மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 20

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

நான்காம் சுவர் - 20

எதனினும் இனியது தமிழ்ச்சொல்

``நீங்கள், பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்” என்று சீடர்களைப் பார்த்து இயேசு சொன்னார். எந்தப் பொருளும் கெட்டுப்போகாதபடிக்கு உப்பு பாதுகாக்கும். ஆகவேதான், உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க முன்னோர்கள் நம்மைப் பழக்கினர். இப்படியாக, பேட்டையில் உப்பாக இருந்து எங்களைக் கெடாமல் பார்த்துக்கொண்டவர்தான் பாம்பு நாகராஜ். எல்லாப் பேட்டைகளிலும் ஒரு நாகராஜ் இருக்கத்தான் செய்கிறார். எல்லாக் குடும்பப் பஞ்சாயத்துகளையும் ஏற்றுக்கொண்டு சமாதானத்தின் தூதுவர்களாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். கல்யாணம் என்றால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்துகொண்டிருப்பார் பாம்பு நாகராஜ்.

நான்காம் சுவர் - 20

அவ்வப்போது வேட்டிக்கு வெளியே தெரிந்துகொண்டிருக்கும் காக்கி டவுசரில் இருக்கும் குவாட்டரைத் தட்டி உறிஞ்சிக்கொள்வதை மறக்கவே மாட்டார். விசேஷம் மட்டுமல்ல, துஷ்டியாக இருந்தால் பாடையை முடைந்துகொண்டிருப்பார். ஏறக்குறைய அவரோடு சிறுவயதில் டூமா கோலி விளையாடியவர்கள்தாம் இறந்திருப்பார்கள்.

``நம்ம செட்டு பூரா டிக்கெட்டு வாங்கிட்டானுங்க...” என்று பிணத்தைக் குளிப்பாட்டிக்கொண்டிருப்பார் பாம்பு.

``டேய் அவன் பொதுவுடைமைவாதிடா... அவனுக்குப்போயி பொட்டுலாம் வெக்காதீங்க...” என்று பவுடரை முகத்தில் அப்பும் நாகராஜ், பாம்பு நாகராஜ் ஆன கதை பேட்டையின் சுவாரஸ்யங்களில் ஒன்று.

அன்றும் வழக்கம்போலவே கடலோரத் தலுப்புக்கல்லில் கில்நெட்டுக்கு வாட்ச்மேனாக வேலைக்குச் சென்றிருந்தார் பாம்பு. போத்தலை, அந்தக் குளிருக்கு இதமாக உள்ளே போட்டுக்கொண்டார். கடலுக்குள் ஒரு பாயை விரித்தது போலவே அந்தப் பாலமும் இருந்தது. நட்சத்திரப் பாறாங்கற்கள் பாலத்தை இன்னமும் அழகூட்டின. போட்டுகளும் கில்நெட்டுகளும் போவதற்காக முடிந்த பாலத்தின் கடைசியைத்தான் நாங்கள் `தலுப்புக்கல்’ என்று சொல்வோம். 

நான்காம் சுவர் - 20

நிசியில் அலையில் மிதந்து கொண்டிருந்த நிலாவில் பாம்பு, அலமேலுவைத் தேடிக்கொண்டி ருப்பார். நட்சத்திரக் கற்களுக்கிடையே கனத்த பெருச்சாளி ஒன்று சைடிஷ்ஷாக வைத்திருக்கும் உப்புக்கடலையைக் குறிபார்த்து மூசுமூசுவெனக் காத்திருக்கும். நிலாவின் வெள்ளி வெளிச்சம் அந்தப் பெருச்சாளியின் கண்ணில் பட்டுத் தெறிக்கும். உள்ளொடுங்கும் பெருச்சாளியைப் பார்த்துச் சிரித்தவர் இரண்டு உப்புக்கடலை மணிகளைக் கொத்தித் தின்பதற்கு வாகாக வைத்தார்.

