
தொடர் - 4

அன்று அஞ்சுகனின் மந்திர தியானம் அந்த மரத்தடியில் தொடங்கிவிட்ட நிலையில், மேலே மழை மேகங்கள் குழுமத் தொடங்கியிருந்தன. வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கிக் காற்று வீசத் தொடங்கி, அஞ்சுகனின் நீண்ட தலைமுடி அதை உணர்த்துவதுபோல் பறக்கத் தொடங்கியது. தொடக்கத்தில் காற்று வீசுவதும், வானில் நிகழும் மேக மண்டுதலும் அதன் நிமித்தம் உருவான இடிச் சத்தமும் அஞ்சுகன் காதுகளில் விழுந்து அவன் தியானத்தைக் கலைக்கப்பார்த்தன. ஆனால், அஞ்சுகன் கலையவில்லை. கைநழுவும் பொருளை இறுக்கமாய்ப் பற்ற முனைவதுபோல் பீஜாட்சர மந்திரத்தை, சற்று உதடு பிரித்து வெளியே கேட்கும்படி சொல்லத் தொடங்கிவிட்டான்.
போகர் இதுபோல் எவ்வளவோ நாள்கள் தியானத்தில் அமர்ந்து பார்த்திருக்கிறான். ``நானாய் கண் திறக்கும் வரை என் தலைமேல் இடியே விழுந்தாலும் யாரும் என்னை நெருங்கவோ, என் தியானத்தைக் கலைக்கவோ கூடாது. இது என்மேல் சத்தியம்’’ என்று அவரும் அவர்களையெல்லாம் கட்டிப்போட்டிருந்தார். அதனால் அவர் தியானம்புரியும் பக்கமே யாரும் போக மாட்டார்கள். லேசான சத்தம்கூட எழாதவாறும் நடந்துகொள்வார்கள். இதன் நடுவே `எப்படி எதுவும் சாப்பிடாமல் இப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடிகிறது?’ என்கிற கேள்வியில் தொடங்கி, `இப்படி இருப்பதால் என்ன பயன்? இதுவா ஒரு மனிதன் வாழும் முறை?’ என்கிற கேள்விகளுக்குள் புகுந்து, வாழ்வை மிக பாரமான... ஒரு ருசியும் இல்லாத ஒன்றாக எண்ணி `இங்கே இவரிடம் குருகுலவாசம் நிமித்தம் வந்து சேர்ந்தது பிழையோ!’ என்று அந்தச் சீடர் கூட்டத்தில் நினைத்தவர் பலருண்டு. அப்படி நினைத்து அவரது பொதினிக் கொட்டாரத்தை விட்டு ஓடிப்போனவர்களும் பலருண்டு. ஓடியவர்களை, போகரும் ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.

``என்னைக் காண ஒரு விதி உண்டு. என்னோடு சேர்ந்து வாழ ஒரு விதி உண்டு. என் பேச்சைக் கேட்டு என் திரேகம் தீண்டி சேவைசெய்ய ஒரு விதி உண்டு. நான் விடும் மூச்சை அருகிருந்து வாங்க ஒரு விதி உண்டு. இந்த விதி இல்லாத எவரும் என் நிழலைக்கூடத் தீண்ட முடியாது!’’ என்று உரப்பாகச் சொல்வார். அப்படியே ``நான் எவருக்கெல்லாம் கடன்பட்டிருக்கிறேனோ அவர்கள் ரோகாதிகளாகி என்னைக் காண வந்து, நான் தரும் குளிகையாலும் ரசத்தாலும் சுகுணமாவர். என் கடனும் தீர்ந்திடும். இவையெல்லாம் ஒரு கணக்கு’’ என்பார்.
இவை எல்லாவற்றையையும் அருகே இருந்து கேட்டவன் அஞ்சுகன். அவர்தான் அஞ்சுகனிடம் அழுத்தமாய் அன்று சொல்லியிருந்தார். ``தியானம் உனக்கு வசப்பட வேண்டும். அம்பிகையின் பீஜாட்சரமுடன் அது உனக்கு வசப்பட்டுவிட்டால், உன் சித்தம் உறுதியாகும். நான் ஒன்றைச் சொல்லும்போது அதன் பொருள், நீ கேள்வி கேட்டு... பிறகு நான் விளக்கமளித்துப் புரியத் தேவையின்றி உனக்குப் புரிந்துவிடும். அதன் பிறகு நீ அதிகம் பேச மாட்டாய். பேச்சு தேவைப்படாது. பேசுவதன் நிமித்தம் கரையும் திரேக சக்தி, கரையாமல் சேமிதமாகும்’’ என்று அவர் கூறியபோது, அருகில் இருந்த சீடன் ஒருவன் ``பேசுவதால்கூடவா குருவே சக்தி விரயம் ஏற்படும்?’’ என்று கேட்டான்.

