மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 9

இறையுதிர் காடு - 9
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 9

இறையுதிர் காடு - 9

இறையுதிர் காடு - 9

அன்று அந்த வேலன் தண்டபாணியாக நிற்க உண்மைக் காரணம் என்ன தெரியுமா என்று கேட்ட போகர், அதற்கான காரணத்தைக் கூறத் தொடங்கினார். அப்படிக் கூறுமுன் அந்த வேம்பின் நிழலில் இருந்தபடியே தலையைத் திருப்பி சற்று அண்ணாந்து, வரும் நாளில் கோடானு கோடிப் பேர் வந்து செல்லவிருக்கின்ற அந்த மலை உச்சியை ஒரு பார்வை பார்த்தார். அப்படிப் பார்த்த அவர் முகத்தில் ஒரு வகை பக்திப் பரவசம்!

உதடுகளும் ‘முருகா’ என்று உளமார முணுமுணுத்தது.

பிறகே பேசத் தொடங்கினார்.

இறையுதிர் காடு - 9

“சீடர்களே! தண்டபாணிக் கோலம் என்பது தவக்கோலம்! சன்யாச கோலம். அநேகமாய் இந்த உலகின் முதல் பால சன்யாசி அந்த பால முருகனாய்த்தான் இருக்க வேண்டும். முருகன் என்றால் அழகன் என்றும் ஒரு பொருள் உண்டு. அவன் அழகன் மட்டுமல்ல அமுதனும்கூட... அப்படிப்பட்டவன் தன் முடி துறந்து கொடி துறந்து கோவணம் தரித்து ஆண்டிக்கோலம் கொண்டு கையில் தண்டத்துடன் நின்றதால் தண்டபாணி என்றானான்.

இந்தத் தண்டமாகிய கோலை, பெரும்பாலும் எல்லா சன்யாசிகளுமே வைத்திருப்பார்கள். அது ஒரு மூங்கில் கழியாகவே இருக்கும்.  இந்த மூங்கில், தாவரங்களில் பல தனித்த தன்மைகள் உடையது... இது தனித்து வளராது... கூட்டமாய் வளரும். ஒன்று நட்டால் போதும், ஒரு காடு தோன்றிவிடும்.

ஒரே நேர்க்கோடாய் கிளை விடுதலின்றி வளரும். இதற்கும் மனிதர்களுக்கும் சில வினோதத் தொடர்புகள் உண்டு. மனிதனும் மேல் நோக்கியே வளர்பவன். மிருகங்கள் பக்கவாட்டில் வளர்பவை... இந்த மேல் நோக்கிய வானம் பார்த்து வளர்வதில்தான் சூட்சுமமும் உள்ளது. மண்ணக வாழ்வின் முடிவு விண்ணேகுவதே! திரும்ப மண்ணில் பிடித்தல் சிறப்பானதல்ல... இதை மறைவாய் உணர்த்திடும் மூங்கில் வளைந்து கொடுக்கும் தன்மை உடையதும்கூட... நாமும் வாழ்வில் வளைந்து கொடுத்தாலே நிம்மதியாக வாழ இயலும்.

இறையுதிர் காடு - 9



விண்ணோக்கி வளர்வதில், கூட்டமாய் வளர்வதில், வளைந்துகொடுப்பதில், புல்லாங்குழலாகிக் காற்றை உள் வாங்கி சப்தத்தை வெளிவிடுவதில் என்று மனித வாழ்வோடு இதற்குப் பல ஒற்றுமைகள் இருப்பதால்தான் இது குழந்தைப் பிராயத்தில் தொட்டிலில் தொடங்கி, மரண பரியந்தம் பாடைக்கட்டு வரை உடன் வருகிறது.

ஒருமுறை வெட்டப்பட்டுவிட்டால் இது திரும்பத் தழைக்காது. அதை உணர்த்துவதே தண்டக் கோல்! இதை பற்றிக்கொண்டிருக்கும் வரை கீழே விழாது. பற்று நீங்கினால் விழுந்து விடும். நாம்கூட ‘நான்’ எனும் செருக்குள்ள வரை பணிந்து வீழ்வதில்லை. அது நீங்கும் சமயம் தரையில் விழுந்த தண்டக் கோல் போல் நாமும் விழுந்துவிடுகிறோம். ஆக, தண்டக்கோல் பற்று நீங்கி நான் எனும் செருக்கறுந்துவிட்டதன் அடையாளம்.

தண்டாயுதபாணியும் செருக்கில்லாததன் வடிவம்.

நான் என்கிற சொல்லேகூட செருக்கிற்கான சொல்தான். செருக்கு, பற்றை வளர்த்துப் பாவங்கள் செய்யச் செய்துவிடும். அனைத்தையும் துறந்தாலே நான் எனும் செருக்கையும் துறக்க முடியும். இதை உணர்த்துபவன் தண்டபாணி! எனவே இவனை தியானித்திட செருக்கடங்கி ஞானச்சுடர் ஒளிரும். இவன் உள்ளம் உடல் என்று இரண்டிற்குமே மருந்தாகத் திகழ்பவன்!”

- என்று தண்டபாணிக்கொரு நெடிய விளக்கமளித்த போகர் “நான் கூறியதை அசை போடுங்கள் - உச்சம் கடந்த இவ்வேளை பதநீர் பருகிட நன்று. எனவே பதநீர் பருகி வாருங்கள். இந்தச் சித்த கொட்டாரம் உங்கள் உடல் உள்ளம் இரண்டுக்குமே பொதுவானது...” என்றார்.

அதற்கேற்ப பனை மடலில் அனைவருக்கும் பானையில் சேமிக்கப்பட்டிருந்த பதநீர் அருந்துவதற்காக விடப்பட்டது. அறுபது சதவிகிதத் துவர்ப்பும் நாற்பது சதவிகித இனிப்புமாய் அருந்திய அந்த பானம் சீடர் குழாத்திற்கே ஒரு புது உற்சாகத்தை அளிக்கத் தொடங்கியது.

அருந்திவிட்டு வந்த அத்தனை சீடர்களும் தரையில் பத்மாசனமிட்டே அமர்ந்தனர்.

“சீடர்களே! பயன் தருவதில் பனைக்கு இணை எதுவுமில்லை. இதுபோன்றதே வாழையும்... இந்தத் தாவரங்களை தாங்கள் எவ்வாறு உணர்ந்துள்ளீர்கள் என்று கூற இயலுமா?” என்று கேட்க, மருதன் என்பவன் கையை உயர்த்தினான்.

“ஓ... மருதனா! எங்கே கூறு பார்ப்போம்.”

“குருபிரானே... வாழை ஒரு நீர்த்தாவரம். ஆனால், பனைக்கு நீர் அவ்வளவு பெரிதில்லை. சுருக்கமாய்க் கூறுவதானால், ஒன்று நீரால் தழைப்பது, இன்னொன்று வெப்பத்தால் தழைப்பது... அதே சமயம் இரண்டுமே பூரணமான பயன் அளிப்பது...”

“எந்த வகையில்?”

“சிறிய வாழை பெரிய இலைகளைத் தருவதோடு, தண்டு, நார் என்று தன்னுள் உள்ள சகலத்தையும் தந்துவிடுகிறது. வாழையிடம்தான் பூவும் உணவு - காயும் உணவு - கனியும் உணவு. தண்டும் உணவு... அடுத்து, எந்த ஒரு வாழையும் இன்னொரு வாழையைத் தராமல் மடிவதில்லை. வாழை தியாகத்தின் தாவர வடிவம். அதோடு வாழை ஒரு வாழ்வாங்கு வாழ்ந்திடும் அற்புதம்.

பனையும் அப்படியே... மரம் இலை காய் என இதன் சகலமும் பயன்மிக்கது. காலத்தாலும் பயன்படுவது. இதில் வாழைக்கு குறித்த காலமே வாழ்வு - பனையோ பல நூறாண்டும் வாழ முடிந்தது. இரண்டுமே பெரிதாய் நிழல் தராதவை என்பது இவற்றுக்கான ஒற்றுமை!”

- மருதன் தான் உணர்ந்ததைக் கூறிய விதத்தில் அவனுள்ளிருக்கும் கூரிய பார்வை போகருக்குப் புலனானது.

“மருதன் திறம்பட உரைத்தான். அதில் எங்கும் பெரிதாய் பிழைகளில்லை. நம்மைச் சுற்றியுள்ள சகலத்தின் மேலும் நமக்கு இதுபோல கூரிய பார்வையும் அதனால் உண்டான எண்ணங்களும் அவசியம். குறிப்பாக சித்தவைத்யனாக விரும்புகின்றவர்களுக்கு கால ஞானம் - தாவர ஞானம் மிக முக்கியம்” என்றார்.

பின் திரும்ப தண்டபாணியிடம் செல்ல விரும்பியவராக “நான் தண்டபாணி குறித்து மேலும் பல அரிய தகவல்களைக் கூறப்போகிறேன்” என்றார்.

சீடர்களிடமும் ஆவலாதி அதிகமாகியது.

‘அருமைச் சீடர்களே!

தண்டபாணி என நான் இங்கே விளித்திடும் முருகப் பெருமானின் மூலத்தை இப்போது நான் உங்களுக்கு உணர்த்தப்போகிறேன். அந்த மூலம் தெரிய வேண்டுமென்றால் நாம் பிரம்மாவிடம் செல்ல வேண்டும்... செல்வோமா?” என்று கேட்டார்.

சீடர்களிடம் பலமான தலையசைப்பு!

“ஏன் பிரம்மாவிடம் செல்ல வேண்டும் தெரியுமா?” என்று திரும்பக் கேட்டார். சீடர்களிடம் பதிலில்லை.

“நான் இப்படிக் கேட்பது உங்களுக்கு பதில் தெரிந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக மட்டுமல்ல. இப்படி எல்லாம் கேட்க இடமுள்ளது என்று உங்களுக்கு உணர்த்துவதற்காகவும்தான்...” என்றவர் “பிரம்மா என்றால் தாய்க்கெல்லாம் தாயானவன் என்று பொருள். அதாவது இந்த உலகின் உயிர்கள் அனைத்தையும் ஆதி சக்தி பிரம்மாவைக் கொண்டே படைத்தது. அப்படி சகல உயிர்களையும் படைத்ததால்தான் அவனைத் தாய்க்கெல்லாம் தாயானவன் என்கிறோம். இந்த பிரம்மனின் பிள்ளைதான் நம் முருகன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?”

இறையுதிர் காடு - 9

போகர் கேட்ட கேள்வி சீடர்களை வியப்போடு பார்க்க வைத்து, முருகன் சிவமகனாயிற்றே - எப்படி பிரம்மன் தந்தையாக முடியும் என்கிற கேள்வியையும் எழுப்பிற்று. அதை ஒரு சீடன் கேட்கவும் செய்தான்.

“குருபிரானே! முருகப்பெருமான் சிவனார் மகனல்லவா? எப்படி அவன் பிரம்மபுத்திரனாக முடியும்?”

“நல்ல கேள்வி... இதுபோல் கேளுங்கள். கேட்டாலே விடை கிடைக்கும். முருகன் சிவன் மகனானது பின்பு. அதற்கும் முன்பு அவன் பிரம்மனின் நான்கு புத்திரர்களில் ஒருவன். அப்போது அவன் பெயர் சனத்குமாரன்!”

ஆம்... சனத்குமாரன் பிரம்ம புத்திரன் என்பதை அறிவோம். அவன் மட்டுமல்ல, அவரோடு சரத்குமாரன், சதானந்தன், சனாநந்தன் என்று மூவர் சேர்ந்திட இந்த நால்வரே ‘சனகாதியர்’ எனப்பட்டனர். இதில் சனத்குமாரன் ஒரு பிரம்மரிஷியும் கூட!” -போகர் பிரம்மரிஷி என்று கூறவும் எல்லோரிடமும் ஒரு கூர்மை.

“பிரம்ம புத்திரன் சரி... அது என்ன பிரம்மரிஷி?”

இக்கேள்வியை ஒரு சீடன் கேட்கவும் செய்தான்.

“நல்ல கேள்வி... முதலில் பிரம்ம ரிஷி என்பவரின் தன்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். இவ்வுலகின் உயிருள்ள - உயிரில்லாத சகலத்தையும், ஒரு படி மேலே போய் சொல்கிறேன்... தன் படைப்பிற்கே காரணமான மூலத்தையும்கூட உயர்வு தாழ்வின்றி சமமாகக் கருதமுடிந்த சிந்தை உடையவரே பிரம்மரிஷி என்றாவர்” என்றார் போகர். பின் அவரே இன்னும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.

“அதாவது சீடர்களே! அமிர்தத்தையும் விஷத்தையும்கூட ஒன்றாகக் கருதுபவர்கள் இவர்கள். ஒரு பேச்சுக்குச் சொல்வதானால், சிவபெருமான் எதிரில் வருகிறார். உடம்பெங்கும் சிரங்கோடு ஒரு பாவியும் வருகிறான். இந்த இருவரையும் சரிசமமாக உயர்வு தாழ்வின்றிப் பார்க்க முடிந்தவன் எவனோ, அவனே பிரம்மஞானி. அப்படி ஒரு ஞானியே சனத்குமாரன்!”

- ஆச்சர்யமளித்தார் போகர்...!

ன்று வலித்த மார்புடன் சாந்தப் பிரகாஷ் சாருபாலாவுடன் அவர்களின் வீட்டு வாசலை அடையவும் ஆட்டோ சென்சார் அவர்களை தடையின்றி அனுமதிக்கும் விதமாய் தடித்த தன் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டது.

உள்ளேயும் 28 டிகிரியில் நிலை நிறுத்தப்பட்ட குளிர். தரைமேல் காபூலில் இருந்து தருவிக்கப்பட்டு வேயப்பட்டிருந்த வேலைப்பாடுள்ள கார்ப்பெட். கால் பதித்து நடக்கும்போது மிதக்கும் உணர்வைத் தரும். அதன்மேல் சாந்தப்பிரகாஷ் சுருண்டு விழவும் பதைப்பை அதிகரித்தாள் சாருபாலா.

“சந்தூ...!”

“நோ... நோ... ஐ ஆம் ஆல்ரைட்... ஜஸ்ட் நெர்வஸ்...!”

“சாந்தப்பிரகாஷ் விழுந்த நிலையில் எழப்பார்த்தான். அவள் கை கொடுத்தாள். அப்படியே அருகிலுள்ள சோபாவில் அமரச் செய்தாள். அப்படியே மார்பைத் தடவ முயன்றாள். சாந்தப் பிரகாஷ் அப்போது அவளின் கரத்தை இறுக்கிப் பிடித்தான். அந்தப் பிடி அவளுக்கு வலியைத் தந்தது. அவன் வலியையும் உணர்த்தியது.

“சந்தூ... ப்ளீஸ், டேப்லட் போட்டுக்கிட்டியா?”

“ம்... ஆனா இது வேற வலி சாரு...”

“இங்க இருக்க இருக்க இது அதிகமாகத்தான் செய்யும்...”

“வாட் டு யூ மீன்?”

“முதல்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு. லேட்டர் ஐ வில் டாக் டு யூ.”

“நம்பிக்கையா எதாவது சொல்... இப்போதைக்கு எனக்கு அதுதான் மருந்து...”

“ஸாரி...” - என்றபடியே அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டவள் விலகிச் சென்று உடை மாற்றிக்கொண்டு புடவையில் எதிரில் வந்தாள். அப்படியே ரிமோட் உதவியோடு பூஜை அறைக் கதவைத் திறந்தவள் ஆட்டோ வெர்ஷனில் கண்களுக்குப் புலனாகாத ஸ்பீக்கரில் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்தாள். ஒரு ரிமோட், பூஜை அறைக்குள் டிஜிட்டல் லைட்டர்களை ஒளிரச் செய்தது. உள்ளே மரச் சுவரில் அழகிய ஃப்ரேமில் ஒரு திருப்பதி பெருமாள் படம், நடுவில் பழநி முருகனின் தண்டபாணி உருவம், பக்கத்தில் குலதெய்வமான பொன்னாச்சியம்மன் படம். மூன்றின் முன்னால் ஒரு மரத்தாங்கி. அதன்மேல் ஓர் அழகான குத்து விளக்கு. அதை ஏற்றத் தொடங்கினாள். அப்படியே மிக வாசமான ஊதுபத்தியைக் கொளுத்தி அதற்கான ஸ்டாண்டில் நட்டு நிறுத்தினாள். அதன் புகை நடனமாடியபடியே மடியத் தொடங்கியது.

இறையுதிர் காடு - 9

திரும்பி வந்தாள்...

