மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 46

சோறு முக்கியம் பாஸ்! - 46
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 46

சோறு முக்கியம் பாஸ்! - 46

ணவு சிறக்க உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய அறுசுவைகள் தேவை. ஆனால் உணவகம் சிறக்க இந்த அறுசுவைகள் மட்டும் போதாது. அறுசுவைகளோடு சேர்த்து அன்பு, உபசரிப்பு, புன்சிரிப்பு என நவசுவைகள் வேண்டும். இந்த உளவியலைத்தான், ‘ஒப்பிய உவகையோடு உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்... முப்பழமொடு பாலண்ணம் முகம் கடுத்திடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும்தானே’ என்று ஒளவை பாடுகிறார். எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் உபசரிப்பில் குறையிருந்தால் ருசிக்காது. இதைப் பல உணவகங்களில் அனுபவபூர்வமாக உணரமுடியும்.

சோறு முக்கியம் பாஸ்! - 46

தமிழர்கள் ‘விருந்தோம்பல்’ என்று ஒரு நுட்பமான வார்த்தையை உருவாக்கியிருக் கிறார்கள். விருந்து மட்டுமல்ல... அதை ஓம்பும் தன்மையும்தான் ருசியைத் தீர்மானிக்கும்.

தரமான ருசியான உணவு, அன்பும் அக்கறையுமான உபசரிப்பு... இரண்டும் இருக்கிற உணவகங்கள்தாம்  காலம் கடந்து நிலைத்து நிற்கின்றன. புதுக்கோட்டை, தெற்கு 4-ம் வீதியில் 40 ஆண்டுகளாகச் செயல்படும் பழனியப்பா மெஸ் இதற்கு நல்ல உதாரணம்.

புதுக்கோட்டையில்  எந்த திசையில் நின்று கேட்டாலும் உணவகத்துக்கு வழி காட்டுகிறார்கள். பழைமையான கட்டடம். ஒவ்வாமையாகும் உணவுகள், உணவின் மருத்துவத் தன்மைகள், உணவில் குறையிருந்தால் புகார் செய்ய வேண்டிய எண்கள் எனச் சுவர்களெங்கும் விதவிதமாக, போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள்.

சோறு முக்கியம் பாஸ்! - 46



உள்ளே நுழைந்தால் கல்யாண வீடு மாதிரி பரபரப்பாக இருக்கிறது. ஹால், திறந்த வெளி, ஏசி என 70 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு விசாலமான டைனிங். முகப்பில் தொடுகறி வகைகளை வகைவகையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். உள்ளே நின்றுகொண்டு ஒவ்வோர் இலையாகப் பார்த்து ‘அதை வை’, ‘இதை வை’  என்று உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார் உணவகத்தின் உரிமையாளர் பழனியப்பன்.

 உணவகத் தொழில்மீதான ஆர்வத்தில் பழனியப்பன் ஆசிரியர்  வேலையை  விட்டுவிட்டு 14 ஆண்டுகள் வெவ்வேறு உணவகங்களில் பணியாற்றி அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். அன்று இருந்த ஈடுபாடு இன்றும் இருக்கிறது.

பழனியப்பா மெஸ்ஸில் முழுச்சாப்பாடு 80 ரூபாய். சாதம், ஒரு பொரியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், ரசம், மோர். கேட்பவர்களுக்கு நாட்டுக்கோழிக் குழம்பும், காரக்குழம்பும் தருகிறார்கள். அதிக மசாலா சேர்மானங்கள் இல்லாமல் புதுக்கோட்டை வட்டாரத்துக்கேயான இயல்பான வீட்டு ருசி.  இலையைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறார்கள்.

வழக்கமாக, உணவகங்களில் இலையைப் போட்டாலே ஒரு சாப்பாட்டுக் கணக்குப் போட்டுக் காசைக் கறந்துவிடுவார்கள். இங்கு அரைச்சாப்பாடு, கால் சாப்பாடெல்லாம் தருகிறார்கள். கால் சாப்பாடு 40 ரூபாய். சாதம் மட்டும் அளவாகத் தருகிறார்கள். மற்றபடி குழம்பு, தொடுகறிகள் எல்லாம் வேண்டுமளவுக்கு வாங்கிக்கொள்ளலாம். கால் சாப்பாடு, அரைச் சாப்பாடு வாங்கியவர்கள் கூடுதலாக சாதம் வாங்க விரும்பினால் கூடுதலாக 5 ரூபாய் கொடுத்தால் போதும்.

பழனியப்பா மெஸ்ஸின் ஸ்பெஷல், பிரியாணி வகைகள். மட்டன் பிரியாணி, கோழி லெக்பீஸ் பிரியாணி இரண்டும் சிறப்பு. தேவைக்கேற்ப அரை பிளேட், கால் பிளேட்கூட வாங்கிக்கொள்ளலாம். தென்னிந்திய அசைவத் தொடுகறிகள் அனைத்தையும் அதன் அசல் தன்மையோடு பழனியப்பா மெஸ்ஸில் சாப்பிடலாம்.  செட்டிநாடு கோழி வறுவல், சாப்ஸ், பிரட்டல், சுக்கா, எலும்பில்லாத வறுவல் என சிக்கனில் பல வகைகள் வைத்திருக்கிறார்கள். தந்தூரி, லாலிபாப் வகையறாக்களும் உண்டு. நாட்டுக்கோழி வகைகளும் உண்டு.