``ஒரு குண்டு விறகை எரிக்கும் சக்தி, நீ மூன்று நாழிகை நேரம் பேசுவதில் விரயமாகிறது. (ஒரு குண்டு விறகு என்பது, ஆறு மாதக் கிடாய்க் கன்றின் நிறையில் பாதி!)’’ என்று அவர் கூறவும், அவ்வளவு பேரும் வாய் பிளந்தார்கள். அவர்களில் ஒன்பது பேரைத்தான் போகர் விசேஷமாகத் தேர்வுசெய்திருந்தார். அந்த ஒன்பது பேரில் ஒருவனே அஞ்சுகன்!
நல்லவேளையாக, இடி, மின்னல் கடந்து பலமாய் மழை பொழிய ஆரம்பித்தும், அஞ்சுகன் தன் தியானத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்திருக்கவில்லை. மலைச்சரிவு ஏற்பட்டதால் திபுதிபுவென மழைநீர் உருண்டும் புரண்டும் வரத் தொடங்கியது. அஞ்சுகனின் மடக்கிய முட்டிக்கால் மேல் மோதி இரு கூறுகளாகப் பிரிந்தும் ஓடிற்று, செம்புலப்பெயல் நீர்! அஞ்சுகன், புறத்தில் நிகழ்ந்திடும் இவை எதையும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. விறைத்த அவன் தேகத்திலும் மழைநீரால் எந்த அசைவும் இல்லை. அந்த நுணாமரம்கூட இப்படியும் அப்படியும் காற்றின் போக்குக்கு ஏற்ப ஆடிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அஞ்சுகன் அசையவில்லை. மேஷம் லக்னமாகி கேது பன்னிரண்டில் நிலைபெற்ற ஜாதகம் அவனுக்கு.
கேது, ஞானகாரகன்; அரிசி சோறாகி, சோறு அவலானதைப்போல் ஒரு முதிர்ச்சியைத் தருபவன்! அந்த தியானத்திலும் தந்துகொண்டிருந்தான். அந்த மழை வேளையில் அசையாத அஞ்சுகனை, போகரும் தொலைவில் ஒரு பெரும்பாறை மேல் நின்று பார்த்தபடி இருந்தார். வீரம், பூரம், சாதிலிங்கம், கௌரி, வெள்ளைப்பாஷாணம், மனோசிலை, அரிதாரம், சிங்கி, தாளகம் என்பவையே நவபாஷாணங்கள்.
அந்த ஒன்பது பாஷாணங்களில் ஒன்று, தாளகம். இது, மந்திர ஒலி அலையை ஆகர்ஷிக்கவல்லது. ஸ்படிகத்துக்கும் அந்த ஆகர்ஷிப்பு உண்டு. ஒரு ஸ்படிக மாலை அணிந்தவர் வசமிருந்து வாங்கி அதைக் காதருகே வைத்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்திட அந்த ஸ்படிகம் ஆகர்ஷித்த சத்தங்கள் காதில் எதிரொலிக்கும். மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்தபடி சொன்ன சகஸ்ரநாமத்தை, பின்னொரு சமயத்தில் சகாதேவன் இப்படிக் கேட்டுத்தான் ஏட்டில் எழுதிக்கொண்டான். அப்படிப்பட்ட ஸ்படிகம், பாஷாண சாதியைச் சேர்ந்ததல்ல. தாளகம்தான் அதற்கானது. அந்தத் தாளகத்தில் பீஜாட்சர ஒலியைச் சேர்க்க, இதுபோன்ற ஒரு தியானியால்தான் இயலும். போகர், நவமரில் ஒருவனை அடைந்துவிட்டதாகக் கருதி மழையில் நனைந்தபடியே புன்னகையும் பூத்தார்.
இன்று கைப்பேசியில், பாரதியின் அப்பாவான ராஜாமகேந்திரனின் உதவியாளர் கணேசபாண்டியன்தான் பேசினார்.
``பாப்பா... நான் கணேசபாண்டி பேசறேன். அப்பா காரு ஆக்ஸிடென்டாகி, அப்பா இப்ப ஆஸ்பத்திரியில இருக்காரு! தகவல் சொல்லத்தான் கூப்பிட்டேன்’’ என்றார்.
