மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 23

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

ரு புள்ளியில்தான் நாம் நினைத்த அல்லது நினைக்கவே முடியாத சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்துவிடுகின்றன. ``அந்த நிமிஷம் ஒண்ணுமே தோணல சார்... `அவன் உயிரோடு இருக்கக் கூடாது’ன்னுதான் புத்தி சொல்லுச்சு. ஆனா காலம் கடந்து யோசிச்சா, என்னை மாதிரியே அவனோட புள்ளகுட்டிங்களும் அவன் இல்லாம தவிச்சிருக்கும்தானே சார்!” தக்காளி ராஜாவின் காலம்கடந்த இந்தக் குரல், எங்களைச் சுற்றி எழும்பியிருந்த கோட்டைச்சுவர்களில் மோதித் தெறித்தது. 

நான்காம் சுவர் - 23

மலைப்பாதையின் திருப்பத்தைப்போல்தான் இந்த வாழ்வு. எது வேண்டுமானாலும் நிகழலாம் அல்லது நிகழாமலும் போகலாம். ஒரு கண மூர்க்கம், நம்மைச் செயலிழக்கவைக்கிற தருணம்தான் நம் எல்லா வினைகளும். அப்படியான வினைகளின் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் கதைகளைக் கேட்கத்தான் இயக்குநர் அனிஸ் தலைமையில் நானும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் சிறைச்சாலைக்குள் சென்றோம்.

சிறை இல்லவாசிகளுக்கு நான் கதைகளைப் பற்றி உரையாடுவதற்கும், இசை பற்றிய புரிதலை ஜிப்ரான் உண்டாக்குவதற்குமான மூன்று நாள் பட்டறை அது. அந்த மூன்று நாளை எனக்குப் பரிசளித்த இயக்குநர் அனிஸோடு பெரிய இரும்புக்கதவைத் தாழ் திறந்து அதிகாரி கூட்டிச் சென்றார். உள்ளே கால் வைக்கும் நொடிக்கு முன்பு வரை, எனக்கிருந்த படிமங்கள் எப்படியெல்லாம் உடைந்துபோயின என்பதுதான், கிடைத்த படிப்பினை.

இயக்குநர் அனிஸ், சிறை இல்லவாசிகளிடம் ஏற்கெனவே ஒரு கதாநாயகனைப்போல் இருந்தார். `கைதிகள்’ என்று சொல்வதை அவர்கள் விரும்புவதில்லை என்பதால், அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர்தான் `சிறை இல்லவாசி’கள். அதிகாரிகள் வரவேற்று உபசரித்த பிறகு, இன்னொரு கதவு திறக்கப்பட்டது. ஒரு பல்கலைக்கழகம்போலவே எனக்குக் காட்சியளித்தது. இரு பக்கங்களும் செடிகள் எல்லாம் கர்மசிரத்தையாக வெட்டப்பட்டு, அழகாகக் காட்சியளித்தன. வெளியே இருப்பதைவிட உள்ளே அவ்வளவு சுத்தமாக இருந்தது. வெள்ளை உடையில் இல்லவாசிகள் ஆங்காங்கே நடந்தும் திரிந்தும் உட்கார்ந்துகொண்டும் இருந்தார்கள்.

என்னைப் பார்த்த அனிஸ் ``சார், இது தண்டனைக் கைதிகள் பிளாக். இங்க இருக்கிற இல்லவாசிங்க லைஃப்காரங்க. எப்படியெல்லாம் நேரத்த அமைச்சுக்கணும்னு இவங்ககிட்டதான் நாம கத்துக்க முடியும். அதனால்தான் ஏதாவது ஒரு வேலைய அவங்களே எடுத்துக்கிட்டுச் செய்ய ஆரம்பிச்சிருவாங்க” என்று கோரண்டியைத் தாண்டி நடந்தோம். 

நான்காம் சுவர் - 23

அவரிடம் ஓடிவந்த இல்லவாசிகள் ``சார்... எப்படி இருக்கீங்க? எல்லாம் ரெடி சார். ஐயாவும் வந்துட்டாங்க. ஆரம்பிச்சுடலாம் சார்” என்று அனிஸோடு கரைந்துருகினார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், ஜிப்ரானின் இசை வகுப்புக்குப் பெயர் கொடுத்தவர்களைவிட, கதை வகுப்புக்குப் பெயர் கொடுத்தவர்கள்தாம் அதிகம்.

