மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள்: பொம்மி - திம்மி - 22

Human Gods Stories - Pommi - Thimmi
பிரீமியம் ஸ்டோரி
News
Human Gods Stories - Pommi - Thimmi

`நம்ம வாழ்வாதாரமே இந்தப் பசுக்கள்தான்.

முத்துப்பய இருக்கானே, மகா கெட்டிக்காரன். ஆறு அண்ணனுங்களுக்குப் பிறகு பெறந்த கடைக்குட்டிப் பய. வீட்டுக்கே செல்லப்புள்ள. முத்துவோட அப்பங்காரன் அந்த ஊர்ல பெரிய பணக்காரன். ஏகப்பட்ட நெலபுலங்க கெடக்கு. ஊர்லயும் பெரிய மரியாதை.

அறுபத்து நாலு கலைகள்னு சொல் வாங்களே... எல்லாத்திலயும் ஆழங்கால்பட்ட பயலா இருந்தான் முத்து. குறிப்பா, மல்யுத்தம், வாள் சண்டையில அவனை மிஞ்ச அந்த வட்டாரத்துலயே ஆளில்லை. ஓலைச் சுவடிகளையெல்லாம் படிச்சு மந்திரம், மருத்துவம்னு எல்லாத்தையும் கத்து வெச்சிருந்தான்.

முத்துவுக்கு ரொம்பநாளா ஆசை... அந்தூரு ராஜாகிட்ட தன் தெறமைகளைக் காமிச்சு பரிசு வாங்கணும்னு. அப்பனுக்கும் அண்ணங்காரனுகளுக்கும் தெரிஞ்சா விட மாட்டானுக. ஒருநாளு, யாருக்கும் தெரியாம வீட்டைவிட்டுக் கிளம்பிட்டான். கிராமத்துல இருந்து தொலைதூரத்துல இருந்துச்சு அரண்மனை.

காடு, மலைன்னு எல்லாத்தையும் கடந்து ஒருவழியா அரண்மனைக்குப் போயி, ராஜாகிட்ட பாட்டு, கவிதை, கூத்துன்னு எல்லாத்தையும் செஞ்சு காமிச்சான் முத்து. ராஜாவுக்கு அவனை ரொம்பப் புடிச்சுப் போச்சு. ‘இவ்வளவு திறமைசாலியா இருக்கானே’னு நிறைய வெகுமதிகளைக் கொடுத்து அரண்மனையிலயே வேலையும் போட்டுக் குடுத்துட்டாரு.

Human Gods Stories - Pommi - Thimmi
Human Gods Stories - Pommi - Thimmi

முத்துவுக்குப் பெருமை தாங்கலே. தன் கலையை மதிச்சு ராஜா பொன்னும் பொருளும் கொடுத்ததோடு வேலையும் கொடுத்துட்டாரே... சந்தோஷமா வேலை பாத்துக்கிட்டிருந்தான்.

ஊருல ஒரே களேபரம். தம்பியைக் காணலேனு அண்ணங்காரனுங்க துடிச்சுப் போயிட்டானுவ. எல்லாத் திசையிலயும் தேடி அலையுறானுவ. ஒருவழியா அவன் அரண்மனையில வேலை பாக்குறதைக் கண்டுபிடிச்சுட்டானுக.  ஆறு பேரும் நேரா அரண்மனைக்குப் போயி தம்பியைப் பாத்து, `உன்னைய விட்டுட்டு எங்களால இருக்க முடியலே... வீட்டுக்கு வந்திருடா தம்பி’னு கூப்பிட்டானுக.

தம்பிக்கு அரண்மனையை விட்டு வர விருப்பமில்லை. அண்ணனுங்க ஆறு பேரும் வந்து அன்பா அழைக்கும்போது மறுக்கவும் முடியல. நேரா ராஜாகிட்டப் போனான். `ராஜா... அண்ணங்காரனுங்க வந்து என்னை வீட்டுக்குக் கூப்பிடுறாங்க. நான் போகலாமா’னு கேட்டான். ராஜா, கைநிறைய சன்மானம் கொடுத்து சந்தோஷமா அனுப்பி வெச்சாரு.

