
இறையுதிர் காடு - 7

அன்று தாழப் பறந்து வந்த அந்த வல்லூறு, கையை விடைப்பாக நீட்டியபடி நின்றிருக்கும் அஞ்சுகனின் கரம்மேல் அவனை ஓர் எஜமானனைப்போல் கருதி அமர்ந்தது. மானுட அச்சம் அதனிடம் துளியுமில்லை. அந்தக் காட்சியைக் கண்ட சீடர்கள் அத்தனை பேருமே, வியப்பில் புருவங்களை உயர்த்தினர்.
போகர், மெள்ள அதன் அருகே சென்று அதன் தலையையும் சிறகுகளையும் வருடி, அன்புகாட்டத் தொடங்கினார். அதுவும் குழைந்துகொடுத்தது. குறுமணி போன்ற கண்களை ரப்பைகொண்டு மூடித் திறந்து `நான் நெகிழ்கிறேன்’ என்றது.
அஞ்சுகன் அதை ரசித்தான்.

``அஞ்சுகா... இதை மீண்டும் பறக்க விடு! பூமியில் குறித்த இடத்தில்தான் நமக்கெல்லாம் சோறு. ஆனால் இதற்கோ, உலகம் முழுக்கச் சோறு! அதேபோல் நமக்கெல்லாம் அரைப் பார்வைதான். முன்னால் பார்க்கும்போது பின்னால் பார்க்க இயலாது. பின்னால் பார்க்க விழைந்தாலோ முன்னால் தெரியாதுபோய்விடும். ஆனால் இதற்கு, முழு வட்டப்பார்வை! விண்ணில் இருந்து இது பூமியைப் பார்க்கும்போது எதுவும் மறையாது. பார்வையில் பறவைப் பார்வையே மேலானது. பார்ப்பதைவைத்தே மனமும் சிந்திக்கும். எனவே, பறவைப் பார்வையை நாமும் பெற முயலவேண்டும்’’ என்று அந்த வல்லூறைக்கொண்டு ஒரு பாடமும் நடத்தி முடித்தார் போகர்.

அஞ்சுகனும் கையை உயர்த்தி, அதை வானம் ஏகச் செய்தான். `போய் வருகிறேன் நண்பர்களே...’ என்பதுபோல் அதுவும் வானில் மேலேறத் தொடங்கியது.
அஞ்சுகனும் கையைத் தளர்த்திக்கொண்டான். அவன் வசமிருந்த அந்த ரசமணியை, சற்று ஏக்கத்துடன் மற்ற சீடர்கள் பார்த்தனர். அது தன் சக்தியை அனைவருக்கும் காட்டிவிட்டது. அதை மாயம் என்பதா, இல்லை நேயம் என்பதா என்பதில் அவர்களிடம் குழப்பம்.
``அஞ்சுகா, நீ இனி நடுக்காட்டுக்குள்கூட தாராளமாக நுழையலாம். மதியை மயங்கவைக்கும் தில்லை விருட்சம் மிகுந்த மகரந்தங்கள் மிதக்கும் `மதி மயக்கி வனத்துக்குள்ளும்’ நுழையலாம்! ஊர்வதில் தொடங்கி பறப்பதில் தொட்டு, அலைகின்ற மிருகங்கள் வரை எதுவும் உன்னைத் தீண்டாது. இந்த ரசமணியை இடுப்பில் தொப்புள்மேல் வைத்து, ஓர் அங்குல பருத்தி ஆடை மடிப்பால் இறுகக் கட்டிக்கொள். ஜலவாதின்போது மட்டும் மணியை விலக்கி வை! உறங்கும்போதுகூட இதைப் பிரியாதே. அதேபோல் நித்யத்யானத்தையும் கைவிடாதே! உனக்கொரு கட்டளை. பாஷாணங்கள் ஒன்பதில் `தாளகம்’ நூறு பலம் எனக்கு வேண்டும். அதை மரவட்டிலில் சேமித்து, பிறகு என் வசம் நீ ஒப்புவிக்க வேண்டும். தர்ப்பைப்புல்கொண்டு மரவட்டிலை மூடவேண்டும் என்பதை மறந்துவிடாதே!” என்று கட்டளையிட்டவர், அடுத்து புலிப்பாணியைத்தான் ஏறிட்டார்.
``புலி... உன் கால ஞானத்துக்கு ஒரு பரீட்சை. வரும் நாளில் நெடிய விரிவுகொண்ட அபிஜித் முகூர்த்த காலத்தை நீ கண்டறிந்து வை. அப்போது நான் ஓர் அறப்பணியைத் தொடங்க இருக்கிறேன்” என்றார்.
``மகிழ்ச்சி குருவே. ஒன்றுக்கு மூன்றாய் அந்தக் காலகதியை நான் கணக்கிட்டு அறிந்து, தங்களுக்கும் அறிவிப்பேன்.”
``அது எதற்கென்றும் தெரிந்துகொள்.”
``தாங்கள் கூறினால் தெரிந்துகொள்ளச் சித்தமாக உள்ளேன்.”
``இந்தப் பொதினியின் இன்னொரு பெயர் தெரியுமல்லவா?”
``அஞ்சுகன்கூட சற்று முன் கூறினானே... பழநி என்று!”
``சரியாகச் சொன்னாய். அந்தப் பழநியின் உள் உருவை அறிவாயா?”
``அது துறவுக்கோலம் அல்லவா?”
``அதுவேதான்! வேல் பிடித்த வேலவன் தண்டமெனும் தடி பிடித்து கௌபீனம் தரித்து நின்ற கோலம்! சிரத்திலும் முடியறுத்து சிவ நயனமெனும் ருத்ராட்சம் தரித்து நின்ற கோலம்!”
``இப்போது அதுகுறித்துத் தாங்கள் கேள்விகள் எழுப்பக் காரணம்?’’
``இருக்கிறது. உங்களுக்கெல்லாம் குருவருள் மட்டும் போதாது... திருவருளும் வேண்டும்.”
``அதற்கும் இந்தத் தண்டாயுதபாணிக்கும் என்ன சம்பந்தம் குருவே?”
``இவனைச் சிந்தித்தாலே திருவருளுக்கு நாம் ஆளாவோம்.”
``என்றால் ஏனைய தெய்வதங்கள்?”
``அவையும் திருவருள் புரிபவையே... நீரானது நிலமிசை குளமென்றும் குட்டையென்றும், ஏரியென்றும், ஊரியென்றும் ஆறென்றும் அருவியென்றும் பலவாறு விளங்குதல் போன்றதே தேவதா ரூபங்கள். அவற்றில் ஞானிக்குரியவன் தண்டபாணிதான்! மூலன் உரைத்ததுபோல், ஒன்றே குலம் ஒருவன்தான் தேவன்! அந்தத் தேவன் ஓரிடம் உறங்கிச் செயல்புரிகிறான். ஓரிடம் ஆடிச் செயல்புரிகிறான். ஓரிடம் லிங்கமாய் அடங்கிச் செயல்புரிகிறான். பொதினியாம் இந்தப் பழநியில் இனி அவன் தண்டபாணியாய் மதியாய் மருந்தாய் விளங்கப்போகிறான்!”
``மதியாய் மருந்தாய் எனும் தங்கள் சொற்களை விரித்துக் கூற வேண்டுகிறேன்.”
``நானும் நான் அறிந்தவரை கூறுகிறேன். மானுடர்க்குத் தேவை நான்கு `தி.’ அதாவது `நல்ல விதி, நல்ல கதி, நல்ல மதி, நல்ல நிதி!’ விதியால் கதியும், கதியால் மதியும், மதியால் நிதியும் திரண்டு வாழ்வும் வளமாகும். எப்போதும் வளம்மிகுந்த வாழ்வு என்பது, வாழவே தூண்டும். எனவே, அதிலிருந்து விடுபடுவது குறித்தே வளத்தோடு வாழ்பவர்கள் சிந்திக்க மாட்டார்கள். எனவே, வினை மிகுந்த உலக வாழ்க்கை வாழவே விரும்புவர்.
