2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 - டாப் 25 பரபரா

2018 - டாப் 25 பரபரா
பிரீமியம் ஸ்டோரி
News
2018 - டாப் 25 பரபரா

2018 - டாப் 25 பரபரா

2018 - டாப் 25 பரபரா
2018 - டாப் 25 பரபரா

சிரிப்பு சே - காமெடி காஸ்ட்ரோ

இந்த ஆண்டும் தமிழகத்தைக் கலக்கியது இந்த ஜோடிதான். காமெடியன்களாகத் தங்களைப் பார்த்தவர்களை பயமுறுத்தத் தூத்துக்குடியில் இவர்கள் காட்டிய கோர முகம் ரொம்பவே காயப்படுத்த, விமர்சனங்களால் உரித்துத் தொங்கவிட்டார்கள் மக்கள். அதிலிருந்து மீள்வதற்குள், ‘ஓ.பி.எஸ் எங்களோடு வருவதாகச் சொன்னார்’ எனப் பற்ற வைத்தது தினகரன் தரப்பு. ‘இது டெல்லி அனுப்பிய ஸ்க்ரிப்ட்லேயே இல்லையே பங்காளி?’ என எடப்பாடி எகிற, சிதறிப் பதறி பிரஸ்மீட் வைத்தார் பன்னீர். ‘எடப்பாடி - ஓ.பி.எஸ்தான் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ - சே’ என ஜெயக்குமார் கூவ, ‘பேசாம போறியா, இல்ல சுருட்டால வாயிலேயே சூடு வைக்கவா?’ என எச்சரித்துவிட்டுப்போனது சேகுவேராவின் ஆரா. கஜா புயல் பாதித்த பகுதிகளை எடப்பாடி ஹெலிகாப்டர் ரைடு போய்ச் சுற்றிப் பார்க்க, பற்றிக்கொண்டுவந்தது பொதுஜனத்துக்கு. ‘அட நீங்க என்ன திட்டுறது? நாங்களே போட்டுப் பாத்துக்குவோம்’ என  வெளியே வீக்கம் தெரியாதவாறு மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள் இருதரப்பும்!

2018 - டாப் 25 பரபரா

அது இது எது

சூரியன் உதிக்க மறந்தாலும், நட்சத்திரங்கள் மின்ன மறந்தாலும், பூமி சுழல மறந்தாலும் அதிமுக அமைச்சர்கள் தாங்கள் மங்குனி அமைச்சர்கள் என்பதை மணிக்கொரு முறை  நிரூபிக்க மறப்பதில்லை. “கஜா புயலால் சூறையாடப்பட்ட மின்கம்பங்களை விமானம் மூலம் நடவேண்டும்”, “குடிநீர்ப் பிரச்னை தீர நான்கு புயல்கள் மக்களுக்கு பாதிக்காத வகையில் ஏற்பட்டாலே போதும்”, “ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தைத்தான் டி.டி.வி செலவு செய்துவருகிறார்” என ‘ஆயிரம் உளறல்கள் செய்த அபூர்வ சிகாமணி’யான திண்டுக்கல் சீனிவாசன், சென்ற வருடமும் பல `அடடே’க்களை அள்ளியெறிந்தார். முந்தைய வருடங்களில் “இட்லி சாப்பிட்டார்”, “பாரதப் பிரதமர் எம்.ஜி.ஆர்”, “பிரதமர் மன்மோகன் சிங்” என உளறிக்கொண்டிருந்தவர், சென்ற வருடம் உருட்டியது புதுரக உருட்டு. திண்டுக்கல் வாயில் போடவேண்டும் பூட்டு! “அதிமுகவைத் தவறாக விமர்சித்தால் நாக்கை அறுத்துவிடுவேன்” என சீரியஸாக ஆரம்பித்து, எடப்பாடியை ‘சேலம் தாத்தா’ என காமெடியாக முடித்துத் தன் கோட்டாவை நிறைவு செய்தார் துரைக்கண்ணு. ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மானசீக சிஷ்யர் செல்லூர் ராஜுவோ “கமல் ஒரு கத்துக்குட்டி”,``ரஜினிக்கு வயசாகிடுச்சு”, “விஷால் நேற்று முளைத்த காளான்” எனத் திரைவிமர்சனம் செய்துகொண்டிருந்தார்!

2018 - டாப் 25 பரபரா

ஆளுக்கொரு கட்சி பார்சேல்ல்ல்!

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாம். தண்ணியே இல்லாத குட்டையில் மீன் பிடித்தால்? அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது மன்னார்குடிக் குடும்பம். வீட்டுக்கு வீடு நேம் போர்டு மாட்டுவதுபோல ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து இங்கி பிங்கி பாங்கி போட்டு விளையாடுகிறார்கள். ‘அக்க்க்கா... என்னக்க்கா’ என சண்முகசுந்தரம் போலப் பாச பட்டர் தடவி திவாகரன் ‘அண்ணா திராவிடர் கழகம்’ எனக் கட்சி தொடங்க, ‘ஃபர்னிச்சர் மேல கையை வச்ச... பிச்சுப்புடுவேன்’ எனக் கோப நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. மறுபக்கம் ஒரே படத்தை ஒன்பது ஆண்டுகளாக ரிலீஸ் செய்து வரும் பாஸ்(எ)பாஸ்கரன் ‘அண்ணா எம்.ஜி.ஆர் மக்கள் கழகம்’ எனக் கட்சி தொடங்கி ஆட்டத்தில் இணைந்தார். ‘இவங்ககிட்ட இருந்து அண்ணா, எம்.ஜி.ஆரைக் காப்பாத்துங்கய்யா’ எனக் கருணை மனு எழுதின ர.ரக்களின் கரங்கள். இன்னும் ‘என்னது, தோசைக்குத் தொட்டுக்க தக்காளிச் சட்னி பண்ணமாட்டியா?’, ‘பப்ஜி கேம் டவுன்லோடு பண்ண மொபைல் தரமாட்டியா?’ என அவர்கள் வீட்டுக் குட்டீஸ்கள் கட்சி தொடங்கக் கிளம்பிவராததுதான் மிச்சம்.  

