கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2019

மோட்டார் விகடன் விருதுகள் 2019
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடன் விருதுகள் 2019

மோட்டார் விகடன் விருதுகள் 2019

5 மாநிலத் தேர்தல்களைப்போல் பரபரவென முடிந்துவிட்டது மோட்டார் விகடன் விருதுத் தேர்தல். விருதுப் போட்டியில் வாசகர்களிடம் இருந்து வந்த ரிசல்ட், வியப்பை ஏற்படுத்தியது. போட்டியில் கலந்துகொண்ட வாசகர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். வெற்றி பெற்ற வாகனங்களுக்கும் வாசகர்களுக்கும் பரிசுகளும் வாழ்த்துகளும்!

மோட்டார் விகடன் விருதுகள் 2019

பரிசு பெறும் வாசகர்கள்...

கார்த்திகேயன், கார்த்திக் குமார், ஜீவன் ராஜீவ், ச.கார்த்திகேயன், பி.செந்தில்குமார், முரளிதரன், ஆர்.பி.ராஜரத்தினம் 

மோட்டார் விகடன் விருதுகள் 2019

அ்றிமுகமான இரண்டு மாதத்திற்குள் 40 ஆயிரம் புக்கிங் -  புதிய சரித்திரம் படைத்திருக்கிறது சான்ட்ரோ. சுமார் 16 ஆண்டுகள் கோலோச்சிய சான்ட்ரோ, மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறு அறிமுகமானபோது, கார் சந்தை வெகுவாக மாறிவிட்டிருந்தது. அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், என்ட்ரி ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் இல்லாத அம்சங்களான ரியர் ஏசி வென்ட், ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்ஸிங் டோர் லாக், எலெக்ட்ரிக் மிரர் அட்ஜஸ்ட் என்று வசதிகளில் அடுத்த லெவலை எட்டியிருக்கிறது சான்ட்ரோ.

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இதன் விலை அதிகமாக இருந்தாலும், ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான கேபின் தரம் - எளிதான ஓட்டுதல் - கட்டுப்படியாகக் கூடிய பராமரிப்புச் செலவுகள் ஆகியவை இதன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து விடுகின்றன. ஸ்மூத்தான AMT இருப்பது கூடுதல் போனஸ். ஆகவே - போட்டிகள் பலமாக இருந்தாலும், இந்த ஆண்டின் 'கார் ஆஃப் தி இயர்' வெற்றிக்கோப்பையை எளிதாக வெற்றி கொள்கிறது சான்ட்ரோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ற்கெனவே ஒரு ரசிகர் வட்டத்தைக் கொண்ட ஒரு காரை, மறுஉருவாக்கம் செய்வது பெரிய சவால். மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் வாயிலாக, அதை `ஜஸ்ட் லைக் தட்’ செய்திருக்கிறது மாருதி சுஸூகி. பத்தே வாரங்களில் முதல் ஒரு லட்சம் ஸ்விஃப்ட் கார்கள் புக் ஆகிவிட்டன என்பதே இதன் வெற்றியைச் சொல்கிறது.

ஸ்போர்ட்டியான டிசைனுக்கும் சிறப்பான பெர்ஃபாமென்ஸுக்கும் ரீ-சேல் மதிப்புக்கும் பெயர் பெற்ற இந்த காரில், இப்போது AMT  ஆப்ஷனும் சேர்ந்திருக்கிறது. காரின் அனைத்து வேரியன்ட்களிலும் பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு என்பது ப்ளஸ். டாப் வேரியன்ட்டில் LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ஸ்மார்ட் பிளே டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஹெட்லைட்ஸ், ரிவர்ஸ் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட் என ப்ரீமியம் வசதிகள் இடம் பெற்று விட்டதால், ஸ்விஃப்ட் மறுபடி மகுடம் தரிக்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

