
2018-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்


வெளிமாநிலப் பல்கலைக்கழகங்களில் பயின்றுவந்த தமிழக மாணவர்கள் பலர், சந்தேகத்திற்குரிய முறையில் இறந்தது, மாநிலத்தையே அதிர வைத்தது. சண்டிகரில் உள்ள யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் சரத்பாபு, தான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அடுத்த சில வாரங்களில், அதே கல்லூரியில் பயின்ற மாணவர் கிருஷ்ணபிரசாத், தன் விடுதி அறையில் இறந்துகிடந்தார். கலெக்டர் கனவுடன் டெல்லி ஐ.ஏ.எஸ் அகாடமி சென்ற ஈரோட்டு மாணவி ஸ்ரீமதி, உயிரற்ற சடலமாகத் தமிழகம் வந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்கள், வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பின.

பெரியார் சிலை உடைப்பு, கனிமொழி பற்றிய சர்ச்சைக் கருத்து என ஹெச்.ராஜா இந்த ஆண்டில் பேசியவை எல்லாமே அபத்தத்தின் உச்சம்; வெறுப்பரசியலின் விஷ விதைகளைத் தொடர்ந்து விதைக்க முயன்று வகைதொகையாய் வாங்கிக் கட்டிக்கொண்டார். யாருக்கும் அடங்காத அவரின் நாக்கு நீதிமன்றம் வரை நீண்டது. கோபமுற்ற நீதிமன்றம் தானாக வந்து சாட்டையைச் சுழற்ற கப்சிப்பென ஆஜராகி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் திருந்தியபாடில்லை. கடிவாளம் இல்லாத குதிரையைப் போல எல்லாத் திசையிலும் பாய, அவருக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டு மாய்கிறார்கள் தமிழக பா.ஜ.கவினர்.

ஆய்வு நாயகனாக உருவெடுத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கடலூரில் தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றவர், அங்கே ஒரு வீட்டுக் குளியலறையில் அத்துமீறி நுழைந்தார் என சர்ச்சை கிளம்ப, வறுத்தெடுத்தார்கள் நெட்டிசன்கள். ‘காலியாக இருந்த கழிவறையைத்தான் கவர்னர் ஆய்வு செய்தார். தொலைக்காட்சிகள் தவறாக சித்திரித்துவிட்டன’ என்று விளக்கம் தந்தார்கள். நிர்மலா தேவி விவகாரம், பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பெங்களூரைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார் புரோஹித்; இந்த ஆண்டு எதிர்க்கட்சிகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்களுள் ஒருவராகவும் ஆனார்.

ஹாசினி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தஷ்வந்த். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விமலா, ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரட்டைக் கொலை வழக்கின் குற்றவாளிக்கு இப்போது தூக்குக் கயிறு காத்திருக்கிறது.

காஞ்சிபுரம், பாலேஸ்வரம் கிராமத்திலுள்ள செயின்ட் ஜோசப் ஹாஸ்பைப் முதியோர் இல்லத்துக்கு வருபவர்கள், சில நாள்களிலேயே இறந்துவிடுவதாகவும், அவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் புகார்கள் கிளம்பின. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இல்லத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட முதியவர்கள் வேறு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர். இடமாற்றத்துக்குப் பிறகு 12 முதியவர்கள் இறந்துவிடவே பிரச்னை பூதாகரமானது. கடைசியில் புகார்கள் எல்லாம் வதந்தி என ஆய்வில் தெரியவர நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் மூத்தவர்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகங்களையும் விட்டுவைக்க வில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, உதவிப் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். ஆனால், இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கலாகவில்லை. மறுபுறம், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் லஞ்சம் வாங்கியதாகவும் புகார் கிளம்பியது. அந்தப் பேராசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார், துணைவேந்தர் சூரப்பா.