காதுக்குள் தோட்டா ஒன்று வெடித்த மாதிரி உணர்ந்த பாரதி ``எங்க... எப்படி நடந்தது?!’’ என்று அந்த நிலையிலும் கூர்மையாகக் கேட்டாள்.
``நம்ப காலேஜ் இடத்தைப் பார்க்கிறதுக்காக இன்ஜினீயர் மனோகரனோடு போய்க்கிட்டிருந்தப்ப, துரைப்பாக்கம் தாண்டி ஒரு கிலோமீட்டர்கூட போயிருக்க மாட்டோம். அங்கனவெச்சுதான் ஆக்ஸிடென்ட் ஆகிருச்சி.’’
``எப்படி... யார் மேல தப்பு?’’
``திடீர்னு டயர் வெடிச்சு வண்டி பேலன்ஸ் இல்லாம குந்தாங்குறையா ஓடி, பக்கத்துல இருக்கிற காலி பிளாட்டோட காம்பவுண்ட் வால்மேல மோதி அப்படியே கவுந்துருச்சி. அப்பால...’’
``என்ன அப்பால... சீக்கிரம் சொல்லி முடிங்க.’’
``இன்ஜினீயர் சார் ஸ்பாட்லயே அவுட்! ஆனா, ஐயா உசிருக்கு ஆபத்தில்லை. இடுப்புக்குக் கீழேதான் சரியான காயம். ஐயாவால நிற்க முடியல. டிரைவர் ரவிக்கும் சரியான காயம். அப்படியே எனக்கும் காயம். ஆனா, பெருசா இல்லை. நான் பின்னாடி பக்கவாட்டுல உட்கார்ந்திருந்ததால பின் டோர் திறந்துக்கவும் உருட்டி வெளியே தள்ளிடுச்சி’’ - கணேசபாண்டியன், ஒரு மதுரைக்காரர். அது அவரது பேச்சில் பற்பல சொற்களில் ரசமாய் எதிரொலித்தது. மற்ற நேரத்தில் அதை வெகுவாய் ரசிக்கும் பாரதி, இப்போது இன்ஜினீயர் மரணம் என்பதில் விடைத்துப்போயிருந்தாள்.

அடுத்து என்ன செய்வது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டு பிரமை தட்டியது.
விபத்து, இன்று ஓர் அன்றாடம்தான்! கொப்புளிக்கும் பாப்புலேஷனின் இன்னொரு பக்க விளைவு. பேப்பரில் செய்தியாகப் படிக்கும்போது `யாருக்கோதானே!’ எனக் கடந்துவிடும் மனம், தனக்கோ, இல்லை தன் சொந்தங்களுக்கோ நிகழும்போது தடுமாறிப்போய்விடுகிறது.
``ஆமா... வீட்ல பாட்டிக்குச் சொல்லிட்டீங்களா?’’
``இல்ல பாப்பா... உங்களுக்கு முதல்ல சொல்லிட்டு பெறவு சொல்லலாம்னு... கேட்டா, துடிச்சிப்போயிடுவாங்க.’’
``டாடி கான்ஷியஸா இருக்காரா?’’
``இருக்காரு. `சீக்கிரமா எனக்கு மயக்க ஊசி போடுங்க. வலி பின்னுது’ன்னு புலம்பிக்கிட்டிருக்காரு பாப்பா. டிரைவர் ரவிக்கும் ‘திகிடு திம்பா’ காயம். அவனும் புலம்பிக்கிட்டிருக்கான்.’’
``ஆமா, எந்த ஹாஸ்பிடல்?’’
``துரைப்பாக்கத்துலேயே அந்த ரவுண்டானாவைக் கடந்தா தெக்க பார்த்த மாதிரி தண்டபாணி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரினு ஒரு ஆஸ்பத்திரி பாப்பா. யாரோ பழனிக்காரர். இங்க வந்து ஆஸ்பத்திரிய கட்டியிருக்காரு. மொரட்டு ஆஸ்பத்திரி. ரிசப்ஷனே ஸ்டார் ஹோட்டல் கணக்கா இருக்குது!’’ - கணேசபாண்டி சொல்லிவந்ததில் யாரோ ஒரு பழனிக்காரர் என்கிற அந்த விளக்கம், பல்லிடுக்குல இருக்கும் தேங்காய்த்துண்டு நாவில் நெருடுவதுபோல் நெருடி, ஒரு மௌனம் போர்வை விரித்து மூடினாற்போல் பாரதியை ஆக்கிரமித்தது.
