மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 24

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

கோரண்டியிலிருந்து படிச்சோற்று வண்டியை வருமானவரி செலுத்துவோர் இல்லவாசிகளின் பிளாக்குக்குத் தள்ளிக்கொண்டு போன ஜெயராம், வரிசைக்கிரமமாக எல்லோருக்குமான படியை வழங்கிக்கொண்டிருந்தான். அல்டி பசங்க, சாம்பாரை அவரவர் பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பிளாக்குக்குள் நுழைந்த டாக்டரிடம் ``சார், ஒரு வாரமா உடம்புக்கு முடியல. ஓபி-க்கு எழுதிக் கொடுங்க. அப்டியே புள்ளகுட்டிங்கள பார்த்துட்டு, வூட்டுச் சோறு சாப்பிட்டா மாதிரி இருக்கும் சார்” என்றான். 

நான்காம் சுவர் - 24

``ஏன்... இங்க என்ன மண்ணையா தின்ற?” என்று டாக்டர், ஜெயராமை வம்புக்கிழுத்தார்.

``எழுதிக் கொடுங்க சார்” என்று கொஞ்சலாய்க் கேட்டான்.

``சார், எல்லாருக்கும் ஓபி எழுதிக் கொடுங்க சார்.” ஜெயராமுக்கு இருவர் ஜோடி சேர்ந்தனர்.

``என்னங்கடா பெருசா பிளான் பண்றீங்களா... ஜெயில்ல இருக்கிற ஹாஸ்பிடல்ல பார்த்தா வலிக்குதா?” - டாக்டர் சமயோசிதமாய் அடித்தார்.

``பெரியாஸ்பத்திரினா ஸ்கேன், எக்ஸ்ரேனு உடம்ப செக் பண்ணிக்கலாம்ல” என்றான் சாக்கோ.

``இனி நீ வெளிய வர்றதே சந்தேகம். உடம்ப செக் பண்ணி என்ன பண்ணப்போற?” வரிசையாக நின்றிருந்த இல்லவாசிகளில் ஒருவனின் கண்களைச் சோதித்துக்கொண்டிருந்தார்.

``வெளிய வர்றமோ இல்லியோ... உடலை உறுதியா வெச்சுக்கணும்னு எங்க தலைவர் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தி ருக்கார் சார்” என்ற சாக்கோவை, டாக்டர் பார்த்தார்.

``அடுத்த வாரம் ஓபி-க்கு எழுதி, ஜெயிலருக்குத் தர்றேன். போயிட்டு வாங்கடா.” இல்லவாசிகளுக்கு மருந்தை எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

செல்லில் இருந்து காலை 6 மணிக்கு காவலர் திறந்தபோது உற்சாகமாய்க் கிளம்பியிருந்தான் ஜெயராம்.

``என்னடா வெளியே ரவுண்ட்ஸா?”

காவலரைப் பார்த்துச் சிரித்த ஜெயராம், ஐடி பிளாக்குக்குச் சென்றான். சாக்கோவும் கபீரும் குளித்து முடித்துத் தயாராக இருந்தனர். வெளிநாட்டு இல்லவாசிகள் ஜாக்கி டவுசரில் வெறும் உடம்போடு அந்தச் சிறையில் `நடக்கிறேன்’ என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓபி-க்கு மொத்தம் பத்துப் பேர்கொண்ட குழு, சப்இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆறு பேர் காவலர்களின் பாதுகாப்போடு என்கொயரிக்கு வந்தார்கள். கூடவே டாக்டரும் இருந்தார். எல்லோரையும் பரிசோதித்துவிட்டு இரும்புக் கதவைத் திறந்தார் காவலர் ஒருவர். வெளியே கால் வைத்தவர்கள்... வானத்தைப் பார்த்தார்கள். உள்ளேயும் அதே வானம்தான். ஆனாலும், வெளியே வேறொரு வானத்தைக் கண்டார்கள்.

வண்டி சிறைச்சாலை யிலிருந்து ஆஸ்பத்திரி நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதும், ஜெயராமின் முகம் ஒருவித மலர்ச்சிக்குள் வந்தது.

