2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 - டாப் 10 மனிதர்கள்

2018 - டாப் 10 மனிதர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2018 - டாப் 10 மனிதர்கள்

2018 - டாப் 10 மனிதர்கள்

2018 - டாப் 10 மனிதர்கள்
2018 - டாப் 10 மனிதர்கள்

விதைக்கப்பட்டவர்கள்  - தூத்துக்குடி போராளிகள்

ப்புக்காற்று வீசும் பூமியில் உதிரம் சிந்தப்பட்டது, இந்த ஆண்டின் துயரம் மட்டுமல்ல, இனி காலத்தால் அழிக்க முடியாத களங்கம்; 2018, மே 22 - இந்த நாள், தமிழ் வரலாற்றில் ரத்தத்தால் சிவந்த கறுப்பு நாள். இத்தனைக்கும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களும் சரி, தூத்துக்குடியில் போராடியவர்களும் சரி, கேட்ட தெல்லாம் என்ன? சுவாசிக்க சுத்தமான காற்று, உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம்... அவ்வளவுதான்.  99 நாள்கள் வரை அமைதியாகத்தான் நடந்தது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம். நூறாவது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைக் காரணம் காட்டி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தங்கள் நிலத்தையும் கடலையும் காற்றையும் பாழ்படுத்தும் ஒரு நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறை 13 உயிர்களைக் குடித்து அடக்கியது.  களத்தில் நின்றவர்கள், உத்வேகத்தில் போராடச் சென்றவர்கள், ஆர்வத்தில் உடன் சென்றவர்கள் என அடக்குமுறைக் குண்டுகளுக்கு இரையான 13 உயிர்களும் தூத்துக்குடியின் பிரச்னையை உலகப் பிரச்னையாகக் கொண்டு நிறுத்தினர். ‘தீவிரவாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்கள், சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்’ என்று போலீஸும் அரசும் கூறியவை பொய்யில் நனைத்த வார்த்தைகள் என்பதற்கு உதாரணம், 17 வயது மாணவி ஸ்னோலின் மரணம். அவரோடு கார்த்திக், மணிராஜ், கந்தையா, தமிழரசன், ரஞ்சித்குமார், ஜெயராமன், செல்வ சேகர், காளியப்பன், சண்முகம், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். அரசு வன்முறை அம்பலப்படுவதற்குக் காரணமான, வீரஞ்செறிந்த மக்கள் போராட்டத்துக்கு விதையான இந்தத் தியாகிகள், தமிழகம் மறந்துவிடக்கூடாத வரலாற்று நாயகர்கள்.

2018 - டாப் 10 மனிதர்கள்

உயிர்ப்புமிக்க அறிவுஜீவி - அ.மார்க்ஸ்

கா
ல் நூற்றாண்டாக மனித உரிமைகளுக்காகப் போராடும் களப்போராளி. ஆணவக்கொலைகள். சாதி மோதல்கள், துப்பாக்கிச்சூடு, மதக்கலவரங்கள், லாக்கப் மரணம், போலி என்கவுண்டர்கள், பொய் வழக்குக் கைதுகள் என அநீதிகள் எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் அ.மார்க்ஸின் உண்மையறியும் குழு சென்று மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும். தமிழகம் மட்டுமல்ல, காஷ்மீர், இலங்கை, அயோத்தி என வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்துப் பதிவுகள் செய்தவர். இவர், வெறும் செயற்பாட்டாளர் மட்டுமல்லர். தமிழின் முக்கியமான எழுத்தாளர், கோட்பாட்டாளர், இலக்கிய விமர்சகர்.

 மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய அந்தோணிசாமி என்கிற ராமதாஸ், அ.மார்க்ஸின் அப்பா. இயல்பிலேயே இடதுசாரி இயக்கப் பரிச்சயம் இருந்ததால் மார்க்சியம் சார்ந்தும் பல்வேறு சிந்தனைகள் சார்ந்தும் அ.மார்க்ஸ் எழுதிய நூல்கள் நூற்றைத் தாண்டும். தனக்கென்று ஓர் கருத்தியல் இருந்தாலும், தவறுகள் என்று தான் கருதுவதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவர். அதனால் இடதுசாரிகள், பெரியாரியர்கள், தமிழ்த்தேசியவாதிகள், தலித்தியவாதிகள், சிறுபான்மையினர் என நட்புச்சக்திகளால் விமர்சிக்கப்பட்டாலும் தான் நம்பும் கருத்தை உறுதியாய் வலியுறுத்துபவர். மார்க்சியம், மனித உரிமைகள், மதவாத எதிர்ப்பு, சிறுபான்மையினர் ஆதரவு, சாதி எதிர்ப்பு, பண்பாட்டு அடிப்படைவாத எதிர்ப்பு, பெண்ணியம், மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம், கல்விப் பிரச்னைகள், உலகமயமாக்கல், காந்தியம் என்று அ.மார்க்ஸ் அறியாத களங்கள் குறைவு. தன் தோழர்களுடன் இணைந்து இவர் நடத்திய  ‘நிறப்பிரிகை’ இதழ், தமிழ் அறிவுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். குறையாத ஊக்கத்துடன் தொடர்ந்து போராடும் அ.மார்க்ஸ் தமிழ் வரலாற்றில் தவிர்க்க முடியாத சிந்தனையாளர்.

2018 - டாப் 10 மனிதர்கள்

வரலாற்றின் தடயம் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

 சி
ந்துவெளிச் சமூகநாகரிகத்துக்கு இணையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை அகழ்வாய்வுகள் மூலம் அழுத்தமாய் நிறுவியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.  சிவகங்கை மாவட்டம், வைகைக் கரைக் கிராமமான கீழடியில் அவர் நடத்திய அகழ்வாய்வு, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதச்செய்யும் வலுமிக்க ஆதாரங்களை அள்ளித்தந்தது. தமிழ்ச் சமூகத்தின் பெருமிதத்துக்குச் சான்றாக,  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பொருள்கள் அங்கு மீட்கப்பட்டன. அவையெல்லாம் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதற்குப் பரிசாக மத்திய அரசு வழங்கியது, அசாமுக்குப் பணிமாறுதல். ஆனால் ‘அமர்நாத்தான் கீழடி அகழாய்வுப்பணிகளைத் தொடர வேண்டும்’ என்று பலரும் கோரிக்கையுடன் கோர்ட் வாசல் ஏறினார்கள். தமிழர் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களைத் தொடர்ந்து வெளிக்கொணர உழைக்கும் அமர்நாத், தமிழருக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்!

2018 - டாப் 10 மனிதர்கள்

கதாவிலாசன் - எஸ்.ராமகிருஷ்ணன்

வீனத் தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன். உலக இலக்கியங்களில் தீவிர வாசிப்பும் இலக்கற்ற பயணங்களுமாக இந்திய வரைபடத்தில் ரேகைகளாய் நெளிந்தோடும் அத்தனைப் பாதைகளையும் நடந்து அறிந்த தேசாந்திரி. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், சிறார் நூல்கள், சினிமா கட்டுரைகள் என எழுத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் கையாள்பவர். ‘அட்சரம்’ எனும் இலக்கிய இதழை நடத்தியவர். தமிழ் தொடங்கி உலக இலக்கியம் வரை பல மணி நேரங்கள் இடைவிடாது உரையாற்றும் பேச்சாற்றல் கொண்டவர். ‘சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், தீராத இலக்கியத் தேடலின் அடையாளம்.