2018 - டாப் 25 பரபரா

அஞ்சாநெஞ்சன் - அதிகாரம் ரெண்டு

ஆண்டின் முதல் பாதியில் சத்தம்காட்டாமலிருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பின் வழக்கம்போல ‘ஹேய்ய்ய்’ என பார்ட் டூ-க்கு இன்ட்ரோ கொடுத்தார். ஆனால் தமிழ்சினிமாவிலேயே பார்ட் டூ படங்கள் பப்படம் ஆகும்போது அரசியலில் வேலைக்காகுமா என்ன? நினைவிடத்தில் ‘என் பின்னாடிதான் கட்சியே இருக்கு தெரியுமா?’ என அவர் மூட்டிய கலகத்தில் ஸ்டாலினுக்கு எகிறியது பி.பி. சரியாக ஒருமாதம் கழித்து அவர் நடத்திய ஊர்வலத்தில் ‘கலந்துகிட்டது ஒருகோடிப்பே’ லெவலில் பில்டப்கள் கிளப்பிவிடப்பட, ‘அவரையெல்லாம் அப்படியே போகவிட்டுடணும்’ என நமட்டுச்சிரிப்பு சிரித்தார் ஸ்டாலின். அடுத்ததென்ன? போட்டிக்கூட்டம்தான். மதுரையில் அவர் அடுத்தடுத்து கூட்டிய ஆலோசனைக் கூட்டங்களில் அட்டென்டன்ஸ் கம்மியாகி ஒருகட்டத்தில் அவரே பெயர் வாசித்து அவரே ‘பிரசன்ட் சார்’ சொல்லத் தொடங்கினார். ‘இது வேலைக்காகாது. அட அடிப்படை உறுப்பினராவாவது ஆட்டைல சேர்த்துக்கோங்கய்யா’ என வெள்ளைக்கொடியை வேகமாய் ஆட்டினாலும் கண்டுகொள்ள ஆளில்லை.

2018 - டாப் 25 பரபரா

நான்தான்பா ரஜினிகாந்த்

எட்டு எட்டா பிரிச்சுக்கோ, மூன்றே மூன்று பருவம்தான் என எண்களை வைத்து வாழ்க்கைத் தத்துவம் சொன்ன ரஜினியை, அதே எண்கள் சென்ற ஆண்டு வெச்சி செய்தன. ஒன்லி ஒன், 2.0, 3டி, ஐந்து மாநிலத் தேர்தல், ஏழு பேர் விடுதலை, பத்துப் பேரும் பலசாலியும் என எண்கள் எட்டாம் இடத்தில் நின்று எடக்குமடக்காய் விளையாடின. `நடிகனாக என்னைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்’ எனத் தூத்துக்குடிப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க, சாத்துக்குடிப் பையோடு சென்றவரிடம், `யார் நீங்க’ என்ற ஒற்றைக் கேள்வியில் ரிட்டர்ன் டிக்கெட் போட்டுக்கொடுத்தனர் தூத்துக்குடி மக்கள். அப்படியே விமான நிலையம் வந்தவர், `போராட்டம் போராட்டம்னு போனா நாடே சுடுகாடு ஆகிடும்’ என்று கடுப்பில் உதிர்த்த சில வார்த்தைகள் கடுகாய் வெடித்து `காலா’ சேட்டைக் காயப்படுத்தியது. “காலா’ போனால் என்ன `2.0’ இருக்கு” என, கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு இருந்த சிலரும் `யாரு அந்த ஏழு பேர்’ என்ற வார்த்தையைக் கேட்டு வெந்துபோனார்கள். நொந்தது, வெந்ததெல்லாம் மீறி அரசியல்வாதி எனும் ஆராவை நடிகனெனும் 2.0 ரோபோக்கள் அடித்துத் துவம்சம் செய்ய `போடு மரணம்... மாஸு மரணம்’ குஷியானார் ரஜினி. இறுதியாக, `எக்ஸ்ட்ரா சிந்திக்கக்கூடாது’ என்ற சிந்தனையையும் எக்ஸ்ட்ராவாய் மொழிந்துவிட்டு, வருடத்திற்கு `சுபம்’ போட்டார்.

2018 - டாப் 25 பரபரா

கால் பாவி கை கூடி தலை கோதி... டர்னக்கன டனக்குனக்கன

ட்விட்டர் சின்னமான புல்லினங்காளைச் செந்தமிழால் சிதறவிட்டுக்கொண்டிருந்த கமல் ஒருவழியாக மேடையேறி மக்கள் நீதி மய்யத்துக்கு ‘ஹேப்பி பர்த்டே’ பாடினார். கையோடு கொடியையும் அறிமுகப்படுத்த, ‘சினிமாலதான் அப்படின்னா சின்னத்துலயுமா ஆண்டவரே காப்பி?’ எனக் கலாய்த்தார்கள் நெட்டிசன்கள். கலங்காமல், ‘நான் உங்கள் ஸ்தாபனத் தலைவர் பேசுகிறேன்’ என அவர் அறிக்கை தட்ட, ‘என்னாது ஸ்தாபனமா? இது பழக்கதோஷமா, பழைய பாசமா?’ என சைக்கிளை மீண்டும் திருப்பிவிட்டது போராளிகள் குழு. ‘அட போங்கய்யா’ என பிக்பாஸில் கருத்து சொல்லக் கிளம்பியவரை ஓட்டு போடாமல் கூட்டம் ஏமாற்ற, ‘ஐ யம் யுவர் பெஸ்ட் ப்ரெண்டு, ப்ளீஜ்’ என ‘மூன்றாம்பிறை’ சீனுவாகப் பரிதாப முகம் காட்டினார். கிடைத்த கேப்பில் அ.தி.மு.கவினர் ஒரண்டை இழுக்க, திரும்பவும் ட்விட்டரில் சலங்கை கட்டி ஒலி கொடுத்தார். நடுவே அவர் முதல்பாகத்திலிருந்து கட் காப்பி பேஸ்ட் செய்த ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைவிட வேகமாக அவரிடமே திரும்பிவர, வருத்த ஸ்மைலி தட்டினார். ‘இந்தியன் 2 தான் என் கடைசிப்படம்’ என சோகமாக அவர் ஷூட்டிங் தொடங்க, ‘அப்போ தேவர் மகன் 2? சரி பல வருஷமா பெட்டில தூங்குற மருதநாயகம்? அட பாதிவழில சிக்னல்ல இறக்கிவிட்ட சபாஷ் நாயுடு?’ என லிஸ்ட்டை எடுத்துக்கொண்டு துரத்துகிறார்கள் ரசிகர்கள்.  