டந்த ஆண்டு மே மாதத்தில் அமேஸ் வெளிவந்தது. எப்படி முதல் தலைமுறை அமேஸில் ஹோண்டாவின் முதல் டீசல் இன்ஜின் வெளிவந்ததோ, அதேபோல இரண்டாம் தலைமுறை அமேஸில் இந்தியாவிலேயே முதன்முறையாக டீசல் இன்ஜின் - CVT கூட்டணி இடம்பெற்றிருந்தது. மேலும் பிராக்டிக்கலான கேபின் ப்ரீமியமாக மாறியிருந்ததுடன், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் காரில் புதிய சிறப்பம்சங்கள் (Shark Fin Antenna, க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா) வழங்கப் பட்டிருந்தன. பின்பக்க இடவசதிக்கு முக்கியத்துவம் கொண்ட மாடலாக அறியப்படும் அமேஸ், அறிமுகமான ஐந்து மாதத்தில் 50,000 கார்கள் விற்பனையாகிவிட்டன. ஹோண்டாவின் வரலாற்றில் இது நிச்சயம் ஒரு மைல்கல்தான். அமேஸுக்கு வாழ்த்துகள்!

மோட்டார் விகடன் விருதுகள் 2019

மிட்சைஸ் செடான் என்றாலே பலருக்கு சிட்டி - சியாஸ் - வெர்னா கார்கள்தான் நினைவுக்கு வந்த நிலையில், சிலருக்கு இப்போது யாரிஸ் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அதற்கான டொயோட்டாவின் உழைப்பு பெரியது. 7 காற்றுப்பைகள், டயர் ப்ரெஷர் வார்னிங்,  பார்க்கிங் சென்சார்கள், விமானம்போல ரூஃப்பில் ரியர் ஏ.சி, டச் ஸ்க்ரீனில் Gesture Control... இந்த வசதிகள் எல்லாம் ஒரு மிட்சைஸ் செடானில் என்றால் நம்ப முடிகிறதா? ஓட்டுதல் அனுபவத்திலும் பாஸ்மார்க். ASEAN NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றுள்ளது யாரிஸ். விலைதான் கொஞ்சம் 'உச்' கொட்ட வைக்கிறது. இருந்தாலும்  வசதிகளிலும் பிராக்டிக்காலிட்டியிலும் டிஸ்டிங்ஷன் வாங்கியுள்ள யாரிஸ்-க்கு இந்த விலை கொடுப்பதில் நஷ்டமில்லை. இப்போதைக்கு ஒரே ஒரு குறை - டீசல் இல்லை என்பதுதான். அடுத்த ஆண்டு டீசலுக்கு ஓட்டுப்போட ரெடியாகலாமா டொயோட்டா?

மோட்டார் விகடன் விருதுகள் 2019

டொயோட்டாவின் சர்வதேச TNGA பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட GA-K பிளாட்ஃபார்மில் தயாராகியிருக்கும் 7-வது தலைமுறை ES300h, அசப்பில் மினி LS500h போலவே தோற்றத்தில் அசத்துகிறது. இதே விலையில் கிடைக்கும் ஜெர்மானிய கார்களுக்கு இணையாக ஸ்போர்ட்டியான டிசைன், ஒட்டுமொத்தத் தரம், அதிகப்படியான வசதிகள், சொகுசான ஓட்டுதல் அனுபவம், லேட்டஸ்ட் தொழில்நுட்பம், ப்ரீமியம் கேபின் ஆகியவற்றில் ஈர்க்கும் ES300h, ஒரு Euro-6 ஹைபிரிட் கார்.

சுமார் 65 லட்ச ரூபாய் காரில் மைலேஜும் அசத்தல். நிலைத்தன்மையிலும் அசத்திவிடுகிறது ES300h. காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு ஒரு காஸ்ட்லி சாய்ஸ் இருக்கிறது என்றால், அது போன ஆண்டு வந்த லெக்ஸஸ் ES300hதான்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

து அடிப்படையில் சர்வதேசச் சந்தைகளில் கிடைக்கும் ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் G4 எஸ்யூவிதான். ஆனால் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் வசதிகள், சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒட்டுமொத்தத் தரம், அலுமினியம் மற்றும் லெதர் வேலைப்பாடுகளுடன் கூடிய டேஷ்போர்டு எனக் கவர்ந்திழுக்கிறது. தவிர 360 டிகிரி கேமரா - TPMS - சீட் மெமரி, Nappa லெதர் சீட்கள் - 9 காற்றுப்பைகள் - ESP, HDC, ARP, HAC, ABS, EBD, ESS எனச் சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் விஷயத்தில், புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது ஆல்ட்டுராஸ். ஸ்மூத் இன்ஜின் - கியர்பாக்ஸ், ஈஸி ஓட்டுதலுக்குக் கைகொடுக்கும் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவை இருப்பது ப்ளஸ். விலை விஷயத்திலும் போட்டியாளர்களுக்குக் கடும் சவால் விடுத்த ஆல்ட்டுராஸ்தான் இந்த ஆண்டின் சிறந்த எக்ஸிக்யூட்டிவ் எஸ்யூவி.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