``டேய்... வீட்ல மீன்குழம்பு செஞ்சாங்க, மட்டன் குழம்பு செஞ்சு கொண்டு வந்தாங்கன்னு எதையாவது வாங்கிச் சாப்பிட்டீங்க... தொலச்சிடு வேன் தொலச்சி... படிக்காசு இருக்கு... அதுலதான் சாப்பி டணும், புரியுதா?” - அதிகாரி கண்டிப்புடன் சொன்னார்.

அப்போது வண்டி ஒரு சிக்னலில் நின்றது. பக்கத்திலேயே ஸ்கூட்டரில்  பாதுகாப்பான ஒரு வாழ்வை வாழ்வதாக நினைத்துக்கொண்டி ருக்கும் ஒரு குடும்பத் தலைவரும், அவர் பின்னால் பதவிசாக உட்கார்ந்திருக்கும் மனைவியும் வண்டிக்குள் இருக்கும் இவர்களைப் பார்த்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே ஏதோ நரகலைக் கண்டாற்போல திரும்பிக்கொண்டார்கள். ஆனால், முன்னால் உட்கார்ந்திருந்த பொதுப்புத்திகளின் பால்மணம் மாறாத குழந்தை, ஜெயராமைப் பார்த்துச் சிரித்தது. இப்படியான ஒரு பருவத்தில்தான் கூடா நட்பில் கேடாய் விளைந்த இந்தச் சிறை வாழ்வை நினைத்துக் கொண்டான். மீண்டும் இவனைப் பார்த்துச் சிரித்தது அந்தக் குழந்தை. தன் பிள்ளையின் சிரிப்பைப்போல இருந்தது அவனுக்கு. இந்தச் சிரிப்புப் பரிவர்த்தனையைப் பார்த்த பொதுப்புத்திகள், குழந்தையின் முகத்தைத் திருப்பினார்கள். வேன் கம்பிகளுக்குள் இருக்கும் அவனை, அது திரும்பவும் பார்த்துச் சிரித்தது. இந்தத் தடவை குழந்தையை வலுக்கட்டாயமாகத் திருப்பினார்.

``அங்கல்லாம் பார்க்கக் கூடாது” என்றார்.

ஜெயராமனுக்குக் கோபம் வந்தது. வேனிலிருந்து கத்தியேவிட்டான். ``ஹலோ சார்... நானும் மனுஷன்தான். இதே மாதிரி எனுக்கும் கொழந்த இருக்கு. என்னமோ... பீய பார்க்கிறா மாதிரி பார்க்கிற. ஒரு தடவ ஜெயிலுக்குப் போயி `கைதி’ன்னு சாப்பா குத்திட்டா, அவன் கெட்டவன்னே முத்திர குத்திடுவீங்களா!” என்று கத்தியபோது பொதுப்புத்தியின் பெல்பாட்டம் ஆடி முகமெல்லாம் வியர்த்துப்போனது.

சிக்னல் விழுந்ததும் சாக்கோவைப் பார்த்தான். ``இன்னாமா சிரிக்குது கொழந்த... அது மூஞ்ச திருப்புறான் கம்முனாட்டி. இவனுங்கள பொறுத்த வரைக்கும், ஜெயில்ல இருந்தா கெட்டவன். திருந்தி வெளிய வந்தாலும் இவுனுங்கோ பார்க்குற பார்வையில திரும்பவும் உள்ளேதான் வரணும்போலக்குது. இன்னா மச்சி சொல்ற?” 

நான்காம் சுவர் - 24

ஜெயராம் கேட்டதற்கு ``நீ வேறடா! நான் ஒய்ப்புகிட்ட `மீனு வறுத்து எடுத்துக்கிட்டு வாடி’ன்ன. வயனமா சாப்பிட்டே ரெண்டு வருஷம் இருக்கும்டா. எஸ்.ஐ இன்னான்னா, எதுவும் சாப்புடக் கூடாதுன்னு ரப்சர் குடுக்குறாரேன்னு யோசிச்சிக்கினு இருக்கேன்” என்று மனைவி கைப்பக்குவத்தில் தயாராகும் மீன்வறுவலில் ஆழ்ந்துபோனான் சாக்கோ.

