தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முயல்கள் - ஸ்டாசியா

முயல்கள் - ஸ்டாசியா
பிரீமியம் ஸ்டோரி
News
முயல்கள் - ஸ்டாசியா

எதிர்க்குரல்

முயல்கள் - ஸ்டாசியா

ரு மேஜையின் மீது கிடத்தப் பட்டிருந்தார் பதினான்கு வயது ஸ்டாசியா. அவர் முகம் வீங்கியிருந்தது. உடலெல்லாம் வலித்தது. கண்களை மூடி இருளை வரவழைக்க முயன்றார். அந்த இருளில் அப்படியே கரைந்து தொலைந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று மனம் கிடந்து அடித்துக்கொண்டது. காலை அசைக்க முயன்றார் ஸ்டாசியா. வலி கொன்றெடுத்தது. உலர்ந்த விழிகளால் கூரையைப் பார்த்தபடி அசைவற்றுப் படுத்துக் கிடந்தார் ஸ்டாசியா.  இதோ, இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். மயக்க ஊசி செலுத்துவார்கள். அதற்குப் பிறகு எல்லாவற்றையும் மறந்துவிடுவது சாத்தியம். விழிப்போடு சேர்ந்து வலியும் வரும் என்றால், எதற்கு வாழ்வு?

ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினிலிருந்து 50 மைல் தொலைவில் அமைந்திருந்தது ராவன்ஸ்புரூக் வதை முகாம். பெண்களுக்காகவே பிரத்யேகமாக 1939, மே மாதம் திறக்கப்பட்ட முகாம் இது. திட்டமிடப்பட்டபோது அதன் கொள்ளளவு 3,000 பேர். ஆனால், வெகு விரைவில் பல மடங்கு அதிகமான கைதிகளை உள்ளே திணிக்க ஆரம்பித்துவிட்டனர். 1945, பிப்ரவரியில் 46,473 பெண்கள் அடைபட்டிருந்தனர். இறப்பு எண்ணிக்கை இதைக் காட்டிலும் அதிகம். கிட்டத்தட்ட 50,000 பெண்கள் நச்சு வாயு செலுத்தப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு கைதிக்குக் குழந்தை பிறந்தால், குழந்தையை உடனடியாகத் தனியே பிரித்து எடுத்துச் சென்று ஒரு மூலையில் போடுவார்கள். அழுது, துடித்து, ஓய்ந்து, இறந்த பிறகு உடல் அப்புறப்படுத்தப்படும்.

முயல்கள் - ஸ்டாசியா

ஸ்டாசியாவுக்கு  அது சாத்தியமில்லை. ஏனென்றால், அவர் ஒரு முயல். அவரைப் போல் ஏராளமான முயல்கள் அந்த முகாமில் இருந்தார்கள். மற்ற பெண்களைப் போலில்லாமல் முயல்களுக்குத் தனி மதிப்பு உண்டு. `உனக்கு அது, எனக்கு இது' என்று மருத்துவர்கள் முயல்களைத் தங்களுக்குள் பங்கு பிரித்து வைத்திருந்தார்கள். எல்லாமே முறைப்படிதான் அங்கே இயங்கும். கறாரான விதிமுறைகளுக்கு உட்பட்டே எதுவொன்றையும் அங்கே செய்ய இயலும். `எனக்கு இன்று நாலு முயல்கள் தேவை' என்று அதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில் எழுதி, பெயர், பதவி எண், முகாம் எண் குறிப்பிட்டுத் தலைமை மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் பரிசீலித்துக் கேட்டதை அனுப்பிவைப்பார்.

பெற்றுக்கொண்ட முயலை வைத்து இன்று என்னென்ன செய்தேன் என்பதையும் அந்த மருத்துவர் சீராகப் பதிவுசெய்ய வேண்டும்.  தோராயமாக அந்தக் குறிப்புகள் இப்படியாக அமைந்திருக்கும். `எனக்கு இன்று கிடைத்த சாம்பிளின் பெயர் எம். வயது 15. இன்று நான் மேற்கொண்ட பரிசோதனை, மயக்க மருந்து தொடர்பானது. எந்த அளவுக்கு மருந்தை உட்கொண்டால் ஓர் உடல் உணர்வற்றுப் போகும், எந்நிலைவரை வலியைத்  தாங்கும் என்பதை அறிந்துகொள்வதே என் ஆய்வின் நோக்கம். இப்பணிக்காக நான் எடுத்துக்கொண்டுள்ள பதினைந்தாவது சாம்பிள் இது.