Women’s World Car of the Year - 2018 விருதைப் பெற்ற வால்வோ XC40 எஸ்யூவி, Euro NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு மட்டும் என 700 கார்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல் பேட்ச்சான 200 R-Design கார்கள் அதன் அறிமுகத்துக்கு முன்பாகவே புக் செய்யப்பட்டன. இதனால் திக்கு முக்காடிப்போன வால்வோ, விலை குறைவான Momentum வேரியன்ட் மற்றும் டாப் வேரியன்ட்டான Inscription-யை விரைவாகக் களமிறக்கியது. பின்பக்க இடவசதி குறைவு என்றாலும், XC60 போன்ற டிசைன், காஸ்ட்லி வால்வோக்களில் இருக்கும் அதே பாணியிலான கேபின், ஏராளமான சிறப்பம்சங்கள், சீராகவும் ஸ்மூத்தாகவும் இயங்கும் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணி, கச்சிதமான ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் செட்-அப் என இந்த வகை கார்களுக்குத் தேவையான அம்சங்கள் எல்லாம் பக்காவாக அமைந்திருப்பதே வெற்றிக்குக் காரணம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ஃப்ரன்ட் இன்ஜின் - ரியர் வீல் டிரைவ் கார்களுக்குப் பெயர் பெற்ற பிஎம்டபிள்யூ, இந்தியாவில் தனது முதல் 2 சீரிஸ் காரைக் களமிறக்கியுள்ளது. வழக்கமான 2 சீரிஸ் கூபே காரை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட M2 Competition-தான், M ரக கார்களில் சிறிய மாடல். ஆனால், இதில் இருப்பது 410bhp பவர் மற்றும் 55kgm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.2 விநாடியில் எட்டிப்பிடிக்கும் M2 Competition, அதிகபட்சமாக 250 கிமீ வேகம் வரை செல்கிறது. இப்படிப்பட்ட காரின் Quad எக்ஸாஸ்ட் அமைப்பு வெளியிடும் சத்தத்தைக்கூட டிரைவர் தனக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். போர்ஷே 718 Cayman காருடன் போட்டியிடும் M2 Competition, குறைவான விலை மற்றும் பவர்ஃபுல் இன்ஜின் விஷயத்தில், இந்த விருதுக்குத் தகுதி பெறுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ஹிந்திரா TUV 300 ப்ளஸ் மற்றும் ஸைலோ ஆகிய கார்களை எம்பிவி செக்மென்ட்டில் மஹிந்திரா ஏற்கெனவே விற்பனை செய்துவருகிறது. அப்படியிருக்க, ஏன் மராத்ஸோ? எர்டிகா தவிர லாஜி, BR-V.... ஏன் ஹெக்ஸா மற்றும் இனோவா க்ரிஸ்டா ஆகியவற்றுடன்கூட ஒப்பீட்டளவில் போட்டி போடுவதற்கு இது தேவை என மஹிந்திரா கருதியிருக்கிறது. அடுத்த செக்மென்ட் கார்களுடனும் போட்டியிடுகிறோம் என்பதால், ஃப்ரன்ட் வீல் டிரைவ் அமைப்பு - மோனோகாக் பாடி - லேடர் ஃப்ரேம் சேஸி என்ற வித்தியாசமான காம்பினேஷனில் ரெடியாகி இருக்கிறது மராத்ஸோ. Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டிலும் 4 ஸ்டார் ரேட்டிங். எனவே யுட்டிலிட்டி வாகனத்துக்குத் தேவையான உறுதியும், சிறிய கார்களை ஓட்டுவது போன்ற கையாளுமையும், செடான் கார்கள் போன்ற சொகுசும் ஒருசேரக் கிடைத்திருப்பதால், இந்த ஆண்டின் சிறந்த எம்பிவிக்கான விருதினைப் பெறுகிறது மராத்ஸோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ஃப்ரீஸ்டைல் வந்தபோதே, புதிய ஆஸ்பயரில் என்ன இருக்கும் என ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. குறைவான விலையில் ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கி, ஆனந்த அதிர்ச்சி தந்தது ஃபோர்டு. மேலும், அமேஸ் போலவே இதுவும் பிரத்யேகமான சர்வீஸ் மற்றும் வாரன்ட்டி திட்டங்களை வழங்கியது. ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டில் மேம்படுத்தப்பட்ட டிசைன், புதிய பவர்ஃபுல் பெட்ரோல் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணி, புதிய டேஷ்போர்டு மற்றும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர் - ரிவர்ஸ் கேமரா - 15 இன்ச் அலாய் வீல் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவை ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஓட்டுதல் அனுபவம், போதுமான பிராக்டிக்காலிட்டி, டீசல் இன்ஜினின் அதிரடி பெர்ஃபாமென்ஸ், 6 காற்றுப்பைகள் போன்ற அம்சங்களுடன் சேரும்போது, புதிய காம்பேக்ட் செடான் வாங்க விரும்புவோருக்கு ஒரு நல்ல சாய்ஸ் கிடைத்தது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