அப்போது ஓர் இல்லவாசி, ஜல்லடைக் கம்பியின் வெளியே இந்த நகரத்தைச் சிறு குழந்தையின் குதூகலத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். மையத் தடுப்புச்சுவரில் அத்தனை இரைச்சல்களிலும் ஒருவர் ரத்தினக்கால் தோரணையில் சுதந்திரமாகப் படுத்துக்கொண்டிருப்பதை ஒருவித ஏக்கத்தோடு பார்த்துப் பெருமூச்சு விட்டார்.

``இன்னா தலைவரே... புதுசா பார்க்குறா மாதிரி பார்க்குற..?”  - ஜெயராம் அவரைப் பார்த்துக் கேட்டான்.

``வேறென்ன ராம்... அடுத்த வேள சோறு எங்கன்னு தெரியாது. ஆனா, அவ்ளோ சத்தத்துலயும் கம்பர்ட்டபிளா தூங்குறது எவ்ளோ பெரிய பாக்கியம் ராம்! சுதந்திரம் இல்லன்னா சொர்க்கம்கூட நரகம்தான் ராம்” என்று சிரித்தார். பிறகு, ``இப்படி வெளிக்காத்து வாங்குறதுக்கா கவாவது தீராத நோயி ஏதாவது வந்தா நல்லாத்தான் இருக்கும் ராம்” என்றபோது, ஜெயராமுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் அவனும் ஜல்லடைக் கம்பிகளின் வெளியே பார்த்தான்.

அந்த இல்லவாசிக்கு ஐந்து ஆயுள் என்பது ராமுக்குத் தெரியும். அவர் வெளிவருவது என்பது இந்த மாதிரியான தருணங்களில்தான். சிறைத்தண்டனை என்பது, சமூகத்திலிருந்து நம்மை ஒதுக்கிவைப்பதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் சமூகம் அந்த மனிதர்களை ஒதுக்குவதுதான் கிடைத்த தண்டனைகளிலேயே பெரிய தண்டனை என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆஸ்பத்திரி வளாகத்தில் வண்டி நுழைந்தது. அவரவர் ஜல்லடைக் கம்பிகளில் தன் உறவுகளைக் காண விழைந்துகொண்டிருந்தனர். அவ்வளவு கூட்டத்திலும் ஜெயராம் தன் மனைவியையும் பிள்ளையையும் பார்த்துவிட்டான். சக்கோவும் பார்த்துவிட்டான். ஒயர்க்கூடையில் மணந்து கொண்டிருக்கும் வீட்டுச் சாப்பாட்டின் வாசனை, மருந்து வாசங்களைக் கடந்து ராமின் மூக்கைத் துளைத்தது.

சிறை மரபுப்படி, எல்லோருக்கும் கைவிலங்குகள் போடப்பட்டன. வரிசையாக இறங்கினார்கள். சிறு சிறு உடல் உபாதைக்கு சிறைச்சாலை யிலேயே இருக்கும் மருத்துவ மனையில் பார்த்து
க்கொள்வார்கள். மிகவும் தனிமையை உணரும் தருணம்தான் என நினைக்கிறேன். பெரிய வியாதி என்று எப்படியாவது போராடி வெளியேறி, கிடைக்கும் சொற்ப நேரத்தில் உண்டு மகிழ்ந்து பார்த்துக்கொள்வதே இவர்களின் நோய் தீர்க்கும் மருந்து எனப்படுகிறது.

