மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்! - ராதிகா

1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
News
1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan ( அவள் விகடன் )

அவர் என் லைஃப்ல என்ட்ரி ஆகாம இருந்திருந்தால், நடிகை ராதிகாவைப் பார்த்திருக்கவே முடியாது.

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில் ராதிகா.

1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
அவள் விகடன்

`நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாரிசு. தமிழ் சினிமா கண்டெடுத்த திறமையான நடிகை. உடலமைப்பு, நிறம் என நாயகிகளுக்கு எழுதப்பட்ட விதியை மாற்றி, முத்திரை பதித்தவர். சின்னத்திரையில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கியதோடு, சீரியல் தயாரிப்புக்கே முன்னோடிப் பாதை அமைத்துத் தந்தவர். இன்றும் 20 வயது துடிப்புடன் கலக்கிக்கொண்டிருக்கிறார். தன் வெற்றிப்பயணம் குறித்து மனம்திறந்து பேசுகிறார், நடிகை ராதிகா!

எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்!

`எதுக்கு சினிமா? அது என்னோடு போகட்டும்; அந்தப் பைத்தியக்காரத்தனம் என் குடும்பத்துல யாருக்கும் வேண்டாம். வாழ்க்கையில முன்னேறப் பாருங்க’னு அப்பா அடிக்கடி சொல்வார். நாங்க சினிமா பார்க்கிறதைக்கூட விரும்ப மாட்டார். அப்பா வெளியூர் போயிட்டா, அம்மா எங்களை சினிமாவுக்குக் கூட்டிப்போவாங்க. அப்போ அப்பாவின் பயணம் பாதியில் ரத்தாகி அவர் வீட்டுக்கு வந்துட்டு இருக்கிற தகவல் கிடைக்கும். உடனே பதறிப்போய், வீட்டுக்கு ஓடி வருவோம். ஆனா, சில ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு என்னை அழைச்சுக்கிட்டுப் போயிருக்கார்.

நடிப்பு, கலர், ஸ்டைல்னு எம்.ஜி.ஆரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவரை நேர்ல பார்க்க ஆசைப்பட, `பெற்றால்தான் பிள்ளையா’ படப்பிடிப்புக்கு அப்பா என்னைக் கூட்டிட்டுப்போனார். எம்.ஜி.ஆர், என்னைத் தூக்கிக் கட்டிப்பிடிச்சு கன்னத்துல முத்தம் கொடுத்தார். சந்தோஷத்துல மூணு நாள் முகம் கழுவாம இருந்தேன். அப்போ, அப்பாகூட நிறைய மேடை நாடகங்கள் பார்க்கப் போவேன். அப்பாவின் புகழையும் பார்த்திருக்கிறேன். ஆனாலும், சினிமா மேல எனக்கு ஈர்ப்பு வரலை.

ஹாஸ்டல் வாழ்க்கை... அப்பாவின் அடி!

1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
அவள் விகடன்

எம்.ஜி.ஆரைச் சுட்டது தொடர்பா அப்பா சிறைக்குப் போன பிறகு, குடும்பச் சூழல்கள் மாறிடுச்சு. பாதுகாப்பு மற்றும் படிப்புச் சூழல் கருதி, அம்மா எங்களை இலங்கைக்கு அனுப்பிட்டாங்க. அப்பா விடுதலையானதும் மீண்டும் சென்னை வந்தோம். எமர்ஜென்சி தருணத்துல அப்பா மீண்டும் சிறைக்குச் செல்ல, மறுபடியும் இலங்கையில வசிச்சேன். பிறகு மீண்டும் சென்னை, அப்புறம் லண்டன்னு மாறி மாறி வசிச்சேன். என் படிப்பு காலம் முழுக்க ஹாஸ்டலில்தான் வளர்ந்தேன்.

அப்பா, மூடநம்பிக்கைக்கு எதிரானவர். ஆனா, அவர் எண்ணத்தை எங்க மேல திணிக்கமாட்டார். என் மேல அதிக பாசமா இருப்பார். அம்மா வெளியே கிளம்பும் போதெல்லாம், பயமில்லாம அவங்க காரைத் துரத்திக்கிட்டே ரோட்டுல ஓடுவேன். அதை ஒருமுறை பார்த்த அப்பா, என் முடியைப் பிடிச்சு இழுத்து, ஓங்கி அடிச்சார். அதுதான் முதலும் கடைசியுமா அப்பாகிட்ட நான் அடிவாங்கிய சம்பவம்.

சின்ன வயசுல பயங்கரமா சேட்டை பண்ணுவேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்ஸோடு தெருவுல கில்லி, பம்பரம், கிரிக்கெட்னு தர லோக்கலாவும் விளையாடுவேன். குழந்தைப் பருவத்தை இப்படி இயல்பாகவும் சந்தோஷமாகவும் அனுபவிச்சேன். 

