2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 - டாப் 10 இளைஞர்கள்

2018 - டாப் 10 இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
2018 - டாப் 10 இளைஞர்கள்

2018 - டாப் 10 இளைஞர்கள்

2018 - டாப் 10 இளைஞர்கள்
2018 - டாப் 10 இளைஞர்கள்

 இசையின் திசை
கோவிந்த் வஸந்தா


செண்டை மேளம் ஒலிக்கும் சேர நாட்டுக்காரர். ‘தைக்குடம் ப்ரிட்ஜ்’ என்னும் தனியிசைக் குழுவின் மூலம் இளைஞர்களை மயக்கிய இசைக்கலைஞன். தமிழில் ‘ஒருபக்கக் கதை’ படம் மூலம் அறிமுகமான இவருக்கு 2018, ஹாட்ரிக் ஹிட்டடித்த ஆண்டு. ‘அசுரவதம்’ படத்தில் பின்னணி இசையின் மூலம் கதையோட்டத்தின் திகிலைத் தொடர்ந்து தக்கவைத்தார். ‘96’ படத்தில் கோவிந்த் வசந்தா தீட்டியது இழந்துபோன உறவின், கலைந்துபோன கனவின் இன்னிசை. ‘சீதக்காதி’யில் நாடகக் காட்சிகளுக்கும், அதன்பின்னான காட்சிகளுக்கும் பின்னணி இசையில் வேறுபாடு காண்பித்து ரசிக்க வைத்தார். இசையால் இதயம் நனைத்த கோவிந்த் வஸந்தா, தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கை வரவு!

2018 - டாப் 10 இளைஞர்கள்

 போர்முரசு
இசை என்கிற ராஜேஸ்வரி

எல்லோருக்கும் இசை பிடிக்கும். ஆனால், இந்த இசைக்குப் போராட்டங்கள்தான் பிடிக்கும். மணற்கொள்ளைக்கு எதிராகக் களமாடும் களப்போராளி இவர். காவிரி ஆற்றங்கரைக்குப் பக்கத்தில் பிறந்து வளர்ந்தவர், மணல் கொள்ளையைக்கண்டு ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தார். ‘காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு முழுவீச்சில் இயங்கிவருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மணல் குவாரிகளில் 10 மூடப்பட்டதில் இசையின் பங்களிப்பு முக்கியமானது. நூறு வருடப் பழைமைவாய்ந்த ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிராக, மீனவர் பிரிட்ஜோவைச் சுட்டுக்கொன்றதற்கு எதிராக, நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளம் எனப் பல போராட்டங்களிலும் உரத்து ஒலிக்கிறது இசையின் முழக்கம்.

2018 - டாப் 10 இளைஞர்கள்

குறுஞ்சித்திரன்
சந்தோஷ் நாராயணன்


இரண்டே அடிகளில் உலகை அளந்த வள்ளுவர் வழியில் மினிமலிச ஓவியங்கள் மூலம் உலகை அளந்துகொண்டிருக்கும் கலைடாஸ்கோப் கலைஞன், சந்தோஷ் நாராயணன். புத்தகக் கண்காட்சியின் புதிய வரவான புத்தகங்களில் கணிசமான புத்தகங்களின் அட்டையை சந்தோஷ் நாராயணன்தான் வடிவமைக்கிறார். புத்தகங்களின் அட்டைப்படம், திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  வாட்டர் கலர் பெயின்டிங் என ஓவியத்தின் பன்முகப் பரிமாணங்களில் ‘ஹிட்’ அடித்தவர்.  சச்சினின் சாதனைகளை வைத்து உருவாக்கிய கான்செப்ட் ஆர்ட், சச்சினால் பாராட்டப்பட்டது சந்தோஷ் நாராயணனின் சந்தோஷத் தருணம். ஓவியம் மட்டுமன்றி பாரம்பர்ய வாழ்வு முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த உரையாடல்களை முன்னெடுப்பதிலும் முன்னணியில் நிற்கிறார் சந்தோஷ் நாராயணன். 

