
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்

அன்று கொட்டாரத்தில், அன்று விருட்சாகாரம் பற்றிய பாட காலம்! தன் சீடர்களிடம் புஷ்பங்களில் கொடிமுல்லைக்கான விதையையும், காய்களில் பூசணி விதையையும், பழங்களில் வாழைக்கன்றையும், குணப்பாட்டில் துளசியையும் தந்து, கடந்த பௌர்ணமி நாளன்று அதற்கான விதைப்பைச் செய்திருந்தார் போகர்.
அன்று தொடங்கி மறுநாள் தேய்பிறை தொடக்கத்தில் ஒரு விதைப்பு. பிறகு அடுத்தடுத்த திதிகளில் அதேபோல் விதைப்புகள். அந்த விதைப்புகள் அவ்வளவும் பொதினியம்பதியின் நதிக்கரை ஓரமாய் நல்ல நீர் ஆதாரமுள்ள இடத்தில் சூரிய ஒளி சமமாய்ப் படும் நிலப்பரப்பில்தான் நிகழ்த்தப்பட்டிருந்தது.

இப்போது அங்கேதான் அவர் தன் சீடர்களுடன் குழுமியிருந்தார். பௌர்ணமி அன்று நடப்பட்ட வாழைக்கன்றுகள் அவ்வளவுமே சீராகத் துளிர்விட்டு ஒரே அளவு வளர்ந்திருந்தன. அதோடு ஒப்பிடும்போது மற்ற நாள்களுக்கான கன்றுகளும் சரி, இதர தாவரங்களும் சரி பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கவில்லை. சந்திரனின் தேய்பிறை காலத்துக்கேற்ப அவற்றின் வளர்ச்சி நிலை நுணுக்கமாய் கவனிக்கத்தகுந்த அளவில் குறைந்திருந்தது. போகர்பிரான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். ``பௌர்ணமி நாளில் மானிடர் மனங்கள் மட்டுமல்ல, தாவரங்களும் நிலாக் கிரணங்களால் பெரிதும் தூண்டப்படுகின்றன என்பதை அறிந்தீர்களா?’’ என்று கேட்டார்.
அவரின் சீடர்கள் அமைதியாக ஆமோதித்திட, அவர்களில் அஞ்சுகன் மட்டும் வாய் திறந்தான்.
``குருவே... இதன்மூலம் உயிரினங்கள் அவ்வளவுமே கால நேரத்துக்குக் கட்டுப்பட்டு, அதன் தாக்கத்துக்கு ஏற்பவே செயல்பட முடியும் என்றாகிறது. இதை உணர்ந்து, பிறருக்கும் உணர்த்தும் சக்தி மனிதனிடம் மட்டுமே உள்ளது. அப்படியிருக்க, மனிதன் இப்படி இந்த உண்மைகளை உணர்வதால் என்ன பயன்? தாங்கள் எங்களுக்கு இவற்றை உணர்த்துவதன் நோக்கம்தான் என்ன?” என்று கேட்டான்.

``நல்ல கேள்வி கேட்டாய் அஞ்சுகா... நல்ல கேள்விகேட்டாய். நீ இவ்வாறு கேட்க, மற்றவர்கள் இதைக்கூடக் கேட்கத் தெரியாமலோ அல்லது அப்படி ஓர் எண்ணமே இல்லாமல் இருப்பதையோ இங்கே நான் காண்கிறேன். நீ கேட்கக் காரணம், நீ புரிந்த தியானம். அம்பிகைக்கான பீஜாட்சர மந்திரத்தை நீ தியானிக்கப்போய், உன் மனோ சப்தமண்டலம் தூண்டப்பட்டு நீ இப்போது இப்படிக் கேட்கிறாய். மனம் அலையாமல் எப்போதும் ஒரு புள்ளியில் குவிந்தால் ஆத்மசக்தி பெருகும். எல்லோருக்குள்ளும் ஆத்ம விளக்கு எரிந்துகொண்டுதான் உள்ளது. அதன் வெளிச்சம் மனம் அலைபாயும்போது அமுங்கிக்கிடக்கிறது. மனம் ஒரு புள்ளியில் அடங்கிக்கிடக்கும்போது அந்த வெளிச்சம் மனம் முழுக்கப் பரவி நமக்குள் தெளிவு ஏற்படுகிறது. தெளிவுதான் அறிவைத் தூண்டிவிட்டு சிந்திக்கவைக்கிறது. நீ இப்போது சிந்தித்தாய்... அதனால் கேள்வி கேட்டாய்.