2018 - டாப் 10 மனிதர்கள்

களம் நிற்கும் கலைஞன் - பிரகாஷ்ராஜ்

ன் அபார நடிப்பாற்றலால் எப்போதோ தமிழ்நாட்டின் செல்லமானவர். இன்று, கலையைத் தாண்டியும் கருத்துச்சுதந்திரம் காக்க களமிறங்கியிருக்கிறார்.கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு மதவாத பாசிசத்துக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகிறார் பிரகாஷ்ராஜ். கர்நாடகத்தில் இடதுசாரிகள், தலித் அரசியலாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து மாற்று அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். இவருடைய செயற்பாடுகளால் இந்துத்துவ பயங்கரவாத இயக்கம் ஒன்றின் கொலைப்பட்டியலிலும் இருக்கிறார். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாகச் சொல்லும் மீ டூ இயக்கத்தைத் திரையுலகில் பல நடிகர்கள் எதிர்த்தாலும் உறுதியாக அதை ஆதரித்தவர் பிரகாஷ்ராஜ். ‘கேள்வி கேளுங்கள்’ என்னும் இயக்கத்தைக் கர்நாடகத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்ததில் பிரகாஷ்ராஜுக்குக் கணிசமான பங்குண்டு. கருத்துரிமைக்காகத் தொடர்ந்து ஒலிக்கும் பிரகாஷ்ராஜின் குரல், காலத்தின் குரல்!

2018 - டாப் 10 மனிதர்கள்

ஜனநாயகன் - விஜய் சேதுபதி

மிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்டிய கலைஞன். 2018 - நல்ல நாள் பார்த்துவைத்த நகைச்சுவைப் பொங்கல் , ‘ஜுங்கா’ காமெடி மங்காத்தா, இழந்த காதலின் மென் நினைவுகளைக் கிளறிவிடும் ‘96’, கலைஞனின் அர்ப்பணிப்பு பகிர்ந்த ‘சீதக்காதி’ என்று விஜய்சேதுபதி விருந்து படைத்த ஆண்டு. திரைக்கு வெளியே சேதுபதிக்கு இன்னொரு முகமுண்டு. அது சமூக உணர்வுள்ள கலைஞன் என்ற அழகிய முகம். ஒப்பனைகளுக்கு அப்பால் அது உண்மை முகம். ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சிக்குரல் கொடுத்தது, அனிதாவின் தற்கொலைக்குக் கலங்கி, தமிழர்களின் கல்வி உரிமையை அழிக்கும் நீட்டுக்கு எதிராய்ப் போர்க்கொடி எழுப்பியது, பொறுக்க முடியாத விஷயமென்றால் அரசுக்கு எதிராகவும் போர்க்குரல் ஒலிப்பது, விளம்பர வருவாயை ஏழைக் குழந்தைகளின் கல்விப்பணிக்கு ஒதுக்கியது என எல்லாவற்றிலும் தன் சமூக அக்கறையை ஆழமாக விதைத்தவர் மக்களின் செல்வன். சாதிப்பிரிவினைகளுக்கு எதிராகவும் உரத்து ஒலிக்கும் குரல் விஜய் சேதுபதியுடையது. ஒரு நல்ல கலைஞனாய், சமூக உணர்வுள்ள மனிதனாய்த் தன்னை அடையாளப்படுத்தும் விஜய் சேதுபதி, தமிழ் இளைஞர்களுக்கான  சிறந்த முன்னுதாரணம்.

2018 - டாப் 10 மனிதர்கள்

மண் காக்கும் மனிதர் - ஈஞ்சம்பாக்கம் சேகர்

துப்புநிலங்கள் காக்க சமரசமின்றிப் போராடும் போராளி ஈஞ்சம்பாக்கம் சேகர். தமிழகம் முழுவதும் வறட்சியில் சிக்கினாலும் சதுப்பு நிலங்கள் சேகரித்து வைக்கும் நீரை வைத்து சென்னை பிழைத்துக்கொள்ளும். ஆனால் குப்பைகளைக் கொட்டவும், தீம் பார்க்குகள் கட்டவும் நாம் எடுத்துக்கொண்டவை சதுப்பு நிலங்கள்தாம். ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர், சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்துத்தான் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார். பல தொழிலதிபர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும்  எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று, பல முக்கியமான தீர்ப்புகளை வாங்கியிருக்கிறார். வீட்டுக்குள் பாம்புகளை விடுவது, வாகனங்களை எரிப்பது எனத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தாலும் பயப்படாமல் பணி தொடர்கிறார். இவரைப் போன்ற மனிதர்களால்தான் இயற்கை வளங்கள் இன்னமும் எஞ்சி நிற்கின்றன.

