
படங்கள்: சுரேஷ் சுகு, பவித்ரன்

“முதல்நாள் அவரைப் பாராட்டுமழையில் நனைய வைத்தோம். இன்று அவர் நம்மை இசை மழையில் நனைய வைப்பார்” - இரண்டாம் நாள் மேடையேறியதும் சுஹாசினி சொன்னது இது.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிகழ்த்திய ‘இளையராஜா 75’ விழாவின் முதல்நாள், இளையராஜா பாடல்களுக்கு, நடனக்கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைக்கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், தினேஷ் மாஸ்டரின் நடன அமைப்பில் நடந்தது. இரண்டாம் நாள் ராஜா ரசிகர்களுக்கான திருநாள். இளையராஜாவின் இன்னிசையால் இரவும் நிலவும் நனைந்தன. அந்த ஈரத் துளிகளில் சில இங்கே....

* முதல்நாள் வரவேற்புரையில் “கார்ல பெட்ரோல் இருக்கான்னு செக் பண்றாங்களோ இல்லையோ... பென்டிரைவ் ஃபுல்லா ராஜா சார் சாங்க்ஸ் இருக்கான்னு பார்த்துப்பாங்க. அவர் பாடல்கள் மட்டும் இல்லைன்னா, லாங் டிராவல்னு ஒண்ணு இல்லாமலே இருந்திருக்கும்” என்றார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்.
* நடிகர்சங்கம் சார்பில் நாசர், பொன்வண்ணன் ஆகியோர் இளையராஜாவுக்கு மரியாதை செய்ய மேடையேறினர். மிகப்பெரிய பல்லக்கு ஒன்றில் எடுத்துவரப்பட்ட தங்கத்தினாலான வயலின் ஒன்றை நடிகர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்குப் பரிசாக அளித்தனர்.

* இருநாள் நிகழ்விலும் இதயம் தொட்ட தருணம், ஏ.ஆர்.ரஹ்மானும் இளையராஜாவும் மேடையில் நின்றிருந்த தருணம்தான். உற்சாகமாக மேடையேறிய ரஹ்மான், ராஜாவுக்குப் பொன்னாடையைப் போர்த்தினார். “ரஹ்மான் அவங்க அப்பாகிட்ட இருந்ததவிட என்கிட்டதான் அதிகமா இருந்திருக்கார்” என்று வாஞ்சையோடு சொன்னார் ராஜா. அதை ஆமோதித்துத் தலையசைத்த ரஹ்மானிடம், ராஜாவுடன் பணிபுரிந்த அனுபவங்களைக் கேட்டார் சுஹாசினி. “அவரோட அறைக்குள்ள போறப்ப ஹெட்மாஸ்டரப் பார்க்கப் போறமாதிரி இருக்கும். கம்ப்யூட்டர் வந்த சமயம், முதன்முதலா அவர் குடுத்த ட்யூன்களை சிஸ்டம்ல ஃபீட் பண்றதுதான் என் வேலை” என்றார் ரஹ்மான். “அது என்ன ட்யூன்னு ஞாபகம் இருக்கா?” - இது ராஜா.

உடனே தன் மொபைலை எடுத்து அதிலேயே புன்னகை மன்னன் ட்யூனை வாசித்துக் காட்டினார் ரஹ்மான். மேடைக்கு ஒரு கீபோர்டு வரவழைக்கப்பட, அதில் ‘புன்னகை மன்னன்’ தீமை வாசித்தார் ரஹ்மான். ‘ரஹ்மான் வாசிக்க, இளையராஜா பாடவேண்டும்’ என்று வைக்கப்பட்ட வேண்டுகோளை ரசிகர்களும் ஆரவாரமாய் வரவேற்றனர். உடனே ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலை ராஜா பாட, ரஹ்மான் கீபோர்டு வாசிப்பில் இசைத்தென்றல் தழுவியது.
* “நான் நடித்த அன்னக்கிளி ராஜாவின் முதல் படம் என்பது எனக்குக் கிடைத்த பெருமை” என்று பேசிய சிவகுமார் தனது அன்பைப் பகிரும்விதமாக, ராஜாவுக்குத் தங்கமோதிரம் அணிவித்தார். சத்யராஜ் பேசும்போது “நூறாவது நாளில் என்னைக் கொடூரவில்லனாகக் காட்டியதும் ராஜா இசையின் மகத்துவம். அதேபோல ‘கடலோரக் கவிதைகளி’ல் என்னைக் கதாநாயகனாக உயர்த்தியதும் அவர் இசைதான்” என்று குறிப்பிட்டார்.

