
அருமை ஆச்சர்யம் இனிமை

தொன்மையான கலாசாரம், அழகிய கட்டடக்கலை, அருமையான சமையல்... அனைத்துக்கும் பெயர்பெற்ற செட்டிநாட்டு ஊர்களுள் ஒன்று நெற்குப்பை. சோமலெ, தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் பிறந்த மண். இங்கு, ஒரு குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும், கிட்டத்தட்ட 75 பேர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக பொங்கல்வைத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நெற்குப்பையில் `ராம.சா.ராம' குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பத்தின் சகோதரர்கள் நால்வர். இவர்களின் வழிவந்த பிள்ளைகள், பேரன்மார்கள், அவர்களின் குடும்பத்தினர் என 28 குடும்பங்கள் சேர்ந்த

பெரிய வீடு அது.
இந்த மெகா பொங்கல் கொண்டாட்டத்துக்கான வித்தை விதைத்தவர்கள் சென்னை, திருவொற்றியூரில் இருக்கும் கரு.சுந்தரம் - வசந்தா சுந்தரம் தம்பதி. ‘‘எங்க மாமனார், அவரோடு பிறந்த மூணு பேர்னு நாலு பேருமே இப்ப உயிரோடு இல்லை என்றாலும், அவங்க நாலு பேரின் பிள்ளைகள், மருமக்களாகிய நாங்க ரொம்ப ஒத்துமையா இருப்போம். எங்க எல்லோருடைய பிள்ளைகளும்கூட அப்படித்தான், என்ன ஒண்ணு, எல்லோரும் கூடிப்பேசி சிரிக்கிறதுக்கான வாய்ப்பே ரொம்ப இருக்காது. வளவுக்குள்ள கல்யாணம்னா பிள்ளைங்க ஸ்கூல் கெட்டுப்போயிடும்னு குடும்பத்துக்கு ஒருத்தர்தான் வருவாங்க. தீபாவளி, பொங்கல்னு எல்லாத்தையுமே அவங்கவங்க இருக்கிற இடத்தில்தான் கொண்டாடுவாங்க.
ரெண்டு வருஷங்களுக்கு முன்னால, ஒரு பொங்கலன்னிக்கு பொங்கலிட்டுப் படைச்சு சாப்பிட்ட பிறகு எல்லாரும் உக்காந்து கேஷுவலா பேசிட்டிருந்தோம். அப்போதான் என் கணவர், ‘உங்க அய்யா, அப்பாத்தா இருந்தப்ப 15 வருஷங்கள் முன்னால நாங்க எல்லாம் நம்ம ஊர்லதாம்ப்பா பொங்கலிடுவோம். அவங்களுக்கு அப்புறம் அந்த வழக்கமே போயிடுச்சு’ன்னு வருத்தமா சொல்லிட்டிருந்தாங்க. உடனே, ‘அதேமாதிரி, நாமும் நம்ம ஊருக்குப் போய் பொங்கல் வெச்சா நல்லாயிருக்குமே’னு என் ஆசையைச் சொன்னேன். அது என்னுடைய நீண்ட நாள் ஏக்கம். அதை எங்க பையன் சாத்தப்பன்கிட்டயும் சொன்னோம். அடுத்த பொங்கலுக்கே எல்லோரும் சேர்ந்து கொண்டாடிலாம்னு சொன்ன அவன், அதுக்கான ஏற்பாடுகளை எங்க மருமக நித்யாகூட சேர்ந்து செய்ய ஆரம்பிச்சிட்டான்’’ என்று வசந்தா முடிக்க... தொடர்ந்தார் அவர் மகன் சாத்தப்பன்.

