சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இடர்

இடர்
பிரீமியம் ஸ்டோரி
News
இடர்

சிறுகதை: மயிலன் ஜி சின்னப்பன்ஓவியங்கள்: ஸ்யாம்

ழக்கமாக சேப்ராசு அண்ணன் தூங்கிக்கெளம்பும் நேரந்தான். எந்திரிச்சிப் பார்க்கும்போது மழை கனமாகப் பெய்து கொண்டிருந்தது. கூடவே `உஸ்ஸ்ஸ்’ என்று காற்றும். அண்ணன் முந்தையநாள் செய்தி பார்த்திருந்தார். தினமும் பார்த்துவைக்கும் வழக்கமெல்லாம் இல்லை. ஏனோ, அன்று பார்த்திருந்தார். கோடியக்கரை, வேதாரண்யத்தை யொட்டிதான் கரையைக் கடக்கும் என்று சொல்லியிருந்தார்கள். அண்ணன் சன்னலைத் திறந்து பார்த்து `நம்ம ஊர்லயே இத்தன வெரசா காத்தடிச்சா, கரயக் கடக்குற எடத்துலலாம் எப்படியிருக்கும்?’ என யோசித்துக்கொண்டார். தூங்கி விழித்ததும் வாயில் ஒரு சுருட்டோடு அண்ணன் ஏரிக்குப் புறப்பட்டுவிடுவார். போயி காட்டாமணக்குச் செடிகளுக்கு நடுவில் ஒதுங்கினால்தான் அவருக்கு வயிறு தெளிந்துகொடுக்கும். வீட்டில் கக்கூஸ் உண்டுதான். அண்ணனுக்கோ அத்தாச்சிக்கோ அது பிரயோசனப்படவேயில்லை. மருமகள்களோ பேரன்பேத்திகளோ பாரினிலிருந்து வந்தால்தான் கக்கூஸ் ஈரம் காணும். குளிருக்குப் பொறுக்காமல் அண்ணன் சுருட்டு ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டதுதான் தப்பு. வயிறு கெடந்து புரள ஆரம்பித்துவிட்டது. பாதியில் நசுக்கி தீப்பெட்டியோடு சேர்த்து நூலில் சுற்றிவைத்துக்கொண்டார். மழை விடுவதாக இல்லை. ஏரி வரைக்கும் போக முடியாது எனத் தெரிந்ததும், தலையில் துண்டை முண்டிக்கொண்டு வீட்டு வைக்கப்போருக்குப் பக்கத்தில் குத்தவைத்தார். காற்று பேய்த்தனமாக வீசத் தொடங்கியது. வைக்கப்போரையொட்டி நின்ற வாழைமரங்கள் காற்றை ஆமோதித்து அப்படியே படுத்துவிட்டன. முன்னின்ற தென்னைமரத்தின் அத்தனை மட்டைகளும் ஒரு பக்கமாகச் சேர்த்துத் தள்ளப்பட்டன. தென்னங்குரும்பைகள் பொத் பொத் என எங்கெங்கோ சிதறி விழுந்தன. பிடுங்கி வீசப்பட்ட ஒரு மட்டை, அண்ணனுக்குப் பக்கவாட்டில் வந்து விழுந்தது. அண்ணனுக்கு அது ஏதோ புதுசான காற்று என்று மட்டும் புரிந்துவிட்டது. ஓட்டமாய் ஓடிப்போய் கால்களைக் கழுவிவிட்டு கொல்லைவாசல் வழியே வீட்டுக்குள் புகுந்தார்.

இடர்

அடுத்த முக்கால் மணி நேரம், காற்று அதன் முழு வீரியத்தையும் காட்டியது. தட் தட் என்று மரக்கிளைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது கேட்டபடியே இருந்தது. நடுநடுவே ப்ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர் என்று கிளைகளோ மரங்களோ முறிந்துவிழும் ஓசை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அண்ணன் அத்தனை சன்னல்களையும் சாத்திவிட்டு வந்து வீட்டின் மத்தியில் உட்கார்ந்தார். மின்சாரம் முன்னெச்சரிக்கையாக முந்தைய நாளே சர்க்காரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சன்னலின் ஒரு கொக்கி கொடகொடவென ஆடிக்கொண்டிருக்க, அதை இறுக்கிப்போட அண்ணன் எழுந்து கிட்டே போனபோது, அந்தச் சன்னலின் மீது ஏதோ மட்ட்டாரென வந்து விழுந்து கண்ணாடி சில்லுசில்லாக வீட்டுக்குள் சிதறியது. அப்போதுதான் தூங்கி விழித்த அத்தாச்சி, அலறியடித்துக் கூச்சல்போட ஆரம்பித்தாள். அந்த நாளின் அந்த நிமிடம் ஊரில் அப்படியான கூச்சல்களுக்கு ஒரு தொடக்கமாக இருந்தது. சன்னலின் மீது ஏதோ மரம் விழுந்திருக்கிறது என்றுதான் அண்ணன் முதலில் நினைத்துக்கொண்டார். காற்றின் சத்தம், காட்டுயானைகளின் பிளிறலைப்போல இருந்தது. எங்கேயோ வெடிச்சத்தம்போல ஏதோவொன்று ஒரே ஒருமுறை பலமாகக் கேட்டது. இடியாக இருக்கவேண்டும். அத்தாச்சி ``டான்ஸ்பாமர் வெடிச்சிருச்சு’’ என்று தன் கூச்சலுக்கு நடுவே சொன்னாள். அண்ணன், அவளை சாந்தப்படுத்தும் முயற்சியெதுவும் எடுக்கவில்லை. அவர் காதுகளில் மரங்கள் மோதிக்கொள்வதும், முறிவதுமான ஒலிகள் கேட்டபடியே இருந்தன. அந்த ஒலியின் நுணுக்கங்கள் மிகத் துல்லியமாக உள்ளே இறங்க இறங்க, விலாவுக்குள் ஏதோ குடைவதைப்போலிருந்தது.

