
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
நமக்கான சிறைச்சாலைகள், இரும்புக் கம்பிகளால் ஆனவை யல்ல. சமயங்களில் அவை நம்முடைய அறைகளாகவும், அலுவலகங்களாகவும், இந்தச் சமூகமாகவும் மாறிவிடுகின்றன. பேசுவதற்கு மனிதர்கள் இல்லாமலும் அல்லது மனிதர்கள் இருந்தும் பேசுவதற்கு ஏதுமில்லாமலும்போகிறபோது, சுதந்திர வெளி இருந்தும் மனச்சிறையில் இரும்புக் கதவுகளால் தானே தன்னைப் பூட்டிக்கொண்டு தனக்கான சாவிகளைத் தொலைத்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் தன் விடுதலைக்கான ஒரு சொல்லைக் கண்டடைய, தேடி அலைந்துகொண்டே இருப்பார்கள்.

வகுப்பு ஒன்று:
நாங்கள் சிறப்பு விருந்தினர்கள் என்பதால், எங்களுக்கு மட்டும் மினரல் வாட்டர் பாட்டில்கள் அதிகாரிகளின் அன்பால் வரவழைக்கப்பட்டன. உச்சிவெயிலில் பாட்டிலைத் திறந்து நீர் அருந்தினேன். எதிரே அமர்ந்திருந்த ஓர் இல்லவாசி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

``தண்ணி வேணுமா?” என்று கேட்டதற்கு, `ஆமாம்’ என்பதுபோல் தலையாட்டினார். கொடுத்தேன். பாலைவனத்தின் வெயிலைப்போல இருந்தது அவரது தாகம். ``மூணு வருஷம் கழிச்சு, ருசியான தண்ணிய குடிக்கிறேன் சார்” என்றார்.
சுவையைத் தராமலிருப்பதும் ஒரு தண்டனைதான். ``ஜெயில்னா, அடிக்கிறதுதான் தண்டனைன்னு வெளியே நினைக்கிறாங்க. உப்புச்சப்பு இல்லாம தொடர்ந்து சாப்பிட்டாதான் `வெளியே போகணும்’னு தோணும். ஒருதடவை உள்ளே வந்துட்டா, திரும்பவும் உள்ளே வரணும்னு தோணாது சார்” என்றார் காவல் அதிகாரி ஒருவர்.
நான் கொடுத்த நீரின் சுவை, அந்த இல்லவாசியின் இரவை வீட்டின் நினைவுகள் வந்து அலைக்கழித்திருக்கும் என நினைத்த போதுதான், தண்டனையின் பல பரிமாணங்கள் புரியத் தொடங்கின.
ஆயுள் தண்டனை இல்லவாசியான திருநாவுக்கரசு என்கிற திருநாவுக்கு, தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை என்று ஜெயிலரால் திருநாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
``சார்... நான் என்ன சார் தப்பு பண்ணேன்... என்னை ஏன் சார் வெளியே அனுப்புறீங்க?” என்று பாவம்போல ஜெயிலரிடம் கேட்டான்.

சக இல்லவாசிகளோடு ஜெயிலரும் சிரித்துவிட்டார். ``திருநா, உன்னோட நன்னடத்தை காரணமா விடுதலை பண்ணியிருக்காங்க. நீ ஒரு தப்பும் பண்ணலை. சந்தோஷமா வெளியே போ. இனி இந்த இடத்தை மறந்துடணும், புரியுதா?” என்றார் ஜெயிலர்.
காவல் அதிகாரிகள் `இவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்குள் வரக் கூடாது!’ என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், சமூகம் எனும் நான்கு பேர் `ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனோடு உனக்கு என்னடா பேச்சு?’ என்றும், `எல்லா கேஸும் முடிஞ்சாக்கூட, ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவங் களுக்கு வேலையெல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு மேனேஜ்மென்ட் ரூல் சார்’ என்றும் பயந்தும் ஒதுக்கியும் வைத்தால், வெளியே வந்தவர் என்னதான் செய்வார் என்று அந்த நான்கு பேர்தான் சொல்ல வேண்டும்.
``திருந்தி வாழலாம்னு வேலை கேட்டாலும், எங்கள திருடனாவே பாப்பானுங்க. அப்படிப் பாக்கும்போது `மவனே, திரும்பவும் உள்ளே போனா என்ன?’ன்னு தோணும் சார்” என்று ஓர் இல்லவாசி எனது கையைப் பற்றிச் சொன்னபோது, காலம்காலமாக ஊறிப்போயிருந்த எனது பொதுப்பார்வையும் மாறத் தொடங்கியது.
