Published:Updated:

மெய்ப்பொருள் காண் - மொடை

மெய்ப்பொருள் காண் - மொடை
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண் - மொடை

நர்சிம்

மெய்ப்பொருள் காண் - மொடை

ந்தச் சொல் குறித்து எழுதலாம் என்ற யோசனையில் ஒரு நாள் முழுக்கக் கழிந்தது. ஏதேனும் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தால், உடனே இல்லையென்றாலும் சற்றைக்கெல்லாம் நூற்கண்டின் நுனி பிடித்திழுத்தல்போல் சொற்கள் சுழன்றுவந்து விழுந்துவிடும். எப்படி நம் சிந்தனைக்கு இவ்வளவு மொடையாகிப்போனது என மனம் நினைத்த மாத்திரத்தில் மூளைக்குள் சூழ்கொண்டது ‘மொடை’ என்ற சொல்.

ஆம். இந்தச் சொல்லைப் பயன்படுத்தாத சம்சாரி வீடே இல்லை எனலாம்.  “அட அத ஏனப்பா கேட்குற, பண மொட, இப்பண்டு பார்த்துச் சடங்கு காதுகுத்துண்டு எதையாச்சும் வச்சுப்புடுறானுங்க, மொய் செய்யணுமா இல்லையா” எனப் பெரும்பாலும் அலுப்பும் சலிப்புமாகவே மொடை என்ற சொல்லின் பயன்பாடு அமையும்.

செழிப்பு, செழிம்பு என்ற சொற்களின் நேரெதிர்ப் பதம்தான் மொடை. “அப்பிடி என்னடா மொட ஒனக்கு” என்று விசனம் விசாரிப்பதும் உண்டு.

மழை பொய்த்துவிடுதல், மாடு இறந்துபோதல், குடிசை எரிந்துபோதல், என விவசாயியின் வாழ்க்கையில் இயற்கையும் இல்லாமையும் இயலாமையும் ‘மொடை’ ஆக்குகின்றன. “அம்புட்டுத்தான், ஆளு மொடங்கிருவாரு” என்ற சொல்லே கிராமத்து மருத்துவரின் கடைசிக் கண்ணாடிக் கழட்டல்.

“இப்பிடி ஒரேடியா மொடங்கிப் போயிருவோம்னு கனவுலகூட நெனச்சதில்ல” வாழ்ந்து கெட்டவர்களிடம் இந்த வார்த்தைகள் வெளிப்படும்போது, மொடங்கிப் போதலின் வலியை உணரலாம்.

ஒரே இடத்தில் அடைபடுதல், வேறு வழி இல்லை, மாட்டிக்கொள்ளுதல் என்பதாக ‘மொடை’ குறிக்கப்படுகிறது. எனில், ‘மடை’ என்ற சொல்லின் கிளையாகவும் மொடை என்ற திரிபு உருவாகியிருக்கலாம்.

மெய்ப்பொருள் காண் - மொடை

முடங்குதல் என்பதே மொடை என ஆகியிருக்கலாம் என்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, முடை என்ற வேர்ச்சொல் முந்திக்கொண்டுவருகிறது. பனையோலை முடைதல். ஓலையை வைத்து, சிறிய பெட்டி, பாய் போன்றவற்றைத் தயாரிப்பதை  ‘முடைதல்’ என்று குறிப்பார்கள். வெளிச்சமோ காற்றோ உட்புகாத வண்ணம் நெருக்கமாய் முடைவார்கள். இங்கிருந்துதான் ‘மொட’ கிளர்ந்திருக்க வேண்டும்.

விதைநெல் என்பது, நெல்லை சாக்கில் கட்டி ஊறவைப்பதாகும். பாதி ஊறிய நெல் மூட்டையின் வாசம் ஓர் அற்புதம். அதை, மொட நாத்தம் என்பார்கள். ஈரச்சாக்கின் வாசமும் மொட நாத்தம்தான். ஆக, மொட, விருத்தியும்தான்.

“ஏன்டா இப்பிடி வீட்டுக்குள்ளயே மொடங்கிக் கெடக்க” வார்த்தைகளைக் கடந்துதான் வேலைக்குச் சென்றிருப்பார்கள் இளந்தாரிகள். போலவே, மொடாக்குடி என்ற சொல், இந்த மொடையின் எதிர்நிலையாகத்தான் இருக்கக்கூடும். நிறைய குடிப்பவர்களை, இடைவிடாமல் குடிப்பவர்களை, மொடாக்குடி என்பார்கள். ‘மொடா’ என்ற சொல், முடங்கிப்போகமல் குடிப்பது என்பதைத் தவிர்த்து வேறு இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

மெய்ப்பொருள் காண் - மொடை

“மொடமொடன்னு இருக்கு” என்ற சொற்பதமும் கிராமத்தின் காதுகள் அதிகம் கேட்கும் ஒன்று. சற்று விரைப்பாகக் கஞ்சி போட்ட சட்டை போட்டுவிட்டால், மொடமொடப்பு வந்துவிடும். “மடமடன்னு வளர்ந்துட்ட, ஆளே அடையாளம் தெரியல” என்பதுவும் ‘மொட’யின் எதிர்ச்சொல் பயன்பாடாக மருவியிருக்கலாம்.

கெட்டவார்த்தை அல்லது வசைச் சொற்களிலும் மொட முதன்மைப் பங்கை வகிக்கும் சொல்லாக இருக்கிறது. ‘மொட’ என்ற சொல்லின் பிற்சேர்க்கையாக எதைச் சேர்த்துக்கொண்டு திட்டினாலும், வீரியமாக இருப்பதாகத் தோற்றமயக்கம் தரவல்ல சொல்.

“போடா மொடக்கூ...,” “என்னைய என்ன மொடப்......னு நெனைச்சியா?”,   “அவங் கெடக்கான் மொடத்தாயளி” என ஆற்றொழுக்கு நடையில் திட்டும் மாந்தர்களை இன்றும் ‘மந்தைகளில்’ காணலாம்.

`பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்’ என்ற நற்றிணை வரி தொடங்கி, உழைத்துக் களைத்த ஒருவர் “இந்தா இப்பிடிச் செத்தவடம் மொடங்கினேன்னா உடம்பு வலி போயிரும்” என இன்றைக்குச் சொல்வது வரை ‘மொடை’ என்ற சொல்லின் பயன்பாடு மொடங்கிப் போய்விடாமல் இருக்கிறது. முடங்குதல் என்பது சுருங்குதல், செயலற்றுப் போதல் (முடக்கு வாதம்) என நாம் நெருங்க நெருங்க, மொட என்ற சொல்லின் வீரியம் இன்னும் புலப்படலாம்.

ஆக, எந்த மொடையும் இல்லாமல் வாழ்வீர் ஆகுக !