
படம்: சி.சுரேஷ்பாபு
எதிர்வீட்டுப் பூனையும் பேத்தியும்
எப்போது கதவைத் திறந்தாலும்
வீட்டுக்குள் வந்துவிடும்
எதிர்வீட்டுப் பூனைக்குட்டி
மொத்தமாய் சாம்பல் நிறம்
முகத்தில் வெள்ளைப் பொட்டு
தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலிருக்கும்
‘எதுடா சாக்குன்னு’
சண்டைக்கு வருவாள் எதிர்வீட்டுப் பெண்.
அவளின் பேத்திக்கும் பூனைக்கும்
அந்த வீட்டின் மேலொரு கண்ணிருக்கும்.
அவளில்லாவொரு மாலை வேளையில்
பதுங்கிப் பதுங்கி இரண்டும் வந்தன
சிறுமி அகலக்கண் விரித்தாள்
அங்குமிங்கும் நோட்டமிட்டாள்.
மகனின் பொம்மைக்கூடையை
கொட்டிக்கிளறிப் பிரமித்தாள்.
குட்டிக்கும் ஒரே கும்மாளம்
சமையலறை, சாமியறை, புத்தக அலமாரியென
தாவிக் குதித்தது.
கதவிடுக்கில் பதுங்கிய பூனைக்கு
எஜமானி உருவம் புலப்படவே
மிரண்டுபோய்
தலைதெறிக்கவோடிய
இருவரிடமிருந்தும் கோரஸாய் வந்தது ``மியாவ்” சத்தம்.
- காசாவயல் கண்ணன்.

சரியான விடையை () செய்க..
சரியான விடையை () செய்க
மாதிரியான கேள்விகள் மாணவர்களுக்கு
இனம்புரியா சந்தோஷங்களைத் தந்துவிடுகிறது..
தனது டிக்கிற்கும்
ஆசிரியர் இடும் டிக்கிற்கும்
மை நிறம் தவிர வேறு வித்தியாசமில்லையென்ற
துள்ளலை அளிக்கிறது.
‘சரி ரைட்டு விடு’ என இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட
உந்தித் தள்ளுகிறது..
கொடுக்கப்பட்ட விடைகளைவிடவும்
சரியானதொன்று
இருப்பதாகத் தூண்டி
அதைத்தேடி டிக் செய்யுமாறு சிறகுகளை விரிக்கவும் வைக்கிறது.
- சாமி கிரிஷ்
இருட்டடிப்பு செய்திகள்
நான்கு சாலைகள் சந்திப்பினூடே
உள்ள மகாத்மா சிலையின்
சுற்றுப்புற இரும்புத்தடுப்பு
கண்ணீர் அஞ்சலி
பதாகைகளுக்கானதாகிவிட்டது.
தினமும் யாரோ ஒருவர்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரின்
இறப்புச் செய்தியை
அந்த இடம் அறிவித்துக்கொண்டே உள்ளது.
வாகன ஓட்டிகளும்
பாதசாரிகளும்
அந்த இடத்தில் சற்றே நிதானப்பட்டு
இன்று யார் அல்லது யார் யார்
என்று அறிந்துகொண்டு
சிலர் அதிர்ந்தும்
சிலர் மகிழ்ந்தும்
சிலர் ஏமாந்தும் செல்கிறார்கள்.
காந்திசிலைக்கு ஏதேனும்
கட்சியினர் மாலையிட
வரும் நாட்களில் இறப்போர்களின்
மரணச் செய்திகளை மட்டும்
அந்த இடம்
இருட்டடிப்பு செய்துவிடுகிறது.
- வீ.விஷ்ணுகுமார்