மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 8

இறையுதிர் காடு - 8
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 8

இறையுதிர் காடு - 8

இறையுதிர் காடு - 8

அன்று வேலுக்கான விளக்கத்தைக் கூறும் முன், போகர் அண்ணாந்து வானத்தை ஒருமுறை பார்த்தார். கதிரவன் எண்பதாம் பாகையில் இருந்தான். இன்னும் பத்து கடந்தால் உச்சம். கீழே அவர் நிழலும் சுருங்கி இரு கால்களுக்குக் கீழே அடங்கிவிடும்! உச்சியில், அதாவது நம் சிரத்தில் ஒளி உண்டாகும்போது இருளற்ற ஒரு நிலைக்கு மனிதன் ஆளாகிவிடுவதையே ஒவ்வொரு நண்பகல் உச்சமும் உணர்த்துகிறது. அதை எண்ணியவர், சீடர்களை உண்டு களிக்கக் கட்டளையிடலானார்.

``அருமைச் சீடப் பிள்ளைகளே!

வேலுக்கான விளக்கம் என்பது உங்கள் உடல் சார்ந்தது. உடல் சார்ந்த ஒன்றைச் சொல்லும்போது உங்களில் எவருக்கும் பசியுணர்வு இருத்தல் கூடாது. எனவே, உங்கள் பேருணவை முடித்து விட்டு, பிற்பகலின் நான்காம் நாழிகைமுடிவில் வேம்பன் மடியில் கூடுங்கள் (வேப்பமர நிழல் விழும் பாகம்) நாம் மீண்டும் சந்திப்போம்`` என்றார்.

இறையுதிர் காடு - 8

சீடர்கள் கலைந்தனர். அவர்களிடம் இறுக்கம் தளர்ந்த ஒரு மகிழ்ச்சியுணர்வு. போகரின் கொட்டாரத்தில் அடுமனை பாகத்தில் மூங்கில் அரிசிச்சோறும், பிரண்டைத் துவையலும், கீரை மசியலும், பனைவெல்லக் கஞ்சியும், மீசை மூப்பன் என்பவனால் தயாராகிக் கொண்டிருந்தன. தைக்கப்பட்ட தையல் இலைகளுடன் தொன்னைகள் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. நீர் அருந்த, படகு வடிவில் பனங்கிடுகுகள். ஒட்டி ஓரமாய் சண்முகநதி நோக்கி ஒரு வாய்க்காலாய் ஓடிடும் நீரோட்டத்தில் அந்தப் பனங்கிடுகுகளை நனைத்து முக்கி இருபுறமும் பிடித்துத் தூக்கினால் மைய பாகத்தில் ஒரு படிக்குக் குறையாது நீர் அகப்படும். ஆனால், அந்த நீரை மதியப் பேருணவு கழிந்து ஒரு நாழிகைக்குப் பிறகே (24 நிமிடம்) குடிக்க வேண்டும். உண்கையில் விக்கினாலன்றி நீர் அருந்தக் கூடாது. இவையெல்லாமே உணவுக் கட்டுப்பாடுகள்!

அடுமனை ஒருபுறம் என்றால், ஔஷத சாலை இன்னொரு புறத்தில் இடித்தல், சலித்தல், பிழிச்சல், காய்ச்சல் என்று பலவாறான செயல் பாடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியிலிருந்து வரும் மூலிகை வாசம் ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

கொட்டார மைதானத்தில் சில புரவிகள் கண்ணில்பட்டன. சில கோச் வண்டிகளும் மாட்டுவண்டிகளும்கூடத் தென்பட்டன. சுற்றுப்புறத்தில் ரவிமங்கலம், கோதைமங்கலம், அமரபுஜங்க நல்லூர், தாராபுரம், கீரனூர் போன்ற ஊர்களிலிருந்தெல்லாம் போகரிடம் வைத்தியம் செய்துகொள்ள வந்திருந்தார்கள்.

இறையுதிர் காடு - 8



கோச் வண்டியில் சிற்றரசன் ஒருவன் வந்திருந்தான். ஐம்பது வயதைக் கடந்துவிட்ட அவனுக்கு, இருபதுக்கும்மேல் பத்தினிமார்கள். அத்தனை பேருக்கும் பிள்ளைகள். முன்புபோல் ஓடியாட அவனால் இயலவில்லை. இளமைக்குத் திரும்பும் விருப்பத்துடன் தங்கக்கட்டிகளோடு வந்திருந்தான்.

