உறவுகள் ஒன்றுகூடி மகிழ, உற்சாகமாய்க் குதூகலிக்க, பாரம்பர்யத்தை உணர்ந்துகொள்ள உதவும் திருவிழா பொங்கல். தொடர் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொங்கலுக்கு முந்தினநாள் போகி கொண்டாடப்படும். தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட வழிகாட்டும் ஒரு முக்கியமான நாள் என்றும் இதைச் சொல்லலாம்.
`பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் முதுமொழி, போகிப் பண்டிகையையும் தைத் திருநாளையும் இணைக்கும் பாலமாகச் செயல்படும்.
அதென்ன `பழையன கழிதல்…’ என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதை பல்வேறு கோணங்களில் அலசலாம். மனதில் இருக்கும் மாசுக்கள், தவறான எண்ணங்கள் மற்றும் எதிர்மறையான சிந்தனைகளை நீக்கிவிட்டு, தூய்மையான எண்ணம் மற்றும் நேர்மறையான சிந்தனையை விதைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், நம்மிடையே பயன்படாத பொருள்களைத் தூக்கி வீசிவிட்டு அல்லது எரித்துவிட்டு, புதிதாக அதற்கு உகந்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆக, இந்த இரண்டு செயல்களுமே `பழையன கழிதல்' பழமொழிக்கு ஏற்றவையே. ஆனால் எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தீர்மானிப்பதில் தான் உங்கள் ஆரோக்கியத்தின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. மனதில் இருக்கும் பழைமை அனைத்தையும் நீக்கினால், புதிய ஆரோக்கியம் பிறக்கும்.
போகிப் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பே எதை எரிக்கலாம், எதைத் தூக்கி வீசலாம் என்று மனதில் உதிக்கும் எண்ணம் தவறானது. பழைய துணி மற்றும் சில வகையான பொருள்களை எரிப்பதற்கு அறிவியல் பின்புலத்துடன் கூடிய பாரம்பர்ய காரணங்கள் பல உண்டு.
நாப்கின் புழக்கத்தில் இல்லாத அன்றைய நாள்களில், மாதவிடாய் தருணத்தில் பெண்கள் அந்த நாள்களுக்கென பிரத்யேகமான துணியை, துவைத்து துவைத்துப் பயன்படுத்துவர். குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் முதல் அன்றாட பயன்பாடுகள் பலவற்றிலும் பெண்களின் ஆடைகளே அதிக புழக்கத்தில் இருந்தன. அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். ஆக, ஆரோக்கியத்தை மேம்படுத்தவே பழைய துணிகளைத் தீ வைத்து எரிக்கும் அந்த ஏற்பாடு. இதன்படி போகி அன்று பழைய ஆடைகளைக் கொளுத்திவிட்டு, தைத்திருநாளில் புதிய ஆடைகள் உடுத்தும் பழக்கம் உருவாக இதையும் முக்கியக் காரணமாக சொல்லலாம். ஆனால், இன்றைக்கு `போகி' என்றால் எதையாவது எரித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சைக்கிள் - கார் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும், துணிகளையும் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
இந்த ஆண்டுமுதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில், ‘போகியன்று பழைய பிளாஸ்டிக் பொருள்களை எரியூட்டி புரட்சி செய்கிறேன்’ என்று, உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள். பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வெளியேறும் புகை, புற்றுநோய்க்கான தீனி என்பதை மறந்துவிடாதீர்கள்.
பிளாஸ்டிக்குகளைப் பார்க்க அழகாகத் தோற்றமளிக்கும். ஆனால் அவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி யாரும் யோசிப்பதில்லை. தூக்கி எறிந்தால் மக்காமல் பூமியை மலடாக்குவது மட்டுமல்லாமல், அதை எரிக்கும்போது காற்றில் கலப்பதால், அதிலிருந்து வெளியாகும் தீமை உண்டாக்கும் வேதிப்பொருள்கள், மனிதர்களையும் மலடாக்கும் என்பது உறுதி. இன்றைய சூழலில் குழந்தைப்பேறின்மை அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்தால், பல்வேறு உண்மைகள் புலப்படும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளிவரும் புகை தீவிர நெஞ்சக நோய்களை ஏற்படுத்தி, வாழ்நாள் முழுவதும் துன்பத்துடன் உழலச் செய்யும்.
