மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

ந்தியாவில் திருமணங்கள் மிக முக்கியமானவை. மற்ற நாடுகளைவிட நாம் திருமணங் களுக்குச் செய்யும் செலவுகள் மிக அதிகம். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ மூன்றரை லட்சம் கோடி ரூபாய் திருமணங்களுக்காக மட்டுமே நாம் செலவழிக்கிறோம். திருமணச் செலவுகள் என்ற பட்டியலில் முதலில் வருவது வரன் பார்க்கும் செலவுகள்தாம். பக்கத்து வீட்டுக்காரரிடம் தொடங்கி, தெரிந்த அனைவரிடமும் “பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். நல்ல வரனா தெரிஞ்சா சொல்லுங்க. ஜாதகம் செட் ஆனா முடிச்சிடலாம்” என்பதில் தொடங்கும் இந்த வேலை இப்போது ட்விட்டரில் “Looking for a bride for my cousin. 25, 172 cms, Doctor, preferably from Chennai” எனக் கேட்கும் அளவுக்கு வந்திருக்கிறது. இன்று இந்தியத் திருமணங்களில் கணிசமான திருமணங்களை நிச்சயிப்பது மேட்ரிமோனி இணைய தளங்கள்தாம். அவற்றில் முதன்மையானது matrimony.com

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

வடசென்னையின் மிக முக்கியமான பகுதி ராயபுரம். கடலுக்கு மிக அருகிலிருக்கும் பகுதி. உழைப்பவர்களின் பூமி அது. ராயபுரத்தில் நிறைய ஒண்டுக்குடித்தனங்கள் உள்ளன. மொத்த வீடே 300 சதுர அடிக்குள்ளாகத்தானிருக்கும். வசதிக்குப் பஞ்சம். அந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்தான் முருகவேல் ஜானகிராமன். அவர் குடும்பத்தில் கல்லூரியில் காலடி வைத்த முதல் நபர் அவர்தான்.

இளம் வயதில் ஜானகிராமனுக்கு இருந்த கனவெல்லாம் வேதியியலில் பட்டம் பெறுவதும் அதன்மூலம் லேப் டெக்னிஷியன் வேலை பெறுவதுமே. அது நடந்துவிட்டாலே  வாழ்க்கையில் வெற்றிபெற்றவராகத் தன்னை நினைத்துக்கொண்டிருந்தார். ஓர் ஆலமரத்தின் விதை தன்னைப் பற்றி என்ன வேண்டுமென்றாலும் நினைக்கலாம். ஆனால், அது வளரும்போது ஆலமரமாகத்தான் வளரும். அதை மாற்ற முடியாது. ஜானகிராமனும் அப்படியொரு விதைதான்.

``லெஃப்ட்டுல கையைப் போட்டு, ரைட்டுல இண்டிகேட்டர் போட்டு நேரா போவான்” - சென்னை ஆட்டோக்காரர்களைப் பற்றி ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு `நகைச்சுவை’ வசனம் வரும். ஜானகிராமன் வாழ்க்கையும் அப்படித்தான். கெமிஸ்ட்ரியுடன் தன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட ஜானகிராமன் கணக்குப் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தார்.  அதனால் புள்ளியியல் துறைக்குப் போக நேர்ந்தது. அங்கிருந்து ஒரு லெஃப்ட் டர்ன் அடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று,  மென்பொருள் துறைக்கு வந்து சேர்ந்தார்.

கல்வி ஜானகிராமனை ராயப்பேட்டை யிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தது. அங்கே சிலகாலம் பணிபுரிந்துவிட்டு, அமெரிக்காவுக்குப் போனார். நல்ல வேலை, நினைத்ததைவிட நிறைய சம்பளம். அவர் வளர்ந்த ஏரியாவில் “அவனுக்கு என்னப்பா? அவன்தான் நம்ம ஏரியா ஹீரோ” எனச் சொல்லத் தேவையான அனைத்தையும் அப்போதே செய்திருந்தார். ஆனால், ஆலமரங்கள் வேரோடு நிறுத்திக்கொள்வதில்லை. விழுதுகளைப் பரப்பிக்கொண்டேதானிருக்கும்.

