தொகுதிகளின் ஜாதகம்... வேட்பாளர்களுக்கு சாதகம்! - வந்துவிட்டது நுண்ணறிவு சாஃப்ட்வேர் 2.0

தொகுதிகளின் ஜாதகம்... வேட்பாளர்களுக்கு சாதகம்! - வந்துவிட்டது நுண்ணறிவு சாஃப்ட்வேர் 2.0
எந்தத் தொகுதியில், எந்தக் கட்சி வேட்பாளர் ஜெயிப்பார், வெற்றி சதவிகிதம் அதிகமுள்ள தொகுதி எது, நூலிழையில் வெற்றியைத் தவறவிடக்கூடிய தொகுதிகள் எவை, சாதகமான பூத்கள் எத்தனை, பாதகமான பூத்கள் எத்தனை? அரசியல் கட்சியினரின் மண்டையைக் குடையும் கேள்விகள் இவை. இவற்றுக்கெல்லாம் முன்கூட்டியே விடை தெரிந்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் நுண்ணறிவு சாஃப்ட்வேர் 2.0 பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஜனநாயகத்தின் ஆணிவேர் தேர்தல்தான். அரசியல் கட்சிகளின் அதிகாரத்துக்கு அச்சாரமும் தேர்தல்களே. அத்தகையத் தேர்தல்களில் வெற்றிவாய்ப்புகளை முன்னதாகத் தெரிந்துகொள்ள ஏகத்துக்கு மெனக்கெடுகின்றன கட்சிகள். ஆரம்பத்தில் பூத் வாரியாகத் தங்களுக்கான வாக்குகள் எத்தனை, எதிரணிக்குப் போகும் வாக்குகள் எத்தனை, நடுநிலைமையான வாக்குகள் எத்தனை எனத் தொண்டர்கள் உதவியுடன் தெருத்தெருவாகச் சென்று, பல நாள்கள் உழைத்து ஒரு ஃபார்முலாவை வகுத்தன. அதற்கேற்ப வியூகங்கள் வகுக்கப்பட்டன. கருத்துக்கணிப்புகளையும் நடத்தின. இந்த முயற்சிகளால் ஓரளவுதான் பலன் கிடைத்தது.

அடுத்ததாக, டிஜிட்டல் யுகம் வந்தது. சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி ஒபாமா, ட்ரம்ப் போன்றவர்கள் முடிவுகளை ஓரளவு கணித்தார்கள். மோடியும் தேர்தல் ஆலோசகர்களை நியமித்து, சமூகவலைதளங்கள் மூலம் வெற்றிவாய்ப்புகளையும் முடுக்கிவிட்டு, பிரதமர் கனவைச் சாத்தியப்படுத்தினார். ஆனால், சமீபகாலமாக நாளுக்குநாள் மாறும் சமூகவலைதளங்களின் டிரெண்டுகளை வைத்து, முடிவுகளைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. எனவே, தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உலக அளவில் பிரபலம் அடைந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் மென்பொருள் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறது. ‘செயற்கை நுண்ணறிவு 2.0’ என்கிற அந்த சாப்ட்வேர் வேட்பாளர்களுக்கு விரல் நுனியில் தேர்தல் வியூகங்களைச் சொல்கிறது. அ.தி.மு.க-வில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக இருந்த அஸ்பயர் சுவாமிநாதனின் குழுதான் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் முதன்முறையாகத் தகவல் தொழில்நுட்பப் பிரிவைத் தொடங்கியது அ.தி.மு.க. அப்போது அதன் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அஸ்பயர் சுவாமிநாதன். அவர் உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்தித்தான் 2014 நாடாளுமன்றம் மற்றும் 2016 சட்டசபைத் தேர்தல்களை அ.தி.மு.க எதிர்கொண்டது. அந்தத் தேர்தல்களில் அவர், ‘எந்தெந்தத் தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ளவை, ஒரு சதவிகிதம் அல்லது அதற்கும் கீழான சதவிகிதத்தில் வெற்றியை இழக்கும் தொகுதிகள் எவை?’ என்றெல்லாம் புள்ளிவிவரங்களை வழங்கினார். அதன் அடிப்படையில் பலவீனமான தொகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கே கூடுதல் கவனம் செலுத்தினார்கள். அந்த இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு அந்த மென்பொருளும் காரணமாக இருந்தது. அந்த மென்பொருளின் 2.0 வெர்ஷன்தான் ‘செயற்கை நுண்ணறிவு 2.0’.

அஸ்பயர் சுவாமிநாதனிடம் பேசினோம். “செறிவூட்டப் பட்டுள்ள இந்த மென்பொருள் வெற்றி வாய்ப்புள்ள, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள், அதற்கான காரணங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் தெரு வாரியாக உள்ள வாக்காளர்கள் குறித்த விவரங்கள், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர், அரசின் எந்தெந்தத் திட்டங்களில் அவர் பயனடைந்திருக்கிறார் போன்ற புள்ளிவிவரங்களை வழங்கும். அத்துடன், தொகுதியில் வேட்பாளருக்கு இருக்கும் செல்வாக்கையும், அதிருப்தியையும் எடுத்துச்சொல்லும். ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் குறித்து, கடந்த காலத்தில் சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ்கள், செய்திப் பதிவுகள், ஊடகங்களில் வெளியான செய்திகள், அதுகுறித்த மக்களின் எதிர்வினை போன்றவற்றை கணக்கிட்டு இந்த முடிவுகள் வெளியிடப் படுகின்றன.

இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகள் நடைபெற்ற தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை உள்ளடக்கி இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த மென்பொருள், கடந்தகால மத்திய, மாநில, உள்ளூர் அரசியல் சூழ்நிலைகள், தொகுதியின் பிரச்னைகள், மக்களின் மனநிலை, தற்போதைய அரசியல் சூழல், தொகுதியில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் தகுதி ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, அதன் அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள், கட்சிகள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கும். அத்துடன், கட்சிகள் தங்களது பிரசார உத்திகளை எப்படி வடிவமைப்பது, தொகுதியில் மக்களின் தேவைகள் என்ன போன்றவற்றை வழங்கி அதன் மூலம் ஓரளவுத் துல்லியமான தேர்தல் முடிவுகளைத் தெரிவிக்கும்’’ என்றார் சுவாமிநாதன்.
எல்லாம் சரி, கடைசி நேரத்தில் 20 ரூபாய் டோக்கன்கள் களத்தில் விசிறியடிக்கப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதையும் சேர்த்தே சொல்லுமா இந்த சாஃப்ட்வேர்?!
- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி