
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
ஒலக்குறிச்சியின் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய குப்பை லாரி, சிறிது தூரத்தில் சிறைக்காடு காலனியின் பாதையில் நுழைந்தது. மகோகனி மரத்தின் சிவப்பு மலர்கள், வழிநெடுக உதிர்ந்திருந்தன. லாரியிலிருந்து குப்பைக் குவியலின் சாறு, அந்தப் பாதையில் நெடுவாக்கில் ஒரு கோலத்தைப் போட்டபடியே சென்றது. குப்பை லாரியின் வாய்ப்பகுதியைப் பள்ளத்தாக்கில் சரியாக நிறுத்தி, ஓட்டுநர் ஒரு சுவிட்சை அழுத்தினார். ஹைட்ராலிக் ஆரம் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி, மொத்தமாகச் சாய்த்தது. ஏற்கெனவே மேட்டிலிருந்து கொட்டப்பட்ட கழிவுகள் காய்ந்து கெட்டியாகி அதுவும் ஒரு மலையெனக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அந்தப் பள்ளத்தாக்கின் கீழேதான் சிறைக்காடு இருக்கிறது. அதற்குள்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள். மலைகளைப் பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்குமேல் ஒரு குடையாக, குப்பைகளையும் மலங்களையும் மருத்துவக் கழிவுகளையும் பன்னெடுங்காலமாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது நமது சமூகம். அந்தக் குப்பைக்குடைக்குள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அந்த மக்களின் விடியலுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மகாதேவியின் ஒரு நாளைப் பற்றித்தான் சொல்லவேண்டியிருக்கிறது.
வெப்பாலை மரத்தின் மேலேறி, பழுக்காத இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தான் சந்திரன். கீழிருந்து தகப்பனைப் பார்த்துக் கைதட்டிச் சிரித்துக்கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தவன் சரசரவென இறங்கி மகாதேவியிடம் இலைகளைக் கொடுத்தான். இலைகளை நன்கு கழுவியவள், குழவியில் வைத்து இடித்தாள். இடித்து வைத்த இலைகளை வெள்ளைத்துணியில் போட்டு ஒரு பாத்திரத்தில் சுற்றிப் பிழிந்தாள். வெப்பாலை இலைகளின் சாறு சொட்டுச் சொட்டாகப் பாத்திரத்தில் நிரம்பியது. மூன்று வயதான இளையவன் கண்ணனை நிற்கவைத்தாள். அவனது மேனியைப் பார்த்தவள், திரும்பிக் கடுப்பாக இவர்களைச் சுற்றியிருக்கும் குப்பைகளைப் பார்த்தாள். இதமாக வந்த காற்றில் அழுகிய நிணத்தின் வாடை நாசியில் அடித்தது. வழக்கமான நாற்றம்தான் என்றாலும், ஏனோ இப்போது கோபம் உச்சிக்கு ஏறியது. பிள்ளையைக் குளிப்பாட்டினாள். சந்திரன், ஈட்டிமரத்தின் பக்கக் கிளைகளைக் கவாத்து பண்ணிக் கொண்டிருந்தான். ``தண்ணி பட்டா எரியுதும்மா!” என்று கண்ணன் மகாவைப் பார்த்துச் சிரித்தான்.

``சுத்தம் பண்ணிட்டு மருந்து போட்டாத்தானே புண்ணு ஆறும்” என்றவள், சோப்பைக்கொண்டு பிள்ளையின் மேனி முழுவதும் இருந்த புண்களை வலிக்காதபடி கழுவி எடுத்தாள். செக்கச் சிவந்திருந்த புண்களுக்கு வெப்பாலையின் சாற்றைத் தடவினாள். ``இந்த ஈய எதக்கொண்டு சாவடிக்க? எம்பிள்ளய கடிச்சுவெச்சு... புண்ணாக் கெடக்குதே... இந்த ஈக்கு ஒரு சாவு வராதா!” நைந்த டவுசரை மாட்டிவிட்டாள்.
``நம்ம தலைக்கு மேல கொட்டுறான் பாரு குப்பய... அத நிறுத்தாம இருக்கிறவரைக்கும் இந்த ஈய நாம எந்த ஆயுதம்கொண்டும் சாவடிக்க முடியாது மகா. ஈயும் கொசுவும் நாத்தமும் நமக்கு மட்டும் விதிக்கப்பட்ட விதியா என்ன?” கவாத்து பண்ணிக்கொண்டிருந்த சந்திரனுக்குக் கோபம் வந்தது. அரிவாளைக்கொண்டு மரத்தை ஒரு கொத்துக் கொத்தினான். சிரித்துக்கொண்ட மரம், அவனுக்கு ஒரு மலரைக் கீழே அனுப்பியது.
