சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

சூப்பர் ஹீரோஸ்!

சூப்பர் ஹீரோஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் ஹீரோஸ்!

லிஸ்ஸி வெலாஸ்க்வேஸ் - பேரழகியின் கதை

ன்ன வார்த்தையைப் போட்டுத் தேடினாலும் செய்தி சொல்லும் கூகுளில், ‘World’s Ugliest Woman’ என்ற வார்த்தைகளைத்  தட்டினால், லிஸ்ஸி முகம் வரும். யார் அவருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்தது?

உலகின் சக மனிதர்களே. தன்னை இகழ்ந்தவர்களைப் புறந்தள்ளி,  தன்னம்பிக்கையின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறார், லிஸ்ஸி.

சூப்பர் ஹீரோஸ்!

1989-ம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரம். குறைப்பிரசவத்தில் பிறந்தாள் லிஸ்ஸி. அவளது எடை 1.219 கிலோகிராம் மட்டுமே. குறைகளின் மொத்த உருவமாகப் பிறந்தவளை பார்த்த மருத்துவர்கள், ‘இந்தக் குழந்தை ரொம்ப நாள் உயிருடன் இருக்காது’ என்றார்கள்.

பெற்றோர் கண்ணீர் விட்டாலும், நம்பிக்கையுடன் குழந்தையை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். லிஸ்ஸி வெலாஸ்க்வேஸ் என்று பெயரிட்டார்கள்.

இயல்பான குழந்தையாக அவள் வளரவில்லை. அடிக்கடி நோய்வாய்ப் பட்டாள். Rare Congenital Disease பாதிப்பு இருப்பது தெரிந்தது. அது குணப்படுத்த முடியாத நோய். எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பில் சதை போடாது. அதிகமாகவும் சாப்பிட முடியாது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிகக் குறைவாகவே இருக்கும். எனவே, லிஸ்ஸிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. நான்கு வயதில் அவளது வலது கண்பார்வையும் பறிபோனது.

இத்தனைக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், பெற்றோர் லிஸ்ஸியை நம்பிக்கையுடன் வளர்த்தனர். கிண்டர் கார்டனுக்கு முதல் நாள் அழைத்துச் சென்றபோது, பிற குழந்தைகள் விலகிச்சென்றன. லிஸ்ஸி, தன் ஐந்தாவது வயதிலேயே சமூகத்தின் புறக்கணிப்பைச் சந்தித்தாள்.

விவரம் புரிய ஆரம்பித்ததும், ‘நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?’ எனக் கண்ணீர் விட்டாள். பெற்றோரும் உடன்பிறந்தோரும் லிஸ்ஸி மீது பாசம் காட்டி, துவண்டுபோகாமல் பார்த்துக்கொண்டனர். வளர வளர தனது உடல் மற்றும் மனவேதனைகளைத் தாங்கிக்கொண்டு வாழப் பழகினாள் லிஸ்ஸி.

லிஸ்ஸி வாழ்வின் திருப்புமுனை,  பதினேழாவது வயதில் உண்டானது. ஒருநாள் எதேச்சையாக யூடியூபில் ஒரு வீடியோ க்ளிப்பைப் பார்த்தாள். World’s Ugliest Woman என்று தலைப்பிடப்பட்ட 8 நொடிகளேகொண்ட க்ளிப் அது. அந்த வீடியோவில், உலகின் அசிங்கமான பெண் என்று தன் புகைப்படங்களைத்தான் போட்டிருக்கிறார்கள் என்று லிஸ்ஸி உணர்ந்தாள். அதை சுமார் 40 மில்லியன் நபர்கள் பார்வையிட்டிருந்தனர்.

சூப்பர் ஹீரோஸ்!

அந்த வீடியோவின் கீழே மோசமான விமர்சனங்கள் வந்திருந்தன. ‘இவளை ஏன் பெற்றோர் இன்னும் கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறார்கள்?’, ‘அய்யய்யே... அசிங்கமான மிருகம்’, ‘இவளை நெருப்பில் கொளுத்துங்கள்’, ‘இவளை நேரில் பார்த்தால் பார்வை பறிபோய்விடும்’, ‘இன்னுமா இவள் தற்கொலை செய்துகொள்ளவில்லை?’ – இப்படி நெஞ்சைப் பொசுக்கும் ஆயிரக்கணக்கான வார்த்தைகள். ஒவ்வொன்றையும் கண்ணீருடன் வாசித்தாள் லிஸ்ஸி.