போகர், அந்த உச்சிவேளையில் அவர்களை எல்லாம் சந்திக்க மைதானத்துக்கு வந்திருந்தார். அந்தச் சிற்றரசனுக்கு அவன் ஏவலர்கள் பட்டுக்குடை பிடித்தபடி நின்றிருந்தனர். அவன் நிற்கச் சக்தியற்றவனாய் கோச் வண்டியின் மிதிக்கட்டை மேலேயே உட்கார்ந்துவிட்டிருந்தான். போகர் வரவும் எழுந்து நின்றான். பெரிதாய் வணங்கவும் செய்தான். போகர் அவனை ஊன்றிப் பார்த்தார். குறிப்பாய், அவன் கண்களை, பின் காதுமடல், அதற்கும் பின் கை பிடித்து விரல் நகங்களைப் பார்த்தவர், இறுதியாக மணிக்கட்டைப் பற்றி நாடி பார்த்தார்.

ஏனோ அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ``போகர்பிரானே... என் வாதை உங்களுக்குச் சிரிப்பைத் தருகிறதா?`` என்று கேட்கவும் செய்தான். அவனோடு ஊர்த் தலையாரி முதல் உள்ளூர் வைத்தியர் வரை எல்லோரும் வந்திருந்தனர். அவர்களும் போகர் கூறப்போவதை கூர்ந்துகவனிக்கத் தொடங்கினர்.

``யப்பா..! சுரக்கச் சுரக்கத் தீர்த்திடும் மாறனாய் இருக்கிறாய் நீ. குமாரனாய் மாற ஆசையும்படுகிறாய். போக வாழ்வைப் பிரதானமாகக்கொண்டும், கார மாமிசங்களை மிக உண்டும் உள்ளுறுப்புகள் அத்தனையையும் ஐம்பதிலேயே ஒரு நூற்றாண்டுப் பாட்டுக்கு ஆளாக்கிவிட்டாய். மாதம் இருமுறை காமத்தில் கூடி, வாரம் இருமுறை தைலத்தில் கூடி, ஒரு நாளின் இருமுறை யாமத்தில் கூடி, பிரம்மத்தில் விழித்து, வெளிச்சத்தில் உண்டு, இரவில் நவவேளை பானைக் கிடப்பை அருந்தி, தலையணையின்றிப் படுத்து, பின் பிரம்மத்தில் விழிப்பதே இல்லற யோக வாழ்க்கை. நீயோ புணர்ச்சியும் உணர்ச்சியுமாக போக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாய். இன்னமும் உனக்கு ஆசை அடங்கவில்லையே! அதை எண்ணினேன், சிரிப்பு வந்துவிட்டது`` என்ற அவர் முன், சற்றே அசடனாய்ச் சிரித்தான் அந்தச் சிற்றரசன். பிறகு ``என் பெயர் முத்தழகுக் காளை. என் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முன், நான் வாழும் வாழ்க்கை வாழ்வேயல்ல. பிள்ளைகளில் சதம் கண்டவர்கள் அவர்கள். நான் அரைச்சதம்கூடப் பெறவில்லை போகர்பிரானே!`` என்றான்.

``ஓ... முழுச்சதம் காண விரும்புகிறாயோ?``

``ஆம், தங்களிடம் கற்பங்கள் உண்டாமே!``

``என் கற்பங்கள் உடம்பைக் கல்லாக்கும். காமத்துக்கு உருகாதபடி உன் மனதையும் கல்லாக்கும். உண்ணத் தயாரா?``

``உடம்பு கல்லாகி உணர்வு கல்லாகாதபடி திகழ, கற்பம் ஏதும் இல்லையா?``

அந்த முத்தழகுக் காளையின் கேள்வி முன் மீண்டும் சிரித்த போகர் ``யவ்வனகாந்தி என்று ஒன்றுண்டு! அது நித்ய இளமையைத் தந்திடும். அதேபோல் வஜ்ரகாந்தி என்று ஒன்றுண்டு. அது, திடகாத்ர சித்தி தந்திடும். `தா வரம்’ என்று நாம் கேட்க, நமக்கு வரம் தருபவைதானே தாவரங்கள்! அவற்றின் மூலக்கூறுகளை அறிந்துகொண்டுவிட்டால் எமனையும் விழுங்கி ஏப்பம் விடலாம்.``

``அப்படியானால் தாங்கள் எனக்கு உதவிடுங்கள். அதற்குக் காணிக்கையாக எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் தருகிறேன்’’ என்று அந்த முத்தழகுக் காளை கூறிட, உடன் வந்த அவன் கஜானாப் பொறுப்பாளர், போகர் முன் ஒரு மரப்பெட்டி நிறைய தங்கக்கட்டிகளை எடுத்துக் காட்டினார். அதைக் காணவும் போகர் முகம் சலனப்பட்டது.