ஜன்னல் கர்ட்டனையும் ரிமோட் மூலமே இழுத்து விட்டாள். பக்கவாட்டில் வெளிப்புறமும் இருபது மீட்டர் இடைவெளியில் க்ளைட்டன் என்கிற பக்கத்து வீட்டுக்காரர் வீடும் தெரிந்தது. அந்த க்ளைட்டன்கூட வெளியே புல்வெளியில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு சிட்டி டைம்ஸ் பேப்பரைத்தான் மேய்ந்துகொண்டிருந்தார். அவர்களது அலாங்கா டாக் இளைப்பெடுத்துத் தொங்கும் சிவந்த ஈர நாக்கோடு அருகில் வளர்ந்திருந்த பைன் மரக் கிளை மேல் அமர்ந்திருந்த உட்பெக்கரைப் பார்த்துக் கொண்டிருந்தது. மிகமிகச் சன்னமான பனிப்பொழிவு... மற்றபடி விவரிக்கச் சொற்களில்லாத ஒரு வகை அமைதி. இந்த வகை அமைதி இந்தியக் காதுகளுக்குத் துளியும் ஆகாது. குண்டூசி விழுந்தால் அந்த சப்தம் துல்லியமாகக் கேட்கும். நடக்கையில் கார்ப்பெட் நசுங்கும் சப்தமும் துல்லியம்!

இது வேறு மாதிரியான ஒரு பூமி.

மெள்ள சாந்தப்பிரகாஷ் எதிரில் சென்று அமரத் தொடங்கினாள் சாருபாலா. சாந்தப்பிரகாஷ் கண்களில் கண்ணீர் திரண்டு உருளத் தயாராக நின்றிருந்தது. சாருபாலாவே எழுந்து சென்று தன் புடவைத் தலைப்பால் துடைத்து விடலானாள். அப்படியே,

“அழறதுல பிரயோஜனமில்ல சந்து... அவன் இப்ப அவனே இல்ல...” என்று பெருமூச்சோடு தொடங்கினாள். சாந்தப்பிரகாஷ் சற்று நிமிர்ந்தமர்ந்து அவளை வெறிக்கத் தொடங்கினான்.

“நான் பயந்த மாதிரியே ஆயிடிச்சு. ஆகாஷ் என் பேச்சைக் கேக்கறதேயில்லை. அநேகமா ஒரு வாரத்துக்கு அவன் வர மாட்டான் பார்...”

“எங்கல்லாம் போறான்?”

“முன்னல்லாம் ரிச்சி டோமுக்குப் போவான் இப்ப நியூ ஆர்லியன்ஸ் மியூசிக் க்ளப்புக்குப் போறான்.”

“நல்ல விஷயம்தானே... மியூசிக்தானே?”

“தெரிஞ்சுதான் கேக்கறியா... இந்த க்ளப் மெம்பர்ஸ் ஒன்லி ட்ரான்ஸ் ஜெண்டர்ஸ்.”

- சாருபாலா சொல்லி முடிக்கவும் நெஞ்சில் திரும்ப சுரீர் என்றது. வேகமாய் எழுந்து சாருபாலாவும் திரும்ப அவன் நெஞ்சில் கை வைத்து வருடலானாள். இம்முறையும் அவள் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டான்.

“சந்து... எனக்கு பயமா இருக்கு...”

“எனக்கும்தான் சாரு...”

“போதும் சந்து இந்த ஊரோட வாசம். வி லீவ் இட்...”

“பைத்தியம். ஆகாஷோட நாம சென்னை போனா அவ்வளவுதான். நம்ப குடும்ப மானம் கப்பலேறிடும்.”

“இங்க மட்டும் என்ன? எல்லாருக்கும் தெரிஞ்சிடிச்சு. ஆகாஷ் தன் பேரைக்கூட மாத்திக்கிட்டிருக்கான், எம்பசிக்கு நேம் சேஞ்சுக்கு அப்ளை பண்ணியிருக்கான்.”

இறையுதிர் காடு - 9

“என்ன பேர்?”

“தூவாவோ என்னவோ?”

“தூவா... யு மீன் THOOVA...?”

“யெஸ்...”

“மை காட்...”

“நீ கேள்விப்பட்ருக்கியா?”