``நீங்க உடனே வந்துடுங்க பாப்பா... நான் கட்சி ஆபீஸுக்கு, அப்பால பத்திரிகைக்காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லணும். எப்படித் தெரிஞ்சுச்சின்னே தெரியல. இப்பவே ரெண்டு பேர் கேமராவைத் தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க. அதுல ஒருத்தி பொட்டப்புள்ள.’’
``அது என்ன பொட்டப்புள்ள... லேடி ரிப்போர்ட்டர்னு சொல்ல வராதாக்கும்?’’
``ஸாரி பாப்பா... எங்க போனாலும் எங்க ஊர்ப் பேச்சு உட மாட்டேங்குது.’’

``சரி சரி... டேக் கேர். நான் எவ்வளவு சீக்கிரமா வரணுமோ அவ்வளவு சீக்கிரம் வர்றேன்’’ என்றவள், அடுத்த நொடி இன்டர்காமை எடுத்துப் பேச முனைந்து, பிறகு நேரில் பேசுவதே சரி என்றுணர்ந்து ஆசிரியர் ஜெயராமன் அறை நோக்கி நடந்தாள்.
அறைக்கதவை இரு குட்டுக் குட்டிவிட்டு, பிறகு திறந்துகொண்டு உள் சென்றாள். மிக அவசரமான தருணங்களில் அலுவலக நெறிமுறைகளைப் பின்பற்றத் தேவையின்றி இதுபோல் நடந்துகொள்ளலாம் என்பது ஆசிரியர் அந்த அலுவலகத்தில் எல்லோருக்குமே தந்திருக்கும் ஒரு வழிமுறை அது.
``யெஸ் பாரதி... எனிதிங்க் சீரியஸ்?’’
பாரதியும் நின்றபடியே சற்றுப் படபடப்போடு ஆக்ஸிடென்ட் விவரத்தைக் கூறி முடித்தாள்.
``இது டயர் வெடிச்சதாலதானா... ஆர் யூ ஷ்யூர்?’’ - நக்கலாகக் கேட்டார் ஆசிரியர். அதுவே, ராஜாமகேந்திரனுக்குக் கொலைமிரட்டல் இருப்பது அவருக்கும் தெரியும் என்பதை பாரதிக்கும் உணர்த்திவிட்டது. இருந்தும்... ``அப்பாவோட உதவியாளர் அப்படித்தான் சார் சொன்னார். அதுக்குத்தான் சான்ஸும் நிறைய இருக்கு. அப்பா எப்பவுமே கடைசி நிமிஷத்துலதான் எதையும் செய்வார். அதுல கார் சர்வீஸும் ஒண்ணு’’ என்றாள்.
``ஓ.கே. நீ புறப்படு... போயிட்டு எனக்குத் தகவல் கொடு.’’
``ஷ்யூர் சார்.’’
பாரதி புறப்பட, ஆசிரியர் ஜெயராமன் தன் எதிரில் உள்ள டிவி-யை ரிமோட் கொண்டு விழிக்கச் செய்ததில் கீழே ஸ்க்ரோலிங்கில் `ராஜாமகேந்திரன் எம்.பி., விபத்தில் சிக்கினார். துரைப்பாக்கம் அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்தது - சதிச் செயலா?’ - என்ற செய்தி ஓடியபடி இருந்தது.
அந்தத் தொலைக்காட்சி சேனல் செய்தியைத் தந்த வேகம், ஜெயராமன் முகத்தில் சன்னமான ஓர் ஆச்சர்யத்தை உருவாக்கியிருந்தது.
பாரதியும் தன் அறைக்குத் திரும்பி தன் ஹேண்ட்பேக், பவர் சார்ஜர், செல்போன், ஐ.டி.கார்டு என அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டதில் எப்படியோ அந்தப் பழைய புத்தகமும் ஒன்றாகிவிட்டது.
ஆஸ்பத்திரி முகப்பில் கோணல்மாணலாய் கார்கள், கிடைத்த இடைவெளியில் எல்லாம் ஸ்டாண்டு போடாமல் சரித்து நிறுத்தப்பட்ட பைக்குகள். கடந்து உள் நுழையவும் கம்பீரமாய் சிறியதாக ஒரு பிள்ளையார் கோயில். பிள்ளையாருக்கு மூன்றுகால பூஜை என்பது, பார்க்கும்போதே தெரிந்தது.