அமெரிக்காவிலிருந்தபோது வேலையே தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால், பொழுதுபோக்குக்காக sysindia.com என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ஜானகிராமன். இந்தியாவிலிருந்து வெளியேறிப் பிற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான தளம் அது. காலையில் 8 மணி நேரம் அலுவலகம். அதன்பின் இந்தத் தளம். இதன் புரொகிராமிங், டிசைனிங், மார்க்கெட்டிங் என எல்லா வேலைகளும் ஜானகிராமன் ஒருவரே செய்துவந்தார். மாலையில் வாடிக்கையாளர்கள் அழைப்பார்கள். அதற்குப் பதில் சொல்லும் கஸ்டமர் கேர் எக்ஸ்க்யூட்டிவ்வும் அவரே.

sysindia.com தளத்தில் பல சேவைகள் இருந்தன. அதில் ஒன்றுதான் திருமண வரன்கள். அந்தத் தளத்துக்கு வந்தவர்களில் அதிகமானோர் பயன்படுத்திய சேவை அதுதான். மற்ற நாட்டினரைவிட இந்தியர்கள் திருமணங்களுக்கு அதிக முக்கியத்துக்கும் கொடுப் பவர்கள். அதை ஜானகிராமனின் இணையதளம் எடுத்துச் சொல்லியது. இதில் மிகப்பெரிய தொழிலுக்கான வாய்ப்பு இருப்பதாக ஜானகிராமன் நம்பினார்.

சிலிக்கான் வேலியில், சில முதலீட்டாளர்களிடம் தன் ஐடியாவை முன்வைத்தார். சொல்லி வைத்ததுபோல அனைவரும் அதை நிராகரித்தார்கள். ``திருமணம் செய்ய இணையதளமா?” என்ற அவர்களின் கேள்வி அந்த நாட்டில் சரியானது தான். அதையே டேட்டிங் ஐடியாவாக மாற்றியிருந்தால் டாலர்களைக் கொட்டியிருப்பார்கள். இந்தக் கலாசார வித்தியாசத்தை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், ஜானகிராமனுக்குப் புரிந்தது. தன் வாழ்க்கையில் மேஜிக் செய்யப்போகும் ஜீபூம்பா அதுதான் என உறுதியாக நம்பினார்.

பொதுவாக இந்தியாவில் வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப்களுக்கு உலக அளவில் ஒரு ரெஃபரென்ஸ் இருக்கும். அதன் வெற்றி தரும் நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்குவார்கள். ஃப்ளிப்கார்ட் போன்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர்கள் அதே போன்ற வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து, அந்த அனுபவத்தில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொடங்குவார்கள். அல்லது, பரம்பரை பரம்பரையாகச் செய்துவந்த தொழிலை நவீனப்படுத்தி அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள். ஆனால், இதில் எந்த வகையிலும் சேராத, வியாபாரக் குடும்பத்தைச் சாராத ஜானகிராமன் எந்த நம்பிக்கையில் அமெரிக்க வேலையை விட்டார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஆனால், அதைச் செய்தார் ஜானகிராமன்.  தன் ஐடியா செல்லுபடியாகும் இடம் இந்தியாதான் எனத் தீர்க்கமாக நம்பினார். 