தீபாவளித் திருநாள் முடிந்ததும், காற்று மாசு அளவு எப்படி அதிகரிக்கிறதோ, அதைப் போலவே பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமன்றி வேறு சில பொருள்களையும் சேர்த்து எரிப்பதால் காற்று பெருமளவில் மாசடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏற்கெனவே காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் இடம்பிடித்திருப்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். இப்படி நாளுக்குநாள் காற்றின் மாசு கூடிக்கொண்டே சென்றால், நோய்களின் எண்ணிக்கை தொடர் சங்கிலியாக நீண்டுகொண்டே இருக்கும்.
டயர்களை எரிப்பதால் கந்தக ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, டையாக்சின், பென்சீன் போன்ற பல பொருள்கள் ஆகாயத்தில் உற்சாகமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் இவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்குவதில் தொடங்கி, கண் எரிச்சல், நுரையீரல் நோய்கள், நரம்பு மண்டலக் கோளாறுகள் என நீண்டு இறுதியாகப் புற்றுநோயையும் ஏற்படுத்தும். இப்படியாக மனிதர்களைத் தொடர்ந்து தாக்குவதால் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு, புதுப்புது நோய்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். முதியோர், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் குழந்தைகள் நச்சுப் புகையை சுவாசிப்பதால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
போகிப் பண்டிகையன்று ஆங்காங்கே மலைபோல குவிந்திருக்கும் குப்பைமேடுகள் கொளுத்தப்படுவதைப் பார்க்கலாம். எனவே, குப்பைமேடுகளுக்கு அருகே சில கிலோமீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். காற்று மாசுபடுவதால் மனிதர்களுக்கு மட்டுமன்றி, உயிர்ச் சங்கிலியை பாதுகாக்க உதவும் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் வாழ்நாள் வெகுவாகக் குறையும் என்கிறது ஆய்வு. மேலும் குறிப்பாக, நீங்கள் அடிக்கடி பார்த்து மகிழும் பறவைகள் போகிப் பண்டிகை தினத்தில் இருந்து பல நாள்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும். இந்தப் போகிப்பண்டிகையின்போது அதைக் கவனியுங்கள். `தனக்காக வாழ்வதல்ல மனிதம்; அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிப்பதுதான் மனிதம்' என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.
ஆக, போகிப் பண்டிகை என்பது சுற்றுச்சூழலின் உயிர்ப்பினைக் கெடுக்கும் நாளாக மாறிப்போனது வருத்தமான விஷயமே. உணர்வுரீதியாக ஆரோக்கியத்துடன் கொண்டாடப்பட்ட நாள்கள் மறைந்து, விஷப்புகையை சுவாசிக்கும் ஒரு நாளாக போகிப் பண்டிகை மாறிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே, இனியாவது நமது முன்னோரின் மரபு சார்ந்த விஷயங்களுக்குச் சற்று செவி மடுப்போம். நம் மரபுக்கான காரணங்களை சிந்தித்து, ஆரோக்கியம் காக்கும் பண்டிகையாகப் போகியை மாற்றுவோம்.
தனி மனிதனாக நம்மால் இந்தப் பூவுலகுக்கு என்ன செய்யமுடியும் என்பதை யோசித்துச் செயல்படுவோம். போகிப் பண்டிகை என்றால் பிளாஸ்டிக் பொருள்களையும் நாம் உடுத்தும் உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தும் நாள் என்றும் ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை மேளம் போல அடித்து சத்தம் எழுப்பும் நாள் என்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தராமல், போகியின் உண்மையான மகத்துவங்களை சொல்லிக் கொடுப்போம். சுற்றுச்சூழலைச் சிதைக்காத வகையில் பாரம்பர்ய விழாவைக் கொண்டாடுவோம்.