மட்டனில் தலை முதல் கால் வரை எல்லாம் சாப்பிடலாம். அதிகம் கருக்காத செமி கிரேவி பதத்திலான சுக்கா, வறுவல், எலும்புப் பிரட்டல், குடல் வறுவல், ஈரல் சுக்கா, தலைக்கறி, மூளை வறுவல் என மட்டனிலும் நிறைய வகைகள் உள்ளன. முட்டை வடிவில் தருகிற மட்டன் கோலாவும் வித்தியாசமாக இருக்கிறது.

மீன் விரும்பிகளுக்கு பழனியப்பா மெஸ் நல்லனுபவம் தரும். விறால், கெளுத்தி, அயிரை என  தினமொரு ஏரிமீன் குழம்பு சாப்பிடலாம். செம்மண் ஏரி மீனுக்கு இயல்பாகவே தனி ருசி உண்டு. புதுக்கோட்டை மசாலா ருசியை அதிகமாக்குக்கிறது. தஞ்சை, புதுக்கோட்டை வட்டார கடல் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் முரல் மீன் குழம்பும் வறுவலும் பழனியப்பா மெஸ் ஸ்பெஷல். முள் இல்லாமல் கேக் மாதிரி சதை மட்டும் வருகிறது. தூள் மீன் என்ற வகையும் சிறப்பாக இருக்கிறது. இறால், நண்டும் உண்டு, காடையிலும் நிறைய வகைகள் வைத்திருக்கிறார்கள்.

காலை 7 மணிக்கெல்லாம் மெஸ்ஸைத் திறந்து விடுகிறார்கள். திறந்தவுடன் சுடச்சுட ஆட்டுக்கால் சூப் தருகிறார்கள்.  வெறும் சூப் 5 ரூபாய்தான். காலோடு வேண்டுமானால் 16 ரூபாய். ‘சுள்’ளென்று இருக்கிறது. வழக்கமான சிற்றுண்டிகளும் உண்டு. 11 மணியிலிருந்து இரவு 10 மணிவரை சாப்பாடு, தொடுகறி வகைகள் சாப்பிடலாம். இரவு, இடியாப்பம், ஆப்பம், தோசை வகைகள் சாப்பிடலாம்.

``மத்த தொழில்கள் மாதிரியில்லை உணவகத்தொழில். அறத்தோடவும் அர்ப்பணிப்போடவும் செய்யணும். நாப்பது வருஷம் முன்னாடி மெஸ்ஸுக்கு வந்தவங்க இப்பவும் வாடிக்கையாளரா இருக்காங்க. அந்த அளவுக்கு நாங்க உறவை பலப்படுத்தி வெச்சிருக்கோம். வீட்டுக்கு எப்படி பொருள்களைப் பார்த்துப் பார்த்து வாங்குவோமோ அப்படித்தான் மெஸ்ஸுக்கும் வாங்குவோம். சமைக்கிறதும் அப்படித்தான். பசியோடு வர்றவங்களை மனம் நோகாம வரவேற்று உபசரிக்க ஊழியர்களுக்கெல்லாம் கத்துக் கொடுத்திருக்கோம். பழனியப்பா மெஸ் இன்னைக்கும்  வேகத்தோட இயங்க அதுதான் காரணம்...” என்கிறார் பழனியப்பன்.

புதுக்கோட்டைப் பக்கம் செல்லும்  ஃபுட்டீஸ்... பழனியப்பா மெஸ்ஸைத் தவறவிடாதீர்கள்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: தே.தீட்ஷித்

சோறு முக்கியம் பாஸ்! - 46

ஃபுட் அலர்ஜி ஏற்படுவது ஏன்... தவிர்ப்பது எப்படி?

நா
ம் சாப்பிடும் உணவுகளிலிருந்து கிடைக்கும்  ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கலந்து அதன் வழியாக நம் உடலுறுப்புகளுக்குச் செல்கின்றன. குறிப்பிட்ட  ஊட்டச்சத்துகள் ரத்தத்தில் கலக்கும்போது  சிலரின்  உடல் அதை ஏற்றுக்கொள்ளாமல், உடனே எதிர்வினை ஆற்றும். அதனால்,  தலைவலி, வாந்தி, அரிப்பு, தும்மல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதைத்தான் நாம் ஃபுட் அலர்ஜி என்கிறோம். சிலருக்குக் கத்திரிக்காய், கருவாடு போன்ற உணவுகளைச் சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும். பெரும்பாலானவர்களுக்கு பால் பொருள்கள் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு நிலக்கடலை, முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டால் தும்மல், வாந்தி, தலைவலி உண்டாகும்.  இப்படிப் பல வகையான உணவு ஒவ்வாமைகள் இருக்கின்றன. சாப்பிட்ட பின்னர் இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தோன்றினால் அந்த உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. மருத்துவமனைகளில் ஃபுட் அலர்ஜி டெஸ்ட் என்ற ஒரு பரிசோதனை இருக்கிறது. அதைச் செய்துபார்த்தால், அவரவர் உடலமைப்புக்கு, எந்தமாதிரியான உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அந்த உணவுகளைத் தவிர்த்து, தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படாமல் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.