என்னதான் மனு ரூமில் பார்த்தாலும், இடையில் கம்பிகள் இல்லாமல், இரைச்சல்கள் இல்லாமல் பார்ப்பது என்பது, இல்லவாசிகளுக்கு நிம்மதியான தருணமாகத்தான் இருக்கும். வெளிநாடுகளில் சில சிறைகளின் சட்டப்படி மாதம் ஒருமுறை மனைவியை இல்லவாசியோடு தங்கிக்கொள்ள அரசாங்கமே அனுமதி கொடுக்கும். மனரீதியான வெம்மைகளுக்கு என்.ஜி.ஓ-க்களால் நடத்தப்படும் தெரபிகள் உண்டு. ஆனால், உடல்ரீதியான வெம்மைகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கும் சில நாடுகளின் சிறை முறைகளை நாமும் இங்கே பின்பற்றலாம் என்றுதான் தோன்றுகிறது.

ஜெயராம், தங்கத்தைப் பார்த்தான். கொஞ்சம் இளைத்தும்போயிருந்தாள். உழைத்துக் களைத்த வியர்வையின் கருமை, மஞ்சள் தாலியைக் கொஞ்சம் கருமையாகக் காட்டியது. கண்ணம்மா, கிட்டத்தட்ட இன்னும் கொஞ்ச நாளில் பக்குவமடையும் தருணத்தில் பூத்திருந்தாள்.

``எப்படியிருக்க தங்கம்? கண்ணம்மா, அம்மாவோடு இங்கியே இரு. செக்கப் பண்ணிட்டு வந்துர்றேன்” என்று ஆஸ்பத்திரிக்குள் எல்லோருமாக நுழைந்தார்கள். சுற்றிலும் இருப்பவர்கள் கைவிலங்கோடும் போலீஸ் பாதுகாப்போடும் இருக்கும் இவர்களை அதே பார்வை கொண்டு பார்த்தார்கள். ஒரு தடவை கைதி ஆகிப்போனால், இந்தச் சமூகத்தின் பார்வைகள் சகமனிதனாகப் பார்க்கவே பார்க்காதுபோல என நினைத்துக்கொண்டான் ராம்.

மருத்துவமனையின் பின்புறம் ஆலமரத்தின் அடியில் ஒரு மணி நேரம் உறவுகளோடு பேசிக்கொள்ள லாம் என அனுமதி கொடுத்தார் அதிகாரி. பத்துப் பேரைச் சுற்றியும் உறவுகளைச் சுற்றியும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவண்ணம் காவல்புரிந்தனர் காவலர்கள்.

தங்கம், ஜெயராமனுக்காகச் சமைத்துக் கொண்டுவந்த கதம்பச் சோற்றை எடுத்து அவன் முன் வைத்தாள். இதைப் பார்த்துவிட்ட அதிகாரி ``அம்மா... எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. சொன்னா கேளுங்க. இல்லன்னா இன்னும் அஞ்சு நிமிஷம்தான் டைம் கொடுப்பேன். புரியுதா!” என்றார்.

தூக்குவாளியைக் கீழே வைத்துவிட்டு எழுந்த தங்கம், அதிகாரி முன் வந்து ``சார்... ஒவ்வொரு தடவையும் நல்ல சோறு துன்னும்போதெல்லாம் கை நடுங்குது சார். உள்ளே இருந்துக்கினு இன்னாதான் துன்னுதோன்னு மனசு கெடந்து தவிக்கும். வக்கணையா சாப்புட்டு வாழ்ந்துடுச்சு. நான் சொல்லியும் கேக்கல... யார் சொல்லியும் கேக்கல. ஆனா, பிரிவுங்கிற தண்டன அத்த மனுஷனா ஆக்கிடுச்சு சார். ரவோண்டு சாப்புட வுடு சார். உங்களுக்குப் புண்ணியமாப்போவும்” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

காவல்கள் கொஞ்சம் தளர்ந்தன. ``சரி சரி, சீக்கிரம் ஆவுட்டும்” என்றார் அதிகாரி. கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டார். 

நான்காம் சுவர் - 24

சாக்கோ மிகவும் சந்தோஷமானான். அவனின் மனைவியும் மாமனாரும் வந்திருந்தனர். கையில் ஒன்றரை வயதுக் குழந்தை அவனை உருட்டி உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. ``அம்முகுட்டி... செல்லக்குட்டி..!’’ என்று கொஞ்சிக்கொண்டிருந்தபோது கைவிலங்கின் முனை பிள்ளையின் கையில் பட்டு லேசாகக் கீறல்போல் சிவந்தது.

