மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 10

இறையுதிர் காடு - 10
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு - 10

இறையுதிர் காடு - 10

இறையுதிர் காடு - 10

அன்று போகர் அளித்த ஆச்சர்யம், சீடர்களிடம் கேள்விகளை விளைவித்தது.

``குருபிரானே, இப்படி ஒருவரால் நடந்துகொள்ள முடியுமா? சிவபெருமான், நம்மையெல்லாம் படைத்தவர். உடம்பெங்கும் சொறியும் சிரங்குமானவனோ பரிதாபத்துக்குரியவன். எப்படி இருவரையும் சமமாக ஒரு மனதால் எண்ண முடியும்?’’ என்று கேட்டான் ஒரு சீடன்.

சிரித்தார் போகர். சிரிப்பு, ஒரு மர்மமொழி. எப்போதும் ஒரு ஞானியின் சிரிப்புக்கு இன்னொரு ஞானியாலேயே சரியான பொருள் கூற முடியும். அது ஓர் அனிச்சைச் செயலும்கூட. எனவே, போகர் சிரிப்பின் பொருளை அங்கே யாரும் உணரவில்லை. உணரும் வயதும் அவர்களுக்கில்லை. போகரே தொடர்ந்தார்.

இறையுதிர் காடு - 10

``அருமைச்சீடர்களே... இப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. சிவபெருமானையும் சொறி பிடித்தவனையும் ஒன்றாகக் கருத, உங்களால் முடியாதுதான். ஏனென்றால், இந்த உலகம் அப்படித்தான் உங்களுக்குச் சொல்லித்தந்துள்ளது. உயர்வு தாழ்வு கருதாமல் ஒன்றைச் சமமாக நோக்க, மிகுந்த தெளிவு வேண்டும். அந்தத் தெளிவு ஒரு நாள் ஒரு பொழுதில் வந்துவிடாது. தெளிவுபெற, பாலின் கதையைக் கூறுகிறேன்.

பாலுக்குள்தான் நெய் உள்ளது. ஆனால், அது வெளியே தெரிவதில்லை. பாலைப் பக்குவமாய்த் தயார் செய்யச் செய்ய நாம் அதை நெருங்க முடிகிறது. மாறாக, பால் கெட்டுவிட்டாலோ அதுவும் கெட்டுவிடுகிறது. இப்படிப் பக்குவமாய்த் தயார்செய்வது என்பதில்தான் எல்லாம் உள்ளன. பாலை முதலில் காய்ச்ச வேண்டும், குளிரச்செய்ய வேண்டும், தயிர்த்துளி சேர்க்க வேண்டும், உறைந்த நிலையில் கடைய வேண்டும். கடையக் கடையவே நெய்யின் மூலமான வெண்ணெய் வெளிப்படும். ஓர் ஆச்சர்யம் பாருங்கள், இந்த வெண்ணெய் எந்தத் தயிரிலிருந்து பிரிந்து வந்ததோ, அந்தத் தயிரோடு திரும்பச் சேரவே சேராது. தனித்து மிதக்கும்! இன்னோர் ஆச்சர்யம் பாருங்கள், இந்த வெண்ணெய்க்கு, தனியே எந்த ருசியுமில்லை. இதுவே காய்ச்சப்பட்ட நிலையில் நெய்யாகிறது. நெய்யான பிறகோ மணக்கிறது அல்லவா!’’ - போகர் சொல்லச் சொல்ல, சீடர் குழாமிடம் ஆமோதிப்பு.

இறையுதிர் காடு - 10



``இந்த மணம், பாலாக இருந்தவரை இல்லையல்லவா?’’

``ஆமாம்...’’

``இல்லாத மணம் நெய்யிலிருந்து மட்டும் எப்படி வந்தது?’’

``தெரியவில்லையே!’’

``தெரிந்துகொள்ளுங்கள். பாலின் பாடுகளே நெய்! மனிதர்களாகிய நாமும்கூட தாயின் கர்ப்பத்திலிருந்து பாலைப்போலத்தான் வெளிப்படுகிறோம். பால், நீரோடு சேர்வதுபோல் நாம் பலரோடு சேர்கிறோம். பால், பாத்திரத்தில் காய்கிறது. நாம் வாழ்வில் காய்கிறோம். பால் பிறகு தயிர் ஆகிறது. நாமும் நல் மனிதர் ஆகிறோம். தயிர் கடையப்படுகிறது. நாமும் வாழ்வின் பாடுகளால் கடையப்படுகிறோம். தயிர், வெண்ணெயை விடுவிக்கிறது. நம் மனமோ, அனுபவ அறிவை விடுவிக்கிறது. வெண்ணெய் நெய்யாகிறது. நம் அனுபவ அறிவோ ஞானமாகிறது.

