தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’
பிரீமியம் ஸ்டோரி
News
உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

டல், மனம் இரண்டுமே ஒன்றிணைந்து ஆண்டவனுக்காகச் செயலாற் றும் தெய்வத் திருப்பணியே உழவாரத் திருப்பணி. நினைத்துப் பாருங்கள், தஞ்சைப் பெரியகோயிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் நமக்குக் கிடைத்திராவிட்டால், நம் முன்னோர்களின் பெருமையை அறிந்திருக்க முடியுமா? அண்ணாமலையார் கோயிலை விட்டுவிட்டு திருவண்ணாமலையில் என்ன இருக்க முடியும்? 

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

கோயில்களே நம்முடைய பொக்கிஷங்கள். ஒவ்வோர் ஊரிலும் முன்பு கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்ந்த கோயில்கள் பலவும், தற்போது அழிவின் விளிம்பில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அப்படியான கோயில்களைப் பராமரித்துப் போற்றவும், புனரமைக்கவும், பாரம்பர்யம் மிக்க அந்தக் கலைச் செல்வங்களை நம் சந்ததிகளுக்கு நல்ல முறையில் விட்டுச் செல்லவும்தான் இந்த உழவாரத் திருப்பணியை நாம் தொடங்கினோம். இறையருளாலும் வாசகர்களின் பங்களிப்போடும் இந்தத் தெய்விகப்பணி மேலும்மேலும் சிறப்படைந்துகொண்டே வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எங்களுக்கு.

அவ்வகையில் கடந்த 30.12.18 ஞாயிறன்று நாம் உழவாரப் பணி செய்த திருக்கோயில்... சக்தி விகடனில் ஏற்கெனவே ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் இடம்பெற்ற - கீழ்ப்பசார் என்ற ஊரிலுள்ள மரகதாம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம். ‘எந்திரத்தனமான இந்த வாழ்க்கையில், பலரும் உடல் வியர்க்க உழைப்பதே இல்லை. மனம் குழைய ஆண்டவனைப் பிரார்த்திப்பதே இல்லை. இந்த இரண்டுமே, மாதம் ஒருநாள் முழுக்க இந்த உழவாரப்பணி செய்யும்போது நடந்துவிடுகின்றன. மேலும், உழவாரப்பணியின் மூலம் உடல், மனம் யாவும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இந்த ஒருநாளுக்காகவே மாதம் முழுக்க ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்றவாறு ஆண்டவனுக்கு நன்றி கூறி, தமது உழவாரப் பணியைத் தொடங்கினார் சிவனடியார் ராமச்சந்திரன். ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்றாள் தமிழாண்ட மூதாட்டி. அதற்கேற்ப, அருமையான சிவனடியார் கூட்டமொன்று திரண்டு பணியாற்றத் தொடங்கியது.

பிற்காலச் சோழர்களும், விஜய நகர மன்னர்களும் கொண்டாடிய திருக்கோயில் இந்த ஆலயம். காலச் சுழற்சியில் ஊரும், ஆலயமும் கண்டுகொள்ளப்படாமல் போயின. பின்னர் இறைச் சித்தப்படி திருப்பணி தொடங்கப்பட்டு, தற்போது குடமுழுக்கு செய்வதற்கான இறுதிக்கட்ட வேலைகளும் நடைபெற்று வருகின்றன.  சுக்கிர பலம் இல்லாதவர்களுக்கான பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இந்தக் கோயில்.

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

வெறெந்த தலத்திலும் சுக்கிர பகவானுக்கென்று தனிச் சந்நிதி அமைந்தது இல்லை. இந்த ஆலயத்தில் சுக்கிர பகவான் வழிபட்டு வரம் பெற்றார் என்பதால், இங்கு அவருக்கான தனிச் சந்நிதி அமையவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் சொல்கிறார்கள். ஆக, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், சுக்ரபலம் கூடும். செல்வவளம் பெருகி, கடன் பிரச்னைகள் நீங்கும் என்கிறார்கள். குறிப்பாகக் கலைத்துறையைச் சேர்ந்த பலரும் இங்கு வந்து வழிபட்டு ஏற்றம் பெறுகிறார்களாம். அவர்களுக்குப் புதுப்புது வாய்ப்புகள் கிடைப்பதாக மகிழ்ச்சியோடு  பகிர்ந்துகொள்கிறார்களாம்!

 சுவாமி சந்நிதியுடன், மரகதாம்பிகை, வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், கற்பக விநாயகர், சுக்கிர பகவான், சோமாஸ்கந்தர், லட்சுமி குபேரர் சந்நிதிகள் என்று, பொதுமக்களின் பங்களிப்போடு புதுப் பொலிவு பெற்று வருகிறது ஆலயம். இன்னும் திருக்குளம், ராஜகோபுரம் உள்ளிட்ட பல திருப்பணிகள் நடைபெறவேண்டும். அனைத்தும் நிறைவேறி சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள் ஊர்மக்கள். அவர்களோடு நாமும் கைகோப்போம். திருப்பணிக்கு நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து மகிழ்வோம்.

