மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 22

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

‘ஒவ்வொரு கலைஞனும் ஆரம்ப காலத்தில் கத்துக்குட்டிதான்!’ - ரால்ஃப் வால்டோ எமர்சன்.

 அணுகுண்டு ஜர்க்கினை அணிந்தபடி, இரண்டு கைகளிலும் கனரகத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வெறிகொண்டு சுட்டுக்கொண்டிருந்தார் விஜயகாந்த். கீழே `புரட்சிக்கலைஞர் நடிக்கும் கேப்டன் பிரபாகரன்’ என்று பேனரில் எழுதிக்கொண்டிருந்தார் டிஸோசா. சட்டகத்தில் இழுத்துக் கட்டும் போதுதான் கவனித்தார். ``லேய் எரப்பானி... விசயகாந்துக்குக் கண்ணுதாம்லே விசேசம்... சுடலமாடன் கணக்கா உக்ரமா இருக்கும். கைல துப்பாக்கிய வெச்சுக்கிட்டு... கண்ணு சும்மா தெறிக்கவேணாமா!” என்று காடாத்துணியை சட்டகத்தில் இறுக்கிக் கட்டி, சாந்தமாக இருந்த கண்களை உக்கிரமாக தனது தூரிகையால் எழுதினார் டிஸோசா. 

நான்காம் சுவர் - 22

திருநெல்வேலியிலிருந்து குடும்பத்தோடு சென்னைக்கு வந்து இருபது வருடம் வாழ்ந்தாலும், மனிதருக்கு அந்த பாஷை மட்டும் மாறவேயில்லை. நமக்கான மொழி என்பது, நம் நிறத்தைப்போன்றது; அழியாமல் இருக்கும் வல்லமைகொண்டது. சென்னையில் குடித்தன வாசல்கள் என்பது பிரசித்தம். அதை `காம்பவுண்டு’ என்பார்கள். மொத்தம் 10 அல்லது 16 குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தீப்பெட்டிகளைக் குழந்தைகள் விளையாட்டாக அடுக்கினால் ஒரு கட்டடம் எழும் அல்லவா... அப்படித்தான் இன்றைக்கும் பெரும்பாலான குடித்தன வாசல்கள் இருந்துகொண்டிருக்கின்றன.

அந்தக் குடித்தனங்களில் ஒன்று, பேனர் ஓவியர் டிஸோசாவின் குடும்பமும். எழுத, படிக்கத் தெரியாதவர் என்றாலும், வண்ணங்களைத் தொட்டு அவர் எழுதும் வார்த்தை ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருக்கும்.

``காடும் போச்சு... மாடும் போச்சு... என்னத்தச் செய்ய? ஆர்ட்டு எழுதப் பழகுனதால வண்டி ஓடுது” என்று சிரித்துக்கொள்வார். ரெபேக்காள் அக்காவுக்குத் தெரிந்ததெல்லாம், டிஸோ மாமாவின் சிரிப்பும் அவருடைய ஓவியங்களும்தான். உள்ளூர் தியேட்டர்களில் டிஸோசாவின் பேனர்களில்தான் ரஜினியும் கமலும், சிரித்தும் முறைத்தும் ரசித்துக்கொண்டுமிருப்பார்கள்.

எல்லா தியேட்டர்களின் கதவுகளும் டிஸோசாவுக்குத் திறந்திருக்கும். ஆகவே, நாங்கள் டிஸோவின் பெயரால் புதுப்படங்களை இலவசமாகப் பார்த்துக் களித்தோம். கதாநாயகிகளை வரைவதில் டிஸோ பிரபலம். அங்கங்களின் வளைவுகளை அதன் ரகசியங்களை விரசமின்றி, காதலாக வரைந்துவிடுவார். பலர் தியேட்டரில் வெளியே கிடக்கும் பேனரை வெறித்துக்கொண்டிருப்பார்கள்.