“இங்க எல்லா ட்ரான்ஸ்ஜெண்டர்களும் இனி தூவாதான். தூவா ஒரு காமன் நேம், கூட இன்னொரு பேர் நிச்சயம் இருக்கணும்.”

“எனக்குத் தெரியல... அவன் எங்க நின்னு பேசறான்? வர்றது தெரியல - போறது தெரியல - இப்பல்லாம் பக்கத்து வீட்டு க்ளைட்டன்கூட சரியா பேசறதில்ல. ஒரு மாதிரி சிரிக்கறாரு.”

“அவன் கிடக்கறான் விடு. ஒண்ணு பண்ணலாமா?”

“என்ன?”

“டாக்டர்கிட்ட காட்டுவோமா?”

அதைக் கேட்டு பயங்கரமாய் வெறித்தாள் சாருபாலா.

“எனி திங்க் நான் சென்ஸ்?”

“எல்லாம் கை மீறிப் போயாச்சு சந்து. உடம்புக்குள்ள எதாவது பிரச்னைன்னாதான் டாக்டர். உடம்பே பிரச்னைன்னா?”

“ஏன்... இதுக்கும் டாக்டர்கள் இருக்கலாமே? கூகுள்ல தேடினா தெரிஞ்சிடுது.”

“ஆர் யு எ டக்? நீ ஒரு கோல்ட் மெடலிஸ்டான்னு எனக்கு டவுட்டா இருக்கு. இல்ல பிள்ளப்பாசத்துல புத்தி பேதலிச்சு இப்படிப் பேசறியா? இதுக்கெல்லாம் எந்த டாக்டரும் இல்லை. இது சாபம். உங்க குடும்ப சாபம். பொன்னாச்சி சாபம்...”

- வெடித்துவிட்டாள் சாருபாலா.

“நோ... ஐ டோன்ட் பிலீவ்...”

“பிலீவ் பண்ணாட்டி போ. நான் போறேன். இவன் அவ்வளவுதான். ஆனா இனி ஒரு பிறப்பு இப்படிப் பிறந்துடக் கூடாது. குறிப்பா உங்க அப்பாவோட லீகல் ஃபேமிலி அஃபெக்ட் ஆகவே கூடாது.”

- சாரு பாலா லீகல் ஃபேமிலி என்று கூறிய மாத்திரத்தில் சாந்தப் பிரகாஷ் முகம் வெளிறத் தொடங்கி ஒரு பேரமைதி அவனை வந்து ஆட்கொள்ளத் தொடங்கியது!

ந்த பிரமாண்டம் ஜமீன் பங்களாவைச் சுற்றி ஒரே புழுதி மண்டலம்! பொக்லைனர்களும், கிரேன் லாரிகளும் போடும் சப்தம் வேறு! உள்ளே கடைசி கடைசியாய் கொல்லை வாசல் மரச் சட்டத்தையும் பெயர்த்து லாரியில் ஏற்றி முடித்த நிலையில் லாரி அருகே காத்துக்கொண்டிருந்தான் துரியானந்தம். முகம் கழுவி அதை ஒரு குற்றாலத் துண்டால் துடைத்தபடியே வந்து கொண்டிருந்தான் குமரேசன்.

ஒரு இன்ஜினீயர் வந்து லாரியின் மேல் ஏறி உள்ளே ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவும் பெயர்த்து எடுக்கப்பட்ட மரச் சட்டங்கள் மட்டும்தான்..

வளைத்து வளைத்து எண்ணினார். பின் இறங்கிக்கொண்டவராய் “அவ்வளவுதானா... இனி வரமாட்டீங்கதானே?” என்று கேட்டார்.

“அதான் எல்லாத்தையும் எடுத்தாச்சே. இனி இங்க எங்களுக்கு என்ன ஜோலி சார்?”

“அஸ்திவாரம் முழுக்கக் கருங்கல்லு... எப்படியும் பத்தாயிரம் கல்லு தேறும். அத்தையும் ஏலத்துல உடலாம்னு... வரீங்களா?”

“ஐயோ சார்... இந்த மரத்தை எல்லாம் வித்துக் காசாக்குனா போதும் சார். முப்பது லட்சம் சார்... இதையே எப்படித் திரும்ப எடுக்கப்போறேன்னு தெரியல.”