``அனிஸ் சார்... கதைக்குத்தான் இங்க மவுசு ஜாஸ்திபோல” என்று ஜிப்ரான், அனிஸைக் கலாய்த்தார்.

``எல்லார்கிட்டயும் ஒரு கதை இருக்கு சார். அதை எப்படி ஆரம்பிக்கணும், எப்படி முடிக்கணும்னு தெரியல. அதுக்குத்தான் இந்த செஷன். கிட்டத்தட்ட இதுவும் ஒரு தெரபின்னு சொல்லலாம்” என்றார். ஜிப்ரான், அவருக்கு ஒதுக்கப்பட்ட பிளாக்கில் தனது இசையெனும் இன்ப வெள்ளத்தை மீட்டக் கிளம்பினார். அவருடன் பேராசிரியர் பிரபாகரனும் சென்றார்.

நானும் பேராசிரியர் தேவராஜும் கதை வகுப்புக்குச் சென்றோம். அந்த பிளாக், சிறை வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் பள்ளிக்கூடம். என்னதான் நாம் சிறப்பு விருந்தினர் என்றாலும், கதைகளைப் பற்றிப் பேச வந்திருந்தாலும், நம் முன்னால் உட்கார்ந்திருப்பவர்கள் யார் யாரென்று யோசிக்கும்போது, சற்றே பீதியாகத்தானிருந்தது. `ஆசிரியர் பாணியில் யாரையாவது அதட்டி உட்காரவைத்து, அவர் வெகுண்டெழுந்து... அந்த ஒரு கணம் நமக்கும் வாய்த்துவிடுமோ!’ என்று காலம்காலமாக ஊறிப்போன பொதுப்புத்தி உள்ளேயிருந்து குமைந்துகொண்டேயிருந்தது.

எல்லா பிளாக்குகளையும் சுற்றி ஒரு கோட்டைச்சுவர், அது மூடி, பெரிய இரும்புக்கதவு என்றுதான் இருந்தது. உள்ளே போனால் சிறிய கிராமத்தில் இருக்கும் நடுநிலைப் பள்ளிபோல அவ்வளவு அழகாய் இருந்தது சிறைப்பள்ளி. நூலகத்தைப் பல வருடங்களாகப் பராமரித்துவரும் திருக்குறள் அய்யா, எங்களை வரவேற்றுப் பாராட்டினார்.

வகுப்பறையில் இல்லவாசிகளுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நோட் - பேனாவோடும் தங்களது கதைகளோடும் வெறிகொண்டு எங்களுக்காகக் காத்திருந்தனர். வகுப்பறையில் நுழைந்ததும் எல்.கே.ஜி மாணவர்களைப்போல எழுந்து நின்று வணக்கம் வைத்தார்கள். எனக்கு உள்ளுக்குள் ஒரேயொரு கேள்விதான். `நாம் உண்மையில் சிறைச்சாலைக்குள்தான் இருக்கிறோமா?’ என்று. அனிஸ், எங்களை இல்லவாசிகளுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, ஜிப்ரானின் வகுப்புக்குச் சென்றார்.
ஒவ்வொருவராக பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் என்றபோது. ``என் பெயர் `தக்காளி’ ராஜா சார். கொலை வழக்குல லைஃப் சார்” என்று உட்கார, வரிசைக்கிரமமாக அவர்கள் உள்ளே வந்த காரணங்களைச் சொல்லி உட்கார உட்கார, உள்ளே இருக்கும் மிஸ்டர் பொதுப்புத்தி அவர்கள், `ஒருபோதும் யாரையும் திட்டிவிடாதே தம்பி’ என எச்சரித்துக்கொண்டேயிருந்தார்.