எதிர்பாராத என்ட்ரி!

1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
அவள் விகடன்

லண்டன்ல படிச்சுக்கிட்டிருந்தபோது, விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தேன். எங்க பக்கத்து வீட்டுல யாரையோ பார்க்க வந்த பாரதிராஜா சார், அங்கிருந்த என் போட்டோவைப் பார்த்திருக்கிறார். என்னைப் பத்தி விசாரிச்சுட்டு உடனே எங்க வீட்டுக்கு வந்தார். செடிக்குத் தண்ணீர் ஊத்திகிட்டு இருந்த நான், அவரைப் பார்த்ததும் வீட்டுக்குள் ஓடிப்போயிட்டேன். என் அம்மாகிட்ட, என்னை நடிக்கக் கேட்டார். அப்போ என் தங்கை நிரோஷாதான் நடிக்கணும்னு ஆசைப்படுவா. `நான் ஹீரோயின் மெட்டீரியலே இல்லை. நடிச்சா, என் முகத்தை யார் பார்ப்பாங்க?’னு கேட்டேன். சிரிச்சவர், `சரியா வரும்’னு சொன்னார். `சும்மா நடிச்சுப் பாரு’னு அம்மாவும் சொல்ல, `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கமிட்டானேன். ஷூட்டிங் போனபோதுதான், நான் எம்.ஆர்.ராதாவோட பொண்ணுன்னு பாரதி ராஜா சாருக்குத் தெரியவந்து, அதிர்ந்தார்.

முதல் நாள் ஷூட்டிங். மலை மேல, காலில் செருப்பு இல்லாம, என்னை மான் மாதிரி ஓடிவரச் சொன்னார் பாரதிராஜா சார். காலில் முள் குத்தி வலியில, `நான் நடிக்க மாட்டேன்’னு அழுதேன். அப்போ, ரொம்ப வெகுளித்தனமாவும் விளையாட்டுத்தனமாவும் இருப்பேன். என்னை நடிக்கவைக்க டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் எனக்கு பொம்மை, சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்துவாங்க. தமிழ் தெரியாது. கோபம் வந்தா, இங்கிலீஷ்ல திட்டுவேன். ஷூட்டிங் ஸ்பாட்ல, கால் மேல கால் போட்டு உட்காருவேன். அது பாரதிராஜா சாருக்குப் பிடிக்காது. `என் கால் மேலதானே கால் போட்டேன்?’னு கேட்பேன். சரியா ஃபீல் பண்ணி நடிக்க, டான்ஸ் ஆட சிரமப்பட்டேன். ஒருநாள் பாரதிராஜா சார் கோபமாகி மலைமேல போய் பாறையில தலையை முட்டிக்கிட்டு இருந்தார். நான் அவர் பக்கத்துல போய், `என்ன சார் பண்றீங்க?’னு வெகுளித்தனமா கேட்டேன். ‘என் தலையெழுத்து’னு சொல்லிட்டு மறுபடியும் பாறையில முட்டிக்கிட்டார். இப்படியெல்லாம் அவரைக் கொடுமைப்படுத்தியிருக்கேன். அந்தப் படத்தின் அசோஸிசியேட் டைரக்டரான பாக்யராஜ் சார் சொல்றதையும் கேட்காம, அவரையும் ரொம்பக் கடுப்பேத்தியிருக்கேன். நிறைய டேக் எடுத்து ஃபீல் பண்ணுவேன். `சிவாஜி கணேசன் சாரே, பத்து டேக் வரை எடுத்திருக்கார். உன்னால நல்லா நடிக்க முடியும்’னு பாரதிராஜா சார் தட்டிக் கொடுப்பார். பிற்காலத்துல சிவாஜி சாருக்கே ஜோடியா நடிச்சேன்.

10 ஆண்டுகள்... 100 படங்கள்!

`கிழக்கே போகும் ரயில்’ பெரிய ஹிட்டானதால், தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. என் முதல் படத்தைப் பார்த்து சந்தோஷப்பட்ட அப்பா, ரெண்டாவது படம் ரிலீஸாகும்போது உயிருடன் இல்லை.

தெலுங்கிலும் நடிக்க ஆரம்பிச்சேன். சிரஞ்சீவியுடன் அதிகப் படங்களில் ஜோடியா நடிச்சது நான்தான். அந்தத் தருணத்துல, `பூசணிக்காய் மாதிரி இருக்கீங்க’, ‘கலர் கம்மியா இருக்கீங்க’னு நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டேன். அதுக்காகவெல்லாம் நான் கலங்கி உட்காரலை. எடையைக் குறைச்சேன்; மேக்கப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன்; சூழலுக்கு ஏற்ப டிரஸ் பண்ணிக்கப் பழகினேன்; பல மொழிகளைக் கத்துக்கிட்டேன்; கேரக்டருக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்தப் புரிஞ்சுக்கிட்டேன்.

