சமூகம்
Published:Updated:

போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?

போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?

போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?

மிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான ராஜேந்திரனின் பதவிக்காலம் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், அடுத்ததாக அந்தப் பதவிக்கு வரப்போவது யார் என்பது பற்றி தமிழக போலீஸ் துறையில் பரபரப்பாகப் விவாதிக்கப்படுகிறது. அந்தப் பதவியைக் குறிவைத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் இப்போதே ரேஸ் தொடங்கிவிட்டது.

டி.ஜி.பி-யான ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு, வரும் பிப்ரவரியில் வெளியிடப்படலாம். அப்போது தேர்தல் கமிஷன் ‘டி.ஜி.பி - தேர்தல் பணி’ என்கிற பெயரில் வேறு யாரையாவது நியமிக்கும். மே மாதம் இறுதியில் தேர்தல் முடிவுகள் வரும் வரையில் இந்தப் பதவியில் இருப்பவர்தான் சகல அதிகாரமும் படைத்தவராக இருப்பார்.

போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம், “சில மாநிலங்களில், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி பதவியில் இருப்பவர், தங்களுக்கு வேண்டப்பட்டவர் என்றால், அந்த மாநில அரசுகள் அவர் ஓய்வுபெறும் நாளை மனதில் வைத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பதவி நீட்டிப்பு செய்துவந்தன. தமிழகத்திலும் இதற்கு முன்பு ராமானுஜம், ராஜேந்திரன் ஆகிய இருவரும் அந்த அடிப்படையிலேயே பதவிநீட்டிப்புப் பெற்றனர். இதனால், சீனியர் அதிகாரிகள் பலரும் பாதிக்கப்பட்டனர். அதனால், ‘அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள், குறைந்தபட்சம் ஓர் ஆண்டு சர்வீஸ் இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாகப் பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்’ என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சொல்கிறது. தற்போதைய நிலையில், தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி-களில் சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி பதவி யாருக்குக் கிடைக்கும் என்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது” என்றார்.

தமிழ்நாடு காவல் துறையில் 1986-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்து, தற்போது கூடுதல் டி.ஜி.பி-களாகப் பதவியில் இருக்கும் ஆறு பேரை டி.ஜி.பி-க்கான தகுதிப் பட்டியலில் கடந்த வாரம் தமிழக அரசு சேர்த்தது. இவர்களை வருகிற பிப்ரவரி முதல் வாரத்துக்குள் டி.ஜி.பி பதவியில் அமர்த்த ஏற்பாடுகள் நடக்கின்றன. முதற்கட்டமாக, அவரவர் இருக்கும் கூடுதல் டி.ஜி.பி பதவியை, டி.ஜி.பி-யாக உயர்த்தி, அங்கேயே பணியாற்ற வைக்கும் எண்ணமும் தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்தகட்டமாக, முக்கியப் பதவிகளில் படிப்படியாக அமரவைப்பார்கள். இந்த வகையில், டி.ஜி.பி அந்தஸ்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி, போலீஸ் பயிற்சி டி.ஜி.பி., காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆகிய மூன்று டி.ஜி.பி பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த மூன்று பதவிகளைத் தவிர, இந்த வருடத்தில் மகேந்திரன், ஜாங்கிட், காந்திராஜன் மூவரும் பணி ஓய்வுபெறுவார்கள்.

1986 பேட்ச் ஐ.பி.எஸ்-களில் முதலில் இருப்பவர் ஜாபர் சேட். தி.மு.க ஆட்சியில் உளவுத்துறை தலைமைப் பதவியில் இருந்தவர். அதனால், ஜெயலலிதாவின் கோபப்பார்வைக்கு ஆளானவர். இவரை விரைவில் முக்கியப் பதவியில் அமரவைப்பதற்கு, தற்போது பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள முக்கிய அதிகாரி ஒருவர் நினைக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதே அவரின் நோக்கம் என்கிறார்கள். வரும் பிப்ரவரியுடன்  ஆஷிஸ் பாங்க்ரா ஓய்வுபெறுகிறார். அதற்கு முன்பே, டி.ஜி.பி பதவியில் அமர வேண்டும் என்று அவருக்காக டெல்லியில் நடந்த லாபியில்தான் ஃபைல் மூவ் ஆகி, இறுதிக்கட்டத்தை அடைந்ததாம். அவர் செய்த முயற்சியால்தான், 1986 பேட்ச் ஐ.பி.எஸ்-கள் ஆறு பேரும் டி.ஜி.பி பதவியில் உட்காரப்போகிறார்களாம். இந்த போலீஸ் ரேஸில் திரிபாதி, ஜாபர் சேட், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா இவர்களில் ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் அடிக்கலாம்!

- சூரஜ்

தற்போதைய தமிழக டி.ஜி.பி-க்கள் ஓய்வுபெறும் மாதங்கள்:

1. ராஜேந்திரன்: டி.ஜி.பி - சட்டம் ஒழுங்கு (பதவிநீடிப்பு) - 2019, ஜூன்.

2. மகேந்திரன் (1984): இயக்குநர் - தீயணைப்பு மற்றும் மீட்புப் படை - 2019, பிப்ரவரி.

3. ஜாங்கிட் (1985): விஜிலென்ஸ் தலைமை அதிகாரி - சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் - 2019, ஆகஸ்ட்.

4. திரிபாதி (1985): இயக்குநர் - சீருடைப் பணியாளர் தேர்வாணையம் - 2020, மே.

5. காந்திராஜன் (1985): டி.ஜி.பி - மாநில மனித உரிமைகள் ஆணையம் - 2019, அக்டோபர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி தகுதிப்பட்டியலில் (1986 பேட்ச்) உள்ளவர்கள் ஓய்வுபெறும் மாதங்கள்

1. ஜாபர் சேட்: கூடுதல் டி.ஜி.பி - போலீஸ் அகடமி - 2020, டிசம்பர்.

2. ஸ்ரீலட்சுமி பிரசாத்: கூடுதல் டி.ஜி.பி - விஜிலென்ஸ், தமிழக மின்சாரத்துறை - 2020, மே.

3. அசுதோஷ் சுக்லா: கூடுதல் டி.ஜி.பி - சிறைத்துறை - 2021, ஜனவரி.

4. மிதிலேஷ் குமார் ஜா: மத்திய அரசுப்பணி - 2021, ஜூலை.

5. தமிழ்செல்வன்: கூடுதல் டி.ஜி.பி - போலீஸ் தொழில்நுட்பப்பிரிவு - 2021, மே.

6. ஆஷிஸ் பாங்க்ரா: கூடுதல் டி.ஜி.பி - கமாண்டோ போலீஸ் பிரிவு - 2019, ஜூன்.