இந்த ஆண்டு இரண்டு ரவுடிகள் வைரலனார்கள். தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு தன் கூட்டாளிகளோடு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வெளியாக, தமிழ்நாடே பரபரப்பானது. அரிவாளால் கேக் வெட்டி கெத்து காட்ட நினைத்த பினுவைச் சுற்றி வளைத்துப் பிடித்தது காவல்துறை. `இதுக்கெல்லாம் நான் வொர்த் இல்ல சார்' என பினு கதறி அழுதார். இன்னொருபக்கம் மதுரை ரவுடி புல்லட் நாகராஜன், `என்னைப் புடிங்க பார்க்கலாம்' என வீம்பாகப் போலீஸிடம் சவால்விட்டார். அவரையும் துரத்திப் பிடித்து உள்ளே தள்ளியது. காவல்துறை.

கட்சி தொடங்கும் ரேஸில் ரஜினியை முந்தினார் கமல். ட்விட்டர் தாண்டி வரவேமாட்டார் என்ற குற்றச்சாட்டை பிப்ரவரி மாதம் உடைத்தார். `மக்கள் நீதி மய்யம்' எனப் பெயர் வைத்து கொடியை அவர் அறிமுகப்படுத்திய உடனேயே விமர்சனங்களும் கிளம்பின. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு காடு, மலை, கிராமம் எனத் தமிழ்நாட்டையே சுற்றி வந்து மக்களைச் சந்தித்தார். இது அ.தி.மு.கவினரை வெறுப்பேற்ற, இருதரப்பும் உக்கிரமாக மோதிக்கொண்டன. இப்போது நம்மவரைச் சுற்றி வட்டமடிக்கின்றன கூட்டணி சர்ச்சைகள்.

தமிழ் சினிமாவிற்குத் தற்காலிக விடுப்பு கொடுத்தனுப்பியது தயாரிப்பாளர் சங்கம். திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, மார்ச் 1 தொடங்கி, ஒன்றரை மாத காலம் வரை நடந்த வேலை நிறுத்தம் சினிமா ரசிகர்களைத் தவிப்பில் ஆழ்த்தியது. காற்று வாங்கின தியேட்டர்கள். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஷூட்டிங் செய்யக் கிளம்பினார்கள் படைப்பாளிகள். படங்களும் வரிசை கட்டி வெளியாகின.

கருவறை வரை கடத்தல் புகார்கள் பாய்ந்ததால் அதிர்ந்தது தமிழகம். அர்ச்சகர் தொடங்கி அறநிலையத்துறை அதிகாரிகள் வரை கைது செய்யப்பட்டனர். ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து கடத்தப்பட்ட சிலைகளை பல மூலைகளில் இருந்தும் மீட்டு வந்தது. இப்போது அவர்மீதே புகார்ப்பட்டியல் வாசிக்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள்.

வனத்துறையின் மெத்தனத்தால் சோலைக்காடு, சுடுகாடானது. தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிகளில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 17 பேர், திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, ‘முறைப்படி அனுமதி பெறாததே காரணம்’ என வழக்கம் போல வருத்தம் தெரிவித்து அமைதியானார் முதல்வர். இயற்கை மீதான நம் அலட்சியப் போக்கை சிகப்புக் கொடி காட்டி எச்சரித்தது குரங்கணி.

’அ.ம.மு.க’ ஆரம்பித்தார் தினகரன். 'இந்தக் கட்சியை வைத்து அந்தக் கட்சியை கைப்பற்றுவேன்' என `கொள்கை'யையும் அறிவித்தார். ஆனால் கட்சியின் எதிர்காலமோ 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை நம்பியே இருந்தது. 'தகுதிநீக்கம் செல்லும்' எனத் தீர்ப்பு வர, கலைய ஆரம்பித்தது கூட்டம். ஆண்டின் இறுதியில் செந்தில் பாலாஜி தி.மு.கவில் ஐக்கியமாக 'அடுத்தது யார்?' என்ற கேள்விதான் இப்போது மூலைமுடுக்கெல்லாம்...