‘‘அம்மா சொன்னதுமே, ‘ஏன் நாம மட்டும் கொண்டாடணும்? எல்லா கஸின்ஸ் குடும்பங்களும் சேர்ந்தா நல்லாயிருக்குமே’ன்னு யோசிச்சேன். எங்க வீட்டுக்குள்ள 28 புள்ளி (திருமணமான ஆண்மக்கள்). அவங்கள்ல நாலு குடும்பங்கள் மட்டும் வெளிநாட்டில் இருக்காங்க. மத்தவங்க எல்லாருமே இந்தியாவுக்குள்ளே வெவ்வேறு ஊர்களில் இருக்காங்க. அம்மா அப்பாவின் இந்த ஐடியாவைக் கேட்டதுமே அடுத்த பொங்கலுக்கே இதைச் செயல்படுத்துறதுன்னு முடிவுசெய்து, அப்போதே ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சிட்டேன். மும்பை, சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவைன்னு எல்லா ஊரில் இருக்கும் கஸின்ஸும் ரொம்ப ஆர்வமா ஊருக்கு வரத் தயாராயிட்டாங்க. அதுக்கான செலவுகளுக்கு ஒரு ஃபண்ட் கலெக்ட் பண்ணலாம்னு முடிவெடுத்து, அதுக்கும் எல்லோரும் உடனே பணம் அனுப்பிட்டாங்க’’ என்று அவர் முடிக்க, அதற்கடுத்த ‘மூவ்’களை உற்சாகமாக விவரித்தார் சாத்தப்பனின் மனைவி நித்யா.
‘‘எல்லோரும் சொந்த ஊரில், எங்க பெரிய வீட்டில் கூடும்போது, ஒரே மாதிரி டிரஸ் போட்டா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. உடனே பர்ச்சேஸை ஆரம்பிச்சோம். மருமக்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி புடவை, ஆண்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி வேஷ்டி, சட்டை... குழந்தைகளுக்கும் அதே போல! எங்க மாமியார், மற்ற மாமியார்னு பெரியவங்க எல்லாரும் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடியே ஊருக்குப் போய், வீட்டைச் சுத்தம் செய்து, தேவையானதெல்லாம் வாங்கி, மிளகாய் மல்லி அரைச்சு, வேலைக்கார ஆட்களுக்கு எல்லாம் சொல்லி தயார்படுத்தினாங்க. போகி அன்னிக்கு நாங்க எல்லாரும் ஊரில் போய் இறங்கினோம். போன முதல்நாளே, எல்லாரையும் உக்காரவெச்சு, இந்த ‘கெட் டுகெதர்’ எதுக்காகன்னு விளக்கிட்டு, ஒரு கண்டிஷன் போட்டோம் பாருங்க... எல்லாரும் அதுக்குச் சம்மதிச்சதுதான் பெரிய ஆச்சர்யமே’’ என்று சஸ்பென்ஸ் வைத்தார் நித்யா.
‘‘அதாவது, ஊரில் இருக்கப்போகும் அந்த மூணு நாள்களும் சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரை யாருமே மொபைலைத் தொடக் கூடாது; நோ லேப்டாப்; நோ வாட்ஸ்அப்; நோ ஃபேஸ்புக்னு ஒரு கண்டிஷன் போட்டோம். இளைய தலைமுறை உட்பட எல்லோருமே அதுக்கு ஏகமனசா சம்மதிச்சது பெரிய விஷயம். அந்த மூணு நாளும் குடும்ப உறுப்பினர் அறிமுகம், பொங்கல் விழா, போட்டிகள்னு அதில்தான் நம்ம கவனம் இருக்கணும்; வேற எந்தச் சமூக வலைதளமும் எங்க குடும்ப விழாவில் குறுக்கிடக் கூடாது என்பதில் நாங்க உறுதியா இருந்தோம். அதே மாதிரியே எல்லோரும் இருந்து, விழாவை ரொம்பச் சிறப்பாகக் கொண்டாடிட்டோம்ல!’’ - பெருமையும் உவகையும் போட்டி போடுகிறது சாத்தப்பனின் குரலில்.