இப்போது உன் கேள்விக்கு வருகிறேன். நாம் எல்லோருமே கால நேரத்துக்குக் கட்டுப்பட்டவர்களே! அதேசமயம் இதை உணர்ந்தால்தான் இந்தக் கட்டிலிருந்து நாம் நம்மை விடுத்துக்கொள்ள முடியும். அந்த விடுதலை என்பது, உடல் உள்ளம் இரண்டுக்குமானதாக இருக்க வேண்டும்” - போகர் தன் பேச்சின் இடையே ஓர் இடைவெளி விட்டு, தன் சீடர்களை உற்று நோக்கினார். அவர் நோக்கில், புலிப்பாணி எனும் சீடன் மட்டும் கூர்மையாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல, அவன் தன் கைவிரல் கண்ணிகளைப் பயன்படுத்தி ஏதோ கணக்கு போட்டபடி இருந்தான்.
``புலிப்பாணி... எந்தக் கணக்கை இப்போது போடுகிறாய்?” என்று அதற்கான கேள்வியை எழுப்பவும்,
``குருவே, தங்களின் அரிய உபதேசத்தைக் கேட்கும் இவ்வேளை என்பது, குருவாரம் என்னும் வியாழக்கிழமையில் வரும் அஸ்வினி நட்சத்திர அமிர்தயோக காலம். அஸ்வினி நட்சத்திரம் கோள்களில் ஞானகாரகன் எனப்படும் கேதுவின் ஆதிபத்ய நட்சத்திரம். மிகச்சரியாக நீங்கள் எங்களுக்கு ஞான உபதேசமும் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
நாம் கால நேரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு இப்போது இங்கு நடக்கும் நமக்கான நிகழ்வே சாட்சியாக உள்ளது. குருவாரம், கேது நட்சத்திரம், அமிர்தயோகம் என்னும் மூன்றின் கூட்டு வினையே உங்களின் அரிய உபதேசம். அதை எண்ணியும் காலத்தின் ஆதிக்கத்தை எண்ணியும் ஆச்சர்யப்படுகிறேன்” என்ற புலிப்பாணியை அருகே அழைத்த போகர், புலிப்பாணியின் சிரசின் மேல் கை வைத்து ``புதன் உன் ஜாதகத்தில் உச்சம்போலும்... குருவும் ஒன்பதாம் இடத்தில் இருக்க, உன் பூர்வபுண்ணியமும் வலுத்திருக்கிறது. இல்லாவிட்டால் என் சீடனாய், என் போதனைக்கே காலம்தான் காரணம் என்னும் அரிய உண்மையைக் கண்டுகொண்டிருப்பாயா என்ன? வாழ்க நீ... உன் கணிப்பும் வாழ்ந்து வளர்ந்து நீ மகாகால ஞானியாகத் திகழ வாழ்த்துகிறேன்” என்று அவனை ஆசீர்வதித்தார். அதற்கு இசைவாகத் திருவாவினன்குடி ஆலயத்தின் மணிச்சத்தமும் ஒலித்து அடங்கவும், சத்தம் வந்த திசை நோக்கினார் போகர்.
``உங்கள் வாழ்த்தும் ஆலயமணி வாழ்த்தும் எனக்கு உற்சாகம் தருகின்றன குருவே...”
``ஆம்... எனக்கும்தான். பரந்த இந்த பூமியெங்கும் பறந்தே செல்ல முடிந்தவன் நான். என் மேக மணிக்குளிகை ஒன்று போதும் என் உடலைப் பஞ்சாக்கி என்னையும் பறவையாக்கிட! ஒரு மனிதப் பறவையாய் நான் சீனம், ரோமம், ருஷ்யம் என எங்கு சென்றாலும் இந்த மண்மேல்தான் எனக்கு போகம் அதிகம். அதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?” - போகர் எல்லோருக்குமாய்த்தான் கேட்டார். ஆனால், அஞ்சுகன்தான் பதிலுக்கு வாய் திறந்தான்.

``குருவே, இது மலை நாடு என்பது முதல் காரணம். அடுத்து, கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆவிக்கோமான் எனும் ஆவிக்கோமானால் இந்த நாடு ஆளப்படுவதும் ஒரு காரணம். மயிலுக்குப் போர்வை தந்த பேகன், அவன் செயலை வியந்து பாடிய இடைக்கழி நாட்டு நல்லூர் நந்தத்தனார் போன்ற சான்றோர் பெருமக்களின் பெருவிருப்புக்குரிய மண் என்பதும் அடுத்தடுத்த காரணங்கள்” அஞ்சுகனின் விளக்கத்தைத் தொடர்ந்து அரைச் சிரிப்புச் சிரித்த போகர், ``இதெல்லாமும் சரிதான். பிரதான காரணம் என்று இன்னொரு காரணம் இருக்கிறது. அதைச் சொல்ல முடியுமா உன்னால்?” என்று கேட்டார் போகர்.