எஸ்.வி.சேகர் கிளப்பிய அவதூறுகளால் தகித்தது ஊடக உலகம். தனது கன்னத்தில் தட்டிய ஆளுநரைக் கண்டித்த பெண் பத்திரிகையாளரை மோசமாக இழிவுபடுத்தி, முகநூலில் அவர் போட்ட பதிவுக்குக் கண்டனங்கள் குவிந்தன. பதிவை நீக்கிவிட்டு, மன்னிப்பும் கேட்டார். இதுகுறித்து வழக்கு தொடரப்பட, அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அவரோ, அமைச்சர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு, செல்ஃபி தட்டிக்கொண்டிருந்தார்.

மதிக்கப்பட வேண்டிய ஆசிரியை மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற அருவருப்பு, அருப்புக்கோட்டையில் அரங்கேறியது. பேராசிரியை நிர்மலா தேவி தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியாக, தமிழகம் அதிர்ந்தது. பேராசிரியை உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக அதிகாரிகள் முதல் பன்வாரிலால் புரோஹித் பெயர் வரை அடிபட, சி.பி.சி.ஐ.டி சிறப்புக் குழுவும் ஆளுநரின் நியமனத்திலான சிறப்புக் குழுவும் விசாரணையை மேற்கொண்டன.

சந்தையூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இருபிரிவுகளிடையே பிரச்னை எழுந்தது. அங்கிருக்கும் கோயிலைச் சுற்றி பறையர்கள் தடுப்புச்சுவர் எழுப்ப, ‘இது எங்களை ஒடுக்கும் நடவடிக்கை’ என்று அருந்ததியர்கள் புகார் கூற, ‘சந்தையூரில் தீண்டாமைச்சுவர்’ என்று செய்திகள் அலையடித்தன. மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை, ‘அது தீண்டாமைச்சுவர்தான்’ என்று உறுதிப்படுத்தியது. ஊரைவிட்டு வெளியே சென்று முகாம் அமைத்துப் போராடினர் அருந்ததிய மக்கள். பிரச்னை பெரிதானது. ‘சுவரை இடியுங்கள்’ என்று நீதிமன்றம் உத்தரவிட, சில மாதங்கள் கழித்து சுவர் இடிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடி ஒன்றை அடித்து நொறுக்க, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். தி.மு.க முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. போராட்டங்களால் சென்னை ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. சென்னை வந்த மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். #GoBackModi கோஷம், சர்வதேச அளவில் ட்விட்டரில் டிரண்டானது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்திப் போராட்டம் நடத்தியவர்கள்மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 13 பேர் உயிரிழக்க, பலரும் படுகாயம் அடைந்தனர். இதை நியாயப்படுத்தியும், கண்டித்தும் எதிரெதிர் விவாதங்கள் சூடு கிளப்பின. உயிரிழப்புகள் அரசியல் களத்தை சூடாக்கின. இறுதியில் ஆலை மூடப்பட்டது. நிரந்தரமாக மூடவும், மீண்டும் திறக்கவும் முயற்சிகள் தொடர, கடைசியாக ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறது பசுமைத் தீர்ப்பாயம்!

`காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட, ’கர்நாடகத்தில் தேர்தல் நடக்கிறது’ என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தது, மத்திய அரசு. ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று தமிழகம் திமிறியெழ, ஒருவழியாக ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைத்தது மத்திய அரசு. அப்போதும் அடங்காத கர்நாடகம், மேக்கேதாட்டூவில் அணை கட்ட யதார்த்தமாக அனுமதி கேட்க, மத்திய அரசு பதார்த்தமாக அனுமதி வழங்க, கர்நாடகம் கட்டவிருக்கும் அணைக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்கள் தொடர்கின்றன.

நீட் தேர்வு குறித்த சர்ச்சைகளும், பிரச்னைகளும் இந்த ஆண்டிலும் நீடித்தன. தேர்வு எழுத பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அலைந்து திரிந்து அவதிக்குள்ளாயினர் தமிழ் மாணவர்கள். கேரளாவுக்குத் தேர்வு எழுத சென்ற மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி தேர்வறைக்கு வெளியே மரணமடைந்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார். வினாத்தாளில் மொழிபெயர்ப்புக் குளறுபடி, கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு என நீட் தேர்வு வாட்டி எடுத்தது.