``போகர்பிரானே, நான் ஏதும் தவறாகப் பேசிவிட்டேனா?``

``ஆம்... சமூக வாழ்வு வாழ்பவனுக்கே இந்தத் தங்கமும் வைரமும் செல்வங்கள். என் போன்ற பஞ்சபூதக் கட்டுகளை அறுத்தெறிந்தவர்க்கு இதெல்லாம் குப்பைகள். எனக்குக் கொங்கணன் என்றொரு சீடன் இருக்கிறான். அவன் தன் சிறுநீரால் ரசவாதம் புரிபவன்! கற்பாறை மேல் அவன் மூத்திரம் பெய்தால், பாறை தங்கமாகிவிடும்.நானோ உலோகங்களின் குணத்தோடு தினமும் விளையாடுபவன். எனக்குப்போய் தங்கத்தைத் தந்து உன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ள விழைகிறாயே..!``

``மன்னியுங்கள் போகர்பிரானே... நான் காணிக்கையாக எதைத் தந்தால் தங்கள் உள்ளம் மகிழும்?`` என்று பணிவாகக் கேட்டான் முத்தழகுக் காளை.

``நான் கேட்பதை உன்னாலெல்லாம் தர முடியாது. இருப்பினும் வேளை வரும் சமயம் கேட்பேன். இப்போது உன் தளர்வைப் போக்கி உன்னைப் பூரணன் ஆக்கும் சூரணம் தருகிறேன். பத்தியமுண்டு! கால நேரமறிந்து உண்டு உறங்கித் தேற்றம் காண வேண்டும். சுக்கில விரயம் கூடவே கூடாது`` என்று அந்த முத்தழகுக் காளைக்கான சூரணத்தைத் தந்து பத்தியமும் உரைத்தார். ``கடுகும் புளியும் துளியும் கூடாது. ஆட்டுப்பாலில் கஸ்தூரிமஞ்சள் சேர்த்துப் பருகு. வெல்லமும் கடலையும் விருப்பம்போல் உண்டு, முருங்கைப்பூவையும் பொரித்துச் சாப்பிடு. காலை உணவில் பேயன் வாழையும் அகப்பைத் தேனும் அவசியம் சேர்த்திடு`` என்றவர் அடுத்தடுத்து தன் பொருட்டுக் காத்திருந்தவர்களைக் கண்டு முடித்து வேம்பன் மடிக்கு வரவும், சீடர்கள் காத்திருந்தனர்.

மீண்டும் தொடங்கியது தண்டபாணிக்கான விளக்கம். ``சீடர்களே, வேல்குறித்து நான் கூறப்போவதை அறிந்திட ஆவலாக உள்ளீர்கள். வேலினை ஆயுதமாக மட்டுமே பார்த்திருப்பீர்கள். அது ஆயுதம் மட்டுமல்ல, பெரும் ஞானத்தின் குறியீடும்கூட! ஆழம், அகலம், கூர்மை என்னும் மூன்றின் வடிவமே வேல்! இது புறத்தில் மட்டுமல்ல... நம் அகத்திலும் உள்ளது. நம் உடலில் பல உறுப்புகள், ஒன்றுக்கு இரண்டாய் இருப்பதைக் காணலாம். புருவம், கண், நாசி, உதடு, மார்பு, கை, சிறுநீரகம், கால் என இவை எல்லாமே இரட்டைகள். நெற்றி, தொண்டைக்குழி, மார்புக்குழி, தொப்புள் குழி, ஆண் பெண் குழி, மலக்குழி என்கிற ஆறும் ஒரு நேர்க்கோட்டில் அமைந்த ஒற்றைகள். இந்த ஒற்றை நேர்க்கோட்டுக்கு நெற்றி மேல் பாகமாயும் மலக்குழி கீழ் பாகமாயும் உள்ளது. இந்த மலக்குழிக்குக் கீழேதான் `குண்டலினி’ எனும் ஜ்வாலா சக்தி அமுங்கிக் கிடக்கிறது. இதை அப்படியே முதுகுத் தண்டுவடம் வாயிலாக மேலே உருட்டிக்கொண்டு சென்று உச்சந்தலையில் நிறுத்தினால், பேரின்பம் உருவாகும். இந்த உலகில் உள்ள கோடானுகோடி இன்பங்களை ஒரு தட்டிலும் இந்தப் பேரின்பத்தை ஒரு தட்டிலும் வைத்தால் பேரின்பத் தட்டுதான் தாழும். உலக இன்பங்கள் எவையும் இதற்கு ஈடாகாது. இந்தப் பேரின்பம் மாசில்லாத ஞான ஒளியும்கூட! உடம்பை வெல்ல முடிந்தவர்க்கே இது சாத்தியம்?