இந்த நிலையில்தான், ஆலயத்துக்கு நந்தவனம் அமைக்கவும், ஊரெங்கும் மரங்கள் நடவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலூரிலிருந்து வில்வம், மகிழம், இலுப்பை, புங்கம், அரளி, நந்தியாவட்டை என விதவிதமான மரங்களும் செடிகளும் கொண்டு வரப்பட்டிருந்தது. கோயில் வளாகம், கோயிலின் முன்பகுதியில் அவை நடப்பட்டன. மேலும் பல மரங்கள் கோயிலுக்கு வரும் வழியெங்கும் நடப்பட்டன.  ஒவ்வொரு விருட்சத்தை நடும்போதும், அதனதன் பெருமைகளைச் சொல்லி, பதிகங்களைப் பாடியபடி நம் வாசகர்கள் செய்த பணிகள் ஊரையே சிலிர்க்கச் செய்தன. பெண் வாசகிகள் நீர் சுமந்து கொடுத்தும், கோயிலைச் சுத்தம் செய்தும், பூஜை சாமான்களைத் துலக்கியும் கொடுத்து உதவினார்கள். 

இளைஞர்கள் கூட்டம் கோயிலைச் சுற்றிலும் வளர்ந்திருந்த புதர்களை நீக்கி, தரைப்பகுதிகளைச் சுத்தம் செய்து கொடுத்தார்கள். உள்ளூர் மக்களும் கோயில் திருப்பணியில் பெருமளவு கலந்து கொண்டு சேவைபுரிந்தது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தில், ஆகமவிதிப்படி சில திருத்தங்களை அகத்தியர் பசுமைக் குடில் நிறுவனர் சரவணன் ஐயா எடுத்துச்சொல்ல, சிரத்தையோடு அதை ஏற்றுக்கொண்டனர், திருக்கோயில் நிர்வாகிகள். 

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

உழவாரத் திருப்பணிகள் நிறைவுற்றதும்,  வாசகர் களின் ஆன்மிகக் கேள்விகளுக்கு சரவணன் ஐயா பதிலளித்தார். கிராம மக்களிடையே தேனீ வளர்ப்பது குறித்து விளக்கமளித்து, அந்தப் பகுதி பெண்கள் எளிமையான முறையில் பொருளீட்ட வழிகாட்டி யவர், ஆலயத்துக்குள்ளேயே தேனீக்கள் வளர்க்கவும் அதன் மூலம் தூய்மையான தேனால் ஈசனுக்கு அபிஷேகம் செய்விக்கவும் ஏற்பாடு செய்யலாம் எனவும் ஆலோசனை வழங்கினார்.

நிறைவாக சந்திரமௌலீஸ்வரருக்கு ஆறு வகையான அபிஷேகங்களும் சிறப்பான பூஜைகளும் நடைபெற்றன. மனம் குளிர, கண்கள் பனிக்க வாசகர்களும் ஊர் மக்களும் ஈசனை வழிபட்டு ஆனந்தம் கொண்டார்கள். 

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

திருப்பணியில் கலந்துகொண்ட நம் வாசகர்கள் வேறொரு பங்களிப்பை யும் வழங்கினார்கள். சக்தி விகடன் (1.1.19 தேதியிட்ட) இதழில், `ஆலயம் தேடுவோம்’ பகுதியில் வெளியான, ஏகாம்பரநல்லூர் சிவாலய திருப்பணிக்காக நிதி அளித்தார்கள். ஆம்! உழவாரப்பணிக்கு வந்திருந்தவர்கள், தங்களால் இயன்றளவுக்கு சிறு சிறு தொகையாக திரட்டி, 18,000  ரூபாயை அந்த ஆலயப்பணிக்கு வழங்கி நெகிழவைத்தார்கள்.

இங்ஙனம் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக பணிகளும் தரிசனமும் நிறைவடைய, ஆலய நிர்வாகிகளுக்கு மனமார நன்றியைத் தெரிவித்தோம்.அவர்களும், விரைவில் நடைபெறவுள்ள ஆலய குடமுழுக்கு விழாவுக்கு  அவசியம் வரும்படி நமக்கும் வாசகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள்.  ‘மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் தொண்டு செய்து ‘தேவார மூவரில் மூத்தவர்’ என்ற பெருமையைக் கொண்டவர் நாவுக்கரச பெருமான். அவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த உழவாரப்பணி தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற வேண்டும். எந்தவோர் ஆலயமும் சிதிலமடைந்த நிலையில் இருக்கக்கூடாது என்ற நிலை வரவேண்டும். நம் புராதனப் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகமெலாம் அன்பும், கருணையும் பொங்கிப் பெருக வேண்டும். இந்தச் சங்கல்பத்துக்கு அந்தச் சிவமே துணைநிற்கவேண்டும். 