2018 - டாப் 25 பரபரா

ராஜ்பவன் ரணகளம்

கடலூரில் ஆய்வுக்குச் சென்றதிலிருந்து ஆரம்பமானது களேபரம். ‘ஆளுநர் தட்டியை எட்டிப்பார்த்தாரெ’ன குட்டி ரோபோவைவிட குதர்க்கமாய் கலாய்த்துத் தள்ளினர் நெட்டிசன்ஸ். அந்த வடு ஆறுவதற்குள்ளேயே நிர்மலா தேவி ரூபத்தில் மாவடு ஒன்று வந்து சேர்ந்தது. போனில் மாணவிகளை மூளைச்சலவை செய்தபோது `கவர்னர் தாத்தா இல்ல’ என நிர்மலா தேவி பேசிவைக்க, அது `கவர்னர் தாத்தா, இல்லை’யா அல்லது `கவர்னர், தாத்தா இல்லை’யா... “இதில் எந்த இடத்தில் வருகிறது கமா” எனக் கையைச் சொறிந்தார்கள் தமிழக மக்கள். “ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவரையும் விசாரிக்க வேண்டும்” என எதிர்க்கட்சிகள் ஆவேசமானபோது, அவரே அதற்கொரு விசாரணை கமிஷன் நியமித்ததெல்லாம் `தக் லைஃப்.’ நிர்மலா தேவி விவகாரம் பற்றிக் கேள்வி எழும்போதெல்லாம் `என்ன தம்பி என்னப் போய், எனக்குத்தான் வயசாகிடுச்சுல்ல’ என சண்முகசுந்தரம் மாடுலேஷனில் பேசிவைத்தார். அதிலும் ஃபினிஷிங் டச்சாக, கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தையே தட்டிக்கொடுத்துத் திட்டு வாங்கியதெல்லாம் `தரமான’ சம்பவம்.

2018 - டாப் 25 பரபரா

மைக்கை அவர்கிட்ட கொடுக்காதீங்க!

மக்களுக்கும் சரி, ஊடகங்களுக்கும் சரி, அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட்டை இந்த ஆண்டு அள்ளி வழங்கியது அமைச்சர் ஜெயக்குமார்தான். மேடையேறும் இடங்களில் எல்லாம் ஹால்ஸ் விளம்பரத்தில் வரும் கரகர குரலில் ‘பாட்டும் நானே.. பாவமும் நானே’ என இவர் ஸ்வரம் இழுக்க, ‘எங்களைக் கருணைக்கொலை செய்றீங்களா ப்ளீஸ்?’ எனக் கோரிக்கை வைத்தன மைக்செட்டுகள். இசைத்தமிழ் போதாதென இயல்தமிழிலும் பொங்கல் வைத்தார். ‘கமல் காணாமல்போன சிற்றெறும்பு’, ‘காலா ஒரு காளான்’ என்றெல்லாம் பன்ச் பேச, ‘எப்படியும் அமைச்சர் வேலை பார்க்கிறதில்லன்னு ஆகிப்போச்சு, பேசாம சினிமாவுல வசனம் எழுதுங்களேன்’ என்று அட்வைஸ்கள் குவிந்தன. ‘டைசன்... மைக் டைசன்’ என ‘கன்னையன்... அன்னவெறி கன்னையன்’ ரேஞ்சுக்கு இவர் தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட அடைமொழிகளால் அதிர்ந்து சிரித்தது சோஷியல் மீடியா. ‘சரி, மூணாவது தமிழான நாடகத்தமிழை நாங்க நடத்துறோம்’ என தினகரன் தரப்பு களமிறங்க, சத்தம் காட்டாமல் முடங்கிப்போனார் ஜெயக்குமார்.

2018 - டாப் 25 பரபரா

ஆமைக்கறி அண்ணாத்த

ஆண்டுகள் பல ஆனாலும் அண்ணன் ட்ரெண்டாவது மெகாசீரியல் போல நடக்கத்தான் செய்கிறது. ஆமைக்கறியில் பெப்பர் தூவிச் சாப்பிட்டது, ஆமை ஓட்டில் டி போர்டு மாட்டி ட்ராவல்ஸ் நடத்தியது, ஏ.கே 74-ல் சுட்டு தானோஸை வீழ்த்தியது என அண்ணனின் பராக்கிரமங்கள் யூடர்ன் போட்டு வந்து புல்டோஸராகத் தாக்கின. உச்சகட்டமாக, ‘அட இவரு இருந்த எட்டு நிமிஷக் கதையைத்தான் எட்டு வருஷ வெப் சீரிஸா எடுத்துகிட்ருக்காப்ல’ எனப் போட்டுடைத்தார் வைகோ. அண்ணனின் விழுதுகள் அவர் மேல் பாய, ‘இதுக்குப் புலிகள் பதில் சொல்லுவாங்க’ என மௌனம் காத்தார் சீமான். ‘கட்சி வளர்ற மாதிரியே தெரியலையே’ எனக் குரல்கள் வர, ‘எனக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் இப்போதாம்ப்பு காம்ப்ளான் குடிக்கிறான். மெதுவாத்தேன் வளருவான்’ என சிவாஜி மாடுலேஷனில் சமாளித்தார். இப்போது வரிசையாகப் படம் நடிக்கவிருப்பதாகத் தகவல் பரவ, ‘பேசாம ஓட்டு வாங்குற கட்சி எதுக்காவது போகலாமா’  எனத் தீவிரமாக யோசிக்கிறது தம்பிமார் படை.