இறையுதிர் காடு - 8

இரட்டை உறுப்புகள் அத்தனையும் இந்த ஒற்றைச் சுழுமுனையைப் பின்னிக்கொண்டுள்ளன. இந்த இரட்டை உறுப்புகளைச் சீராக வைத்திருந்தாலே, ஒற்றையும் பலமானதாயிருக்கும். இப்போது வேலின் வடிவத்தை நினையுங்கள் - அதை அப்படியே உங்களுக்குள் பொருத்துங்கள். சுழுமுனைதான் அடிப்பாகம். வேலின் அகண்டு குவிந்த பரப்புதான் நம் சிரசு. கூரியமுனைதான் சஹஸ்ராரம்.

யோகத்தில் வல்லமை மிகுந்தால் சஹஸ்ராரம் ஒளிரும். சிவனின் யோகத்தில் இதுபோல் ஒளியாய் அவன் நெற்றிக்கண் வழி தோன்றியவனே அவன் குமாரன்... வேலின் வடிவாய்த் தோன்றியதால் வேலன் - இவன் வரையில் இரட்டை உறுப்புகளே இடகலை பிங்கலை என்றும், மானுட வடிவில் வள்ளி தெய்வானை என்றும் சிந்திக்கப்படுகிறது.

இந்த வேலன் கூரிய வேலை விடுத்து ஒரு கோல் பிடித்து நிற்கும் கோலமே தண்டபாணிக் கோலம். வேலன் தண்டபாணியாக நிற்க, கதைப்படி ஞானப்பழம் காரணம்... உண்மைக் காரணம் என்னவென்று தெரியுமா?”

இன்று அந்த விபூதி வாசத்தை இருவருமே இழுத்து ஆழமாய் உணர்ந்தனர்.

``நைனா, இது துண்ணூறு வாசம்தானே?`` - குமரேசன் கேட்டான்.

``அதேதான்டா... உள்ள இருந்துதான் வருது!``

``என்ன நைனா இது, இப்பிடி ஒரு அண்டர் கிரவுண்டு?``

``கஜானா அறையா?``

``ஆமாண்டா... பெரிய பெரிய அரம்மன கட்டடங்கள்ல இப்படி எல்லாம் இருக்குண்டா... நான் கதைங்கள்ல படிச்சிருக்கேன்.``

``உனக்கு படிக்கல்லாம் நேரம் இருந்திருக்குதா?``

``வளவளங்காம உள்ளார என்ன இருக்குன்னு பாரு...``

``ஒருவேளை அந்தப் பாம்பு இதுக்குள்ள இருந்துதான் வந்திருக்குமோ... ஆத்தாடி என்னா நீளம், 12 அடி இருக்குமல்ல?``

``அது எத்தன அடி இருந்தா நமக்கென்னடா... நீ உள்ளார இறங்கிப் பாரு...``

``இரு... முதல்ல உள்ள டார்ச் அடிச்சுப் பார்ப்போம்.``

``அதுக்கு இப்ப எங்கடா போக?``

``எல்லாம் செல்போன்லயே இருக்குது... இதுகூடத் தெரியாம நீயும் செல்போனை யூஸ்பண்ணிக்கிட்டிருக்கே...`` என்கிற முணுமுணுப்புடன் செல்போன் டார்ச்சை இயக்கவும் கொத்தாய்ப் பாய்ந்த அந்த வெளிச்சம், உள்ளே மரப்படிகளைக் காட்டியது. படியெல்லாம் வழுவழுப்பு.

