ஆண்டுப் பிறப்பதால் கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசமென சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைகளும் பயணங்களும் தொடர்ந்துகொண்டே போகும். பிரிந்தவர்கள் ஒன்றுசேருவீர்கள். தோல்வி மனப்பான்மை, விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை, கைக்கு வரும். முன்பின் தெரியாதவர்களிடம் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏழரைச் சனியில் பாத சனியாக இருப்பதால், பயணங்களில் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவார்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களை மதிப்பார்.

2019-ம் ஆண்டு உங்கள் சோர்வை நீக்கிப் புத்துணர்வைத் தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

தனுசு - 50 %

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. ஒரு சிலருக்குப் பணி நிமித்தமாக இடமாற்றம் வரலாம். பெற்றோர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் நிலை சிலருக்கு அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உடல்நலனில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களிடம் பேசும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்.

2019-ம் ஆண்டு முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடியும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

மகரம் - 85 %

இந்த ஆண்டு உங்களுக்குப் பத்தாவது ராசியில் பிறப்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். பெரிய பதவிகளில் அமர்வீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நாத்தனாரின் வளைகாப்பை எடுத்து நடத்துவீர்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள்; செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் புகழ், கௌரவம் உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

வியாபாரத்தில் ஏழரைச் சனி தொடர்வதால், லாபம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துகொள்வார்கள். உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

 2019-ம் ஆண்டு திட்டமிட்டு வெற்றி பெறும் ஆண்டாக அமையும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

கும்பம் - 70 %

உங்கள் ராசிக்குச் சந்திரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கலங்கிப்போயிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். பெரிய பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பொறுப்பும் பதவியும் தேடி வரும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள், முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாட்கள், வாடிக்கை யாளர்களிடம் கறாராக இருங்கள்.

உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகும்.

2019-ம் ஆண்டு கடின உழைப்பால் வெற்றி பெறவைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

மீனம் - 91 %

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் தருவதாக அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை மாற்றம் செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மாமனார், மாமியார் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக்கொள்வது நல்லது.

வியாபாரத்தில் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள்.

வி.ஐ.பி-க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள்.

2019-ம் ஆண்டு உறவுகளைப் புதுப்பிக்கும் ஆண்டாக அமையும்.
 

-   `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்