கொரில்லா பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி லின்ச்சுடு ஆயிலை சமவிகிதமாக ஊற்றிக் கலந்து, எனது கையில் குச்சியைக் கொடுத்து ``இந்தக் குச்சிய வெச்சு நல்லா கலக்கு” என்றார். ரொம்பவும் பிடித்தமான வேலை, குச்சியால் கலக்கக் கலக்க வண்ணங்கள் மாறி மாறி ரசவாதத்தில் ஒரு வண்ணம் வந்து நிற்கும். இடையில் வேறு நிற பவுடரைக் கொட்டி ``முழிக்காத கலக்கு” என்பார். திரும்பவும் வண்ணங்கள் ஜாலம்காட்டி நம்மைக் கிறங்கவைக்கும்.

``போதும் நிறுத்துல... இதான் ஒரிஜினல் பிங்க் கலருல... ஹீரோயினுங்க கன்னத்துல தடவுனா சும்மா ஜொலிக்கும்லே” என்றவர், பெயின்ட் டப்பாக்களை எடுத்து வைத்துக்கொண்டார்.

அப்போது கவுன்சிலர் எரிமலை வந்தார். டப்பாக்களை வைத்துக்கொண்டிருந்த டிஸோ, கவுன்சிலரை ஏறிட்டார். ``என்ன டிஸோ... வேலையெல்லாம் எப்படிப் போவுது?” யாரும் சொல்லாமல் அவரே உட்கார்ந்துகொண்டார். 

நான்காம் சுவர் - 22

``நல்லா போகுது சார்வாள்” என்று பேனருக்கான காடாவை ஓயர்க்கூடையில் மடித்து வைத்துவிட்டார்.

``நம்ம கட்சியோட மாநாடு வர்ற 21-ம் தேதி வருதுல்ல... அம்பது பேனர் தலைமையில வெக்கச் சொன்னாங்க. பேனருன்னா நமக்குத் தெரிஞ்சு யாரு, டிஸோதான். அதான், திருச்சியில வந்து மூணு நாள்ல முடிச்சுக் கொடுத்துட்டனா, நல்ல கூலியா தர்றேன். என்ன டிஸோ..?” எரிமலை சொல்லி முடித்தார்.

``கூலின்னு சொல்லாதீங்க சார்வாள். இது கலை. காலத்துக்கும் நிக்கப்போற கலைக்கு `கூலி’ன்னு சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க. கலைஞனுக்குக் குடுக்குற காச `சன்மானம்’னு சொல்லக் கத்துக்கிடுங்க சார்வாள்” என்று கொஞ்சம் காட்டமாகவே சொன்னார் டிஸோ.

எரிமலை, டிஸோவின் கோபத்தைப் புரிந்துகொண்டாரா எனத் தெரியவில்லை... ஆனால், சமாளித்தார். அரசியல் என்பதே சமாளித்தல்தானே! எந்தச் சூழ்நிலையென்றாலும் அவர்களின் காரியத்துக்காக விழுந்து எழுவார்கள்.

``என்ன டிஸோ... ஏதோ சொல்லிட்டேன். அதுக்குப்போயி... நம்ம பேட்டையில உன்ன மாதிரி ஓவியன பார்க்க முடியுமா. இந்தா, இந்த முன்பணத்த சன்மானமா அட்வான்ஸுன்னு வெச்சுக்கோ. வேலை முடிஞ்சதும் மத்ததைப் பார்த்துக்கலாம்” என்று 50 ரூபாய்கொண்ட ஒரு கட்டை டிஸோ முன் நீட்டினார்.

``ஏய் ரெபேள்... என்ன செய்யுதா? ரெபேளு...”

உள்ளேயிருந்து வெளியே வந்தார்.

``இவாகிட்ட குடுங்க சார்வாள்...” ரெபேக்காள் பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே போனார்.

``எந்தத் தேதி நாம கிளம்புறோம்?”

``நாளைக்கு நைட் இங்கிருந்து பஸ்ஸு செட் பண்ணியிருக்கேன். அதுலேயே போயிடுவோம்” என்றார்.

``நாங்க மூணு பேரு வருவோம். முன்சீட்டைக் கொடுத்திருங்க சார்வாள். மெட்டீரியலல்லாம் திருச்சியிலே வாங்கிருவோம்” என்று கிளம்பினார்.

எனக்கு முழு ஆண்டுப் பரீட்சை விடுமுறை என்பதால், `டிஸோவோடு போனால் என்ன?’ எனத் தோன்றியது. ஆனால், அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே! வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்தவரிடம் கேட்டுவிடலாமென்று கேட்டேன்.

