
ஓவியம்: செந்தில்
களைத்துப் பறந்துவருகிறது குருவி...
பெரும்புயலின் விசையால்
துடைத்தெறியப்பட்ட
மரங்களிலில்லா தேசத்தில்
தரைபடர்ந்திருக்கும்
சிறு புற்களை
மேய்ந்துகொண்டிருக்கிறது
ஆட்டுக்கூட்டம்.
மரங்களில் அமர்ந்தே பழகிவிட்ட குருவியொன்று
தரை அமரத் தயங்கி
ஒவ்வொரு ஆட்டின் மேலாய் உட்கார்ந்து
ஒருவழியாய்
பகலைக் கடந்துவிட்டது.
இள இருட்டிலேயே
திரும்பிவிட்ட
ஆட்டுக்கூட்டத்தின்
கடைசி ஆடும் கைவிட்டுவிட
பறந்துவரும் குருவிக்கு
தற்போது களைக்கத் தொடங்கியிருக்கிறது.
தயவுசெய்து
தங்கள் கையிலிருக்கும் காகிதத்தை
கீழே வைத்துவிட்டு
அவசரமாய்
இருகரங்களையும்
பக்கவாட்டில் நீட்டுங்கள்
களைத்துவரும் குருவி
வந்தமர ஏற்றவாறு...
- சாமி கிரிஷ்

ப்ரம்மம்
டைல்ஸ் தரையில் தன் முதுகு படும்படி
படுத்துக்கொண்டிருக்கும் குட்டியம்மு
தாத்தாவைக் கண்டதும்
முதுகைத் தரையில் உந்தி உந்தி
தலைவழியாக
தாத்தாவின் காலடிகளை
விரட்டிக்கொண்டிருக்கிறாள்.
தாத்தாவும் நான்கு சுவர்களுக்குள்
சுற்றிச் சுற்றி வந்த இடத்திற்கே
வந்து வந்து திரும்புகிறார்...
கலகலவெனச் சிரிக்கும் ப்ரம்மம்
`தலை’முறையாக
நீண்டுகொண்டேயிருக்கிறது...
- க.சி.அம்பிகாவர்ஷினி
என்ன பெயர்
சாலைக்கும் வாசலுக்கும்
உண்டான இடைவெளியில்
பாதம் படாத
கொரியன் கிராஸ்
உயர்ந்த படிக்கட்டின் கீழ்
மார்புயர கிரேடன்
நிலைக்கு முன்னே
கூண்டுக்குள் ஆஸ்திரேலிய
ரெயின்போ லாரிகிரிட்
வரவேற்பறை
கண்ணாடித் தொட்டிக்குள்
ஜிகின் தங்கமீன்
மெல்லிய திரைவிலக்கி
மேசையில்
ஒரு கோப்பைத் தேநீர்
வைத்துவிட்டுப் போனவளுக்கு
என்ன பெயராக இருக்கும்?
- கோகுலா
நிறைய மீன்கள்
மீண்டும் வலை வீசுகிறேன்
நிலவின் மேல்.
நிலவைக் கடக்கையில்
ஒரு கணம் இருள்
பறவையின் கீழ்.
- டே. துளசிராஜா