
முதல் பெண் துணை சபாநாயகர், மதராஸ் மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர்; உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் இந்தியப் பெண்-ஹம்சத்வனி , ஓவியம் : கார்த்திகேயன் மேடி
`ருக்மிணி சுயம்வரம்’... ருக்மிணி - லட்சுமிபதி ஜோடியின் காதல் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு, தெலுங்கு மொழியில் புனையப்பட்ட நவீன நாடகம். இதை எழுதிய நாராயண கவி என்பவர், அதை நரசாப்பூர் என்ற ஊரில் மேடை நாடகமாக அரங்கேற்றினார். அப்போதே தென்னிந்தியாவில் பெரிதும் பேசப்பட்டவர் ருக்மிணி!
`கோல்கொண்டா கோஹினூர்’ என்று அழைக்கப்பட்ட ருக்மிணி, 1892 டிசம்பர் 6 அன்று சென்னையில் பிறந்தார். தந்தை சீனிவாச ராவ், தாய் சூடாமணி அம்மாள். பள்ளிப்படிப்புடன் புகழ்பெற்ற வீணைக் கலைஞரான வீணை தனம்மாளிடம் வீணை வாசிப்பும் கற்றுத்தேர்ந்தார் ருக்மிணி. மகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்க முயன்ற சீனிவாச ராவைத் தடுத்த அவர் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு, ருக்மிணியை நன்கு படிக்கவைக்கும்படி அறிவுரை கூற, சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார் ருக்மிணி. அப்போது காலில் ஏற்பட்ட நோய்த் தொற்று ஒன்றைக் குணப்படுத்த மருத்துவரான ஆசந்தா லட்சுமிபதியின் உதவியை நாடினார் ருக்மிணி. இருவரும் காதல் வயப்பட்டனர். 32 வயதான ஆசந்தா லட்சுமிபதி, மனைவியைப் பறிகொடுத்த மருத்துவர். சமூக சேவகராகவும் சீர்திருத்தவாதியாகவும் வலம்வந்த ஆசந்தா, குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் மேடைகளில் முழங்கிவந்தார்.

தந்தை சீனிவாச ராவ் 1910-ம் ஆண்டு இறந்து போக, ருக்மிணியின் குடும்பம் ஆதரவு நாடி அவரின் சித்தப்பா நெமிலி பட்டாபிராம ராவின் வீட்டில் தஞ்சம் புகுந்தது. திருமணம் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் ஏதோ காரணம் சொல்லி, தட்டிக்கழித்து வந்தார் ருக்மிணி. இறுதியில், `ஆசந்தாவையே மணப்பேன்' என்று உறுதியாக ருக்மிணி நிற்க, வேறு வழியின்றி குடும்பம் ஒப்புக்கொண்டது. 1911-ம் ஆண்டு தன் 19-வது வயதில் ஆசந்தாவை மணந்தார் ருக்மிணி. ‘கலப்புத் திருமணம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது இவர்களது திருமணம்.
கல்வியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆசந்தா, திருமணத்துக்குப்பின் மனைவி ருக்மிணியை சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பில் சேர்த்தார். முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற ருக்மிணி, மேல்படிப்பை மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். முதலாமாண்டு முடிப்பதற்குள் தாயான ருக்மிணியால், மேற்கொண்டு படிக்க இயலவில்லை. 1914-ம் ஆண்டு எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கிய அன்று பிறந்த குழந்தைக்கு ‘எம்டன்’ என்ற சிறப்புப் பெயரும் இட்டனர் தம்பதி. துரதிர்ஷ்டவசமாக இரண்டாண்டுகளில் எம்டன் இறந்தான். அடுத்து மூன்று பெண் குழந்தைகளும், கடைக்குட்டி ராமராவும்

பிறந்தனர்.
வீட்டில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆதரித்து, அவரை சமையல் வேலைக்கு ருக்மிணி அமர்த்த, உயர் சாதியினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். கணவர் ஆசந்தாவோ, தன் மனைவி என்ன முடிவு செய்தாலும், அவர் படித்தவர் என்பதால் சரியாகவே இருக்கும் என்று கூற, பிரச்னை முடிவுக்கு வந்தது. தாகூரின் உறவினரான சரளாதேவி சவுதிரானியை சென்னைக்கு வரவழைத்த ருக்மிணி, அவரது `பாரத ஸ்திரீ மகாமண்டல்’ அமைப்பின் சென்னைக் கிளையைத் தொடங்கினார்.