அஞ்சுகனால் அதற்கொரு பதிலை விரைவாகச் சொல்ல முடியவில்லை. சிந்திக்கத் தொடங்கினான்.
``சிந்தி... நன்றாகச் சிந்தி... புலிப்பாணி, நீ கணக்கு போட்டுச் சிந்தி... மற்றுமுள்ள என் சீடர்களே... நீங்களும் சிந்தியுங்கள். சரியான காரணத்தைச் சொல்பவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன். அது என்ன தெரியுமா?” - போகர் பரிசைக்கூட ஒரு ரகசியமாக்கிக் கேட்க, எல்லோரும் `என்ன?’ என்பதுபோல் பார்த்தனர். அது என்ன?
இன்று அது ஓர் எளிய ஓட்டு வீடு.
முகப்பில் கம்பு நட்டு மல்லிகைக்கொடி வளர்க்கப் பட்டு, அதில் நூற்றுக்கணக்கில் மொட்டுகள் குட்டி வெள்ளை ஈட்டிகளாய் முளைத்திருந்தன.
அதற்கும் முகப்பில் சாமியானா பந்தலுக்கு முயன்றுகொண்டிருந்தனர். அழுக்கேறிய குறைந்த வாடகைக்கான பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒருவன் பத்துப் பத்தாக இறக்கிப் பிரித்துப் போட்டுக்கொண்டிருக்க, வாயைப் பொத்தி அழுதபடியே தெருப்பெண்கள் உள் செல்வதும் வருவதுமாய் இருந்தனர். அந்தக் காட்சிகளை எல்லாம் தன் காருக்குள் இருந்தபடியே பார்த்த பாரதியை, கணேச பாண்டியனும் பார்த்தார். அந்தப் பார்வையே அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதுபோல் இருந்தது. பாரதி, காரை விட்டு மெள்ள இறங்கினாள். கணேசபாண்டியன் இறங்கவில்லை. இறங்கிச் சென்றால், சிலர் அவரை அடையாளம் கண்டு அடிக்கக்கூடும். முத்துலட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை.
``இங்க எங்கப்பா வந்தே? இவ எதுக்குக் கீழ இறங்குறா?” என்று கேட்டாள்.
``ஒரு கேதம்மா...”
``கேதமா... யார் போனது... எங்க உறவுலையா..?”
படபடத்த முத்துலட்சுமியின் கேள்விக்கு, பாரதியிடம் சொன்ன பதிலைச் சொல்வதா இல்லை சமாளிப்பதா என்று முதலில் குழம்பி ``உறவெல்லாம் இல்லம்மா... பாப்பாவுக்குத் தெரிஞ்சவங்கபோல...” என்று மிடறு விழுங்கினார் கணேசபாண்டியன்.
பாரதி, துணிவை வரவழைத்துக்கொண்டு அந்தக் கேத வீட்டுக்குள் நுழைந்தாள். பளிச்சென்ற உடையில் தலைமேல் கூலிங்கிளாஸ் இருக்க, நவீன ஹேண்ட்பேக் சகிதம் நுழைந்தவளைப் பலரும் பலவிதமாய்ப் பார்த்தனர். குமாரசாமி, மூக்கில் வைக்கப்பட்ட பஞ்சோடு வீட்டுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தார். கூடத்துச் சுவரில் அந்தக்காலத்தில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள், காலண்டர்கள்.
எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்தவள், ஸ்கூல் யூனிஃபார்ம் சகிதமாக அழுத ஒரு பெண்ணைப் பார்த்துச் சற்றுக் கலங்கித்தான் போனாள்.
``அப்பா எழுந்திரிப்பா... இந்த மேகலாவப் பாருப்பா. எழுந்திரிப்பா...” என்ற அந்தப் பெண் குரல், பாரதிக்குள் திருப்புளிகொண்டு குடைவதுபோல் குடைந்தது. விசுக்கெனக் கண்கள் இரண்டும் நீரைக் கசியச்செய்தன. அப்போது ஒருவர் அவள் முன் வந்து ``யாரும்மா நீ... இந்தப் பக்கம் நாங்க உன்னைப் பார்த்ததில்லையே. குமாரசாமியைத் தெரியுமா?” என்று கேட்டார்.