2018 - டாப் 25 பரபரா

ஹல்லோ... நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லாம் வந்து அடித்துவிட்டுப் போகலாம் என அறிவிப்புதான் வரவில்லை. அந்தளவுக்குப் பாரபட்சம் இல்லாமல் அடிவாங்கினார் ஹெச்.ராஜா. பெரியார் சிலையைப் பற்றி ஒரே ஒரு ஸ்டேட்டஸ். நானோகிராம் அளவுக்கு இருந்த இமேஜும் டேமேஜ். கிரேப் வாட்டர் குடிக்கும் குழந்தை முதல் கூன் விழுந்த முதியவர் வரை சகலரும் போட்டுப் பொளக்க, ‘அதென்னய்யா என்னை அடிக்கிறதுன்னா மட்டும் தமிழ்நாடு மொத்தமும் ஒண்ணா சேர்ந்துக்குது’ எனக் கேட்டுக் கேட்டு மாய்ந்துபோனார். அடுத்தபடியாக, தி.மு.க பக்கம் வண்டியைத் திருப்ப, மூளை சூடாகும்படி வைத்துத் துவைத்தார்கள் உ.பிக்கள். போதாக்குறைக்கு நீதிமன்றத்தையே தன் ஸ்டைலில் திட்ட, ‘என்னப்பா அங்க சத்தம்’ எனச் சாட்டையைச் சுழற்றியது கோர்ட். பதறி, பதினாறாக மடங்கிப் பதுங்கி மன்னிப்பு கேட்டார். ஒருகட்டத்தில், ‘இன்னமும் என்னை அடிக்காதது ரமேஷ் அப்பாவும் சுரேஷ் அப்பாவும்தான். இருங்க சட்டுனு போய் அடிவாங்கிட்டு வந்துடுறேன்’ என மஞ்சப்பையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கிளம்புமளவுக்கு நிலைமை மோசமானது. ‘அவங்க அடிச்சுப் பழகிட்டாங்க... நான் வாங்கிப் பழகிட்டேன்’ என இன்னும் டயர்டாகாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

2018 - டாப் 25 பரபரா

உள்ளே... வெளியே... உல்லாலா

எப்போதும் வைகோதான் கூட்டணி பூவா தலையா என டாஸ் போட்டுக் குழப்பியடிப்பார். ஆனால், ரோமானிய வரலாற்றில் முதன்முறையாக அவருக்கே தண்ணி காட்டியது தி.மு.க. அக்கட்சியின் அதிகாரபூர்வ அமுல்பேபி துரைமுருகன் சிரித்தபடி சின்னதாகக் கொளுத்திப் போட, பற்றிய தீ ம.தி.மு.க தாண்டி வி.சி.க வரை சூடு போட்டது. எமோஷனல் ஏகாம்பரமாகி வைகோ வழக்கம்போல முறுக்கிக்கொள்ள, சடாரென ‘அது கட்சியின் கருத்தல்ல’ என வெள்ளைக்கொடி காட்டி அமைதிநிலைக்குக் கொண்டுவந்தார் தளபதி. அந்தச் சூடு ஆறுவதற்குள் வைகோவிற்கும் வி.சி.கவின் வன்னியரசுக்கும் பஞ்சாயத்தானது. இப்போது அதே டயலாக்கைத் தத்தெடுத்து ‘லாலாலா’ பாடியது திருமாவளவன். பாவம் கலிங்கத்துக் குருவிக்குக் கண்கள் கலங்கிக் கலங்கி வறண்டே போனது. ‘அட இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? நாங்க எல்லாம் வந்து குத்த வச்சு பத்துப் பொங்கல் பாத்தாச்சு’ என அமைதியாக வேடிக்கை பார்த்தது காங்கிரஸ். இதெல்லாம் போதாதென, போகிறபோக்கில் ‘இந்தக் கூட்டணில பா.ம.க வராது’ என திருமா பன்ச் அடிக்க, ‘யூ கோ மேன், ஒய் மீ?’ எனப் பரிதாபமாக முனகினார் மக்களின் முதல்வர்.

2018 - டாப் 25 பரபரா

கண்ணாமூச்சி ரே ரே... கண்டுபிடி யாரே!

சிலைக்கடத்தல், பவர் ஸ்டார் கடத்தல், விஜய் ரசிகர்களின் அரிவாள் மிரட்டல், ஹெச்.ராஜா உருட்டல் என  எல்லாப் பஞ்சாயத்துகளுக்குமே தனிப்படைகளை உருவாக்கித் தள்ளியது காவல்துறை. அதிலும் ஸ்பெஷலாக, எஸ்.வி.சேகரைப் பிடிக்க இரண்டு தனிப்படையும் ஹெச்.ராஜாவைப் பிடிக்க இரண்டு தனிப்படையும் அமைத்து ‘`யெஸ் சார்’’ என அட்டென்ஷனில் சல்யூட் அடித்தது. எஸ்.வி.சேகர் தினமும் தேசியக்கொடி வாங்கும் கடை வாசலில் மாறுவேடம் அணிந்து படுத்திருந்தாலே போதும், அவரை ‘லபக்’ எனப் பிடித்திருக்கலாம். ஆனாலும், இரண்டு  தனிப்படைகளுக்கும் தனி ஒருவனாய் நின்று நீண்டநாளாய் விபூதி அடித்துக்கொண்டிருந்தார் எஸ்.வி.எஸ். விபூதி பாக்கெட் தீரத்தீர, தனிப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் அவருக்கு வாங்கிக் கொடுக்க, சுவாரஸ்யமாய் இருந்தது அந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு. எஸ்.வி.சேகருக்குப் போட்டியாக ஹெச்.ராஜாவும் களத்தில் குதித்து, “சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் இந்த சூனாபானாவை ஒண்ணும் பண்ணமுடியாது” எனப் பிரஷர் ஏறிக் குதிக்க, பட்டிதொட்டியெல்லாம் சல்லடை போட்டுத் தேடியது தனிப்படை. ஆனாலும், அவர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படாத ஜான் சினாவாக அசால்ட் காட்டினார் இந்த மரு வைக்காத அட்மின். யு கான்ட் சீ மீ..!