ஊதுபத்தி, கோணல் புகையைக் குழையவிட்டுக்கொண்டிருந்தது. `கோயில் கட்டி பூஜை செய்யத் தெரிந்தவர்களுக்கு, ஒரு பார்க்கிங் ஷெட் கட்டத் தோன்றவில்லையே’ என்று தனக்குள் எழும்பிய ஆதங்கத்தோடு வேகமாய் உள்ளே நடந்தாள் பாரதி. போலீஸ்காரர்கள் கண்ணில்பட்டனர். டிராஃபிக் இன்ஸ்பெக்டரில் இருந்து டி.எஸ்.பி வரை எல்லோரும் நடமாடியபடி இருந்தனர்.
பாரதியைப் பார்க்கவும் ஒரு மரியாதையான உடல்மொழியை வெளிப்படுத்தி, கீற்றாகச் சிரித்தனர். ஒரு போலீஸ்காரர், பாரதியை டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல, அவர் சில ரிப்போர்ட்டர்களிடம் நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார்.
``இன்ஜினீயர் மனோகரன் பாடி, போஸ்ட்மார்ட்டத்துக்காக ஜி.ஹெச்சுக்குப் போயிருக்கு. இது தற்செயலா நடந்த ஒரு ஆக்ஸிடென்ட் மாதிரிதான் தெரியுது. எம்.பி சாருக்கு இடுப்புக்குக் கீழே ஃப்ராக்சர். அவரோடு இப்ப பேசல்லாம் முடியாது. செடேஸன்ல இருக்கார். அவர் உதவியாளருக்கும் லேசான காயம். டிரைவர் ரவிகூட பலத்த காயங்களோடுதான் அட்மிட் ஆகியிருக்கார். மற்றபடி உயிருக்கு எந்த ஆபத்துமில்லை’’ - டாக்டரின் விளக்கத்தைத் தொடர்ந்து ஒரு ரிப்போர்ட்டர் ``அப்ப நடந்தது ஆக்ஸிடென்ட்தானா டாக்டர்... சதி வேலையெல்லாம் இல்லையா?’’ என்று கேட்டார்.

அதைக் கேட்ட டாக்டர் முகத்தில், அந்த நிலையிலும் ஒரு சிரிப்பு. ``சென்ஷேனலுக்கு ரொம்பத் தவிக்கிறீங்க. ஆக்ஸிடென்ட் பத்தி நீங்க போலீஸ்கிட்ட கேட்டுக்குங்க’’ என்று நகரப்பார்த்தவர் அப்படியே பாரதியோடு இணைந்துகொண்டு நடந்தபடியே பேசினார்.
``நீங்கதான் சாரோட டாட்டரா?’’
``யெஸ் டாக்டர்.’’
``பயப்படவேண்டாம். உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. ஆனா, எழுந்து நடமாட பல மாசம், ஏன்... பல வருஷம்கூட ஆகலாம்’’ - டாக்டரின் சுருக்கமான பேச்சே பாதிப்பின் அடர்த்தியை பாரதிக்கு உணர்த்திவிட்டது. அப்போது எதிரில் கணேசபாண்டியனோடு பாட்டி முத்துலட்சுமியும் வந்தவளாய் ``டாக்டர், என்னாச்சு டாக்டர்... என் மகனுக்கு ஒண்ணுமில்லையே?’’ தாய்மைத் தவிப்போடு கேட்க, டாக்டரும் ``உயிருக்கு எந்த ஆபத்துமில்லை... தைரியமா இருங்க’’ என்றார்.
பாரதியும் பாட்டியை நெருங்கி அவள் கைகளைப் பற்றி ஆறுதல்படுத்த முனைந்தாள். கணேசபாண்டியனோ கையில் போடப்பட்டிருந்த கட்டுடன் தன் பங்குக்குப் புலம்ப ஆரம்பித்தான்.
``வெளிய புறப்படும்போது கால் தட்டுச்சி... அம்மாகூட `உக்காந்து தண்ணி குடிச்சிட்டுப் போ’ன்னாங்க. ஐயாதான் காதுலயே வாங்கிக்காம கிளம்பி, கடைசியில இப்படி ஆகிடுச்சு’’ என்ற அவனது சென்டிமென்ட்டான பேச்சு அவளைக் கிளறியது.
``அண்ணே போதும்... உங்க முட்டாள்தனமான சென்டிமென்ட்ஸையெல்லாம் இங்க காட்டாதீங்க. டாக்டர், நான் அப்பாகூட பேசணும். ப்ளீஸ்...’’