ரஜினிகாந்த்துடன் நிறைய படங்கள்ல ஜோடியா நடிச்சேன். கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு தவறிட்டே போச்சு. `முதல் மரியாதை’, `ஸ்வாதி முத்யம்’னு ரெண்டு பட வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்தது. `ஸ்வாதி முத்யம்’ படத்தைத் தேர்வு செய்தேன். அந்தத் தெலுங்குப் படம்தான் தமிழில், `சிப்பிக்குள் முத்து’வாக வெளியாச்சு. `முதல் மரியாதை’ படத்துல நடிக்கலைன்னாலும், அதில் ராதாவுக்கு என்னை டப்பிங் பேச வெச்சார், பாரதிராஜா சார்.

1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
அவள் விகடன்

`ஆஜ் கா அர்ஜுன்’ இந்திப் படத்துல அமிதாப்பச்சனுக்கு ஜோடியா நடிச்சது எப்போதும் ஸ்வீட் மெமரீஸ். சாப்பாடு, தூக்கம் இழந்து ஓடி ஓடி நடிச்சேன். ரொமான்ஸ், பாட்டுக்கு மட்டும் வந்துபோகிற ரோல்ல நான் நடிக்கலை. ஒவ்வொரு படத்திலும் ஹீரோவுக்கு உண்டான அதே வலுவான ரோல் எனக்கும் இருக்கும்படியா பார்த்து நடிச்சேன். `நல்லவனுக்கு நல்லவன்’ல நடிக்கும்போது, `இப்போவே ஏன் வயசான ரோல்?’னு பலர் கேட்டாங்க. `எனக்குக் கதைதான் முக்கியம். இது என் முடிவு’னு துணிச்சலா நடிச்சேன். அதனாலதான் இப்போதும் என்னை மக்கள் மறக்காம இருக்காங்க. 1980-களில் நூறு படங்களுக்கு மேல ஹீரோயினா நடிச்சேன். 1990-களிலும் நிறைவா நடிச்சேன்.

டிசம்பர் 31 மனநிலை!

ஒரு படத்தின் வெற்றி, தோல்வி... அதனால் உண்டாகும் தாக்கம்னு சினிமா உலகத்தைக் கொஞ்ச காலத்துலேயே புரிஞ்சுகிட்டேன். சினிமாவுல ஒரு நடிகை தன் கிராஃப்பை ஏறுமுகத்துல வெச்சுக்கிறது பெரிய சவால்தான். இனி நாம எப்படி இருக்கணும்? யோசிச்சேன். அப்பாவுக்கு எழுத, படிக்கத் தெரியாது. ஆனால், தைரியத்துடன் தன்னை வெளிப்படுத்தியவர். என் அம்மா போராட்டக்குணம் கொண்டவர். இருவரின் அனுபவத்தையும் பார்த்துக் கத்துகிட்டது தவிர, சினிமா உலகின் நெளிவுசுளிவுகளால் என்னைப் புதுப்பிச்சுக்கிட்டேன். எதுக்கும் பயப்படாம, தைரியமா செயல்பட முடிவெடுத்தேன். அதனால, என்னைத் திமிரு பிடிச்சவனு சொல்வாங்க. போல்டான குணம், எனக்கு ஒரு வகையில பாதுகாப்பு அரண். அவங்கவங்க வேலையைச் சரியா செய்யணும்; கொடுத்த வாக்குறுதியைக் காப்பாத்தணும்; பொய் பேசக் கூடாது... இவை என் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை ரெண்டுக்கும் பொருந்தும். மீறினால், யாரா இருந்தாலும் நிச்சயம் கோபப்படுவேன்.

ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 31-ம் தேதியுடன், `இந்த வருஷத்தோடு என் சினிமா கரியர் முடிஞ்சுடணும்’னு நினைப்பேன். ஆனா, அப்போ என் வாழ்க்கையில புதுசா ஒரு மாற்றம் வந்துடும். இப்படியே, 40 வருடங்கள் ஓடிடுச்சு; நடிப்புக்கு பிரேக் எடுக்கவே முடியலை.

கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்துப் பெருமைப்படவும் மாட்டேன்; வேதனைப்படவும் மாட் டேன். `உனக்குக் குறிக்கோள் இல்லை’னு என் அம்மா அடிக்கடிச் சொல்வாங்க. அது ரொம்ப உண்மை. எதிர்காலத்தைப் பத்தி நான் நினைக்க மாட்டேன். சினிமா மற்றும் பர்சனல் வாழ்க்கையில், நிறைய ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கேன்; கலங்கியிருக்கேன். அந்தப் பக்குவத்தில், எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் எல்லாத்தையும் பத்து நிமிஷத்துல கடந்து போயிடுவேன்.

