தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்

கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்

உறவுகள்... உணர்வுகள்...

சுனிதாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கொடூர விபத்து அது... முகம் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வட்டம், அதன் நடுவில் சுவாசிக்க இரண்டு துளைகள்... மழிக்கப்பட்ட தலை, நொறுங்கிப்போன பற்கள், மொத்தத்தில் உருக்குலைந்துபோன தோற்றம், 25 வயதில் 27 அறுவை சிகிச்சைகள்... விலகிப்போன நட்புகள், வெறுத்து ஒதுக்கிய சுற்றம்... இத்தனைக்குப் பிறகும் பீனிக்ஸ் மனுஷியாக எழுந்து நின்றிருக்கிறார் சுனிதா அடினஸ்.

கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்



ஓசூரில் `ஐபிஎம்'மில் சர்வீஸ் மேனேஜராக இருக்கும் சுனிதாவை சூப்பர் வுமன் எனக் கொண்டாடலாம். சுனிதாவுடன் ஐந்து நிமிடங்கள் உரையாடினால் போதும்... வாழ்வின்மீது பேரன்பும் பெரும் நம்பிக்கையும் பிறக்கும் யாருக்கும்.

‘`சுனிதாங்கிற என் பெயரை இங்கிலீஷ்ல எழுதி, திருப்பிப் போட்டுப் பார்த்தேன்.  அடினஸ்னு வந்தது. வித்தியாசமா தெரிஞ்சது. பெயருக்குப் பின்னால சாதியைப் போட்டுக்கிறதுக்குப் பதில் இது நல்லா இருந்தது. அன்னிலேருந்து நான் சுனிதா அடினஸ் ஆயிட்டேன்’’ - அறிமுகத்திலேயே அசத்துகிறார். பெயரை மட்டுமல்ல, தன் தலையெழுத்தையும் புரட்டிப்போட்டு சாதித்துக்கொண்டிருக்கிற சுவாரஸ்ய மனுஷி.

கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்

‘`அம்மா அப்பாவுக்குப் பூர்வீகம் கேரளா. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருப்பூரில்.  ‘நீ மற்றவங்களைப் போல இல்லை’னு சின்ன வயசுலேருந்தே மனசு சொல்லிட்டே இருந்தது. சீக்கிரமே கல்யாணத்துக்குள்ள விழுந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். மெடிசின் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, வீட்டுல வசதியில்லை. சீக்கிரமே குழந்தைப்பருவத்தை விட்டு வெளியே வரணும்னு நினைச்சிருக்கேன். வேலை பார்க்கிறதுக்காக எர்ணாகுளம் வந்தேன்.  `ஜிஈ'னு ஒரு பெரிய கம்பெனியில டெக்னிக்கல் சப்போர்ட் பிரிவுல வேலை கிடைச்சது.  ஹைதராபாத்ல வேலை. பாதுகாப்பு இருக்காதுனு வீட்டுல அந்த வேலைக்குப் போக விடலை. அப்புறம் நிறைய இன்டர்வியூஸ், அடுத்தடுத்து மாறின வேலைகள்னு என் மருத்துவக் கனவு காணாமப் போயிடுச்சு. அதுக்காகவே பிசியோதெரபி சேர்ந்தேன். எனக்கு ஹீலிங் டச் இருக்கிறதா நம்பினேன். என்னால சிலரின் வாழ்க்கைகளை மாற்ற முடியும்னு நம்பினேன்'’ - வார்த்தைகளிலேயே பிறரின் வாழ்க்கையை மாற்றிக்காட்டுகிற சுனிதா, வேலை நேரம் போக, மீதி நேரத்தில் பிசியோதெரபி செய்கிறார். குறிப்பாக, குழந்தையில்லாதவர்களுக்கான சிறப்பு பிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்கிறார். அத்தனை பேருக்கும் அன்பை மட்டுமே பகிரத்தெரிந்தவரின் வாழ்க்கையில் அந்த ஒரு வருடம் வராமலேயே போயிருக்கலாம்.