இப்படி அடையும் ஞானமே பிரம்மஞானம்! இந்த ஞானத்தை அடைந்தவனுக்கு, தான் வேறு, இந்த உலகம் வேறு அல்ல. தான் வேறு, தான் வணங்கிய தெய்வமும் வேறல்ல. அந்தத் தெய்வப் படைப்பில் எதுவும் வேறு வேறல்ல. எல்லாமே ஒன்றுதான். அதனால்தான் சிவபெருமானும் சிரங்காளனும்கூட ஒருவரே!’’ - போகர் பாலைத்தொட்டுக் கூறி முடித்த அந்தச் செய்தி, அவர்களுக்குப் புரிந்ததுபோலவும் இருந்தது;புரியாததுபோலவும் இருந்தது. போகருக்கும் அது தெரிந்தது.

``அருமைச்சீடர்களே... நான் கூறியதை மனதின் ஓர் ஓரமாய்ப் போட்டுவையுங்கள். காலத்தால் முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள். நான் பிரம்மபுத்திரனான சனத்குமாரனிடம் திரும்ப வருகிறேன். இவன் ஒரு பிரம்மஞானி என்றேனல்லவா? இந்தப் பிரம்மஞானிக்கு ஒரு நாள், ஒரு கனவு வந்தது!’’ - போகர் இடைவெளி விட்டார். புறத்தில் கதிரவன் மேற்குத் திசையில் தன்னை ஒரு மஞ்சள் காவி உருண்டையாக ஆக்கிக்கொண்டு மறையத் தயாராகியிருந்தான். அற்புதமான காலகட்டம். சீடர்கள் சனத்குமாரன் கண்ட அந்தக் கனவு என்னவாக இருக்கும் என்கிற கேள்வியில் இருந்தனர்.

``அருமைச்சீடர்களே... சனத்குமாரர் நம்மைப்போல் அல்ல. நான் கூறியதுபோல் சகலத்தையும் சமமாகப் பார்ப்பவர். அவருக்கு எதிரிகளும் கிடையாது, நண்பர்களும் கிடையாது. பெரிது சிறிது கிடையாது, இடது வலது கிடையாது, மேல், கீழ் கிடையாது, இனிப்பு கசப்பு கிடையாது, இன்ப துன்பமும் கிடையாது. மிகச் சுருக்கமாகக் கூறுவதானால், மனதை வென்று அதை மையப்புள்ளியில் வைத்துச் செயல்படும் அதிசய மனிதர் அவர்.’’

``அவர் கனவுகண்டார் என்றீர்களே?’’

``அப்படிக் கேளடா சீடா... இப்படிப்பட்டவருக்குக் கனவே வராது... வரவும் கூடாது. கனவு, சலனத்தின் விளைவு! ஆனால், வந்துவிட்டது... அதுதான் விந்தை.’’

``அந்தக் கனவு?’’

``அந்தக் கனவு ஒரு விசித்திரம். கனவில் சனத்குமாரர் சிலரோடு சண்டைபோடுகிறார். அதுவும் வாள்சண்டை!’’

``எங்களுக்கு இதுபோல் பலமுறை கனவுகள் வந்துள்ளனவே!’’

``உங்களுக்கு வரலாம். நீங்கள் ஆசையுள்ள மானிடர்கள். ஆனால், சனத்குமாரர் அப்படியல்ல. அவர் மனம் சலனமே இல்லாதது. அதற்காகத்தான் அவர் குறித்து அவ்வளவு விளக்கம் அளித்தேன்.’’

``பிறகு எப்படி, அப்படி ஒரு கனவு வந்தது?’’

இறையுதிர் காடு - 10

``இதே கேள்வியை சனத்குமாரர் தன் தந்தையான பிரம்மாவிடமே கேட்டார். `தந்தையே... நானொரு முழுமையான பிரம்மஞானி இல்லையோ என்கிற ஓர் எண்ணம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனக்கு எப்படி இப்படி ஒரு கனவு வர முடியும்... அதுவும் வாளெடுத்து சண்டைபோடுவதுபோல்?’ என்று கேட்டார்.’’

``அதற்கு பிரம்மா என்ன பதில் கூறினார்?’’