திடீரென ஒரு லாரியிலிருந்து ஜல்லிக்கற்களைச் சடாரெனத் திறந்துவிடுவதைப்போல கரகரவெனச் சத்தம் கேட்டது. அத்தாச்சி உடைந்த சன்னல் வழியே பார்த்து, ``செலுவியூட்டு ஓடு பூராம் சரிஞ்சுபோச்சு’’ என்றபடி வாயில் கை வைத்து அப்படியே உட்கார்ந்தாள். அண்ணனும் எழும்பிப் போய் அதைப் பார்த்தார். பக்கத்து வீடு, ஓடுகளின்றி வெறும் சப்பையும் ரீப்பருமாக நிற்பது, அந்த அரை இருட்டில் கொட்டும் மழையினூடாகத் தெரிந்தது. ஓடிப்போய் முன்வாசல் கதவைத் திறந்துவிட்டார். அடுத்த சில நிமிடத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர் நினைத்தபடியே உள்ளே வந்து தஞ்சம் புகுந்தனர். ஓடிவந்த செல்வி, அத்தாச்சியைக் கட்டிக்கொண்டு ``யக்கா... எல்லாம் போச்சுக்கா..!’’ என்று கதற ஆரம்பித்தாள். செல்வி புருஷன், ஆறு வயது பையனைத் தூக்கித் தோளில் போட்டபடி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தான். சேப்ராசு அண்ணன், அந்த மிச்சச் சுருட்டை இழுக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் மாடியில் இருந்த சின்டெக்ஸ் டாங்கி மொத்தெனக் கீழே விழுந்து தெறித்தது. `ரெவைக்கு தண்ணி நெரப்பிவெச்ச டாங்கி, எப்படி விழுந்திச்சு?’ என்று அண்ணனுக்கு அதிசயமாக இருந்தது. வேலி ஓரத்தில் நின்ற முருங்கை முறிந்து விழுந்து அடுப்படியில் மூட முடியாமல் இறுகிப்போயிருந்த சன்னல் வழியே கிளைகள் வீட்டுக்குள் தலைப்பட்டன. காற்றின் இரைச்சல் சத்தம் கொஞ்சம் குறைந்ததும், கொட்டாயில் இருந்த வண்டிமாடு ஈனமாகக் கத்துவது கேட்டது. அண்ணன் அப்போதுதான் முதன்முதலாகக் கலக்கப்பட்டார். மடமடவெனக் கண்கள் பெருகிக்கொண்டன. கொட்டாயை நோக்கி வெளியே போக முயலும்போது சரியாக வீட்டுக்கு முன் நின்ற வேப்பமரம் வேரோடு குப்புறச் சாய்ந்து, கிட்டத்தட்ட அந்த வீட்டுவாசலையே அடைத்துவிட்டது. அத்தாச்சி, அடித்தொண்டையிலிருந்து அலறிக் கூச்சலிட்டாள். அண்ணன் அப்படியே நின்றுவிட்டார். வண்டிமாடு கத்தும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. காற்று கொஞ்சமாக ஓய்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் முற்றாக நின்று, மழை மட்டும் சற்றே பலமாகப் பெய்துகொண்டிருந்தது.

செல்வி புருஷனும் அண்ணனும் வாசலை அடைத்துக்கொண்டு கிடந்த வேப்பமரத்தின் கிளைகளை மடமடவென கழித்துப் போட்டார்கள். அண்ணன் முதற்காரியமாக மாட்டுக்கொட்டாய்க்குத்தான் ஓடினார். அதுவரை கத்திக்கொண்டிருந்த வண்டிமாடு, முனகலும் மூச்சிரைப்புமாகக் கிடந்தது. கொட்டாயின் சீலிங்கில் ஒரு பகுதியை நிரப்பியிருந்த தகர ஷீட் பெயர்ந்து சரிந்து விழுந்து, மாட்டின் காலை வெட்டித் துண்டாக்கியிருந்தது. துண்டான காலுக்கும் தொடைச் சப்பைக்கும் இடையே செங்குத்தாக நின்ற அந்தத் தகர ஷீட்டை செல்வி புருஷன் உருவி வீசினான். ரத்தக்குழம்பு, அங்கிருந்த சாணி மூத்திரத் தடங்களை மறைத்து நிரப்பியிருந்தது. அண்ணன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே `ம்மஹ் ம்மஹ் ம்மஹ்’ என்று கடைசி மூச்சுகளை விட்டபடி மாடு துடித்துச் செத்துப்போனது. அண்ணன் அப்படியே அடஞ்சுபோயி உட்கார்ந்தார். துணை மாடு இன்னோர் ஓரத்தில் அநாதரவான தோரணையில் நின்றுகொண்டிருந்தது.

5.30 மணிக்கும் அந்த மழைக்கும், நிலவியது ஊமையொளி. ஆயினும், ஆளுயரத்துக்குமேல் நின்ற அத்தனை மரங்களும் கிளைகளும் முறிந்து விழுந்துவிட்டதால், அளவுக்கு அதிகமாய் வெளிச்சம் வெளியே தெரிந்தது. சேப்ராசு அண்ணன் 66 வருடத்தில், அந்த இடத்தில் நின்றவாக்கில் வானத்தைப் பார்த்ததேயில்லை. புளியமரமும் பலாவும் முருங்கையும் மாமரமும் தென்னையும் வேப்பமும் புங்கையுமாக ஒரு ராட்சசக் குடைக்குள்ளான இடத்தில்தான், அந்த வீடு ஓலையிலிருந்து ஓட்டுக்கும், ஓட்டிலிருந்து காரைக்கும், அதற்கேற்றாற்போல் அளவில் பெருத்தும் உயர்ந்தும் இத்தனை வருடங்களில் தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கிறது. வெயிலே எட்டிப்பார்க்காத அதிகாலைப் பொழுதின் அந்த அப்பட்டமான வெளிச்சம் அண்ணனுக்குக் கண்களைக் கூசச்செய்தது. கலங்கியிருந்த கண்களை சிணுங்கவைக்க அந்த வெளிச்சம் போதுமாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். வெளியே வந்த அத்தாச்சிக்கு அந்த வெளிச்சம் அச்சமளிப்பதாக இருந்தது. கொட்டாய் பக்கம் போனதும் அவளின் ஒப்பாரி இரைச்சல், பெய்துகொண்டிருந்த மழையை மீறி அந்தத் தெருவுக்கே கேட்டது. 