``எல அது மாநாடு... உன்ன எங்கியாவது தொலச்சிட்டனா, உங்கப்பனுக்கு யாருல பதில் சொல்றது?”

அவர் சொல்வது நியாயம்தான் என்றாலும், ஊர்சுற்றுவது `உள்ளூரப் போயேதீரவேண்டும்’ எனச் சொல்லிக்கொண்டிருந்தது.

``அத நான் பார்த்துக்கிறன் மாமா... வந்தா பெயின்ட் கலக்கிக் கொடுக்க உதவும்ல” வேலையின் நிமித்தமாகக் கொக்கி போட்டேன்.

``மண்ணுக்குப் போற வீட்ட நிமித்திக் கட்டிருவல்ல... என்னமா கொக்கிப் போடுதான்பாரு ரெபேளு...” ரெபேக்காள் சிரித்துக்கொண்டார். அப்பாவிடம் டிஸோவே பேசி, சம்மதம் வாங்கி என்னையும் கூட்டிக்கொண்டு போனார். எனது முதல் பயணம் அரசியல் மாநாடு என்பது, கொஞ்சம் ஆணவமாகத்தான் இருந்தது. 

நான்காம் சுவர் - 22

கக்கன்ஜி மன்றத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தில் கொடி கட்டி, எரிமலையின் முகம்கொண்ட போஸ்டரோடு `ஐநா-வின் சொத்தே... எங்கள் எரிமலையின் தெய்வமே’ என்றெல்லாம் வாசகங்கள் பொறித்திருந்தன. மந்திரி வெள்ளையில் பளீரெனக் கரை வேட்டிகள், ரேஷன் கடையில் பொங்கல் பரிசை வாங்குவதுபோல முண்டியடித்துக் கொண்டிருந்தன. போகிறபோக்கில் முன்சீட்டு அல்ல, டிரைவருக்கே சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. எரிமலை, கனன்றுகொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்ததும் ``வாங்க டிஸோ... சீக்கிரம் ஏறுங்க... கிளம்பலாம்” என்றார்.

மிட்டாய்க்கடையில் ஈக்களைப்போல் மொய்த்துக்கொண்டிருந்த பேருந்தைப் பார்த்துவிட்டு ஒருமுறை முறைத்தார். உடனே சுதாரித்த எரிமலை ``டிஸோ... நீ கேட்ட முன்சீட்டு அப்படியே இருக்கு. எரிமல சொன்னா செய்வான் டிஸோ” என்றதும் டிஸோ அமைதியானார். எரிமலையைப் பார்த்தால் ஊரே கொஞ்சம் நடுங்கித்தான்போகும். ஆனால் டிஸோ, யாருக்காகவும் நடுங்க மாட்டார். அப்புறம் டிஸோவை விட்டால் 100 அடி கார்னர் கட் அவுட்டை வரைய, இரண்டு மூன்று கில்லிகள்தான் இருக்கிறார்கள். வேறு யாரையாவது வரையச் சொன்னால், கட்அவுட்டில் தலைவருக்குப் பதில் கவுண்டமணியின் முகம் அஷ்டகோணலாக வந்து ஜல்லியடிக்கும். டிஸோ என்கிற ஓவியன், போனதடவை வரைந்ததைத் தலைவர் வெகுவாக ரசித்தார் என்பதால், டிஸோ என்ன சொன்னாலும் எரிமலை கேட்டுக்கொள்வார்.

ஒருவழியாக மாநாட்டு மைதானத்தில் சிக்கித் திணறி, பேருந்து வந்து நின்றது. எங்களுக்கான அறையை ஒழுங்கு செய்திருந்தார் எரிமலை. கரைகளும் அல்லைகளும் அந்தக் காலையிலும் சரக்குகளைத் தேடி அலைந்துகொண்டிருந்தன. முறைப்படி மாநாட்டுப் பந்தலின் பின்புறம் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்த அறிஞர் பெருமக்கள், தாவிக் குதித்துக் கைப்பற்ற வெகுண்டேழுந்தார்கள்.