வாழ்க்கைக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது `அசைதல்’ என்பதே அது! அசைவது என்று வந்துவிட்டாலே, இரு நிலைகள் தோன்றிவிடும். அதுவே இடமென்றும், வலமென்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணானது. இந்த முரண், நாம் வாழும் வாழ்விலும் எதிரொலிக்கும். இடது, தான் சிந்திப்பதே சரி என்றிடும். வலதும் தன் செயலே சிறந்தது என்றிடும். இரண்டுமே ஒன்றின் கூறுகள்தான் என்பதே ஞானம். இந்த ஞானமே அறிவின் முதிர்ந்த நிலை. இந்த ஞானத்தை அடைந்தவர், பூர்ணசந்திரனுக்கு ஒப்பானவர். பூர்ணசந்திரனும் நிரந்தரமானவன் அல்ல. தேய்ந்தும் வளர்ந்துமே சந்திரன் பூரணமடைகிறான். அந்தப் பூரணமும் நிலையில்லை எனும்போது, `எதுதான் நிலையானது?’ என்ற கேள்வி எழுகிறது.

இது உலகின் தலைசிறந்த கேள்விகளில் ஒன்று. இதைக் கேட்க மதி வேண்டும்! மதிகொண்டு கேட்டும் பயனில்லை. ஏனெனில், பூமியில் எதுவும் பூரணமில்லை; எதுவும் நிரந்தரமில்லை. எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன, நம் உடல் உட்பட! இதில் மாறாதது எது? நிலையானது எது? எனும் கேள்விகளுக்கு நம்மிடையே பல விடைகள்! இதனால் பெரும்குழப்பம்! குழப்பம் ஒரு வியாதி... இந்த வியாதிக்கு மருந்து எது? `நானே’ என்கிறான் தண்டபாணி!
``எப்படி குருவே?’’ - இக்கேள்வியை, அதிசயமாக அந்தச் சீடர்களில் அகப்பை முத்து என்பவன் கேட்டான்.
``நல்ல கேள்வி... இக்கேள்விக்கு நீங்கள் விடையை அறியவேண்டும் எனில், அந்த முருகனை முதலில் பூரணமாய் அறிய வேண்டும். அவனோடு சேர்ந்து அவனது வேலையும் அறிதல் வேண்டும். `வேல்’ எனும் சொல்லில் உள்ள `வே’ எனும் எழுத்தின் சிறப்பையும் அறிந்திட வேண்டும். `வே’ எனும் எழுத்தோடு தொடங்கிடும் வேர், வேதம், வேலி, வேடன், வேம்பு, வேடம் என்கிற பற்பல சொற்களையும் அறிந்திட வேண்டும்.
`வே’ எனில் மறைந்திருப்பதைக் குறிக்கிறது. எது மறைந்திருக்கிறது என்பதையே அதோடு தொடர்புடைய பிற எழுத்துகள் உணர்த்துகின்றன. வேர் எனும் சொல்லில், மரத்தின் உயிர் மறைவாக மண்ணுக்குள் மறையப்போய் வேர் என்றானது. அதேபோல், வேடன் எனும் சொல்லில் மறைந்திருந்து அவன் செயல்படும் தன்மையும், வேம்புக்குள் கசப்பு மறைந்திருப்பதையும், வேடத்தில் ஒரு பாத்திரம் மறைந்திருப்பதையும், வேதத்தில் இறைச் சொற்கள் மறைந்திருப்பதையும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் வேலில் உள்ள `ல்’ அதனுள் `இல்’ எனும் அகம் ஒளிந்திருப்பதைக் கூறுகிறது’’ என்று நெடிய உரை தந்தார்.
``என்றால், வேல் என்பது கூரிய ஆயுதமில்லையா? மறைவான அகமா... எப்படி?’’
இன்று பாரதியோடு கைப்பேசியில் பேசிய கணேசபாண்டியன் ``பாப்பா... வேங்கையன்கிற அந்த ரெளடிய அவன் எதிரிங்க...’’ என்று சொன்ன அளவில் அலைவரிசை அறுந்துபோய் ஒரு நிசப்தம் சூழவும் பாரதி எரிச்சலுற்றாள்.
``ச்சே... முக்கியமான நேரத்துலதான் இந்த செல்போன் டவர் கட்டாகும்’’ என்று முணுமுணுத்திட, மறுபுறம் மீண்டும் முயன்று கணேசபாண்டியனே தொடர்பில் வந்தார்.
``பாப்பா... ஸாரி! சிக்னல் இங்க சரியா கிடைக்கலை.”
``அது ஒரு சாபக்கேடு. அப்பதானே ஒரு போனுக்கு ரெண்டு போன் பண்ணுவோம். நீங்க விஷயத்துக்கு வாங்க. அந்த வேங்கையனுக்கு என்னாச்சு?”