அடுத்தடுத்து பேட்டி கொடுத்து, அரசியல் முகம் காட்டினார் ரஜினிகாந்த். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கேட்டபோது, ‘போராட்டம் வன்முறையாக மாறுவதற்குச் சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம்’ என்று சொல்லிவிட்டு, “எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம்னு சொன்னா தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்” என அறச் சீற்றம் காட்டினார். அடுத்த சில நாள்களிலேயே 'காலா' படத்தில் போராட்டத்திற்கு அழைத்தார். ஏழுபேர் விடுதலை பற்றி விசாரிக்க ``எந்த ஏழு பேர்?' எனக் கேட்டதும், பின் விளக்கம் கொடுத்ததும் என, ரஜினி நிறையவே தடுமாறினார்.

காங்கிரசின் கைக்குள் அடங்கிய புதுச்சேரியில், முதல்வருக்கும், ஆளுநருக்குமான பனிப்போர், உச்சத்தை எட்டியது. அதிரடி ஆய்வு, எம்.எல்.ஏ. உடன் மேடையில் மோதல் என்று கிரண்பேடி, அவ்வப்போது ‘கரண்ட் ஷாக்’ கொடுத்தார். நம்பிக்கை இழக்காமல் போராடினார் நாராயணசாமி. சமீபத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் நான் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்” என்று ஆளுநர் நட்புக்கரம் நீட்ட, “நானும் அதையே கூறுகிறேன்” என்று வழிமொழிந்தார் நாராயணசாமி.

உற்றார், உறவினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காரை மறித்து, பலரும் தாக்க, இறந்துபோனார் ருக்மணி அம்மாள் என்கிற பெண். காரணம், சமூக ஊடகங்களில் பரவிய போலிச் செய்தி. 200 பேர் கொண்ட வடமாநில கடத்தல் கும்பல், குழந்தைகளைக் கடத்த வந்துள்ளதாக வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, அவரது உயிரைப் பறித்தது. சென்னை பழவேற்காடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரையும் இதே மாதிரியான வதந்திக்காக கும்பல் கூடி அடித்துக் கொன்றது தமிழகத்தையே பீதியடையச் செய்தது!

திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளியில் சமையலராகச் சேர்ந்தார் பாப்பம்மாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், எங்கள் குழந்தைகளுக்கு சமைக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கினர், ஆதிக்கச் சாதி பெற்றோர்கள் சிலர். அதிகாரிகளுக்கு அழுத்தம்கொடுத்து, அவரை வேறு பள்ளிக்கும் மாற்றினர். பாப்பம்மாளுக்கு ஆதரவாகப் போராட்டம் வெடிக்க. அந்தப் பள்ளியிலேயே அவர் மீண்டும் பணியமர்த்தப்பட்டதோடு, பணி மாறுதல் செய்த அதிகாரி மீது வழக்கு பதியவும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது. தோற்றது சாதி; வென்றது சமூக நீதி.

எடப்பாடிக்குத் தெரியாமல், டெல்லிக்குப் போய், மீடியாவிடம் மாட்டிக் கொண்ட பன்னீர், ‘உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த என் சகோதரரை இடம் மாற்ற ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரைக் கொடுத்து உதவியதற்காக நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்ல வந்தேன்’ என்று உளறிக் கொட்டினார். கடுப்பான நிர்மலா, அவரைச் சந்திக்காமலே திருப்பி அனுப்பினார். பல நாள்களுக்குப் பின் மௌனம் கலைத்த ராணுவ அமைச்சர், “அவசரத்துக்காகவே ஓ.பி.எஸ். சகோதரருக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான்” என்று ‘பகீர்’ விளக்கமும் கொடுத்தார்!