``சரக்கு போடணும், பிரியாணி திங்கணும்னே வருவானுகளாடே... சவட்டு மூதிங்க. இப்படி யிருந்தா எப்படிலே வெளங்குறது?” கடிந்து கொண்ட டிஸோ, மலர்ச்சிகொள்ளக் கழிவறைக்குள் நுழைந்தார். எனக்கு `புது இடம்... புதுவிதமான மனிதர்கள்’ என சந்தோஷமாய் இருந்தது.

தலைவரின் புகைப்படத்தை, டிஸோவிடம் கொடுத்தார் எரிமலை. மைக்கில் தீவிரமாக யாருக்கோ சவால் விடுவதைப்போல இருந்தது அவரது முழக்கம். ``தலைவர் மேடையில உக்கார்றதுக்கு எதுக்க வெக்கிறது டிஸோ... வேற வழியே இல்ல... தலைவர் பார்த்துதான் ஆகணும். தலைவரே மிரண்டுபோறா மாதிரி இருக்கணும். நம்ம பேரு துடிக்கலா இருக்கணும். தலைவரு மனம் குளிர்ந்துச்சுன்னா, நமக்கு எம்.எல்.ஏ சீட்தான். எல்லாம் உன் கையிலதான் டிஸோ” என்று கையைப் பிடித்துக்கொண்டார் எரிமலை.

``நீங்க நிம்மதியா போங்க சார்வாள்... எம்.எல்.ஏ சீட் உங்களுக்குத்தான் தருவார். என்னலே சொல்லுதீய..?” என்றதும் எரிமலை திரும்பி, மாநாட்டுப் பந்தலை நோக்கி ஒரு எம்.எல்.ஏ-வாக நடந்து சென்றார்.

பிளைவுட்டைப் படுக்கப்போட்டார். புகைப் படத்தை உற்றுப்பார்த்தார். ஏதேதோ மார்க்கைப் போட்டார். நூலைக்கொண்டு இங்கும் அங்குமாய்க் கோடுகளைப் போட்டார். பெரிய டப்பாவில் கொரில்லா பவுடர்களைத் தனித்தனி கலராக எடுத்துக்கொண்டு, தனித்தனி டப்பாவில் கொட்டினார். லின்ச்சு ஆயிலை ஊற்றிக் கலக்கச் சொன்னார். நானும் கலந்தேன். டிஸோ, பிளைவுட்டை என்னென்னமோ செய்து பதமாக்கிக்கொண்டிருந்தார். நாங்களும் கலக்கி முடித்தோம். 100 அடி கொண்ட பிரமாண்டமான பலகையில் தனது முதல் கோட்டை பிரஷ்ஷால் தீட்டினார். காலுக்கு அடியில் இருப்பதால், ஏதோ பலகைக்கு பெயின்ட் அடிப்பதைப் போலவே எனக்கிருந்தது.

கொஞ்ச நேரத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்து அவர் தீட்டிய மாத்திரத்தில் தலைவரின் முடி மாதிரி தெரிந்தது. இரண்டு வெள்ளை சொள்ளைகள் வந்தார்கள். ``பாஸு... தலைவரு படம் சும்மா நச்சுன்னு வரணும்” என்று டிஸோவிடம் சொன்னார்கள்.

டிஸோ அவர்களை வேற்றுக்கிரக வாசிகளைப் போலப் பார்த்துவிட்டு, திரும்பவும் தனது தீற்றலில் மூழ்கினார். கலந்து வைத்த ஒரு நிறத்தை எடுத்துவரச் சொன்னார். எடுத்துக்கொண்டு போனேன்.

``எவன்லாம் பிரியாணி வாங்கித் தர்றானோ... அவனையெல்லாம் `தலைவர்’னு சொல்லுதானுங்க. தறுதலப்பயலுவ. நாடும் வெளங்கும்... வீடும் கொள்ளும்...” என்றவர் தலைமுடியோடு நெற்றியையும் கொண்டுவந்தார். சுற்றிலும் கார்களும் கரைகளுமாகவே காட்சியளித்துக்கொண்டிருந்தன.

எங்களுக்கும் பிரியாணி வந்தது. கறிகளைக் கடித்துத் துப்பிக்கொண்டிருக்கையில் ``எல மக்கா... நல்லா படிலே... இப்பிடி ஊரச்சுத்திக்கிட்டு வாரதுல சொகம் காணாத கேட்டியா..?” தண்ணீரைக் குடித்துக்கொண்டார்.