``வேங்கையனை, அவனோட எதிரிங்க கொல்லப்பார்த்திருக்காங்க. அதுல காயத்தோடு அவன் தப்பிட்டான்னு கேள்விப்பட்டேன்.”

``கேங் வார் மாதிரியா?”
``கிட்டத்தட்ட அப்படித்தான் பாப்பா. இவன மாதிரி ஆட்களுக்கெல்லாம் இயற்கைச் சாவே கிடையாதே!”
``சரி... இதை இப்ப எனக்குச் சொன்ன காரணம்?”
``அவனைப் பார்க்கணும்னு சொல்லியிருந்தீங்களே... இப்ப பார்க்கிறது கஷ்டம்கிறதுக்காகச் சொன்னேன்.”
``இப்படிச் சொல்லச் சொல்லத்தான் வேகம் அதிகமாகுது. குறிப்பா, இவன் எதிரிகளால் சாகுறதுக்குள்ள அந்தப் போலிப்பத்திரத்தை போலீஸ் முன்னாடி வெச்சுக் கிழிச்சுப் போட்டுடணும்.”
``என்ன சொல்றீங்க பாப்பா?”
``எந்தக் காரணத்தைச் சொல்லியும் இவனை நான் பார்க்கிற சந்திப்பைத் தள்ளிப்போடாதீங்க. இவனை நான் நாளைக்கே பார்த்தாகணும்” என்று போனை கட் செய்தாள்.
சில நொடிகள் மௌனம். பின், தொடர்ந்து சாப்பிடத் தொடங்கியவளை, பாட்டி முத்துலட்சுமி பரிதாபமாய்ப் பார்த்தாள்.
``என்ன பார்க்கிறே?”
``பிடிச்சா, பிடிச்சபிடியாவே இருக்கியேம்மா!”
``அது நல்லதுதானே பாட்டி. நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக்கிட்டேவா இருக்க முடியும்?”
``போகட்டும்... நாளைக்கு அந்த ரெளடியைப் பார்க்கப் போறியா?”
``ம்...”

``பார்த்து... தனியா போகாதே!”
``கவலைப்படாதே... கணேசபாண்டி கூட வருவார்.”
``அவன் என்ன பெரிய மாவீரன். இன்னும் யாரையாவது கூட்டிக்கிட்டுப் போ.”
``அப்ப, ஒரு பொண்ணால தனியா போய் எதையும் செய்ய முடியாது. அப்படித்தானே?”
``இப்ப நாடு இருக்கிற இருப்புல பொண்ணால மட்டுமில்ல, ஆணாலேயும் தனியா எதையும் செய்ய முடியாது. எல்லோரும் ஒண்ணுசேர்ந்து செயல்பட்டாதான் முடியும்.”
``சரி பாட்டி... நீ போய் ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்கிறேன்.”
``நீ சாப்பிட்டு முடி. அப்புறம் நான் மட்டுமாவது பழநிக்குப் போயிட்டு வந்துடுறேன். அப்பதான் எல்லாம் கொஞ்சமாவது சரிப்பட்டுவரும்” - முணுமுணுத்துக்கொண்டே முத்துலட்சுமி திறந்திருந்த பாத்திரங்களை மூடத் தொடங்கினாள். பதிலுக்கு பாரதி சிரித்தாள்.
``என் வருத்தம் உனக்குச் சிரிப்பா இருக்கு இல்ல?”
``உன்னைப் பார்த்தா, பாவமாவும் இருக்கு. பை த பை, உனக்கு ஒரு விஷயம் சொல்லப்போறேன்.”
``என்ன?”
``நீ போக ஆசைப்படுற பழநியைப் பத்தி ஒரு பழைய புஸ்தகம். அதுல `சரவண மனோ சக்கரம்’னு ஒரு பக்கம்! வட்டமா படம் போட்டு அதுல நம்பருங்க இருக்கு. நாம கண்களை மூடிக்கிட்டு உன் முருகனை நினைச்சுக்கிட்டு ஒரு நம்பரைத் தொடணும். ஆனா, நான் முருகனை எல்லாம் நினைக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டே தொட்டேன். அதுவும் நாலாம் நம்பரை! அதுக்கு எனக்கு என்ன பலன் தெரியுமா?”
``என்ன பலன்... என்ன பலன்?”