இடர்

அண்ணன் வீட்டின் பக்கவாட்டில் ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கிடந்தது. மூன்று வாரங்களுக்கு முன் செல்வி வீட்டிலிருந்து மூணாவது வீடான சேகர் அத்தான் வீட்டு மொட்டைமாடியில் போடப்பட்ட புது ஷீட் அது. இடையில் இருந்த மூன்று ஓட்டு வீடுகளைத் தாண்டி வந்து சன்னல்மீது விழுந்து சன்னல் கண்ணாடிகளைச் சிதறடித்தது அதுதான். அதே ஷீட்டுதான் சன்னலுக்குப் பக்கத்தில் இறங்கிய நீர்க்குழாயை நொறுக்கிப்போட்டிருக்கிறது. அதனால்தான் `நீர் வடிந்துபோய் அத்தனை பெரிய டாங்கி கீழே விழுந்திருக்கும்’ என அண்ணன் பிறகு யூகித்தார். முள்வேலி, கொத்தாகப் பெயர்ந்து கிடந்தது. அத்தனை வீடுகளையும் நின்ற இடத்திலிருந்தே அண்ணனால் பார்க்க முடிந்தது. காட்சிகளில் கிடைத்த அந்த உடனடி உண்மையை அவரால் செரிக்க முடியவில்லை. வீட்டு மொட்டைமாடிக்கு ஏறும்போது அவர் கற்பனையில் எதிர்நோக்கிய அசம்பாவிதத்தைவிடவும் அங்கே அவர் கண்டது உயிரைப் போட்டுப் பிசைவதாய் இருந்தது. அந்தப் பேய்க்காத்து துளியும் ஈவு இரக்கமின்றி அனைத்தையும் புரட்டிப்போட்டுவிட்டுக் கடந்துபோயிருந்தது. அத்தனை வீடுகளுக்கும் தலைக்கவசமாக நின்ற மரங்கள் மழிக்கப்பட்டு வீடுகள் மொட்டையாகி இருந்தன. மாடியிலிருந்து கொல்லை வழியாக வயக்காடுகள் தொடங்கும் இடத்தைப் பார்த்த அவருக்கு, தேக்கிவைத்திருந்த அத்தனை மனவலிமையும் அந்த ஒரு காட்சியில் தகர்ந்துபோனது. துருத்திக்கொண்டிருந்த கான்கிரிட் கம்பி ஒன்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்துகொண்டார். 400, 500 யானைகள் மதம்கொண்டு அந்த வழியே வெறியாட்டம் ஆடிவிட்டுப் போனதைப்போல எல்லாம் சீரற்றநிலையில் சின்னாபின்னமாகிக் கிடந்தன. அந்தப் புயலுக்கு, பொருத்தமாய்தான் பெயர் வைத்திருந்தார்கள்.

வீடுகளுக்கு இடையேயும், மேலேயும், வழிநெடுக்கவும் இடைவெளியின்றி மின்கம்பங்களும் மரங்களும் கோக்குமாக்காகப் பின்னிக்கிடந்தன. மழை பெய்து மண்ணும் இளகிப்போயிருந்ததால், பெரும்பாலான மரங்கள் வேரோடு கருவறுக்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் ஆணிவேரும் அதன் கிளைவேர்களும் ஒரு தனி முழு மரம் அளவுக்கு இருந்தன. மிக மோசமான ஒரு பேரழிவின் தொடக்கம்போல அந்தக் காட்சி ஒரு மிரட்டலை உள்ளடக்கியிருந்தது. அத்தாச்சி குறுக்கால சேத்துக்குள் நடந்துபோய் குலதெய்வக் கோயிலில் காறித் துப்பி மண்ணை வாரி இறைத்துச் சுருண்டு விழுந்தாள். அண்ணனுக்கு, காலையிலிருந்து பொட்டுத்தண்ணிகூட நாக்கில் படவில்லை. ஆறேழு சுருட்டுகளை ஏதோ ஒரு விட்டேத்தி மனநிலையில் ஊதித் தள்ளினார்.

ஓடுகளை மழையில் நனைந்தபடியே அள்ளி அடுக்கிவிட்டு வந்து, அண்ணனின் நாற்காலியையொட்டி உட்கார்ந்த செல்வி வீட்டுக்காரனைப் பார்த்து அண்ணன் கேட்டார், ``மெயின் ரோட்டுப் பக்கம் போயிட்டா வந்தெ?’’

``இல்ல மாமா, பூராம் மரமும் கரன்ட் கொடியுமா கெடக்கு.’’

``மாடிலெந்து பாத்தா, பஸ்ஸு போறாப்ல ஒண்ணுந்தெரியல.’’

``வடசேரி முக்கத்துக்கு முந்தி நின்ன பாய்மாரு கோயில் கோபுரம் சரிஞ்சுபோச்சாம்! ரோட்ல குறுக்கால கெடக்காம்... பஸ்லாம் இப்பைக்கு வாய்ப்பில்ல.’’

``பள்ளிவாசக் கோபுரமா? ஆளுக யாரும் சாவு விளுந்துச்சா?’’

``தெரியல... தெரிஞ்சவரிக்கும் சாவு எதும் இல்ல.’’

``ம்’’
 
``தோப்புக்கா போனீய?’’

``நீயி?’’

``கோபியூட்டுக் கொல்லையால போயி நின்னு ஒரெட்டு பாத்துட்டு வந்தேன்... ஒண்ணும் சகிச்சிருக்க முடியல... பூராம் செதஞ்சு கெடக்கு.’’

``நா இன்னும் போகல... முழிப்புலயே வண்டிமாட்ட சாவு கொடுத்தாச்சு… ஒசக்க மாடியில ஏறி நின்னு பார்த்தா, தெக்க தெரியற மரிக்கும் மரம் சாஞ்சு கெடக்கு. தோப்பப் போயிப் பாக்குற அளவெல்லாம் தெனவு இல்ல.’’

வராந்தாவில் படுத்துக் கெடந்த அத்தாச்சி எழுந்து உட்கார்ந்து, அடுத்த ஒப்பாரியை ஆரம்பித்திருந்தாள்.

அன்று சாயுங்காலம் 3.30 மணிக்குத்தான் அண்ணன் தோப்புப் பக்கம் போக முடிந்தது. போகிற பாதை நெடுக்க மனசு கெடந்து பதைக்க ஆரம்பித்தது. அந்த இடத்தை அடையும் முந்தைய திருப்பத்திலேயே அந்தச் சீரழிவின் பேரலைகளை அவரால் அறிய முடிந்தது. அதே வெளிச்சம். அச்சுறுத்தும், ஈரக்குலையை அறுத்துப்போடும் அருவருக்கத்தக்க வெளிச்சம். அண்ணனின் தோப்பில் இருந்த தென்னைகள் சாரைசாரையாகப் பெயர்ந்தும் முறிந்தும் கிடந்தன. நிலமெங்கும் தென்னை மட்டைகளும் தேங்காய்களும் முறிந்து விழுந்த மரங்களும் சிதறிக் கிடந்தன. அண்ணனுக்கு அடிவயிற்றிலிருந்து இனம்புரியாத ஒரு வலி வந்து அப்படியே உடலையே இறுக்கிப்பிடித்துப் பிழிவதுபோல் இருந்தது. கால்கள் தள்ளாடி, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அப்படியே தேங்கிவிட்டார். ஓர் அடிகூட நகரவில்லை. கற்சிலைகணக்காக நின்றவருக்கு, தொண்டை மட்டும் தேம்பிக்கொண்டிருந்தது. தன்னுடைய வாழ்க்கை 23 வருடங்கள் பின்னோக்கிப் போய் மீண்டும் சூனியத்தில் நிற்பது அவருக்குத் தெரிந்தது. பார்வை புகைமூட்டமாகி, கண்கள் இருண்டுபோயின. மயங்கிக் கிடந்தவரை மாலையில் மேலத்தெரு பாண்டியண்ணன்தான் கொண்டுபோய் வீட்டில் சேர்த்திருக்கிறார். அத்தாச்சியின் அப்போதைய ஒப்பாரி ஊரையே கூட்டிவிடும்போலிருந்தது.