`` `மகனே... இந்தப் பிறப்பில் நீ சிவபெருமானிடமே உபதேசம் பெற்று பிரம்மஞானியாகிவிட்டாய். ஆனால், உன் முன் பிறப்பில் நீ ஒரு முனிகுமாரன். அப்போது சில அசுரர்கள் நீ வாழ்ந்த குடிலுக்கு வந்து முனிகளையும் ரிஷிகளையும் வெட்டிக் கொன்றபோது நீ பாலகனாய் இருந்து அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் குமைந்தாய். பதிலுக்கு அந்த அசுரர்களை அழிக்க எண்ணினாய்... மிக உணர்வுபூர்வமாக நீ அவ்வாறு அன்று எண்ணியதன் விளைவுதான், இப்போது உனக்குள் கனவாய்க் கசிந்து வெளிப்பட்டுள்ளது’ என்றார் பிரம்மா.’’

``என்ன விந்தை... முற்பிறப்பின் தாக்கம் மறுபிறப்பில் கனவாகுமா?’’

``ஆகும் என்று நாமறியவே இந்தச் சம்பவம்!’’

``எப்படி குருவே... அப்போதைய உடல், உள்ளம் எல்லாமே வேறு... இப்போது முற்றிலுமாய் வேறு.’’

``ஆன்மா ஒன்றுதானே!’’

``அப்படியானால்... ஆன்மா, ஒலி ஒளி என்னும் இரண்டையும் உடல்போல் உணரத்தக்கதா?’’

``அவ்வாறு இருந்தாலே கனவும் தோன்றும்.’’

``என்றால், ஒரு பிறப்புதான் - மறுபிறப்பெல்லாம் கிடையாது எனும் மீமாம்சகர் மற்றும் அமணர் கருத்துகள் எல்லாம் பொய்யா?’’

``இரவில் எல்லா நிறங்களும் கறுப்புதான். பகலில்தான் அதனதன் நிறம் அது அதற்கு. பகலே காணாது இரவில் மட்டும் வாழ்கிறவர்கள் வரையில் வண்ணங்கள் பொய்யாகத்தான் இருக்க முடியும். அதுபோல் ஒரு விஷயம் இது!’’

இறையுதிர் காடு - 10



``இம்மட்டில் உங்கள் கருத்தென்ன குருவே?’’

``வினைப்பாட்டிற்கேற்ப நிச்சயம் மறுபிறப்பு உண்டு. திரும்பத் திரும்பப் பிறந்து உழலும் பாடு கூடாது என்பதற்கே ஆசையைச் சீரமைத்துக்கொள்ளும் சந்நியாசம் மேற்கொள்ளப்ப டுகிறது. ஒருகட்டத்தில் சகலத்தையும் துறந்துவிடுதலே மேலான விடுதலை.’’

``இதில் பிரம்மஞானியர் எப்படிப்பட்டவர்?’’

``சகலமும் துறந்து, எதுவும் வேண்டாது, எதிலும் மகிழாது, எதிலும் துன்புறாது, சலனமில்லாத திடச்சிந்தை உடையவரே பிரம்மஞானியர்.’’

``அப்படிப்பட்டவருக்கும் ஊழ்வினைப்பாடு இருந்தால் அல்லவா இதுபோல் கனவுகள் சாத்தியம்?’’

``சரியாகக் கேட்டாய்... இது ஊழ்வினைப்பாடுதான்!’’

``சரி... இந்தக் கனவால் நாம் உணர்ந்தறியவேண்டிய விஷயம்?’’

``ஊழ்வினை விடாது என்பது மட்டுமல்ல... பிரம்மஞானியர் கனவு கண்டால், அது பலித்துவிடும் என்பதும்தான்.’’

``அப்படியானால், சனத்குமாரர் தான் கனவில் கண்டபடி சண்டை போடப்போகிறாரா?’’

``ஆம்!’’

``அப்படியானால் பிரம்மஞானியாக விளங்க முடியாதே!’’

``முடியும்... அது எப்படி என்பதுதான் நீங்கள் இனி அறியப்போகிற சம்பவம்.’’

``புதிராக இருக்கிறதே... எப்படிச் சாத்தியம்?’’

``அப்படிச் சாத்தியமான ஒருவனே, சனத்குமாரன் என்கிற தண்டபாணி!’’ - போகரின் பதிலால் சீடர்கள் வியப்பு, திகைப்பு என்று இரண்டுக்குமே ஆளாகினர்!