``தெரியலைன்னா வந்திருப்பேனா? என் பேர் பாரதி... ஜர்னலிஸ்ட்.’’ தான் ஒரு எம்.பி-யின் மகள் என்பதை மறைத்தாள்.
``அப்படின்னா?”
``பத்திரிகையாளர்னு சொல்ல வந்தேன்.”
``சரியா காதுல விழலம்மா... தப்பா எடுத்துக்காதே. ஆமா... குமாரசாமி உங்க பத்திரிகைக்குத் தன்னோட பிரச்னையை எழுதி அனுப்பியிருந்தாரா?” - அவர், அவளை ஒதுக்கிக் கொல்லைப்புறம் அழைத்துச் சென்றபடியே பேச்சைத் தொடர்ந்தார்.
``அப்படியெல்லாம் எதுவுமில்லை. அப்படி ஏதாவது எண்ணம் அவருக்கு இருந்ததா?” - அவளும் தொடர்ந்தபடியே கேட்டாள்.
``ஆமாம்மா... மன உளைச்சல்லயே மாரடைப்பு வந்து செத்துட்டார்மா...”
``ஏதாவது நிலப் பிரச்னையா?”
``அதேதாம்மா..! இந்த வீடும் 20 சென்ட் இடமும்தான் குமாரசாமியோட சொத்தே. அழுதுகிட்டிருக்குதே ஒரு பொண்ணு... அது ப்ளஸ் டூ படிச்சிக்கிட்டிருக்குது. அதைக் கட்டிக் கொடுக்கணும், குறைகாலத்துக்கும் தானும் யார்கிட்டயும் போய் நின்னுடாம வாழணும்னு வெச்சிருந்த ஒரே சொத்து... அதைப் பாழாப்போன எம்.பி ராஜா மகேந்திரன்கிறவன் தனக்கு வேணும்னு கேட்டதுல ஆரம்பிச்சது பிரச்னை. கடைசியில ஒரு ரெளடிப்பய வந்து இடம் என்னுதுன்னு போலியா ஒரு பத்திரத்தைக் காட்டிப் பாடாபடுத்திட்டான்.”
``புரியுது... போலீஸும் கை விரிச்சிருக்கும். என்ன செய்யறதுன்னு தெரியாமத் தவிச்சிருப்பார். மாரடைப்பும் வந்துடுச்சு. சரிதானே?”
``ஆமாம்மா...”
``வெரி ஸாரி... வெரி வெரி ஸாரி... என்னால இப்ப இதைத்தான் சொல்ல முடியும். அதேசமயம் உங்களுக்கு நான் ஒரு உறுதி தர்றேன். அந்த ரெளடி இனி தொந்தரவு பண்ண மாட்டான். அந்த இடம் உங்க இடம்தான். அதுக்கு என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன். அந்தப் பொண்ணு, அப்புறம் அவங்க அம்மாகிட்ட சொல்லுங்க.”

``சந்தோஷம்மா... ஆனா, இதெல்லாம் போன உசுரை திரும்பக் கொண்டுவந்துடுமாம்மா?”
``நிச்சயமா வராது... நான் என்னால முடிஞ்சதைத்தானே செய்ய முடியும்!”
``அதுவும் சரிதான்... கடைசியா குமாரசாமி பழனி முருகன் படம் முன்னால நின்னு கதறினது இப்பவும் என் காதுல கேட்குதும்மா. `முருகா... சத்தியம், தர்மம்னெல்லாம் இருக்கிறது உறுதின்னா, என்னை ஏமாத்தினவங்க யாரும் நல்லா இருக்கக் கூடாது. அந்த எம்.பி நாசமாப் போகணும். அவன் குடும்பம் ஐயோன்னு போகணும். ஆனா, அதை அவன் பார்க்க உசுரோடு இருக்கணும். நான் யாருக்கும் ஒரு கேடும் நினைச்சதில்லை. உன்னோட கந்தசஷ்டிக்கு வருஷம் தவறாம விரதம் இருந்திருக்கேன். என் விரத பக்தி மேல நின்னு சாபம் கொடுக்கிறேன். என் சாபம் சும்மா விடாது’ன்னான்! சொல்லிக்கிட்டிருக்கும்போதே நெஞ்சை அடைச்சிடிச்சும்மா... உசுரும் போயிடிச்சு!’’
அவர் `அதுவும் சரிதான்’ என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அதற்குப் பிறகு பேசிய அவ்வளவும் அதகளம். பாரதி கலங்கிப்போய் பதிலுக்கு அவரைப் பார்த்தபோது யாரோ ஒருவர், கொல்லைப்புறம் அறக்கப்பறக்க வந்து நின்றார்.