``பதற்றப்படாதே...`தெய்வம் தேடி வரும்’னு அதுக்கு பலன் வந்தது. வேடிக்கையாயில்லை!”
``அப்படியா! ஆமா... எங்கே அந்தப் புத்தகம்?’’
``நீ கேட்பேன்னு தெரியும். என் பேக்ல இருக்கு. போய் எடுத்துக்கோ. புத்தகத்தை நான் இன்னும் முழுசா படிக்கலை. சும்மா ஒரு புரட்டுதான் புரட்டினேன். அதுக்கே இந்தப் பலன். கடவுள்னு ஒருத்தர் நிஜமா இருந்தா, அவரைக் கொஞ்சமும் மதிக்காத என்னைத் தேடி வருவாரா? இதிலிருந்தே அவர் ஒரு கற்பனைன்னு உனக்குப் புரியலை?” - பாரதியிடம் கிண்டல் கொப்புளித்தது.
முத்துலட்சுமியோ அவள் பேக்கைத் தேடிச் சென்று அதில் இருந்த அந்தப் பாதாம் பேப்பர் அட்டை போட்ட புத்தகத்தை எடுத்து பரபரப்பாக விரித்துப் பார்த்தாள்.
பழைய்ய்ய புத்தகம்! மணிப்பிரவாள நடையில் எழுத்துகள். இன்றைய தலைமுறை படிக்க நேர்ந்தால், பல் உடையும். ஆனால், முத்துலட்சுமி பக்தியோடு படித்தாள். அதற்குள் சாப்பிட்டு முடித்துக் கை கழுவியவளாக அருகில் வந்து நின்றாள் பாரதி. பக்கங்களைக் கச்சிதமாய்ப் புரட்டியதில் முத்துலட்சுமியும் அந்தச் சரவண மனோ சக்கரத்திடம் வந்திருந்தாள்.
``நானும் பலன் பார்க்கட்டுமா?”
``ம்... காசா, பணமா... விளையாட்டுதானே? கண்களை மூடிக்கிட்டு விரலை வை, பார்க்கலாம்.”
``விளையாட்டெல்லாம் இல்லை. இதுக்குப் பேர் `நிமித்திகம்.’ கடவுள், நம்மோடு மறைமுகமா பேசறார்னு அர்த்தம்.”
``எதுக்கு அவர் மறைமுகமா பேசணும்... நேராவே பேசலாமே!”
``அதுசரி... அவர் கண்ணுக்குத் தெரியாத நிலையிலேயே திருப்பதியில சாமி கும்புட இருபது மணி நேரம், சபரிமலையில அதுக்குமேல... இதுல தெரிஞ்சுட்டா அவ்வளவுதான்” என்றபடியே பயபக்தியோடு கண்களை மூடிக்கொண்டு, ஆட்காட்டிவிரலால் தொட்டாள். அதே நான்காம் எண்! `தெய்வம் தேடி வரும்!’
``அப்புறம் என்ன... எதுக்கு பழநிக்கெல்லாம் போய், டயத்தை வேஸ்ட்பண்ணிக்கிட்டு? உன் வரையிலதான் இந்த விளையாட்டு உண்மையாச்சே! தெய்வம் தேடி வருதான்னு பார்த்துடுவோம்!” என்று பாரதி கூறவும், ஹாலில் இருந்த இத்தாலிய பெண்டுல கடிகாரம் ஒன்பது முறை சத்தமிட்டது.

``பாரதி... நிச்சயம் தெய்வம் தேடி வரத்தான்போகுது. ஆனா, எப்படின்னுதான் தெரியலை” என்று பரவசமானாள் முத்துலட்சுமி. அதைக் கேட்டுச் சிரித்தபடியே மாடிப்படி ஏறினாள் பாரதி.
அறைக்குள் நுழையவும் ஹாஸ்பிடலில் இருந்து கணேசபாண்டியன்தான் பேசினார்.
``பாப்பா... அய்யா கண்ணு முழிச்சா சொல்லச் சொன்னீங்க. இன்னும் முழிக்கலை. இதுக்குமேல முழிப்பார்னும் தோணலை. நாளைக்கு போன் பண்றேன்.”
``அதைவிட முக்கியம், அந்த வேங்கையன் சந்திப்பு.”
``பாப்பா...”
``எந்த எக்ஸ்கியூஸும் வேண்டாம்ணே. அப்பாவுக்கும் இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம்.”