திருநாவுக்கு இன்று விடுதலை. அவனோடு சேர்ந்து மொத்தம் 50 இல்லவாசிகள் விடுதலையாகிறார்கள். சிறைச்சாலைக்கு வெளியே சொந்தங்களின் முகங்கள், இல்லவாசிகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தன. எல்லா இல்லவாசிகளையும் ஒழுங்குப்படுத்தி வரிசையில் நிற்கவைக்கும்போதுதான் தெரிந்தது, திருநா காணாமல் போயிருப்பது.

``சார், நேத்து நைட் பூரா அழுதுக்கினே இருந்தான் சார். கேட்டா, `வெளிய போறது புடிக்கல. இங்கியே இருந்துர்றேன்’னு சொன்னான் சார். இங்கதான் எங்கனா ஒளிஞ்சுக்கினு இருப்பான் சார்” இல்லவாசிப் பதிவேட்டில் கைரேகையைப் பதிந்துவிட்டுச் சொல்லிச் சிரித்தார் ஒருவர். அவருக்கு இரண்டாம் இரும்புக்கதவு திறக்கப்பட, அவருடைய கண்களில் பட்டுத்தெறித்தது அவரது சொந்தங்களின் ஆனந்தக் கண்ணீர்.
வகுப்பு இரண்டு:
``அத ஏன் சார் கேக்கிறீங்க... மூணு நாள் பரோல்ல வீட்டுக்குப் போனேன். எம் பொஞ்சாதி மூணாவது நாள் மத்தியானம் வெள்ளாட்டுக் கறிக்குழம்பு வெச்சா. சரிதான்னுட்டு ரவோண்டு போட்டு சாப்பிட்டா வயனமா இருக்கும்னு ஒரு குவார்ட்டரு போட்டேன் சார். சாப்புட்டு அசதியா தூங்குனதுல 5 மணிக்கு ஆஜராகவேண்டியவன்... அப்படியே தூங்கிட்டேன். பரோல்ல கரெக்டா ஆஜராவாததனால, பத்து வருஷத்துக்கு முன்னாடியே விடுதலையாகவேண்டியவன்... இன்னும் விடுதலைக்காகக் காத்துக்கினு இருக்கேன் சார்” என்று சொல்லி அமர்ந்தார் ஓர் இல்லவாசி.
பல ஏக்கர் பரப்பளவுகொண்ட சிறைச்சாலைக்குள் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் திருநாவைக் கண்டுபிடிப்பது என்பது அதிகாரிகளுக்கு பெரிய சவாலாகத்தான் இருந்தது. உள்ளே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது. கோரண்டியிலிருந்து கேன்டீன், நூலகம், வேலைசெய்யும் குடோன் எனச் சுற்றித் தேடிக்கொண்டி ருந்தார்கள். சக இல்லவாசிகளிடமும் விசாரித்தார்கள். `திருநாவைக் கண்டுபிடிக்கவே முடியாதோ!’ என்ற பதற்றத்தில் அதிகாரிகளுக்குக் கோபம் வந்தது. சமையல் ஸ்டோர் ரூமில் நுழைந்து தேடினார்கள். பருப்பு மூட்டையிலிருந்து ஒரு பெருச்சாளி ஒரு பொந்துக்குள் நுழைந்து காணாமல்போனது. யோசித்துப் பார்த்தால், சிறைக்குள்ளிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே போகும் வழி எலிகளுக்குத்தான் தெரியும்போல!

பெரிய பெரிய அண்டாக்களின் மூடியைத் திறந்து பார்த்தார் காவலர். பரணையில் சிறு சலசலப்பு வரவே, இன்னொரு காவலர் திருநாவைப் பார்த்துவிட்டார். கால்களை மடக்கிக் குருகத்தரித்த குறள்போல இருந்தான்.
``டேய் திருநா... கீழ எறங்கி வாடா... இன்னும் கால் மணி நேரம்தான் இருக்கு. மரியாதையா கீழ இறங்கு!” என்று கோபமாகச் சொன்னார் காவலர்.
``நான் ஜெயில விட்டுப் போக மாட்டேன் சார். இத்தனை வருஷமா ஒண்ணுமண்ணா பழகிட்டு, இப்படித் துரத்துறீங்களே... இது நியாயமா சார்?” என்று பச்சை மண்ணாய்ப் பேசினான் திருநா.