``என்னய்யா?”
``விஷயம் தெரியுமா உனக்கு?”
``சாவு வீட்ல வந்து விஷயம் தெரியுமான்னா என்னய்யா அர்த்தம்?”
``நீ ஒண்ணு... அந்த எம்.பி-க்கு ஆக்ஸிடென்ட் ஆகி, ஆஸ்பத்திரியில இருக்கானாம்யா. இடுப்புக்குக் கீழ தூள் தூளா நொறுங்கிடிச்சாம். நம்ப குமாரசாமி சாபம் இவ்வளவு சீக்கிரமா பலிக்கும்!” அந்த நபரின் கேள்வியைத் தொடர்ந்து பாரதியின் முகம் சுண்டிச் சுருங்கியது. அதற்குமேல் நின்று பேச, அவள் விரும்பவுமில்லை; நிற்கத் துணிவுமில்லை.
புறப்பட்டாள்.
திரும்பும் சமயம் குமாரசாமியின் சடலம் மேல் திரும்ப ஒரு பார்வை... அவர் மகள் மேலும் ஒரு பார்வை!
துளித்துவிட்ட கண்ணீரைத் துடைத்தபடியே பாரதி நடந்தவற்றைச் சொல்லி முடித்தபோது, ஆசிரியர் ஜெயராமன் முகத்திலும் அசாதாரண ஓர் இறுக்கம். எதிர்ச் சுவரில் டிவி-யில் மியூட்டில் காட்சிகள்! நெடு நேர இறுக்கத்துக்குப் பிறகு ஆசிரியரிடம் மட்டும் ஒரு தளர்வு.
``நீ சொன்னதக் கேட்டு நான் ஸ்டன்னாகிட்டேன் பாரதி. அந்தக் குமாரசாமியோட சாபத்துக்கு சக்தி இல்லைன்னும் என்னால சொல்ல முடியலை... நடந்த விபத்தைத் தற்செயல்தான்னும் ஏத்துக்க முடியலை. ஆனா, துணிச்சலா நீ அவங்க வீட்டுக்குப் போய் அஞ்சலி செலுத்திட்டு வந்தே பார்... அங்கதான் நீ நிக்கிறே” என்றார்.
``எனக்கு, அடுத்து எதைச் செய்யறதுன்னே தெரியலை சார். அந்த ரெளடியைப் பார்த்து ஓங்கி அறையணும்போல இருக்கு.”
``அவனுக்குத் துணைபோன போலீஸை விட்டுட்டியே!”
``சார், இதை ஒரு அசைன்மெட்டா எடுத்து புலனாய்வுக் கட்டுரையா நம்ம இதழ்லயே வெளியிடுங்க. இங்க முதலமைச்சர் வரைக்கும் டெல்லியில பார்லிமென்ட் வரைக்கும் போகட்டும்.”
``குட்... பாரபட்சமில்லாம சிந்திச்சுப் பேசறே. ஆனா, உன் அப்பா ஆஸ்பத்திரியில இருக்கிற இந்தச் சமயத்துல இது ஓவர்டோஸா மாறிடும். எல்லா அரசியல்வாதிகளைப் போலவே `இது என் மேல போடப்படுற பழி’ன்னு சொல்லி நழுவப் பார்ப்பார். அப்புறம், ஒரு பரபரப்பை உருவாக்கினதுதான் மிச்சம்னு ஆயிடும். நமக்கு இப்ப ரெண்டு விஷயங்கள்தான் முக்கியம். ஒண்ணு, குமாரசாமியோட நிலப் பிரச்னை தீரணும். அந்த வேங்கைய்யன்கிற ரெளடி அந்தப் போலிப்பத்திரத்தைக் கிழிச்சிப் போடணும். அடுத்து, உன் அப்பா தப்பான வழியில காலேஜ் கட்டுறதை அடியோடு கைவிட்டு ஒரு நல்ல எம்.பி-யா செயல்படணும். இப்ப இருக்கிற நிலையில நாம பொறுமையா செயல்பட்டாதான் ரெண்டுமே சாத்தியம். அந்த ரெளடிக்கும் உங்க அப்பாவுக்கும் திருந்திக்க ஒரு சந்தர்ப்பம் தருவோம். திருந்த மறுத்தா, அப்ப அவங்களைப் பற்றிய கட்டுரையைப் போடுவோம். உங்கப்பா வரையில தண்டனைதான் கிடைச்சிடுச்சே... என்ன சொல்றே?” - ஆசிரியர் ஜெயராமன் பேச்சுக்கு மறுபேச்சு பேச பாரதியாலும் முடியவில்லை. `சரி’ எனத் தலை அசைத்தாள்.