இன்று கடந்துபோன ரவிக்குமாரை, கணேசபாண்டியன் இறுதிவரை பார்த்தார். ரவிக்குமார் பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே ராஜாமகேந்திரனைப் பார்க்கச் செல்வது தெரிந்தது.

``அவர்தான் அந்த எஸ்.ஐ ரவிக்குமாராண்ணே?’’ - பாரதி, மிகச்சரியாக அம்பால் குத்துவதுபோல் கேட்டாள்.

``அ... ஆமாம் பாப்பா. நீங்களும் பார்த்திருக்கீங்களா?’’

``ஒரு யூகத்துல கேட்டேன். அப்பாவைப் பார்க்க வர்றவங்களுக்கான விசிட்டர்ஸ் லெட்ஜர்ல அவர் பேர் மட்டும் இதுவரை இல்லை. இப்பதான் வந்திருக்கார்போல.’’

``ஐயாவைவிட நீங்க ஷார்ப் பாப்பா.’’

``என்ன ஷார்ப்போ? போகட்டும், நாம அந்த வேங்கையனைப் பார்க்கப் போகலாமா?’’

புதிய டிரைவரின் செயல்பாட்டில் கார் சென்றபடி இருக்க, அவள் கேட்ட கேள்வியால் கணேசபாண்டியனிடம் ஓர் இறுக்க மௌனம்.

``என்னண்ணே பதிலக் காணோம்?’’

``அவன் எங்க இருக்கான்னே தெரியல பாப்பா... போன் `ஸ்விட்ச் ஆஃப்’னு வருது.’’

``அவன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனா என்ன... அவன் அல்லக்கைங்க இருப்பாங்கல்ல?’’

``எவனும் போனை எடுக்க மாட்டேங்கிறான் பாப்பா.’’

``இதோ பாரு கணேசபாண்டி... என் பிள்ளை பட்டது போதும். அந்தக் குடும்பத்துக்குக் கொஞ்சமாவது நல்லது செய்தாதான் ஆஸ்பத்திரியில கொடுக்கிற மருந்து மாத்திரை என் பிள்ளை வரையில வேலைசெய்யும்... ஆமா!’’ - முத்துலட்சுமி இடையிட்டுச் சீறினாள். 

இறையுதிர் காடு - 10

``அம்மா, நான் முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கேன். நான் சும்மால்லாம் இல்லைம்மா.’’

``எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னிக்கு அந்தப் போலிப்பத்திரத்தை, செத்துப்போன அந்தக் குமாரசாமி வீட்டுக்கே போய் நீங்க கிழிச்சுப் போட்டுட்டு, குமாரசாமியின் பொண்ணு பொண்டாட்டின்னு ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திட்டு வர்றீங்க. அந்த மனுஷரோட பத்தாம் நாள் காரியம் நடக்கும்போது அந்தக் குடும்பத்துல அவர் இல்லைங்கிற குறையைத் தவிர, வேற எந்தக் குறையும் இருக்கக் கூடாது. நடுவுல நானும் பழநிக்குப் போய் பாலபிஷேகம் பண்ணிட்டு வர்றேன். மகி என்வரையில நல்லபடியா வீடு வந்தா போதும்.’’

முத்துலட்சுமியின் உத்தரவான பேச்சு, அந்தப் புதிய டிரைவரைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

``டிரைவர், பார்த்து ஓட்டுங்க. டிரைவ் பண்ணும்போது பின்னால என்ன பார்வை?’’ - பாரதி டிரைவர் பார்த்ததைக் கண்டித்தாள். டிரைவரிடம் உடனே லேசான பதற்றம்.

``கார் டிரைவ் பண்ணும்போது பெல்ட் போட்டுக்கிற பழக்கமில்லையா?’’

``ஸாரி மேடம்... போட்டுக்கிறேன் மேடம்’’ - டிரைவர் காரை ஓட்டியபடியே பெல்ட் போட முயல, ``நோ... ஓரமா நிறுத்திப் போட்டுக்கிட்டு காரை எடுங்க. டிரைவிங் ரூல்ஸ் எல்லாம் தெரியும்தானே?’’

``தெ... தெரியும் மேடம்.’’