வெளியே வந்தவன் நறுக்கெனக் கொத்திக்கொண்டு மறைந்தான். பாம்புவுக்கும் எலிக்குமான விளையாட்டை, சுருண்டு படுத்துக்கொண்டிருந்த பூனை பார்த்துவிட்டு, பிறகு மறுபடியும் உறங்கிக்கொள்ளும். கில்நெட்டில் எலிகள் கடித்துவிடாதபடிக்கு வலைகளைப் பத்திரப்படுத்திவிட்டு ஐஸ்பாக்ஸில் கட்டையைச் சாய்த்தார். அப்போது தொண்டை கமறத் தொடங்கியது பாம்புவுக்கு. இருமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, உடலின் ஓர் அங்கமாகவே தொற்றிக்கொண்டது. தண்ணீர் குடித்தும், தைலம் தேய்த்தும் பார்த்தார், ஒரு பலனுமில்லை. பாடுகளை முடித்துக்கொண்டு வந்த போட் டிரைவரிடம், கொஞ்சம் மத்திமீன்களை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

``நாள் பூரா குடிச்சிக்கினே இருந்தா... நெஞ்சு காஞ்சிதான் போவும். இந்தப் பாழாப்போன குடிய உட்டாதான் என்ன...” மத்திமீனின் செதில்களை ஆய்ந்துகொண்டே கொதித்தாள் அலமேலு.

``ஏதாவது கஷாயம் காச்சித் தருவியா... இப்பப் பாத்துக் கழுவி ஊத்துற” இருமிக்கொண்டே பேசினார்.

ஜகன் வந்தான் ``யப்பா, மொளவுத்தூளு போட்டு... ரெண்டு பெக்கு உட்டாக்கா சும்மா சளசளன்னு எறங்கிறுவான். இருமி இருமி சீன போட்டுக்கினு இருக்க” என்று கலாய்த்தான். தொடர்ந்து ``பாண்டிச்சேரிதான் போறேன்... ஒரு பாட்லு புட்சியாந்துர்றேன்... லோக்கல் சரக்கு அடிக்காம வூட்லயே இரு” என்று கிளம்பினான்.

இருமிக்கொண்டே ``டேய் ஜகனே... வூட்ல கக்கூஸு கட்ட பேங்க் லோன் கேட்டிருக்கேன். போறப்போ அப்படியே மேனேஜர பார்த்துட்டுப் போ” என்றார் பாம்பு. மீனின் செவுலை உப்புக்கல்லில் வைத்துத் தேய்த்துக்கொண்டிருந்த அலமேலுவின் முகம், வீட்டுக்கு கக்கூஸ் வரப்போகிறது என்பதால் கொஞ்சம் பூரிப்பானது.

அப்போதுதான் அந்த ஆச்சர்யம், தொலைக்காட்சி வழியாக பாம்புவின் பார்வையில் பட்டது. ஒரு விளம்பரத்தில் கடைத்தெருவின் புழுதியில் குடியானவர் ஒருவர் இருமிக்கொண்டிருக்கிறார். இந்நிலை கண்டு தாளமாட்டாமல் தரை இறங்கிய தேவதை, அவருக்குப் பச்சை நிறத்தில் ஒரு மருந்தைத் தருகிறாள். `மூலிகைகளால் ஆன இருமல் மருந்து. எங்கும்... எப்போதும் குணமளிக்கும்... நிவாரன்... நிவாரன்’ என்று குரல் ஒலிக்க, அந்தப் பச்சை நிற மருந்தைக் குடித்த குடியானவரின் இருமல் கண நேரத்தில் மாயமானதைக் கண்ட பாம்பு, தனக்கான மருந்தைக் கண்டுகொண்ட மகிழ்வில் உற்சாகமடைந்தார். போதாக்குறைக்கு, கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்தவர் ``வெரி... வெரி எஃபெக்டிவ்…’’ என்ற நற்சான்றிதழையும் தந்தார்.

தெருவில் இறங்கிய பாம்பு, நிவாரன் 90-ஐ வாங்கிக் குடித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதாக நடந்தார். மீன் விற்றுவிட்டு வந்த காலி அன்னக்கூடையை இடுப்பிலிருந்து இறக்கிய நாகம்மா, கனைத்துக்கொண்டு வந்த பாம்புவைப் பார்த்து ``இன்னா மாமூ... வயசானாலும் சும்மா அப்புடி இருக்கிற... ஊன்னு சொல்லு உன்ன இஸ்துக்கினு போயிர்றேன். இன்னா சொல்ற?” முந்தியிலிருந்து சுருக்குப்பையை எடுத்து பொடி டப்பாவைத் திறந்து மூக்கில் இழுத்துக்கொண்டாள்.