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

‘அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே’ எனத் திருமூலர் உரைத்தவாறு சந்திரமௌலீஸ்வரராக அமர்ந்திருந்த எம்பெருமான் நமது வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் நிம்மதியும் மனதுள் தோன்ற விடைபெற்றோம்.

மு.ஹரி காமராஜ், படங்கள்: ச.மஹாவீர்

`இந்த ஈசன் கொடுத்த குழந்தை வரம்!’

நீ
ண்ட நாள்களாகக் குழந்தைப்பேறு இல்லாமல் வாடும் பலருக்கு மழலை வரத்தை அருளுபவராக இந்த ஈசன் அருள்பாலிக்கிறார். சமீபத்தில்கூட ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழகத் தம்பதிக்கு, கல்யாணம் ஆகி 4 ஆண்டுகளாகக் குழந்தைச் செல்வம் வாய்க்காமல் இருந்ததாம். அவர்கள் இந்த ஆலயத்தைக் கேள்விப்பட்டு அங்கிருந்தபடியே மனதார வேண்டிக் கொண்டார்களாம், ‘எங்களுக்குப் பிள்ளை வரம் கிடைத்தால், சந்திரமெளலீஸ்வரர் ஆலயத்துக்கு ஒரு பசு வாங்கி விடுகிறோம்’ என்று.  அதன்பிறகும் வரம் வாய்க்கவில்லையாம் அவர்களுக்கு.

இந்த நிலையில், இக்கோயிலைப் பற்றி அந்தத் தம்பதிக்கு எடுத்துக் கூறியிருந்த அன்பர், அவர்களின் இந்த வேண்டுதல் விவரத்தை அறிந்ததும்  கடிந்துகொண்டாராம். ‘ஆண்டவனுக்கே நிபந்தனை அளிக்கலாமா... இதைச் செய்தால்தான் இதைச் செய்வேன் என்று கூற நாம் யார். முதலில் வேண்டிக்கொண்டதைச் செயல்படுத்துங்கள்’ என்று அறிவுறுத்தினாராம். அதன்படியே அந்தத் தம்பதி பசுமாடு வாங்குவதற்கான முயற்சியில் இறங்க, மாடு வந்து சேர்வதற்குள் அங்கு அந்தத் தம்பதியருக்கு மழலை வரம் நிச்சயமாகி இருந்ததாம். மகிழ்ந்துபோன இருவரும் உடனே இங்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபட்டார்களாம். இந்தத் தகவலைச் சொல்லி, `இப்போதும் அந்த மாட்டின் பாலில்தான் தினமும் ஐயனுக்கு அபிஷேகம் நடக்கிறது’ என்று பரவசத்துடன் பகிர்ந்துகொண்டார்கள், ஆலய நிர்வாகிகளான வேங்கடபதியும், ஹரியும்.

முட்டை விரிசல் சரியானது!

மண மகரிஷி விலங்குகளிடத்தில் மிகுந்த அன்பு வைத்திருந்தார். விலங்குகள் கடவுளின் அவதாரங்கள் என்று அவர் நம்பினார். நாய், பூனை, குரங்கு, பசு போன்றவற்றை ‘அவை, இவை’ என்று கூறாமல் அவற்றை ‘பசங்கள்’ என்றே அழைத்து வந்தார்.

உழவாரப் பணி செய்வோம்! - ‘மனம், மொழி, மெய்யாலே...’

ஒரு முறை ரமணர் உலர்த்தி வைக்கப்பட்டிருந்த ஒரு துண்டை எடுத்தார். அப்படி துண்டை எடுக்கும்போது அதன் மறுமுனை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு குருவிக் கூட்டின் மேல் பட்டு விட்டது. உடனே அந்தக் கூடு கீழே விழுந்து விட்டது. அதிலிருந்த ஒரு முட்டை விரிசல் அடைந்தது. இதைக் கண்ட ரமணர் வேதனையில் வாடினார்.

கீழே விழுந்த அந்த முட்டையை கையிலெடுத்து அதை ஒரு ஈரத்துணி யில் வைத்து மீண்டும் கூட்டினுள் வைத்தார். முட்டை விரிசல் அடைந்ததை தாய்க் குருவி கண்டால் எவ்வளவு மன வேதனைப்படும் என்று நினைத்தபோது அவரின் நெஞ்சு பதைத்தது. விரிசல் கண்ட அந்த முட்டை ஒன்று கூடினால் நன்றாய் இருக்கும் என்று நினைத்து அதை எடுத்துப் பார்த்து மீண்டும் கூட்டினுள் வைத்தார். சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் எடுத்துப் பார்த்தார். இப்படி மூன்று தடவைகள் செய்தார். பின்னர் எடுத்துப் பார்த்தபோது ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. அம்முட்டையில் இருந்த விரிசல் இறையருளால் சரியாகி விட்டிருந்தது. இதன் பின்னரே ரமணர் நிம்மதியடைந்தார்.

- அ. உமாராணி, கிருஷ்ணகிரி-1