மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 19

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

நான்காம் சுவர் - 19

‘சினிமாவுக்குக் கதை வேண்டுமா... நாடகத்துக்குக் கதை வேண்டுமா... அணுகவும்’ என்ற அறிவிப்புப்பலகை கொண்ட கலையழகனின் மிதிவண்டி, கல்யாணி பேண்டு சர்வீஸ் முன்னால் வந்து நின்றது. ‘ஆம்ப்ளிஃபயரை’ சரிபார்த்துக்கொண்டிருந்த ஜம்பு, பார்த்துவிட்டான். மேடை நாடகம் என்பது, ஜம்புவின் வாழ்வில் ஓர் அங்கமாக மாறியிருந்தது. முன்பைப்போல மேடை நாடகத்தை விரும்புவதைவிட பாடல் கச்சேரிக்குத்தான் இப்போது மவுசு கூடியிருப்பதால், நாடகத்தைப் பகுதி நேரமாகத்தான் ஜம்புவுக்கு நடிக்க முடிந்தது. வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்த நான், பேண்டு கடையை எனது அட்டியாக மாற்றிக்கொண்டவன். 

நான்காம் சுவர் - 19

கலையழகன், மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்டு போட்டார். கொஞ்சம் மெலிந்திருந்தார். ஆனாலும், அவரது ‘போஷாக்கான’ முகம் ஜொலித்துக்கொண்டுதான் இருந்தது. வெகுநாள்களுக்குப் பிறகு அவர் வருகை ஜம்புவின் முதல் நாடக அரங்கேற்ற அனுபவத்தை எனக்கு நினைவுபடுத்தியது.

ஜம்பு, ஒரு நாற்காலியைத் துடைத்துவிட்டு கலையை உட்காரச் சொன்னான். ``மச்சி, சாருக்கு இஞ்சி போட்ட டீ... வாங்கிட்டு வந்துரு...’’ கலையிடம் திரும்பி ``சார்... கோல்டு ஃப்ளாக் சார்’’ என்று கேட்டான். கலை, `சரி’ என்பதாகத் தலையாட்டினார். ``சார், ரொம்ப நாளாயிருச்சு... எப்டி சார் இருக்கீங்க?’’

``குட் ஜம்பு... வெரி ஃபைன்... பட், நடுவுல கொஞ்சம் கேப் ஆகிடுச்சி. டிராமாவை இப்ப யாரும் புக் பண்ண வர மாட்றாங்க. நோ பிராப்ளம். ஆனா, நான் தொடர்ந்து எழுதிக்கிட்டு... இயங்கிட்டுதான் இருக்கேன். நதி மாதிரி உள்ளே ஓடிட்டுதான இருக்கும்’’ ஜோட்தலையில் இருந்து மூன்று லோட்டாவில் தேநீரை ஊற்றினேன். ஜம்பு, கலையை முதலில் எப்படிப் பார்த்தானோ அப்படித்தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அது, கலைக்கு அவன் தரும் மரியாதையன்றி வேறென்ன?

``ஜம்பு, முக்கியமான ஒரு விஷயமாத்தான் உன்னைப் பார்க்க வந்தேன். நேத்து ஒரு கால் வந்துச்சு. ஒரு பேய்க்கதை கேட்டு ஒரு புரொடியூசர் கால் பண்ணுனார். ஃபுல் பெளண்டு ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. டைட்டில் `உள்ளே வராதே.’ எப்டி இருக்கு?’’ என்று எங்களைப் பார்த்தார்.

ஜம்பு ``சூப்பரா இருக்கு சார். தியேட்டருக்கு வரவே பயப்படுவாங்க’’ என்றான்.