``அப்புறம் என்ன... அதை ஃபாலோ பண்ணவேண்டியதுதானே?’’ - பாரதியின் அதட்டல், அவள் எப்படிப்பட்டவள் என்பதை உணர்த்திட, ஓரமாய் காரை நிறுத்தி பெல்ட்டை இழுத்துச் செருகிக்கொள்ள முனைந்தான் அவன். அப்போது பாரதியும் அரவிந்தன் ஞாபகம் வந்து அவனை அழைக்கத் தொடங்கினாள்.

``ஹலோ அரவிந்தன் சார்... இப்ப கொஞ்சம் ஃப்ரீயா பேசலாம். சொல்லுங்க...’’

``தொடர்கதைக்கான அத்தியாயம் ரெடியாயிடிச்சு பாரதி. மெயில் செய்திடுறேன். படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லலாம்.’’

``நிச்சயமா சார்...’’

``அப்புறம் உங்க அப்பா தொடர்பா விசாரிக்க நான் ரெண்டு தடவை போன் செய்தேன். நாட் ரீச்சபிள்னே வந்தது.’’

``இருக்கலாம்... நானும் ஒரு இடத்துல இல்லை, அலைஞ்சுகிட்டே இருக்கேன்.’’

``அப்பா எப்படி இருக்கார்?’’

``ஆபரேஷன் நடந்திருக்கு... எழுந்து பழைய மாதிரி நடமாட ஆறு மாசம், ஏன்... ஒரு வருஷம்கூட ஆகலாம்.’’

``தற்செயலான விபத்துதானே பாரதி?’’

இறையுதிர் காடு - 10

``ஆமாம். எங்க பாட்டி பாஷையில சொல்லப்போனா கெட்டநேரம், தலையெழுத்து...’’

``அப்படித்தானே அடையாளப்படுத்த முடியும்... நல்லது நடந்தா நல்ல நேரம்னும், கெட்டது நடந்தா கெட்ட நேரம்னும் சொல்றது இயல்புதானே!’’

``என்ன இயல்போ... உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்திக் கேட்க விரும்புறேன். தெளிவான ஒரு பதிலைச் சொன்னா நல்லது.’’

``கேளுங்க பாரதி, தெரிஞ்சா சொல்றேன்.’’

``உங்களுக்கு, இந்த சாபங்கள்ல நம்பிக்கை உண்டா?’’

``சாபங்கள்... யூ மீன் மனசு நொந்துபோய் கோபமா குமுற, அந்தக் கேட்டகரியைத்தானே சொல்றீங்க?’’

``ஆமாம்.’’

``நூறு சதவிகிதம் நம்பிக்கை உண்டு பாரதி.’’

``அது விஞ்ஞானபூர்வமானதா..?’’

``எதுக்கு இப்ப இப்படி ஒரு கேள்வி?’’

``சொல்றேன்... இதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.’’

``ஆமாம், விஞ்ஞானபூர்வமானதுன்னுதான் நான் நினைக்கிறேன்.’’

``ரியலி..?’’

``என்வரையில நம்ம ஆன்மிகமான கோயில், குளங்களேகூட விஞ்ஞானபூர்வமானவைதான். இன்ஃபேக்ட், விஞ்ஞானம் இல்லாம எதுவுமே இல்லை. எதுவும் இருக்கவும் முடியாது.’’

``அப்படின்னா எந்த ஒரு மிஸ்ட்ரியையும் ஏன் விஞ்ஞானபூர்வமா நிரூபிக்க முடியுறதில்லை?’’

``நிரூபணங்கள் ரெண்டுவிதம். ஒண்ணு, பார்த்து உணர்வது. இன்னொண்ணு, அப்படிப் பார்க்காம பயன்பாட்டால் உணர்வது. இதுல மிஸ்ட்ரி, பயன்பாட்டால மட்டுமே உணர முடிஞ்ச அம்சம். இதைக் கருவிகளால அளந்தோ, இல்லை காட்சியா காட்டியோ உணர்த்த முடியாது.’’

``ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?’’

``நாம ஒருத்தரை தீவிரமா நினைக்கும்போது அவர்கிட்ட இருந்து போன் வருவது... இல்ல அவரே எதிர்ல வருவது.’’

``அது தற்செயல் கிடையாதா அரவிந்தன் சார்?’’