மகாவைச் சந்திக்க நேர்ந்தபோது, அவரின் அழைப்பின்பேரில் சிறைக்காட்டுக்குச் சென்றேன். உலகின் ஆகப்பெரிய கழிவறையைப்போலவே அவர்களின் வாழ்நிலம் இருந்தது. அழுகிய நிணத்தின் நெடுநாள் வாடையும், செத்த எலிகளின் கமுங்கின வாடையும் கலந்து நாசியை ஒருவழி பண்ணியது; குடலைப் புரட்டி வாய்வழியாக எட்டிப்பார்த்தது. மகா, என்னைப் பார்த்துச் சிரித்தார். அப்போது மகாவைப் பார்க்க வந்த சிறுவர்கள் தலையைச் சுற்றி ஒரு தலைக்கு நூறு ஈக்களாவது பறந்துகொண்டிருந்தன. ஈக்கள் கடித்துச் சொறிந்த புண்கள், வெடித்துச் சிதறி சலம் கண்டிருந்தன. சிறு குழந்தைகளின் வயிறு உப்புசமாகப் புடைத்துக் கொண்டிருந்தது.
``அக்கா பிஸ்ஸேட் வாங்கியாந்தியாக்கா?” - கையை நீட்டிச் சிரித்த அந்தப் பிள்ளைக்கு, பையிலிருந்து பிஸ்கோத்தை எடுத்துக் கொடுத்தாள்.
``ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்று மலைப்பாதையில் ஓட எத்தனித்தார்கள்.
``நாளைக்கு பள்ளியோடம் போகணும்… மறந்துறாதீங்க” என்றார் மகா. பசுமை போர்த்தியிருந்த காட்டைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். இப்போதுதான் நாற்றங்களால் சூழ்ந்த ஒரு காட்டைப் பார்க்கிறேன். வேறு வழியில்லை, முகத்தைச் சுளிக்கிறபடியாகத்தான் இந்த நாற்றங்களைப் படித்தாக வேண்டும். தலைவன் ஜி.நாகராஜன் சொல்வார், `ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள்… ஏன் இப்படி நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்’ என்று.
மகா வீட்டின் முன்னால் நின்றோம். சந்திரன், நாற்காலியைக் கொண்டுவந்து போட்டார். என் முகக்குறிப்புகளை உணர்ந்துகொண்ட சந்திரன் ``சார், உள்ள வந்து உக்காந்தாலும் நாத்தம் வந்துகிட்டுத்தான் இருக்கும். முடியலைன்னா சீக்கிரம் கெளம்பிடுங்க சார்” என்றார்.
இந்தச் சிறைக்காட்டில் உள்ளே வந்து பத்து நிமிடம்கூட முழுமையாகியிருக்காது. என்னால் இருக்க முடியவில்லை. ஆனால், இந்த மனிதர்கள் இங்கேயே உண்டு, உறங்கி, வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நாற்றத்தில்தான் பிள்ளையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு ஜனத்திரள்மீது நமது கழிவுகளைக் கொட்டுகிறோம் என்கிற ஒர்மையற்று இருக்கும் இந்த அதிகார வர்க்கத்தினரை என்னவென்று சொல்வது!
``சார், இங்க நாப்பது குடும்பங்க சார். யாருக்கும் எங்களப் பத்திக் கவலை இல்ல சார். என் அப்பாதான் சார் என்னைப் படிக்கவெச்சாரு. பத்து வயசுல பள்ளியோடத்துல சேர்த்து விட்டாரு. பத்து வயசுல அ, ஆ, இ கத்துக்கிட்டப்போ கூட இருக்கிற பிள்ளைக சிரிச்சுதுக. எதையும் கண்டுக்காமப் படிச்சேன் சார்” மகா சொல்லிக்கொண்டிருந்தபோது சிரட்டையால் ஆன வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த கண்ணன், `பாம்... பாம்... உஷ்... உஷ்... பாம்... பாம்...’ என ஹாரன் ஒலி எழுப்பினான்.
``கண்ணா... சாருக்கு வணக்கம் சொல்லு.”