``நான் என் வாயால எதையும் சொல்ல மாட்டேன் பாப்பா. ஆனா, எனக்கென்னவோ அந்தக் குமாரசாமி விட்ட சாபம், ரொம்ப வக்ரமாத்தான் தெரியுது. முதல்ல அய்யா... அடுத்து அந்த ரெளடிப் பய... மூணாவதா அந்த எஸ்.ஐ ரவிக்குமார்னு நினைக்கிறேன்.”
``ஓ... ஸ்டேஷன்ல குமாரசாமிய அலட்சியப்படுத்தியது அந்த ரவிக்குமாரா?”
``ஆமாம் பாப்பா.”
``அப்ப, உங்க வரையில, எல்லாத்துக்கும் காரணம் குமாரசாமி சாபம்தான்.’’
``அ... அ... ஆமாம் பாப்பா!”
``என்ன தடுமாற்றம்? முள்ளப் பிடிச்சாலும் முழுசா பிடிக்கணும்னு மதுரை பாஷையில பழமொழியெல்லாம் சொல்வீங்களே!’’
``நான்... நான் தடுமாறல பாப்பா. என் மனசுல பட்டதைச் சொன்னேன்.”
``இது எனக்குப் பிடிச்சிருக்கு. இப்படி விடுற சாபம் பலிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். பலிக்கணும்னு ஆசையும்படுறேன். ஆனா, இதை ஒரு மூடநம்பிக்கையா நினைக்காமலும் இருக்க முடியலை.”
`` `நம்பிக்கையில, நல்ல நம்பிக்கை... மூடநம்பிக்கைன்னு ரெண்டெல்லாம் இல்லைடா’ன்னு என் பெரிய அய்யன் சொல்வாரு. `மனசார நம்பணும். அவ்வளவுதான்டா’ம் பாரு.”
``இது நல்லா இருக்கே... பெரிய அய்யன்னா அது யாரு?”
``என் அப்பனுக்கு அப்பன்... தாத்தன்!”
``அப்ப `தாத்தா’னு கூப்பிடாம, அது என்ன பெரிய அய்யன்?”
``அது வந்து பாப்பா... என் ஆத்தா வழியில ஒரு தாத்தா இருக்காரு. இந்த ரெண்டு பேர்ல வயசுல பெரியவரை வித்தியாசப்படுத்தி பெரிய அய்யம்போம். பெரும்பாலும் அப்பன் வழியில வர்றவங்களை `அய்யன்’னுதான் கூப்பிடுவோம். இதுலயும் சில குடும்பங்கள்ல வேடிக்கையா `திண்ணன்’, `தடியன்’னுல்லாம் கூப்பிடுவாங்க. ஒரு தாத்தா திண்ணக் கட்டில்லயே கிடப்பாரு, மூக்குப்பொடி இருந்தா போதும் அவருக்கு. அவரு பேரு திண்ணன்! தடியும் கையுமாவே திரிவாரு ஒரு பெருசு. `நான் கட்டையாயிட்டா இந்தத் தடியையும் சேர்த்துவெச்சு எரிச்சிடுங்கடா’ன்னு அந்தத் தடிமேல ஒரு பிரியத்தோடு இருப்பாரு. இவரு பேரு தடியன்.”
``அண்ணே... உங்ககூட மதுரைக்கு வரணும். உங்க உறவுகளை எல்லாம் பார்க்கணும். வார்த்தையிலகூட ஒரு வாசனைன்னா அது உங்க பேச்சுதாண்ணே.”
``பொறவு... மருதேன்னா சும்மாவா? எல்லாம் எங்க மீனாட்சித் தாயி கருணதான். `மருதய சுத்துன கழுதகூட மருதயவிட்டுப் போவாது’ம்பாங்க பாப்பா. விடிய விடிய இட்லி கிடைக்கும், அதுவும் சூடா..! அதே மாதிரி எந்நேரமும் பாட்டு கேட்டமானிக்கே இருப்போம்... மூசிக்குன்னா* அம்புட்டு இஷ்டம். ஒரு உசுரு போச்சின்னா ஓறம்பரைக்கு (உறவுகள்) சொல்றதுக்கு முந்தி கொழாக்காரனுக்குச் சொல்லிருவோம்! அவன் வந்து கொழாய கட்டி `சட்டி சுட்டதடா... கை விட்டதடா...’ங்கிற பாடலைத்தான் முதல்ல போடுவான். அதைக் கேட்டமானிக்கு முடிவுக்கு வந்திருவாங்க, `ஏரியாவுல ஒரு பெருசு எகிறிடுச்சு’ன்னு. இதே, விசேசத்துக்குக் கட்டுன கொழான்னா, `விநாயகனே... வினை தீர்ப்பவனே...’ன்னு கோவிந்த ராசய்யா பாடுன பாட்டுதான்.”