அறிமுகம் நடந்தேறியதும் கதைக்குள்ளே செல்லலாம் என்று பேச்சை ஆரம்பித்தேன். அப்போது ஓர் இல்லவாசி உள்ளே நுழைய அனுமதி கேட்டார். தினவெடுத்த தோள்களும் கடைந்தெடுத்த கட்டமைப்புமாக அப்படி இருந்தார் மனிதர். வெளியே யாரையாவது பார்த்தால் ``என்ன பண்றீங்க சார்?” என்று பொதுவாகக் கேட்போமல்லவா! ஆனால், உள்ளே ``என்ன பண்ணீங்க?” என்று கேட்பது இயல்பாக இருக்கிறது. உள்ளேயும் வெளியேயும் இவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் நாம் வாழ்வது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. 

வந்தவர் பெயரைச் சொன்னார். எதற்காக உள்ளே வந்தேன் என்று அவர் சொன்னபோது, நான் எழுந்து ``போய் உட்காருங்க நண்பா!” என்றதும் அவர் பொறுப்பாக தனது நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டார். பேராசிரியர், தனது அனுபவங்களைக் கதையாக மாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. ஒவ்வோர் இல்லவாசியும் தனக்கான குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எல்லோரின் முகங்களும் பிரகாசமாய் இருந்தன. கண்கள் மட்டும்தான் எதையோ தேடிக்கொண்டே இருந்தன. அவை, தன் பிள்ளையைப் பார்க்கத் தவித்துக்கொண்டிருந்தன; கூண்டுகளற்ற வெளியை தரிசிக்கக் காத்துக்கொண்டிருந்தன.

இந்த முறை `அவரவரின் சொந்தக் கதையைச் சொல்ல வேண்டும்!’ என்று ஒரு செஷன் வைத்தோம். ``ஆரம்பத்துல, நம்மல பார்த்தாலே பயப்படணும். `பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ன்னு தலைவரு சொல்வாரே... அப்பிடி கெத்தா இருக்கணும்னு நினைச்சுதான் சார் கத்திய கையில புடிச்சது. `வணக்கம் தல’, `வணக்கம் சாமி’ன்னு பெரிய பெரிய கைங்கெல்லாம் சொல்லும்போது, சும்மா கிர்ருன்னு இருந்துச்சு. ஆனா, போவ போவத்தான் சார் இதெல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லைன்னு தெரிஞ்சுது. ஊர்ப் பாவம் வேணாம்னு கத்திய கீழ போட்டா,  அது திரும்பி நம்மளையே வெட்ட சிநேதக்காரன் மூலமாவே வந்துச்சு சார். யார் துரோகம் பண்ணாலும், சிநேதக்காரன் துரோகம் பண்லாமா சார்? அதான் வேற வழியில்லாம அவனப் போட்டேன். சாட்சிங்க ஸ்ட்ராங்கா நின்னதால டபுள் லைஃப் வாங்கிக்கினு... உள்ளே இருக்கேன் சார்” திருக்குறளை ஒப்பிப்பதுபோல் கடகடவெனச் சொல்லி முடித்தார் ஒரு சிறை இல்லவாசி.

``நீங்க உள்ளே வந்து எத்தனை வருஷம் ஆச்சு நண்பா?”

``இதோட ஒரு லைஃப் முடிஞ்சிருச்சு சார். அதாவது 14 வருஷம். பொதுமன்னிப்புக்கு மனு போட்டிருக்கோம். வந்துச்சுன்னா நல்லாருக்கும்” என்றார். மேலும் அவரே தொடர்ந்தார். ``ஆனா, எம் பொண்ணுதான் சார்... அவ கொழந்தயா இருக்கும்போதே உள்ளே வந்ததால, அவள எப்பிடிப் பார்க்கப்போறன்னே தெரியல. ஏற்கெனவே `ஜெயிலுக்குப் போனவன் பொண்ணுதானே நீ’ன்னு அக்கம்பக்கத்துல பொண்ணுகிட்ட கேட்டுக் கேட்டு, அவளுக்கு என்னைப் புடிக்காமயேபோயிடுச்சு. மனு போட்டுப் பார்க்கக்கூட எம் பொண்டாட்டிதான் வர்றா. எம் பொண்ணுக்கு ஏதாவது செஞ்சா போதும் சார்” என்றவரின் கண்களில், நீர் தளும்பியது. எல்லா மனிதர்களுக்கும் ஓர் இடம் உண்டு. அந்த இடத்தை நீங்கள் நெருங்கும்போது, ஒன்று... தன்னை மறைத்துக்கொண்டு பதுங்கிவிடுவார்கள் அல்லது மடை திறந்து அழுதுவிடுவார்கள்.