``இல்லம்மா... அவர் இப்ப செடேஷன்ல இருக்கார். டிரைவர் ரவியும் செடேஷன்லதான் இருக்கார். ஸ்பெஷல் டீம் ஒண்ணு ஆபரேஷன்ல இறங்கப்போகுது. அது சம்பந்தமான கன்சல்டேஷன் நடந்துக்கிட்டிருக்கு. பார்ட்டி லீடரும் நேராவே என் லைன்ல வந்துட்டாரு. நிலைமையை, கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாரு. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் ICU வார்டுபாயை அனுப்புறேன். அமைதியா பார்த்துட்டுவேணா போங்க.’’
``கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இங்க எல்லா வசதிகளும் இருக்குதா?’’
``ஷ்யூர்... டோன்ட் வொர்ரி... வி டேக் கேர். இது எங்க வரையில, ஒரு ஸ்பெஷல் கேஸ்...’’ என்றபடியே அவர் விலகிட, டிராஃபிக் இன்ஸ்பெக்டர் வந்தார். பாரதி கேட்க அவசியமே இன்றி, ``மேடம், ஆக்ஸிடென்ட் ஸ்பாட்ல இருந்துதான் வர்றேன். டயர் வெடிச்சதாலதான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு. தப்பால்லாம் எதுவும் தெரியலை. வீடியோ ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சு காரை ஒர்க்ஷாப்புக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டோம்’’ என்று மிக இயல்பாகப் பேசி நின்றார். பாட்டி முத்துலட்சுமி காதில் அதெல்லாம் விழவேயில்லை.
``நான் பழனிக்குப் போயிட்டு வந்துடலாம்னேன். நீயும் கேட்கல... உன் அப்பனும் கேட்கல... இப்ப பாரு. என் பேச்சை யார் கேட்கிறா?’’ என்று ஆரம்பிக்கவும் டிராஃபிக் இன்ஸ்பெக்டர் விலகிக்கொண்டார். பாரதிக்குள் எரிச்சல் மூளத் தொடங்கியது.
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய் கட்சிக்காரர்களும் அங்கங்கே நசநசவெனக் கூர்கட்டிக்கொண்டு நின்றிருந்தனர். இதன் நடுவே ஒரு பத்திரிகையாளர், பாரதியும் ஒரு பத்திரிகையாளர் என்பது தெரியாமல் பாரதி முன் வந்தவராய் ``மேடம், உங்க அப்பாவுக்கு நடந்த ஆக்ஸிடென்ட்டோட பின்புலத்துல ஏதாவது சதி இருக்கிறதா நினைக்கிறீங்களா?’’ என்று ஆரம்பித்தார்.
அங்கே எல்லோரும் பார்க்க நின்றிருந்தால், இதுபோன்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவள் ``நானும் ஒரு ஜர்னலிஸ்ட்தான். உங்க எந்த ஒரு வியூவுக்கும் இப்ப இங்க பதில் இல்லை. நடந்திருக்கிறது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடென்ட். அப்பா ஒரு `எம்.பி’ங்கிறதனாலதான் உங்ககிட்டயும் இப்படி எல்லாம் கேள்விகள். ப்ளீஸ்... இதுக்குமேல நான் சொல்ல எதுவுமில்லைன்னு நினைக்கிறேன்’’ என்றாள்.
அப்படியே வெளிறிப்போயிருந்த முத்துலட்சுமியின் கையைப் பிடித்துக்கொண்டு ஐ.சி.யு நோக்கி நடந்தாள். எதிரில் வார்டுபாயும் கையில் அவர்கள் அணிய ஏப்ரன், ஹெட்கேப், மௌத் கேப் போன்ற அயிட்டங்களோடு வந்து நின்றான்.
பாரதி தானும் அணிந்துகொண்டு பாட்டிக்கும் அணிவித்தவளாய் அப்பாவை அருகிருந்து காணப் புறப்பட்டாள். வழியில் அங்கங்கே பழனி முருகனின் ஃப்ரேம் செய்த பெரிய பெரிய படங்கள். அதைப் பார்த்த முத்துலட்சுமியிடம் குப்பென்று ஒரு விசாரம்!
`` `என் கோயிலுக்குத்தான் நீ வர மறுந்துட்டே. என் ஆஸ்பத்திரிக்கு உன்னை வரவைச்சுட்டேன் பார்’னு முருகன் சொல்லாம சொல்றான் பார்’’ என்றாள்.