2018 - டாப் 25 பரபரா

மாஸ் (எ) மாசிலாமணி

அதிமுககாரர்களையே `சர்கார் ஒழிக... சர்கார் ஒழிக’ என தியேட்டர் முன்னர் கோஷம் போடவைத்தது `சர்காரி’ன் ஒரு சாதனை என்றால், திமுககாரர்களான பழ.கருப்பையாவையும் ராதாரவியையும் திமுக தலைவர்களைக் கலாய்க்கும் கதாபாத்திரங்களிலேயே நடிக்கவைத்தது மற்றொரு சாதனை. 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம், இலவசங்கள் தந்தது, நம்பர் ரெண்டு என உடன்பிறப்புகளைச் சீண்டும் படத்தில் இருவரும் நடித்ததை, அதுவும் சன்பிக்சர்ஸ் அதைத் தயாரித்ததைக் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருந்தால் மூன்றாம் கலைஞர் உதயநிதியே கோவப்பட்டிருப்பார். இது புரியாமல் குறுக்கே புகுந்து அதிமுக அமைச்சர்கள் ஐஸ்பாய்ஸ் ஆடி, “பழ.கருப்பையா நாக்கை வைத்து வியாபாரம் செய்பவர்”, “பல கட்சிகளுக்குத் தாவிய கருப்பையா, கடைசியில் ஏற்கெனவே தாவியிருந்த கட்சிக்கே மீண்டும் தாவிப் புதிய சாதனை படைத்தவர்” என வேலியில் பாய்ந்த தீபாவளி ராக்கெட்டை வேட்டிக்குள் விட்டுக்கொண்டதுதான் மிச்சம். “ஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு?” என சிம்பிளாய் சீனைமுடித்துச் சிரித்துக்கொண்டார் `சர்காரி’ன் மாசிலாமணி.

2018 - டாப் 25 பரபரா

சிம்பு, குளம்பு, கிளம்பு

சென்ற ஆண்டு தமிழகத்துக்கே ஹார்ட் அட்டாக் வர வைத்து ஆர்ட்டின்களை அள்ளினார் சிம்பு (எ) சிலம்பரசன் (எ) எஸ்.டி.ஆர். ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் மூலம் மணிரத்னத்துக்கு மறுவாழ்வு கொடுத்து ( சிம்பு ரசிகர்கள் அப்படித்தான் பேசிக்குறாங்க), அருண் விஜய், அர்விந்த்சுவாமி போன்றோருக்கும் ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அதனினும் ஆச்சர்யமாக, `வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் 100% அட்டென்டன்ஸோடு நடித்துக்கொடுத்தார். “இதெல்லாம் கனவா இல்ல நினைவா” என சிம்பு ரசிகர்கள் எல்லாம் தங்கள் உதட்டைக் கடித்து உறுதிப்படுத்தினர். பியூஸ் மானுஷோடு சேர்ந்து நீர்நிலைகள் பற்றிப் பரிசலில் சென்று ஆய்வு, காவிரிப் பிரச்னையில் வாட்டர் பாட்டிலை வைத்து சிம்பிளா சொன்ன தீர்வு, பெரியார் குத்து என 360 டிகிரியும் சுழன்றடித்தார் சிம்பு. “கேள்வியில் இருக்கு வம்பு. சிம்புக்குச் சீவாதீங்க கொம்பு” என டி.ஆர்தான் குறுக்கே கேட்டைப் போட்டார். தேசிய அரசியலில் களமிறங்குகிறேன், பாலிவுட்டில் படம் பண்றேன், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை, இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றுகிறேன் என குடோனில் இருந்த பருத்திமூட்டையைப் பண்ணைவீட்டில் வைத்து, பண்ணைவீட்டில் வைத்த பருத்திமூட்டையைத் தென்னந்தோப்பில் வைத்து, பின்னர் தென்னந்தோப்பில் வைத்த பருத்திமூட்டையை குடோனில் வைத்துக் குறும்பு பண்ணிக்கொண்டிருந்தார் அப்பா டி.ஆர்.

2018 - டாப் 25 பரபரா

டுபுச்சிக்கு டுபுச்சிக்கு பார்ட் 2

இந்த ஆண்டும் தமிழனின் பிரைம் டைமை லபக் செய்தது பிக்பாஸ்! மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா எனப் புதுப்புது ரகங்களை இந்தத் தடவை பிக்பாஸ் டீம் களமிறக்க, குடும்பம் குடும்பமாக டிவி, ஹாட்ஸ்டார் முன் ஆஜரானார்கள் மக்கள். போட்டியாளர்களாக வந்த எல்லோரும் ‘ஒரே நாளில் ஓவியா ஆவது எப்படி’ என ஸ்க்ரிப்ட் எழுத முயல, ‘ஆர்மி எல்லாம் கிடையாது, வேணா ஆளுக்கொரு உண்டக்கட்டி தர்றோம்’ என உஷாரானது சோஷியல் மீடியா. பொன்னம்பலம் ‘பொண்ணுன்னா...’ எனப் பழைய பஞ்சாங்கம் பாடி, மும்தாஜ் பூஸ்ட் விளம்பரத்தில் வரும் பாசக்கார தாயம்மாவாகத் தாலாட்டு போட்டு, பாலாஜி தியாகி பென்ஷன் வாங்க வண்டியேறி, இறுதியாக ஐஸ்வர்யாவை கோலிவுட் லூஸுப்பெண்ணாக மாற்றி... ம்ஹூம், என்ன முக்கியும் முதல் சீசனைத் தொடமுடியவில்லை. ஒருகட்டத்தில் உலக நாயகனே, ‘ஒன்றரை லட்ச ரூபா கான்ட்ராக்ட்டுய்யா, ஓட்டு போட்டுக் காப்பாத்துங்கய்யா’ எனக் கெஞ்சிக் கூத்தாடும் கான்ட்ராக்டர் நேசமணியானார். ‘நாங்க ஓட்டு போடுறோம், நீங்க ட்வீட் போடாதீங்க’ எனத் தமிழ்ச்சமூகம் இறங்கிவந்ததில் தப்பிப் பிழைத்தது பார்ட் 2!