கோபமெல்லாம் போய், காவலர்கள் சிரித்தனர். ``திருநா இது சட்டம். போன்னா போகணும்... இருன்னா இருக்கணும். இப்ப நீ போய்த்தான் ஆகணும்” என்று விளக்கமாகச் சொன்னார் காவலர். திருநா, பரணையிலிருந்து கீழே இறங்கினான். அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட காவலர்கள், முன் கேட்டுக்குக் கூட்டிவந்தார்கள்.
வகுப்பு மூன்று:
``நானும் இப்படித்தான் சார்... பரோல்ல வெளியே போவும்போது பாண்டிச்சேரிக்குப் போனோம். செம சரக்கு. ஃப்ரெண்ட்ஸோடு டூவீலர்ல மூணு பேரு. செம போதையில டிராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டோம். ஓட்டினது நான்தான் சார். போலீஸ்கிட்ட, `கேஸ் போட்டு இன்னா சார் பண்ணுவீங்க?’ன்னு கேட்டேன். ஃபைன் கட்டணும் இல்லைன்னா ரிமாண்ட்ல உள்ளே போகணும்னு சொன்னாரு. அப்புறமாத்தான் சொன்னேன், `நானே உள்ளே இருந்துதான் வந்திருக்கேன்’னு. பரோல் சீட்டையும் காட்டினேன். கொஞ்ச நேரம் யோசிச்சவரு, எங்கள உட்டுட்டாரு. ஏன் தெரியுமா எங்கள உட்டுட்டாரு, இன்னும் எத்தனை வருஷம் கழிச்சி இப்படியொரு மூணு நாளு கிடைக்கும்னு யாருக்குத்தான் தெரியும் சார்? அதான் உட்டுட்டாரு... போலீஸா இருந்தாலும் அவரும் மனுஷன்தானே சார்” என்று ஓர் இல்லவாசி சொல்ல, மற்றவர்கள் சிரித்தார்கள்.
விடுதலையாகாத இல்லவாசிகளும் விடுதலையாகப் போகிற இல்லவாசிகளும் பரஸ்பரமாக தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். கடந்த இருபது வருடமாக வாழ்ந்த இடத்தை, திரும்பிப் பார்த்துக்கொண்டான் திருநா.
சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு ``ஐ’யம் வெரி ஸாரி திருநா. நீ விடுதலையாகி வெளியே போயே ஆகணும்” என்று அதிகாரிகள் திருநாவை வெளியே தள்ளாத குறையாகத் தள்ளினார்கள். அரசாங்கம் கொடுக்கும் ஓர் இஸ்திரிப்பெட்டியோடும் கையில் துணிப்பையோடும் வெளியே வந்தான் திருநா. இவனோடு விடுதலையானவர் களின் அணைப்புகளும் கண்ணீரும் என, சுற்றங்களின் நெடுநாள் காத்திருப்பை தனது அன்பால் பகிர்ந்து கொண்டார்கள்.
அதிகாரிகள், அனைவருக்கும் விடைகொடுத்தனர். ``இனிமேலாவது, கோபப்படுறதுக்கு முன்னாடி நம்பள நம்பி குடும்பம் இருக்குன்னு நினைங்க. ஒரு நிமிஷக் கோபம், பேராச, மோகம் எல்லாம் சொற்ப சந்தோஷம்தான். இந்தத் தண்டனைக் காலம், உங்கள நீங்களே புரியவெச்சிருக்கும்னு நம்புறேன். இனிமேலாவது கொஞ்சகாலம் வாழுங்க” என்று காவல் உயர் அதிகாரி, இல்லவாசிகளுக்கு விடைகொடுத்தார்.
அவரவர் வாகனத்தில் தனது இல்லத்துக்குச் சென்று கொண்டிருந்தார்கள். திருநாவிடம் சொல்லியபடி கிளம்பினார்கள்.
