
கேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா?
? ஒருவரின் பிறந்த தினத்தை நட்சத்திரத்தின் அடிப்படையிலும், அவர் மறைந்த தினத்தை திதியின் அடிப்படை யிலும் கடைப்பிடிப்பது, ஏன்?
- எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை - 32
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில பழக்கவழக்கங்கள் மாறுபடும். இவற்றை நம் சாஸ்திரங்கள், ‘தேசா சாரம்’ என்று கூறும். தாங்கள் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட இடங்களில், ஏதேனும் ஒன்றைத் தாங்கள் கடைப் பிடிக்கலாம். `இப்படித்தான் செய்ய வேண்டும்' என்று வரையறை செய்யப்பட்டிருக்கும் இடங்களில், அதன்படியேதான் நாம் கட்டாயம் செயல்படவேண்டும்.
பிறந்த தினத்தை நட்சத்திரத்தின் அடிப்படையிலும் மறைந்த தினத்தை திதியின் அடிப்படையிலும் அனுசரிப்பது, பாரதத்தின் தெற்குப் பகுதியில்... குறிப்பாகத் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில், பிறந்த தினத்தையும் திதியின் அடிப்படையில் கொண்டாடும் வழக்கம் உள்ளது.
இரண்டுமே சரிதான். எப்படி ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரது பெயரையோ அல்லது முகவரியையோ பதிவு செய்தால், அவரைப் பற்றிய முழு விவரங்களும் கணினியின் மூலம் கிடைக்கிறதோ... அப்படியே அவரவர் பிறந்ததினத்தை, திதியைக்கொண்டோ அல்லது நட்சத்திரத்தைக்கொண்டோ கொண்டாடினாலும், அது அவருக்கு உரிய பலனை அளிக்கவே செய்யும்.
ஆனால், இறந்த தினத்தை மட்டும் திதியை அடிப்படையாகக் கொண்டே சிராத்தம் செய்யவேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளின் ஆட்சியின் கீழ் இயங்கி வருகின்றன. அவை என்ன செய்தாலும், எங்கு சென்றாலும், என்ன நினைத்தாலும் அனைத்தும் கடவுளால் பதிவு செய்யப்படுகின்றன.
இதைக் கவனத்தில்கொண்டு, நாம் நமக்குரிய கடமைகளை சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் இணைக் கப்படுகிறோம் என்பதை உணர்ந்து செய்தால், மிகுந்த பயன் நமக்குக் கிடைக்கும்.

? இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் என்று தெரிந்த பிறகு, அவற்றைத் தடுக்க பாராயண ஸ்லோகங்கள், பரிகார வழிபாடுகள் ஏதேனும் உள்ளனவா?
- சங்கரராமன், திருச்சி - 2
ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் அனைத்துமே இயற்கையின் நன்மைக்காகத்தான். எங்கு வேத பாராயணம் நடைபெற்றாலும், உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டுதான் பாராயணம் செய்வார்கள்.
அதேபோல் ஓதுவா மூர்த்திகள் இனிய தமிழ் மொழியில் பதிகங்கள் பாடி இறைவனை வேண்டுவதும் உலக நன்மையைத்தான். இசை, நாட்டியம் என்று தங்களின் கலைகளை இறை வனுக்கு அர்ப்பணிப்பவர்கள்கூட இயற்கை யின் நன்மையை முன்னிட்டே அதைச் செய்கிறார்கள். எத்தனையோ சிரமங்கள் ஏற்பட்டாலும் இறைத் தொண்டை விடாமல் செய்து வருபவர்களும் `இயற்கை நன்றாக இருக்கவேண்டும்' என்றே வேண்டிக்கொள்கிறார்கள்.
இயற்கை நன்றாக இருந்தால்தான் சகல ஜீவராசிகளும் அச்சமின்றி வாழ முடியும். இயற்கை சமநிலையில் இருக்கவேண்டும் என்பதற் காகவே யாகங்கள் செய்யப்படுகின்றன. இந்த உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் ஆலயங்களைச் சிறப்பான முறையில் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.