‘`2011-ம் வருஷம்... ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர்கூட காரில் பெங்களூருலேருந்து கோயம்புத்தூர் வந்திட்டிருந்தேன். நான் பின்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தேன். பாட்டு கேட்டுக்கிட்டே வந்ததுல நான் தூங்கிட் டேன். காரை ஓட்டிக்கிட்டு வந்த என் ஃப்ரெண்டும் ஒரு நிமிஷம் தன்னை மறந்து தூங்கிட்டாங்க. அந்த ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சிருச்சு. நாங்க வந்த கார் ஆக்சிடன்ட். மூணுவாட்டி பல்டி அடிச்சு. டிவைடர் மேல முட்டி மோதினதுல பின்னாடி உட்கார்ந்திருந்த என் முகம் கார் கதவுக்கு வெளியே வந்து சிக்கிடுச்சு. எனக்கு ரொம்ப அழகான நீளமான முடி இருந்தது. அது மொத்தமும் சிக்கி, என் முகமே முழுசா சிதைஞ்சிருச்சு. அடுத்த மூணு மணி நேரத்துல ஆஸ்பத்திரியில சேர்த்துட்டாங்க.

நினைவு வந்துவந்து போயிட்டிருந்தது. `நான் பிழைக்கமாட்டேன்'கிற முடிவுக்கு வந்துட்டேன். எல்லார்கிட்டேயும் ‘பை’ சொல்லிட்டுத் தயாராகிட்டேன். ஆனா, நடந்தது வேற. இன்னும் இந்த உலகத்துல எனக்கு நிறைய வேலை இருந்திக்கு.  அதனால பிழைச்சிட்டேன். 65 நாள் ட்ரீட்மென்ட்.

நினைவு திரும்பினபோது என் முகத்துல ஒரு பார்ட்டும் இல்லை. என் ஸ்கின்னை சுத்தம் செய்யவே ரெண்டு வாரங்களாச்சாம். அப்படிச் சுத்தம் செய்தபோதுதான் என் கருவிழி, கன்னத்துக்குள்ளே புதைஞ்சிருந்ததைக் கண்டுபிடிச்சு அதை எடுத்து மறுபடி பொருத்தியிருக்காங்க. என் மேல்தாடை மொத்தமா நொறுங்கிப் போயிருந்தது. கீழ்த்தாடையும் மேல் தாடையும் சுக்குநூறா உடைஞ்சுபோச்சு. பற்கள் எல்லாம் நொறுங்கிப்போச்சு. கழுத்துக்கு மேல உணர்வில்லாத ஃபீலிங் இருந்தது.

சாப்பாடு, சுவாசம்னு எல்லாமே டியூப் வழியாதான். உருவமில்லாத என் முகத்தைத் தொட்டுப் பார்த்துடக் கூடாதேனு என் கைகளைக் கட்டிப்போட்டு வெச்சிருந்தாங்க. மாசக்கணக்குல என்னைக் கண்ணாடி பார்க்கவிடலை. முதன்முறையா லிஃப்ட் கதவின் ரெஃளெக்‌ஷன்ல என் முகத்தைப் பார்த்தபோது ஒரு நிமிஷம் எனக்கு எதுவுமே புரியலை. கோணல்மாணலான ஒரு வட்டம்... நடுவில் ஓர் ஓட்டை...  அதுதான் நான், அதுதான் நிஜம்னு தெரிஞ்சபோது நொறுங்கிப்போனேன். வாழ்ந்துதானே ஆகணும்?  எல்லாம் ஒருநாள் சரியாகிடும்னு  நம்பிக்கை இருந்தது’’ - சுனிதா விவரிக்கும்போது நமக்கு நெஞ்சம் பதறுகிறது.  அவருக்கோ புன்னகை மாறவே இல்லை.

கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்

நான்கு வருடங்களில் 27 அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டிருக்கிறார். சுனிதா... ‘`ஆஸ்பத்திரியில நிறைய நாள்கள் ஹாலுசினேஷன்லயே இருந்தேன். ஹாலுசினேஷனுக்கும் (மாயத்தோற்றம்) ரியாலிட்டிக்குமான (உண்மை) வித்தியாசம் தெரிஞ்சவங்க மீண்டு வந்துடறாங்க. ஹாலுசினேஷன் லேயே மாட்டிக்கிறவங்கதான் காணாமப் போயிடறாங்க. நான் மீண்டு வந்துட்டேன்.

டாக்டர்ஸ் எனக்கு ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி பண்ணினாங்க. அதாவது என்னால பார்க்க முடியணும், மூச்சுவிட முடியணும், சாப்பிட முடியணும்னு தேவையான விஷயங்களுக்கான சர்ஜரி அது. அழகுக்கானது இல்லை. கால்லேருந்து எலும்பு எடுத்து மேல்தாடையைப் பொருத்தியிருக்காங்க. இடுப்புலேருந்து எலும்பு எடுத்து மூக்குல வெச்சிருக்காங்க. அதனால மூச்சு விடறதுல அடிக்கடி சிரமம் வரும். கண்லேருந்து கண்ணீர் வந்துக்கிட்டே இருக்கும். எட்டு வருஷங்களுக்குப் பிறகும் உடலளவுல அப்பப்போ பிரச்னைகள் வரும்.  கூட்டத்தில் நிற்க முடியாது. இன்ஃபெக்‌ஷன் வந்துடக் கூடாதுங்கிறதுதான் காரணம். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்? எல்லாருக்கும் நான் நல்லது மட்டும்தானே நினைச்சிருக்கேன், செய்திருக்கேன்’ னு நானும் ஒரு காலத்துல விரக்தியின் உச்சத்துக்குப் போயிருக்கேன்.  ஆனா, எல்லாத்துலேருந்தும் வெளியே வந்தேன். அதுக்கு முக்கியமான காரணம் என் கணவரும் குழந்தைங்களும், என் தங்கச்சி அஞ்சலியும்’’ - சூப்பர் வுமன் சுனிதாவின் தன்னம்பிக்கையில் அவரது காதலுக்கும் பங்கிருக்கிறது.

‘`ஜேயும் நானும் ஒண்ணா படிச்சோம். ‘ஜே’ன்னா ஜெயப்ரகாஷ். முன்னல்லாம் ‘ஜேபி’னு சொல்வேன். இப்ப உதடு ஒட்ட மாட்டேங்குது, அதனால ஜேனுதான் கூப்பிடறேன். சாதாரண ஆக்சிடன்ட்டா இருக்கும்னு நினைச்சுதான் ஜே என்னைப் பார்க்க வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவருக்கு செம ஷாக். பயங்கரமா வெயிட் குறைஞ்சு, வயித்துல ஓட்டை போட்டு எனக்குத் திரவ உணவு போயிட்டிருந்தது. முகத்துல மூக்கோ, வாயோ இல்லை. தலைமுடி எல்லாம் எடுத்துட்டாங்க. பார்க்கிறதுக்கு வயசான பாட்டி மாதிரி இருந்த டைம் அது. என்னைப் பார்த்துட்டு அழுதார். அன்னிக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’னு அவர்கிட்டருந்து புரபோசல் மெசேஜ். ‘அரைமூஞ்சி இருந்தாகூட விட மாட்டேங்கிறாங்க. இப்பகூட எனக்கு புரபோசல் வருது பார்த்தீங் களா’னு அம்மாகிட்ட கலாய்ச்சிட்டிருந்தேன். ஆனா, ஜே தன் முடிவில் உறுதியா இருந்தார்.