``அப்படிப் பார்த்தா எல்லாமே தற்செயல்தான். ஒரு கல்யாண வீட்டுக்குப் போறோம். தாலி கட்டி முடிச்ச உடனே வாழ்த்தணும்கிறதுதான் அஜெண்டா! அதுக்கு ஒரு நபருக்கு ஒரு நிமிஷமே ரொம்ப அதிகம். ஆனா, பல மணி நேரத்தை கல்யாண வீட்ல செலவழிக்கிறோம். சிரிப்பு, பேச்சுன்னு அங்க நாம செயல்படுறது எல்லாமே ஆளுக்குத் தகுந்தமாதிரியும், அவங்க பதிலுக்கு எப்படி நடந்துக்கிறாங்கங்கிறதைப் பொறுத்ததுதானே? அதைப் பரஸ்பர அன்பு, பரிமாற்றம்னு சொல்லிக்கிறோம். ஆனா, அதைத் திட்டமிட்டா செய்தோம்... ரொம்பத் தற்செயலாதானே?’’

``அப்ப  பலவித மூடத்தனங்கள்கொண்ட நம்ப ஆன்மிகம், உங்க வரையில விஞ்ஞானபூர்வமானதா?’’

``என்வரையில, இந்த மூடத்தனம்கிறது பொல்லாத ஒரு வார்த்தை பாரதி. தினமும் நான் என் உள்ளங்கையை முதல்ல பார்த்துட்டுதான் விழிப்பேன். சில சமயங்கள்ல பார்க்கத் தவறிடுவேன். அன்னிக்கு நான் மாறுபட்ட அனுபவங்களை உணர்வேன். இதை வெளியே சொன்னா, மூடநம்பிக்கைன்னுதான் சொல்வாங்க. ஆனா எனக்கு, இது அசைக்க முடியாத நம்பிக்கை. அவ்வளவுதான்!’’

``இன்ட்ரஸ்ட்டிங்... உங்ககூட நேர்ல பேசினா ஒரு தெளிவு கிடைக்கும்னு நினைக்கிறேன்.’’

``அப்ப நீங்க ஏதாவது குழப்பத்துல இருக்கீங்களா?’’

``ஆமாம் அரவிந்தன் சார்... ரெண்டு மூணு நாளா என்னைச் சுத்தி நடக்கிற பல விஷயங்கள் ரொம்ப அமானுஷ்யமா இருக்கு. அப்பா ஆக்ஸிடென்டேகூட ஒரு அமானுஷ்யம்கிற மாதிரி எனக்கொரு எண்ணம் ஏற்பட்டிருக்கு.’’

``அப்ப, வீட்டுக்கு வாங்க... விரிவா பேசுவோம்.’’

``நிச்சயமா.. பை த பை நான் ஆபீஸ் போக இன்னும் நாலஞ்சு நாளாகலாம். நீங்க கதையை எடிட்டருக்கும் மெயில் பண்ணிடுங்க. அவரும் படிச்சிடட்டும். எப்ப, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு அப்புறம் முடிவெடுப்போம்.’’

``ஓ.கே. பாரதி.’’

``நல்லது சார்... வெச்சுடுறேன்’’ என்று போனை கட்செய்தவள், யதார்த்தமாய் வெளியே பார்த்தாள். கார், லஸ் ரவுண்டானா கடந்து துரியானந்தம் கடையைக் கடந்தபடி இருந்தது. கடை முகப்பில் துரியானந்தம் அமர்ந்திருந்தான் கையில் சிறிய கட்டுடன். அவன் கடையைப் பார்த்த நொடி, காரை ஓரங்கட்டச் சொல்லி இறங்கினாள் பாரதி. கணேசபாண்டியனும் இறங்கி தன் செல்போனில் வேங்கையன் தொடர்பான நபர்களோடு பேசத் தொடங்கிவிட்டார்.

பாரதியைப் பார்த்த துரியானந்தத்திடம் ``வாங்கம்மா...’’ என்கிற உற்சாக வரவேற்பு.

``என்னண்ணே கையில கட்டு?’’

``ஒரு ஜமீன் பங்களாவை இடிக்கிறாங்க. அங்க இருக்கிற மரச்சாமானையெல்லாம் ஏலத்துல எடுத்தோம். அதுங்கள பிரிச்சு எடுக்கிறப்ப கையில உளி பட்ருச்சு’’ - துரியானந்தம் பதில் சொன்ன நொடியில் பாரதி குனிந்து அந்த உறைக்குள் உள்ள வாளை உறையோடு சேர்த்து எடுத்தாள். நாலாபுறமும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். துரியானந்தத்துக்குள் பீதி ஏற்படத் தொடங்கியது. எல்லோரையும்போல வாளை உருவிப் பார்க்க விரும்பி அதற்காகத் தயாராகவும் ``அம்மாம்மா...’’ என்று இடையிட்டான் துரியானந்தம்.