மாருதி சுஸூகிக்கு பெலினோ RS, ஃபோக்ஸ்வாகனுக்கு GT TSi, ஃபியட்டுக்கு அபார்த்... இந்த வரிசையில் டாடாவுக்கு JTP. வழக்கமான மாடலைவிட இந்த பேட்ஜிங் உடன் வரும் கார்களின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமை சிறப்பாக இருக்கும். அதைச் செய்திருக்கும் விதத்தில், டாடா மோட்டார்ஸ் சிக்ஸர் அடித்திருக்கிறது. நெக்ஸானில் இருந்து டர்போ பெட்ரோல் இன்ஜினை மட்டும் எடுத்துக்கொண்டு, டியாகோ மற்றும் டிகோரின் மெக்கானிக்கல் பேக்கேஜைக்கொண்டே, பக்காவான பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் காரை வெளியிட்டு அசத்தியிருக்கிறது டாடா.  தேவையான அளவு வெளிப்புற டிசைன் மாற்றங்கள், கேபினில் ரசிக்கும்படியான அம்சங்கள், சிறப்பான ரோடு கிரிப்பைத் தரும் அகலமான டயர்கள், சஸ்பென்ஷனில் குட்டியான ஆனால் பெர்ஃபெக்ட் மாற்றம் என நம் ஊருக்கு ஏற்றபடியான பிராக்டிக்கலான காம்பேக்ட் பெர்ஃபாமென்ஸ் கார், போன ஆண்டு வெளிவந்த டியாகோ JTP மற்றும் டிகோர் JTP தான். 

மோட்டார் விகடன் விருதுகள் 2019

பெட்ரோல் விலை எக்குத்தப்பாக ஏறியபோதும், இந்த ஆண்டு பெர்ஃபாமென்ஸ் பைக்ஸ்தான் அதிக கவனம் பெற்றன. ஸ்கூட்டரிலும் 125சிசி செக்மென்ட்தான் ஹாட்! இந்த ஆண்டு வந்த பைக்குகளில் ‘உங்களுக்குப் பிடித்தது எது?' என்று கேட்டபோது டெஸ்ட் ரைடர்கள், ரேஸர்கள், இன்ஜினீயர்கள், இளைஞர்கள் என எல்லோரும் டிக் அடித்த ஒரே பைக் யமஹா R15 V3.0. கார்களில் இருக்கும் VVA தொழில்நுட்பத்தை 150cc பைக்கில் அறிமுகப்படுத்தியது, ஸ்லிப்பர் க்ளட்ச் கொண்டுவந்தது, செக்மென்ட்டின் பவர்ஃபுல் LED ஹெட்லைட்ஸ் கொடுத்தது என யமஹாவுக்கு லைக்ஸ் குவிந்தன. ரைடிங்கில், டிசைனில், விற்பனையில் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் கண்டு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த யமஹா YZF R15 V3.0 தான் இந்த ஆண்டின் சிறந்த பைக்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ந்த ஆண்டு கம்யூட்டர் செக்மென்ட்டில், புதிய பைக்குகளைவிட ‘ஃபேஸ்லிஃப்ட்’-தான் அதிகம். சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களை அதிகம் கவர்ந்த ஸ்ப்ளெண்டருக்குப் போட்டியாக, ரேடியானைக் களமிறக்கியது டிவிஎஸ். வீடு, அலுவலகம், டிராஃபிக், கடைத்தெரு என ஒரு கம்யூட்டர் பைக்கின் வாழ்க்கை இவ்வளவுதான். நல்ல மைலேஜ், குறைவான பராமரிப்பு, நம்பகத்தன்மை மட்டுமல்லாமல், டிசைனிலும் சிறிய அம்சங்களை வைத்தே தன்னை தனித்துக் காட்டுகிறது ரேடியான். சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், LED DRL, USB சார்ஜிங், டியூப்லெஸ் டயர், SBT என கிராமப்புற கம்யூட்டருக்கு மாடர்ன் டச் கொடுத்திருப்பதால், ரேடியான் மற்ற பைக்குகளை முந்தி வெற்றியாளராக மாறியுள்ளது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