``பாட்டி... கொஞ்சம் வாய மூடிக்கிட்டுப் பேசாம வர்றியா... உன் முருகனுக்கு, யார் கோயிலுக்கு வர்றா... வரலைன்னு பார்க்கிறதுதான் வேலையா?’’
``பின்ன... அவனுக்கு ஆயிரம் கண்கள்டி! அதுலயும் பழனியப்பனை நீ யாருன்னு நினைக்கிறே?’’
``போதும்... பேசாம வா!’’ என்று அடக்கி பதவிசாய் வார்டுக்குள் நுழைந்து ராஜாமகேந்திரனின் பெட் அருகே போய் நின்றபோது கண்களைக் கரித்தது. எப்போதும் சென்ட் வாசத்தோடு கமகமவென்றும், கலையாத கிராப் தலையோடும், மடிப்பு கலையாத வெள்ளை வேட்டியும் சட்டையுமாய் கம்பீரத்துடன் பார்த்துப் பழகியவள், எதிரில் ஆக்ஸிஜன் மாஸ்க், சலைன்டியூப், மார்பின் மேலும் கொசகொசவென பல்ஸ் ஆக்ஸி மீட்டர் ஒயர்களுடன் ஒரு நைந்த துணிபோல் தென்பட்டவரை விக்கிப்போடுதான் பார்க்க முடிந்தது.
இடுப்புக்குக் கீழே யாரும் பார்க்க முடியாதபடி துணியைப் போட்டு மூடியிருந்தனர். அதில் அங்கங்கே ரத்தத் திட்டுகள்.

``ஐயோ மகி..!’’ என்று முத்துலட்சுமியும் வாய் விட, அருகிருந்த ஒரு நர்ஸ் `சத்தமிடக் கூடாது இங்கே’ என்று கண்களை உருட்டிக்காட்டி சமிக்ஞை செய்தாள். பாரதியும் முத்துலட்சுமியை அழுத்திப் பிடித்து அமைதிப்படுத்தி, பார்த்ததுபோதும் என்று வெளியே அழைத்துச் சென்றாள்.
வெளியே வந்த நொடி முத்துலட்சுமியிடம் வெடிப்பு. ``இது அந்த இடத்துக்காரன் சாபம்தான். `நீங்க நல்லா இருக்க மாட்டீங்க. என் பாவம் உங்கள சும்மா விடாது’ன்னான். நான்கூட பயந்துபோய் உன் அப்பன்கிட்ட கேட்டேன். `நீ இதுல எல்லாம் தலையிடாதே’ன்னுட்டான். இப்ப பார்... கிழிஞ்ச துணியா கிடக்கிறான்’’ - என்று கரகரவென அழுதபடியே புலம்பியவளை வெறித்துப்பார்த்தாள் பாரதி.
``என்னம்மா அப்படிப் பார்க்கிறே... என்னடா பெத்தவளே இப்படிப் பேசறாளேன்னா?’’
``இல்ல... யாரோ ஒருத்தன் வந்து சாபம் கொடுத்துட்டுப் போனான்னு சொன்னியே... யார் பாட்டி அது?’’
``யாருக்கும்மா தெரியும்? காலேஜுக்குன்னு இடத்தை, பலர்கிட்ட வாங்கியிருக்கான். அதுல இவனும் ஒருத்தன்.’’
``கணேசபாண்டிக்கு விவரம் தெரியுமா?’’
``அவனுக்குத் தெரியாம இருக்குமா? அவன்தானே இவனுக்கு வலதுகை இடதுகை எல்லாம்...’’
கணேசபாண்டி அப்போது கட்சிக்காரர்கள் சிலரோடு பேசிக்கொண்டிருக்க, அருகே சென்றழைக்கப் பிரியமின்றி தன் காரை நோக்கி நடந்தபடியே தன் செல்போனில் கார் அருகே வரச்சொன்னாள். அப்படியே முத்துலட்சுமியோடு சென்று அவளை காரில் ஏற்றி அமரவைத்தாள்.
``எங்க பாரதி, வீட்டுக்கா?’’
``ஆமாம் பாட்டி.’’
``ஐயோ... இங்க யார் பார்த்துப்பா?’’
``அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். வயசான காலத்துல நீ அலட்டிக்காதே...’’ எனும்போதே கணேசபாண்டி வந்துவிட்டான். கதவைச் சாத்திவிட்டு வெளியே நின்றபடி பேச்சைத் தொடக்கினாள்.