கலை சிரித்துக்கொண்டார். ``நாளைக்கு புரொடியூசருக்கு லைன் சொல்லப்போறேன். நீயும் குமாரியும் கூட வந்திங்கன்னா... உங்களையும் அறிமுகப்படுத்திடுவேன். எனக்கென்னமோ இது நடக்கும்னு தோணுது ஜம்பு’’ தேநீர் லோட்டாவை கலையிடம் கொடுத்தேன். என்னைப் பார்த்து ``ஆர் யூ ஃபைன்?’’ என்று கேட்டார்.

``நல்லா இருக்கேன் சார்’’ என்றேன். இப்போதும் அவரது வழக்கமான சிரிப்பைச் சிரித்துக்கொண்டார்.

நான்கு அடுக்கு குவார்ட்ரஸில்தான் ஜம்பு தன் காதல் மனைவியான சாந்தகுமாரியோடு தங்கியிருந்தான். பேட்டையில் ஜம்பு என்பதைவிட `கவர்ச்சி வில்லன்’ என்று கேட்டால் குழந்தைகூட வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடும். மேடை நாடகத்தில், ஜம்பு கவர்ச்சி வில்லன். குமாரி, அப்பாவி நாயகி. இருவரும் தோன்றும் காட்சியில் கதைப்படி ஒன்று குமாரியைக் கற்பழிக்க முயல்வான் அல்லது `காதலனைக் கொன்றுவிட்டாவது உன்னை என் உடைமையாக்கிக்கொள்வேன்’ என்று வில்லன் வசனம் பேசுவான். 

நான்காம் சுவர் - 19

``காயாக இருந்த நீ... கனியாக மாறியும்... தனியாக இருப்பது... அநியாயமே...’’ என்று கலையழகனின் பாடலை உச்சஸ்தாயியில் ஜம்பு கொடூரமாகப் பாடுவதைப் பார்த்தும் குமாரிக்கு எப்படி காதல் வந்தது என்பது எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம்தான். இதனால்தான் என்னவோ, காதலுக்குக் கண்கள் இல்லையென்று மூத்தவர்கள் சொல்லிவைத்தார்கள்போலும். ஆனால், ஸ்டேஜ் கிங், காதல் ரசத்தைச் சொட்ட விட்டு ஜிலேபிபோல வழுக்கி வழுக்கி வசனம் பேசிக்கொண்டிருப்பார். என்ன மாயம் என்றுதான் புரியவில்லை. குமாரி எனும் நாயகிக்கு ஜம்பு என்கிற வில்லனைத்தான் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் இப்படித்தான்போல, காதல் வசனம் என்றாலே கடுப்பாகிப்போகிறார்கள் பெண்கள்.

குழாயடியில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள் குமாரி. குழாயடியில் எப்போது தண்ணீர் வரும் என்று, கடவுளால்கூடச் சொல்ல முடியாத காரணத்தால், தண்ணீர்க் குழாயைச் சுற்றி காலிக் குடங்கள் எப்போதும் தண்ணீர் வந்துவிடும் என்று காத்துக்கொண்டிருக்கும். குழாயடியை ஒட்டியிருக்கும் தெருவின் நான்காவது மாடியில்தான் ஜம்பு இருக்கிறான். நமக்கும் சினிமா அபிலாஷைகள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த நேரம். கலையோடு சேர்ந்து தயாரிப்பாளரைப் பார்த்துவிட நானும் ஆர்வம்கொண்டேன்.

ஒலி குறைந்த தொலைக்காட்சிப் பெட்டியில் `கேட்டேளா அங்கே.... அதப் பார்த்தேளா இங்கே... எதையோ நினைச்சேள்... அதையே புடிச்சேன் நான்...’ மடிசார் கட்டி குலுக்குக் குலுக்கென ராணிசந்திரா ஆடிக்கொண்டிருந்தார். இப்படியான ஆட்டத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்துப்போன நடிகர் சிவகுமாரைப்போலவே தேமேவெனப் பார்த்துக்கொண்டிருந்தான் ஜம்பு.

``இன்னா மச்சி..?’’ என்று பாயில் உட்கார்ந்தேன்.