அவள் ``அம்மு, அப்பா பாரு... அப்பா பாருடா” என்று சொன்னபோது, எனக்கு நண்பன் வே.பாபுவின் கவிதை ஒன்று மனதில் வந்துபோனது.

`கம்பியிட்ட வெள்ளை வேனிலிருந்து
கைவிலங்கோடு
இறக்குகிறார்கள் அவனை
குழந்தையின் கடைவாயைத் திருப்பி
அப்பா பாரு... அப்பா பாருவென
அடையாளங்காட்டுகிறாள் அவள்
வலுக்கிறது மழை.’


கதம்பச் சோற்றை உருட்டி மாசிக் கருவாட்டுத் தொக்கைச் சோற்று உருண்டையில் கொஞ்சமாய் வைத்து ராமிடம் தந்தாள் தங்கம். அதை வாயில் போட்டுச் சுவைத்தபோது, அவன் அறியாமல் அவன் கண்களில் நீர் வர எத்தனித்தது. சமாளித்துக்கொண்டவன் கண்ணம்மாவைப் பார்த்தான்.

``சீட்டுக்காரம்மாகிட்ட தள்ளு போயி வந்த காச கொஞ்சம் எடுத்துவையி. சும்மா கேஸுக்கின்னே செலவு பண்ணாத. ஏதோ பொதுமன்னிப்புல அரசாங்கமே விடுதல பண்றாமாரி ஒரு பேச்சு போய்க்கினு இருக்குது. கண்ணம்மாவுக்கு ஏதாவது வாங்கிப் போடு. காது மொட்டையா கெடக்குதுல்ல” சோறும் மாசித் தொக்கின் சுவையும் ஒவ்வொரு நரம்பிலும் சென்று சேர்ந்தன. கண்ணம்மா எதுவும் பேசாமல் இருப்பது, ராமுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது.

இல்லவாசி கபீருக்கு அம்மா மட்டும் வந்திருந்தார். அவரே பிசைந்து ஊட்டினார். பெரிய பெரிய உருண்டையாக இருந்ததால் ``யம்மா... சின்ன உருண்டையா குடும்மா” என்றான். ஊருக்கே பழியாக இருந்தாலும் பிள்ளைகளை மட்டும் இந்த அம்மாக்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.

``ஏன் அவ வர மாட்டாளா மாம். வெளிய வந்தன்... அவ மௌத்தாயிடுவா!” என்று சின்ன உருண்டையை வாங்கிக்கொண்டான். அதுவரையில், அமைதியாய் ஊட்டிக்கொண்டிருந்த அம்மா, விட்டாள் ஓர் அறை. எல்லோரும் திரும்பிப் பார்த்துவிட்டு அவரவர் வேலையில் மூழ்கினர்.

``கம்மினாட்டி நீ பாட்டுக்கு ஒரு கொலய பண்ணிட்டு, உள்ளே வந்து உக்காந்துட்ட. பாவம் புள்ளைங்கள வெச்சுக்கிட்டு அவ பட்ற வேதனை இருக்கே... சொல்லி மாளாது. நீ வெளிய வந்துடாத, இருக்கிற காண்டுல அவ உன்னை வெட்டிட்டு உள்ளே வந்துருவா. ஒழுங்கா சாப்புடு” என்றார்.

``தங்கம், இவர்தான் எங்க பிளாக்குக்கு தலைவரு. அஞ்சு ஆயுள்தண்டனை. சோத்தப் போட்டுக் குடு. தலைவரே, தங்கம் கை பட்டா சுடுதண்ணிகூட சூப்பரா இருக்கும்” என்றபோது தங்கம் மெலிதாகச் சிரித்துக்கொண்டாள்.

``அண்ணே, உங்க வூட்லர்ந்து யாரும் வர்லியாண்ணே?” சோற்றுத் தட்டைக் கொடுத்தாள் தங்கம்.