அன்றிரவு மண்ணெண்ணெய் விளக்கை வீட்டின் மத்தியில் கொளுத்தி வைத்துவிட்டு அத்தாச்சியும் செல்வியும் செல்வியின் மகனும் பொங்கிவைத்த சுடுசோற்றை உப்புக்கண்ட வருவலுடன் விழுங்கிக்கொண்டிருந்தனர். அண்ணன், மரத்திலான சாய்வு நாற்காலியை வாசலில் போட்டு அமர்ந்திருந்தார். தொம்சமாகிக் கிடந்த தன் தோப்பின் நினைவிலேயே ஒரு சுருட்டுக்கட்டு தீர்ந்துபோனது. பக்கத்தில் அத்தாச்சி போட்டு வைத்துவிட்டுப் போன தட்டுச் சோற்றை நாய் இரண்டு முறை மோந்துபார்த்துவிட்டு விலகிப்போனது. அண்ணன் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டதும்தான், தட்டில் வாயை வைத்தது. பக்கவாட்டில் குனிந்து அதைப் பார்த்தவர் அடுத்த சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்துபோனார்.

அண்ணன் சிங்கப்பூரில் சம்பாதித்து அனுப்பிய காசில், வாங்கி இழுத்துப் பிடித்த நிலம்தான் இன்று தென்னந்தோப்பாகிச் செத்துக்கிடக்கிறது. வெறும் 150 குழி நிலத்துடன்தான் அண்ணன் சிங்கப்பூருக்குக் கப்பலேறினார். சுரங்கக் கட்டுமானம், பேப்பர் போடுவது, செப்பு அறுப்பது, பெயின்டிங் என அங்கே தன் உயிரை உருக்கித்தான் வேலைசெய்தார். அதன்பிறகு அவர் ஊருக்கு வந்து போகும்போதெல்லாம் அத்தாச்சியின் மர அலமாரியில் பத்திர அடுக்குகள் மெதுவாகக் கூடிக்கொண்டிருந்தன. அந்தப் பயமவளும் அப்படித்தான் கர்வுசாரா குடும்பம் நடத்துவா, பேண்ட பீயில அரிசி பொறுக்கிமவ என்று அப்பா அத்தாச்சியைப் பற்றிச் சொல்லிக்காட்டுவார். அண்ணனுக்கு, இரண்டு பசங்களும் ஒரு பொண்ணும் உண்டு. பெரியவன் காலேஜைப் பாதியில் நிறுத்திவிட்டு, கொடிமரத்து டீக்கடையில் வெள்ளையுஞ்சொள்ளையுமாக சிசர் பில்ட்டருடன் உட்கார ஆரம்பித்தான். சின்னவன் ப்ளஸ் டூ முடித்த கையோடு காங்கிரஸ் கட்சி ஆபீஸில் புகுந்தான். அண்ணன் சேர்த்துப்போட்ட இரண்டு வேலி நிலத்துல முக்காவாசிக்கும்மேல் தென்னம்பிள்ளையை நட்டுப் பயிர்பண்ணினார். எஞ்சியதில் நெல் போடப்பட்டது.

பெரியவன் தன்னுடைய முதல் சோலியாக சீட்டுக் கம்பெனி போட்டான். ஆரம்பித்து, ஒண்ணேகால் வருடம் சிக்கலின்றிப் போய்க்கொண்டிருக்க, அகலக்கால் வைக்கப்போய், பெருந்தொகையை வெளியில் கொடுத்து ஏமாந்து, கம்பெனி திவாலானது. தலைமறைவாகி ஓடிப்போனவனை போலீஸ் இரண்டு வாரத்துக்குள் பிடித்துவிட்டார்கள். அவனைப் பிடிக்கும் முன்னரே அவ்வப்போது அவனோடு சேர்ந்து வசூலுக்குப் போனவன் என்ற முறையில் சின்னவனையும் பிடித்து உள்ளே வைத்தார்கள். அத்தாச்சியை விசாரனை என்ற பேரில் அலைக்கழித்தார்கள். அண்ணன் சிங்கப்பூரிலிருந்து ஒட்டாகக் கிளம்பி அத்தோடு ஊருக்கே வந்துவிட்டார். பசங்களை மீட்டெடுக்கவும் சீட்டுக் கம்பெனியின் இழப்புகளைச் சரிசெய்யவும் 14 மா நிலத்தை விற்கவேண்டியதாயிற்று. நெல்லு போட்ட நிலத்தைத்தான் விற்றாரேயொழிய தென்னையில் கை வைக்கவேயில்லை. ஆறு மாசத்துக்கு ஒரு நட, காசு கொட்டிக்கொடுக்கும் நெல்லு விளையுற மண்ணை விற்றதில் அத்தாச்சிக்குத் துளியும் இஷ்டமில்லை. ``இன்னும் காய்க்காத தென்னைய புடிச்சுக்கிட்டு, சோறு பொங்குற நிலத்தை விற்பானேன்’’ என்று அப்போது உயிரோடு இருந்த செல்வியின் மாமியாரிடம் புலம்பித்தள்ளுவாள்.