``சரி... இப்ப யார் உன் அப்பாகூட ஆஸ்பத்திரியில இருக்கா?”
``அதான் அவருக்குன்னே ஒரு உதவியாளர் இருக்காரே. பை த பை உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் சொல்ல விரும்புறேன் சார்.”
``என்னம்மா?”
``இந்தப் பழனி முருகன் என்னை ஆஸ்பத்திரியிலேயும் விடலை சார். திரும்பிய பக்கமெல்லாம் முருகன் படம்தான். ஆஸ்பத்திரியைக் கட்டினதும் ஒரு பழனிக்காரராம்!”
``ஐ.சீ... டூ மச் ஆஃப் கோ இன்சிடென்ஸ்னு சொல்றதா... இல்லை, இதை எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியலையே!”

``எனக்கும் அதே நிலைதான் சார்.”
``சரி... போகப் போகப் பார்ப்போம். நீ ஒரு வாரத்துக்கு ஆபீஸ் வர வேண்டாம் பாரதி. அப்பா பக்கத்துல இரு. அந்த ரெளடியைப் பார்க்கப் போகும்போது தனியா போகாதே. அவசியப்பட்டா, நான் கூட வர்றேன்.”
``இப்படிச் சொன்னதே போதும் சார்... கிளம்புறேன்” - அவள் புறப்பட்டாள். அப்படியே கணேசபாண்டியனுக்கு போன் செய்து ஆஸ்பத்திரி நிலையைத் தெரிந்துகொண்டாள்.
``ஆப்ரேஷன் ஆகிடுச்சி பாப்பா... அய்யா மயக்கத்துல இருக்காரு” என்ற பதிலோடு தன் காரைத் தேடி வந்து நின்றாள். சாவிக்காக ஹேண்ட்பேக்கைத் திறந்தபோது அந்தப் புத்தகம் தடையாக இருந்தது; காகிதங்கள் கசங்கின. அதை எடுத்து ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையால் பேக்கைப் பிடித்தபடியே சாவியை வெளியே எடுத்தாள்.
ரிமோட் பட்டன் நசுங்கலில் `கொய்ங்... கொய்ங்...’ என்ற சத்தம் கதவு திறந்துகொண்டதைச் சொன்னது.
ஏறி அமர்ந்தபடியே புத்தகத்தைப் பக்கத்து சீட் மேல் வைத்து ஹேண்ட்பேக்கையும் அருகில் வைத்தாள். இன்ஜின் காதை சாவிகொண்டு திருகினாள். அது கிளம்பத் திணறியது. சளிக்காரன் தொண்டைபோல் செருமியது. ஆனால், ஸ்டார்ட் மட்டும் ஆகவில்லை.
``என்னாச்சு இந்த வண்டிக்கு?’’ என்று பக்கவாட்டில் திரும்பவும் அந்தப் பழைய புத்தகம் இரு கூறாகப் பிரிந்து விரிந்து கண்ணில்பட்டது. பிரிந்த இரு பக்கங்களில் ஒன்றில் `சரவண மனோ சக்கரம்’ என்று ஒரு வட்டமும் - வட்டம் நடுவில் ஷட்கோண நட்சத்திரமும் இருக்க, அதன் முக்கோணங்களின் மேல் 1, 2, 3, 4 என்று 6 வரை எண்கள் கண்ணில்பட்டன. சக்கரத்துக்குக் கீழே ஒரு குறிப்பு. அதில் `இந்தச் சரவண மனோ சக்கரத்தை, முருகனை மனதில் நினைத்துக் கண்களை மூடிக்கொண்டு ஆள்காட்டி விரலால் தொட வேண்டும். தொடும் எண்ணுக்குரிய பலனை அடுத்த பக்கத்தில் காண்க. முருகன் திருவருளால் சதமாதி சதம் பலித்திடும்’ என்று இருந்தது. ஒருசில விநாடி அந்தச் சக்கரத்தை உற்றுப்பார்த்தவள் திரும்பி, திரும்பவும் கார் சாவியைத் திருகினாள். காரும் மக்கரடித்தது... கிளம்ப மறுத்தது. எரிச்சலாய் இருந்தது. சில விநாடி மௌனித்தாள். திரும்பினாள். அந்தப் புத்தகம் `தொட்டுத்தான் பாரேன்’ என்றது.