‘கம்யூட்டர் ஸ்டைல் தேவையில்லை, நெடுஞ்சாலையில் வேகமாகப் போகும் அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் இருக்க வேண்டும்; மைலேஜ் அடிவாங்கக் கூடாது' என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் கேட்பவர்கள்தான் இந்த ‘எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர்’ விரும்பிகள். இந்த ஆண்டு புதிதாக வந்த ஹோண்டாவின் X-Blade-க்கும், அப்பாச்சியின் RTR 1604V பைக்குக்கும் கடும் போட்டி. பவர், ஸ்டைல், தரம், ஃபன் டு ரைடு, தொழில்நுட்பம், வசதிகள் எல்லாவற்றையும் ஒப்பிடும்போது
X-Blade பின்வாங்கிவிடுகிறது. பவர், ரைடிங் விஷயத்தில் இந்த செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் ஜிக்ஸர் மற்றும் ஹார்னெட்டைக்கூட முந்திவிடும் அப்பாச்சிக்குத்தான் இந்த விருது போய்ச் சேர வேண்டும்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

மிட் சைஸ் செக்மென்ட்டில், 300-600 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகள், இந்த ஆண்டு அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன. இதில் க்ளீவ்லேண்ட், மோட்டோ ராயல் என புது நிறுவனங்களும் அடக்கம். மோஜோ UT300, நின்ஜா 300 ABS, யமஹா YZF-R3 ABS, ஹோண்டா CBR 650F என பழைய பைக்குகளும் கம்பேக் கொடுத்திருக்கின்றன. நின்ஜா 400, கவாஸாகி வல்கன் S, பிஎம்டபிள்யூ G310R, G310GS, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர்/கான்டினென்ட்டல் GT 650 எனப் புது பைக்குகளும் அறிமுகமாகியுள்ளன. ஜாவா, ஜாவா 42 என ஜாவா பிராண்ட் புத்துயிர் பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு இந்த முறை விலை, தொழில்நுட்பம், வசதிகள், ரைடிங், தரம், டிசைன் என எல்லாவற்றிலும் முன்னேறியுள்ளது. விலை யாருமே எதிர்பார்க்காதது. முன்னே சொன்ன பைக்குகளுக்கு டஃப் கொடுப்பதால், இதுவே வெற்றியாளர்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ப்ரீமியம் பைக்குகளில் ட்ரையம்ப் போனவில் ஸ்பீடுமாஸ்டர், இந்தியன் ரோடு மாஸ்டர், டுகாட்டி பனிகாலே V4, டுகாட்டி மான்ஸ்டர் 821, கவாஸாகி Z900RS, ஹார்லி லோ ரைடர் எனப் போட்டி சூடு பிடித்தது. தொழில்நுட்பத்தை முன்னிறுத்திப் பார்க்கும்போது ஹார்லியும், ரோடுமாஸ்டரும் விலகிவிட்டன. சூப்பர் பைக்குக்கும் கொஞ்சம் பிராக்டிக்காலிட்டி தேவை என்று பார்க்கும்போது பனிகாலே V4 விலகிவிட்டது. போட்டியில் மிஞ்சிய ஸ்பீடு மாஸ்டர், மான்ஸ்டர் 821 பைக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கொடுக்கும் வசதிகளுக்கும் விலைக்கும் பெரிய முரண்பாடு உள்ளது. 10 லட்ச ரூபாய்க்கு மேல் இவர்கள் கொடுக்கும் வசதிகளையும், தரத்தையும், தொழில்நுட்பத்தையும், ரைடிங்கையும் சுஸூகி 7.57 லட்சத்திலேயே கொடுக்கிறது. தரத்தில் தன்னைத் தாழ்த்திக்கொள்ளாமல், விலையையும் கட்டுப்படுத்தி, சுஸூகி GSX-S750 பெஸ்ட் ப்ரீமியம் பைக் என்று நம்மிடம் மட்டுமில்லை, மக்களிடமும் பெயர் எடுத்துவிட்டது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

