
பட்ஜெட் - கடைசி அஸ்திரம் கை கொடுக்குமா?
“இது பட்ஜெட் அல்ல, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை”, “ இது மக்களின் நலன் காக்கும் பட்ஜெட்” - இரண்டுவிதமான குரல்கள் எழுகின்றன மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் மோடி அரசின் கடைசி அஸ்திரம் குறித்து இவர்கள் என்ன கருதுகிறார்கள்?

“பா.ஜ.க அரசின் பட்ஜெட்டுகளிலேயே இது மிகவும் வித்தியாசமான பட்ஜெட் எனலாம். பெரும்பாலும் நடுத்தர வர்க்க, உயர் நடுத்தர வர்க்க மக்களைக் குறிவைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.
“குறையென்று சொன்னால், பட்ஜெட் பற்றாக்குறை 3.4 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டிருப்பதுதான். வளர்ந்துவரும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பட்ஜெட் பற்றாக்குறை என்பது ஆரோக்கியமானதுதான். ஆனால், அவை முதலீட்டினை அடிப்படையாகக் கொண்ட பற்றாக்குறையாக இல்லாமல், அன்றாடச் செலவுகளில் பற்றாக்குறை என்பது மிகவும் கவலைக்குரியது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம், சிறுதொழில் முனைவோர்க்கான சலுகைகள், ரியல் எஸ்டேட் துறையின் சரிவைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கான கூடுதல் வரிவிலக்கு என, பாராட்டுதலுக்குரிய சில அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த பட்ஜெட்.

வருமான வரிக்கான உச்சவரம்பைக் கூட்டியிருப்பது, நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பைக் கூட்டும். மேலும், வங்கி, போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கிற்கான TDS பிடித்தம் லிமிட்டைக் கூட்டியிருப்பது, இரண்டு வீடு வரை சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்திருப்பவர்களுக்கு வரிவிலக்கு, வீட்டு வாடகையின் மூலமாக வரும் வருமானத்திற்கு TDS பிடித்தத்திற்கான உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது போன்றவை வரவேற்பு பெறும். ஐந்தாண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைக் கடைசிநேரத்தில் பட்ஜெட்டில் சேர்த்துள்ளது மத்திய அரசு” என்கிறார்.

“இது மக்களின் ஓட்டுகளைக் கவர்வதற்கான அரசியல் வித்தை” என, காட்டமாக ஆரம்பிக்கிறார் பொருளாதார வல்லுநரும், பேராசிரியருமான ஜோதி சிவஞானம்.
“பட்ஜெட் மூன்று வகைப்படும். ஓராண்டிற்கான முழுமையான பட்ஜெட், அதற்கும் குறைவான காலமாக இருந்தால் இடைக்கால பட்ஜெட், ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே பதவிக்காலம் இருக்குமேயானால், Vote of Account பட்ஜெட் எனப்படும். இந்த முறையில், பழைய பட்ஜெட்டை குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு நீட்டிக்கலாம். ஓரிரு மாதங்களுக்குத் தேவையான நிதியைக் கையாள நிதிநிலை அறிக்கை தரலாம். நியாயமாகப் பார்த்தால், இந்த முறையைத்தான் இந்த அரசு பின்பற்றியிருக்க வேண்டும்.