``மாமா, இத்துனூண்டு போட்டா வெச்சிக்கினு இவ்ளோ பெருசா வரையிற! எப்பிடி மாமா?” டிஸோ சிரித்துக்கொண்டார்.

``எல இதொரு கணக்குல... நீங்க படிக்கிற இன்ஜினீயரிங் மாதிரி... இந்த மெஸர்மென்டுல இடதுகண்ணு இங்கிட்டு முழிஞ்சி சிரிச்சுதுன்னா... வலது கண்ணு இங்கிட்டு சாஞ்சு சிரிக்கணும். ஓவியத்துல மொதக் கோடுதாம்ல நமக்குத் தெரியும். கடைசிக் கோடு என்னான்னு அந்த ஓவியத்துக்குத்தாம்ல தெரியும். வாழ்க்கையே வண்ணமா விரிஞ்சு கெடக்குல. அத செத்திக்கானும் எடுத்துத் தீட்டிப்பாருல. ஓவியம் பழகும்... அப்பிடித்தாம்ல இதெல்லாம்” என்றார். சுத்தமாக எனக்குப் புரியவில்லை.

அந்தி நேரம். டிஸோ, தனது தீற்றலை மும்முரப்படுத்திக்கொண்டிருந்தார். தலைவர் கொஞ்சம் கொஞ்சமாக வருவதைப் போன்ற பிம்பம் வந்து கொண்டிருந்தது. ஒரு கோடு போட்டு உருண்டையாய் தலைவர் முகத்து அருகே தீட்டினார். பிறகுதான் தெரிந்தது, அது தலைவர் பேசிக்கொண்டிருக்கும் மைக்கென்று.

இப்போது டிஸோவின் ஓவிய நடனத்தில் தலைவர் பிரசவித்துக்கொண்டிருந்தார். தேநீர் இடைவேளையில் ``மாமா... மொகம் வரைஞ்சாலும் முழுசா தலைவர் மொகம் தெரியலியே!” என்றதற்கு, ``கட்டவுட்ட நிமித்தினாத்தாம்ல எனக்கே எப்புடி வந்திருக்குன்னு தெரியும். ஆனா, என் கணக்கு மிஸ்ஸாவாதுல...” என்று மீண்டும் தனது ஓவிய நடனத்தை ஆரம்பித்தார். கலர்கலராய் ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருப்பதாகவே நம்பினேன். `சிறந்த கலைஞன் என்பவன் அதீத சந்தேகம் கொண்டவனாகத்தான் இருக்கிறான். அவன் படைத்த எதையும் அவன் உடனே நம்பத் தயாராக இருப்பதில்லை. சமாதானப் பரிசுகளை மூடர்களுக்கே கடவுள் தந்துவிடுகிறான்’  என்று ராபர்ட் ஹீயுக்ஸ் சொன்னதைப்போல. கட் அவுட்டை நிமித்தி வைக்கும் வரை டிஸோ சந்தேகம்கொண்டவராகவே இருந்தார். ஆங்காங்கே எதையோ தீட்டினார். பிறகு எதையோ அழித்தார்.

சாரத்தில் நிமிர்த்தி வைத்தபோது எரிமலை காட்டிய புகைப்படத்தைவிட, தலைவர் மிகவும் அழகாக அந்நிய நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார். அவ்வளவு துல்லியமாக டிஸோ வரைந்தது எனக்கு பேராச்சர்யங்களில் ஒன்று. டிஸோ, சிறிது நேரம் கட் அவுட்டைப் பார்த்தார். ``கணக்கு சரியா வந்திருச்சுல... நாளைக்கு பேரை எழுதிருவோம்” என்று அவர்பாட்டுக்குக் கிளம்பிப் போனார். இப்பேர்ப்பட்ட கலைஞனை நான் சாதாரணமாகப் பார்க்கிறேன் இத்தனை நாள்களாக.