சினிமாவில் நடித்து வாங்காத பெயரை, ஸ்ரீலீக்ஸ் என்ற டைட்டிலில் சில தகவல்களை வெளியிட்டு, டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் பெயர் வாங்கினார் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னைப் பயன்படுத்திக்கொண்டனர் என்று தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோக்கள் உட்பட பல சினிமா பிரபலங்கள்மீது குற்றம்சாட்டி, சினிமாவின் லேட்டஸ்ட் வைரல் மெட்டீரியல் ஆனார். அவருக்கு எதிராகப் பல விமர்சனங்கள் கிளம்பின. அவரால் குற்றம் சாட்டப்பட்ட ராகவா லாரன்ஸே அவரைத் தன் படத்தில் நடிக்க அழைத்ததோடு அதிரடிகள் முடிவுக்கு வந்தன.

ஆபத்துக் காலங்களில் எவ்வாறு தப்பிப்பது என்கிற பயிற்சியே ஒரு கல்லூரி மாணவியின் உயிருக்கு ஆபத்தாக முடிந்தது. கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேரிடர் கால பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. பயிற்சியின்போது அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி இரண்டாம் மாடியில் இருந்து குதிக்கத் தயக்கம் காட்டியபோது, பயிற்சியாளர் தள்ளிவிட, தலையில் அடிபட்டு, அங்கேயே உயிரிழந்தார் மாணவி. பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் போலிப் பயிற்சியாளர் என்பதும் தெரியவந்தது.

தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழகம் முழுவதும் 76 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. போலி நிறுவனங்களைத் தொடங்கி அரசுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்கள் சப்ளை செய்தது போல கணக்கு காண்பித்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது, கண்டறியப்பட்டது. நிறைய ஆவணங்கள் எடுக்கப்பட்டன. எந்த மாற்றமும் இல்லை. அதே அமைச்சர்கள், அதிகாரிகள், நிறுவனங்கள் தங்கள் ‘பணியை’த் தொடர்கின்றனர்.

`அம்மா மரணம்’ இந்த ஆண்டும் ஆட்டத்தில் இருந்தது. அம்மாவுக்கு ‘ஆக்ஸிஜன் மாஸ்க்’ போட்டுவிட்டவர்கள் முதல் ஆரஞ்ச் ஜூஸ் பிழிந்து கொடுத்தவர்கள் வரை, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் தந்தார்கள். ஆனால், இடைக்கால அறிக்கையைக்கூடக் கண்ணில் காட்டாமல் கடமை ஆற்றிவருகிறது ஆணையம். ஜெயலலிதாவின் உணவுச்செலவு 1.17 கோடி என்று அப்போலோ அறிக்கை வேறு அதிர்ச்சி கிளப்பியது. இடையில் 'நான்தான் ஜெயலலிதாவின் மகள்' என்று அம்ருதா என்பவர் சர்ச்சையைக் கிளப்ப, நீதிமன்றம் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிட மறுத்தது.

சென்னை அயனாவரத்தில் ஐந்து மாதமாக ஒரு சிறுமியை, பதினேழு பேர் வன்புணர்வு செய்த சம்பவம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உறைய வைத்தது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்போரை, அச்சத்தில் நடுங்க வைத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

காட்டை அழித்து ரோடு போட முயன்ற அரசுக்கு எதிராக வெகுண்டது, தமிழகம். சென்னை-சேலம் இடையே அதிவிரைவுப் போக்குவரத்திற்காக அமைக்கவிருந்த எட்டு வழிச் சாலைக்காக, வனங்களையும், வயல்களையும் பலி கொடுக்கத் தமிழக அரசு தயாரானது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மக்கள், அதிதீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர். நிலத்தைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவு இந்த முயற்சிகளுக்கு இப்போது கடிவாளம் போட்டுள்ளது.