பாய வேண்டும், பறக்க வேண்டும், ட்ரிஃப்ட் அடிக்க வேண்டும், மலை-காடு-ஆறு என எந்தப் பாதையாக இருந்தாலும், நம்மைக் கூட்டிப்போக வேண்டும்... அதுதான் அட்வென்ச்சர் பைக்குக்கு அழகு. இந்த ஆண்டு அட்வென்ச்சர் செக்மென்ட்டில் SWM சூப்பர் டூயல், பிஎம்டபிள்யூ F750GS/F850GS, டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100, ஹோண்டா CRF1000 ஆஃப்ரிக்கா ட்வின், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட், ட்ரையம்ப் டைகர் 800/1200 மற்றும் சுஸூகி V-Strom 650XT பைக்குகள் போட்டியிட்டன. 14 லட்ச ரூபாய் பிஎம்டபிள்யூ பைக்கில் இருக்கும் அத்தனை அம்சங்களும், 8 லட்ச ரூபாய் சுஸூகி V-Strom-ல் இருக்கிறது. ஒரு அட்வென்ச்சர் பைக்காக மட்டுமில்லாமல், சிட்டிக்குள் நிதானமான வேகத்திலும் பட்டையைக் கிளப்புகிறது V-Strom 650. இதில் உங்களுக்குக் கிடைக்கும் ஃபீலிங், அட்வென்ச்சர் பைக்குகளுக்கு உங்களை அடிமையாக்கிவிடும்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ந்தியாவின் விலை குறைவான 125சிசி ஸ்கூட்டர் இதுதான்! இந்தியாவின் முதல் புளூடூத் ஸ்கூட்டர் எனும் பெயரோடு வெளிவந்துள்ளது என்டார்க் 125. ஸ்போர்ட்டியான டிசைன், ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், வசதிகள், இன்ஜின் ரீஃபைன்மென்ட், பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம் என்று டெக்னிக்கலாகவும் அசத்தி  கமர்ஷியலாகவும்  வெற்றி பெற்றிருக்கும் என்டார்க்தான் இந்த ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தபடியே டாடா மோட்டார்ஸ், கடந்த வருடத்தில் பெரிய விஷயங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. `5 ஸ்டார் ரேட்டிங்குக்கு ஏற்ப, Global NCAP-க்கு இந்தியாவிலிருந்து ஒரு கார்’ என நெக்ஸானை இந்த நிறுவனம் கூர்தீட்டியிருக்கிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் போக்கை அறிந்து, டியாகோ NRG மற்றும் டியாகோ XZ+, டிகோர் பேஸ்லிஃப்ட், நெக்ஸானில் AMT ஆப்ஷன், ஹெக்ஸாவில் XM+ எனும் புதிய மிட் வேரியன்ட், ஸ்போர்ட்டியான JTP கார்கள் எனக் கச்சிதமாகக் காய்களை நகர்த்தியது டாடா மோட்டார்ஸ். இத்துடன் நின்றுவிடாமல், 2019-ம் ஆண்டில் JLR பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட ஹேரியர் ப்ரீமியம் எஸ்யூவி, i20 மற்றும் பெலினோவுக்குப் போட்டியாக 45X ப்ரீமியம் ஹேட்ச்பேக், 2020-ல் புதிய H7X 7 சீட்டர் எஸ்யூவி என வருங்காலத்துக்கும் இந்த நிறுவனம் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த கார் தயாரிப்பாளரான டாடாவின் ட்ரீட், அடுத்த ஆண்டும் தொடரலாம்.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ழக்கம்போல இந்த ஆண்டும் ஜெகன்தான் நேஷனல் சாம்பியன். சென்ற ஆண்டு வரை டபுள் ஹாட்ரிக் சாம்பியன் - இப்போது அடுத்த லெவல். அதாவது, தொடர்ந்து 7 தடவை சாம்பியன்ஷிப் பட்டம் தட்டிய பெருமை ஜெகனுக்கு உண்டு. ஆனால், ஜெகனுக்கு இது 8-வது சாம்பியன்ஷிப். ஆம்! 2009-ல் ஒரு சாம்பியன்ஷிப் கோப்பை ஜெயித்திருக்கிறார். 2010, 2011 - இரண்டு ஆண்டுகள் மட்டும்தான், அவர் கோப்பையைத் தவறவிட்ட ஆண்டுகள். அப்பா ஆட்டோ டிரைவர், அம்மா டெய்லர் என்று சாதாரண குடும்பப் பின்னணியில் வளர்ந்து, பைக்குக்கு பெட்ரோல் போடவே வழியில்லாமல், பஸ்ஸில் திருவல்லிக்கேணியில் இருந்து இருங்காட்டுக்கோட்டை வரை சென்று பார்த்த ஜெகன் - இப்போது இந்தியாவே உச்சி முகரும் பைக் ரேஸர். சாம்பியன்ஷிப் பட்டங்கள் மட்டுமல்ல; மோ.வி விருதும் ஜெகனுக்குப் பழசுதான். ரேஸுக்குப் பெருமை சேர்க்கும் ஜெகனுக்கு, இம்முறையும் சிறந்த ரேஸர் விருது தருவதில் பெருமையடைகிறது மோட்டார் விகடன்.  