2018 - டாப் 25 பரபரா

டாக்டர்ர்ர்

‘தேவேந்திரர் சமூகத்தைப் பட்டியலினத்திலிருந்து நீக்குங்கள்’ என அவர் எழுப்பிய திடுக் குரல் அதிர்வலைகளைப் பரப்ப, கண்டனக் கணைகள் நாலாப்பக்கமிருந்தும் சூழ்ந்தன. ‘மோடி எப்படியாப்பட்டவர் தெரியுமா?’ என பி.ஆர்.ஓ ரேஞ்சுக்கு இவர் கொடுத்த பில்டப்களில் பா.ஜ.கவினரே கொஞ்சம் கூசித்தான் போனார்கள். பி.ஆர்.ஓ வேலை போரடிக்காமல் இருக்க, நடுநடுவே போய் கமலை வேறு வம்பிழுத்துவிட்டு வந்தார். கஜா புயலின்போது, ‘சும்மா சும்மா அவரைக் கூப்பிடாதீங்க, பிரதமருக்கு வேற வேலை இல்லையா?’ என அவர் மைக்கைக் கடித்துவைக்க, ‘இவர் என்னா ரகம்னே தெரியலயே’ என மண்டையைச் சொறிந்தார்கள் மீடியாக்காரர்கள். ஐந்து மாநிலங்களில் மண்ணைக் கவ்வியதை மோடியே ஒப்புக்கொண்டாலும், ‘அட அவங்களுக்கு ஓட்டு குத்தத் தெரியலப்பா, யூ டோன்ட் ஒர்ரி’ என தம் கட்டி வருகிறார்.

2018 - டாப் 25 பரபரா

ரெண்டு தடவை தட்டினா லைக்கு!

மியூசிக்கலி டிக்டொக்கானதும் டிக்டொக்கினால் பலர் `டக்டக்’ எனப் பிரபலமானதும் இந்த ஆண்டுதான். சித்ரா காஜல் ஆன்டி, மீசை வெச்ச அங்கிளில் ஆரம்பித்து மீனவ நண்பன், மஞ்சு க்ளவுடி வரை டிக்டொக்கின் முகங்கள்தான் சமூக ஊடகங்களின் எட்டுத் திக்கும். “என் படுக்கையில பாதி இடம் உனக்குத்தான்” தொடங்கி “இன்கெம் இன்கெம் காவாலி”, “ஜிமிக்கி கம்மல்”,  வழியாக “நெஞ்சு ஜிகுஜிகுதான்”-க்கு வந்து இந்த ஆண்டை முடித்திருக்கிறார்கள் டிக்டொக்கியன்கள். வடிவேலு காமெடிக்கு வடிவேலுவைவிட அசத்தலாய் நடிப்பவர், விஜய்யின் பாடலுக்கு விஜய்யைவிட அழகாய் ஆடுபவர், மீனவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ஒரு மீனவர் என ஒருபுறம் திறமைகளையும் தகவல்களையும் அள்ளித்தந்த இந்தச் செயலி, இன்னொருபுறம் சாதிச் சண்டைகளுக்கும் தல-தளபதி சண்டைகளுக்கும் ஆபாச அசைவுகளுக்கும் களமாய் அமைந்துபோனது கொடுமை. குழந்தைகளை அடித்து அழவைத்து ஹார்ட்டின்களை அள்ளிய, கழுத்தில் கத்தியால் சிவப்புக்கோடு போட்ட கூத்துகளும்கூட அரங்கேறின. இவை எல்லாவற்றையும்விட மிகப்பெரிய காமெடி, ‘ஒரு விரல் புரட்சி’ பாடலுக்கு இலவசப் பொருள்களை உடைக்கிறேன் பேர்வழியென, காசு கொடுத்து வாங்கிய வாஷிங் மெஷின், டிவிடி ப்ளேயரெல்லாம் தூக்கிவந்ததுதான்!

2018 - டாப் 25 பரபரா

டக்ளஸு... யார்றா ஓனரு?!

‘`முதலமைச்சர்னா ஒரு மரியாதை வேணாமா’’  என இந்த ஆண்டும் கொந்தளிப்பிலேயே இருந்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. ‘’ஓனர்னா ஓரமாப் போங்க’’ என்கிற ரேஞ்சிலேயே நாராயணசாமியை டீல் செய்த கிரண் பேடி, கோட்டைக்கு கேட்டைப் போட்டுப் பூட்டை மாட்டி சாவியைத் தூக்கி டெல்லிப் பக்கம் எறிந்தார். ‘’நீண்ட காலம் வரி செலுத்தாதவர்களின் சொத்தை மின்னணு முறையில் ஏலம் விட வேண்டும்’’, ‘’மே மாதம் 31-ம் தேதிக்குள் தூய்மையான கிராமங்கள் உருவாக்கினால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும்’’, ‘’பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஐந்து அடுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்படும்’’ என  எலிமென்ட்டரி ஸ்கூல் பி.டி வாத்தியாரைவிட ஸ்ட்ரிக்டான ஒரு ஆளுநரைக் கண்டு கதிகலங்கிப்போனார்கள் புதுவை பீப்பிள். விழா ஒன்றில் தன்னை வரவேற்று வைத்த பேனருக்கும் போர்த்திய பொன்னாடைக்கும் செலவான பணத்தைத் திருப்பிக் கொடுத்து ஆறடிக்கு ஆச்சர்யக்குறி வரைந்தார் பேடி. அவரே, கால்பந்து உலகக்கோப்பையை பிரான்ஸ் கைப்பற்றியதற்கு புதுவை மக்கள் ஜெயித்துவிட்டதாக ட்வீட் போட்டு `எதுக்கு’ என எட்டடிக்குக் கேள்விக்குறியும் வரைந்தார். ஃபைனல் டச்சாக, அதிமுக அமைச்சர் ஒருவர் மேடையிலேயே புகார்களை அள்ளித்தெளிக்க ஆரம்பித்ததும், மைக்கைப் பிடுங்கி `யூ கோ’ என ஷாக் கொடுத்தார் துணைநிலை ஆளுநர். பீச் பக்கம் உச்சா போன சாமான்யனை வீடியோ எடுத்து, மடக்கி மடக்கிக் கேள்விகேட்டு ட்விட்டரில் போட்டதெல்லாம் உச்சபட்ச உரிமைமீறல்கள்!

2018 - டாப் 25 பரபரா

எக்ஸ்கியூஸ்மீ, இந்த அட்ரஸ் எங்கே இருக்கு?