வழக்கம்போல உடலைப் பத்திரமாக மேஜையோடு சேர்த்துப் பிணைத்துவிட்டு, எளிமையான டோஸில்தான் தொடங்கினேன். எம்மின் கண்கள் செருகிக்கொள்ள இத்தனை நிமிடங்கள் ஆயின. பிறகு சாம்பிளின் காலில் சில மெல்லிய வெட்டுக் காயங்களை ஏற்படுத்தினேன். உடல் வலியால் துடிக்க ஆரம்பித்தது. அளவை அதிகரித்துவிட்டு மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தேன். இந்த முறை அழுத்தமான காயங்களை  உண்டாக்கினேன். முன்பிருந்ததைப்போலில்லை என்றாலும் ஓரளவுக்கு சாம்பிளால் வலியை உணர முடிந்தது என்றே நினைக்கிறேன். சீரான இடைவெளியில் என் பரிசோதனைகளை மாலைவரை தொடர்ந்தேன். ஒவ்வொரு முறையும் எம்மின் உடல் ஒவ்வொருவிதமாக எதிர்வினைகள் புரிந்தது.  வெவ்வேறு மருந்துக் கலவைகளை உடலில் செலுத்தினேன். விரிவாகவும் கவனமாகவும் குறிப்புகள் எடுத்தேன். என்னுடைய ஆய்வு முடிவை விரைவில் அடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன். பின்குறிப்பு: நேற்று மாலை நான்கு மணி வாக்கில் எம் இறந்துவிட்டது. எனக்கு வேறொரு முயல் அவசரமாகத் தேவை. நன்றி.'

ஒரு ஜெர்மானிய வீரனுக்குக் காலில் குண்டு பாய்ந்துவிட்டால் அவனுக்கு எப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்வது? ஒரு முயலைப் பிடித்து இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தூக்கிக்கொண்டுபோய் அறுவை சிகிச்சை செய்து பார்ப்பார்கள். முகத்தில் கண்ணாடித் துண்டுகள் சிதறினால் என்னாகும்? இன்னொரு முயலின் முகத்தில் கண்ணாடியை உடைப்பார்கள். ஒரு காலை எப்படி அகற்றுவது? நாய் கடித்துவிட்டால் என்ன செய்வது? சேதமடைந்திருக்கும் கைகளை அகற்றுவது எப்படி? கேட்கும் திறன் பறிபோய்விட்டால் என்ன செய்வது? பார்வையிழப்பைச் சரிசெய்ய மருந்து உண்டா? மனநோயைக் குணப்படுத்த முடியுமா? மூளை கலங்கினால் என்னாகும்?

அங்கிருந்த இளம் வயது முயல்களில் ஸ்டாசியாவும் ஒருவர். போர்க்களத்துக்குப் போகவில்லையே தவிர, ஒரு போர் வீரன் அனுபவிக்கும் அத்தனை வலிகளையும் இவர்கள் முகாமில் அனுபவித்திருக்கிறார்கள். திடீரென்று கழுத்தைக் கீறிவிட்டு ரத்தம் பீறிட்டுக் கிளம்புவதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். தோளில் சுடுவார்கள். எலும்பை அல்லது தசையை அல்லது உடலின் ஒரு பாகத்தை வெட்டியெடுத்து ஆராய்வார்கள். ராவன்ஸ்புரூக் கைதிகள்மீது பரிசோதனைகள் மேற்கொள்ளும் வழக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பமானது.

ஸ்டாசியாவுக்கு மீண்டும் விழிப்பு வந்தது. இந்த முறையும் அவருடைய கால் கத்தியால் அறுத்துத் திறக்கப்பட்டிருந்தது. காயமடைந்து எத்தனை மணி நேரத்தில் தொற்றுநோய் பரவும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியிருக்கிறார்கள். எதிர்பார்த்தபடி தொற்று ஏற்படவில்லை என்பதால், கிருமிகளை காயத்தின் மீது பரவவிட்டிருக்கிறார்கள். கிருமிகள் செழித்து வளர ஆரம்பித்ததும், அந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் பணி ஆரம்பமானது. வெற்றி. சூட்டோடு சூடாக அடுத்த பரிசோதனை ஆரம்பமானது. உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் மரத் துண்டுகளையும் காயமடைந்த இடத்தில் தள்ளி அடைத்தார்கள். இந்த முறை தொற்று அதுவாகவே தோன்றிவிட்டது. வெற்றி. மீண்டும் அறுவை சிகிச்சை. அதற்குப் பிறகும் ஸ்டாசியா உயிருடன் இருந்தது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. நல்ல முயல்.

முயல்கள் - ஸ்டாசியா

1945, பிப்ரவரி 4 அன்று ஓர் உத்தரவு வந்து சேர்ந்தது. `ஜெர்மன் தேசத்துக்காகவே இந்தப் பரிசோதனைகளை நாம் மேற் கொள்கிறோம் என்றாலும், வெளியுலகின் பார்வைக்கு நம் செயல்கள் தெரியக் கூடாது. ஆகவே, தடயமின்றி எல்லா முயல்களையும் உடனடியாக அழித்துவிடுங்கள்!' - இது நடந்தது  ஹிட்லரின் பெருங்கனவு சிதைந்து அவருடைய ஜெர்மானிய தேசம் போரில் தோற்றுச் சரணடைவதற்குச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர்.

முகாம் பரபரப்படைந்தது. மருத்துவர்களும் காவலர்களும் அமர்ந்து பேசினார்கள். எத்தனை முயல்கள் எஞ்சியிருக்கின்றன என்று  ஆவணங்களைப் பார்த்தார்கள். கிட்டத்தட்ட எழுபது பெயர்கள் கிடைத்தன. அழித்துவிடலாம் என்று அவர்கள் தயாராவதற்குள் செய்தி முகாமுக்குள் பரவிவிட்டது. ஸ்டாசியாவும் அவர் தோழிகளும் தயாரானார்கள். வதை முடிவும் நெருங்கிவிட்டது. பலர் அவசர அவசரமாகத் தங்கள் குடும்பங்களுக்குக் கடிதம் எழுதினார்கள். எழுதி முடித்ததும் அதை மற்ற கைதிகளிடம் ஒப்படைத்தார்கள். `ஒருவேளை, நீங்கள் உயிருடன் வெளியில் செல்ல நேர்ந்தால், இதைத் தயவுசெய்து என் குடும்பத்திடம் ஒப்படைத்துவிடுவீர்களா?'

அப்போதுதான் அந்த மாற்றம் நடந்தது. அழுகையை நிறுத்திக்கொண்டு யார் முதலில் குரலை உயர்த்தியது என்று தெரியவில்லை. ஆனால், அந்தக் குரலில் இருந்த தெளிவும் உறுதியும் நம்பிக்கையும் போர்க்குணமும் தீ போலப் பரவி எல்லாப் பெண் கைதிகளையும் பற்றிக்கொண்டது. `இனி நாம் அழக் கூடாது. அழுவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கம் இல்லையா? இத்தனைக் காலமாக வாய் மூடி எல்லாக் கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். இனியும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்த முயல்களை நாம் வெறுமனே கையசைத்து அனுப்பிவைக்கப் போகிறோமா? அவர்களுடைய மரண வாக்குமூலத்தைக் கையில் ஏந்தி நடனமாடப் போகிறோமா? நாளை அவர்களுடைய சடலங்கள் இதே வழியாக எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு நிற்கப்போகிறோமா? கல்லாக மாறி நிற்பதற்குப் பதில் நாம் ஏன் உயிர்பெற்று எழுந்திருக்கக் கூடாது? எங்கோ அடியாழத்தில் தொலைந்துபோயிருக்கும் நம் குரலை நாம் ஏன் மீட்டெடுத்துக்கொள்ளக் கூடாது? தொங்கிப்போன கரங்களை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்கக் கூடாது? இந்த வதை போதும். ஒரு முயலும் இனி இறக்கக் கூடாது. ஒரு புதிய முயலும் இனி தோன்றக் கூடாது.'

அன்றிரவே ஸ்டாசியா உள்ளிட்ட அனைத்து முயல்களையும் அவசர அவசரமாக மறைத்து வைக்க ஆரம்பித்தார்கள். தோற்றத்தை மாற்றினார்கள். உடைகளை மாற்றினார்கள். குழி தோண்டி உள்ளே இறக்கினார்கள். கழிப்பறைகளில், மறைவிடங்களில் ஒளித்துவைத்தார்கள். ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு மத்தியில் எழுபது சொச்சம் பேரைத் தேடிக் கண்டறிய முடியாமல் முதல் நாள் சலித்துவிட்டனர் காவலர்கள். மறுநாள் வந்தனர். அன்றும் ஒருவரும் சிக்கவில்லை. அடுத்த நாள், மறுநாள் என்று தொடர்ந்து தீவிரமான தேடல் வேட்டை நடைபெற்றது. `யார் உயிர் போனாலும் பரவாயில்லை, ஒரு முயலும் பிடிபட்டுவிடக் கூடாது' என்பதில் கைதிகள் காட்டிய உறுதி ஒவ்வொரு நாளும் வலுவடைந்துகொண்டே போனது. உலகிலேயே வலுவான சக்தி என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற நாஜிகளால் ராவன்ஸ்புரூக் முயல்களில் ஒன்றைக்கூட இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

முகாம் விடுவிக்கப்பட்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தார் ஸ்டாசியா.   ‘தங்களுக்கான உணவைக்கூடச் சாப்பிடாமல் மறைத்துவைத்து எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். நானும் என்னைப் போன்ற மற்றவர்களும் உயிர் வாழ்வதற்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள். எங்கள்மீது இரக்கப்பட்டு அவர்கள் இப்படிச் செய்தார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அது வெறும் கருணை மட்டுமல்ல. அது ஒரு போராட்டம். அது ஒரு போர். நாங்கள் அனைவரும் அதில் ஒன்றாக இணைந்திருந்தோம். ஒன்றாகப் பணியாற்றினோம், ஒன்றாகச் சண்டையிட்டோம், ஒன்றாக மரணத்தை வென்றோம்.’

பெண்ணுடல்மீது தொடுக்கப்பட்ட போரில் நாஜிகள் பெரும் தோல்வியைச் சந்தித்ததோடு முழு வீழ்ச்சியையும் அடைந்தனர். தாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவைக் காண்பதற்கு முன்னரே தங்களுடைய முடிவை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. `முயல்கள் மிருதுவானவை; ஆனால், பலவீனமானவையல்ல' என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனரா என்பது தெரியவில்லை. ஆனால், உலகம் உணர்ந்துகொண்டது.

- மருதன்