``வாடா... இந்த டைம்ல வந்திருக்க. இன்னா சரக்கா..?’’ குமாரி மூச்சிரைக்கக் குடத்தைத் தூக்கிக்கொண்டு வந்து வைத்தாள்.

``டீ போடுறேன் குடிச்சிட்டுப் போண்ணா’’ - குமாரி முந்தியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

``குமாரி, சாரு... பெரிய டீ சாப்பிட்டு வந்திருக்காரு. அவரு இந்த டீயெலாம் சாப்பிட மாட்டாரும்மா’’ என்று கலாய்த்தான். தூங்கிக்கொண்டிருந்த குழந்தை ஈரத்தோடு படுத்திருந்ததைக் கவனித்தவள் ``கொழந்த ஒண்ணுக்குப் போனதக்கூடப் பார்க்காம... இன்னாதான் பண்ணிக்கிட்டிருந்தே..?’’

இப்போது என்முறை. ``அத ஏம்மா கேக்குற... ராணிசந்திரா டான்ஸுல வாயில ஈ போறதுகூடத் தெரியாம பார்த்துட்டிருக்கான்மா’’ என்றபோது குமாரி சிரித்துக்கொண்டே ``ஆமா... டைரக்டரு வந்தாராமேண்ணா... நான் எதுக்குண்ணா வரணும்? நமக்கு சினிமால்லாம் வேணாம். தோ இதுதான் சினிமாவுல ஒரு சீனாவது வரணும்னு சொல்லிக்கினே இருக்கும். இது வந்தா போதும்ணா’’ குழந்தையின் உள்ளாடையைக் கழற்றி, போர்வை மூடி, தட்டிக்கொடுத்தாள்.

``இன்னா மச்சி பேசுது... ஒருகாலத்துல சாந்தகுமாரின்னா... கெழவன்லேருந்து குமரன் வரைக்கும் டாவடிச்சுட்டு இருந்தானுங்க.’’ இந்த இடத்தில் சாந்தகுமாரி வெட்கத்தில் ஒரு புன்னகையை உதிர்த்தாள். அது அவ்வளவு இயல்பாக இருந்தது.

``அவ்ளோ பெரிய மனுஷன்... நம்மள கூப்பிட்றாருன்னா... சும்மா போயிட்டு வந்தாதானே மரியாதையா இருக்கும். இன்னா மச்சி நான் சொல்றது?’’ என்று என்னிடம் முறையிட்டான் ஜம்பு.

``ஏம்மா, நாளைக்குப் போய்தான் பாப்போம். நாடகத்துலேயே நடிச்சு என்னத்த கண்ட... சினிமா கினிமான்னு போனாத்தான...’’ நானும் இந்த ஆட்டத்தில் சேர்ந்துகொண்டேன்.

``அண்ணா நீங்களும் புரியாமப் பேசுறீங்களே. நல்ல டிரஸ் பண்ணிக்கிட்டு, டச்சப்போட போனாத்தான் நல்லாருக்கும். இப்ப இருக்கிற நிலைமையில மேக்கப் கிட் வாங்குறதுக்குலாம் காசுக்கு எங்கண்ணா போறது? இவுர கூட்டிக்கிட்டுப் போண்ணா’’ என்று அடுப்பங்கரைக்குச் சென்றாள். ஜம்புவின் முகம் சற்றே இறுக்கமானது. கொடியில் தொங்கிக்கொண்டிருந்த சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு ``வெளிய போயிட்டு வரலாம் மச்சி’’ என்றான். கனத்த மௌனத்துடன் படிகளில் இறங்கினான்.

ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். ``போன மாசம் குடியாத்தத்துல லோக்கல் குரூப் செட் பண்ணுன நாடகத்துக்குப் போனோம். ராஜா காலத்துக் கதை. குமாரிதான் ராணி. நான் ராஜா. ஊருக்கே அள்ளிக் குடுக்கிற ராஜா. ராணி கேட்டதெல்லாம் வாங்கிக் குடுக்கிற ராஜா. ஆனா, நிஜத்துல லிப்ஸ்டிக்கூட வாங்க முடியாத ராணியாத்தான் குமாரி இருக்கிறா பாத்தியா மச்சி.’’

ஊருக்கே அள்ளிக் கொடுத்த ராஜா, பீடியை ஒட்ட இழுத்துச் சுண்டினார். ``ஒருவேளை என்னக் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா... குமாரிக்கு இருக்கிற திறமைக்கு... இந்நேரம் சினிமா ஹீரோயினா ஆகியிருக்கலாம்ல.’’ என்னைப் பார்த்தான்.
``மச்சி, இப்ப அவ சந்தோஷமா இருக்குறா. காசு மட்டும்தான் இல்ல. வேற என்ன கொற?’’ சமாளித்தேன் நான்.

``அதுதான் மச்சி கொற... கலைஞனா பொறந்துட்டா கொஞ்சம் காசும் இருக்கணும் மச்சி. இல்லைன்னா எந்தெந்த ரூபத்துலயோ... எவன் எவனோ வருவான். `நீ வேணா ஊன்னு சொல்லு, நான் உன்ன ராணி மாதிரி வெச்சிக்கிறேன். மேடையில ஆடினவதான... இதெல்லாம் சகஜம்தானே!’ன்னு கேட்டிருக்கான். நைட்டு அழுதுகினே சொன்னா குமாரி. இன்னா தெரியுமா மச்சி சொன்னா..?’’ நான் என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தேன்.

`` `மேடையில ஆடினவதானே... இதெல்லாம் சகஜம்தானேன்னு... அவன் என்னைப் பார்த்து எப்டி மாமா கேட்பான்? அப்போ மேடையில ஆடுற நான்லாம் தே***ளா மாமா?’ன்னு ‘ஓ’ன்னு அழுவுறா மச்சி. ஒரு உதவின்னு கேட்கப் போயிதானே மச்சி படுக்கக் கூப்புடுறான்... கலைஞனுக்குக் காசு வேணும் மச்சி. நடிச்சு வர்ற கைத்தட்டல்ல ஒரு லிப்ஸ்டிக்கூட வாங்க முடியலையே மச்சி’’ ஜம்பு நிதானம் இழந்தான். விட்டால் அழுதுவிடுவான்.

இது ஜம்புவின், குமாரியின் குமுறல்களாக மட்டும் எனக்குத் தெரியவில்லை. காலம்காலமாக `பார்வையாளர்கள்’ என்ற பெயரில் நாம் இந்த மனிதர்களை எப்படிப் பார்த்திருக்கிறோம் என்பதன் விளைவுதான் இது. பல மேடை நாடகக் கலைஞர்கள் வறுமையின் இயலாமையால் நம்மிடம் கேட்பது யாசகம் அல்ல... அவர்கள் நமக்குத் தந்த கலையெனும் பொக்கிஷத்துக்கு நாம்தான் அவர்களிடம் கடன்பட்டிருக்கிறோம் என்பது நமக்குப் புரியவேண்டியிருக்கிறது.

மறுநாள், மூவருமாக அந்தத் தயாரிப்பாளரின் அலுவலகத்தில் காத்திருந்தோம். கலை ஜம்மென்றிருந்தார். உள்ளே இருந்து வந்த ஒருவர், தயாரிப்பாளர் அழைத்ததாய்ச் சொன்னார். கலை எங்களையும் சேர்த்தே அறைக்குள் கூட்டிச்சென்றார். தயாரிப்பாளருக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து வந்தது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் உட்காரச் சொன்னார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாட்டியான ஒருவரைக் காட்டி, ``இந்தப் படத்தின் இயக்குநர்’’ என்று அறிமுகப்படுத்தினார். கலை, பதிலுக்கு எங்களை அறிமுகப்படுத்தினார்.