2018 - டாப் 10 மனிதர்கள்

சிக்ஸர் சீனியர் - தினேஷ் கார்த்திக்

16
ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் பயணம், இப்போது உயரம் தொட்டு உச்சம் எட்டியிருக்கிறது.  இந்த ஆண்டு நடந்த நிதாஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில்  வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில்  எட்டே பந்துகளில் 29 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து எல்லோரையும் சிலிர்க்க வைத்தவர். சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தபின்னும் தமிழ்நாட்டுக்காக விக்கெட் கீப்பராக இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தினேஷ் தளபதிதான்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் சூப்பர் ஹிட் கேப்டன் தினேஷ் கார்த்திக். ஒருமுறை தேசிய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டாலே  துவண்டுபோகும் வீரர்களுக்கு மத்தியில், ஒவ்வொரு முறையும் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திக். 2019 உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில், தினேஷ் கார்த்திக்குக்காகக் காத்திருக்கிறது தவிர்க்க முடியாத ஓர் இடம்!

2018 - டாப் 10 மனிதர்கள்

அறச்சுவடி - உமா வாசுதேவன்

ண்ணகி நகரில் சூப் கடை நடத்திவருபவர் உமா. படித்தது 6-ம் வகுப்பு வரை மட்டுமே. ஆனால், மூன்று ஆசிரியைகளை சம்பளத்துக்குப் பணியில் அமர்த்தி 300 மாணவர்களுக்கும் மேல் கண்ணகி நகரில் பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறார். சைதாப்பேட்டை, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை எனச் சென்னையின் எல்லாப் பேட்டைகளிலிருந்தும் பெயர்த்தெடுக்கப்பட்டு, கண்ணகி நகரில் ஏழைமக்கள் குடியமர்த்தப்பட்டதில் பல நூறு குழந்தைகள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி உமா வலியுறுத்த, பெரும் மாணவர் கூட்டம் மீண்டும் பாடப்புத்தத்தின் வாசனை உணர்ந்திருக்கிறது. உமாவின் பயிற்சி வகுப்புகள் மூலம் ப்ளஸ் 2 படித்த 25 மாணவர்கள் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்றுக் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார்கள். சூப் கடை மற்றும் கணவர் வாசுதேவனின் ஆட்டோ வருமானத்தில் இவ்வளவையும் செய்துவரும் உமாவின் பெருங்கனவு, கண்ணகி நகர்ப் பகுதிகளில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில், பல ஆயிரம் சம்பளத்தில் தங்கள் பகுதி மாணவர்களும் வேலை பார்க்கவேண்டும் என்பதே.

2018 - டாப் 10 மனிதர்கள்

சேவை செவிலியர் - சாந்தி அருணாசலம்

ருத்துவத்தை வெறும் பிணிபோக்கும் பணியாக மட்டுமல்லாமல் பிரியத்துக்குரிய பணியாக ஆக்கிக்கொண்டவர் செவிலியர் சாந்தி அருணாசலம். கடந்த 25 வருடங்களாக சென்னை மனநல மருத்துவமனைக் காப்பகத்தில் பணிபுரியும் செவிலித்தாய் சாந்தி அருணாசலம். மனநலப் பிரச்னை குணமாகியும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லாமல் உள்ளேயே இருக்கும் பலருக்கு சாந்திதான் தாய், தங்கை, அம்மா, அப்பா; கடவுள் எல்லாம். மூர்க்கமாகி அவர்கள் தன்னை அடிக்க வந்தாலும், அன்புடன் அணைக்க வந்தாலும் அவர்களை சாந்தி அணுகும் விதத்தைக் கண்டு மனநல மருத்துவர்களே வியக்கின்றனர். மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். சாந்திக்குத் தெரிந்த ஒரே உலகம் இந்த மருத்துவமனை நோயாளிகள்தான். அவர்களுக்குத் தெரிந்த ஒரே உலகமும் சாந்திதான்.