இப்படியாக அவரவரின் கதைகள் பகைகளாலும் துரோகத்தாலும் இனத்துக்காகவும் என்று சொன்ன எல்லாவற்றையும் கேட்கக் கேட்க, உண்மையில் நான்தான் அவர்களிடம் கதைகளில் காணாத பாதைகளைக் கண்டுகொண்டிருந்தேன். வானுயர்ந்து நிற்கும் கோட்டைச்சுவர்கள், இல்லவாசிகளின் கதைகளைச் சுமந்து நின்றுகொண்டிருக்கின்றன. 

நான்காம் சுவர் - 23

ஒருவர் எழுந்தார். ``எனக்கு விடுதல வேணாம் சார். ஒரு நொடி கோபத்துல நான் பண்ண தப்புனால, வாழவேண்டிய வயசுல எம் பொண்டாட்டி... என் கேஸை நடத்திட்டு இருந்தா. என் விடுதலைக்காக சில்வர் பட்டறையில வேல செஞ்சு டி.பி வந்து செத்துப்போயிட்டா. அவளுக்காகத்தான் வெளியே வரணும். இப்போ அவளே இல்லை. நான் யாருக்காக சார் வெளிய வரணும்?” என்று கோபமாக உட்கார்ந்தவரின் மனம், எனக்குப் புரியத்தொடங்கியது. தனிமை என்பது எவ்வளவு கொடுமையானது! நமக்கென யாரும் இல்லாதபோது, `விடுதலை’ என்பதும் ஒரு வெற்றுச்சொல்தான்!

தக்காளி ராஜா எழுந்தார். ``சார், ஒரு பீருக்காக 18 வருஷமா இல்லவாசியா இருக்கேன் சார்” என்றார். ஒரு பீர் குடித்ததற்காக ஒரு மனிதனின் வாழ்வில் பேர்ப்பாதி நாள் தண்டனைக்குள்ளான தக்காளியின் முன்கதை.

தூத்துக்குடியில் எதற்கெடுத்தாலும் முன்கோபத்தால் அடித்துத் துவைத்தெடுக்கும் ஒருவனாகவே தக்காளி இருந்தான். கருவாட்டு மண்டியில் மூட்டை சுமந்தாலும் பவுசாக உடுத்திக்கொள்வதில் சோக்காளி கணக்காய் ஜொலிப்பான். ரசியாமணியை, அப்படிக் காதலித்தவன். ஆனால், ஊர் முச்சூடும் அவனை `படுக்காளி’ என்றே பார்த்தது. ரசியாமணி, தக்காளியை உளப்பூர்வமாகவே விரும்பினாள். அவன் போதாதகாலம், சிறுசிறு பிரச்னைகள் அவனைத் தேடி வந்தன அல்லது தேடிப் போனான்.

``எல... நீ இங்க இருந்தா சுத்தப்படாது. பேசாம மிக்கேலு மெட்ராஸுல பலக கட வெச்சிருக்கான். நீ அங்க போயி இரு. இங்க சோவாரிக்கிட்டு அலஞ்சதெல்லாம் போதும்” என்று கட்டக்கடைசியாக தக்காளியின் தகப்பன் சொல்லிவிட்டார். அப்பனின் நசை தாங்க முடியாமல் சென்னைக்கு வந்ததும்தான் தக்காளிக்கான நேரம் ஆரம்பமானது.