``உள்ளார படி நைனா``

``அப்படித்தான் இருக்கும்... அப்பதானே உள்ள இறங்க முடியும்!``

``அப்ப நீ இறங்கு...``

``நவுரு இறங்குறேன்... ஆனாலும் தொட நடுங்கிடா நீ`` - என்றபடியே தன் செல்போனின் டார்ச் ஒளியோடு இறங்கத் தொடங்கினான் துரியானந்தம்.

``பாத்து நைனா...``

``நீயும் பின்னாலயே வா...``

``தா... வந்துகிட்டே இருக்கேன்...`` - குமரேசனும் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு பின்தொடர்ந்தான்.

சரியாக 18 படிகள். கீழே கால் வைக்கவும் பல வருடப் புழுதியில் கால் வைப்பது உணர்வாகியது. ஆனாலும் விபூதிவாசம் குறையவேயில்லை. டார்ச் வெளிச்சத்தில் உட்புறச் சுவரில் ஒரு சிவலிங்கம் வரையப்பட்டிருந்தது. கீழே `குருவே சரணம்... போகர் சரணம்... குருமகா போகர் சரணம் சரணம்’ என்னும் தீய்ந்த எழுத்துகள். அதற்கும் முன்னால் ஒரு பலகை - அதன் மேல் ஒரு புலித்தோல். புலியின் தலைப்பாகம் பாடம் செய்யப்பட்டு அந்தப் புலியும் தன் கோரைப்பற்களைக் காட்டியபடி வாயைத் திறந்துகொண்டிருந்தது. கண்களில் குன்றாக் கடூரம்!

இறையுதிர் காடு - 8



அந்தப் புலி முகம் துரியானந்தத்தை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டது. குமரேசன் அதன்மேல் கால் படப்போய் எகிறிக் குதித்ததில் அவன் டார்ச் வெளிச்சம் அறை முழுக்க ஒரு ஓட்டம் ஓடிற்று.

``நைனா... என்ன நைனா கஜானா ரூமுன்னே... நானும் பெருசா எதுனா இருக்கும்னு பாத்தா, சாமியார் மடமாட்டம் இருக்குது.``

``ஆமாண்டா... அதான் ஒரே விபூதி வாசனை.``

``அண்டர் கிரவுண்டுல எப்படி நைனா இப்படி?``

``ஐயோ குமரு...``

``என்ன நைனா..?``

``தா பார்றா பாம்புச்சட்டை...`` - துரியானந்தம் டார்ச் ஒளி, அந்த அறைக்குள் ஒரு மூலையில் உதிர்ந்துகிடந்த பாம்புச்சட்டையைக் காட்டிக்கொண்டிருந்தது.

``நைனா... மேல தோட்டத்துல பாத்த அதே சட்டை!``

``அதே சட்டையில்லடா... அந்தப் பாம்போட சட்டைன்னு சொல்லு.``

``நைனா, அப்ப அதுவும் உள்ள இங்கதான் இருக்குதா?``

``தெரியலியே!``

இறையுதிர் காடு - 8

``வா நைனா, முதல்ல மேல ஏறுவோம்... அது பாட்டுக்கு போட்டுவெக்கப்போவுது!`` - அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டு அந்த மரப்படி அருகே வர முற்பட்டபோது, அந்த செல்போன் டார்ச் ஒளிக்கற்றைகள் அவர்கள் அசைவுக்கு ஏற்ப அசைந்ததில் ஒரு இடத்தில் ஒரு மரப்பெட்டி இருந்து அதன் மேலும் பட்டது. அதைக் கவனித்துவிட்ட துரியானந்தமும் ``டேய் ஏதோ பொட்டிடா...`` என்றான் ஈனசுரத்தில்.

``பொட்டியா?``

``அங்க பார்... நல்லா மூணடி நீளம் மூணடி உயரத்துல...`` பெட்டி அவர்களுக்குள் பாம்பு பயத்தைச் சற்றுத் தள்ளி அருகில் இழுத்தது. மெள்ள அருகே சென்றனர். பெட்டியின் மேல் சில கடிதங்கள் கிடந்து அதன் மேல் தூசு விழுந்து மூடியிருந்தது. கையால் தடவவும் கடிதம் தட்டுப்பட்டது. எடுத்து வெளிச்சம் கொடுத்துப் பார்க்கவும் அது தபாலில் வந்த கடிதம்.