“சரி சரி... கிளம்புங்க”  என அந்த இன்ஜினீயர் திரும்பவும், உள்ளிருந்து சிலர் அரக்கப்பறக்க ஓடி வந்தபடி இருந்தனர்.

“சார்... சார்...”

“என்னய்யா... எதுக்கு சுத்தறே?”

“ஐயோ சார், உள்ளார ஒரு தூண் அப்படியே சாஞ்சு வேலை பாத்துகிட்டிருந்த மூணு பேர் மேல உழுந்து ஸ்பாட் அவுட் சார்...” - என்று பதறினான் ஒருவன். அதைக் கேட்ட துரியானந்தமும் குமரேசனும்கூட, ஓடத் தொடங்கிய இன்ஜினீயரைத் தொடர்ந்து ஓடினர்.

உள்ளே பதினாறு அடி உயர உருண்டை வடிவத் தூண் மூன்று பேர் மேல் விழுந்து கிடந்த நிலையில் அவர்கள் உடம்பிலிருந்து தெறித்த ரத்தம் நாலாபுறமும் பீய்ச்சியதுபோல் காட்சி தந்திட அவர்களும் பிணங்களாய் வெறித்த விழிகளோடு காட்சி தந்தனர்.

துரியானந்தத்திற்கும் குமரேசனுக்கும் தீக்கங்கை விழுங்கின மாதிரி நெஞ்சில் ஒரு எரிச்சல். கண்களிலும் ஒரு அதிக பட்ச விரிவு. அந்த நொடி பங்களா முழுக்க டெமாலிஷில் ஈடுபட்டிருந்த அத்தனை பேரும் அப்படி அப்படியே போட்டது போட்டபடி இருக்க அங்கே வந்துவிட்டிருந்தனர். அவர்களில் அந்த வயதான வாட்ச்மேன் கிழவரும் இருந்தார்.

எட்டிப் பார்த்தவர் கண்களைக் கசக்கிக் கொண்டார். அப்படியே “சாமி கனவுல வந்து சொன்னீங்க... இப்ப செஞ்சுட்டீங்க... இனி இங்க எதையும் யாரும் அழிக்க முடியாது...” என்றபடியே திரும்பத் தொடங்கியவர் துரியானந்தத்திற்கும் குமரேசனுக்கும் பெரிய அதிர்வை அளித்தார். குமரேசன் மட்டும் அவரை நெருங்கி,

“பெருசு... யார் கனவுல வந்தா... என்னா நடந்திடுச்சு” என்று நூல் விட்டான்.

“வேற யாரு... எங்க சித்த உடையார்தான்! அவருக்கு இங்க ஹோட்டல் வர்றதுல விருப்பமில்லை. இந்த மரங்கள் அழியறதுலயும் சந்தோஷமில்லை. அமைதியா இருந்த அவர் திரும்ப நடமாட ஆரம்பிச்சிட்டாரு...”

“யாரு, அந்த சமாதிக்குள்ள இருக்கற அந்த சித்தர் சாமியா?”

“ஆமா அவரேதான்...”

“அதான் பாதிக்குப் பாதி அழிச்சாச்சே... மரத்தையெல்லாம் நாங்க வாங்கிட்டோமே...?”

“பாவம் நீ...” - அந்தக் கிழவரின் பதில் குமரேசன் நெஞ்சில் குத்தியது. அடுத்து ஏதோ கேட்க நினைத்தவனை துரியானந்தம் தடுத்தான்.

“ஏலேய் மூடிக்கிட்டு வாடா... அந்தாளு எத்தயாவது சொல்லி வைக்கப்போறான். நல்ல நேரத்துல நாம கிளம்புவோம். போலீஸ் வந்துட்டா அப்புறம் விசாரணை, சாட்சின்னு நோண்டி நொங்கு எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க...”

இறையுதிர் காடு - 9

- என்றபடியே காத்திருந்த லாரியில் ஓடிப்போய் ஏறிக்கொள்ள, குமரேசன் பின்னால் ஏறிக்கொண்டான். அப்படியே அந்த மரச்சட்டங்கள் நடுவே இருந்த அந்த மரப்பெட்டியை இது இருக்கிறதா என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தான். இருந்தது! குனிந்து உற்றுப்பார்க்கவும் விபூதிவாசம் கும்மென்று நாசிக்குள் ஏறியது!