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ன்ப்ளஸ் நிறுவனம் 3, 3T, 5, 5T வரிசையில் இந்த ஆண்டு மே மாதம் 6-ஐ வெளியிட, இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ப்ரீமியம் மொபைல்களுள் ஒன்றானது. இந்த நவம்பரில் வந்த 6T, 6-ஐ விடவும் சிறப்பு. டியூ டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, லேட்டஸ்ட் ப்ராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, 20 MP + 16 MP டூயல் ரியர் கேமரா ,16 MP ஃப்ரன்ட் கேமரா, ஆக்ஸிஜன் OS-ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் என இந்த ஆண்டின் டாப் ஸ்பெக்ஸ் அனைத்து ஏரியாவிலும் அசத்துகிறது. விலை, ஸ்பெக்ஸ் தாண்டி தினசரிப் பயன்பாட்டுக்கும் இது வசதியாக இருக்கிறது. அதனால் மக்களின் ஃபேவரைட் மொபைலாகவும் ஒன்ப்ளஸ் 6T மாறியது. ‘மொபைல் ஆஃப் தி இயர்’ என்ற பெருமையையும் ஜெயிக்கிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

டூயல் ரியர் கேமரா என 2017-ல் விளம்பரம் செய்த மொபைல் நிறுவனங்களில் சில, இந்த ஆண்டு டிரிப்பிள் ரியர் கேமரா வரை சென்றுவிட்டன. சாம்சங், 4 ரியர் கேமரா வரை போய்விட்டது. ஆனால், நான் ‘ஒரே ஒன்... சூப்பர் ஒன்’ எனச் சொல்லி அடிக்கிறது, கூகுள் பிக்ஸல் 3 XL-ல் இருக்கும் சிங்கிள் கேமரா. பெஸ்ட் கேமரா என்றால், யோசிக்காமல் பிக்ஸல்-க்கு டிக் அடிக்கும் அளவுக்கு நல்ல பெயரெடுத்து வைத்திருக்கிறது. Qualcomm® Snapdragon™ 845 ப்ராசஸர், அதிவேக டைப் சி-சார்ஜிங், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் என இந்த ஆண்டின் டாப் ஸ்பெக்ஸ் அனைத்தும், கூகுள் பிக்ஸலில் இருக்கிறது. மேலும் கூகுளின் நேரடி மொபைல் என்பதால், இயங்குதளமும் user interfaceம் வாவ் ரகம். கேமரா ப்ரியர்களுக்கு இந்த ஆண்டின் ‘செல்ஃபி புள்ள’ சாய்ஸாக, கூகுள் பிக்ஸல் 3 XL-வெற்றி பெறுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ப்ரீமியம் செக்மென்ட் மொபைல்களில் இருக்கும் வசதிகள், பெரும்பாலும் மிட் பட்ஜெட் மொபைல்களில் இருப்பதில்லை. ஆனால், அவற்றை டிசைனில் கொண்டு வருவதன் மூலம் ஹிட் அடித்திருக்கிறது