``அண்ணே... போதுண்ணே. ரொம்ப டயர்டா இருக்கு. இன்னொரு நாள் உங்க மதுரை புராணத்தைக் கேட்டுக்கிறேன். இப்ப என்ன விட்றுங்க. ஆனா, நாளைக்கு அந்த வேங்கையனை மட்டும் விட்றக் கூடாது. ஞாபகமிருக்கட்டும்” - கட்டளைக்குரலில் சொல்லிவிட்டு, கட்டில்மேல் விழுந்தாள். இரண்டு நாளின் 48 மணி நேர கால அளவில்தான் எத்தனை எத்தனை சம்பவங்கள்? அவற்றில்தான் எத்தனை புதிர்கள்!
`ஒவ்வொரு ஜன்னல் சட்டத்தையும் மரத்துக்கு பங்கமின்றிப் பிரித்தெடுப்பது என்பது, நிச்சயம் அதைப் பதிப்பதைவிடவே கடினமான வேலைதான்’ என்று தோன்றிற்று துரியானந்தத்துக்கு.
ஜன்னல் சட்டங்கள் அவ்வளவும் இப்போதுபோல் மூணு அங்குல அகலம் என்றில்லாதபடி, ஐந்து அங்குல அகலம் மூன்று அடிக்கு இரண்டரை அடி செவ்வகம் என்று மிகத் திட்டமாய் இருந்தன. பதிக்கப்பட்ட சுவருக்குள் சிமென்ட் கலவைக்குப் பதிலாக வெந்நிறத்தில் சலித்தெடுத்த ஆற்றுமணலோடு சேர்க்கப்பட்ட சுண்ணாம்பு, விளாம்பழம், முட்டைக்கரு, கொழிஞ்சிச்சாறு வஜ்ரம் போன்ற மினார்* கட்டுமானக் கலவைகொண்டு அந்த பங்களா கட்டப்பட்டிருந்தது. ஜன்னல் சட்டத்துக்கும் அவற்றுக்குமான இணைப்புப் பட்டிகள், இரும்புக்குப் பதிலாகப் பித்தளையில் இருந்தன!
அதைப் பார்க்கப் பார்க்க, துரியானந்தத்திடம் வியப்பு. சட்டங்களைத் தூக்கிப்போய் வெளியே ஒரு டெம்போ வேனில் ஏற்றி சுகாடியா சேட்டின் குடோன் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதில் மும்முரமாய் இருந்தான் குமரேசன். அவனைக் கூப்பிட்டு சட்டங்களைக் காட்டிய துரியானந்தம் ``இப்பல்லாம் இப்படி ஒரு சட்டத்தை எந்தத் தச்சனும் செய்றதில்லை. இதெல்லாம்கூட பிளாஸ்டிக்கு, பிளைவுட்டுன்னு மாற்றம் வந்துடுச்சு. ஒவ்வொரு சட்டமும் என்னா கனம் கனக்குது பார்த்தியா?” என்று வியர்வையை வழித்துப் போட்டபடியே சொன்னான்.
``நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க நைனா... ஊட்டுக்குள்ளாரயும் ஜில்லுன்னு ஒரு குளிர்ச்சிய பார்த்தியா?”
``பார்க்காம... இதைப்போய் இடிச்சுக் கட்றாங்களேன்னு வருத்தமா இருக்குதுடா குமரேசா...”
``அது சரி... அப்படிக் கட்டாட்டி நாம எப்படி இங்க வர முடியும்? நீ உன் பழைய புத்தகக் கடையிலேயே உட்கார்ந்திருப்பே. பழசோடு பழசா நானும் உன்கூடக் கிடப்பேன்.”
``பழச மட்டமா நினைக்காதே. நமக்கு அதுதான் சோறு போடுது.”
