
நம்ம குலத்துக்கே பாதகம் செஞ்சவளையும் கீழத்தெரு ஆளையும் வீட்டுக்குள்ள வெச்சு உபசரிக்கிறியளே...
பெரியாயி, அந்தூரு பெரிய வூட்டுப்பொண்ணு. தேவதை மாதிரியிருப்பா. சுத்துப்பட்டு கோயிலெல்லாம் பெரியாயி யோட அப்பன் நிர்வாகத்துலதான் இருந்துச்சு. மேலத்தெருவுல வூடு. ஊருல நடக்கிற நல்லது கெட்டதெல்லாம் பெரியாயியோட அப்பங்காரன் தலைமையிலதான் நடக்கும். பெரியாயி நல்லா நடனமாடுவா. கோயில்ல நடக்கிற விழாக்கள்ல பெரியாயியோட நடனத்தைப் பாக்குறதுக்குன்னே பெருங்கூட்டம் கூடும்.
இதே ஊருல ஒரு வைத்தியன் இருந்தான். அவன்பேரு சிதம்பரம். வீடு கீழத்தெருவுல இருந்துச்சு. மேலத்தெரு ஆளுகளுக்கும் கீழத்தெரு ஆளுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. வேலைவெட்டின்னாகூட கீழத்தெரு ஆளுகளைக் கூப்பிட மாட்டாக மேலத்தெரு ஆளுக.
சின்ன வயசுலயே திருவாங்கூர் பக்கம் ஓடிப்போயி அங்கிருந்த காணிக்காரங்க கிட்ட மந்திரம், தந்திரம், வைத்தியமெல்லாம் கத்துக்கிட்டு வந்திருந்தான் சிதம்பரம். வெளியூர்ல இருந்தெல்லாம் வைத்தியம் பாக்க ஆளுக வருவாக.

அன்னிக்கு பெரியாயி வீட்டுல கருதறுப்பு. நாப்பது, அம்பது ஆளுக வயக்காட்டுல இறங்கி கருதறுத்துக்கிட்டு இருக்காக. ஒருபக்கம், ஆம்பளைங்க களத்துல கருதை அடிச்சு நெல்லை உதுத்துட்டு இருந்தாக. உதுத்துட்டுப் போடுற வைக்கோல்ல மாட்டை விட்டு, நாலைஞ்சு பயலுக பொனை ஓட்டிக்கிட்டிருந்தானுவ. கருதறுப்பு வேலையை மேலாண்மை பாக்குறதுக்காக பெரியாயி கூட்டு வண்டியில வந்து எறங்குனா. வரப்புல நடந்து போய்க்கிட்டிருந்தபோது சுருக்குன்னு கால்ல ஏதோ குத்துன மாதிரியிருந்துச்சு. வலி உள்ளங்கால்ல இருந்து உச்சந்தலை வரைக்கும் ஏறுச்சு. ரத்தம் பொட்டுப் பொட்டா வெளியில வரத் தொடங்குச்சு. கடிச்ச வேகத்துல வலைஞ்சு நெளிஞ்சு வேகவேகமா வரப்பைத்தாண்டி ஓடி ஒளிஞ்சுச்சு நீளமா ஒரு பாம்பு. அதைப் பாத்ததுமே பெரியாயிக்கு கண்ணை இருட்டிக்கிட்டு வந்துச்சு. பொத்துனு மயங்கி விழுந்தா. வேலையில தீவிரமா இருந்த மக்க யாரும் இதைக் கவனிக்கலே.
அப்போன்னு பாத்து அந்தப் பக்கமா வந்துகிட்டிருந்தான் சிதம்பரம். பெரியாயி கீழே விழுந்துகிடக்கிறதைப் பாத்துட்டு ஓடிப்போய் கையைப் பிடிச்சு நாடி பாத்தான். கண்டங்கருவளை நாகம் தீண்டியிருக்கு. காயம்பட்ட இடத்துல கீறி விஷத்தை வெளியில எடுத்தான். அடர்ந்து கிடந்த மூலிகைகள் நாலைஞ்சைப் பறிச்சுக் கசக்கி கடிச்ச இடத்துல விட்டான். சுருக்குப் பையில வெச்சிருந்த ஒரு மருந்துப்பொடியை எடுத்து அவ நாக்குல வெச்சான். சரியா அஞ்சாவது நிமிஷம் கண் விழுச்சிட்டா பெரியாயி.