1923-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார். குழந்தைத் திருமண ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார் ருக்மிணி. 1926-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற அகில உலக 10-வது மகளிர் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். உலகின் கவனத்தை இந்தியாவின்பால் திருப்ப முயன்றார். 1929-ம் ஆண்டு நடந்த சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1930-ம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாடு எடுத்த முடிவின்படி ஜனவரி 26-ம் நாளை சென்னையில் சுதந்திர தினமாகக் கொண்டாடினார்கள் காங்கிரஸ் இயக்கத்தினர். அன்று நடைபெற்ற கூட்டங்களில் பங்கெடுத்து மேடைகளில் முழங்கினார் ருக்மிணி.
1930-ம் ஆண்டு காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்துக்கு அழைப்பு விடுக்க, வேதாரண்யத்துக்கு நடைப்பயணம் மேற் கொண்டார் ருக்மிணி. அவருக்கு அதிர்ச்சி தந்தது சென்னையிலிருந்து வந்த தந்தி. குழந்தை ராமராவ் மண்ணெண்ணெயைக் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்ததாக தகவல். அன்றே சென்னை சென்ற ருக்மிணி, குணமாகிக்கொண்டிருந்த குழந்தையுடன் சில மணி நேரம் செலவிட்டு, அன்றிரவே மீண்டும் வேதாரண்யம் திரும்பினார். 1930 மே 14 அன்று உப்புக் குவியலை அணைத்தபடி படுத்துக்கொண்ட ருக்மிணி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஓர் ஆண்டு சிறைவாசத்துக்குப்பின் விடுதலையானார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்து, சென்னை சைனா பஜாரில் பெண்கள் ஒன்றிணைந்து நடத்திய ஒத்துழையாமை இயக்க மறியல் போராட்டத்தில் கைதானார் ருக்மிணி. இம்முறை வேலூரில் ஆறு மாதங்கள் சிறைவாசம். 1934-ம் ஆண்டு சென்னை மாகாண மேல்சபையின் காலி இடங்களுக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் ருக்மிணி. இதன்மூலம் `தேர்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினர்' என்ற பெருமையைப் பெற்றார். மாநிலச் சட்டசபையின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் ருக்மிணிதான்(1937)!
சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக 1936 முதல் 1940 வரை பதவி வகித்தார் ருக்மிணி. ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் பதவி வகித்த முதல் பெண்ணும் இவரே! 1940-ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்ததால், இவரின் மாநகராட்சி உறுப்பினர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர் பதவியும், துணை சபாநாயகர் பதவியும் பறிபோயின. இம்முறையும் வேலூரில் ஓர் ஆண்டு சிறைவாசம். அன்றைய சூழலில் தன் அரசியல் எதிர்காலம் குறித்த எந்த எதிர்பார்ப்பும் கவலையும் இல்லாமல் ருக்மிணி தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றது மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
1946 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட ருக்மிணி, சென்னை மகளிருக்கான பொதுத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் தலைமையிலான அரசின் பொது சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ருக்மிணி, மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சரானார். நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்று ராயப்பேட்டையில் கொடியேற்றிப் பேசினார் ருக்மிணி. 1950-ம் ஆண்டு காமராஜரிடம் பேசிய ருக்மிணி, “நாம் எல்லோரும் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டோம்; சிறை சென்றோம்; ஆகஸ்ட் 15-ம் நாள் விடுதலை பெற்றோம். நான் மரணம் அடைந்தால் அதே நாள் அல்லது ஆகஸ்ட் மாதம் மரணமடைய வேண்டும்” என்று கூறினார். அவரது ஆசைப்படியே 1951 ஆகஸ்டு 6 அன்று இயற்கை எய்தினார் ருக்மிணி.
இன்றும் சென்னை ருக்மிணி லட்சுமிபதி சாலையில் உள்ள சிறு பூங்கா ஒன்றில் மார்பளவு சிலையாகச் சிரித்தபடி இருக்கிறார் ருக்மிணி. சாதிக்கும் பெண்களுக்குப் பதவி ஒரு பொருட்டல்ல என்பதை இன்றைய அரசியல்வாதிகளுக்குச் சொல்லிவிட்டே சென்றிருக்கிறார் இந்த முதல் பெண்!