நான்காம் சுவர் - 20

பாம்புவுக்கு சுருசுருவென்றிருந்தது. ``பொடி போட்றியா மாமூ?” என்று பொடி டப்பாவை பாம்பு முன்னால் நீட்டினாள்.

``ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாளு... உன் சுருக்குப்பைய கிழிச்சுர்றேன் இரு” என்று கடைக்கு நகர்ந்தார்.

``தினக்கும் சொல்லிக்கினேதான் இருக்கிற” என்றவள் அன்னக்கூடையை எடுத்து இடுப்பில் வைத்தபடி சென்றாள்.

பெட்டிக்கடைக்கு வந்த பாம்பு, மருந்தின் பெயரை மறந்துவிட்டார். ஆனால், அதன் நிறம் பச்சை என்பது மட்டும் நினைவில் இருந்தது. ``ஏண்டா பையா, அந்தப் பச்சையா தொங்குதுல்ல... அதுல ஒண்ணு குட்றா” என்றார்.

கடைப்பையன் பாம்பு காட்டிய ஷாம்பு பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். பாம்புவும் அது நிவாரன் 90-தான் என நினைத்து ஷாம்புவின் காதைக் கடித்துத் துப்பி, குடிக்க ஆரம்பித்தார். கடைப்பையன் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க ``இன்னாடா பையா கொழ கொழன்னு இருக்குது...” என்றார். கடைப்பையனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

கடையிலிருந்து நாலடி எடுத்து வைப்பதற்குள் வாயெல்லாம் குமட்டி வாந்தியெடுக்க ஆரம்பித்தார். நுரை நுரையாகப் பொங்கி வரவே கூட்டத்தில் இருந்த ஒருவன் ``டேய் மச்சி... நாகராஜை பாம்பு கட்சிச்சிடா!” என்று கொளுத்திப்போட்டான். நுரை பொங்க, தன்னைப் பாம்பு கடிக்கவில்லை எனச் சொல்ல முடியாமல் சொன்னார். திரும்பவும் `உவ்வே...’ என நுரையைக் கக்கினார். பேட்டை ஜனம் இனிமேலும் பொறுக்க முடியாமல் பாம்புவை ஆஸ்பத்திரிக்கு குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றார்கள். ஆஸ்பத்திரியில் பாம்புவை ஒரு வழி பண்ணி, துவண்டுபோன சமயத்தில்தான் அந்தக் கடைப்பையன் பாம்பு ஷாம்பு குடித்த கதையைச் சொன்னான். பிறகுதான் பாம்புவை விட்டார்கள். அன்றிலிருந்துதான் `பாம்பு’ என்ற அடைமொழியை நாமமாகப் பெற்றார்.

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்றத்தினுள்ளே சரக்கை லோட்டாவில் ஊற்றி வைத்துக்கொண்டார் பாம்பு. மார்கழிப் பனியின் நிமித்தம் கூரைகளின் மேல் பனித்துளி வியர்வைகள் சில்லிட்டு இருந்தன. மன்றத்தின் ரேடியோவை இசைத்துவிட்டார் பாம்பு.

`கனா காணும் காலங்கள்... கரைந்தோடும் நேரங்கள்... கலையாத கோலம் போடுமோ...’ மதுமதி பாடிக்கொண்டிருந்தார். இன்னும் பத்து நாளில் மாவட்ட அளவிலான கேரம் போர்டு போட்டி என்பதால், நானும் மாறனும் அல்லும்பகலுமாகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். கேரம் விளையாடுவதில் பொண்டு பொடிசுகள் வரை பேட்டையில் கில்லிதான். மாறன் ஸ்டேட் சாம்பியன். போதாததற்கு, கில்பட்டின் சிஷ்யன். ஆகவே, அவனின் அறிவுரைப்படி விளையாடிப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தேன்.

ஏழுமலை உள்ளே நுழைந்தார். ``இன்னா பாம்பே... சீமச்சாராயம் போலக்குது” என்றபடி சிட்டிங்கில் ஒரு சைஸாக உட்கார்ந்தார்.