இடர்

அண்ணன் அதையெல்லாம் கண்டுக்கவேயில்லை. பெரிய பயலைக் கொண்டுபோய் கல்லூரியில் மீண்டும் சேர்த்துவிட்டு, படிப்பை முடிக்கவைத்து, துபாய்க்கு கான்ட்ராக்ட்டில் அனுப்பிவைத்தார். சின்னவனை டிகிரி எதுவுமின்றி முன்னர் தனக்குப் பழக்கமான பேப்பர் கம்பெனியில் பணியில் சேர ஏற்பாடு செய்து, சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தார். வாங்கிப்போட்டிருந்த இரண்டு வீட்டு மனைக்கட்டுகளை விற்றுதான் இதையெல்லாம் முடித்துவைத்தார். தென்னை அப்போதுதான் காய் போட ஆரம்பித்தது. சின்னவளுக்கு இருபது ஆனதும் சிங்கப்பூரில் பேப்பர் தொழிலை, இரண்டாம் தலைமுறையாகத் தொடரும் ஆத்திக்கோட்டை மாப்பிள்ளைக்குப் பேசி முடித்தார். பயல்கள் பண்ணிவைத்த களேபரங்களில் போலீஸ் கேஸு, சொத்து மூழ்கியது என நொடிச்சுப்போன குடும்பம் என்று ஊராரால் பேசப்பட்டதை அடித்து நொறுக்கும்விதத்தில் மவளுக்கு ஊரிலேயே முதல் ஆளாக நூறு பவுன் நகை போட்டுக் கட்டிக்கொடுத்தார். ஊரே மூக்கில் விரல் வைத்தது. காசெல்லாம் யாரோ அதிராம்பட்டின பாயிடம் கடன் பெற்றதாகப் பேசிக்கொண்டார்கள். சிங்கப்பூர் சினேகமாம். அப்பயும் தென்னந்தோப்பில் கை வைக்கவில்லை. ஒவ்வொரு வெட்டிலும் கடனை அடைத்து முடித்தார். ``பெத்த புள்ளைங்க நட்டாத்துல நிப்பாட்டியும் இந்தத் தென்னம்பிள்ளைங்கதான் தூக்கி விட்டுச்சுக’’ என்று அண்ணன் ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஒத்தை ஆளாக காலையில் தோப்புக்குப் போனால் தண்ணீர் வெட்டிப் பாத்தி கட்டுவது அண்ணன்தான். வெட்டு அன்னிக்கு மட்டும் வேலைக்கு ஆள் வரும். உரம் வைக்கும் நாளில் அத்தாச்சியும் தோப்புப் பக்கம் போவாள். பழைய ஓட்டு வீட்டைத் தட்டிப்போட்டுவிட்டு மாடிவீடு கட்டினார். அந்தத் தெருவில் முதல் மாடிவீடு அண்ணன் கட்டியதுதான். பயல்களுக்கான ரூம்களைத் தவிர அண்ணனுக்கும் அத்தாச்சிக்கும் பெரிய தனி ரூமும் உண்டு. அத்தாச்சி அந்த அறைக்குள் ஏனோ போய்த் தூங்கியதே இல்லை. அறைகள் அனைத்துக்கும் தேக்குக் கதவுகள். கொல்லையில் நின்ற மரத்தை அறுத்துப்போட்டு இழைத்துத் தள்ளிவிட்டார். மகன்களின் ரூம் கதவுகள் அவர்கள் பாரினிலிருந்து வரும் நாளில் மட்டுமே திறக்கப்படும். மாறாக, அண்ணனின் ரூம் கதவு சாத்தப்பட்டதே இல்லை. அந்த வீட்டுக்கு அண்ணன் பால் காய்ச்சிய நாளில் ``எல்லாம் தேங்கா வெட்டுக் காசு!’’ என்று சிலர் பேசிக்கொண்டிருக்க, ``எந்தக் குடியையும் கெடுக்காத காசு’’ என்று அண்ணன் விருட்டெனப் பதிலளித்ததில், வட்டிக்குக் காசுவிடும் சித்தப்பாவின் முகம் சுருங்கிப்போனதாம். அதற்காகத்தான் அண்ணன் அப்படிச் சொன்னதாகவும் சிலர் பேசிக்கொண்டார்கள்.

பயல்களுக்கும் கல்யாணம் முடித்துவைத்து செட்டில் பண்ணிவிட்டார். யோசித்துப்பார்த்தால், பேரன்பேத்திகள் வந்து போகும் நாள்களைத் தவிர, கடந்த 13 வருஷங்களும் அவரது வாழ்க்கை தென்னந்தோப்பிலேயேதான் வட்டமடித்திருக்கிறது. தென்னந்தோப்பைப் பராமரிப்பதில் பெரிய சிரத்தைகள் இல்லையெனினும், அந்திசாயும் வரை அண்ணன் அங்கேயேதான் கிடப்பார். போர்செட்டுக்குக் கிடைக்கும் இலவச மின்சாரத்தை இஷ்டம்போல செலவழித்ததில்லை. மரங்களுக்குத் தண்ணீர் பாஞ்சதும் மோட்டாரை நிறுத்திவிடுவார். பெரும்பாலானோர் காலையில் போட்டுவிடுவதோடு சரி, கரன்ட் போகும்வரை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தாச்சி மதிய சோற்றை தோப்புக்குக் கொண்டுபோகும்போது, ``வீட்டுக்கு வந்து சுடுசோறா தின்னாதான் என்னவாம்!’’ என்று முனகிக்கொண்டேதான் கொண்டுபோவாள். அந்த எண்ணூற்று சொச்ச தென்னங்குடைகளின் நிழலில் ஒரு கயிற்றுக்கட்டிலில்தான் அவரது மத்தியானங்கள் கழிந்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெட்டும் காசுமாக அந்தத் தோப்பு அவரைக் குறையின்றி வைத்திருந்தது. மருமகனுக்குத் தொழில் நட்டப்பட்ட நிலையில், அண்ணன்தான் அவனுக்கும் மாற்றுத்தொழிலுக்கு முதலீடு செய்துகொடுத்தார். பயல்களிடமிருந்து இதுவரை சல்லிக்காசு வாங்கியதில்லை. பெரியவன் பட்டுக்கோட்டையில் பஸ் ஸ்டாண்டையொட்டி இடம் பத்திரம் பண்ணியதற்கும் அண்ணனே படியளந்தார். எல்லாம் வெட்டுக் காசு. அந்த 23 வருடப் பொக்கிஷத்தை இந்த அரை மணி நேரக் காற்று நசுக்கிப்போட்டுவிட்டுப் போயிருக்கிறது.

அடுத்த மூன்று நாள்களும் அண்ணன் அந்த நாற்காலியிலேயேதான் பெரும்பாலும் இருந்தார். தூங்கி எவரும் பார்க்கவில்லை. துளிச் சோறு உள்ளே போகவில்லை. எழுந்து வீட்டுக்குள்ளேயே ஒரு நடை, மண்பானைத் தண்ணீரை வயிற்றுக்குள் குளிர்ச்சி எட்டும் வரை விழுங்குவது, மறுபடியும் நாற்காலி - இப்படித்தான் அந்த நாள்கள் அவருக்குக் கழிந்தன. அத்தாச்சி யாரார் வீட்டில் என்னென்ன சேதம் என்று விசாரிப்பதும், நடுநடுவே ஒப்பாரிவைப்பதெனவும் பொழுதைக் கடத்தினாள். அடுப்பு மூட்டப்படாமலே முதல் இரண்டு நாள்கள் கழிந்தன. செல்விதான் நெதைக்கும் ஏதாவது பெரட்டி எடுத்துவந்து கொடுத்துக்கொண்டிருந்தாள். தண்ணீர் இல்லை என்பது முதல் நாள் யாருக்குமே உறைக்கவில்லை. அப்படியொரு நிலையை முன்னெப்போதும் அறிந்திடாத நிலையில் அதை புத்தி எதிர்ப்பார்க்கவுமில்லை. இரண்டாவது நாள் தண்ணீர்ச் சிக்கல் தலைவிரிக்க ஆரம்பித்தது. வீட்டுக்குள் இருந்த அந்த ஒரு பானைத் தண்ணீரைத் தாண்டி அண்ணன் எதுவும் யோசிக்கவில்லை. 