``இவன் என் சிஷ்யன் சார்... மேடை நாடகத்துல பத்து வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். ஈ இஸ் எ குட் ஆக்டர். பேரு ஜம்புலிங்கம்’’ என்றார். ஜம்புவின் முகம் அத்தனை பிரகாசமாய் மாறியது.

தயாரிப்பாளர் சிறு முகமன் கூறி ``ஆரம்பிச்சுடலாமா?’’ என்று இருவரும் தயாரானார்கள். எனக்கு உள்ளூர அப்படியொரு கிளர்ச்சி, முதல் தடவையாக ஒரு கதை சொல்லலை நேரடியாகப் பார்க்கப்போகிறேன். என்னதான் நாடகத்தில் புலியாக இருந்தாலும் சினிமா என்கிற காட்டில் அலைந்து திரிந்தால்தான் புலியைப் புலியென இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளும்.

ஒரு மணி நேரம் நாங்கள் பயந்து பிறகு சிரித்து, உருகி, நெகிழ்ந்துபோகும்படிக்கு அழகான பேய்க்கதையைச் சொன்னார் கலை. எனக்கெல்லாம் படம் பார்த்ததுபோலவே இருந்தது. சொல்லி முடித்ததும் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெருத்த மௌனத்தில் ஆழ்ந்தார்கள். சிறிது நேரம் எங்களை வெளியே உட்காரச் சொன்னார்கள். எனக்கும் ஜம்புவுக்கும் பதற்றமாக இருந்தது. எப்படியாவது தயாரிப்பாளர் சம்மதித்தால் ஜம்பு நடிகனாகிவிடுவான். நான் உதவியாளன் ஆகிவிடுவேன் என்று துடித்துக்கொண்டிருந்தோம்.

கலை எந்தச் சலனமுமில்லாமல் இருந்தார். `எத்தனை மேடையைக் கண்டவர்!’ என நினைத்துக்கொண்டேன். ஒருவர் வந்தார். கலையை மட்டும் உள்ளே வரச்சொன்னார். கலை, தயாரிப்பாளர் அறைக்குள் சென்றார். நானும் ஜம்புவும் ஊசிக்காற்றின் ஒலிபோலப் பேசிக்கொண்டோம்.

``மச்சி எப்டியும் சக்சஸ் ஆகிடும். எப்டியாவது குமாரிக்கு அந்தப் பேயோட ரோல் வாங்கிக் குடுத்துடலாம்டா’’ என்று சொல்ல, ``மவன வீட்டுக்கு வா... பேயாண்ட மாட்டி உட்டுர்றேன்.’’ சத்தமே வராமல் சிரித்துக்கொண்டோம். தயாரிப்பாளரின் கதவு திறக்கப்பட்டது. கலை வெளியே வந்தார். எங்களிடம் வந்து ``ஒரு டீ சாப்பிடலாமாய்யா?’’ என்று வெளியே நடந்தார். 

நான்காம் சுவர் - 19

தேநீரையும் கோல்டு ஃப்ளேக்கையும் வாங்கிக் கலையின் கையில் கொடுத்துவிட்டு அவரின் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தோம். எங்களின் அவஸ்தை தெரியாமல் தேநீரைப் பொறுமையாகக் குடித்தார்.

``என்ன சார் சொன்னாங்க?’’ ஜம்பு பொறுமையிழந்து கேட்டேவிட்டான்.

எங்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட கலை, நிதானமாகச் சொன்னார். ``ஒர்க்கவுட் ஆகாது ஜம்பு. அவங்களுக்கு நான் சொன்ன கதை பிடிக்கலையாம்’’ என்று சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டார்.

``சார், படம் பார்த்த மாதிரி இருந்துச்சு சார். நீங்க சொன்ன கதையில பிரச்னை இல்ல சார். அவனுங்களுக்கு ரசனை இல்ல சார்’’ என் ஆதங்கத்தைப் பதிவுசெய்தேன்.