வணக்கம் என்பதுபோல் சொல்லிவிட்டு `உர்’ரென வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனான். அவனின் முதுகு முழுக்கச் செறிந்த புண்கள் இந்தக் காட்டின் வரைபடத்தைப்போல நாறிக் கொண்டிருந்தன.
``அஞ்சாப்பு படிக்கும்போது எங்க அப்பா எறந்துட்டாரு. அதுக்கு மேலயும் பள்ளியோடத்துக்குப் போனங்க. அங்க இருந்த வாத்தியாரு என்கிட்ட தப்பா நடந்தார். பெரிய வாத்தியார்கிட்ட போயி சொன்னா, அவரு என்னதான் அடிச்சாரு. பீஸு கட்டினாத்தான் பள்ளியோடம் வரணும்னு சொல்லிட் டாங்க. அதுக்கப்புறம் எங்கயிருந்து படிக்கிறது?”

காட்டுமரத்தில் கூடுகட்டியிருந்த தேனடையிலிருந்து எடுக்கப்பட்ட தேனை ஒரு பாட்டிலில் ஊற்றி, துணியால் நன்கு சுற்றிவைக்கப்பட்ட பாட்டிலைக் கொண்டுவந்து ``சார்... அதிகாரிங்க மேல நின்னுக்கிட்டு மூக்கப் பொத்திக்கிட்டுப் பார்த்துட்டு அப்பிடியே போயிடுவாங்க. நீங்க எங்க வீடு வரைக்கும் வந்ததே பெரிய விஷயம். இத நீங்க ஏத்துக்கணும் சார்” என்று காட்டுத்தேனைப் பரிசளித்தார்.
எனக்கு, செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. இந்த மனிதனின் பச்சையம் பூத்த அன்பின் வாசனை முன்னால் என் நாற்றங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தன.
ஈக்கள், என்னையும் மொய்த்துக்கொள்ளத் தொடங்கின. ஈக்கள் என்றால், நம் ஊர் ஈக்கள் என நினைத்துவிடாதீர்கள். குப்பைக்கிடங்கில் எப்போதும் வயிறுமுட்டச் சாப்பிட்டு முளைத்து வந்து மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கும் இவை, தேனீக்கள்போல புஷ்டியான உருவம் கொண்டவை. காற்றில் கலந்து வந்த நாற்றத்தின் வாடை, மூக்கையும் வாயையும் நக்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் போன சந்திரன், விசிறியை எடுத்து வந்து வீசினார். நான் வேண்டாமென்று சொன்னாலும் அவர் வீசுவதை நிறுத்தவில்லை.
``இந்த ஈக பெரிய தொல்லை சார். காடு மேடுன்னு சுத்திட்டு வந்து சாப்புட உக்காந்தா சோறு முழுக்க ஈக மேயும். அப்புடியே கையை ஆட்டிக்கிட்டுச் சாப்புடவேண்டியதுதான். சமயத்துல ரெண்டு மூணு ஈக சோத்துலேயே விழுந்துரும். பசியில ஒண்ணும் பண்ண முடியாது சார். அப்படியே பெசஞ்சி அடிக்கவேண்டியது தான்” என்று சொல்லிச் சிரித்தார் சந்திரன். அவர் சிரித்தபோதுதான் கவனித்தேன், அவரது கழுத்து, ஈக்களால் விளைந்த புண்ணியத்தால் சிவந்து கனிந்து இருந்தது.
``சோத்துல தெனமும் வைட்டமின் ஈதான் சார்” என்று மகாவும் சிரித்தார். இவர்களின் இந்தச் சிரிப்பை, என்னால் சிரிப்பென எடுத்துக்கொள்ள முடியவில்லை. அது நாள்பட்ட துக்கத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று.
``இவ்ளோ கஷ்டப்படுறதுக்கு, வேற எங்கியாவது போயிடலாம்ல...”
இருவரும் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். கேட்கக் கூடாத கேள்வி என்று மட்டும் புரிந்தது.