முகவரியில் `சாந்தப் பிரகாச பூபதி சுவாமிகள், பிரமாண்டம் ஜமீன், பல்லாவரம் ஏரியா, சென்ன மகாப்பட்டினம்’ - என்கிற எழுத்துகள். தபால் முத்திரையில் தெளிவாய் `பாபநாசம் போஸ்ட்’ என்ற எழுத்துகளுடன் 29.12.31 எனும் நாட்குறிப்பு. கடித உறை பிரிக்கப்பட்டிருந்தது.

``நைனா, 1931-ம் வருஷத்து லெட்டர். இதோட ஸ்டாம்பு நல்ல விலைக்குப் போகும்`` என்று அப்போதும் ஒரு அல்ப கடை வியாபாரியாகத்தான் சிந்தித்தான் குமரேசன். அதற்குள் துரியானந்தம் பெட்டியை அசைக்கப்பார்த்ததில் அது லேசாக அசைந்துகொடுத்து உள்ளே ஏதோ இருப்பதை உறுதிசெய்தது.

``டேய்... பெட்டிக்குள்ளார ஏதோ இருக்குதுடா!``

``தூக்கிருவோமா?``

``பின்ன...``

``சட்டம், கதவுக்குத்தான் ஏலம்... இதுக்குமான்னு கேட்டா..?``

``இது பேசற நேரமில்ல... தூக்கு!``

``இப்பவேவா..?``

``பின்ன... இதுக்கெல்லாம் முகூர்த்தமா பாப்பாங்க!``

``ஐயோ நைனா... இத நாம ரெண்டுபேர் தூக்கிறது கஷ்டம் நைனா.``

``அத தூக்கிப்பாத்துட்டு சொல்லு`` - துரியானந்தம் விடாமல் தூண்டிவிட்டு இருவரும் ஒரு வழியாக அதைச் சுமந்தபடி மேலே வந்து சேர்ந்தனர். ஓர் ஆச்சர்யம்போல் துளிகூட வியர்க்கவில்லை - பெரிதாய் களைப்பாகவும் இல்லை. லேசாய் மூச்சு மட்டும் இளைத்தது.

இறையுதிர் காடு - 8

அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்கவேயில்லை. அந்தப் புலித்தோல் மேல் ஒரு சன்யாசி அமர்ந்திருப்பதைப்போல் அந்த நாகம் படம் விரித்து அமர்ந்து அவர்கள் பெட்டியோடு மேலேறுவதைப் பார்த்தபடியே இருந்தது!

மேலே...

``குமரு... எங்கடா அந்தக் கடுதாசி?`` என்று கேட்க, சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான் குமரேசன். பழுப்பேறிய அந்த நாளைய தபால் கவர். பிசிரின்றி விழுந்த முத்திரை. முகவரியில் சாந்தப் பிரகாச பூபதி சுவாமிகள் எனும் பெயரே ``டேய், அது சாமியார் ரூம்தாண்டா. இது சாமியார் பேர். பொட்டியும் இவருதாத்தான் இருக்கணும். தொந்தரவு இல்லாம தியானம் பண்ணணும்னுதான் அண்டர் கிரவுண்டு ரூம்போல`` என்று சொல்லிக்கொண்டே உட்காகிதத்தை வெளியே எடுத்தான் துரியானந்தம். நீண்ட வெள்ளைத்தாளில் ஒரு கடிதம். அதில் பொடிப்பொடியாய் தமிழில் எழுத்துகள்!

`சுவாமிகளின் திருவடிகளுக்கு, காத்தமுத்துவின் அனந்தகோடி நமஸ்காரங்கள்! இப்பவும் தாங்கள் நமது ஆசிரமம் விட்டுப் போய் நெடுநாளாகிவிட்டது. க்ஷேமலாபங்கள் எப்படி? ஆருத்ரா தரிசனத் திருநாள். நூறாண்டுக்கொருமுறை வரும் சித்த ருத்ர தினமான இந்நாளில், பாணதீர்த்தமருவியில் ஸ்நானிக்க சித்த புருஷர்கள் எழுந்தருளினர். கண்கொள்ளாக் காட்சி. மூன்றடி உயரம்கூட இல்லாத ஒரு சித்தர், என்னை ஆசீர்வதித்தார். அவர் அகத்தியர் பெருமானாகத்தான் இருக்க வேண்டும். எவரிடமும் அவர்களைப் பற்றி அறிந்திட முயலுதல் கூடாது என்னும் நம் குருவின் கட்டளை, என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. பிறகு, வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட்டனர். கானக மரங்கள் பின்னால் சென்றவர்கள், அந்தர்யாமிபோல் மறைந்துவிட்டனர். அற்புதக்காட்சி. நம் குருநாதர் சுனைலிங்கத்துக்கு, மகா தீபாராதனை சாதித்தார். உங்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்துகொண்டேன்.