இடர்

நாலாவது நாளில் அத்தாச்சியின் ஒப்பாரி கொஞ்சம் ஓய்ந்திருந்தது. மெயின் ரோட்டு மரங்கள் ஒதுக்கப்பட்டன. ஊரார் சொந்த முன்னெடுப்பில் முதன்முறையாக தண்ணீர் லாரி ஊருக்குள் வந்து போனது. ஊர் இளவட்டங்கள் காசு வசூல் செய்து ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து டாங்கிகளில் நீர் ஏற்றினார்கள். ஜெனரேட்டருக்கு டீசல் போட மறுவசூல் செய்தார்கள். வசூலுக்கென்று வருபவர்களுக்கு அண்ணன் கொடுத்த பெருந்தொகையைப் பார்த்து வராந்தாவில் அமர்ந்தபடி அத்தாச்சி சிடுசிடுத்துக்கொண்டிருந்தாள். ``அண்ணன் கொடுக்கும்போது காசை எண்ணிப்பார்த்துகூடக் கொடுக்கவில்லை’’ என்று வசூலுக்குப் போன பயல்கள் சொன்னார்கள். ஒருவன் அதில் பழைய ஆயிரம் ரூபா தாள் ஒன்று இருந்ததாகவும் சொன்னான். ஓடு வேயும் ஆள்களுக்கு கிராக்கி அதிகமானது. வீடுகளுக்கே ஆள் கிடைக்காதபோது, அண்ணன் வீட்டு மாட்டுக் கொட்டாய்க்கு ஒருத்தரும் சிக்கவில்லை. மழையும் குளிரும் விட்டுவிட்டாலும் அந்தத் துணை மாடு நடுங்கியபடியே கிடந்தது. அதைக் காணச் சகிக்காமல், சந்தையிலிருந்து ஆளை வரச்சொல்லி அண்ணன் அதை ஓட்டிப்போகச் சொல்லிவிட்டார்.

அதுவரை வந்துபோன தண்ணீர் லாரிகள் எல்லாமே ஊர் ஆள்கள் காசு போட்டு வந்தது என்பதாலும், சர்க்காரின் பக்கத்திலிருந்து ஊருக்குள் எந்த உதவியும் வந்து சேரவில்லையெனவும் ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி ஊர் ஆள்கள் மறியல் செய்தார்கள். அத்தாச்சியும் அந்த மறியலுக்குப் போய்விட்டு வந்தாள். அண்ணன் அந்தச் சாய்வு நாற்காலியில் இருந்தபடி புகை விட்டுக்கொண்டிருந்தார். ஓரிரு நாள்களில் அந்தப் பகுதியை ஹெலிகாப்டரில் பார்வையிட வந்த முதல்வர், அங்கே இறங்கி நடந்து மக்களுடன் புகைப்படம் எடுத்த தோப்பு அண்ணன் வீட்டுத்தோப்புதான். இதை அத்தாச்சி எல்லோரிடமும் வீட்டுவாசலில் வைத்து மலர்ச்சியாகப் பீத்திக்கொண்டிருந்ததோடு, அவரும் ஜெயலலிதா அம்மா மாதிரியே சிவப்பாக இருந்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். நிலத்தை மறைத்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை கிடந்த பச்சை மட்டைகள் அண்ணனுக்கு நினைவில் வந்தது. முதல்வர் வந்துபோன இரண்டு நாள்களுக்கு அத்தாச்சியின் புலம்பலோ அழுகையோ கேட்கவே முடியவில்லை. ஒருவழியாக அந்த ஒப்பாரி ஓய்ந்தேவிட்டது. அந்த அவல மனநிலையிலும் அண்ணனுக்கு அது வியப்பாக இருந்தது.

கரன்ட் இல்லாத நிலைக்கு எந்தத் தீர்வும் வருவது மாதிரி தெரியவில்லை. ஆறாவது நாள் இரவில் வீட்டில் மண்ணெண்ணெய் காலியானது. மெழுகுவத்தித் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்ததும் அத்தாச்சி சீக்கிரமே படுக்கைக்குப் போக ஆரம்பித்தாள். அண்ணனுக்கு அந்த இருட்டு அன்னியமாகப்படவில்லை. பகலில் பரவும் அந்த இரக்கமற்ற வெளிச்சத்துக்கு இந்த இருட்டு ஒரு விமோசனமாக இருந்தது. இரவுகளை அந்தச் சாய்வு நாற்காலியில் விழித்திருந்தபடியே கழித்தார். மழைநாளில் வழக்கமாகத் தேங்கி நிற்கும் தண்ணீரில் தன் இணையை அழைக்கும் தவளையின் கிரக்க ஒலிக்குப் பதிலாக, எந்நேரமும் எங்கேயோ ஒரு மரம் வெட்டப்படும் ஓசை அண்ணனின் காதுகளுக்குக் கேட்டபடியே இருந்தது. கோடரிச் சத்தம், நீள் ரம்பத்தின் சத்தம், ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர் என்று பல்லைக் கூசவைக்கும் கட்டிங் மெஷின் சத்தம் இப்படி ஏதோ ஒன்று. இப்படி ஒரு சத்தம் ஆரம்பிக்கும்போது படபடப்பு அதிகமாகி அதன் உச்சத்தில் அந்த மரமோ கிளையோ அறுபட்டுக் கீழே விழும் சத்தத்தில் ஒரு கணம் மூச்சு நின்னுபோவதைப்போல இருக்கும் அவருக்கு.