அந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு மத்தியில், ஒரே ஒரு பாஸிட்டிவ் கமெண்ட். ‘அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள்.  அவளுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்துகொண்டு பேசுங்கள்.’

யாரோ ஒரு நல்லவரின் வார்த்தைகள், லிஸ்ஸியை வேதனையிலிருந்து மீட்டெடுத்தது. ‘என் தோற்றம் எனது பிழையல்ல. இப்படி இருக்கிறதே என்று நம்பிக்கையிழந்து தோற்றுப் போனால்தான் அது பெரும்பிழை’ என நினைத்தாள்.

பாத்ரூம் கண்ணாடி முன்பு சென்று நின்றாள். தன்னையே ரசிக்க ஆரம்பித்தாள். தன்னைப் பற்றிய நல்ல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். ‘நான் அன்பானவள். அடுத்தவர்கள் மீது அக்கறைகொண்டவள். எனக்குக் கவனிக்கும் சக்தி அதிகம். என் தலைமுடி எனக்குப் பிடித்திருக்கிறது. என் சிரிப்பை ரசிக்கிறேன்!’

இப்படி பாஸிட்டிவ் விஷயங்களை அந்தக் கண்ணாடி மீது எழுதியும் வைத்தாள். தினமும் அவற்றை படிக்கப் படிக்க, உறுதியாக ஓர் எண்ணம் வளர்ந்தது. ‘என் வெற்றிதான் எனக்கான அடையாளமாக இருக்க வேண்டும். என் தோற்றமல்ல!’

சூப்பர் ஹீரோஸ்!

அந்த வீடியோவுக்கான விமர்சனத்தில், ‘லிஸ்ஸி எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்ளலாம்’ என்று பலவிதமான ஆலோசனைகள் கூறப்பட்டிருந்தன. ‘நான் சாக வேண்டுமென விரும்பிய மக்களுக்கு, நம்பிக்கையுடன் வாழ்வதற்குரிய வழிகளைக் காட்ட விரும்புகிறேன்’ என்று களம் இறங்கினார்.

‘உலகின் அசிங்கமான பெண்’ என்று அடையாளப்படுத்தப்பட்ட லிஸ்ஸி, ‘Lizzie Beautiful’ என்ற தலைப்பில் சுயசரிதையை ஆங்கிலம், ஸ்பானிஷ் என இரு மொழிகளில் வெளியிட்டார் (2010).  தன்னைப் போலவே அவமானத்துக்குள்ளாகும் பருவ வயதினருக்கு நம்பிக்கையூட்ட, ‘Be Beautiful, Be You’ என்ற புத்தகத்தை (2012) எழுதி வெளியிட்டார்.

Choosing Happiness என்பது, லிஸ்ஸியின் இன்னொரு தன்னம்பிக்கைப் புத்தகம். அனைத்துக்கும் மேலாக, 2013-ம் ஆண்டில், TED என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நடத்திய மாநாட்டில் லிஸ்ஸி மேடையேறிப் பேசினார். தலைப்பு... ‘நீ உன்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய்?’

லிஸ்ஸியின் தைரியமான உடல்மொழியும் நம்பிக்கை ததும்பும் பேச்சும் அரங்கத்தையே கட்டிப் போட்டது. தெளிந்த சிந்தனை, தீர்க்கமான வார்த்தைகள், எதிர்மறை எண்ணங்களை இடது கையால் விலக்கி, நேர்மறை விதைகளைத் தூவிய அசாத்திய பிரயோகம், எதை அசிங்கம் என்றீர்களோ, அதுவே என் பலம் என்று நிரூபித்த நெஞ்சுரம், சடசடவென 10 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிச்சென்றது, அந்த யூடியூப் வீடியோ.

முன்பு லிஸ்ஸியைக் கேலி செய்த அதே உலகம், இன்றைக்கு அவரது வீடியோக்களால் தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டிருக்கிறது. ‘A Brave Heart: The Lizzie Velasquez Story’ என்று தன்னைப் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார் லிஸ்ஸி.

ஃபுல்ஸ்கிரீன் மீடியா (FullScreen Media) என்ற நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

‘என் உடலின் எடை வெறும் 27 கிலோதான். ஆனால், என் நம்பிக்கையின் எடை அளவிட இயலாதது’ என்று இந்த உலகத்துக்கு நிரூபித்து, கம்பீரமாக வலம்வருகிறார்,  லிஸ்ஸி என்ற பேரழகி.

முகில்