* பிப்ரவரி 3, 2019. மாலை 6.56-க்கு மேடைக்கு வந்த இளையராஜாவை விண்ணதிரக் கைதட்டி வரவேற்றனர் இசை ரசிகர்கள். ‘சிவசக்த்யா யுக்தோ யதிபவதி’யில் ஆரம்பித்த இசைமழை ஐந்தரை மணிநேரம் அடித்து ஓய்ந்தது.
* மனோ, சித்ரா, உஷா உதூப், மதுபாலகிருஷ்ணன், பிரசன்னா, ஹரிசரண், விபாவரி, பவதாரணி, யுவன், கார்த்திக் ராஜா, முகேஷ், சுர்முகி, பிரியா ஹிமேஷ், அனிதா ஆகியோர் இளையராஜாவின் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.

* மணிரத்னம் ``இசையுலகில் ராஜா எப்போதுமே ஜீனியஸ்தான்” என்று புகழ்ந்தார். இயக்குநர் பால்கி, “பாடல் வரிகள் புரிகிற அளவுக்கு எனக்குத் தமிழ் தெரியாதபோதும், ராஜாவின் இசைதான் அவற்றை ரசிக்கவைத்தது” என்றார். ஷங்கர், “திரைப்படங்களில் அவரோடு பணியாற்றியதில்லை. ஆனால் அரசுக்காக கமல் நடிக்க, நான் எடுத்த விளம்பரப்படம் ஒன்றுக்கு ராஜாசார்தான் இசையமைத்துக் கொடுத்தார்” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், “என்னுடைய ஸ்டுடியோவில் எந்த சாமி படங்களும் இல்லை, ராஜா படத்தைத் தவிர!” என்றார் உணர்ச்சி ததும்ப.

* இளையராஜாவின் இசைத்திறமையையும் கடும் உழைப்பையும் பாராட்டித் தள்ளிய ரஜினி, “என்னைவிட கமலுக்கு நல்ல பாட்டுகளா போட்டிருக்கீங்க சாமி!” என்று குற்றப்பத்திரிகை வாசிக்கவும், மறுத்தார் ராஜா. “கமலும் இதைத்தான் சொல்றாரு. நான் ராமராஜன், மோகனுக்கெல்லாம்கூடத்தான் நல்ல பாட்டு போட்டிருக்கேன். எனக்கு இசையில் வித்தியாசம் கிடையாது!” என்றார்.

* `ரகுபதி ராகவ ராஜாராம்ம்...’ என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டே மேடையேறினார் கமல்ஹாசன். அவரோடு ஸ்ருதிஹாசனும் இணைந்துகொண்டார். அதைத்தொடர்ந்து `நினைவோ ஒரு பறவை’, `உன்னவிட’ உட்பட சில பாடல்களைப் பாடினார் கமல்.

* மோகன்பாபு, வெங்கடேஷ், சத்யன் அந்திக்காடு, சித்திக் உள்ளிட்ட பிற மாநிலத்துக் கலைஞர்களும் வந்திருந்து ராஜாவை வாழ்த்திப் பேசினார்கள். மோகன்பாபு, “இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம். இசையின் தலைநகரம் பண்ணையபுரம்” என்றபோது ஆமோதித்துக் கூச்சலிட்ட ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நெடுநேரமாயிற்று.

* ``நான் உணர்ந்து, மெய் சிலிர்த்து வணங்கி மகிழும் தெய்வம் ராஜா சார்” என்றார் விஜய் சேதுபதி. கார்த்தி பேசும்போது “வெளிநாடெல்லாம் போனா ராப், பாப், ரெகே என்ன ஜானர் பாட்டு கேட்பீங்கன்னு கேட்பாங்க. எங்களுக்கெல்லாம் இளையராஜாங்கற ஒரே ஜானர்தான்னு சொல்லுவேன். என் மனைவி கர்ப்பிணியா இருக்கறப்ப, உங்களோட ஒரு லைவ் கான்செர்ட் நடந்தது. அப்ப ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ல அந்த ஆரம்ப வயலின்கள் வாசிச்சாங்க. என் பொண்ணு வயத்துல எட்டி உதைச்சிருக்கா. அதை என் மனைவி சொல்றப்ப அத்தனை சந்தோஷப்பட்டேன்” என்றார்.
நிகழ்ச்சி முடிந்தபின் ஹங்கேரி இசைக்குழுவின் இசைக்கலைஞர் ஒருவரிடம் பேசினேன். Csaba என்ற பெயர்கொண்ட அவருக்குத் தாய்மொழி ஹங்கேரியன். தமிழில் ஒரு எழுத்துகூடத் தெரியாது. ஆறுமாதங்களாக இந்த நிகழ்வுக்கான ஒத்திகைகள் நடப்பதாகக் கூறினார். “ஆறு மாதங்களுக்கு முன்பு இளையராஜா யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் இந்த கணத்தில் நான் உலகில் அதிகம் நேசிக்கும் ஒரு மனிதர் யாரென்று கேட்டால் இளையராஜா என்பேன். என்ன ஒரு இசைமேதை... எப்படிப்பட்ட ரசிகர்கள்!” என்றார்.
அதனால்தான்... எப்பவும் அவர் ராஜா!
பரிசல் கிருஷ்ணா - படங்கள்: அருண் பிரசாத்