கமலாலயத்தின் கவிதாயினி தமிழிசைக்கு, சென்ற ஆண்டில் செமத்தியான மகசூல். `பாசிச பா.ஜ.க ஒழிக” என்ற ஷோபியாவின் குரலை ஊதிப் பெரிதாக்கி, தனக்குத் தானே கறுப்பு பலூனைப் பறக்கவிட்டுக்கொண்டார். ஷோபியாவின் கோஷம் கேட்டுத் தமிழிசை காண்டாக, தமிழிசை காண்டானதைப் பார்த்துத் தமிழகம் காண்டாக, தமிழகம் காண்டானதைப் பார்த்து எதிர்க்கட்சிகள் காண்டாக, #பாசிச_பாஜக_ஒழிக பாரத ட்ரெண்டானது. பெட்ரோல் விலையேற்றத்தைப் பற்றிக் கேட்க வந்த ஆட்டோ ஓட்டுநரை ஆதரவாளர்கள் மடக்கி அல்லையில் குத்திவிட்டு, மறுநாளே பால்கோவா கொடுத்துக் கூல் செய்ததெல்லாம் நியாயமேயில்லை நியாயமாரே. இடையிடையே, “பெண்பாடு முக்கியமல்ல பண்பாடுதான் முக்கியம்”, “நீர் வேண்டுமா, போர் வேண்டுமா” எனக் கவிதாயினி மோடுக்கும் மாறி வேரியேஷன் காட்டியவர், ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க வாங்கிய முரட்டுக்குத்தை “இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி” என ஊமைக்குத்தாய் மாற்றியதுதான் உச்சகட்டம். “தாமரை மலர்ந்தே தீரும்” என்பதற்கு “இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும், தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வர வைத்தாகிலும் குளங்களை நிரம்பவைத்துத்  தாமரையை மலரச்செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என அறிவியல் காரணங்களையும் ட்விட்டரில் அடுக்கிக்கொண்டிருந்தார். காரணங்களை அடுக்கி என்ன பிரயோஜனம், எப்படியும் “இது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல” என, கட்சியே கைதான் விரிக்கும்.

2018 - டாப் 25 பரபரா

ஹேக்கிங் பரிதாபங்கள்!

தமிழ் சினிமாவில் ஹேக்கிங் காட்சிகளும் சி.சி.டி.வி காட்சிகளும் ஓவர்டைம் பார்த்த வருடம் இது. காமெடியன்கள் இல்லாத பஞ்சத்தை இந்தத் திடீர் டெக்கீகள்தான் போக்கினார்கள். பல கோடிகள் செலவழித்து ஆணையம் எல்லாம் அமைத்துத் தேடும் மதிப்புமிக்க சி.சி.டி.வி புட்டேஜை ஐம்பது காசுக் கடலைமிட்டாய்போல அசால்ட்டாக இவர்கள் டீல் செய்ததில் ‘3.0 குட்டி’ போல எல்லா கேமராக்களும் இணைந்து கண்டனக் கூட்டம் நடத்தின. 5டி ஆடியோ ரெக்கார்டிங், ரோலிங் ஷாட், வி.எஃப்.எக்ஸ் எல்லாம் திரையில் சி.சி.டி.வி புட்டேஜாக ஓட, ‘ஒருவேளை இது டைரக்டரோட கல்யாணக் கேசட்டா இருக்குமோ’ என டவுட்டாகத் தாடையைச் சொறிந்து யோசித்தார்கள் ரசிகர்கள். மறுபக்கம், ‘ஏது, இதுக்கப்புறம் கதை நகரலையா? படார்னு ஹீரோ, வில்லன் ஹார்ட்டை ஹேக் பண்ணிக் கொன்னுட்டான்னு கதையை முடிச்சுவிடு’ என பேனாவை மூடினார்கள் கதாசிரியர்கள். விளைவு, சூப்பர்மேன் மோடி, யோகாசன வித்தை எல்லாம் காட்டிக் கொண்டுவர முடியாத கறுப்புப்பணத்தை, கால் விநாடியில் ஹேக் செய்து சாக்குமூட்டையில் அள்ளிக்கொண்டுவந்து போட்டார் விஜய் தேவரகொண்டா. உச்சகட்டமாக சூரியன், சந்திரன் என சோலார் சிஸ்டம் வரை ஹேக் செய்து ‘வெவ்வெவ்வெ’ காட்டியது ‘டிக்டிக்டிக்’ படக்குழு!

2018 - டாப் 25 பரபரா

தேர்தலா... அது துபாய் பக்கமோ துருக்கி பக்கமோ நடக்கும்!

வக்கீல் வண்டுமுருகனை ஈஸியாக வட்டச்செயலாளராக்கிய தமிழ்ச்சமூகத்தால் இன்னமும் ஒரு வார்டு கவுன்சிலரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டிய கெடு முடிந்தே இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், ‘சாப்பிட்டு சாயங்காலம் பேசுவோமா?’ எனத் தட்டிக்கழித்துக்கொண்டே இருக்கிறது தமிழக அரசு. நடுவே அரசியல் இழப்புகளால் இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் நடத்தியாகவேண்டிய நிலைமை வேறு. போதாக்குறைக்கு, ‘மாமா... பிஸ்கோத்து’ என 18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கப்பட்டனர். தப்பித்தவறித் தேர்தல் நடத்த முன்வந்த தலைமைத் தேர்தல் கமிஷனையும், ‘மழைக்காலம். ஓட்டு மெஷின்களுக்கு ரெயின்கோட் செய்ய ஆர்டர் கொடுத்திருக்கோம். லேட்டாகும்’ எனத் தமிழக அரசு தடுக்க, விரக்தியாய் வேடிக்கை பார்க்கிறார்கள் மக்கள்.

2018 - டாப் 25 பரபரா

உலக பைரஸி வரலாற்றில் முதன்முறையாக...