தூங்கி விழிச்ச மாதிரியிருக்கு. நடந்தது எதுவும் நினைப்புல இல்லை. தனக்கு முன்னால அடையாளம் தெரியாத ஒரு மனுஷன் நிக்குறாரேன்னு மிரண்டுபோய் பாக்குறா. ``நீங்க யாரு... எனக்கு என்ன ஆச்சு... நான் ஏன் இங்கே படுத்திருக்கேன்”னு கேட்டா. நடந்த எல்லாத்தையும் விளக்கமாச் சொன்னான் சிதம்பரம்.
போயிருச்சுனு ஆன உசுரை புடிச்சுக் கொண்டாந்து காப்பாத்தின சிதம்பரம் மேல பெரியாயிக்கு இனம்புரியாத அன்பு உருவாச்சு. அதுக்குப் பரிசா தன்னையே கொடுக்கணும்னு நினைச்சா. அவன் முகத்தைப் பாத்து, ``என்னைக் கல்யாணம் கட்டிக்கிறியா”னு கேட்டா. சிதம்பரம் திகைச்சுப்போனான். `பொண்ணோட செழிப்பைப் பாத்தா மேல வீட்டுப் பெரிய மனுஷங்க பொண்ணு மாதிரியிருக்கு. இப்படி, இங்கிதமில்லாமப் பேசுதே. நம்மைப் பாத்தாலே பாவம்னு நினைக்கிற ஆளுக. பொண்ணைத் தொட்டு வைத்தியம் பாத்தது தெரிஞ்சாலே வெட்டிப் போடுவாக. கல்யாணம் கட்டிக்கிறியானு கேக்குதே’னு பெரும் யோசனை. அதேநேரம், `தன்னோட தகுதிக்கு தேவதை மாதிரி ஒருத்தி, கட்டிக்கிறியானு கேக்குறதெல்லாம் பெரிய விஷயம். அவளை புறக்கணிக்கிறது சரியா’னு ஒரு கேள்வி.
மனசுல தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, யாரு என்னன்னு விசாரிச்சான். ``இந்தா தாயி. நீ பெரிய வூட்டுப்பொண்ணு. ராணி மாதிரி பாத்துப் பாத்து வளத்திருக்காக. எங்க தெருப்பக்கம் தலை வெச்சுக்கூட படுக்காத சனம் நீங்க. நீ எப்படி எங்கூட வாழ முடியும்? அதை உன் சாதிசனம் எப்படி ஏத்துக்கும்? மனசைக் குழப்பிக்காம வீட்டுக்குப் போ தாயி”னு சொன்னான் சிதம்பரம்.

பெரியாயி விடாப்பிடியா நின்னா. ``நீங்கதான் என் உசுரைப் புடிச்சாந்து விட்டிருக்கீங்க. வாழ்ந்தா உங்ககூடத்தான் வாழுவேன். இல்லேன்னா இப்பவே உசுரை விட்டுருவேன்”னு சொன்னா. சிதம்பரத்துக்கு ஒண்ணும் புரியலே. நிதானமா யோசிச்சான். பெரியாயி கையைப் புடிச்சுக் கூட்டிக்கிட்டு தன்னோட வீட்டுக்குக் கிளம்பிட்டான். செய்தியைக் கேள்விப்பட்டு, பெரியாயியோட அப்பங்காரன் கொதிச்சுப்போனான். `பூவாட்டம் வளத்த பொண்ணு, இப்படி ஏமாத்திட்டுப் போயிருச்சே’னு அம்மாகாரி அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா. ஊராளுகள் லாம் கூடிப் பேசுனாக. `இனிமே, எக்காலத்தில யும் பெரியாயியை இந்தத் தெருப்பக்கம் சேக்கக்கூடாது'னு முடிவு செஞ்சாக.
பெரியாயியை உசுருக்கு உசுரா பாத்துக்கிட்டான் சிதம்பரம். அந்தத் தெருவே, இந்த மேலவீட்டுப் பொண்ணை கொண்டாடுச்சு. சிதம்பரம் கடுமையா உழைச்சு சம்பாதிச்சு பெரியாயியை நல்லா வெச்சிருந்தான்.