``அண்ணே... யாரோ ஒருத்தர் நம்ப பங்களாவுக்கே வந்து அப்பாவுக்கு சாபம் கொடுத்தாராமே... யார் அது?’’ - பாரதி பாயின்ட்டாகக் கேட்கவும் கணேசபாண்டியிடம் மிரட்சி.

``திருதிருன்னு முழிக்காம, சொல்லுங்க. அப்பா சட்டப்படிதானே எல்லாம் செய்திருக்காரு?’’
``ஆமாம் பாப்பா. அதுல என்ன பாப்பா சந்தேகம்?’’
``அப்பவும் யார் அது வீட்டுக்கே வந்து சாபம் கொடுத்தது?’’
``இப்ப எதுக்கு பாப்பா அதெல்லாம்?’’
``நான் சாமி இருக்குன்னு நம்புறேனோ இல்லையோ, சத்தியம் இருக்குன்னு நம்புறவள். யார் அவர்? உண்மையான விவரம் எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.’’
``அதுவந்து பாப்பா...’’
``இப்ப சொல்லல, வீட்டுக்குப் போய் CCTV கேமராவை ரீவைண்ட் பண்ணிப்பார்த்து நானே தெரிஞ்சுக்கிட்டு, சம்பந்தப்பட்டவரையும் போய்ப் பார்க்கவேண்டியிருக்கும்’’ - பாரதியின் விடாப்பிடியான வளைப்பு, அந்த நபரைப் பற்றி கணேசபாண்டியனைச் சொல்லச்செய்தது.
``அவர் பேரு குமாரசாமி. ஐயா வாங்கின இடத்தையொட்டி ஈசான்யத்துல அவர் இடம் இருக்குது. 20 சென்ட் இடம். மார்க்கெட் மதிப்புக்கு மேலேயே நம்ப ஐயா தரத் தயாரா இருந்தும், அவர் `விற்க இஷ்டமில்லை’ன்னுட்டாரு. அவரோட இடத்துல பெருசா ஒரு ஊத்துக்கிணறு. பெரிய பெரிய பஞ்ச காலத்துலயும் அதுல தண்ணி போவாதாம்! அதோட, அது ஈசானத்துல இருக்கிறது விசேஷமாம். நம்ப ஐயாவுக்கு ஒரு வாஸ்துக்காரர் இருக்காரு. அவரு ஐயாவை விடாம தூண்டிவிடவும், ஐயாவும் அவர்கிட்ட எவ்வளவோ கேட்டுப்பார்த்தாரு. அவரு பணத்துக்கு மசியல. ஐயா உடனே, வேங்கைய்யன்கிற ரெளடிய கூப்பிட்டுப் பேசினாரு. அவன் போலியா ஒரு பத்திரத்தை உண்டாக்கி, `அது என் இடம்’னு போய் குடிசையைப் போட்டுட்டான். அவரும் போலீஸுக்குப் போனாரு...’’ - கணேசபாண்டியை அதற்குமேல் அவள் சொல்லவிடவில்லை.
``இதுக்குமேல நீங்க எதுவும் சொல்லத் தேவையில்லண்ணே. அப்பாவோட பவர், போலீஸையும் கட்டிப்போட்டு சமாதானமா போகச்சொல்லியிருக்கும். அவரும் மனம் நொந்துபோய் இங்க வந்து சாபம் கொடுத்திருப்பார்... சரிதானே?’’
``ச... சரி பாப்பா...’’
``காலேஜுங்கிறது ஒரு நல்ல விஷயம். ஆனா, அதோட அடித்தளம் இவ்வளவு மோசமாவா இருக்கணும்? சரி, என்கூட புறப்படுங்க.’’
``எங்க பாப்பா?’’
``அவரைப் பார்க்க. அப்பா செய்த தப்புக்கு, நான் மன்னிப்பு கேட்கிறேன்.’’
``பாப்பா!’’
``வரப்போறீங்களா இல்லையா?’’
``இங்க ஐயாவுக்குத் துணையா...’’
``முதல்ல மன்னிப்பு... அப்புறம் துணையா வந்து இருங்க’’ - அவளது கட்டளைக் குரல், கணேசபாண்டியனை மிக வேகமாக இயக்கியது. அடுத்த நாற்பதாவது நிமிடத்தில் அந்தக் குமாரசாமி வீட்டு முன் போய் நின்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. மாரடைப்பில் காலமாகிவிட்ட அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பாரதியை உலுக்கிவிட்டது!
- தொடரும்
இந்திரா செளந்திரராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்