``என்னண்ணே?’’

``வேண்டாம்மா... அதை அப்படியே வெச்சுடுங்க... அதை உருவி மட்டும் பார்க்காதீங்க.’’

``ஏண்ணே?’’

``வேண்டாம்மா... எப்ப யார் அதை உருவினாலும் அது ரத்தம் பார்த்துருதும்மா.’’

``அப்படின்னா?’’

``ஏதாவது காயம் பட்ருதும்மா. கொஞ்சம் எண்ணெயெல்லாம் போட்டு இளக்கணும்.’’

``வேடிக்கையா இருக்கே!’’

``வேடிக்கையெல்லாம் இல்லம்மா. அந்த வாள் சுடலைமாடன் கையில இருந்த வாளாம். சுடலைமாடன் கோயிலை இடிச்சுக் கட்டி ஏலம் விடுறப்ப, என் பையன் ஏலத்துல எடுத்தது அது. அந்தச் சாமிதான் துடியான சாமி ஆச்சே? அதான் எப்ப உருவினாலும் ரத்தம் குடிச்சிடுது!’’

``அண்ணே கத்திங்கிறது ஒரு ஜடம். இதுக்கு புத்தியெல்லாம் கிடையாது. யாராவது கேட்டா சிரிப்பாங்க. இப்ப நான் உருவுறேன். எப்படி ரத்தம் குடிக்குதுன்னும் பார்க்கிறேன்’’ என்றபடியே உறையிலிருந்து வாளை உருவத் தயாரானாள் பாரதி. துரியானந்தம் பயத்துடன் அவள் உருவுவதைப் பார்த்திட, அவளும் உருவி முடித்தாள். முன்புபோல் ரத்தக்காயமெல்லாம் ஏற்படவில்லை!

துரியானந்தத்திடம் ஆச்சர்யம். பாரதி அந்த வாளை ஒருமுறை விசிறிப்பார்த்தாள். பிறகு, அதன் மேனி மேல் கோணலாய்ச் செதுக்கப்பட்டிருந்த எழுத்துகளைப் படித்தாள். `எட்டுக்கிணறு சுடலைக்கு இட்டமுடன் சமர்ப்பணம்’ என்ற அந்தத் தமிழ் அவளுக்கு ஒரு புரிதலைத் தந்தது.

இறையுதிர் காடு - 10

``எட்டுக்கிணறு உள்ள சுடலைசாமிக்கு யாரோ காணிக்கையா தந்திருக்காங்க...’’ என்றவள் துரியானந்தத்தைப் பார்த்து ``என்ன விலை?’’ என்று கேட்டாள்.

``ஆச்சர்யம்மா... உங்களுக்கு மட்டும் எதுவும் ஆகலை’’ என்றான் துரியானந்தம்.

“நான் விலை எவ்வளவுன்னு கேட்டேன்.”

``கொடுங்கம்மா... உங்களுக்கு எவ்வளவு தரணும்னு தோணுதோ தாங்க.’’

அவள் 500 ரூபாயைத் தந்தாள். வாங்கிக்கொண்ட துரியானந்தம் தொடர்ந்தான், ``அம்மா.... ஒரு ஜமீன் பங்களாவைத் தட்டுனோம். நிறைய பழைய பொருளுங்க மாட்டுச்சு. ஆடு, குதிரை, மான் கொம்புங்க, பாதாளக்கரண்டி, பியானோ பெட்டி... அப்புறம் விபூதி வாசம் வர்ற மரப்பொட்டி... இப்படி ஏகப்பட்ட அயிட்டங்க.’’

``விபூதி வாசம் வர்ற மரப்பொட்டியா?’’ - பாரதி நறுக்கலாகக் கேட்டாள்.

``ஆமாம்மா... விபூதி வாசனை சும்மா அள்ளுது. ஆனா, திறக்க முடியல. என் பையன் அதோட உருண்டுபுரண்டுகிட்டிருக்கான்.’’

``ஜிக்ஜாக் லாக்கர் சிஸ்டமா இருக்கும்.’’

``அது என்னவோ தெரியலம்மா. பெட்டியோட முன்பக்கம் ஒன்பது ஓட்டைங்க இருக்கு. மேல `திருப்புளிச் சங்கரம்னு’ மரத்துலேயே செதுக்கியிருக்கு. ஓட்டைக்குள்ள ஸ்க்ரூ மாதிரி தெரியுது. திருப்புளியை விட்டுத் திருகுனா சுத்துது. முழுசா வெளிய வரவும் மாட்டேங்குது, உள்ள போகவும் மாட்டேங்குது. இப்படி ஒரு பெட்டியை நான் பார்த்ததே இல்லை!’’