ஆலயங்களில் நடைபெறும் பூஜை, வழிபாடுகளே, பஞ்சபூதங்கள் சரியான நிலையில் இயங்கவும் அதன் மூலம் உலகம் முழுவதும் நன்மை பெறவும் வழி வகுக்கின்றன.
இயற்கைச் சீற்றம் இல்லாமல், நாம் நிம்மதியாக இருக்கவேண்டும் எனில், நாம் முதலில் தர்ம நெறிகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும். நம் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மையுடன், முக்கியமாக ஆலயத் தூய்மையையும் நாம் பாதுகாத்துப் பராமரிக்கவேண்டும். அப்போது இயற்கை அன்னை நம் மீது கருணை பொழிவாள்.
‘ஓம் ப்ரக்ருத்யை நம:’ என்று மகாலட்சுமியை எட்டு முறை துதித்து, தூய்மையான வாசனை நிறைந்த மலரால் அர்ச்சித்து வழிபடுவதுடன், தங்களுக்கு தெரிந்த வேறு தெய்வத் துதிகளையும் நம்பிக்கையுடன் சொல்லி வர, இயற்கையில் நல்ல அதிர்வுகள் உண்டாகும். அதனால், இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படாமல், உலகம் வளமுடனும் நலமுடனும் இயங்கும்.
? விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பெண்கள் சொல்லக்கூடாது என்கிறார்களே... அதற்கான காரணம் என்ன?
- மாலதி சுப்பிரமணியன், சென்னை - 33
‘விஷ்ணு’ எனில் எங்கும் நிறைந்து இருப்பவர். பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணரின் ஆயிரம் நாமாக்களைப் போற்றி, ஸ்ரீபீஷ்மரால் அருளப்பட்டது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை ஆண்கள், பெண் கள் அனைவரும் சொல்லலாம். ‘இமம் ஸ்தவம் அதீயான:’ இந்தத் தோத்திரத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஆத்ம சுகம், பொறுமை, செல்வம், மன உறுதி, நினைவாற்றல், புகழ் போன்றவற்றைப் பெறுவர் என்று பலச்ருதியில் சிறப்பாகக் கூறப் பட்டிருக்கிறது. மேலும், ‘ய இதம் ச்ருணுயாத் நித்யம்’ என்றபடி, எவர் ஒருவர் இந்தத் தோத்திரத்தை தினமும் கேட்கிறார்களோ, அவர்கள் இந்த உலக வாழ்க்கையில் தேவைப்படும் அனைத்துத் தேவைகளையும் அடைவதுடன், மறுமையிலும் சிறிதும் துன்பம் அனுபவிக்கமாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு, கோபம் வராது; பகைவர்கள் இருக்கமாட்டார்கள்; பேராசை, கெட்ட எண்ணம் தோன்றாது என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஆயுர்வேத கிரந்தங்களிலும் பல நோய்களுக்குத் தீர்வாக... மணி, மந்த்ர, ஔஷத என்ற நியதிப்படி, சில மருந்துகளுடன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யவேண்டும் என்று கூறுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில்கூட பல தோஷங்களுக்குப் பரிகாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த உலக வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல், மறுமை இன்பத்துக்கும் இந்தத் தோத்திர மலர்களை ஆண் - பெண் இருபாலரும் பாராயணம் செய்து வழிபட்டு வரம் பெறலாம்.
? சிராத்தத்தின்போது, பிண்டத்தைச் சாப்பிட காகங்கள் வராவிட்டால் என்ன செய்து?