2018 - டாப் 10 இளைஞர்கள்

 குழந்தைகள் கூட்டாளி
இனியன்


விளையாட்டுப் பிள்ளைகள் பலர் உண்டு. ஆனால் பிள்ளைகளின் விளையாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட குழந்தைகள் செயற்பாட்டாளர் இனியன். ‘பல்லாங்குழி’ எனும் அமைப்பை நடத்திவருகிறார். தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து, நாம் மறந்துபோன பாரம்பர்ய விளையாட்டுகளை அவர்களோடு இணைந்து ஆடுகிறார்.150க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளின் உலகில் அவரை நுழைய வைத்தது, ஒரு விஷப்பூச்சி. சில வருடங்களுக்கு முன், தூங்கிக்கொண்டிருந்த இனியனின் கையில் விஷப்பூச்சி ஒன்று கடித்துவிட,  விஷம் ஏறிய கையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைகள் நடந்தபிறகு, 15 நாள்கள் உலகத்தொடர்பே அற்று, கோமாவில் கிடந்தார். இயல்பு நிலைக்குத் திரும்பியவர், இனி, குழந்தைகளுக்கான செயல்பாடே தன் வாழ்வின் பணி என்று முடிவெடுத்து, இயங்கிவருகிறார். அப்போது ஆரம்பித்த பயணம் 125க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைத் தாண்டியும் நீண்டுகொண்டிருக்கிறது. 

2018 - டாப் 10 இளைஞர்கள்

நீதியின் குரல்
அருள்தாஸ்


அநீதிக்கு எதிராய்ப் போராடுவர்களின் ஆத்மார்த்த தோழன் அருள்தாஸ். தமிழகத்தில் எங்கெல்லாம் கொத்தடிமைமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் ஊடகங்களின் உதவியோடு அருள்தாஸ் கொத்தடிமைகளை மீட்டெடுத்த கதைகள் ஏராளம். 25 இளைஞர்களுடன் குடிக்கு எதிராக, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம், பழங்குடிகள் கிராமங்களுக்குச் சென்று அவர்களுக்கான நிலமும் பட்டாவும் வாங்கித் தருதல், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக உதவி பெற்றுத் தருவது, இரண்டாயிரம் முறைக்குமேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பல விஷயங்களை ஆவணப்படுத்தியது என நீண்டுகொண்டே போகின்றன அருள்தாஸின் களச்செயல்பாடுகள்.

2018 - டாப் 10 இளைஞர்கள்

 இதயம் தொடும் இணையம்
பிளாக் ஷீப்


யூடியூப் சேனல்களில் பிளாக்‌ ஷீப் கொஞ்சம் தனித்துவமானது. ‘ஃபன் பண்றோம்’, ‘நாட்டி நைட்ஸ்’ என்று கலகல பக்கங்கள் ஒருபக்கம் என்றால், `விக்கிலீக்ஸி’ல்  ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசல் என்று மக்கள் பிரச்னைக்குக் குரல்கொடுப்பது முதல் பாலியல் கல்வி வரை காணொலிகளில் சிரிப்பும் சீரியஸும்தான் இவர்கள் அடையாளம். சின்னத்திரைக்கு நிகராக, தீபாவளியின்போது யூடியூப் செலிபிரிட்டிகள் பலரையும் ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளை இணையத்தில் ஒளிபரப்பிக் கவனிக்கவைத்தார்கள். பேரிடர் நேரங்களில் களப்பணிகளிலும் கைகோக்கிறார்கள்.  ‘நவயுக ரத்தக்கண்ணீர்’ என்று மேடைநாடகத்திலும் கால்பதித்துக் கைத்தட்டல் வாங்கினார்கள். இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெள்ளித்திரையிலும் களமிறங்கியிருக்கும் ப்ளாக்‌ ஷீப்க்குக் காத்திருக்கிறது பெரிய எதிர்காலம்.

2018 - டாப் 10 இளைஞர்கள்

 அறிவியல் தூதன்
 பிரேமானந்த் சேதுராஜன்

அறிவியல் என்றால் மிரண்டு ஓடியவர்களைத் தனது யூடியூப் சேனலின் முன் கட்டிப்போட்டவர் பிரேமானந்த். ’Let’s Make Engineering Simple’ எனப் பொறியியலையும் அறிவியலையும் எளிய தமிழில் சுவாரஸ்யமாய்ச் சொல்வது இவர் சிறப்பு. இணையத்தில் மட்டுமன்றி களத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான முன்னெடுப்பில் தமிழகம் முழுவதும் பயணிக்கிறது இவரின் குழு. கோடையில் குழந்தைகளுக்கு அறிவியல் முகாம், பள்ளிதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான பயிற்சிகள் என அடுத்த தலைமுறையிடம் அறிவியலைக் கொண்டு செல்வதில் இவரது முனைப்பு பாராட்டுக்குரியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க வேலையை உதறிவிட்டு வந்த பிரேமானந்த் இன்று தன் தாய்மண்ணில் அறிவியல் ஆர்வத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்.

