மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow

லகை மாற்றியவை மூன்று ஆப்பிள்கள். ஒன்று, ஆதாம் கடித்த ஆப்பிள். அடுத்து, நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவது, ஸ்டீவ் ஜாப் உருவாக்கிய ஆப்பிள். இவற்றில் இரண்டாவது ஆப்பிள், நியூட்டன் மரத்தடியில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது தலையில் விழுந்த கதையைப் படித்திருப்போம். மரத்தடி எப்போதுமே ஞானம் நிரம்பியது. அங்கே அமைதியாக அமர்ந்தால் புத்தன்; யோசித்துக்கொண்டிருந்தால் நியூட்டன். இதில் நியூட்டன் வரிசையில் வந்தவர்கள் நிறைய பேர். அதிலொருவர்தான் ஆஷிஷ் ஹேம்ரஜனி.

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow

ஆஷிஷ் எம்.பி.ஏ பட்டதாரி. படிப்பு முடிந்ததும் கார்டு நிறைய சம்பளம் தரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். 24 வயதிருக்கும். அப்போது, நண்பர்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு பயணம் சென்றிருந்தார். அங்குதான் அவருடைய போதிமரம் இருந்திருக்கிறது. அதனடியில் அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தார் ஆஷிஷ். அடுத்த நாள் மாலை நடக்கவிருந்த ரக்பி விளையாட்டுப் போட்டிக்கான டிக்கெட்டுகளை அந்த ரேடியோ மூலம் விற்றுக்கொண்டிருந்தார்கள். தேவைப் படுகிறவர்கள் அன்று மாலைவரை ரேடியோ ஸ்டேஷனுக்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அடுத்த நாள் ஸ்டேடியத்தில் போட்டியைக் காணலாம். ஆஷிஷுக்கு ஒரு நொடி சில்லிட்டது. சினிமா டிக்கெட்டுகளை வாங்க என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என ஒரு நாஸ்டால்ஜியா குறும்படம் அவர் மனதுக்குள் ஓடியது.

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshowஇந்தியாவின் திரையரங்குகள் பெரியவைதாம். ஆனால், அந்த டிக்கெட் கவுன்ட்டர்கள் அப்படியிருப்பதில்லை. ஒருவர் மட்டுமே நிற்கக்கூடிய அகலத்தில், ரயிலைப்போல நீளமான கூண்டுதான் கவுன்ட்டர். உள்ளே நுழைந்துவிட்டால் எதற்கும் திரும்ப முடியாது. முன்னேயும் நகர முடியாது. இது ஒரு சிக்கல் என்றால், ஒவ்வொரு திரையரங்கமும் ஒவ்வொரு நேரத்தில் காட்சிகளைத் திரையிடும். 2000த்துக்கு முந்தைய காலத்தில் டைட்டில் கார்டு தொடங்கும்போதே படம் பார்த்தவர்கள் வெகு சிலரே. இவையும் இன்னும் பல சிக்கல்களும் மரத்தடியில் அமர்ந்திருந்த ஆஷிஷுக்குத் தோன்றின. இணையம் மூலம் சினிமா டிக்கெட்டுகள் விற்றால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது. இதனால் என்னவெல்லாம் நன்மை என்பதைப்  பட்டியலிட்டார்.

டிக்கெட் கிடைக்குமா எனத் தெரியாமல் திரையரங்கு வரை போய்வரத் தேவையில்லை. முன்பதிவு செய்ய ஒருமுறை, படம் பார்க்க ஒருமுறை என அலைய வேண்டியதில்லை. கார்னர் சீட்டா, ஸ்க்ரீனுக்குப் பக்கத்திலா என்பதை நாம் அறிய முடியும்; தேர்வு செய்ய முடியும். எத்தனை மணிக்குக் காட்சி எனத் தெரிந்து அதற்கேற்றாற்போலக் கிளம்பமுடியும் என ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு இணையம் மூலம் டிக்கெட் என்ற ஐடியா தீர்வு தந்தது. உடனிருந்த நண்பர்களிடம் இதைப் பகிர்ந்தார். எல்லோருக்குள்ளும் அந்த ஜீபூம்பா ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணியது.