பெரியாயி முழுகாம இருந்தா. சிதம்பரத்துக் கும், அவங்குடும்பத்துல உள்ளவர்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். ஈ, எறும்புகூட அண்டாம அவளைப் பாத்துக்கிட்டாக. முகம் கோணாம பாத்துக்கிற புருஷங்காரன், எப்பவும் பக்கத்துலயே இருந்து அன்பைக் கொட்டுற உறவுக்காரக, ராணி மாதிரி மரியாதை காட்டுற ஊராளுக... எல்லாம் இருந்தும் பெரியாயி மனசுக்குள்ள ஒரு கீறல்... `தாயாகி நிக்குற இந்த நேரத்துல, நம்ம அப்பாவும் அம்மாவும் இருந்தா எப்படியிருக்கும்...’ - வயித்துக்குள்ள இருந்த கருவைப் போலவே மனசுக்குள்ள இந்த ஆசையும் வளர்ந்துச்சு.
ஆறு மாசங்களாச்சு. வயிறு பெருத்து பெரியாயிக்கு அழகு கூடியிருந்துச்சு. சந்தன நிறம் பூசினதுபோல உடம்பு பளபளக்குது. ஆனா, எல்லாத்தையும் தாண்டி முகத்துல அவளறியாம ஒரு சோகம் அப்பிக்கிடந்ததை சிதம்பரம் பய கண்டுபிடிச்சுட்டான். ``தாயி... என்னாச்சு தாயி... ஏன் ஒரு மாதிரியிருக்கே... வாயும் வயிறுமா இருக்கிற இந்த நேரத்துல இப்படி மனசுக்குள்ள குழப்பத்தை சுமந்துக்கிட்டு நிக்குறியே. எதுவா இருந்தாலும் சொல்லு. நிறைவேத்தி வைக்கிறேன்”னு கண் கலங்கச் சொன்னான் சிதம்பரம்.
``நான் தாயாகி நிக்கிற இந்த நேரத்துல, என் தாயையும் தகப்பனையும் பாக்கணும் போலிருக்கு. கூட்டிக்கிட்டுப் போவீகளா”னு கேட்டா பெரியாயி. சிதம்பரத்துக்கு மனம் துடிச்சுப்போச்சு. `பெரிய வீட்டு ஆளுக ஏத்துக்குவாங்களா. வெட்டி வீசிறுவாகளே. என்ன ஆனாலும் பரவாயில்ல. பெரியாயியை அவ ஆயி அப்பன்கிட்ட கூட்டிக்கிட்டுப் போவோம்... நடக்கிறது நடக்கட்டும்’னு ஒரு நாளு ரெண்டு பேரும் கூட்டு வண்டியைப் புடிச்சு நேரா பெரியாயி அப்பன் வீட்டுல போயி இறங்குனாக.
சிதம்பரத்தைப் பாத்தவுடனே பெரியாயி யோட அப்பங்காரனுக்கு கோபம் பொத்துக் கிட்டு வந்திருச்சு. எழுந்து வீச்சரிவாளை எடுக்கத் திரும்பினான். வாயும் வயிறுமா இருக்கிற பெரியாயியைப் பாத்தவுடனே அவன் கோபமெல்லாம் காணாமப் போயிருச்சு. உள்ளேயிருந்து பாசமும் அன்பும் சுரக்குது. எல்லா அழுக்கும் கரைஞ்சு போச்சு. அப்படியே போய் மகளைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ``தாயி... ஏந்தாயி எங்களையெல்லாம் விட்டுட்டுப்போனே...”னு அழ ஆரம்பிச்சான். பெரியாயியோட அம்மாவும் மகளைக் கட்டிக்கிட்டு அழுதா. பெரியாயி நடந்த கதையெல்லாம் சொன்னா... `சிதம்பரம் என்னை உசுருக்கு உசுரா பாத்துக்கிறார்’னு சொன்னா... பெத்தவுகளுக்கு சிதம்பரம் மேல இருந்த கோபமெல்லாம் போயிருச்சு. ``இனிமே, நீயும் மாப்பிள்ளையும் எங்கேயும் போக வேணாம். இங்கேயே இருங்க”னு சொல்லி நல்லா உபசரிச்சாக.