ஹாஸ்பிடல்!

மயக்கத்தில்தான் இருந்தார் ராஜாமகேந்திரன் எம்.பி.

நெருக்கமாய் நின்று அப்பாவைக் கூர்ந்து பார்த்த பாரதியோடு பாட்டி முத்துலட்சுமியும் கணேச பாண்டியனும் உடனருந்தனர்.

“ரொம்ப பெய்ன்புல்லா இருக்குன்னு பீல் பண்றதால பெத்தடின் கொடுத்திருக்கோம். சிவியர் ஆப்பரேஷன்ங்கறதால கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.”

- என்றார் உடன் வந்திருந்த டாக்டர்.

“எப்ப டாக்டர் கண் திறப்பான்?” - முத்துலட்சுமிதான் கேட்டாள்.

“ஈவ்னிங் வந்தா நீங்க பேசலாம். ஒருவேளை வலிச்சாலும் பெத்தடினை ஸ்டாப் பண்ணிடுவோம். விட்டா அப்புறம் இதுக்கு அடிக்ட் ஆயிடுவாங்க.”

- டாக்டர் பொறுப்பாகச் சொன்னபோது கணேசபாண்டி ‘ஆமா பெரிய போதை, இதை விட பெருசையே எங்காளு பாத்தவரு’ என்பது போல் ஒரு கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டார். அதை பாரதியும் கவனித்தாள். அப்படியே டிரைவர் ரவியைப் பார்த்தாள். ரவியின் மனைவிக்கு ஆறுதல் கூறியவள் கணேச பாண்டியைப் பார்த்துக் கண் ஜாடையாகக் கேட்க கணேச பாண்டியனும் “நான் அப்பவே பணத்த கொடுத்துட்டேம்மா. அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை” என்றார்.

பின் மூவருமாக வெளியே வந்தனர். மருந்து வாடை தணிந்த ஒரு வெளிச்சமான சூழல். மார்க்கெட் போல் கூட்டம். காருக்காகக் காத்திருந்த அத்தருணத்தில் அவள் கைப்பேசியில் அழைப்பொலி. காதுக்குள் அரவிந்தன் பாயத்தொடங்கினான்.

“பாரதி பேசலாமா?”

“ஓ... எழுத்தாளரா... தாராளமா?”

“அப்ப வேற யாராவது இருந்தா இந்த தாராளம் கிடையாதா?”

“நிச்சயமா  - நான் இப்ப ஹாஸ்பிடல் முகப்புல காருக்கு வெயிட் பண்ணிகிட்டிருக்கேன்.”

“யெஸ்... யெஸ்... உங்கப்பாக்கு ஆக்ஸிடென்ட்டுன்னு நானும் நியூஸ் பார்த்தேன், படிச்சேன்... எப்படி இருக்கார் பாரதி?”

“ஓ.கே. பயப்படும்படியா எதுவுமில்லை.”

“ஐ சீ... ரொம்ப சீரியஸ் - பிழைச்சாலும் நடமாட முடியாதுங்கற மாதிரி கேள்விப்பட்டேன்...?”

“ஓ... அவ்வளவு தூரம் வந்துடுச்சா பேச்சு?”

“ஏன் நீங்க கேள்விப்படலையா?”

“இல்லை அரவிந்தன் சார்... நான் கொஞ்சம் வேற மாதிரி ஆக்குபைட் ஆகியிருக்கேன். டிவி நியூஸே பாக்கல. இத்தன வருஷத்துல இப்படி இருந்ததே இல்லை.”

“ஐ ஆம் ஸாரி... இப்ப பேசவா இல்ல அப்புறம் பேசட்டுமா?”

“கார்ல ஏறிட்டு நானே கூப்பிட்றேன். ப்ளீஸ்...” போனை கட் செய்தவள் எதிரில் காரும் வந்தது. ஏறிக்கொண்டாள். முத்துலட்சுமியும் கணேசபாண்டியனும் கூட ஏறிக்கொள்ள, கார் வேகமெடுத்தது. அப்போது எதிரில் ஒரு பைக்கில் அந்த எஸ்.ஐ. ரவிக்குமார் கடந்து போனார்!

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்