``வெரி இன்ட்ரஸ்ட்டிங். அது எங்க இருக்கு இப்ப?’’

``என் வீட்லதான் இருக்கு. நாளைக்கு எடுத்துட்டு வர்றேன், வர்றீங்களா?’’

``கட்டாயம் வர்றேன். அந்தப் பியானோவையும் நான் வாங்கிக்கிறேன். யாருக்கும் கொடுத்துடாதீங்க.’’

``சரிங்கம்மா... சந்தோஷம்மா...’’ - துரியானந்தம் பரவசமானான். அவளும் புறப்பட்டாள்... அதுவும் வாளோடு! காருக்குள் ஏறியவள் முத்துலட்சுமியிடம் காண்பித்தாள்.

``பாட்டி, பழைய வாள்... எப்படி இருக்கு பார்?’’

``நமக்கெதுக்கும்மா இது?’’

``இதெல்லாம் கலைப்பொருள். ஆன்டிக்ஸ். உனக்கு மதிப்பு தெரியல’’ - அவள் சொல்லச் சொல்ல கார் கிளம்பிவிட்டது. முன் சீட்டில் ஏறிக்கொண்ட கணேசபாண்டியனும் ``பாப்பா... ஒரு வழியா அந்த வேங்கையன் இருக்கிற இடம் தெரிஞ்சுடுச்சு. ரெட்ஹில்ஸ்கிட்ட இருக்கிற ஒரு மார்பிள் குடோன்ல இருக்கானாம். நான் பார்க்கணும்னேன். வரச்சொல்லிட்டாம்மா’’ என்றார்.

``அப்ப முதல்ல காரை அங்க விடுங்க.’’

``அம்மாவோடையா?’’

``வேண்டாம்... பாட்டியை பங்களாவுல விட்டுட்டுப் போவோம்’’ என்ற அவள் பதிலைத் தொடர்ந்து அந்தக் கார் பங்களா நோக்கி ஓடத்தொடங்கியது!

பிரமாண்ட ஜமீன் பங்களாவில் வேலைகள் திரும்பத் தொடங்கியிருந்தன. பங்களாவையும் காலி இடங்களையும் 160 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்த புளூமூன் குரூப், வீசவேண்டிய இடங்களில் எல்லாம் பணத்தை வீசி எறிந்ததில் உள்ளே நசுங்கிச் செத்தவர்கள் பற்றி ஒரு பத்திரிகைச் செய்திக்குக்கூட இடமில்லாதபடி ஆகிவிட்டது. சென்டிமென்டாய் பயந்த சிலருக்கு இடமாற்றம் அளித்து, குஜராத்திலும் கொல்கத்தாவிலும் கட்டப்பட்டுவரும் அவர்கள் புராஜெக்ட்டுகளுக்கு அவர்களை அனுப்பிவிட்டது.

மொத்தத்தில் எந்தவித சலனமுமின்றி டெமாலிஷ் நடவடிக்கைகள் திரும்ப ஆரம்பித்த நிலையில் புளூமூன் குரூப்பின் நிர்வாக இயக்குநரான சந்தோஷ்மிஸ்ரா வேலை நடப்பதைப் பார்த்தபடியே வந்துகொண்டிருந்தார். கூடவே இன்ஜினீயர்களின் கூட்டம்! ஹெல்மெட் கேப்பும் வரைபடங்களுமாய் பங்களா பின்புறம் காடுபோன்ற பகுதிக்குள் அவர்கள் சுற்றி வந்தபோது சந்தோஷ் மிஸ்ராவின் கண்களில் அந்த ஜீவசமாதியும் அதை சிலர் விளக்கேற்றி வணங்கியபடி இருப்பதும் தென்பட்டது.

``இன்னுமா அந்தச் சமாதியை இடிக்கல?’’ என்று ஆங்கிலத்தில் அவர் கேட்க, ``கூடியசீக்கிரம் இடிச்சிடுவோம் சார்’’ என்றார் ஒரு இன்ஜினீயர்.

``அது என்ன கூடியசீக்கிரம்... இப்பவே இடிங்க... ஐ வான்ட் டு சீ’’ என்றார் அவரும் கோபமாய்!

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்