மைக்கேலின் குடோனில் ஏற்றுமதிக் கணக்கைப் பார்க்கும் வேலை. வந்த மறுநாளே லாரி டிரைவருக்கும் தக்காளிக்கும் தகராறு. ஏதோ மரியாதை குறைவாகப் பேசியதாக டிரைவரைப் பிரித்துமேய்ந்துவிட்டான். மைக்கேல் வந்து தக்காளியைக் கண்டிக்க, ``ஏவே... நீரு மாமாவா இருந்துட்டுபோரும்... அதுக்காக நீரு சொல்லுதக்கெல்லாம் தலயாட்ட நா உம்ம வீட்டு பொம்ம கெடயாது... கேட்டியா” என்று வேலைக்குச் சேர்ந்த மறுநாளே பெட்டியைக் கட்டிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். அப்போதுதான் தக்காளி உணர்ந்தான், `பொசுக்கென்ற முன்கோபத்தில் கையில் காசு இல்லை’ என்பதை.

திக்கு தெரியாமல் நின்றிருந்தவனுக்கு, இசக்கியின் நினைவு வந்தது. அவன் மேன்ஷனுக்கு போன் செய்தான். இசக்கியும் சந்தோஷமாய் ``மாப்ள, ஒண்ணும் பிரச்ன இல்ல... நேர்ல வா பேசிக்கிடுவோம்” என்ற அந்த நம்பிக்கை வார்த்தையின் பாதையில் தக்காளி, இசக்கியைக் கண்டடைந்தான். மேன்ஷனின் மொட்டைமாடியில் இசக்கியோடு முகம் தெரியாத இரண்டு நபர்கள் வட்டமாய் உட்கார்ந்தபடி சரக்கு போட்டுக்கொண்டிருந்தனர்.

தக்காளி உற்சாகமானான். ``வா மாப்ள... இவன் நம்ம ஜோட்டுக்காரண்டே... பேரு ராஜா. நாங்க `தக்காளி’ன்னு கூப்புடுவோம். இவாள்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்.” தக்காளி, அவர்களுடன் சேர்ந்து ஒரே ஒரு பீர்தான் அருந்தினான். பரஸ்பரம் அறிமுகம் மூன்றாவது சுற்றில் `வாடா போடா’ என்றானது.       
        
அப்போது ஒருவன் அழுதான். போதைக் குழுவில் யார் அழுதாலும் சக சிட்டிசன்கள் மலையைப் பெயர்த்தெடுத்து வந்து கண்களைத் துடைத்துவிடுவார்கள். அப்படித்தான் தக்காளியும் துடித்தான்.

``சொல்லுங்க பாஸு... யாரு அவன்?”

``அவன்தான் பாஸு எனக்கு வில்லன். அவன மட்டும் போட்டுட்டா, அஞ்சலி எனக்குத்தான்” என்று மறுபடியும் அழுதான்.

தக்காளி தனது பீரின் கால்வாசியை முழுவதுமாக நாட்டிவிட்டு, ``பாஸு... நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் குறுக்க ஓடிச்சிடணும். நா உன்னோட நிக்கேன். சம்பவத்த முடிங்க” என்றதுதான் தக்காளி அருளிய உற்சாக வார்த்தைகள்.  

ஆட்டோ, அந்தக் காதலன் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. மூவருக்கும் நல்ல போதை. ``மாப்ள ஆட்டோவுலயே உக்காரு... சோலிய முடிச்சுட்டு வந்துர்றோம். அப்புறம் வண்டி ஏத்திவிடுறேன்” என்று, தக்காளி எதற்கும் தேவைப்படுமே என்று குடித்து வைத்திருந்த காலி பீர்பாட்டிலை, இசக்கி வாங்கிக்கொண்டு போனான்.

போனவர்கள், சிறிது நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க வந்தார்கள். ``ஆட்டோவ எடு மாப்ள” என்று படபடத்தார்கள். தக்காளிக்கு, கொஞ்சமாக போதை தெளிவுக்கு வந்தது. ஒன்றும் புரியாமல் பார்த்தான். ``மாப்ள... நண்பன் போடுலாமா... வேணாமான்னுதான் இருந்தான். ஆனா, நீ சொன்ன தைரியத்துல முடிச்சுட்டாம்ல...” என்றான் இசக்கி.

தக்காளிக்கு அந்தக் குளிரிலும் வியர்த்தது. அவன் முன்கோபக்காரன்தான். ஆனால், கொலை வரை போகும் பழிகாரன் அல்லன்.