ஆனால், மே மாதம் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் என்னும் பெயரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேர்தலுக்கு முன்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்வது, அடுத்து வரும் அரசின் மீதும் அழுத்தம் கொடுப்பதாகும். பெட்ரோல் மானியம், உர மானியம் போன்றவற்றிற்கான அரசின் கடன் அடைக்கப்படாமல், அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய இந்தியாவின் சமூக, பொருளாதார அச்சுறுத்தலாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம், இதை இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவே இல்லை. தேர்தலையொட்டி, இந்த பட்ஜெட் வந்திருப்பது, இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையைத்தான் குலைக்கிறது” என்கிறார்.
இந்த பட்ஜெட்டின் நன்மைகளைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், அதற்குள் ஒளிந்திருக்கும் அரசியலையும் விவரிக்கிறார், மத்திய நிதி அமைச்சகத்தின் கௌரவ ஆலோசகரும், ஆடிட்டருமான சத்யகுமார்.
“தேர்தல் காலத்தில் இடைநிலை பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்றே அரசியலமைப்பு சொல்கிறது. ஆனால், அதில் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று வரையறுக்கவில்லை. அதை மத்திய பி.ஜே.பி அரசு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டது. வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, வீட்டு வாடகைக்கு வருமான வரி உச்சவரம்பு மாற்றம், இரண்டு வீடுகள் வரை வருமான வரி விலக்கு, ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கான நன்மைகள் என்று நடுத்தர வர்க்கத்திற்கான பெரும் வரமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
ஆனால், இரண்டு ஹெக்டேர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு, ஆறாயிரம் ரூபாய் வழங்குவது என்பது முற்றிலுமாக ஓர் அரசியல் முடிவே. தேர்தலுக்கு முன்னர், இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஒரு பகுதியாக இரண்டாயிரம் ரூபாயை, 12 கோடிப் பேருக்கு அரசு வழங்கிவிடும் என்பது என் கணிப்பு. இது பா.ஜ.க-வுக்கு வாக்குகள் வாங்க உதவலாம்” என்கிறார்.
இந்த பட்ஜெட் குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.
“கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் மக்களுக்கென்று மத்திய அரசு போட்ட உருப்படியான இரண்டு திட்டங்கள், நூறு நாள் வேலைத்திட்டமும், உணவுப் பாதுகாப்புத் திட்டமும் மட்டுமே. மக்களுக்கான எல்லா மானி யங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, அதில் கிடைக்கும் பெரும் வருவாயை மடை மாற்றுவதையே மத்திய அரசு செய்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்துவிட்டால், முதல் நான்கு ஆண்டுகளுக்கு மக்களைப் பற்றி எந்த அரசும் கவலைகொள்வதில்லை. கடைசி ஆறு மாதங்களில் எதையாவது செய்துவிட்டு அல்லது அறிவித்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்வது வழக்கமாகிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக, விவசாயிகளுக்கெனப் பெரிதாக எந்தத் திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. எதையுமே செய்யவில்லை என்று தேர்தல் பரப்புரையில், யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக, ஆறாயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையும் கடைசி நேரத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கான பயனாளிகள் பட்டியலை இறுதி செய்யவே ஓராண்டாகிவிடும். தெலங்கானாவில், இதேபோன்ற திட்டம் அறிவித்து, அதற்கான பட்டியலைத் தயாரிக்கவே பத்து மாதங்களாகி விட்டது. ஒடிசாவிலும் அதே அவகாசம் தேவைப்பட்டது.
வருமான வரி உச்சவரம்பை அதிகப்படுத்துவது என்பது, நடுத்தட்டு மக்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி. ஏனெனில், அதுதான் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறது. அதனால், கொஞ்சம் பலன் கிடைக்கும்; பெரிதாக பலன் எதுவும் கிடைத்துவிடாது. நடைமுறையில், இதில் பல சிக்கல்கள் இருக்கும். இப்போது அறிவித்துள்ள திட்டம் எதற்கும், ஒரு பைசாகூட, கஜானாவில் எடுக்க முடியாது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இரு மாதங்களே இருப்பதால், ஏப்ரல் 1-க்குப் பின்பு, அரசு இயந்திரம் நிற்காமல் இயங்குவதற்கு, நிதியைக் கையாளும் அனுமதி தருவதற்கான தற்காலிக நிதிநிலை அறிக்கையை (Vote of Account) மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். அடுத்த அரசு வந்தபின்பே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், தேர்தல் அறிக்கையில் தர வேண்டிய வாக்குறுதிகளை எல்லாம், ‘வோட் ஆஃப் அக்கவுன்ட்’ பட்ஜெட்டில் தந்திருக்கிறார்கள்.”
இந்த பட்ஜெட் மக்களுக்கு நன்மை சேர்க்குமா என்பதைவிட, இது தேர்தலுக்கு பா.ஜ.க-வுக்கு உதவுமா என்றே இரண்டு தரப்பும் விவாதிக்கின்றன.
ஜெனிஃபர் ம.ஆ.