வகுப்பு நான்கு:
``உள்ளே வந்ததுக்கப்புறம் நேரத்தை ஓட்டுறதே பெரிய பாடா இருக்கும் சார். அப்பதான் திருக்குறள் படிக்க ஆரம்பிச்சேன். சும்மா நேரம் போகணும்னு படிக்க ஆரம்பிச்சது. அப்படியே எல்லாக் குறளும் மனப்பாடம் ஆயிடுச்சு. இங்க நடந்த விழாவுல திருக்குறளை ஒப்பிச்சேன் சார். எல்லாரும் பாராட்டினாங்க. `திருக்குறள் முனுசாமி’ன்னு எனக்குப் பட்டம் கொடுத்தாங்க. ஒரு சாப்ட்வேர் கண்டுபுடிச்சிருக்கேன் சார். என் வெப்சைட்ல போயி தமிழ்ல எந்த எழுத்தைத் தட்டினாலும் ஒரு திருக்குறள் உரையோடு வரும் சார். சும்மா இருந்த நேரத்துல என்ன நானே வடிவமைச்சுக்கிட்டேன். விடுதலையாகிப் போனா, என்னால திருக்குறள் டியூஷன் எடுக்க முடியும் சார்” என்றார் `திருக்குறள் முனுசாமி’ எனும் இல்லவாசி. அவரின் திறனுக்காகக் கைதட்டியபோது, முனுசாமியின் முகம் அவ்வளவு மலர்ச்சியாய் இருந்தது.
விடைகொடுத்துத் திரும்பிய உயரதிகாரி திருநாவைப் பார்த்து ``நீ கிளம்பலையா?” என்றார்.
``எங்க சார் போறது?” என்று கேட்டான் திருநா.
``புரியலை திருநா... வீட்டுக்குத்தானே போகணும்” என்று சொன்னார்.
``வீடுன்னு ஒண்ணு இருந்தா நான் ஏன் சார் போகாம இருக்கப்போறேன்? சார், எனக்கு உள்ளேயே ஒரு வேலை போட்டுக்கொடுங்க. ப்ளீஸ் சார்!” என்று கெஞ்சினான்.

``புரியாமப்பேசாத திருநா. அப்படியெல்லாம் உள்ளே வேலைக்கு வைக்க சட்டத்துல இடம் கிடையாது” என்றார்.
``என்ன சார் சட்டம்... வாழ்ற வயசுல விடுதலை கொடுங்கன்னு கத்துனேன், கதறினேன். அப்பல்லாம் விடுதலை பண்ணாம, எனக்குன்னு யாருமே இல்லாத இந்தக் காட்டுல எனக்கு விடுதலை வேணாம்னு சொன்னாலும், போய்த்தான் ஆகணும்னு சொல்றீங்களே. நான் எங்கய்யா போறது?” திருநாவின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் உயர் அதிகாரி உள்ளே நுழைந்தார். திருநா செய்வதறியாது வானத்தைப் பார்த்தான். ஒரு கூட்டுப்பறவைகள், திசையறிந்து பறந்து சென்றன.
வகுப்பு ஐந்து:
வகுப்பின் உணவு இடைவேளையின்போது ஓர் இல்லவாசி, நன்கு கனிந்த ஒரு பழத்தைக் கொடுத்தார். சாப்பிட்டேன். தேன்போல சிவந்து அமுதமென இருந்தது. ``நான் நட்டுவெச்ச மரத்துல விளைஞ்சது சார். இப்போ கத்திரி போட்டிருக்கேன்” என்றவர், என்னருகே வந்து ``சார், கதய சொல்லிக்கொடுக்க நீங்க வந்தீங்க. கதய எப்படி எழுதுறதுன்னு நாங்க கத்துக்கிட்டோமோ இல்லியோ... மனசுவிட்டு நிறைய பேசினா மாதிரி இருந்துச்சு. நைட் தூங்குறதுக்காக இந்த ஜெயிலைச் சுத்தி நடந்துகிட்டே இருப்போம். தனியா செல்லுல பூட்டும்போது தூக்கம் வராது சார்... இப்படி நடந்தா கால்வலியில நைட் 12, 1 மணிக்காவது கொஞ்சம் தூக்கம் வரும். ஆனா, இந்த மூணு நாளு என்னமோ மனசு லேசா இருக்கு சார். இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்னு நினைக்கிறேன்” என்றார்.
இந்த வாதையின் தீராத வலிகளை நினைக்கையில், இன்றைய இரவு எனக்குத் தூக்கம் வராமல்போகலாம். நான் வெளியே வந்துவிடுவதால் ஒரு போத்தலை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
சிறைச்சாலையின் எதிர்ப்புறம், ஓலைக்குடிசை உணவகத்தில் பரோட்டா மாவைப் பிசைந்துகொண்டிருந்தான் திருநா. அவ்வப்போது ஜெயிலையும் பார்த்துக்கொண்டான். முதலில் வேலையில் சேர்க்க மறுத்த முதலாளி, காவல் அதிகாரியின் நன்னடத்தைச் சான்றிதழால் வேலைக்கு அமர்த்திக்கொண்டார். இல்லவாசிகளைப் பார்க்க வரும் சொந்தங்கள் அங்கே சாப்பிட வரும்போது, `எந்த இல்லவாசி?’ என்று விசாரித்து, அவர்களோடு உரையாட ஆரம்பிப்பான்.