`இதெல்லாம் முட்டாள்தனமான விளையாட்டு’ என்று ஓர் எண்ணம் முதலில் தோன்றியபோதிலும், `காசா... பணமா? தொட்டுத்தான் பார்ப்போமே!’ என்று அதே எண்ணம் ஒரு பல்ட்டியும் அடித்தது.
அந்தப் புத்தகத்தை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டு, பிறகு இரு கைகளையும் பரபரப்பாகத் தேய்த்துவிட்டுக்கொண்டவள் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி மற்ற விரல்களை மடக்கிக்கொண்டு கண்களையும் மூடிக்கொண்டு `முருகா உன்னையெல்லாம் நினைக்க மாட்டேன்...’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே குத்துமதிப்பாய் அச்சிட்ட அந்தச் சக்கரத் தாள் மேல் விரல்நுனியை வைத்து மெல்ல கண் திறந்து பார்த்தாள்.
எண் 4-ன் மேல் விரல் இருந்தது.
அப்படியே அடுத்த பக்கத்தில் அதற்கான பலனைக் காணத் திருப்பினாள்.
`தெய்வம் தேடி வரும்’ என்று மூன்று சொற்களில் தென்பட்ட பலன் அவளிடம் ஒரு பெருமூச்சைத்தான் வரவைத்தது. ``எந்தத் தெய்வம் என்னைத் தேடி வரப்போகுதுன்னு தெரியலையே...’’ என்று முனங்கியபடியே ``இதுக்கு கார் ஸ்டார்ட் ஆகும்னு இருந்திருந்தா கொஞ்சம் சந்தோஷமா இருக்குமே’’ என்று திரும்பவும் சாவியைத் திருகினாள். இம்முறை கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
``அப்பாடா..!’’
பல்லாவரம் ஜமீன் பிரமாண்ட ராஜன் பங்களா!
ஏலம் முடிந்து துரியானந்தத்துக்கு என முடிவாகியிருந்தது. ஏலத்தொகை சுளையாக முப்பது லட்சம் ரூபாய். இதில் மூன்றில் ஒரு பங்கு ஹாட் கேஷ். மீதத்துக்குத்தான் செக்! என்ன கணக்கோ? முப்பது லட்சம் ரூபாய்க்குப் பின்னால் சுகாடியா சேட் இருந்தார். பணத்துக்கு அவர் பொறுப்பு. லாபத்தில் 60 சதவிகிதம் சேட்டுக்கு... 40 சதவிகிதம்தான் துரியானந்தத்துக்கு. துரியானந்தம் மகன் குமரேசன் துரியானந்தத்தைச் சம்மதிக்கவைத்து ஏலமும் முடிந்துவிட்டது. பங்களாவுக்குள் துரியானந்தமும் குமரேசனும் நுழைந்தனர். 3,000 சதுர அடியிலான பங்களா! தரை முழுக்க அந்நாளைய வழவழப்பான கடப்பாக்கற்கள். சில இடங்களில் மொசைக்... சில இடங்களில் ரெட் ஆக்ஸைட் எனக் கலவையாகக் காட்சிதந்தது. தரையில் பிசுபிசுவென பல வருடத் தூசு... அவர்களின் கால் தடயங்கள் துல்லியமாகப் பதிந்தன.
இருவருமே மிரட்சியோடுதான் அந்த பங்களாவைப் பார்த்தனர்.
``நைனா... என்னமா இருக்குது பார்த்தியா! நம்ப ஊடும்தான் இருக்குது, ஆஸ்பெஸ்டாஸ் கூரையோட!’’ - அலுத்துக்கொண்டான் குமரேசன்.
``அதுக்கென்னடா பண்றது... இது ஜமீன் பங்களா! நாமளோ அன்னாடங்காச்சிங்க.”
``அது ஏன் நைனா இந்தக் கடவுளுக்கு இப்படி ஒரு ஓரவஞ்சனை? குட்தா ஒரேடியா குடுக்கிறான் - இல்லாட்டி வழிச்சு எடுத்துடுறான்.”
``புலம்பாதடா... வந்த வேலைய பாரு! முப்பது லட்சம் ரூபாயை சேட்டு நம்பள நம்பிப் போட்டிருக்காரு. இந்த நிலக்கால் கதவை எல்லாம் சேதமில்லாமப் பேத்து எடுத்து வார்னீஷ் ஏத்தி புச்சா மாத்தி விக்கிறதுலதான் இருக்குது நம்ப சாமர்த்தியம்.”