அண்ணனுங்களுக்கு ரொம்பவே சந்தோஷம், `நம்ப தம்பி இப்படி ராஜாகிட்ட நல்ல பேரு எடுத்திருக்கானே’னு. சன்மானச் சுமையை சுமக்க முடியாம நடந்து வந்துக்கிட்டிருந்தாக. காடு, மலையெல்லாம் கடந்து பாதை நீளமாப் போய்க்கிட்டிருந்துச்சு.
 
முத்துவுக்குக் கடுமையான தாகம். தண்ணி கிடைக்குமான்னு வழி நெடுகப் பாத்துக்கிட்டே வந்தான். தூரத்துல ஒரு சுனை தெரிஞ்சுச்சு. `நீங்க  போய்க்கிட்டே இருங்க. நான் போய் தண்ணி குடிச்சுட்டு வாரேன்’னு சொல்லிட்டு சுனைக்கு வந்த முத்து, ஆசை தீர தண்ணி குடிச்சான். அப்படியே குதிச்சு நீந்திக் குளிக்கவும் ஆரம்பிச்சான். நேரம் போனதே தெரியல.

சுனைக்குப் பக்கத்துல அந்தூரைச் சேர்ந்த பகடைக்காரன், பசும்பட்டி போட்டிருந்தான். நூத்துக்கும் மேல பசு மாடுங்க அவன் பட்டியில இருந்துச்சு. பகடைக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைக. ரெண்டும் ரெட்டைப் புள்ளைக. ஒருத்தி பேரு பொம்மி. இன்னொருத்தி பேரு திம்மி. ரெண்டு புள்ளைகளும் தேவதை மாதிரி இருப்பாளுக. அப்பங்காரனுக்கு சாப்பாடு கொடுத்துட்டுத் திரும்புற வழியில சுனையில தண்ணி குடிக்க வந்துச்சுக ரெண்டு புள்ளைகளும். குளிச்சு முடிச்சு, கரையில நின்னுக்கிட்டிருந்த முத்து, அந்தப் புள்ளைகளைப் பாத்து அசந்துபோனான். `நாடு, காடுன்னு சுத்தாத எடமில்லை. எங்கேயும் இவ்வளவு அழகான பொண்ணுங்களைப் பார்த்ததில்லையே’ன்னு  அந்த நொடியிலேயே மனசைப் பறிகொடுத்துட்டான்,

அந்நிய ஆளு சுனையில நிக்குறதைப் பாத்து ரெண்டு புள்ளைகளும் தயங்கி நின்னுச்சுக. வெச்ச கண்ணு மாறாம அவன் பாத்துக்கிட்டிருக்கிறதைப் பாத்து அதுக முகம் வெக்கத்துல செவந்துபோச்சு. அந்தப் புள்ளைகளுக்கு முன்னாடி வந்து நின்னான் முத்து. `தேவதை மாதிரி இருக்கிற உங்க பேரு என்ன பொண்ணுகளா?’னு கேட்டான். `திம்மி, பொம்மி’னாங்க. `நான் இதுவரைக்கும் உங்களை மாதிரி பேரழகிகளைப் பாத்ததில்லை... உங்ககிட்ட மனசைப் பறிகொடுத்துட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’னு கேட்டான்.

பொம்மிக்கும் திம்மிக்கும் பதற்றமாப்போச்சு. `அரண்மனை அதிகாரி மாதிரியிருக்கான். பெரிய அறிவாளிக்குரிய லட்சணம் இருக்கு. பாத்த நொடியிலேயே காதலிக்கிறேன்னு சொல்றானே’னு குழப்பம். `எங்களுக்கு எல்லாமே எங்க அப்பன் பகடைதான். நீங்க எதுவா இருந்தாலும் எங்க அப்பன்கிட்ட பேசுங்க’னு சொல்லிட்டு விறுவிறுனு நடந்துச்சுக புள்ளைக.