இந்தியா திரும்பியதும் மூவரும் செய்த முதல் வேலை, வேலையை விட்டது. சினிமா எடுக்கப் போவதில்லை; ஆனால், திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சிக்கு வித்திடப்போகிறோம் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வெறும் 25,000 முதலீட்டில் ஆஷிஷின் பெட்ரூமில் தொடங்கியது இந்தப் புரட்சி. அதுதான் அவர்களின் அலுவலகம். பெரிய மரமொன்றின் அடியில் கிடைத்த ஐடியா என்பதால் தன் நிறுவனத்துக்கு Bigtree entertainment எனப் பெயரிட்டார்.

ஆஷிஷின் அம்மா எல்லா இந்திய அன்னையைப் போலதான். “உனக்கென்ன கிறுக்காடா பிடிச்சிருக்கு? இப்ப கல்யாணத்துக்குப் பொண்ணு பாத்தா நீ எங்க வேலை செய்றன்னு சொல்வேன்?” எனப் புலம்பத் தொடங்கினார். உடனிருந்த நண்பன் “பெட்ரூம்லதான்னு சொல்லுடா” எனச் சிரித்துக்கொண்டிருந்தான். ஆஷிஷ் எதற்கும் அஞ்சவில்லை. தன்னிடம் ஒரு மிகப்பெரிய புதையல் கிடைத்திருக்கிறது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஐடியா தயாரானதும் ஒரு ஸ்டார்ட் அப்புக்குத் தேவை முதலீடு. தன் ஐடியாவை ஒருவரிடம் சொல்லி, அவரிடமிருந்து முதலீடு வாங்கிவிட்டால் எல்லாத் தொழில்முனைவர்களுக்கும் ஆயிரம் யானை பலம் வந்துவிடும். அது பணம் தரும் பலம் மட்டுமல்ல; தன் ஐடியாவை ஒருவர் நம்பியிருக்கிறார் என்ற எண்ணம் தருகிற பலம். அதுதான் அதை இன்னும் பல லட்சம் பேரிடம் கொண்டு சேர்க்க முடியுமென்ற நம்பிக்கையைத் தரும். ஆஷிஷ் தன் ஐடியாவை ஒரே ஒரு பேப்பரில் விளக்கி, அதை முதலீட்டாளர் ஒருவருக்கு ஃபேக்ஸ் அனுப்பினார். அவருக்குப் பதிலாகக் கிடைத்தது 2.5 கோடி ரூபாய். ஆஷிஷுக்கு அம்மாவைச் சமாளித்துவிடலாம் எனத் தோன்றியது.

கேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow

மளமளவென வேலைகள் தொடங்கின. திரையரங்குகளிடம் டிக்கெட்டுகளைக் கேட்டால் கொடுத்துவிட மாட்டார்கள். அவர்களிடம் இந்த ஐடியாவைச் சொல்லிப் புரிய வைப்பதும் சிரமம். அப்போது ஆஷிஷ் செய்த ஐடியாதான் இன்று அனைத்து டிக்கெட் புக்கிங் தளங்களுக்குமான சீக்ரெட் சக்சஸ். ஒவ்வொரு திரையரங்குக்கும் ஒரு மென்பொருளை இலவசமாக வழங்கினார்கள். அதன்மூலம் திரையரங்குகள் டிக்கெட்டிங் வேலைகள் அனைத்தையும் எளிமையாகச் செய்ய முடியும். அந்த மென்பொருள் மூலம் ஆஷிஷும் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட்டுகளை விற்க முடியும். எல்லாம் தயார் ஆனது. முதலீடு தந்த பலத்தால், மூன்று பேர் கொண்ட டீம் 150 வரை உயர்ந்தது.

வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருந்த போதுதான் உலகம் முழுவதும் டாட் காம் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. மக்களுக்கு இணையம் பற்றிய அச்சம் அதிகமானது. கையிலிருந்த முதலீடு கரைந்தது. வேறு வழியின்றி 150 பேர் கொண்ட டீமை 6 பேராக மாற்றினார் ஆஷிஷ். ஆஷிஷ் முன் இரண்டே தேர்வுகள்தாம் இருந்தன. ஒன்று, கடையை மூடிவிட்டு வேலைக்குப் போவது. அல்லது, கையிலிருக்கும் சேமிப்பு அத்தனையையும் முதலீடாகப் போடுவது. வெறும் ஐடியாவாக மட்டுமே இருந்தபோதே அவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார் ஆஷிஷ். இப்போது எதிர்காலம் பிரகாசமாகக் கொஞ்ச தூரத்தில் தெரியும்போது விடுவாரா? அத்தனை சேமிப்பையும் இதிலே போட்டார். பிரச்னை தன்னிடமோ தன் ஐடியாவிலோ இல்லை; உலகம் இயங்கும் முறையில் என்பதைப் புரிந்துகொண்டார். அது சரியாகியே தீரும். அப்போது எல்லாம் சரியாகும் என நம்பினார். எல்லா ஸ்டார்ட் அப் ஆர்வலர்களும் இதை மனத்தில் நிறுத்த வேண்டும். பிரச்னை என்னவென்பதும், அதற்கு எது காரணம் என்பதும் தெரிய வேண்டும். பிரச்னை நம்மிடமில்லை என்றால், சூழல் சரியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். ஆஷிஷ் காத்தார்.

உலகம் மெள்ள மீண்டது. மக்களுக்கு இணையம்தான் எதிர்காலம் என்பது புரிந்தது. பயமின்றி இணையத்தில் பரிவர்த்தனை செய்ய இந்தியர்கள் தயாரானார்கள். ஆஷிஷும் அவர் டீமும் புத்துணர்ச்சி கொண்டார்கள். திரையரங்குகள் மட்டுமல்ல; நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளையும் விற்றார்கள். புக் மை ஷோ (BookMyShow) என்ற பெயரும் வந்தது.

இணையதளம் மூலமே அதிகம் இயங்கிவந்த புக் மை ஷோ, மெள்ள மொபைலின் அவசியத்தை உணர்ந்தது. கைப்பேசிச் செயலி மூலமும் சேவைகளைக் கொண்டு வந்தார்கள். இன்று ஐந்து கோடிக்கும் அதிகமானோரின் கைப்பேசிகளில் புக் மை ஷோ செயலி இருக்கிறது.  மாதம் 50 கோடி முறை இவர்களது இணையதளம் பார்க்கப்படுகிறது. அதனால் விளம்பரங்கள் மூலமும் அதிக லாபம் பார்க்கிறது புக் மை ஷோ. 2007-லிருந்து 2016 வரை ஒரு கோடி டிக்கெட்டுகளை விற்றவர்கள், 2017-ல் மட்டும் ஒன்றரைக் கோடி டிக்கெட்டுகளை விற்றிருக்கிறார்கள். இன்று இந்தியாவிலிருக்கும் 10,000 திரையரங்குகளில் 2,500 திரையரங்குகள் புக் மை ஷோவில் இருக்கின்றன. இதை இன்னும் அதிகரிக்கத் திட்டங்கள் தயார். பி.வி.ஆர் போன்ற பெரிய திரையரங்கு நெட்வொர்க்குகள் புக் மை ஷோவுடன் கைகோத்திருக்கிறார்கள். இந்தியா தவிர இன்னும் சில நாடுகளிலும் புக் மை ஷோ விரிந்திருக்கிறது.

புக் மை ஷோவுக்கு நிறைய போட்டியாளர்கள் உண்டு. திரையரங்கு டிக்கெட்டுகளை விற்பதிலும், நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை விற்பதிலும் தனித்தனிப் போட்டியாளர்கள். மொத்தமாக ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்தத் துறையில் புக் மை ஷோ எடுக்கும் நம்பருக்கு அருகில்கூட யாரும் வரவில்லை. அவ்வளவு வலிமையாக இருக்கிறது புக் மை ஷோ. ஆனால், அந்த பலத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டியிருக்கும். ஆஷிஷ் அத்தனைக்கும் தயாராக இருக்கிறார்.

தொழில்முனைவர்களுக்குச் சொல்ல ஆஷிஷிடம் நிறைய விஷயங்கள் உண்டு. அதில் முக்கியமானது “சிக்கலான பிரச்னைகளுக்கு எளிமையான தீர்வுகள் சாத்தியமே... தேவை, கொஞ்சம் காமன் சென்ஸ்.” உண்மைதான்!

கார்க்கி பவா