அண்ணனுக்கு, விழுந்த மரங்களை எடுத்துப் போட மனசு இல்லை என்றுதான் எனக்குப் பட்டது. பெரியம்மாவும் சித்தப்பாவும் ஊரார் சொல்லிய நேரத்துக்கு ஒரு நாள் தள்ளித்தான் அடக்கம் செய்ய அண்ணன் ஒப்புக்கொண்டார். தோப்பில் அந்தப் பிணக்குவியலைப் பார்த்த அதிர்வு அவருக்குள் இருந்துகொண்டே இருந்தது. கண்களை மூடினால், காற்றினில் தட் தட் என்று மரங்கள் மோதிக்கொண்டதும், முறிந்து விழுந்த சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. அதே நேரத்தில், காசு இல்லாமல் பலர் வீட்டு மரங்கள் அகற்ற வழியில்லாமல் அப்படியே கிடந்தன. விழுந்த ஒரு தென்னையை அறுப்பதற்கு சராசரி கூலி 550 ரூபாய் பேசப்பட்டது. முறிந்து பாதியாய் நிற்கும் மரங்களை வேரோடு பெயர்த்தெடுக்க ஜேசிபி வாடகை மணிக்கு 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை எகிறியது. எடுத்துச் செல்ல வரும் வண்டி வாடகை தனி. எல்லாம் சேர்த்துவைத்துப் பார்க்கும்போது செத்த மரம் ஒவ்வொன்றுக்கும் அதை அப்புறப்படுத்தும் செலவே 500 ரூபாய்க்குப் பக்கம் வந்து நின்றது. இந்த நேரத்தில்தான் செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை காசு எதுவும் வாங்கிக்கொள்ளாமல் தாங்களே அறுத்து எடுத்துக்கொள்வதாக முன்வந்தார்கள். அண்ணனுக்கு அறுநூற்றிச் சொச்ச மரங்கள் சாய்ந்துபோனதால், அவர்கள் அண்ணன் வீட்டுக்கே நேரில் வந்து கேட்டார்கள். ``மரத்தக்கொண்டி வெச்சு எரிச்சு கல்ல செவக்க வெக்கப்போறவன் ஓசியிலயா எடுக்கவரணும்... மரத்துக்கு நூறு ரூவா கொடுத்துட்டு எடுத்துக்க’’ என்று அத்தாச்சி சொன்னதும், தெருவில் இருந்த மற்றவர்களும் அதையே சொல்ல ஆரம்பித்தார்கள். கடுப்பான சூளைக்காரன், அடுத்த நாள் பக்கத்து ஊருக்குக் கெளம்பிவிட்டான். அத்தாச்சி அதுக்கும் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டாள். அண்ணனுக்கு அதெல்லாம் காதிலேயே விழவில்லை. அவர் அந்த மரமெல்லாம் அப்படியே கிடக்கட்டும் என்றுதான் நினைத்தார். அந்த நிலம் அவற்றுக்கானது.

ஈரோடு, கரூர், சென்னை, பாண்டி, ராசிபுரம் என நிவாரணப் பொருள்கள் ஊருக்குள் வரும் சலம்பல்களை அண்ணன் லட்சியப்படுத்த வேயில்லை. ஒவ்வொரு கட்சியின் சார்பில் வந்த பொருள்கள் அந்தந்தக் கட்சி நிர்வாகி வீடுகளில் தேக்கிவைக்கப்பட்டன. ``எம்மவனுந்தான் கட்சியில இருந்தான். நா இதுமாரி என்னத்த சொகங்கண்டேன்!’’ என்று அத்தாச்சி புலம்பல் பெருமூச்சுகளை விட்டாள். நிவாரணப் பொருள்கள் ஊருக்குள் வர வர, இருப்பவர் இல்லாதவர் என்று பேதமின்றி, பொருள்களை வாங்கப் பெரிய தள்ளுமுள்ளெல்லாம் நடந்தது. காட்டு வேலைக்குப் போகிறவர்கள், கூலியாள்கள், ஓலைக்குடிசையை முழுமையாய்த் தாரைவார்த்துவிட்டு வீதிக்கு வந்துவிட்டவர்கள், முகாமில் இருப்பவர்கள், காலனி ஆள்கள் எல்லோரையும் தேடித் தேடி தன்னார்வலர்கள் நிவாரணப் பொருளைக் கொண்டுசேர்த்தது, புகைச்சலை உண்டுபண்ணியது. வசூலுக்கு வந்த பயல் ஒருத்தன் அத்தாச்சியிடம், ``பூராத்தையும் கொண்டுபோய் காலனியிலயே கொட்றானுங்க. இந்த நாய்களுக்கும் வெய்க்கறதுக்கு வீடு இல்லாட்டியும் வாங்கிக்க ஆச மட்டும் அடங்குறதில்ல. தென்ன வெவசாயி நாம பிச்சக்காரனாயிட்டம், நம்ம மரத்த நியூஸ்ல பார்த்துட்டு பொருள கொண்டுவந்து அந்தப் பயமக்களுக்குக் கொடுத்துத்தள்ளிட்டுப் போறானுவ. ஊருக்கு வெளியவே வண்டிய மறச்சு வாங்கிடுறானுவ. ஒர்த்தியொர்த்தியும் ஒரு வருஷத்துக்குத் தேவையான சாமான வாங்கி மூட்ட கெட்டி வெச்சிருக்காளுவ’’ என்று அவளைக் கிளப்பிவிட்டான்.

``எதுக்குறா அந்தப் பயமக்களுக்கு... சாவட்டுன்னு விடாம... வயவேலைக்கு ஒரு நாயும் வர்றதில்ல, எல்லாவளும் நூறு நா வேலைக்கு சிங்காரிச்சுக்கிட்டுப் போயிட்டு வர்றாளுவ. குடிக்கிமக்களுக்கு பொருளு கேக்குதாம்மா பொருளு, எவனாச்சும் மரம் அறுக்க வர்றானா பாரு... நம்ம காசத் தின்ன நன்றிகெட்ட சீவனுங்க. இன்னிக்கு நம்மகிட்டயே அறுப்புக்கு ரேட்டு பேசுறானாம்’’ என்று ஆரம்பித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

அண்ணன் அங்கிருந்து எழுந்து உள்ளே போக நகர, அந்தப் பயல், ``மாமா, ஈபி ஆளுக நாளைலேந்து வர்றாங்க. அவங்கள கவனிக்க காசு வசூல் பண்றோம், அதுக்கு...’’ என்று அவன் இழுத்துக்கொண்டிருக்கும்போதே அண்ணன் உள்ளே போய்விட்டார். அவன் கொஞ்ச நேரம் வாசலிலேயே நின்று பார்த்துவிட்டு வெறுங்கையுடன் கிளம்பிவிட்டான்.

