Published:Updated:

முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்

முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்

பாஸ்கர் சக்தி

முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்

னது அலைபாயும், அடையாளம் தேடும் இளம்பருவத்தில் எதைப் பார்த்தாலும் அதில் சற்றே ஈர்க்கப்படுவது இயல்பாக இருந்தது. தேனியின் வீதிகளில் நடந்து நடந்து கால்கள் ஓய்வின்றி இருந்த நாள்கள். சுவரொட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும். ‘ரவா லட்டுகள் ரதி, சுமலதா ஜொலிக்கும் முரட்டுக்காளை’ -சினிமா போஸ்டர்கள். ‘இருந்தாய், இருந்தோம். சென்றுவிட்டாய், சீப்படுகிறோம்’ -நினைவஞ்சலிகள். ‘தேக்கு மரம் வாங்கி கோடிஸ்வரனாகுங்கள்’, ‘டென்த் ஃபெயிலா கவலை வேண்டாம். நேரடியாக பி.ஏ எழுதலாம்’ போன்ற போஸ்டர்களுக்கு நடுவே, ‘மனம் அமைதியுற, உள்ளம் பரவசம் கொள்ள, பேரின்பத்தை அடைய, பிரபஞ்சத்தின் பேருண்மை அறிய எங்களிடம் வாருங்கள்’ என்று ஒரு போஸ்டர். அதன் நடையும் நல்லலே-அவுட்டும் என்னைக் கவர்ந்தன. உடனே போய் அதை என்னவென்று அறியத் தீர்மானித்தேன். மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பினேன். தேனியின் ஒவ்வோர் அங்குலமும் அத்துபடி. ஆதலால் முகவரியைச் சுலபத்தில் கண்டுபிடித்து விட்டேன். காம்பவுண்ட் வீடு, வராண்டாவின் ஓரத்தில் மாடிப்படிகள். பத்திருபது படிகள் ஏறிப் போய்த்தான் பேரின்பத்தை அடைய முடியும். ஏற்கெனவே கொஞ்சம் பேர் பேரின்பத்தை டீல் செய்யப் போயிருப்பதைக் கீழேகண்ட செருப்பு ஜோடிகள் உணர்த்தின. அவற்றில் இரண்டு லேடீஸ் செருப்புகள் இருந்தது ஒருவிதக் கிளர்ச்சியையும், ஒரு காட்டுத்தனமான டயர் செருப்பு வியப்பு மற்றும் பயத்தையும் அளித்தது. ஏனெனில், அப்போது வந்த சினிமாவில் ராஜ்கிரண் டயர் செருப்பு அணிந்து சாட்டைக் குச்சியுடன் வந்து பலரை விளாறியிருந்தார். நான் ஒரு விநாடி தயங்கினேன். இரண்டு காரணங்கள், ஒன்று இப்படியான இடத்துக்கு இதுவே முதல் முறை என்பது. இன்னொன்று, காசு கீசு கேட்பார்களோ என்பது. ‘பேரின்பத்தை யாராவது ஓசியில் தருவார்களா? நிச்சயம் 50 ரூபாயாவது கேட்பார்கள்’ என்று தோன்றியது. என்னிடம் பத்தோ இருபதோதான் இருப்பு. ‘திரும்பிப் போய்விடலாமா’ என்று தோன்றி, கொஞ்சம் குழம்பி, அங்கிருந்த தண்ணீர் டிரம்மில் தண்ணீர் பிடித்துக் குடித்தபடி யோசித்து, சரி போய்விடலாம் என்று திரும்புகையில், படிக்கட்டில் ஓர் ஆள் தார்ப்பாய்ச்சுபோல் கட்டியிருந்த கீழாடை உரசிக்கொள்ள கசக் கசக் என்று இறங்கிவந்தார். என்னை மிக நேராகப் பார்த்தார். `அது என்னா கண்ணுங்கிறீங்க?’ அவருக்குப் புருவமே இல்லாததுபோல் கொஞ்சம் அமானுஷ்யமான மூஞ்சி. பிரபஞ்சத்தின் பேருண்மையை அல்ரெடி அறிந்து கொண்டுவிட்ட சாயலில் இருந்தார்.என்னை அவர் பார்த்த பார்வையில், கால்கள் எடை குறைந்து வயிறு லைட்டாக இழுத்துப் பிடித்தது. “யார் நீ என்ன வேணும்?” என்று அதட்டலாகக் கேட்பார் என்று நினைத்தால்...

முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்

“மங்களம் சித்திக்கும், மேலே போங்க” என்றார். கண்கள் சிரிக்காமல், உதடு மட்டும் சிரிக்கும் புன்னகை. “பரவால்லை சார்... நான் நாளைக்கி வரேன்” என்று வெளியே செல்ல எத்தனிக்க, அவர் புன்னகையைக் கொஞ்சம் தீவிரப்படுத்தி, “இந்த இடத்தை எதுக்காகத் தேடி வந்தீங்க?” என்க, நான் சற்றே குழறி “அது... வந்து இந்தப் பேரின்பம்...இல்லல்ல.. பேருண்மை கிடைக்கும்னு போட்டிருந்துச்சு” என்க, அவர் என் தோளைக் கைபோட்டு அணைத்து, “நல்லது. இந்த இடத்துக்கு வர்றதுக்கே ஒரு பிராப்தம் வேணும். வந்த பிறகு எதுக்கு தயக்கம்? மேலே போங்க... ஒரு புது சிந்தனையை புதுப் பரவசத்தை  அறிவீங்க” என்று சொல்லி என்னை அப்படியே படிக்கட்டில் ஏற்றிவிட்டு கீழே மறித்து நிற்க, நான் `பரவசமா அது எப்படி இருக்கும்’ என்று பயத்தோடு மேலே போனேன். அருமையான நறுமணத்தை உணர்ந்தேன். என்ன பிராண்ட் ஊதுவத்தியோ தெரியவில்லை. அங்கிருந்த அறைவாசலில் தூய வெள்ளுடையுடன் இரண்டு இளம்பெண்கள் இருந்தார்கள். என்னை அழகான புன்னகையுடன் வரவேற்க, இப்போது பயம் விலகி ‘பரவசத்துக்கு சான்ஸ் இருக்கும்போலயே?’ என்று  பட்டது. அவர்கள் அறைக் கதவைத் திறந்து என்னை உள்ளே அனுப்பி கதவைச் சாத்த, நறுமணத்தின் அடர்த்தி இப்போது அதிகரித்தது, உள்ளே இருட்டு!

முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்அறையின் அந்தக் கோடியில், தரையில் ஒரு வெள்ளை நிற மெத்தைத் திண்டு. அதில் முழந்தாளிட்டு அமர்ந்தபடி ஒரு பெண்.முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயதிருக்கலாம். அறையில் எங்கிருந்தோ வரும் முழு வெளிச்சமும் அந்தப் பெண் இருக்குமிடத்தில் குவிந்திருக்க, எதிர்ப்பகுதி முழுக்க இருளாக இருந்தது. நான் உள்ளே நுழைந்ததும், உத்தேசமாக இருட்டிலிருக்கும் என்னைப் பார்த்து, “உக்காருங்க உங்க பேர் என்ன?” என்க, நான் பேரைச் சொல்ல, அவர் தன் முன்னே இருந்த இருட்டு ஆடியன்ஸைப் பார்த்து, “நம்மோட சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை அறிய பாஸ்கரும் வந்து இணைந்திருக்கார். அவரை நாம் வரவேற்போம்” என்று சொல்லிக் கை தட்ட, இருட்டில் பலவீனமாக சில  கைதட்டல்கள். சில வளையல்கள் குலுங்கும் சத்தமும் சேர்ந்து கேட்டது. ஆஹா!!! இருட்டு, வளையல் சத்தம், ஊதுவத்தியின் நறுமணம், எதிரே அமர்ந்திருக்கும் வெண்ணிற ஆடை அம்மணி என்று நிஜமாகவே பரவசமாக இருந்தது.

அம்மணி தொடங்கினார். “கைகளை மேலே உயர்த்துங்கள்” உயர்த்தினோம். வளைக்கரங்கள் உயரும் ஒலி சைடில் கேட்டது. அடடே! “கீழே இறக்குங்கள்” வளையோசை கீழே இறங்கியது.

“அருகிலிருப்பவரின் கரங்களைக் கோர்த்துக்கொள்ளுங்கள்.” மனமெல்லாம்  ‘ஆஹா’ என்று பரவசமாகி பரபரப்புடன் சைடில் கையை நீட்ட, கோர்த்துக்கொண்ட கையில் அப்படி ஒரு சொரசொரப்பு. எனக்குக் கீழே பார்த்த டயர் செருப்பு மனதில் தெரிய, பரவசம் மறைந்து இதுதாண்டா பேருண்மை என உணர்ந்தேன்.