‘இயற்கை வாழ்வியல்’ மீதான கண்மூடித்தனமான ஈர்ப்பு, ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் இறப்புக்குக் காரணமானது. திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் கிருத்திகாவும் அவரின் கணவரும் யூடியூபில் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவெடுத்தனர். பிரசவ நாளில் இந்த முயற்சி மரணத்தில் முடிந்தது. இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே ‘வீட்டிலேயே சுகப்பிரசவம்’ வழங்கப் பயிற்சி தருவதாக விளம்பரம் தந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். பின் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்கமுடியாது என்று தமிழக அரசு மறுத்தது. உடனடியாக சட்டப் போராட்டத்தைத் தொடக்கியது திமுக. நள்ளிரவில் நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டிற்கே சென்று, மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டார். தகவலறிந்த நொடியில், ராஜாஜி ஹாலில் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட பல லட்சம் உடன் பிறப்புகளும், கோடிக்கணக்கான தமிழர்களும் கண்ணீரில் நெக்குருகிப்போனார்கள்.

பிப்ரவரி மாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலின் தூண்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன. உடனே, கோயில் வளாகத்தில் கடை வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட, அதை எதிர்த்து வழக்கு களும் தொடுக்கப்பட்டன. அடுத்து ஆகஸ்ட் மாதம், கோயில் சந்நிதியில் மீண்டும் தீப்பற்றியது. பக்தர் ஒருவர் ஏற்றிய சூடத்தால் தீப்பற்றியதாக விளக்கம் சொன்னது நிர்வாகம். இதற்கு இடையில், ‘ஆலய தீ விபத்தால் ஆட்சிக்கு ஆபத்து’ என்று தகவல் பரவ, ஆளுங்கட்சியினர் அலறியடித்து பரிகாரபூஜைகள் செய்தனர். மதுரைக்கு விசிட் அடித்த பிஜேபி விஐபிக்கள், “அனைத்துக்கும் அறநிலையத்துறையே காரணம். அந்தத் துறையையே கலைக்கவேண்டும்” என்று கோக்குமாக்குக் கோரிக்கை வைக்கவும் தவறவில்லை.

ஆக... கலைஞருக்குப் பின்னால் தலைவர் பதவிக்கு அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வரும் என எதிர்க்கட்சிகள் கனவு கொண்டிருக்க, ‘தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே’ என்ற முழக்கத்துடன் தலைவர் பதவியை ஏற்றார் ஸ்டாலின். அடுத்து அதிரடி செய்வார் என்று எதிர்பார்த்த அஞ்சாநெஞ்சரும் அமைதியாகி விட்டார். 'கனிமொழி போர்க்கொடி', 'உதயநிதி அடுத்த வாரிசா', 'கூட்டணிக் குழப்பமா' என்ற சர்ச்சைகளைத் தவிடுபொடியாக்கி, ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆட்சிக்கு எதிராகப் பேசியவர்களையெல்லாம் தேசவிரோதிகள் என முத்திரை குத்திச் சிறையிலடைத்தது தமிழக அரசு. ‘தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’ என ஐ.நா வில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். நிலத்தடி நீர் பாதுகாப்புப் போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பியபோது முகிலன் கைது செய்யப்பட்டார். அவர்மீது தேசத் துரோக வழக்கும் போடப்பட்டது.

தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து `பாசிச பாஜக ஓழிக' எனப் பறக்கும் விமானத்தில் முழக்கமிட்டார் தூத்துக்குடி ஷோபியா. இதையடுத்து தமிழிசை புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார் ஷோபியா. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களும் கைதுக்குக் கண்டனம் தெரிவிக்க, பிறகு விடுவிக்கப்பட்டார். கனடாவில் ஆராய்ச்சிப்படிப்பு படித்துவரும் ஷோபியா இப்போது தமிழிசை தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

மதுரையில் ராஜ்யம் நடத்திய அழகிரி, சென்னையில் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு, கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை சேர்த்துக்கொள்ளப்படாத அழகிரி, செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாகவும், ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார். சொன்னது போலவே, சென்னை அண்ணா சாலை அருகிலிருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி ஊர்வலம் நடத்தினார். லட்சம் பேர் வரவில்லை; லட்சியமும் நிறைவேறவில்லை.

தடை செய்யப்பட்ட குட்காவைத் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள், எனப் பலரும் லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி பலரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஏதேதோ நடக்குமென்று மாநிலமே எதிர்பார்க்க, இன்று வரை எல்லோரும் பதவிகளில் ஹாயாகத் தொடர்கின்றனர்.