‘நானே பெரிய கஷ்டத்துல இருக்கேன். எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன்னே தெரியலை. என்ன வேணா ஆகலாம். ஓரளவு செட்டிலான பிறகு யோசிக்கலாம். அதுவரைக்கும் ஒரு ஃப்ரெண்டா என்கூடவே இரு. வாழ்க்கை எப்படியிருக்குனு பாரு’னு சொன்னேன். கொஞ்ச நாள் கழிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பேரும் அவங்கவங்களுக்கான ஸ்பேஸைக் கொடுக்கவும் உணர்வுகளை மதிக்கவும் கத்துக்கிட்டோம். ஜே ஒரு பப்பட்டீயர் (பொம்மலாட்டக்கலைஞர்) மற்றும் டான்சர். ஹெலனோ ஓ கிராடி இன்டர்நேஷனல் என்ற கம்பெனியை ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கறோம். எங்களுக்கு நாலு வயசுல ஆத்மியா, ஒன்றரை வயசுல ஆத்மிக்னு அழகான ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஜேக்கு என்மேல அவ்வளவு காதல்.

அடுத்தவங்கக்கிட்ட எதையும் எதிர்பார்க்காம, அவங்களை அவங்களா இருக்க அனுமதிக்கிறதுதான் எந்த உறவுக்கும் அடிப்படை. அது கணவன் மனைவி உறவோ, அம்மா மகள் உறவோ... எதுவானாலும் சரி. நம்மகூட இருக்கிறவங்க நெகட்டிவான ஆட்கள்னு தெரிஞ்சா அவங்கக்கிட்டருந்து விலகியிருக்கறது நமக்கு நல்லது. ஆஸ்பத்திரியில இருந்தபோது என்னைப் பார்க்க வர்றவங்க எல்லாரும் என்னைப் பார்க்க சகிக்காம அழுதிருக்காங்க, மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.  எனக்கு ஓரளவு நினைவுவந்ததுமே என் தங்கச்சிகிட்ட அவங்களை எல்லாம் வரவிட வேண்டாம்னு சொல்லிட்டேன். என்னைச் சுற்றிலும் நெகட்டிவிட்டி இல்லாமப் பார்த்துக்கறேன்.

எனக்கு நடந்த ஆக்சிடன்ட்டுக்குப் பிறகு சில நண்பர்கள் என்னைவிட்டு ஒதுங்கிப்போயிருக்காங்க. என்னைப் பார்க்க கஷ்டமா இருந்திருக்கலாம் அல்லது என்னால இனிமே அவங்களுக்கு எதுவும் ஆகாதுனு முடிவு பண்ணியிருக்கலாம் அல்லது என்னைப் பார்க்க விருப்பமில்லாமலும் இருந்திருக்கலாம். ‘இப்படியும் ஒரு தைரியமான மனுஷியா’னு சிலர் என்கூட இன்னும் நெருக்கமாகியிருக்காங்க. அன்பு மட்டும்தான் என் ஆயுதம். அடுத்தவங்களுக்கு அதை மட்டும்தான் என்னால கொடுக்க முடியும். சந்தோஷமா இருங்க... அடுத்தவங்களையும் அப்படியே இருக்க விடுங்க. யாரையும் காயப்படுத்தாதீங்க. அதையும் மீறி மனசு வலிச்சா, ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க. ஏதோ ஒண்ணு நடந்திடுச்சா... நடந்ததை மாத்த முடியாது. அதையே நினைச்சு உடலை, உயிரை, உணர்வை, ஆன்மாவைக் கெடுத்துக்க வேண்டாம். கீழே விழுவோம். எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும். அதுதான் வாழ்க்கை.’’

உதடுகள் ஒட்டிப் பேச முடியாவிட்டாலும் சுனிதாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு உயிர்ப்பு... உற்சாகம்!

சல்யூட் சுனிதா!

- ஆர்.வைதேகி 

படங்கள் : யஷ்வந்த்