எனக்கும் ஓய்வு, அமைதி அவசியம்தான். என் குழந்தைகள் மற்றும் கணவருடன் செலவிடும் நேரம், பியானோ வாசிக்கிறது, சமைக்கிறது, உடற்பயிற்சி செய்றதெல்லாம் எனக்கான புத்துணர்ச்சி நேரங்கள்.

1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
1980s evergreen Heroins - Raadhika - Aval Vikatan
அவள் விகடன்

அரசியலும் அறிவேன்!

அரசியல் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும். 1989-ல் தொடங்கி, பலமுறை தேர்தல் பிரசாரம் செய்திருக்கேன். என் கணவர் சரத்குமார், ஓர் அரசியல் கட்சியின் தலைவர். அவருக்குத் துணையாக இருக்கேன். என்னைத் தேடி வந்த பதவிகளையும் தவிர்த்துட்டேன். தவிர, நேரடி அரசியல்ல ஈடுபடும் ஆர்வமும் அதற்கான தேவையும் எனக்கு இப்போ வரலை. வரும்பட்சத்தில், நிச்சயம் வருவேன். அதில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதையும் எதிர்கொள்ளத் தயார்.

என் முடிவு... என் கையில்!

ஆண் பெண் என்ற பாகுபாடு எனக்குப் பிடிக்காது. யாரா இருந்தாலும், திறமைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணும். ஒரு நடிகை எவ்வளவு திறமையை வெளிப்படுத்தினாலும், அது ஹீரோக்களின் படமாகவே பார்க்கப்படுது. என் இடத்துல ஒரு நடிகர் இருந்திருந்தால், அவரை இந்த சினிமா உலகம் கொண்டாடியிருக்கிற விதமே வேற. ஒரு நடிகைக்குக் கல்யாணமானதும், அக்கா, அண்ணி, அம்மானு கேரக்டர் ரோல்கள்ல முத்திரை குத்திடுறாங்க. என் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிற முடிவும் அதிகாரமும் எங்கிட்ட இருக்கணும்னு முடிவெடுத்தேன். அதனாலதான் சின்னத்திரைக்கு வந்தேன்.

`சித்தி’யில தொடங்கி, `சந்திரகுமாரி’ வரை... 21 வருஷங்களா மக்கள் என் நடிப்பு மற்றும் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. அதற்கான நன்றிக்கடனாகத்தான், நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு சீரியலைவிட இன்னொரு சீரியல் சிறப்பா இருக்கும்படி பார்த்துக்கிறேன். அதுதானே என் அனுபவத்துக்குப் பொருத்தமா இருக்கும்!

நடிகை, தயாரிப்பாளர், ராடன் நிறுவன சிஇஓ, குடும்பம்னு பல பொறுப்புகள்ல கவனம் செலுத்துறேன். கொஞ்சம் சிரமம்தான் என்றாலும், எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும். என் வாழ்க்கையை, என் முடிவுகளை மத்தவங்க தீர்மானிப்பதை எப்போதும் ஏத்துக்க மாட்டேன். என் வேலையைச் சிறப்பா செய்வேன். அதில் வரும் பாசிட்டிவ், நெகட்டிவ் எதுவானாலும் அதுக்கு முழுப் பொறுப்பையும் நானே ஏத்துப்பேன். இதுதான் ராதிகா!

-கு.ஆனந்தராஜ்

படங்கள் : தே.அசோக்குமார்

- நாயகிகள் பேசுவார்கள்!

தாய்மையும் இரண்டாவது இன்னிங்ஸும்!

கள் ரேயான் பிறந்ததும், `இனி நடிப்பு வேண்டாம்’னு நினைச்சேன். ஹாஸ்பிடல்ல என்னைப் பார்க்க வந்த பாரதிராஜா சார், `என் புதுப்படத்துல நீ நடிக்கணும்’னு கேட்டார். மறுத்தேன். `இந்தக் கேரக்டரில் உன்னைத் தவிர யாராலும் நடிக்க முடியாது’னு என்னைக் கட்டாயப்படுத்தி, `கிழக்குச் சீமையிலே’ படத்தில் நடிக்க வெச்சார். குழந்தையைக் கவனிச்சுக்கவும் தாய்ப் பால் கொடுக்கவும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். மகளைத் தொட்டிலில் தூங்க வெச்சுட்டு, நடிப்பேன். சிரமம் இருந்தாலும், அந்தப் படம் மனசுக்கு நிறைவைக் கொடுத்தது. சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸும் வெற்றியுடன் தொடங்கியது. இதற்குக் காரணம், பாரதிராஜா சார். அவர் என் லைஃப்ல என்ட்ரி ஆகாம இருந்திருந்தால், நடிகை ராதிகாவைப் பார்த்திருக்க முடியாது.