- ஸ்ரீநிவாச மூர்த்தி, சென்னை - 12
காகங்களை நம் முன்னோர் வடிவில் பார்ப்பது நம் நம்பிக்கை. எனவே சிராத்தத்தின்போது நாம் அர்ப்பணிக்கும் பிண்டத்தை காகங்கள் சாப்பிட்டால், நம் முன்னோர்கள் சாப்பிட்டதாக எண்ணி நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். ஆக, காகங்கள் பிண்டத்தை எடுக்க வராதபோது, நாம் சிராத்தம் சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தமில்லை.
இங்கே நாம் அறியவேண்டியது ஒன்றுதான். நம் முன்னோர்களிடம் உண்மையான அன்புடனும் பக்தியுடனும் சிரத்தையுடனும் சிராத்தத்தைச் செய்யவேண்டும். வாத்தியார் கூறும் மந்திரங்களைச் சொல்லி, எள்ளையும், நீரையும், பிண்டத்தையும் நம் முன்னோர்களுக்கு அளிக்கும்போது, நாம் சொல்லும் மந்திரங்களின் ஆற்றலே, பிண்டத்தை நம் முன்னோர்களிடம் சேர்த்துவிடுகின்றன. எனவே, காகங்கள் வரவில்லையே என்று கவலைப் படத் தேவையில்லை.
? ஆண் வாரிசு இல்லாதவருக்கு அவருடைய பெண்கள் சிராத்தம் செய்யலாமா?
- ஆர்.ரகோத்தமன், சென்னை - 31
பெண்கள் சார்பாக வேறு ஒருவரை நியமித்து செய்வதே சிறந்தது. பெண்களே நேரடியாகச் செய்வதற்கு சாஸ்திரங்கள் அனுமதிப்பது இல்லை. நாம் ஒரு நாட்டுக்குச் சென்றால், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே நடக்கவேண்டும். இல்லையென்றால், அங்கே வசிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும்.
‘ஸநாதனம்’ என்றால் எக்காலத்திலும் இருக் கக்கூடியது என்று பொருள். மேலும் அது தனிமனிதரால் வகுக்கப்பட்டதல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்டவர்களுக்காக என்று வகுக்கப்பட்ட தர்மம் அல்ல ஸநாதனம். எத்தனையோ இடர்ப்பாடுகள் ஏற்பட்டபோதும், அவற்றை எதிர்கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டு வரும் ஸநாதன தர்மம், அனைவருக்கும் நன்மை பயக்கும் அறிவுரைகளையே கட்டளை களாக அளித்திருக்கிறது.
‘அனைவரும் ஒன்றே’ என்று தெளிவாக விளக்கும் நம் ஸநாதன தர்மம், பெண்கள் அம்பிகையின் அம்சமாக விளங்குபவர்கள் என்றும் கூறியிருக்கிறது. எனவே, பெண்கள் சில கர்மாக்களைச் செய்யக்கூடாது என்று வரையறை செய்திருக்கிறது. அதில் ஒன்றுதான் பெண்கள் சிராத்தம் செய்யக்கூடாது என்பதும்.
நம் நன்மைக்காக, குறிப்பாக யாருக்கும் எப்போதும் தீமை விளைவிக்கக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன், உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அதனதன் நிலையில் எவ்வித பாதிப்பும் அடையாமல் வாழவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை வலியுறுத்துவதே ஸநாதன தர்மம். எனவே, நம் ஸநாதன தர்மத்தில் கூறியுள்ள உயர்ந்த தத்துவங்களை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வாழ்ந்து உயர்ந்த நிலையை அடைவோமாக.
முற்போக்காகச் சிந்திக்கிறோம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் சிலரின் தவறான கருத்துகளைப் பின்பற்றினால், தற்காலிகமான புகழ் வேண்டுமானால் கிடைக்கலாமே தவிர, புண்ணியம் கிட்டாது. இந்த உண்மையை உணர்ந்து, சாஸ்திரங்கள் கூறும் வழிமுறைகளை முடிந்த அளவு கடைப்பிடிப்பதே நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மை தருவதாக இருக்கும்.
- பதில்கள் தொடரும்...
`காளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்
வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.
கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002