அவர் ராமுவைப் பார்த்துவிட்டு ``யாரும் இல்லம்மா. எனக்குன்னு இருந்தவளும் டிபி-ல செத்துப்போயிட்டா. அப்பப்போ வெளிய வரும்போது நாமளும் இந்த பூமியிலதான் வாழறோம்னு நினைச்சுக்கலாம்மா” என்று சோற்றைப் பிசைந்து சாப்பிட்டார். ``ரொம்ப ருசியா இருக்கும்மா. ராமு, கண்ணம்மா என்ன படிக்குது?” என்று கேட்டார்.

``எட்டாவது படிக்கிறேன் அங்கிள்...” என்றாள் கண்ணம்மா.

``எப்பவும் உன் நினைப்பாத்தான் இருப்பான் உங்கப்பன். ஏதோ ஒரு கோவத்துல பண்ண விஷயத்துல, உங்கள பிரிஞ்சு அவன் பட்ற வேதனை... அந்தக் கொட்ட சுவருக்குத்தான் வெளிச்சம்” மாசித் தொக்கை கொஞ்சமாய்க் கேட்டு வாங்கிக்கொண்டார்.

``இவுர விடுதல பண்ணா போதும்ணே. எங்கியாவது கண்காணாமப் போயி வயித்தக் கழுவிக்கலாம்ணே. ஆம்பள இல்லாத வூடுண்ணா, எவன் எவனோ உள்ளே வரப்பாக்கு றாண்ணே. `ஜெயிலுக்குப் போனவன் பொண்டாட்டி தானே’ன்னு கை  வெக்குறான். கண்ணம்மாவ காப்பாத்திக் கர சேத்துட்டா போதும்ணே” என்றபோது தங்கம் அழுதுவிட்டாள்.

ராம் கண்களில் துளித்த நீர், இயலாமையால் வடிந்து கொண்டிருந்தது.

அதிகாரி, எல்லோரையும் வேனில் ஏற்றினார். ஜல்லடைக் கம்பிகளில் அவரவர் குடும்பத்தோடு பேசிக்கொண்டி ருந்தார்கள் இல்லவாசிகள்.

``தங்கம், அடுத்த மாசம் பரோல்ல மூணு நாள் வருவேன். அப்போ கண்ணம்மாவுக்குக் கம்மல் வாங்கலாம். கொழந்தைக்கு பழைய டிசைன்ல வாங்கிடுவ... புரியுதா” என்று கண்ணம்மாவைப் பார்த்தான் ராம்.

வண்டியைக் கிளப்பி னார்கள். அதுவரை அமைதி யாக இருந்த கண்ணம்மா, வண்டிக்கு அருகில் வந்தாள். ``அப்பா... பரோல்ல வரும்போது தியானம் பண்ற புத்தர் சிலை செஞ்சு எடுத்துக்கிட்டு வாப்பா. என் ஸ்கூல்ல காட்டணும். எங்கப்பா கொலைகாரன் இல்ல... சிலை வடிக்கிற சிற்பின்னு சொல்லணும்பா” என்றபோது, ராமால் தாங்க முடியவில்லை. தன் பிள்ளை தன்னை ஒரு சிற்பியாகத்தான் நினைத்திருக்கிறது இவ்வளவு நாளும்.

``இந்தச் சமூகம் என்னை கைதின்னு ஒதுக்கிவைக்கட்டும் சார். ஆனா, என் கண்ணம்மா என்னை ஒரு சிற்பியா நினைக்கிறாள்ல அதுபோதும்” என்று ராம் சிற்பக் கலைக்கூடத்தில் புத்தரின் சிலையை உருவாக்க உற்சாகமாய் நுழைந்தான். 

இந்த வாழ்வில் அதி உன்னதச் சொல் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் `அன்பு.’ அதைப் பூரணமாய் நாம் வைத்திருக்கும் உயிர் உதிர்க்கும் வார்த்தைகள் யாவுமே தேவ வார்த்தை கள்தாம். கண்ணம்மாவின் வார்த்தைகள், ராமை புத்தராகவே ஆக்கக்கூடுமென நினைக்கிறேன்.

- மனிதர்கள் வருவார்கள்...