பட்டிக்குப் போயி அப்பங்காரன்கிட்ட நடந்ததையெல்லாம் சொன்னுச்சுக. பகடை, நேரா சுனைக்கரைக்குப் போனான். மரத்தடியில உக்காந்திருந்த முத்துவைப் பார்த்து, யாரு என்னன்னு விசாரிச்சான். பொம்மி, திம்மியோட அப்பங்காரன்னு தெரிஞ்சவுடனே, `மாமா... பொம்மி, திம்மிக்கிட்ட என் மனசைப் பறிகொடுத்துட்டேன். ரெண்டு பேரையும் எனக்கு கட்டித்தருவீங்களா’னு கேட்டான்.  பகடை சொன்னாரு... `தம்பி... நீ வசதியான வீட்டுப் புள்ளை மாதிரியிருக்கிய... சமூகத்திலயும் எங்களைவிட பெரியாளுகளா இருப்பிய போல. என் பொண்ணுகளைக் கட்டிக்கணும்னா, எங்க குலத்தொழிலை நீங்க செய்யணும். எங்க கூடவே இருக்கணும். சம்மதிச்சா நாளைக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம்’னு சொன்னாரு பகடை. `பொம்மி, திம்மியைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கேன்’னான் முத்து.

முத்துவை பட்டிக்கு அழைச்சுட்டுப் போன பகடை, தன் குலத்தொழிலை கத்துக் கொடுத்தாரு. ஆர்வத்தோட செஞ்சான் முத்து. அவன் வேகத்தைப் பாத்த பகடை, பொம்மியையும் திம்மியையும் முத்துவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாரு.

Human Gods Stories - Pommi - Thimmi
Human Gods Stories - Pommi - Thimmi

அவுககூடவே தங்கி பசுக்களை மேச்சுக்கிட்டு, அவுக குலத்தொழிலையும் செஞ்சுக்கிட்டிருந்தான் முத்து. நாளும் பொழுதும் ஓடுச்சு. திம்மியும் பொம்மியும் முத்துவை நல்லாப் பாத்துக்கிட்டாக. எல்லாரும் சந்தோஷமா இருந்தாக.

முத்துவோட மேய்ச்சல்ல பசுங்கள்லாம் கொழுகொழுனு இருந்துச்சுக. இது, அந்தப் பகுதியில இருந்த திருட்டுப்பயலுக கண்ணை உறுத்தத் தொடங்குச்சு. `எப்பிடியாவது ஒரு ராவுல, பகடை பட்டியில இருந்து பத்திருபது மாடுகளைக் கொண்டு போயிரணும்’னு திட்டம் போட்டானுவ.

அது குளிர்காலம். பட்டியில மாடெல்லாம் குளிர்ல ஒண்டிப்போய் கெடக்கு. பகடை கொஞ்சம் அசந்து தூங்கிட்டான். நாள் பாத்துக்கிட்டிருந்த திருட்டுப்பயலுகளுக்கு வசதியாப் போச்சு. உள்ளே புகுந்து பசுக்களையும் கன்னுகளையும் ஓட்டிக்கிட்டு கிளம்பிட்டானுவ.

விடிஞ்சுச்சு. எழுந்து பட்டியில இருந்த மாடுகளை எண்ணிப்பாத்த பகடை பதறிப் போனான். சரியா முப்பது உருப்படிகளைக் காணல. அக்கம் பக்கத்துல விசாரிச்சான். `பக்கத்து மலையில ஒண்டவந்த குடித் தனக்காரனுங்கதான் பசுக்களை ஓட்டிக்கிட்டுப் போனானுங்க’ன்னு தெரிஞ்சுபோச்சு. அவனுக வில்லங்கமான ஆளுகளாச்சே... கொலைப் பழிக்கு அஞ்ச மாட்டானுவ. மருமவனைக் கூப்பிட்டான் பகடை.