‘‘ஆமாங்க... முதல் நாளில் இருந்தே வீடு களைகட்ட ஆரம்பிச்சிருச்சு. எல்லோரும் சேர்ந்து கோலமிட்டோம். பூக்கட்டினோம். மறுநாள் எங்க வீட்டுப் பெரியவங்க நாலு பேர் என்பதால் நாலு செட் பானை வெச்சு, வீட்டின் நடு முற்றத்தில் பொங்கல் இட்டோம். ஆண்கள் எல்லாம் உக்காந்து விறகு அடுப்பை ஊதி எரியவிட்டு, யார் வீட்டுப் பானை முதலில் பொங்குதுன்னு ஒரே போட்டாபோட்டி! எங்க பிள்ளைங்களுக்கு எல்லாம் அது ரொம்ப வித்தியாசமான, மகிழ்ச்சியான தருணம்! நகரத்தார் குல வழக்கப்படி விளக்குச்சட்டி எடுத்தோம். எல்லா வீட்டுக்கும் விளக்குச்சட்டி வெச்சுக் கும்பிட்டது கண்கொள்ளாக் காட்சி.
அப்புறம்தான் செலிபிரேஷனே. அதில் டாப்னு சொன்னா பட்டிமன்றமும் விளையாட்டுப் போட்டிகளும்தான். பரிசுகளை எங்க கொழுந்தனார் சேதுராமன் சாத்தப்பன் ஸ்பான்ஸர் பண்ணினார். மொத்தத்தில் அந்த மூணு நாள்களும் நிமிஷம் மிச்சமில்லாம சந்தோஷத்தை அனுபவிச்சோம்’’ என்கிறார் நித்யா.
பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றி தொடர்ந்து சுவாரஸ்யமாக விவரித்தார், அந்தக் குடும்பத்தின் உறுப்பினரும் வங்கியாளர் மற்றும் எழுத்தாளருமான சேதுராமன் சாத்தப்பன்... ‘`விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, கோலப் போட்டி, ஆண்களுக்கு மொச்சைப்பயறு உரிக்கிற போட்டி, வயசு வித்தியாசம் இல்லாம எல்லோருக்கும் கையெழுத்துப் போட்டி, தம்போலா... இப்படி விறுவிறுப்பான போட்டிகள் வெச்சு, நேரம் போறதே தெரியாம அதில் மூழ்கிட்டோம்’’ என்று சொல்ல, அவருடைய மனைவி அன்னபூரணி மாட்டுப்பொங்கல் தினத்தின் நிகழ்வுகளை அடுக்கினார்.
‘‘எங்க வீட்டில் பிறந்து வெளியூரில் கல்யாணம் செய்து கொடுத்த எங்க வீட்டுப் பெண்பிள்ளைகள் எல்லாம் மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்னிக்கு, ‘பால் பொங்கிருச்சா?ன்னு கேட்டுட்டு, எங்க ஊர் மஞ்சுவிரட்டைப் பார்க்க வந்தாங்க. அவங்களுக்கும் நாங்க டிரஸ் எடுத்துக் கொடுத்திருந்தோம்.

அன்னிக்கு மதியம் அசைவ விருந்து. ஊரில் முக்கிய பிரமுகர்கள், பெரியவர்கள் எல்லாரையும் அழைச்சிருந்தோம். கிட்டத்தட்ட 150 பேருக்கு மேல இருந்தோம். கல்யாண வீடு மாதிரி இருந்தது. வந்தவங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு சந்தோஷம், மனநிறைவு. அடுத்த வருஷமும் இதைத் தொடரணும்னு அப்போவே முடிவு பண்ணியாச்சு’’ என்றார் அன்னபூரணி சாத்தப்பன்.