உங்கள் மனைவி, மக்கள் நலமா? நீங்கள் குடும்பம் என்னும் மகா பந்தத்தில் இருப்பதையே நம் குருவும் விரும்புகிறார். உங்களுக்கு வந்த துன்பத்துக்கு சரியான காரணம் இருப்பதையும் குறிப்பிட்ட நம் குருநாதர், உயிர்ப்பிறப்பெடுத்துவிட்டாலே இதெல்லாம் மிக சகஜம்தான் என்றும் கூறினார்.

பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை வந்திடும் `போகவல லிங்கமகாதினம்’ வரப்போவதை ஞாபகத்தில்கொள்க. உங்கள் சுவீகாரப்புத்திரன் மூலம் பௌத்ரன் அல்லது பௌத்ரி பிறக்கப்போவதில் மகிழ்ச்சி. விசனம் வேண்டாம். இம்முறை போகவலலிங்க ப்ராப்தியால் சத்புத்ர ப்ராப்தியும் அதன்மூலம் வம்ச விருத்தியும் நிச்சயம் ஏற்படும். தங்களின் பிரமாண்டம் ஜமீன் நீடித்து நின்று அரசாட்சியோடு அருளாட்சியும் புரிந்திடும். நிச்சயம் அரவமேற்படாது.

அப்புறம் ஒரு விக்ஞாபனம்.

இங்கிருந்து கொண்டுசென்ற `புங்கை, அரசு, தோதகம், மருது, வில்வம், நாகம், வேம்பு’ நன்கு வளர்ந்துவிட்டதா? அந்த சப்தாதி விருட்சங்கள் உள்ளவரை உங்கள் வம்சத்துக்கு ஒரு கேடும் வராது என்றும் குருநாதர் கூறினார். அவற்றுக்கு நீங்கள் விடும் நீரே நித்ய பரிகாரமாம்... கூடியவரை அவை பங்கப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். வரும் போகவல லிங்க மகா தினத்தன்று உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்... அன்று போகர் தரிசனம் சதமாகி சதம் உறுதி என்றார் குருநாதர்.

மீண்டும் என் அனந்த கோடி வந்தனாப்யாசமுடன் இந்த லிகிதத்தை நிறைவுசெய்கிறேன்.

குருவே சரணம்... போகர் சரணம்... குருமகா போகர் சரணம் சரணம்!

தங்கள்

காத்தமுத்து’

 - கடிதத்தைப் படித்த துரியானந்தம் தலையை உதறிக்கொண்டான்.

``என்ன நைனா எழுதியிருக்குது..?``

``ஒண்ணும் புரியலடா... யாரோ காத்தமுத்துங்கிறவர் எழுதியிருக்காரு. சாந்தப் பிரகாச சுவாமிகள்னு இங்க ஒரு சாமியார் இருந்திருக்காரு. அநேகமா அது ஜமீன்தாராத்தான் இருக்கணும். ஏன்னா, இப்ப வெளிநாட்டுல இருக்கிற இந்த பங்களா ஓனர் பேரும் அதுதான். தாத்தா பேரை பேரனுக்கு வைக்கிறதுதானே ஜமீன் வம்சத்துல வழக்கம்.”

``ஓ... சாந்தப் பிரகாஷ் சார் பேர் குடும்பப் பேரா?”

``அப்படித்தான் இருக்கணும். இப்ப இருக்கிறவருக்கு இவர் அநேகமா கொள்ளுத்தாத் தாவா இல்ல எள்ளுத்தாத்தாவா இருக்கணும். அவருக்கு வந்த கடுதாசி இது. பொட்டி மேலயே கிடந்திருக்குது. அப்பால தோட்டத்துல ஒசரமா மரங்கள பாத்தோம்தானே?”

``ஆமாம்.. அததான் வெட்டித் தள்ளிக்கிட்டு இருக்காங்களே.``

``அட ஆமால்ல... தப்பாச்சே..!’’

``என்னா தப்பு... வெட்னாதானே பெருசா ஹோட்டல் கட்ட முடியும்... அதுவும் நீச்சல்குளத்தோட...’’

``அது என்னமோ சரிதான்... ஆனா, கடுதாசியில இருக்கிற சமாசாரப்படி அந்த மரங்களுக்கு எதுனா ஆனா குடும்பத்துல பாதிப்பு வருமாம்!’’