கேம் சேஞ்சர்ஸ் - 22 - BharatMatrimony

1999-ல் Tamilmatrimony.com என்ற இணையதளத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சந்தித்த பிரச்னை வேறு. இந்தியர்களுக்குத் திருமணத்தில் உதவி தேவைதான். ஆனால், அதைச் செய்ய நம்பிக்கையான ஒருவர்தான் தேவை. குடும்ப நண்பரோ, நலம் விரும்பிகளோ சொல்வதைத்தான் அவர்கள் கேட்பார்கள். தரகர்கள் மூலம் வரன்கள் வந்தாலும் அதைத் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்துவிட்டுத்தான் ஓகே சொல்வார்கள். ஒருவேளை, திருமணத்துக்குப் பிறகு சிக்கல்கள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர் களையும் பஞ்சாயத்துக்கு அழைக்கும் வழக்கும் நம்மிடையே உண்டு. இந்தச் சூழலில் முன்பின் தெரியாத, மனித முகமே அல்லாத ஓர் இணையதளத்தை இந்தியர்களை நம்ப வைப்பது சாதாரண விஷயமல்ல. ஜானகிராமனுக்குத் தலையே சுற்றியது.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியானது. மேட்ரிமோனி தளம் மூலம் திருமணம் செய்தவர்கள் அதை மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தனர். தொழில் வளர்ந்தது, அதன் பின்னாலிருந்தது ஜானகிராமனின் அசுர உழைப்பு மட்டுமே. இன்று அவர்களிடம் 30 லட்சம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பணம் செலுத்திய உறுப்பினர்கள். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் திருமணத்துக்காக பாரத் மேட்ரிமோனிக்கு வருகிறார்கள். ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருமானம்  பார்க்கும் பாரத் மேட்ரிமோனி பங்குச் சந்தையிலும் காலடி வைத்தது. இன்று இதன் மதிப்பு 3000 கோடியைத் தாண்டும் என்று கணித்திருக்கிறார்கள். டாட் காம் பிரச்னை, பொருளாதார மந்த நிலை என, கடந்த 15 ஆண்டுகளில் உலகம் சந்தித்த அத்தனை பிரச்னைகளையும் ஜானகிராமனும் சந்தித்தார். அதிலிருந்து மீண்டதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

மேட்ரிமோனி தளத்துக்கு ஜானகிராமன் பெரிதாக எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஒரு நல்ல பிசினஸ் மாடல் அதுவே அதை விற்றுக்கொள்ளும்; பிரபலமாக்கிக்கொள்ளும் என்பார் ஜானகிராமன். வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்வதும், அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வதுமே மிகச் சிறந்த மார்க்கெட்டிங் உத்தி என்ற அவர் நம்பிக்கை இந்தத் தொழிலுக்குச் சரியாக இருந்தது. ``எங்கள் வெற்றிக்குக் காரணம் தொழில்நுட்பம் அல்ல; எங்களுக்குத் தேவையானதைச் செய்ய, தொழில்நுட்பத்தை நாங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டோம் என்பதுதான்” என்ற ஜானகிராமனின் சொற்களை ஸ்டார்ட் அப் ஆர்வலர்கள் தங்கள் மொபைல் வால்பேப்பராகவே வைத்துக்கொள்ளலாம். எனக்கு கோடிங் தெரியும்; நானும் மார்க் சக்கர்பெர்க் ஆகப் போகிறேன் என்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை ஜானகிராமனின் இந்த வாக்கியம் தெளிவாக விளக்கும்.

குடும்பத்தில் வழிகாட்டவும் யாருமில்லை. தொழிலில் வழிநடத்தவும் ஆளில்லை. ஜானகிராமனுக்கு குருவாக, வழிகாட்டியாக யாருமே இருந்ததில்லை. ஆனால், அதுதான் அவரின் பலம். இணையம் சார்ந்த தொழிலில் வெற்றிபெற்ற ஒவ்வொருவரும் அவருக்கு இன்ஸ்பிரேஷன்ஸ்தான். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருந்தன; ஜானகிராமன் கற்றுக்கொண்டார்.

இப்போது, அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அந்தப் பட்டியலில் மிக முக்கியமானது என நான் நினைப்பது இதுதான்: இணைய உலகில் வெற்றிக்கான கதவுகள் யாருக்கு வேண்டுமென்றாலும் திறக்கும். நம் வேலை, கொஞ்சம் அறிவும் நிறைய உழைப்பும் கொண்டு அந்தக் கதவைத் தட்டிக் கொண்டேயிருப்பதுதான்.

கார்க்கி பவா