ரியல்மீ. ரியல்மீ 1, ரியல்மீ 2, ரியல்மீ 2 ப்ரோ என அடுத்தடுத்து இந்தாண்டு மொபைல்களை வெளியிட்டது இந்த நிறுவனம். மிட் பட்ஜெட் மொபைல்கள் நாட்ச் டிசைனிலும், டூயல் ரியர் கேமராவிலும் தங்களின் பார்வையைச் செலுத்த, 'நாங்கள் அதற்கும் மேலே' என டியூ டிராப் நாட்ச், 8 GB ரேம் - 128 GB ஸ்டோரேஜ் எனக் களமிறங்கியது. இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் 3.0, ரியல்மீ 2 ப்ரோதான்! ட்ரிப்பிள் கார்டு ஸ்லாட், ஃபேஸ் அன்லாக், 3500 mAh பேட்டரி, 128 GB இன்டர்னல் மெமரி, 8 GB ரேம் என அனைத்து பாக்ஸிலும் டிக் அடித்திருக்கிறது ரியல்மீ 2 ப்ரோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ப்போவின் கிளை நிறுவனமான ரியல்மீ ரூ.20,000 செக்மென்ட்டில் ஆச்சர்யப்படுத்தியது என்றால், இந்த பட்ஜெட்டில் ஆச்சர்யம் கொள்ள வைத்தது, ஷியோமியின் புதிய கிளை நிறுவனமான போக்கோ. நேரடியாகவே, ஒன்ப்ளஸ் 6-ஐ விட சுமார் பத்து முதல் பதினைந்தாயிரம் ரூபாய் குறைவு என விளம்பரம் செய்தது போக்கோ. கிட்டத்தட்ட அதே ஸ்பெக்ஸ். Qualcomm® Snapdragon™ 845 புராசஸர், 4000 mAh பேட்டரி, 20 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா, 12 MP + 5 MP டூயல் ரியர் கேமரா, டைப் சி போர்ட்டுடன் கூடிய அதிவேக சார்ஜிங் வசதி என இந்த ஆண்டுக்கான மற்ற மிட்ரேஞ்ச் மொபைல்களை ‘கோ கோ’ எனச் சொல்லி ஹிட் அடித்திருக்கிறது போக்கோ.

மோட்டார் விகடன் விருதுகள் 2019

ஃபிட்னஸ் பேண்ட்கள் என்றாலே லக்ஸுரி கேட்ஜெட் என நினைத்துக்கொண்டிருந்த அனைவரின் கைகளிலும், பட்ஜெட் விலையில் ஃபிட்பேண்ட்டைக் கட்டி அழகு பார்த்தது Mi.  இரண்டாயிரம் ரூபாய்க்குள் ஃபிட்பேண்ட்டை அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சந்தைக்கு வந்தன புதிய பட்ஜெட் பேண்ட்கள். ஆனால், Mi-க்கான இடம் துளியும் குறையவில்லை. ஏற்கெனவே ஹிட் அடித்த ஸ்மார்ட் பேண்டை மெருகேற்றி, பேண்ட் 3-ஐ 2018-ல் வெளியிட்டது Mi. 0.78 இன்ச் டச் ஸ்கிரீன் OLED டிஸ்ப்ளே, வாட்டர் ப்ரூஃப் டிசைன், 110 mAh பேட்டரி என நிறையவே அப்டேட் கொடுத்து தம்ஸ்-அப் வாங்குகிறது Mi பேண்ட் 3.