துரியானந்தம் அப்படிச் சொன்ன அந்த நொடிப்பொழுதில், `ஸ்ஸ்ஸ்...’ என்ற ஒரு மூச்சுக்காற்று சத்தம்!
``எதுக்கு இப்ப பெருமூச்சு உடுறே?”
``நான் எங்கடா உட்டேன்..?” என்று அதற்கொரு பதில் சொல்லும்போதே மிக நீளமாய் திரும்பவும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! சத்தம் இருவரிடமின்றிப் பக்கவாட்டில் வருவதை யூகித்துத் திரும்பிப் பார்த்தபோது பகீரென்றது இருவருக்கும்!

அந்த அறையின் ஈசான்ய மூலையில் உருண்ட பிடியுள்ள நான்கு அடி உயர கைத்தடி ஒன்று எந்தப் பிடிமானமும் இன்றித் தரைமேல் நிற்பதுபோல் அந்த 12 அடி நீள நாகம் நான்கு அடிக்கு எழும்பி நின்ற நிலையில் படம் விரித்திருந்தது! அதன் உருண்ட கருமணி விழிகளில் ஒரு குத்துப்பார்வை... அவ்வப்போது வெளிப்படும் இரட்டை நாக்கிடம் ஒரு மின்னல் வேகம்!
துரியானந்தமும் குமரேசனும் உறைந்துபோய் கழுத்தை வியர்வைநீருக்குக் கொடுத்ததில் ஒரு பாத்திரத்தில் பிடிக்கும் அளவுக்கு அதனிடம் ஓட்டம்.
``ந... ந... நைனா...’’ என்று குமரேசனும், ``கு... கு... குமரு’’ என்று துரியானந்தமும் மென்குரலில் தந்தியடித்திட இடையில் டமால் என ஒரு சத்தம்!
வெளியே தோட்டப் பகுதிக்குள் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தைத்தான் வெட்டித் தள்ளியிருந்தனர். அது தரைமேல் விழுந்த சத்தம்தான் அப்படிக் கேட்டது. சத்தம் கேட்டு தங்களையறியாமல் திரும்பியவர்கள், புழுதி வாசத்தையும் உணர்ந்தனர். அதன்பொருட்டு கலைந்து மூக்கைக் சிணுப்பிக்கொண்டே திரும்பியபோது அந்தப் பாம்பைக் காணவில்லை! சற்று ஹக்கென்றிருந்தது!
``நைனா, அத்த காணோம்.”
``சத்தம் கேட்டு ஓடிடிச்சாட்டம் தெரியுது.”
``எங்கயாவது பதுங்கி இருந்து போட்றப்போவுது நைனா.”
``நல்லா பாரு... போயிடுச்சா இல்லை எங்கயாவது ஏறிக்கிட்டிருக்குதா..?’’ இருவரும் ஆளுக்கொரு பக்கமாகப் பார்த்தனர். அப்படியே நடந்தனர். கீழே இழைப்புளி கிடந்து அது கட்டைவிரலுக்குக் கீழே இடுக்கான பாகத்தில் படவும் வேகமாய் காலை உதறினான் குமரேசன்.
அந்த மைக்ரோ நொடியில் இழைப்புளியும் அவன் கட்டைவிரல் இடுக்கைக் கீறி ரத்தம் துளிக்கச் செய்துவிட்டது. பயத்திலும் பதற்றத்திலும் அதை உணராமல் நடந்த குமரேசனின் கட்டைவிரல் ரத்தம், ஏதோ பத்திரக் கீறல்போல அந்தத் தரைப் பரப்பில் பதிவாகத் தொடங்கியது.
`டொம்’ என்று ஒரு சத்தமும் கேட்டது. கால் பதித்த தரைப்பரப்பில் தரையோடு தரையாக ஒரு மரச்சட்டம் இருந்து, கீழே ஒரு பாதாள அறை இருப்பதை உணர்த்தியது. விரல் பதித்துத் தூக்குவதற்குத் தோதாக வெட்டப்பட்ட இரு துவாரங்கள்! அதில் விரல் பதித்துப் பலகையைத் தூக்கவும், அதுவரை இல்லாதபடி குப்பென்று ஒருவித விபூதி வாசம் அங்கே பரவத் தொடங்கியது!
- தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்
* மூசிக் - Music, Minar - மினார் (சார்மினார்)