``நாங்க ஏன் சார் போகணும்? எங்க பாட்டன் பூட்டன்லா... அலக்கல்லுக்குள்ள வாழ்ந்தாங்க. எங்க காவல் தெய்வம் பல்கியம்மன் எங்கள வழிநடத்துச்சு. குகைக்கல்லுன்னு சொல்வாங்க. தேனும் கெழங்கும் தினைமாவும் சாப்புட்டு வாழ்ந்தாங்க. காடு போடுற குப்ப, எங்களுக்குச் சோறுங்க சார். நாங்க போடுறது மண்ணுக்குச் சோறு சார். காட்ட தெய்வமா பார்த்துக்கிட்ட பூர்வகுடி சார் நாங்க. கீழயிருந்து அவன் அவனோட மலத்தையும் கழிவையும் எங்க தல மேல கொட்றாங்க சார். அதையே எங்கள வாரவும் வெச்சிட்டானுங்க. ஈக்குத் தின்னக் குடுத்து, நோய்க்கு வாக்கப்பட்ட கத சார், எங்க கத. இங்க இருக்கிற புள்ளைங்களுக்கு வவுறு வீங்கி என்ன நோயின்னே தெரியலை சார். அதான் எல்லாரும் கூட்டமா சேர்ந்து ஒருநாள் போராட்டம் பண்ணினோம். அப்பதான் எங்க போராட்டத்துல ஆரம்பிச்ச காதல், இன்னிவரைக்கும் போராட்டத்துலேயே போயிட்டிருக்கு” சந்திரன் இப்போது சிரித்தார். அந்தப் பவித்திரமான சிரிப்பில் தெரிந்தது, காதலால் விளைந்தது போராட்டமேயன்றி வேறென்ன?

``இதுல கொடும என்னன்னா... நாம அள்ற குப்பய நம்மகிட்டயே கொட்றதுதான்” சந்திரன் முகத்தில் கடித்த ஈயை, பச்சக்கென அடித்து நசுக்கிப்போட்டுச் சொன்னார்.
``உங்க எம்.எல்.ஏ-கிட்ட மனு கொடுத்தா... மாற்றம் வரும்ல” இப்போது என் முகத்தில் ஈக்கள் வட்டமிட்டன.
``வட்டம் வட்டம் வந்து எட்டிப்பாப்பாங்க. இனிமே இங்க குப்ப கொட்ட மாட்டாங்க. எனக்கு மக்கள்தான் முக்கியம்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. ஆனா, நகராட்சி இங்கதான் வந்து கொட்டும். அதுலதான் நாங்க வாழணும். ஆனா, நாங்க விட மாட்டோம் சார். இந்த உயிர் இருக்கிறவரைக்கும் போறாடுவேன்.
இந்தத் தலைமுறைய படிக்கவைக்கிறேன் சார். இங்கயிருந்து ஸ்கூல் போகணும்னா, 50 கிலோ மீட்டர் போகணும். எங்க பிள்ளைங்களுக்காகவே ஒரு வாத்தியார் பள்ளியோடம் ஆரம்பிச்சார். இப்ப எங்க பிள்ளைங்களும் படிக்குது. விவரம் தெரிஞ்சுட்டா வாழ்ந்துடலாம் சார்” மகாவின் நம்பிக்கை அவருடைய வார்த்தைகளாக வந்தது.
நரேஷிடமிருந்து மகாவுக்கு போன் வந்தது. ``ஆங் தம்பி... சார் இங்கதான் இருக்காரு. நல்லா இருக்கீங்களா... இந்தாங்க சார்கிட்ட குடுக்கிறேன்” என்று என்னிடம் போனைக் கொடுத்தார் மகா.
நரேஷிடம் பேசி, போனை அணைத்தேன். அவன்தான் மகாவை எனக்கு அறிமுகப் படுத்தியது. என் குரல் கம்மி யிருந்ததால் ``சரிண்ணே, நேர்ல பேசுவோம்” என்று வைத்து விட்டான். சிலுசிலுவென்று காற்றில் இதமாக நாற்றம் கமழ்ந்துகொண்டிருந்தது. சூடாக, கறுப்புச் சாயா கொண்டுவந்தார் சந்திரன்.
``சார், நரேசு வந்தப்ப மழ வந்துடுச்சு. மழகாலத்துல நாங்க யாரும் இங்க இருக்க மாட்டோம். ஏன்னா, காஞ்சிபோய் இருக்கிற குப்ப, மலம்லாம் உருகி வழிஞ்சு கிட்டு வரும். நாத்தத்துலயே வாழ்ந்த எங்களுக்கே வாந்தி வந்துரும். அப்புறம், இந்த அம்பது குடும்பங்களோட வாந்தி நாத்தமும் சேர்ந்துக்கும். அன்னிக்கு நரேசு ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாம்ல. எங்கள மனுஷனா மதிச்சு வந்த தம்பிக்கு இப்பிடி ஆயிருச்சேன்னு ரொம்ப வருத்தமாப்போச்சு” என்றார் சந்திரன்.