‘‘இன்றைய குழந்தைகளுக்கு நம்ம கலாசாரம், பண்பாடு தெரியலை. அதோடு நம்ம குடும்பத்து உறுப்பினர்களையே தெரியாம இருப்பது வருத்தமான விஷயம். எங்க வீட்டுப் பொங்கல் விழா அந்த வருத்தத்தைப் போக்கிடுச்சு. பேரன், பேத்திகள் எல்லாம் மூத்த தலைமுறை உறவுகளைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. எங்க குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் திறமைகள் வெளியே வந்தது. ஏழு முதல் எழுபது வயசு வரை உள்ள எல்லோரும் சேர்ந்து, இணைந்து மூன்று நாள்கள் இருந்தப்போ குடும்பங்களுக்குள் இருந்த சின்னச்சின்ன சஞ்சலங்கள் மறைந்து, பந்தம் பலப்பட்டது. எதிர்கால சந்ததியினரும் ஒருவரையொருவர் தெரிஞ்சு, புரிஞ்சுக்கிட்டதால இந்த உறவுகள் இனியும் பலப்படும் என்பதுதான் இதனால் உருவான பெரிய நன்மை. போன வருஷப் பொங்கல் விழா ஆர்வத்தைக் கிளப்பிவிட்டதால், அமெரிக்காவில் இருக்கும் என் தம்பிகள் இருவரும் குடும்பத்தோடு இந்த வருஷப் பொங்கலுக்கு ஊருக்கு வர்றாங்க. அயல்நாட்டில் இருக்கும் இன்னும் இரு குடும்பங்களும் வந்துட்டா, இந்த வருஷம் எங்க வீட்டில் 28 புள்ளிகள் இணைந்த பொங்கல்’’ என்று புன்னகைத்தபடி கூறுகிறார் சேதுராமன் சாத்தப்பன்.

சாத்தப்பனின் சித்தப்பா மனைவி மீனாள் முத்தையா, தங்கள் வீட்டுப் பிள்ளைகளைவிட மருமக்களைப் புகழ்ந்து தள்ளினார். ‘‘எங்க மருமக்கள் எல்லாம் தங்கம் பெத்த பிள்ளைங்க. நாங்க மாமியார், மருமகள் மாதிரி இருந்துக்கறதில்லை. ரொம்ப ஃப்ரெண்ட்லியாகத்தான் இருப்போம். இந்த மாதிரி எல்லோரும் ஒண்ணு கூடிப் பொங்கல் வச்சப்ப, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து, எந்த ஈகோவும் இல்லாம அனுசரிச்சுப் போனது அழகு. இதோ இந்த வருஷப் பொங்கலுக்கு மலேசியாவிலிருந்து வரப்போகும் என் மருமகளுக் காக நான் ஜாக்கெட் எல்லாம் தச்சு ரெடியா வெச்சிருக்கேன்’’ என்கிறார் பெரிய சிரிப்புடன்.
‘‘அப்போ இந்த வருஷப் பொங்கலையும் ஜமாய்க்கப் போறீங்கன்னு சொல்லுங்க...’’ என்றோம்.
‘‘நிச்சயமா! யூனிஃபார்ம் புடவை, ஷர்ட் எல்லாம் எடுத்தாச்சு, புதுமையான கேம்ஸ் ரெடி பண்ணியாச்சு, பரிசுப் பொருள்கள் வாங்கியாச்சு. போன மாசம் கல்யாணம் முடிஞ்ச எங்க அண்ணன் பையனுக்கு இது தலைப்பொங்கல். புது வரவாக, இன்னும் ரெண்டு பேரக்குழந்தைங்களும் வந்திருக்காங்க. இந்த முறை நாலு நாள் லீவு வருது. ஒருநாள் குலதெய்வம் கோயில், ஒருநாள் முதியோர் இல்லத்துக்கு உணவு வழங்கும் திட்டம்னு நிறைய ப்ளான் பண்ணியிருக்கோம்’’ என்று பரபரப்பாகப் பகிர்ந்துகொண்டார் சாத்தப்பன்.
‘`இந்த வருஷம் எங்க குடும்பத்தினரைவிட, எங்க பொங்கல் விழாவைப் பார்த்து ரசிக்க வரும் ஊர்ப் பிரமுகர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்போல! இதுதான் டாக் ஆஃப் தி கிராமம்! நீங்களும் வந்துடுங்க’’ என்று செட்டிநாட்டுக்கே உரிய விருந்தோம்பலுடன் அழைத்தார் நித்யா.
நேரத்தை விழுங்கும் பகாசுர அலைப்பேசிகளை மறந்து, தன் பூர்வீக ஆலமரத்தின் நிழலிலே இளைப்பாறி, ஆடிப்பாடி, பேசி, பரிசளித்து, விருந்துண்டு களித்திருக்கும் விழுதுகள் சொல்வது இதைத்தான்... அன்பினால் எதுவும் முடியும்!
- பிரேமா நாராயணன்