``கதை புடிக்கலைன்னு சொன்னதுகூட எனக்கு வருத்தம் இல்ல ஜம்பு. `சினிமா பாஷையில கதை இல்ல... நாடக பாணியில இருக்கு’ன்றான். அவனுக்கு நாடகம்னா என்னன்னு தெரியும். சினிமான்னா என்னன்னு தெரியுமா... புல்ஷிட்!’’ என்று எழுந்தார். கிளம்பியவர் ``ஏதாவது நடக்கும் ஜம்பு’’ என்று நடந்தார்.

சில கலைஞர்களுக்கான நியாயத்தை, காலம் தரவே மாட்டேன் என்கிறது. பேண்டு சர்வீஸுக்கு வியர்த்து விறுவிறுத்து வந்த கலை, சைக்கிளை ஸ்டாண்டு போட்டார். ``ஜம்பு, நம்ம கதை `உள்ளே வராதே’ன்னு ஒண்ணு போன வருஷம் சொன்னது ஞாபகம் இருக்கா? அதே மாதிரியான கதை... வேற ஒரு பேர்ல ஓடிட்டிருக்காம். என்னன்னு பார்த்துட்டு வர்லாம் வர்றியா?’’ என்றார்.

எனக்கு போன் செய்து ஜம்பு அழைக்க, நானும் சென்றேன். படம் ஆரம்பித்தது. அந்த அறையில் கலை சொன்ன ஒவ்வொரு காட்சியும் எங்கள் முன்னால் அரங்கேறிக்கொண்டிருந்தது. நாங்கள் எப்படி  பயந்து  பின் நெகிழ்ந்து அரண்டுபோனோமோ, அதையெல்லாம் ரசிகர்களும் தியேட்டரில் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பல இடங்களில் கைத்தட்டல்களைப் பெற்ற காட்சிகளெல்லாம் கலை யோசித்தது. நாங்கள் இருவரும் கலையைப் பார்த்தோம். எந்தச் சலனமுமில்லாமல் கலை படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். இங்கே கிடைக்கிற எல்லாக் கைத்தட்டல்களும் கலைக்குச் சொந்தமானவை.

எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது, கதை கேட்கும்போதும் சரி, கேட்டு முடித்த பிறகும் சரி, அந்தத் தயாரிப்பாளரும் இயக்குநரும் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருந்தது இதற்குத்தான் என்று. படம் முடிந்தது. வெளியேறினோம்.

வழக்கமான தேநீர். கலையே ஆரம்பித்தார். ``பாத்தியா ஜம்பு... நாம சரியாத்தானே யோசிக்கிறோம். எவ்ளோ அப்ளாஸ்... என் கதைய அவங்க எடுத்துட்டாங்கன்னு நான் கவலைப்படலை. எனக்கு அவங்க நம்பிக்கை குடுத்திருக்காங்க. நம்மால சினிமா பண்ண முடியும்... ஜெயிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க. நீங்க ஃபீல் பண்ணாதீங்க. சீக்கிரமே நமக்கு ஒரு நல்ல ஆப்பர்ச்சூனிட்டி வரும். நம்மளோட வெற்றியை யாரும் மறைக்க முடியாது. நான் கிளம்புறேன் ஜம்பு’’ என்று அவரின் மிதிவண்டியை எடுத்தார்.

அவரது வாகனத்தின் முக்கோணக் கம்பியின் விளம்பர வாசகம், இப்போது வேறு மாதிரியான அர்த்தங்களைக் கொண்டிருந்தது. `சினிமாவுக்குக் கதை வேண்டுமா... நாடகத்துக்குக் கதை வேண்டுமா... அணுகவும் :- கலையழகன். இயக்குநர் மற்றும் கதையாசிரியர்.’

- மனிதர்கள் வருவார்கள்...