``அத்த ஏன் கேக்குற ஏழுமல... `8 பிஎம்’னு சரக்கு பேராம்... ராவுக்கு 8 மணிக்குச் சாப்புடற சரக்குன்னு என்னாண்டயே பீலா உட்டாண்டா... நானும் அத நம்பி காத்தாலேருந்து சரக்க வெச்சிக்கினு தேவுடு காப்பானா... நம்பள நங்குகாட்றதுனா எம்மவனுக்கு ரொம்பப் புடிக்கும்போலக்குது... அப்புறம் அவனே வந்து `எப்பவேணா சாப்புட்ற சரக்குதான்பா’ன்னு சொல்ட்டு ஓடிட்டான். எப்பிடி இருக்குதுங்க பாரு புள்ளீங்க” என்று, ஒரு லோட்டாவில் ஏழுமலைக்கு ஊற்றிக் கொடுத்தார்.

``மாமே அந்தச் சரக்கு பேரு `8 பிஎம்’... பார்த்தியா மணிகூட எட்டுதான் ஆவுது. நீ தாறுமாறு மாமே” டம்மிங்கில் பாலோவைப் போட்ட மாறன், பாம்புவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் ``இவ்ளோ பேசுறீயே... உங்கப்பனுக்கு எப்பயாவது சரக்கு வாங்கிக் குத்துக்கிறியா?” என்று பாம்பு கேட்க ``ஒரு ஊறுகாகூட வாங்கித் தர மாட்டான். இவன் சரக்கு வாங்கித் தரப்போறானா!” லோட்டாவை முடித்துவைத்த ஏழுமலை சொன்னதும், மாறன் கவனமாக விளையாடுவதாக பாவனைகொண்டான்.

நல்ல உச்சத்தில் இருவரும் ஆனார்கள். ``டேய் பாம்பே... பிரியாணி வாங்கியாரச் சொல்ட்டாடா?” மாறனும் நானும் ஆடுவதில் மும்முரமாக இருந்தோம்.

``வூட்ல செம்படக்கா மீன்குழம்பு வெச்சிருக்காடா அலமேலு. சும்மா தேனு மாதிரி கீசாவா இருக்குண்டா. நான் வூட்டுக்குப் போறேன்.” தம்பாக்கு டப்பாவை எடுத்து, புகையிலையை உள்ளங்கையில் கொட்டி சுண்ணாம்பைப் பதமாகச் சேர்த்துக் கட்டைவிரலில் கசக்கிக்கொண்டிருந்தார் பாம்பு. ``டேய்... அலமேலு காத்தால 4 மணிக்கே மீனு வெட்டிக் கொடுக்க கல்லோரம் போயிடும். இன்னிக்கு ஒரு நாளு மன்றம்தான் நமக்கு வூடு” - எங்கள் பக்கம் திரும்பிய ஏழுமலை ``மாறா, ஹை ஸ்கூல் பாயி கடயாண்ட நா சொன்னேன்னு சொல்லி ரெண்டு ஹாஃப் பிரியாணி வாங்கிக்கோ... அப்படியே நீங்க ரெண்டு பேரும் அங்கியே சாப்புட்டு வந்திருங்கோ... சரியா!” என்றதும் எனக்கு நாவில் ஊறியதை மறைக்க முடியவில்லை. காசை வாங்கிக்கொண்டு மன்றத்திலிருந்து வெளியேறினோம்.

எப்போதும் சூட்டோடு பிரியாணியை வைத்திருக்கும் பதத்தை பஷீர் பாயிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இலவம்பஞ்சைப்போல கறியும் அதன் சாறும் சோற்றில் சேர்ந்து ரசவாதச் சுவையை நாக்குக்குத் தந்ததை மனம் உணர்ந்தது. பெருசுகளுக்கான பிரியாணிப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு மன்றத்தினுள்ளே நுழைந்தோம். இரண்டும் இரண்டு திசையில் கவட்டையைக் காட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். நானும் மாறனும் என்னடா இப்படி ஆகிவிட்டதே எனப் பார்த்துக்கொள்ளாமல், இப்படி ஆனதே சந்தோஷம் என்கிறபடியால் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தோம். இப்போதும் பஷீர் பாயின் பிரியாணி சூடாகவே இருந்தது. 

