சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இது பாரி பேட்ட!

இது பாரி பேட்ட!
பிரீமியம் ஸ்டோரி
News
இது பாரி பேட்ட!

இது பாரி பேட்ட!

வீரயுகநாயகன் வேள்பாரி நாவல் முன்பதிவு அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளி யானபோதே ஆயிரக்கணக்கான முன்பதிவுகள் வந்து எங்களைத் திக்குமுக்காட வைத்தன.

இது பாரி பேட்ட!

அதில் ஆச்சர்யம் என்னவெனில், தனிப் பிரதிகளைவிட 10, 20, 50 எண்ணிக்கையில் நிறைய பேர் முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்களில் சிலரிடம் அது பற்றிக் கேட்டேன்.

“இனி எந்தத் திருமணத்துக்குப் போனாலும் என் பரிசு வேள்பாரிதான்”, “நான் ஒரு பள்ளி ஆசிரியர். மாணவர்களை நான் சிறப்பிக்க நினைத்தால் இனி என் பரிசு இந்தப் புத்தகம்தான்”, “நான் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறேன். என் வீட்டுக்கு இனி யார் வந்தாலும் வரவேற்கும்போது பனங்கற்கண்டு பாலும், விடைபெறும்போது வேள்பாரியும்தான் கொடுப்பேன்” என்றார்கள்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் நாவல் முன்னுரையில் “200 ஆண்டுக்கால இடைவெளியில் யாரோ ஒரு புலவன் பாரியைப் பாடிக் கொண்டேதானிருந்திருக்கிறான்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் அந்தப் புலவனோ எழுத்தாளனோ மட்டும்தான் பாரியை உயிர்ப்பித்திருக்கிறான். இப்போது, வேள்பாரியைத் தமிழ் வாசகர்கள் உயிர்ப்பித்தி ருக்கிறார்கள். பாரியைத் தங்கள் இல்லத்தில் ஒருவனாகக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் பறம்பின் குடிமகன்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

நாவல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் 3,446 பாரி இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த ஆண்டு இதே கணக்கெடுத்தால் அந்த எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். பல ரசிகர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாரி என்றோ அல்லது வேள்பாரி கதையில் வந்த மற்ற பாத்திரங்களின் பெயர்களையோ சூட்டி மகிழ்கிறார்கள். வாசகர் ஒருவர் வேள்பாரி வெளியான 111 இதழ்களையும் அடுக்கி, அவற்றின் மீது தன் குழந்தையைப் படுக்க வைத்து, ஒரு கொடியைத் தவழவிட்டு அந்தப் புகைப்படத்தை நம்மோடு பகிர்ந்திருந்தார்.

திருவாரூரைச் சேர்ந்த இன்னொரு வாசகர் நம்மை அழைத்த அன்று அவர் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா. வீட்டுக்கு ‘பாரி இல்லம்’ என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறார். அன்றுதான் சரியாக, முன்பதிவு செய்திருந்த புத்தகம் அவர் கைக்குக் கிடைத்திருக்கிறது. அந்த மகிழ்ச்ச்சியை நம்மோடு பகிர அழைத்தவருக்கு வார்த்தைகளே வரவில்லை. “என் வாழ்வின் மிகச்சிறந்த பரிசு இதுதான்” என நெகிழ்ந்தார்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாசகர் ஒருவர் பார்வைத்திறன் சவால் உடைய குழந்தைகளுக்கு பாரியை வாராவாரம் வாசித்துக்காட்டி வருவதாகச் சொன்னபோது அவருக்கு எப்படி நன்றி சொல்வதெனத் தெரியாமல் மகிழ்ச்சியில் மலைத்தோம்.

பாரியை வைத்து விளையாட்டுகளை உருவாக்குவது, பல ஊர்களில் நாவல் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவது, ஒவ்வொரு கதை மாந்தரைப் பற்றியும் தினமும் பேசுவது என வேள்பாரி வாசகர்களின் உலகில் எடுத்திருக்கும் விஸ்வரூபம் எல்லையற்றது.

வேள்பாரி வாசகர் வட்ட நண்பரொருவர் காடு புகுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.வேள்பாரிக்குப் பின் பல வாசகர்கள் அவரோடு இணைந்து காடு புகுகிறார்கள்.  இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு மாற வேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ‘தேக்கனாக’ இருந்து உதவுகிறார் அந்த வாசகர். பறம்பு மலையின் வரைபடம் ஒன்றும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. அந்த இடங்களுக்கெல்லாம் சென்று வருவதற்காக மட்டுமே இனி தன் வார இறுதிகள் பயன்படும் என்கிறார் இன்னொரு வாசகர்.

வேள்பாரி நாவல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “வேள்பாரி  புத்தகமல்ல... அது ஒரு புரட்சி” என்றார். வேள்பாரி நாவல் வாங்கியிருக்கும் வாசகர்களின் எண்ணிக்கையையும், அதைத் தொடர்ந்து அவர்கள் முன்னெடுக்கும் விஷயங்களையும் பார்க்கும்போது அந்தப் புரட்சிதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

வேள்பாரி புத்தகம் வாங்க
books.vikatan.com

கார்க்கிபவா