2018 - டாப் 10 இளைஞர்கள்

தற்சார்பு தமிழச்சி
நிவேதா


பன்மெய்ப்புல சவால் கொண்ட குழந்தை நிவேதா. கேட்கும், பேசும் திறன் குறைவு, காலூன்றிச் சரியாக நடக்க முடியாது, உடலில் தொடர்ச்சியான நடுக்கம் என பல சவால்கள். ஒன்றரை வயதில் இந்த உடல்பிரச்னைக்குள்ளான நிவேதாவுக்கு இப்போது இருபத்தெட்டு வயது. தனிமையிலும் மன அழுத்தத்திலும் இருந்தவர் ஒருகட்டத்தில் அதிலிருந்து வெளியேற என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டில் நாம் பயன்படுத்திக் குப்பைத்தொட்டியில் வீசும் பொருள்களைக் கலைப்பொருள்களாக மாற்றத் தொடங்கினார். National Institute for Empowerment of Persons with Multiple Disabilities என்ற மத்திய அரசு அமைப்பு, நிவேதாவைத் தற்சார்புத் திறனாளியாக தேசிய அளவில் அங்கீகரித்துக் கௌரவித்திருக்கிறார்கள். தன்னைப்போல உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, பல தரப்பினர்க்கும் பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் நிவேதா.

2018 - டாப் 10 இளைஞர்கள்

 அறம் செய்யும் அட்சயம்
நவீன்


பிச்சைக்காரர்கள் மீது கவனம் செலுத்தும் கருணை மனிதர் திருச்சியைச் சேர்ந்த நவீன். ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் தெருக்களில், சாலையோரங்களில் ஆதரவற்றுச் சுற்றியலைந்த, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட யாசகர்களைச் சந்தித்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறார். வேலையில் சேர்த்துவிடுவதற்கான ஏற்பாடுகள், அவர்களின் குடும்பத்தினரைக் கண்டறிந்து சேர்த்து வைப்பது என நவீனால் மறுவாழ்க்கை அடைந்த யாசகர்களின் எண்ணிக்கை இதுவரை 237. தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, இந்த சேவையையும் தொடர்கிறார். இதற்காகவே ‘அட்சயம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நிறைய இளைஞர்களை அதில் சேர்த்து இயங்குகிறார் நவீன்.

2018 - டாப் 10 இளைஞர்கள்

இரட்டைக்குரல் துப்பாக்கி
விவேக் - மெர்வின்


‘ஒரசாத’ என்ற ஒற்றைப்பாடல் மூலம் கேட்பவர்களின் உள்ளங்களையும் உயிரையும் உரசிப்போனவர்கள் விவேக் - மெர்வின் என்னும் இரட்டையர்கள். பெரும் நட்சத்திரங்களின் படப்பாடல்கள் யூடியூபில் மூன்று கோடி ஹிட்ஸ் பெற்ற அதே ஆண்டில், இவர்களின் ‘ஒரசாத’ பாடல் யூடியூபில் மட்டும் ஐந்து கோடியைத் தொட்டிருக்கிறது. தமிழர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிகம் இடம்பெற்றது ‘ஒரசாத’ தான். எந்த உச்ச நட்சத்திரங்களும் இல்லாமல், பெரிய விளம்பரங்கள் இல்லாமல் கடைக்கோடி கிராமங்கள் வரை இணையம் மூலம் சென்றடைந்த இவர்கள், தனியிசைக் கலைஞர்களுக்குத் தந்த நம்பிக்கை மிகப்பெரியது. 2018ன் தொடக்கத்தில் இவர்கள் இசையில் வெளியான படம் ‘குலேபகாவலி’. இப்போது கல்லூரிக் கலை நிகழ்ச்சிகளில்  தவறாமல் ஒலிக்கும் தாளம், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குலேபா’தான். ஜென் இஸட் இளைஞர்களின் இசை ரசனையைச் சரியாகப் புரிந்துகொண்ட இந்த இரட்டையர்கள் இனி வரும் காலங்களில் படைக்கப்போகும் இசை சாம்ராஜ்யம் அந்த இளைஞர்களுக்கானது.