``தங்கச்சி, எப்பவும் உன் நினைப்புதாம்மா அவனுக்கு. இனிமே பாரு, விடுதலை பட்டுட்டான்னா... நல்லா வந்துருவான். `புள்ளய, நல்லா படிக்கவைக்கணும்’னு சொல்லிக்கினே இருப்பான். கவலப்படாம போம்மா. இனி நல்லதுதான் நடக்கும்” என்று சக இல்லவாசிகளைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி, வருகிறவரின் கண்ணீரை கொஞ்சநாள் தள்ளிவைப்பான்.
பரோட்டாக் கடைதான் திருநாவின் ஜாகையாகவும் இருந்தது. ``உள்ளே இருக்கிறதுதான் புடிக்கும்னா... வெளியே வந்து பெருசா ஏதாவது செஞ்சிட்டு மறுபடியும் போயிடலாம்ல?” கடை முதலாளி கேட்டார்.
``கல்யாண வயசுல ஒருத்தனை, காசுக்காகப் போட்டேன். போனா உடனே வெளியே வந்துடலாம்னு நினைச்சேன். ஆனா, சாட்சி ஸ்ட்ராங்காகி ஜட்ஜம்மா ‘லைஃப்’ குடுத்துட்டாங்க. எனக்கு ஒரு தம்பி. `அப்பன் இல்லாத வீட்ல மூத்தபுள்ளதான் அப்பன்’னு சொல்வாங்க. ஆனா, நான் கூடாத சகவாசத்துல ஒரு நிமிஷப் பேராசையில தப்பு பண்ணேன். கொஞ்ச நாளு அம்மாவோடு தம்பியும் மனு பார்க்க வந்தான். அவனுக்குக் கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ல, அவன் வர்றதே இல்ல. நானும் புரிஞ்சிகிட்டேன். அம்மா மட்டும் வந்து பார்த்துட்டுப் போவும். சீக்கானதுக்கப்புறம் அதுவும் வர்றதில்ல. ஒரு நாளு செத்துப்போச்சி. சாவுக்குப் போயி நின்னேன். அங்க எல்லாரும் என்னைப் பார்த்த பார்வை, எனக்குப் புடிக்கலை. அதுலேர்ந்து நான் யாருக்கும் வேணாம்னு புரிஞ்சது. எனக்கு மட்டும் உள்ளேயே இருக்கணும்னு ஆசையா என்ன? ஆனா ஓனர், உள்ளே ரொம்ப நாள் இருந்துட்டா... வெளிய வந்து தப்பு பண்ண மாட்டான் ஓனர்” பரோட்டா பிசையும் கடப்பாக்கல்லைக் கழுவினான் திருநா.
மறுநாள் காலை, கேட் காவலருக்கு பரோட்டாவும் சால்னாவும் கொண்டுபோனான். இன்று வழக்கத்தைவிட மனு பார்ப்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். சிலர், கையில் குழந்தையுடன் இருந்தார்கள். நிறைய கூட்டத்தைப் பார்த்த குழந்தைகள், தனக்குத்தானே குதூகலித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தத் தாயும் மனுபார்க்க வந்தார். திருநாவை நலம் விசாரித்தார். மிகுந்த நம்பிக்கையோடு தன் மகனிடம் `விடுதலை கிடைத்துவிடும்’ என்று சொல்லிவிட்டுச் செல்வதாகச் சொன்னார். தன்னை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிய சட்டம், சில இல்லவாசிகளை வெளியே அனுப்புவதில் கருணை காட்டாமல் மௌனமாக இருப்பதுதான் ஏனென்று புரியவில்லை என, திருநா தனக்குத்தானே புலம்பிக்கொண்டு நடந்தான்.
வகுப்பில் கற்றுக்கொண்டது:
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் உள்ளே சிலர் இருக்கிறார்கள்... நிரூபிக்கப்படாததால் வெளியே சிலர் இருக்கிறார்கள்!
- மனிதர்கள் வருவார்கள்...