``எந்தக் குடும்பத்துல?’’

``இந்த ஜமீன் குடும்பத்துலதான்...``

``நைனா, நமக்கு எதுக்கு இப்ப இந்த ஜமீன் குடும்பம் பத்தின கவலை? அந்த சாந்தபிரகாஷ் அமெரிக்காவுல சும்மா ஜில்லுன்னு ஊரை சுத்திக்கிட்டிருப்பாரு... நீ என்னடான்னா பாதிப்புங்கிறே! பாதிப்பெல்லாம் எப்பவும் நம்பள மாதிரி லோயர் மிடிலுக்குத்தான்... வா... வந்து பொட்டிய திறந்து என்னா இருக்குதுன்னு பார்ப்போம்’’ - அவன் துரியானந்தத்தோடு அந்த மரப்பெட்டி நோக்கிச் சென்றான்!

ஸ்கேல் வைத்துக் கோடு போட்டதுபோல் ஒரு அங்குல அளவு கோணலும் இல்லாத அந்த நெடிய அமெரிக்க நாட்டு பேடன் ரூஜ் நகரச் சாலைமேல் தன் ஆப்பிள் நிற பென்ஸ் காரை
150 மைல் வேகத்தில் வழுக்கவிட்டுக்கொண்டி ருந்தான் சாந்தப் பிரகாஷ். அவன் அருகில் அவன் மனைவி சாருபாலா சோகமாய் அமர்ந்திருந்தாள்.

இருவரிடமுமே பெரும் இறுக்கம். இடையில் காரின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள் சாருபாலா. கந்தசஷ்டிக் கவசம் ஒலிக்க ஆரம்பித்தது. சாந்தப் பிரகாஷ் அதை வேகமாகத் தடுத்து நிறுத்தினான்.

``ப்ளீஸ் சந்து...” அவள் கெஞ்சினாள்.

``நோ, நீ தேவையில்லாம பயப்படுறே... இது, ஒன் கைண்ட் ஆஃப் ஃபோபியா சாரு.’’

``நோ... நாம இனியும் மாறலேன்னா அது நமக்குத்தான் கஷ்டம். எனக்கு எந்த ஃபோபியாவும் இல்லை.’’

``பேசாம வா... நீ இப்படி சாமி, கோயில்னு மாறிக்கிட்டு வர்றத நம்ப சர்க்கிள்ள யாராவது பார்த்தா, சிரிப்பாங்க.’’

``நான் மாறலை... உங்க தாத்தாதான் கனவுல வந்து, `இனி நீ இங்க இருக்காதே... இந்தியாவுக்குத் திரும்பிடு’ங்கிறாரு... சம்திங் ராங் சந்து!’’ - இருவருடைய வாக்குவாதத்துக்கு இடையில் அவர்கள் வீடும் வந்துவிட்டது. வெளியே குடை விரித்த மாதிரி வெட்டிவிடப்பட்ட பிளாக் செர்ரி மர நிழலில் தன் பென்ஸைத் தேக்கி நிறுத்திய சாந்தப் பிரகாஷ் அலட்சியமாய் காருக்குள்ளிருந்து உதிரத் தொடங்கினான். அவளும்!

அப்போது வீட்டினுள்ளிருந்து வெளியே வந்தான் அவர்களின் பதினைந்து வயது ஆகி என்னும் ஆகாஷ்.

அவன் உதட்டில் ரோஜா நிற லிப்ஸ்டிக்! புருவங்களில் நறுக்காய் திருத்தம், தன் ஜீன்ஸ் பேன்ட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு கோணலாய் அவன் நின்றவிதமும் `ஹாய் டாட், ஹாய் மாம்’ என்றபடியே எதிர் சாரியில் நின்றிருந்த காருக்குள் அவன் ஏறியவிதமும் சாந்தப் பிரகாஷை சாருபாலா நோக்கிப் பார்க்கச் செய்தது. அவளோ அவன் சில நாள்களாகவே இப்படித்தான் இருக்கிறான் என்பதை மெல்லிய ஆமோதிப்புடன் உணர்த்தவும் சாந்தப் பிரகாஷுக்கு மார்புப்பக்கமாய் மிக வேகமாய் வலிக்க ஆரம்பித்தது. ஆகாஷோ புறப்பட்டுவிட்டா(ன்)ள்.

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்