தமிழகச் சிறைச்சாலைகள், குற்றவாளிகளின் சொகுசு பங்களாக்களாக இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. புழல் சிறையில் கஞ்சா, செல்போன், மெத்தை, டிவி என சகல வசதிகளோடு சில கைதிகள் இருக்கிற வீடியோக்கள் வைரல் ஆக, அலறியது அரசு, சிக்கியது சிறைத்துறை. கோவை, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மத்திய சிறைகளில் ‘ஆய்வுகள்’ நடந்தன. கடைசியில் புழல் சிறையில் பணியாற்றும் ஐந்து அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு!

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார் வைரமுத்து. அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தெரிவித்திருப்பதாகக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து “ஆண்டாளை அவமதித்த வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தமிழக பா.ஜ.க போராட்டங்களை நடத்தியது. ”சோடாபாட்டில் வீசுவேன்” என்று ஜீயர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். வைரமுத்து வருத்தம் தெரிவித்தபிறகே ஆண்டாள் அலை அடங்கியது.

அடங்கவில்லை ஆணவக்கொலை. சமீபத்திய உதாரணம், ஓசூரைச் சேர்ந்த நந்தீஸ்– சுவாதி காதல் தம்பதியினரின் பரிதாப முடிவு. நந்தீஸ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் சுவாதி வீட்டில் எழுந்த எதிர்ப்பை மீறி, இருவரும் திருமணம் செய்து வாழ்ந்தனர். விடவில்லை சாதி வெறி. மணம் முடிந்த ஓரிரு மாதங்களிலேயே காவிரி ஆற்றுப் படுகையில் இருவரும் அழுகிய நிலையில் பிணமாக கரையொதுங்கினர். சுவாதி 3மாதம் கர்ப்பம் என்று தெரிந்தும், மூன்று உயிர்களையும் கொன்றுதீர்த்தது சாதியக் கொடூரம்.

ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கைகளோடு ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். `ஏன் ஆசிரியர் பிரச்னையில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை' என நீதிமன்றமும் கேள்வி எழுப்பி எடப்பாடி அரசை எச்சரித்தது. ஆனால் இதுவரை கேள்விக்கும் பதில் இல்லை; போராட்டத்துக்கும் முடிவில்லை.

ரயிலில் ஓட்டை போட்டு, 5.78 கோடி ரூபாயைத் திருடிய வடமாநிலக் கொள்ளையர்கள் இருவரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாசாவின் உதவியோடு காவல்துறை கண்டுபிடித்தது. இந்தச் சம்பவத்தில் 5 பேருக்கு நேரடியாகவும் 8 பேருக்கு மறைமுகமாகவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவம் நடந்த சில மாதங்களில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால் வங்கி அதிகாரிகள் உதவியோடு நோட்டுகளை மாற்றியதும், அந்தப்பணத்தில் சொத்துகளை வாங்கிக்குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது!

தீபாவளிக்கே வேட்டு வைத்தது, உச்சநீதிமன்றம். பட்டாசு தயாரிக்கத் தடையில்லை; ஆனால், இரண்டு மணி நேரம்தான், பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மத்தாப்பு கொளுத்த, இந்தியா முழுக்கவே எதிர்ப்புகள் கிளம்பின. காலை 6 டு 7, மாலை 7 டு 8 எனப் பட்டாசு வெடிக்க ஸ்லாட் போட்டுக்கொடுத்தது தமிழக அரசு. தடையை மீறியதாக 700க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருந்தாலும், தடைசெய்யப்பட்ட நேரங்களிலும் மக்கள் ஆவேசமாக பட்டாசுகளை வெடித்துத் தடை உத்தரவை புஸ்வாணமாக்கினார்கள்.