தலைவர் கட் அவுட்டைப் பார்த்து, வருகிற எல்லாக் கட்சி மாநாட்டுக்கும் டிஸோவையே ஒப்பந்தம் செய்யும்படி சொல்லியிருக்கிறார். பெரிய வாய்ப்புதான். ஆனால், டிஸோ மறுத்துவிட்டார். ``வேணாம்ல, மரியாத தெரியாத பயலுவ அவனுவ... நமக்குக் காசு பார்க்கணும்தான். ஆனா, அதவிட மரியாத முக்கியம்ல... வரையுறவன் பிரம்மால... இந்தப் பக்கியளுக்கு அது புரியாது. `தலைவரு மூக்கச் சுருக்கிட்ட... நெத்தியப் பெருசாக்கிட்டே’ன்னு மல்லுக்கு நிப்பானுங்க. அதவிட நாலு ஷோவுக்கு பேனர் எழுதுனம்னா, நின்னு பாத்துட்டு ரசிச்சிட்டுப் போவானுங்கல்ல... அந்த ரசனைக்குத்தாம்ல எழுதணும்... கேட்டியா...” என்றார். கலைஞர்கள் அப்படித்தான். கைத்தட்டல்களிலிருந்து விளைகிற நெல்மணிகளைச் சோறாக்கி உண்பவர்கள்.
 
எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. பல வருடம் கழித்து நண்பனின் கிரகப்பிரவேச வீட்டில் டிஸோவைச் சந்தித்தேன். வயதான ரேகைகள் முகத்தில் படிந்திருந்தன. அவரிடம் சென்று நலம் விசாரித்தேன். சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். ஒருதடவை பார்த்தாலும் வரைந்துவிடுகிற விரல்கள் அல்லவா...

``சொகமா இருக்கியால்லே?”

``இங்க என்ன மாமா பண்றீங்க?”

``அதக்கேக்கீயா... நான்தான்ல இந்த வீட்டுக்கு பெயின்ட் அடிச்சது... இப்போ மேஸ்திரில” என்று சிரித்துக்கொண்டார். தனக்கென ஓர் உலகம் அமைத்துக்கொண்டு இந்த உலகை வரைந்து கொண்டிருந்த டிஸோவின் முன்னால் `டிஜிட்டல்’ எனும் வரையும் இயந்திரம் வந்து நின்றது. அது, வரைந்துகொண்டிருந்த விரல்களை மௌஸைப் பிடிக்கவைத்தது. அடிப்படையில் கல்வி கற்றவர்கள், ஒரு மாதிரியாக கால முன்னேற்றத்துக்கு மாற முயன்றனர். ஆனால், ஓவியம் மட்டுமே பழகிய டிஸோவால், ஓவியம் வரைவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.

காடாத்துணி பேனர்கள், டிஜிட்டலில் வரத் தொடங்கின. கார்னர் விளம்பரங்கள் டிஜிட்டலில் மாறின. டிஸோவால் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ளவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. ``பிரஷ்ஷ புடிச்சு வரையுறதுதாம்ல ஓவியம். இந்தக் கம்ப்யூட்டர் மாயம் எத்தனை காலம்னு பாக்கன்” என்று பிடிவாதம்கொண்டார். ஆனால், `பசி’ என்ற ஒன்று எல்லாவற்றையும் ஜெயித்துவிடும். ஓவியர் டிஸோ, பெயின்டிங் மேஸ்திரியாக மாறிப்போனார்.

``கொஞ்சம் படிச்சிருந்தா நானும் ஆர்ட்டிஸ்ட்டா தொடர்ந்திருக்கலாம்தான்... ஓவியம்தான் இருக்கேன்னு நினைச்சுட்டேன். அடிப்படைப் படிப்பும் இருக்கணும்ல... மாற்றம் வந்துகிட்டேதான இருக்கும்... நாமதான் மாறிக்கிடணும் கேட்டியா... ஆனா ஒண்ணுல, அப்பவும் டிஸோ பிரஷ்தான் புடிச்சேன்... இப்பவும் பிரஷ்ஷதான் புடிக்கேன்” என்று சிரித்தார். அந்தச் சிரிப்பு ஒன்றுதான் டிஸோ வரைந்த ஓவியங்களில் மகத்தானதாக எனக்குப் பட்டது.

- மனிதர்கள் வருவார்கள்...