
பொங்கல் மிக விரும்பு

``நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கவே எட்டு ஆண்டுகள் ஆகின” என்கிறார் தீபக் கல்ரா.

உலகை மாற்றிய ஸ்டார்ட் அப் ஜாம்பவான்கள் எல்லோருமே கல்லூரியிலிருந்து வெளிவந்த உடனே அந்த முயற்சியில் இறங்கியவர்கள் கிடையாது. கொஞ்ச காலம் பணிபுரிந்துவிட்டு ஏதோ ஒரு நொடியில் திசைமாறியவர்கள்தாம். அது எப்போது என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்ற கதையெல்லாம் இல்லை. அதை அந்த நபர்தான் முடிவு செய்கிறார். தீபக் கல்ராவும் அப்படித்தான். 23 வயதில் எம்.பி.ஏ முடித்தவுடன் ஒரு வங்கியில்தான் வேலைக்குச் சேர்ந்தார். மூன்றாண்டுகள் `ஆல் இஸ் வெல்தான்.’ ஆனால், அதன்பின் தீபக்குக்கு ஒரு கேள்வி எழுந்தது. மிக முக்கியமான ஒரு கேள்வி; அவரைத் தூங்கவிடாத கேள்வி.
“இதுதான் உன் வாழ்க்கையா?”
தீபக்குக்கு உடனே விடை தெரியவில்லை. அவர் விரும்பும் வாழ்க்கை எதுவென்பதை அவரால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. அந்த வங்கியின் வாடிக்கையாளராக மட்டுமே அவர் இருக்க முடியும்; அங்கே வேலை செய்யக்கூடாது. அடுத்த நாள் வேலையை விட்டுவிட்டார். `என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவெடுக்கும் முன்னே வேலையை விடுவது புத்திசாலித்தனமல்ல’ என்றார்கள் நண்பர்கள். தீபக் உறுதியாக இருந்தார். அவருக்கு நேரம் தேவைப்பட்டது.

ஓராண்டில் தீபக்கிற்கு நிறைய வேலைகள் வந்தன. மீண்டுமொரு வேலைக்குப் போகலாமா என்ற குழப்பம். வருகிற ஆஃபர்களில் சவால் நிறைந்த வேலை கிடைத்தால் போகலாம் என நினைத்தார். அப்படி வந்த ஒரு வேலைதான் AMF Bowling என்ற நிறுவனத்தின் தலைமைப் பதவி. அமெரிக்காவில் புகழ்பெற்ற பவுலிங் விளையாட்டு அரங்குகளை இந்தியாவில் நிறுவ வேண்டும். இது நடப்பது 1990களில். அதுவரை இந்தியாவில் பவுலிங் பற்றிய அறிமுகமே கிடையாது. தீபக்குக்குத் தெரியும்; இந்தியாவில் இந்த விளையாட்டை லாபகரமாக்குவது சாதாரண விஷயமல்ல. அதை AMFவிடம் சொன்னார். அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தார்கள். தீபக்கும் முயற்சி செய்து பார்த்து விடலாமென முடிவெடுத்தார். ம்ஹூம். நான்கு வருடங்கள் கழித்து எதுவும் வேலைக்காகவில்லையென AMF வீடு திரும்பியது. நண்பர்கள் எல்லோரும் தீபக்கைப் பரிதாபமாகப் பார்க்க, “நான்காண்டுகள் நான் கற்ற பாடங்களுக்கு நான் செலவே செய்யவில்லை. இந்த நான்காண்டுகள்தான் இனிவரும் நாள்களைத் தீர்மானிக்கும்” என்றார்.
ஆம். ஒரு நிறுவனம் எப்படி இயங்க வேண்டும், எங்கே தொடங்க வேண்டும், எவ்வளவு முதலீடு வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது... இப்படிப் பல முக்கியமான விஷயங்களை தீபக் புரிந்துகொள்ள AMF வேலை உதவியது. எம்.பி.ஏ-வில் கற்றுக்கொள்ள முடியாத பல பிராக்டிக்கலான விஷயங்களை தீபக் இங்கே கற்றார்.