குடிசை வீடுகளுக்கும், ஓட்டு வீடுகளுக்கும் மட்டும் அளிக்கப்பட்ட நிவாரணத் தொகையை மாடி வீட்டில் இருக்கும் தானும் பெற அத்தாச்சி யாரையோ பிடித்து, குறுக்கு ஏற்பாடு செய்துவிட்டாள். மாடி வீடுகளுக்கு எந்த நிவாரணப் பொருளும் வரவில்லை என்று அந்த வீட்டுப் பெண்கள் ஊர் சொசைட்டிக்கு முன்னே போராட்டம் செய்ததில் அத்தாச்சிதான் முன்வரிசையில் நின்றதாக, பார்த்தவர்கள் சொன்னார்கள். அடுத்த நாள் மாலை இரண்டு கட்டைப்பை நிறைய சாமான்களுடன் அத்தாச்சி வாசலில் சாய்வு நாற்காலியில் இருந்த அண்ணனைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தாள். உள்ளே அதை வைத்துவிட்டு செல்வியை அழைத்து அவளுடைய பையில் என்ன கலர் புடவை இருந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

அண்ணன், உள்ளே போய் ஒரு லோட்டா தண்ணீரைக் குடித்துவிட்டு, திரும்பி வந்து ஹாலில் உட்கார்ந்தார். அந்தக் கட்டைப்பை அங்கேதான் இருந்தது. `தமிழக அரசு’ என்று அதில் பிரின்ட் போடப்பட்டிருந்தது. உள்ளே அரிசி, பால்பவுடர், கோதுமை மாவு, உப்பு, நல்லெண்ணெய், கோல்டு வின்னர், மெழுகுவத்தி, இரண்டு நைட்டிகள், இத்யாதி இத்யாதி! இன்னொரு பெரிய பையில் குடிசைகளுக்கு மேலே விரிக்கப்படும் ஒரு தார்ப்பாலின். அண்ணன் அண்ணாந்து தன் வீட்டு கான்கிரிட் விட்டத்தை ஒருமுறை பார்த்தார். அது முன்னர் ஓட்டு வீடாய் இருந்ததும், அப்போதெல்லாம் மழையின் ஒழுகல் அனுமதிக்கும் மிஞ்சிய இடத்தில் உறங்கியதும் அவருக்கு நினைவில் வந்தது. இருந்த ஓட்டு வீட்டை மாடி வீடாக்க தூக்கத்தைக் காவுகொடுத்துப் பட்டினியாக வேலைபார்த்த நாள்களும், பயல்கள் குடும்ப மானத்தைக் கரியாக்கி போலீஸ் ஸ்டே‌ஷன் வரை கொண்டுபோனதற்கு வெதக்கு வெதக்கென அங்கிருந்து கிளப்பிக் கொண்டு வந்ததும் மாறி மாறி நினைவில் வந்தது. இங்கே வந்து நெல்லு வெளஞ்ச மண்ணை விற்ற போது பத்தடி ஒசரத்துக்கு நின்ன தென்னமரமும், இப்போ பாலம் பாலமா பேந்து கெடக்கிற மரங்களும், கண்ணுக்கு முன்னே இரண்டு கட்டைப்பைகளை வாங்கி வந்துவிட்ட அத்தாச்சியின் பெருமிதமும், செத்துப்போன வண்டிமாட்டின் கடைசி முனகலும், அவருக்கு ஒரே நேர்க்கோட்டில் வந்து குழப்பியடித்தது.

தத்தளித்தபடி ஒரு கப்பல் அலைகளின் அரவமற்ற நடுக்கடலில் திசைகளின் அடையாளமின்றிப் போய்க்கொண்டிருக்கிறது. இருட்டான சிங்கப்பூர்ச் சுரங்கத்தில் காலில் ஏதோ காயம் பட்டு ரத்தக்கவுச்சி அடிக்கிறது. செப்போ அலுமினியமோ அறுக்கும்போது கண்ணில் உலோகத்துகள் தெறித்து ஒரு கணம் சித்தமே கலங்கிப்போகிறது. ஒரு சீனனுடன் பகிர்ந்துகொண்டிருந்த அறையில் மூன்று நாள் இரவுகளில் உண்ண உணவில்லாமல் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு இருவரும் படுத்துக் கொள்கிறார்கள். சின்னவனைப் பிடித்துக் கொண்டு போன மீசை இல்லாத போலீஸ், அவன் மென்னாசியை உடைக்கிறார். சுரங்கத்தின் இருட்டு திடீரென மிகவும் சினேகமாகத் தெரிகிறது. நடுமாரில் ஒரு கருநாகம் வாஞ்சையுடன் சீண்டிவிட்டுக் கடந்து போகிறது. கொஞ்ச தூரம் போனதும் அதற்கு றெக்கை முளைத்துப் பறக்க ஆரம்பித்தது. நீளமான ஒரு தென்னை மட்டை புறமண்டையில் வந்து விழுகிறது. தலையைச் சுழற்றியபடி ஒரு பெரும் பிளிறலுடன் காட்டுயானை ஒன்று தூரத்தில் வந்துகொண்டிருக்கிறது. அந்தக் காலை, அந்த உஸ்ஸ்ஸ்ஸ் காற்று, கிளைகள் மோதிக்கொள்ளும் சத்தம், முறிந்து விழும் சத்தம், மெழுகுவத்தி வெளிச்சம், மரத்தை அறுக்கும் சத்தம், ஜேசிபி சத்தம், தண்ணீர் லாரி சத்தம், ஜெனரேட்டர் சத்தம், அத்தாச்சியின் வியாக்கியான சத்தம்… அண்ணன் ஒரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு சோபாவில் சரிந்தார்.

சுருட்டை ஓர் இழுப்பிலேயே நசுக்கிவிட்டு, தன் ரூமுக்குள் போனார். அத்தாச்சி செல்வியிடம் ``கவர்மென்ட்டு, விழுந்த மரத்துக்கு ஆயர்ரூவா தர்றாங்கன்னு டிவி நூஸ்ல சொல்லிருக்கானாம். கணக்கெடுக்க ஆளுக வர்றப்ப போயி நின்னு பாத்துக்கணும்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இது காதில் விழுந்ததும் அண்ணன் அறைக்கதவைப் பிடித்துக்கொண்டு நின்றார். அண்ணனின் அறையின் அந்தத் தேக்குக் கதவு முதன்முறையாகச் சாத்தப்பட்டது. கட்டிலில் படுக்காமல், ஒரு பெரிய துப்பட்டியைத் தரையில் ஏதோ ஒழுங்கில்லாமல் விரித்துப்போட்டு, கையைத் தலைக்குக் கொடுத்து, தேக்கிவைத்திருந்த பத்து நாள் தூக்கத்துடன் அப்படியே மல்லாந்தார். அத்தனை நாள்கள் ஓய்ந்துபோயிருந்த அத்தாச்சியின் ஓலம் அன்று சாயங்காலம், முன்னெப்போதையும்விட ஈரமாக எங்கள் வீடு வரை கேட்டது.