“அப்படியே இருங்க. நான் இப்ப இந்த உலகம் எப்படி தோன்றியது, மரணத்துக்குப் பின் நாம என்ன ஆகிறோம் என்கிற பேருண்மையை உங்களுக்கு விளக்கப் போகிறேன். நாம இருக்கிற இந்த உலகம் ஒரு மாயை. இதன் பிறகு நாம அடையப் போற உலகம்தான் இந்த ஆத்மா முழுமையை அடையப் போற உலகம். நம்ம உடல்ல சில சக்கரங்கள் இருக்கு. அதை நாம உணர்றது இல்லை. சில சித்திகள் மூலமா அதை உணரலாம். அதை நாம உணரும்போது பரவசத்தை அடையறோம்.”

முதன் முதலாக: இதுதாண்டா பரவசம் அல்லது பேரின்பத்தின் அறிமுகம்

இருட்டில் யாரோ இருமினார்கள். அந்தப் பெண்மணியின் உரை நீண்டது...நீண்டுகொண்டே இருந்தது. அதாவது, நாம் இருக்கிற இந்த உலகம் ஒரு வாடகை வீடுதான். நாம் சில சித்திகள் வழியாக சிற்சில சக்கரங்களை உணர்ந்துகொள்ளலாம். அந்தச் சக்கரங்களை ஓட்டிக்கொண்டே போனால் வேறு சில உலகங்களைப் பற்றி அறியலாம். அந்த உலகங்களில் போஸ்டர் கிடையாது, எலெக்‌ஷன் கிடையாது, சினிமா கிடையாது. சரி, வேற என்னதான் இருக்கு? ஒரே பேரின்பம்தான்... பரவசம்தான்... ஆனா, அது நீங்க நினைக்கிற மாதிரி அல்பமான சந்தோஷமோ சிற்றின்பமோ இல்லை. அது எல்லாம் உணர்ந்த பரிபூரண நிலை. இதை அடையணும்னா நீங்க எங்ககிட்ட உறுப்பினரா சேரணும். தொடர்ந்து இந்த மாதிரி வகுப்புகள் உண்டு. படிப்படியா நீங்க பரவசத்தை நோக்கி நகரலாம்.

என்னைப் பற்றியிருந்த அந்த ராஜ்கிரண் கை, இந்தப் பேச்சின் கடூரத்தால் நழுவியது ஆசுவாசமாக இருந்தது. வளையல்கள் மௌனமாகிவிட்டன. என்னைச் சுற்றி எல்லோரும் தூங்கிவிட்டதுபோல் ஒரு பிரமை. எனக்கும் அந்த ஒளி வெள்ளம் வீசும் அம்மணியைப் பார்த்து கண்கள் பூத்து, கண்ணை மூடினாலும் கண்ணுக்குள் வெளிச்சமாக இருந்தது. பேச்சு பல உலகங்களையும் யுகங்களையும் கடந்த ஏதோ ஒரு நொடியில், சட்டென்று முடிந்து அறை முழுவதும் வெளிச்சம் பரவியது. இரண்டு மூன்று பெண்களும் நான்கைந்து ஆண்களும் இருந்தோம். எல்லோர் முகத்திலும் ஒரு சவக்களை. அந்தப் பெண்மணி எல்லோரையும் வணங்கிச் செல்ல, ஓர் ஆள் வந்து எல்லோருக்கும் நன்னாரி வாசனை அடிக்கும் பானம் ஒன்றைக் கொடுத்தார். வெளியே வந்ததும் எங்களது முகவரியை வாங்கிக்கொண்டார்கள். ``அடுத்த நாள் அவசியம் வர வேண்டும். வேறு ஒரு முக்கியமான பெண்மணி பேசுகிறார். அந்தக் கருத்துகளைக் கேட்பதற்கு பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனவே, அவசியம் வாருங்கள். நாளை இரவு சிற்றுண்டி உண்டு. உங்கள் முகவரிக்கு அவ்வப்போது நமது கூட்டங்கள் பற்றித் தகவல் வரும்.”

அப்பாடி என்று வெளியே வந்து இருட்டில் தெருவில் நடக்கையில் அவ்வளவு ஆசுவாசமாக, சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, நிஜமாகவே பரவசமாக உணர்ந்தேன்... அதன்பின், அந்த ஏரியா பக்கம் கொஞ்ச நாள் போகவே இல்லை!