அடுத்து, சொந்தத் தொழிலா என்ற கேள்வி. தீபக்குக்கு ஒரு நிறுவனத்தில் தோல்விகள் எப்படியெல்லாம் இருக்குமென்ற அனுபவம் இருந்தது. ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதையும் அறிந்துகொள்ள ஆசை. அதனால் இன்னொரு வேலைக்குப் போகலாமென முடிவெடுத்தார்.
1999... அப்போது வந்த ஆஃபர் GE capital. இணையம் பற்றி இணையமில்லாத உலகெங்கும் பேச்சு அடிபட்ட காலம். இந்தியா முழுவதும் இருக்கும் இணைய ஜாம்பவான்களை வேலை நிமித்தம் தீபக் சந்திக்க வேண்டியிருந்தது. தீபக் தன்னை ஆர்ம்ஸ்ட்ராங்காக உணர்ந்தார். தான் கால் வைக்க வேண்டிய நிலா இணையம்தான் என்பதை முடிவு செய்தார்.
இணையத்தில் கிடைக்கும் சேவைகளைப் பார்வையிட்டார். தன்னுடைய கார் ஒன்றை இணையம் மூலம் விற்க முயற்சி செய்தார். 20,000 ரூபாய் அதிகமாகக் கிடைக்க இணையம் உதவியது. அந்தப் பணத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குப் பறந்தார். அதற்கான டிக்கெட்டையும் இணையம் குறைந்த விலையில் கொடுத்தது. குடும்பத்தை ஊர்சுற்றிப் பார்க்க அனுப்பிவிட்டு, தீபக் நிறைய யோசித்தார். பயணம் தொடர்பான சேவைகளை இணையம் மூலம் கொடுத்தால் சரியாக வருமென ஒரு ஸ்பார்க் தெறித்தது. அதை அணையவிடாமல், இந்தியா திரும்பினார் தீபக்.

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பயணம் செய்யப் பிடிக்கும். ஆனால், பறவைகளைப் போல நினைத்தவுடன் மனிதர்களால் பறந்துவிட முடியாது. நிறைய முன்னேற்பாடுகள் தேவை. செலவும் அதிகம். இவற்றையெல்லாம் சரியாகக் கணித்து முன்னரே திட்டமிட வல்லுநர்களின் உதவி தேவை. ஆனால், அவை பணம் இல்லாமல் சாத்தியமில்லை. இதற்கு இணையம் மூலம் தீர்வு கொண்டு வந்தார் தீபக் கல்ரா. அதுதான் அவரின் ஜீபூம்பா.
கொஞ்சம் முதலீட்டுடன், மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தீபக் 2000த்தில் makemytrip.com தொடங்கினார். எல்லாச் சூழலும் சாதகமாக இருந்தன. இணையத்தின் வளர்ச்சி, இந்தியாவில் முதலீட்டாளர்களை அதிகரித்தது, தீபக்கின் இள வயதும் அனுபவமும் என எதுவுமே மிஸ் ஆகாது என்று நம்பக்கூடிய சூழல் அது. ஆனால், முதல் வருட முடிவிலே எல்லாம் மாறிப்போனது. 2001-ல் அமெரிக்காவில் நடந்த 9/11 சம்பவம் உலகம் முழுவதையும் அதிர வைத்தது. அப்போதுதான் டாட் காம் துறை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பணம் தருகிறேன் என்ற முதலீட்டாளரும் நழுவிக்கொண்டார். கொஞ்சம் வளரத் தொடங்கிய makemytrip.com இவற்றையெல்லாம் சமாளிக்கும் திறனை அப்போது பெற்றிருக்கவில்லை; ஆனால் தீபக்கிற்கு அந்தத் திறமை இருந்தது.
டாப் லெவல் மேனேஜர்களிடம் பேசினார். “அடுத்த 12 மாதங்களுக்குச் சம்பளம் கிடையாது. இந்த நிறுவனம் வளரும் என நம்புகிறவர்கள் உடன் இருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டியிருந்தது. இல்லையேல், எல்லோரும் போக நேர்ந்திருக்கும். தீபக் வேறு வழியின்றி விஷயத்தைச் சொல்லி அதைச் செய்தார். முதலில் ரிஸ்க் எடுத்தபோது அது தீபக் மற்றும் மூன்று பேரின் ரிஸ்க்தான். இப்போது நிறைய ஊழியர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