ஏழு பேர் விடுதலை இன்னும் இழுத்துக் கொண்டிருக்க, வேளாண் பல்கலை கல்லுாரி மாணவர்கள் பஸ்சை எரித்து, மூன்று மாணவியர் மரணத்துக்குக் காரணமான அ.தி.மு.க.வினர் மூவரும் சத்தமின்றி விடுதலை செய்யப்பட்டனர். இவர்களும், அவர்களைப் போல துாக்குத்தண்டனையில் தப்பி ஆயுள் கைதியானவர்களே. பத்தாண்டு சிறையில் இருந்தோரை, எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் விடுதலை செய்து விட்டு, 18 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களுக்காக ஆளுநருக்கு கடிதம் மட்டும் எழுதி விட்டு, இரட்டை முகம் காட்டியது எடப்பாடி அரசு.

தலை விரித்தாடும் சாதிக் கொடுமைக்கு உலகம் அறியா பிஞ்சுக்குழந்தை ஒன்று பலியானது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த தலித் சிறுமி ராஜலட்சுமியை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவன் வீடு புகுந்து தலையைத் துண்டித்துக் கொலை செய்தவனை, அவனின் மனைவியே கூட்டிச் சென்று காவல்துறையில் ஒப்படைத்தார்.

`இந்தியாவையே தாக்கிய `மீடூ’ புயல் தமிழகத்தையும் விடவில்லை. ஆண்டின் ஆரம்பத்தில், ``சென்னையில் உள்ள நடனப்பள்ளி உரிமையாளர், எனக்கு பாலியல் தொல்லை தந்தார்” என்று நடிகை அமலாபால் ஆரம்பித்து வைத்தார். அப்போது அதிக கவனம் பெற்றிடாத மீடு, அக்டோபரில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்துமீது எழுப்பிய புகார்களுக்குப் பிறகு கவனம் ஈர்த்தது. அதுவரை அச்சத்தில் மௌனித்திருந்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை சமூகவலை
தளங்களில் #Metoo ஹேஷ்டேக் போட்டு அம்பலப்படுத்தினர்.

ஆளுநர் அலுவலகத்தின் அதிகார மனோபாவம் ஊடகத்துறைக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் ஆசிரியர் கோபால், அதிரடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையிலிருந்து தரப்பட்ட புகாரின்பேரில், அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வைகோ கொந்தளித்து போராட்டடத்தில் இறங்கினார். கோபால் கைதில் காட்டப்பட்ட சட்டவிதி மற்றும் அவசரம் ஆகியவற்றைப் பரிசீலித்த நீதிபதி, 'இந்து' ராம் கருத்தையும் கேட்டு, நக்கீரன் கோபாலை விடுவித்ததோடு, அரசுக்கும் குட்டுவைத்தார்!

சர்க்கஸ் கதையானது... `சர்கார்' கதை. இது என்னுடைய `செங்கோல்' படத்தின் கதை எனறு உதவி இயக்குநர் வருண் கொடிபிடித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் அதை மறுத்தார். இறுதியில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் தலையிட்டு `வருண் சொல்வது உண்மையே' என்று அறிவித்தார். நீதிமன்றம் வரை சென்ற விவகாரம், இறுதியில் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு வந்தது. படம் வெளியாகி வருணுக்கு டைட்டில் கார்டில் நன்றி போட சுபம்!

டெல்டா மக்களுடைய வாழ்வையே புரட்டிப்போட்டது `கஜா' புயல். சோறுடைத்த சோழநாடு, வேரறுந்து வீழ்ந்தது. ஒரே இரவில் அத்தனையும் இழந்து தஞ்சையே ஒரு பிடிச் சோற்றுக்காகக் கையேந்தி நின்ற அவலக் காட்சிகள் கலங்கடித்தன. எப்போதும் போல `கஜா'விலும் அரசின் மெத்தனப்போக்கு தொடர, அன்பால் பல அமைப்புகள் உதவிக்கரம் நீட்டின. அரசின் அலட்சியத்தால் கோபத்தில் இருந்த மக்கள், அமைச்சர் ஓ.எஸ்.மணியனையே விரட்டி அடித்தனர். எத்தனையோ உதவிகள் வந்தபோதும் இன்னும் தீர்ந்தபாடில்லை டெல்டா சோகம்.