``மாப்ள, இந்தா இத செலவுக்கு வெச்சுக்கோ... ஊருக்குப் போயிட்டு ஒரு எட்டு மீளவட்டான் ஆச்சிய பார்த்துட்டு வால...” என்று பணத்தைக் கொடுத்து வண்டி ஏற்றிவிட்டார்கள். கொலைபுரிந்த காதலர், தக்காளியிடம் ``உங்க தைரியம்தான் பாஸு... அவனப் போடவெச்சுது. இனி அஞ்சலி எனக்குத்தான். தேங்க்ஸ் பாஸு!” என்றபோது, தக்காளிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பொறியில் சிக்கிய எலிகளாட்டம் நால்வரும் நீதிபதியின் முன்னால் நிற்க. ``தக்காளி ராஜா என்கிற ராஜா, இந்தக் கொலைவழக்கில் மூளையாகவும் வெப்பன் சப்ளையராகவும் செயல்பட்டதால், அவருக்கு இந்த கோர்ட் ஆயுள்தண்டனை விதிக்கிறது” என்று தீர்ப்பை நீதிபதி எழுதினார்.

தக்காளி ராஜாவின் ஒரு பீர் அடித்த வழக்கில் 18 வருட சிறைவாசத்தில் அவர் சொன்ன கதையைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். தக்காளியும் சிரித்தார். காலம் கடந்த துக்கங்கள் யாவும் சிரிப்பைக்கொண்டுதான் மூடப்படுகின்றன. ஆனால், எனக்கு சிரிப்பு வரவில்லை. ஒரு மனிதனின் முன்கோபம் என்பது எவ்வளவு அபாயகரமானது என்பதைத்தான், தக்காளியின் இந்த 18 வருடத் தனிமையில் நான் உணர்ந்தேன்.

``நீங்க எதுவுமே பண்ணல... இந்தத் தீர்ப்பு அநியாயமாச்சே!” என்றார் பேராசிரியர்.

``அதை ஏன் கேக்கிறீய சார்... போலீஸ்கிட்ட மாட்டும்போது நான்தான் தைரியப்படுத்திப் போடச்சொன்னதுன்னு சொல்லியிருக்காங்க. கத்தியில குத்துறதவிட, மூளையா செயல்படுறதுதான் `ஏ ஒன்’னுன்னு எனக்குத் தெரியாமப்போச்சு சார்” என்றார் தக்காளி, அப்பாவியாக.

முதல் நாள் வகுப்பு முடிவதற்குள் அத்தனை கதைகள். இல்லவாசிகளுக்குப் படிச்சோறு வந்ததால், எல்லோரும் வாங்கிக்கொண்டு செல்லுக்குள் சென்றார்கள்.

``சார், நாளைக்குப் பார்க்கலாம் சார்” என்று நோட்டுடன் தக்காளி சென்றார். நாங்கள் வெளியேறினோம்.

``காலையில உள்ளே போனோம்... சாயந்தரமே வெளியே வந்துட்டோம். ஒரு செகண்ட்ல நாம எடுக்கிற முடிவு, வாழ்நாள் துக்கத்த நமக்கும் நம்மல சார்ந்தவங்களுக்கும் கொடுத்துடுதுல்ல சார்...” என்று சொன்ன அனிஸ் என்னிடம் ``இல்லவாசிங்க கதைங்கலாம் எப்படி சார் இருந்துச்சு?” என்றார்.

``தண்டனைன்னு யோசிச்சுப்பாத்தா எனக்குத் தோன்றது ஒண்ணுதான் சார். தனிமை... வலுக்கட்டாயமான தனிமை ரொம்பக் கொடுமை சார். அதை அவங்களோட கதைகள்ல அந்தத் தனிமையைக் கொல்ல முயற்சி செய்றாங்க சார். நான் அவங்களுக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை. காதுகொடுத்துக் கேட்டாலே போதும். நான் கெளம்புறேன். நாளைக்கு ஜெயிலுக்கு வரணும்ல” என்றேன்.

சிரித்தார் அனிஸ். அந்தப் பெரிய இரும்புக்கதவு மூடப்பட்டது.

- மனிதர்கள் வருவார்கள்...