சொன்ன தேதியில் தயாரிப்பாளர் தன் படத்தை ரிலீஸ் செய்கிறாரோ இல்லையோ, தமிழ்ராக்கர்ஸ் ரிலீஸ் செய்கிறது. கபாலியில் தாணுவை மிரட்ட தமிழ்ராக்கர்ஸ் கையிலெடுத்த ஆயுதம் மெர்சல், சர்கார், 2.0 வரை தொடர்கிறது. ‘ஹே அட்மின், நானும் மதுரக்காரன்தான்டா’ எனச் சூளுரைத்து தீம் மியூசிக் போட்டு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் தன் படங்களைவிட நிஜத்தில் ஏகப்பட்ட ஸ்டன்ட்கள் அடித்தும், சிம்பிளாக டொமைனை மட்டும் மாற்றி ‘உல்லல்லாயி’ காட்டுகிறார்கள் அதன் அட்மின்கள். ஒருகட்டத்தில் தமிழ்ராக்கர்ஸை நடத்துவதே லைக்கா நிறுவனம்தான் எனச் செய்தி வெளியாக, நெட்டிசன்கள் அரட்டை அரங்கம் எல்லாம் வைத்து விவாதித்தார்கள். ஆனால், லைக்காவே கடைசியில், ‘தமிழ்ராக்கர்ஸ்கிட்ட இருந்து எங்களக் காப்பாத்துங்க’ என 2.0 சமயத்தில் கோர்ட்டில் சரணடைந்ததுதான் கோலிவுட்டின் பெரிய ட்விஸ்ட்.

2018 - டாப் 25 பரபரா

நாங்கள்தான் கலாய்க்க வேண்டும்!

2017 முழுவதும் வைப்ரேஷன் மோடில் இருந்த தீபா, கடந்த ஆண்டு முழுவதும் ஸ்லீப் மோடில் ரெஸ்ட் எடுத்தார். தவத்தைக் கலைத்தது வழக்கம்போல மாதவன்தான். கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ராஜாவை தூக்கக்கலக்கத்தில் தீபா மறுபடியும் சேர்த்துக்கொள்ள, ‘இப்போ விலக்குறியா இன்னொரு கட்சி ஆரம்பிக்கவா’ என விசித்திர மிரட்டல் விட்டார் மாதவன். இவர்கள் மூவரும் ஆடிய ட்ரிபிள் த்ரெட் ஆட்டத்தில் குலுங்கியது தி.நகர் ஏரியா. மறுபடியும் டிஸ்மிஸ்ஸானார் ராஜா. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான கையோடு, ‘என்னையும் ஆஸ்பத்திரி ரவுண்ட்ஸுக்குக் கூட்டிட்டுப் போங்க’ என தீபா மனு கொடுக்க, ‘அட நீ வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... சும்மா இரும்மா’ என அதட்டி உட்கார வைத்தார்கள். ரம்ஜான் நோன்பில் புது கெட்டப்பில் தோன்றிய தீபாம்மாவின் படம் எகிடுதகிடு வைரலானது. கடைசியாக, ‘என்னோட ஆட்களை இழுத்துத்தான் தன் செல்வாக்கை வளத்துக்கிட்டார் ஓ.பி.எஸ்’ என அவர் ஒரு பேட்டி தட்ட, ‘இதையெல்லாம் கேட்குறதுக்கு, பேசாம அம்மா காலத்துலயே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகியிருக்கலாம்’ எனக் கதறித்துடித்தது பெரியகுளத்துக்காரரின் மனசாட்சி.

2018 - டாப் 25 பரபரா

பல்டி நிக்குற பல்தே

 `சர்கார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வாயிலிருந்து வந்த புகை, பா.ம.கவில் புகைச்சலை ஏற்படுத்தியதுதான் ஆரம்பம். அடுத்தடுத்து ஒரே பூகம்பம்! `இவர் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டாங்கப்பா’ என்று டீசர் வெளியானதும், `இது அவர் கதையே இல்லப்பா’ என்ற பிரச்னை கிளம்பியது. `பல்டி நிக்குற பல்தே’வுக்கு அர்த்தம் தெரியாமல் தமிழ்நாடே திக்குமுக்காடியது. பாடல்வெளியீட்டு விழாவில் `முதல்வராகிட்டா முதல்வரா நடிக்கமாட்டேன்’ என விஜய் சொல்லியதும் ஆரவாரமானார்கள் அவர் நெஞ்சில் குடியிருக்கும் நண்ப-நண்பிகள். இது போதாதென்று அநியாய டிக்கெட் விலை, வில்லியின் பெயர் கோமளவல்லி, இலவசப் பொருள்களைத் தீயில் எறிவது, ஒரு விரலில் புரட்சி பண்ணுவதென இன்னும் பல வில்லங்கங்களை அதிக விலைக்கு ஏலம் எடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது கார்ப்பரேட் கிரிமினல் அண்ட் கோ. ரத்தத்தின் ரத்தங்கள் `சர்கார்’ பேனர்களைக் கிழிக்க, பதிலுக்கு நண்ப நண்பிகள் சர்க்கார் கொடுத்த இலவசங்களை உடைக்க, தலையில் கை வைத்தது தமிழகம். ஆனால், படக்குழுவோ  உம்முன்னும் கம்முன்னும் வெற்றியை ஜம்முன்னு கேக் வெட்டிக்கொண்டாடி ஒருவிரல் புரட்சி காட்டியது!

2018 - டாப் 25 பரபரா

நோ சாய்ஸ் நித்யானந்தா

ஆண்டின் ஆரம்பத்தில், இருக்கும் இடம் தெரியாமல்தான் இருந்தார் நித்யானந்தா. ஆண்டாள் சர்ச்சையின்போது நித்தியின் சிஷ்யைகள் வைரமுத்துவை ஆத்திர, காத்திரமான 18+ வார்த்தைகளால் கழுவி ஊற்றியதும் லைட்டை நித்தியின் பக்கம் திருப்பினார்கள் நெட்டிசன்கள். சமீபத்தில், `மீ இன் மீ... இஸ் டாக்கிங் டு மீ... இன் யு’ என, தெளிந்த நீரோடையாக உரையாற்றிய நித்யானந்தாவைக் கண்டு `கிறுகிறு’த்துப்போனார்கள் தமிழர்கள். கிராஃபிக்ஸ் உதவியோடு பஞ்சபூதங்களையும் தனக்குள் நிறுத்தி, குண்டலினியைக் கிளப்பிய நித்தியின் வீடியோ, எபிக்வரலாற்றுப் படைப்பு. கடைசியாக “குரங்கு, மாடு, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளைத் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் அழுத்தம் திருத்தமாகப் பேச வைக்கப்போகிறேன்” எனச் சொல்லிவிட்டு `திருவிளையாடல்’ சிவாஜியின் சிரிப்பைப் போட்டதுதான். ‘ஐயோ பாவம்’ அட்ராசிட்டி!