நான்காம் சுவர் - 20

விடிந்தது. கடலின் மடியிலிருந்து சிலர் வயிற்றிலும் வாயிலும் அடித்தபடி ஓடிவந்தார்கள். எனக்கும் மாறனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருந்த தேசப்பனை நிறுத்திக் கேட்டேன் ``மச்சான், கடல் ஊருக்குள்ள வந்துச்சிடா... இன்னும் கொஞ்ச நேரத்துல ஊரே அழியப்போகுதுடா...” என்று அழுதுகொண்டே அவன் வீட்டை நோக்கி ஓடினான்.

பேட்டை முழுவதும் சிறு தூறல் பெருகி, புயலெனச் செய்தி பற்றிக்கொண்டது. மன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த பாம்புவை எழுப்பினேன். ``இன்னாடா மொகம்லாம் ஒருமாரி இருக்குது!”

``கடல் ஊருக்குள்ள வரப்போவுதாம்... ராட்சச அலை, ஹெச்-3 போலீஸ் ஸ்டேஷனையே மூடி நிக்குதாம்” என்றேன். பாம்புவுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவே சில கணம் தேவைப்பட்டது. மன்றத்திலிருந்து வெளியே வந்த பாம்பு, நேரே வீட்டை நோக்கி நடந்தார். வீடு பூட்டியிருந்தது. எப்போதும்போல உத்தரத்தின் ஓட்டையில் சாவி வைக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் மூட்டை முடிச்சுகள் கட்ட ஆரம்பித்தார்கள்.

``பாம்பே, மொத அலய விட ரெண்டாவது அல இன்னும் ஒரப்பா இருக்குமாம். ஹைஸ்கூலாண்ட வந்து எல்லாரையும் இருக்கச் சொல்றானுங்க. சீக்கிரம் வந்து சேரு” - ஆறுமுகம் ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

``வந்த அல இன்னும் வடியாம நிக்குதே... என் புள்ள `கக்கூஸ் போயிட்டு வர்றேன்’னு போனானே... இன்னா ஆனானோ... யம்மா தேசம்மா...” என்று சரசு கடல் திசையைப் பார்த்து மார்பில் அடித்து அழும்போதுதான் பாம்புவுக்கு ஓர்மை வந்தது. வழக்கமாக ஜகனும் சரசுவின் மகனும்தான் காலைக்கடனை முடிப்பதற்காக கடலுக்குச் செல்வது வழக்கம்.

``ஐயோ மவனே ஜகனே...” என்று கடலை நோக்கி பாம்பு ஓடினார்.

`யப்பா, முன்னமாரி வெளிய கக்கூஸு போறதுக்கு ஒருமாரி இருக்கு. நான்தான் வேலைக்குப் போறன்ல... லோன் வாங்கி கட்டில்லாம்’ என்று ஜகன் சொன்னதெல்லாம் பாம்புவின் மண்டைக்குள் வந்து போனது.

நானும் மாறனும் கடலின் அருகில் வந்து பார்த்தோம். ராட்சச அலை ஒன்று கரையின் வாசல் வரை மூடியிருந்தது. பெரிய போருக்குப் பின்னான அமைதியைப்போல இருந்தது. சிலர் தனக்கானவர்களைப் பாதுகாக்க ஆயத்தமானார்கள். போலீஸ், தடுத்து நிறுத்தியது. ரோட்டில் கற்பூரம் ஏற்றி ``யம்மா... தேசம்மா... போயிடும்மா” என்று கதறிய பெண்களைப் பார்த்தபோது எனக்கும் மாறனுக்கும் எங்களை அறியாமல் கண்ணீர் வந்துகொண்டிருந்தது.

இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் எதுவுமற்று நின்றிருந்தோம். சிறிது நேரத்தில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது. கடற்கரையின் மணலெங்கும் கழிவுகளாக இருந்தன. `இவ்வளவு குப்பைகள் கடலில் இருந்தனவா?!’ என்பதாகவே எங்களுக்குப்பட்டது. கடல் பின்னுக்குப் போகப் போக, அவரவர் உறவுகளைத் தேட ஆரம்பித்தார்கள். பாம்புவும் ``யப்பா ஜகனே... அலமேலே...” என்று தேடிக்கொண்டிருந்தார்.

இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார். பேட்டையில் சுனாமியால் இறந்தவர்களில் பாதிப்பேர் வீடுகளில் கழிவறை இல்லாமல் கடலுக்குள் கடனை முடிக்கச் சென்றவர்கள்தாம். ``ஒருவேளை கக்கூஸ் கட்டியிருந்தால் ஜகனாவது மிஞ்சியிருப்பான்’’ என்று சொன்னார் பாம்பு. ஓர் இரவில் பாம்பு அநாதையாகிவிட்டார். வாழ்வு என்பது எப்போதும் அழித்துவிடுகிற ஒரு கோடு மாதிரிதான். சிலரின் கோடுகள் போட்ட மாத்திரத்திலேயே அழிந்துவிடுவதுதான் என்ன மாதிரியான தர்க்கம் எனப் புரியவில்லை.

அலமேலுவும் ஜகனும் போனதிலிருந்து பேட்டையின் எல்லோருக்குமான ஒருவராக மாறிப்போனார். அவரைப் பொறுத்தவரையில் இருவரும் கடலின் மடியில் தவழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தன்னைச் சுற்றி எப்போதும் மலர்ச்சியாக வைத்துக்கொள்வதை பாம்புவிடம்தான் நான் பார்த்தேன்.

சுனாமிக்குப் பிறகு கடலுக்குப் போவதை நிறுத்திக்கொண்டோம். ஆனால், முதன்முதலில் பாம்புதான் கடலுக்குள் போனார். போட் வாட்ச்மேனாகக் கடலில் தங்கினார். சுனாமியால் அவருக்குக் கிடைத்த சில பயன்களை வைத்து மன்றத்துக்கு கேரம் போர்டு வாங்கிக் கொடுத்துவிட்டார். சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்றத்திலேயே தங்கிவிட்டார். சகலரையும் தனது அன்பெனும் உப்பைக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்.

மன்றத்தின் கரும்பலகையில் திருக்குறள் புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொண்டிருந்தார் பாம்பு. நான், கேரம் போர்டு பயிற்சியை ஆரம்பித்தேன். ``டேய் குஸ்மி... நாளிக்கு சுனாமி தினம்டா... மார்க்கெட்டுக்குப் போயி பூ வாங்கியாந்துடு. கடலுக்குப் போடணும்” என்று எழுதியவர் திரும்பினார்.

``மாமே, உன் புள்ளயையும் பொண்டாட்டி யையும் கொண்டுபோன கடலுக்குப் பூப் போடணும்னு சொல்ற... வேணாம் மாமே” ஸ்ட்ரைக்கரை அடித்தேன்.

``அடச்சி வாய மூடு... கடல்ல பொழப்பு நடத்துறதே சாவோட மல்லுகட்றதுதான். கடல் இன்னாடா தப்பு பண்ணிச்சு? நாம போட்ட குப்பய நம்மளாண்ட வந்து குடுத்துட்டுப் போச்சுடா... பிளாஸ்டிக்கா எத்துனு போயி கொட்டி மீன் சாவலாம்... அது பரவால்லயா! சோறு போட்ற சாமிடா நம்ம கடலு... நம்மள காவு வாங்கலடா... எச்சரிக்க பண்ணிட்டுப் போயிருக்கு. போயி... பூ வாங்கிக்கினு வா... தேசம்மாவுக்குத் தூவணும்” என்று சொன்ன பாம்பு என்கிற நாகராஜ், அறத்துப்பாலை எழுதிக்கொண்டிருந்தார்.

அவர் பேசியது அப்போது விளங்கவில்லை. இப்போது குடும்பம் சகிதமாய் தலுப்புக்கல்லில் போய் நின்றபோது விளங்கியது. நான் பார்த்த கடல் இது அல்ல. அந்தக் கடல் நீல நிறமாக இருந்தது. அது கடலாகவும் இருந்தது.

- மனிதர்கள் வருவார்கள்...