`நம்ம வாழ்வாதாரமே இந்தப் பசுக்கள்தான். அதுல கை வெச்சுப்புட்டானுவ.  விடக் கூடாது. போய் அவனுவளை வெட்டிப்போட்டுட்டு நம்ம பசுக்களையும் கன்னுகளையும் ஓட்டிக்கிட்டு வா’னு அனுப்பி வெச்சான். முத்து வாளைத் தீட்டி இடைவார்ல சொருவிக்கிட்டு கிளம்புனான்,

பொம்மியும் திம்மியும் கண்கலங்கி நிக்குறாக. `அந்தத் திருட்டுப்பயலுக நியாயம் தர்மம் பாக்காத ஆளுக. எந்த அநியாயத்துக்கும் அஞ்ச மாட்டானுவ. கூட நம்ம உறவுக்காரவுகளையும் கூட்டிக்கிட்டுப் போங்க’ன்னா திம்மி. `மாமா... மாடு போனா போவட்டும். எங்க அப்பங்காரனை நாங்க சமாதானப்படுத்திக்கிறோம். நீங்க போவக் கூடாது’னு தடுத்தா பொம்மி. எதையும் கேட்கலே அந்தப்பய. `எனக்கு எதுவும் ஆகாது. நீங்க பதறாம வீட்டுல இருங்க’னு சொல்லிட்டுக் கிளம்புனான்.

திருட்டுப்பயலுகளோட குடியிருப்புக்குள்ள புகுந்தான். திருடிக்கிட்டு வந்த மாடுகளையெல் லாம் பட்டியில அடைச்சு வெச்சிருந்தானுக. உள்ளே புகுந்து மாடுகளைப் பத்திவிட்டான். சத்தம் கேட்டு ஓடிவந்த ஆளுகளையெல்லாம் வெட்டித் தள்ளுனான் முத்து. திடீர்னு நடந்த தாக்குதல்ல தடுமாறி எல்லாப்பேரும் ஓடி தெறிச்சுட்டானுக. அந்த வெளியே வெறிச்சுன்னு கெடக்கு. `அப்பாடா’னு கொஞ்சம் அசந்தாம்பாருங்க முத்து... எங்கிருந்தோ வந்த ஒரு திருட்டுப்பய முத்துவோட கழுத்துல போட்டான் ஒரு வெட்டு... துண்டாகி விழுந்துருச்சு தலை.

செய்தி பொம்மிக்கும் திம்மிக்கும் போய்ச்சேந்துச்சு. ரெண்டு புள்ளைகளும் கதறி அழுவுதுக. அப்பங்காரன் பகடை ஒரு பக்கம் விழுந்து புரண்டு அழுவுறான். பொம்மியும் திம்மியும் கையைக் கோத்துக்கிட்டு முத்து வெட்டுப்பட்டுக் கிடக்கிற எடத்துக்கு ஓடியாருதுக. அவன் உடல்மேல விழுந்து கதறி அழுவுதுக. பெறகு, அங்கேயே வெறகடுக்கித் தீ மூட்டி முத்துவை தகனம் பண்ணினாக. அந்தத் தீயிலயே பொம்மியும் திம்மியும் இறங்கி உயிர்விட்டாக.

முத்துவோட வீரத்தைக் கண்ட சொரி முத்தையன்னாரு, அவனைத் தன்னோட தளபதியா வெச்சுக்கிட்டாரு. பொதிகை மலையில சொரிமுத்தாருக்கு பக்கத்துல ஒரு பாறையில குடியிருந்து காவக்காக்கிறாரு முத்து. பொம்மியும் திம்மியும் கூடவே இருக்காக!

- வெ.நீலகண்டன் 

படம் : எல்.ராஜேந்திரன் 

ஓவியம் : ஸ்யாம்