``உடு நைனா... அதெல்லாம் என் பாடு! இப்பவே ரெண்டு பார்ட்டி ரெடியா இருக்காங்க. நீ ஏன் ஒர்ரி பண்றே?”
``என்னவோப்பா... பழச வித்தே நானும் காலத்த ஓட்டிட்டேன். நீயாச்சும் புதுச விக்கணும்னு பார்க்கிறேன்.”
``உடு... இதான் கடைசி. இதுல வர்ற காசுல நீ ஆசைப்பட்டா மாதிரி புச்சாவே ஒரு கடைய போட்ருவோம். டோன்ட் ஒர்ரி.”
இருவரும் பேசிக்கொண்டே பங்களாவைச் சுற்றி வந்தனர். அப்படியே கொல்லைப்புறமாய்ச் சென்றபோது பின்புறத்தில் ஒரு ஏக்கருக்குக் குறையாத தோட்டம்! தோட்டத்தில் வில்வம், வேம்பு, அரசு, ஆலம் எனப் பெரிய பெரிய மரங்கள்!
ஜிலுஜிலுவென்ற காற்று... ஒரு பக்கத்தில் பெரிதாய் சதுரக்கிணறு. எட்டிப்பார்த்தபோது நூறு அடிக்குக் கீழே நீர் இருந்து அதில், எட்டிப்பார்த்த இருவர் முகமும்கூடத் தெரிந்தன.
``அய்ய்யோ... அனுபவிச்சி வாழ்ந்திருக்காங்க நைனா..!” என்று சிலிர்த்தான் குமரேசன்.
``என்னத்த வாழ்ந்தாங்க போ... ஜமீன்தார் குடும்பமே இப்ப இந்தியாவுல இல்லை. அத்தனை சொத்துக்கும் ஒருத்தர்தான் வாரிசு. அவரும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டாராம். இந்தச் சொத்தை வெச்சுக்க முடியாம ஒரு பில்டிங் கான்ட்ராக்ட் கம்பெனிக்கு வித்துட்டாரு அவரு. அவங்க இங்க பெரிய ஸ்டார் ஹோட்டல் கட்டப்போறாங்களாம்.”
``நான்தான் இத்த உனக்குச் சொன்னேன்... நீ திரும்பி எனக்கே சொல்ற பார்த்தியா!” இருவரும் பேசிக்கொண்டே அந்த ஜில்லென்ற தோட்டப்பகுதிக்குள் நடந்தனர். அங்கே சில இடங்களில் கற்கள் நடப்பட்டு அதில் பெயிண்ட் அடித்து சர்வே நம்பர் எழுதப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் சிறியதாய் ஒரு ஆஸ்பெட்டாஸ் ஷெட்! வெளியே ஒரு நாட்டு நாய் படுத்திருக்க அருகில் கட்டிலில் வயதான ஒருவர் அமர்ந்திருந்தார். துரியானந்தத்தையும் குமரேசனையும் ஒரு மாதிரி பார்த்தார்.
``நீதான் வாட்ச்மேனா?” - என்று குமரேசன் சற்று அலட்சியமாகக் கேட்டான். அவர் பதிலுக்கு உற்று மட்டும் பார்த்தார். கண்கள் கலங்கியிருந்தன. அப்போது 12 வயதுப் பெண், கையில் ஒரு ஒயர்க்கூடையுடன் பக்கவாட்டில் அந்தத் தோட்டத்தின் ஒரு பாகத்திலிருந்து வந்து நின்றாள்.
``தாத்தா, சமாதிக்கு விளக்கு போட்டுட்டேன்” என்றாள்.
``சமாதின்னு சொல்லாதே கண்ணு, சாமின்னு சொல்லு... எத்தினி தடவை சொல்லியிருக்கேன்” என்று அவர்களிடம் பேசாத அந்த வயதானவர் அவளிடம் மட்டும் பேசினார்.
குமரேசனுக்கும் துரியானந்தத்துக்கும் கருக்கென்றது. `சமாதியா?’ என்று உச்சந்தலையில் ஒரு விடைப்பும் ஏற்பட்டது. அதே வேளையில் அந்தப் பெண் ஒயர்க்கூடையிலிருந்து ஒரு பாம்புச்சட்டையை எடுத்து அவர் முன் விரித்தாள்.
12 அடி நீளத்தில் நாகப் படத்தோடு பெரிதாய் கிழிசலோ, பிசிர்களோ இன்றிக் காட்சிதந்தது.
``தாத்தா, சமாதி மேல... ஸாரி தாத்தா, சாமி மேல இந்தச் சட்டை கிடந்துச்சு” என்றாள்.
- தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்