நம் கையைமீறிய ஒரு விஷயம் (9/11 அட்டாக்) நம்மைத் தோல்வியில் தள்ளும்போது அதேபோல் ஒரு விஷயம் நம்மை வெற்றிபெற வைக்க வேண்டுமில்லையா? அதுதான் நியூட்டன் விதியும். தீபக்குக்கு அது இந்திய ரயில்வே மூலம் நடந்தது. அப்போதுதான் இணையம் மூலம் ரயில் டிக்கெட்டுகளை விற்க இந்திய ரயில்வே முடிவெடுத்திருந்தது. இந்தியா முழுவதும் இணையம் மூலம் டிக்கெட்டுகளை வாங்க அந்த விஷயம் உதவி செய்தது. மக்கள் நம்பி இணையம் மூலம் டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கினர். makemytrip.com நிமிர்ந்தது. பட்ட காலிலே படுமென்பார்கள். இங்கே எதிரானது. டிரெயின் மூலம் வந்த நம்பிக்கையை விமானங்கள் இரட்டிப்பாக்கின. குறைந்த விலை விமானச் சேவைகள் அந்தக் காலகட்டத்தில் அதிகமாகின. சின்னச் சின்ன ஊர்களில்கூட விமான நிலையங்கள் கட்டப்பட்டன. 400 கி.மீ-க்கே மக்கள் விமானத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்தது. இவையெல்லாம் makemytrip.com வெற்றிக்கு உதவின.
2005 தான் makemytrip.com வரலாற்றின் மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில் விற்ற 12 விமான டிக்கெட்டில் ஒன்று makemytrip.com மூலம் புக் செய்யப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் உலகமே பொருளாதார மந்தநிலையில் தள்ளாட, makemytrip.com கெத்தாக 1000 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்தது.
ஒரு துறையில் இப்படியொரு மாற்றம் நிகழ்ந்தால் அந்த ஐடியாவை அச்சுப் பிசகாமல் பிரதியெடுத்துப் பல நூறு நிறுவனங்கள் தொடங்கப்படும். இது வியாபார உலகில் சாதாரணம். அப்படிப் பல நிறுவனங்கள் makemytrip.com- -க்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டன. அதைக் கண்டு தீபக்குக்கு பயமில்லைதான். கொசு கடித்து சிங்கத்துக்கு ஏதும் ஆகாது. ஆனால், அவ்வப்போது தன் பலத்தைக் காட்ட, தன் இருப்பைக் காட்ட, காடு அதிர சிங்கம் கர்ஜிப்பதுண்டு. அப்படியொரு கர்ஜனையை 2010-ல் நிகழ்த்தினார் தீபக். ஆம், makemytrip.com அமெரிக்கப் பங்குச்சந்தையில் நுழைந்தது. அப்படிச் செய்த இந்திய டாட் காம் நிறுவனங்களில் makemytrip.com தான் தொடக்கம். இது, அமெரிக்க முதலீட்டாளர்களை இந்திய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய உதவியது. போட்டியாளர்கள் எல்லாம் விலகி வழிவிட்டனர். சின்னச் சின்ன நிறுவனங்கள் பலவற்றை வாங்கி, அவர்களின் பலத்தையும் தன் பலமாக மாற்றி, தனது ராஜநடையைத் தொடர்ந்தது makemytrip.com
ஒரு விஷயத்தை எப்படிச் செய்கிறோம் என்பதைவிட எப்போது செய்கிறோம் என்பது முக்கியம். `மழை பெய்யறப்ப உப்பு விக்கப் போகாத’ போன்ற பழமொழிகளில் சொன்னதுதான். அதைச் சரியாகச் செய்தார் தீபக். “நான் என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவெடுக்கவே எனக்கு எட்டு ஆண்டுகள் ஆகின. ஆனால், அதன்பிறகு எல்லாமே நல்லபடியாக நடந்தன” என்கிறார் தீபக். ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கு இது முக்கியமான பாடம். சொல்லப்போனால், வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் இது முக்கியமான பாடம்.
-கார்க்கி பவா