சிதம்பரமும் பெரியாயியும் ஊருக்குள்ள வந்த செய்தியும், அவுகளை வீட்டுக்குள்ள வெச்சு உபசரிக்கிற செய்தியும் ஊருக்குள்ள பரவுச்சு. பெரியாளுகள்லாம் கூடி, ``இதென்ன அநியாயம். நம்ம தெருவுக்குள்ள எப்படி அவுகளை தங்க அனுமதிக்கலாம்”னு பேசுனாக. நேரா, பெரியாயியோட அப்பங்காரனைப் பாத்து, ``ஊருல பெரிய மனுஷனான நீங்களே இப்படியொரு செயலைச் செய்யலாமா? நம்ம குலத்துக்கே பாதகம் செஞ்சவளையும் கீழத்தெரு ஆளையும் வீட்டுக்குள்ள வெச்சு உபசரிக்கிறியளே... இது நியாயமா”னு கேட்டாக. ``உடனடியா ரெண்டு பேரையும் தெருவை விட்டு விரட்டணும்’'னு சொன்னாக.
பெரியாயியோட அப்பங்காரன் மறுத்துட்டான். ``இது எங்க குடும்பப் பிரச்னை. இதுல ஊரு தலையிடக் கூடாது. எம் மாப்பிள்ளையும் மகளும் என் வீட்டுலதான் இருப்பாக. உங்களால முடிஞ்சதைச் செய்யுங்க”னு சொல்லிட்டான்.
ஊராளுகள்லாம் பொதுவிடத்துல கூடிப் பேசுனாக. ``இதை வளரவிடக் கூடாது. நமக்குப் பாதகம் செஞ்ச அவங்களுக்குப் பாடம் கத்துக்குடுக்கணும்”னு ஒருத்தர் சொன்னாரு. ``சிதம்பரம் தலையை எடுத்தாத்தான் எல்லாருக்கும் புத்தி வரும்”னு இன்னொருத்தர் சொன்னாரு. விடியுற வரைக்கும் கூட்டம் ஆவேசமா நடந்துச்சு.
நாள்கள் ஓடுச்சு... ஒருநாள், காட்டுக்குப் போன சிதம்பரம் வீடு திரும்பலே. பெரியாயியோட அப்பங்காரன் எல்லா இடத்துலயும் தேடிப்பாத்தான். `பொண்டாட்டியை விட்டுட்டு ஓடிப்போயிட்டான்’னு ஊராளுகள்லாம் கேலி பேச ஆரம்பிச்சாக. பெரியாயி வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடந்தா. அன்னிக்கு ராத்திரி பெரிய குளத்துப்பக்கம் ஒரு புதருக்குள்ள, தலை வேற முண்டம் வேறயா சிதம்பரம் வெட்டுப்பட்டு கிடக்கிறதை சில பேரு பாத்தாக.
செய்தி கேள்விப்பட்டு அலறி துடிச்சுக்கிட்டு ஓடியாந்தா பெரியாயி. வெட்டுப்பட்டுக் கிடக்கிற சிதம்பரம் மேல விழுந்து கதறி அழுதா. அந்த வேகத்துல நெஞ்சடச்சு அவளோட உசுரும் பிரிஞ்சிருச்சு.
அதுக்கப்புறம் அந்தூர்ல ஏகப்பட்ட சாவுகள். நல்லது கெட்டது நடத்த முடியலே. திடீர் திடீர்னு நாலா பக்கமும் அலறல் சத்தம் கேட்டுச்சு. ஊராளுகளுக்குப் புரிஞ்சுபோச்சு. `சிதம்பரமும் பெரியாயியும்தான் இப்படி அலைக்களிக்கிறாக’னு தெரிஞ்சுக்கிட்டு ரெண்டு பேருக்கும் சிலைவெச்சு கும்புட ஆரம்பிச்சாக. அதுக்குப் பிறகு ரெண்டு ஆத்மாவும் சாந்தமாயிருச்சு.
கன்னியாகுமரி மாவட்டத்துல மதுசூதன புரம்னு ஓர் ஊரிருக்கு. அங்கதான் சிதம்பரமும் பெரியாயியும் இப்போ குடியிருக்காக. ரெண்டு பேருக்கும் ஊருல இப்போ பெரிய மரியாதை. மாலை, மகுடம், மந்திரம்னு ஊராளுக கொண்டாடுறாக. ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்காக..!
- வெ.நீலகண்டன்
படம் : ரா.ராம்குமார்
ஓவியம் : ஸ்யாம்