``ஆமாங் சார்... நாத்தத்துலேயே வாழ்ந்து வாழ்ந்து எங்க உடம்புலயும் ஒரு மச்சம்போல நாத்தமும் தங்கிடுச்சு. கீழ சுத்தமா போனா மொகம் சுளிப்பானுங்க. இது உங்க நாத்தம்தான்டான்னு பொளிச்சுனு அறையச் சொல்லும். போங்கடான்னு வந்துடுவேன்” கறுப்புச் சாயாவைக் குடித்துக்கொண்டார் மகா.
சிரட்டை வண்டியின் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த கண்ணன், ``ஸ்கூல்ல இருந்து அண்ணன் வந்துட்டானம்மா” என்று மகாவின் மடியில் படுத்துக்கொண்டான். அவன் காதோரமாகக் காய்ந்து வெடித்திருந்த பக்குகளைக் களைந்துகொண்டிருந்தார் மகா.
சிறு அமைதி நிலவியது. நிலவின் நிழல் படிந்தாலும் சில்லிடும் பனியில் ஈரப்பதமாய் அடித்துக்கொண்டிருந்தது நாற்றம். ``எனக்கொரு ஆச சார். இங்க இருக்கிற பிள்ளைங்கள படிக்கவெச்சாலே போதும். அதுங்களாவது நாத்தமில்லாம, நோயில்லாம எங்கியாவது பொழச்சிக்கும்ல. இன்னமும் கக்கூஸு இல்லை சார். அதுக்கும் ஆபீஸரைப் பார்த்து மனு குடுத்திருக்கேன். வருமான்னு தெரியலை. கக்கூஸுக்குக் காட்டுக்குப் போன வாய் பேச முடியாத புள்ளைய கெடுத்துட்டானுங்க சார். யாருன்னே தெரியலை. அதுக்கும் சொல்லத் தெரியலை. முதுகு முழுக்க சிராய்ச்சு ரத்தம். பாறையில தேய்ச்சிருப்பானுங்க போல. மிருகங்ககிட்டகூட பயமில்ல சார். வெள்ளயா சிரிக்கிற இவுனுங்கதான் சார் வெசத்தோடு அலையுறானுங்க” மகா சொல்லி முடிப்பதற்குள், பெரியவன் பள்ளி உடுப்புடன் வந்தான். எனக்கு வணக்கம் சொன்னான். அவனது நெற்றியில் ஈக்கள் வரைந்த ஓவியம் ஒன்று சலமாய் வழிந்துகொண்டிருந்தது.
``ராஜா, கெழங்கு அவிச்சி வெச்சிருக்கேன். கைகால் கழுவிட்டுச் சாப்பிடு, சரியா!” என்ற மகாவைப் பார்த்தேன்.
போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டிருக்கும் மகா, எனக்கு மாகாளியாகவே தெரிந்தார். சரியாகச் சொல்லவேண்டுமெனில், ஒரு மணி நேரம்கூட என்னால் அந்த நாற்றத்தோடு இருக்க முடியவில்லை. ஆனால், மகா எனும் மனுஷி போராடி அவர்களுக்கான விடியலைப் பெற்றுவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.
இவர்கள் வாழும் பகுதிக்கு `சிறைக்காடு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். நமது நாற்றத்தை இன்னொருவன் சுவாசித்துக் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவு இழிவானது. காட்டைக் காடாக வைத்திருந்த பூர்வகுடிகளின்மேல் நமது கழிவுகளைத் துப்புகிறோம். அந்தக் கழிவுகளிலிருந்து வாழ்ந்து தன் பிள்ளையைப் படிக்கவைத்து, அந்த மனிதர்களை சுயமாகச் சிந்திக்கவைத்து, காட்டையும் காப்பாற்றிவிடுவேன் என்று போராடும் மகாதேவிகள் இருக்கும்வரைதான் இந்த மண்ணில் பெய்யெனப் பெய்யும்போல் மழை.
வேண்டவே வேண்டாம்! மழை சிறைக்காடுகளில் பெய்துதொலைத்தால், நாம் கொட்டிய கழிவுகள் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும். நகரத்தின் சிதிலமடைந்த ஓவியம்போல இந்தியா இருந்துவிடவும்கூடும்!
- மனிதர்கள் வருவார்கள்...